சனி, 7 மார்ச், 2015

விபத்துக்குள்ளான புதுக் கார்

                         
                         
சில நாட்களுக்கு முன் செய்தித்தாளில் ஒரு விபத்துச் செய்தி படித்தேன். மதுரைப் பக்கத்தில் ஒரு ஊரிலிருந்து ஒரு குடும்பத்தினர் தாங்கள் வாங்கியுள்ள புதுக்காரில் திருச்செந்தூர் போயிருக்கிறார்கள். போகும் வழியிலேயே காரின் ஒரு டயர் வெடித்து கார் விபத்துக்குள்ளாகி, அதில் சென்றவர்கள் அனைவரும் இறந்து விட்டார்கள்.

நானும் சமீபத்தில் ஒரு புதுக் கார் வாங்கியிருப்பதால் இந்த விபத்து புதுக்காரில் எப்படி ஏற்பட்டிருக்கக் கூடும் என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன். புதுக்காரில் டயர்கள் புதிதாகத்தானே இருக்கும். அதிலும் அந்தக் காரில் இன்னும் நெம்பர் பிளேட் கூடப் பொருத்தவில்லை. இப்படி யோசித்துக் கொண்டிருக்கும் போது என் மூளையில் ஒரு பொறி தட்டியது.

முன்பெல்லாம் கார் வாங்கும்போது பெட்ரோல் டேங்கில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைவாகத்தான் பெட்ரோல் போடுவார்கள்.  RTO ஆபீசுக்குப் போய்வரும் அளவே பெட்ரொல் போடுவார்கள். நாம் காரை டெலிவரி எடுக்கும்போது, பக்த்தில் இருக்கும் பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் போட்டுக்கொள்ளுங்கள் என்று பலமுறை சொல்லி அனுப்புவார்கள். ஏனென்றால் அவ்வளவுதான் பெட்ரோல் காரில் இருக்கும்.

இப்போது பரவாயில்லை. ஒரு ஐந்து லிட்டர் பெட்ரோல் போட்டுத் தருகிறார்கள். நம் காசுதான். ஏதோ பரவாயில்லை. கோவிலுக்குப் போய்விட்டு வீடு வரைக்கும் பயமில்லாமல் போய்க் கொள்ளலாம். நானும் அப்படியே விட்டுக்குச் சென்று விட்டு அடுத்த நாள் நான் பெட்ரோல் போடும் வழக்கமான பங்கிற்குச் சென்று பெட்ரோல் போட்டேன்.

நான் வழக்கமாக பெட்ரோல் போட்டவுடன் காரின் டயர்களில் காற்றின் அழுத்தத்தையும் சோதிப்பது வழக்கம். அப்படிச் சோதித்தபோது நான் பார்த்தது என்னவென்றால், காரின் டயர்களில் காற்றின் அழுத்தம் 60 பவுண்டுக்குப் பக்கமாக இருந்தது. வழக்கமாக டயர்களில் காற்றின் அழுத்தம் 30 பவுண்டுகள் வைப்பதுதான் வழக்கம். பெரிய கார்களுக்குக் கூட 35 பவுண்டுகளுக்கு மேல் வைக்க மாட்டார்கள்.

நான் என் காரின் டயர்களுக்கு 30 பவுண்ட் அழுத்தம் வைத்து விட்டுக் கிளம்பினேன். ஏன் கம்பெனிக்காரர்கள் இவ்வளவு அதிகமான காற்று அழுத்தம் வைத்திருக்கிறார்கள் என்று யோசித்துக் கொண்டே வந்தபோது ஒரு கருத்து தோன்றியது. கார் தயாரிக்கும் இடத்தில் கார் முழுவதுமாகத் தயார் பண்ணி முடித்து கார் விநியோகம் செய்யும் வியாபாரக் கம்பெனிகளுக்குப் போக ஓரிரு மாதங்கள் ஆகலாம். அங்கும் இந்தக் கார் வியாபாரமாகி உபயோகிப்பவர் கைக்குப் போக இன்னும் ஓரிரு மாதங்கள் ஆகலாம்.

இந்த காலக்கெடுவில் கார் சும்மாதான் இருக்கும். ஆனால் கார் டயர்களில் காற்று இல்லாமல் இருந்தால் காரின் கனம் டயரின் மேல் தாக்கி டயர்கள் சேதமடையும் வாய்ப்புகள் உண்டு. அதனால் கொஞ்சம் அதிகமாக காற்று அழுத்தம் வைத்து விட்டால் இந்த மாதிரி சேதம் தவிர்க்கப்படும். அதனால் இப்படி அதிக காற்று அழுத்தத்துடன் புதுக் கார்கள் அனுப்ப ப்படுகின்றன என்று யூகித்தேன்.

புதுக் கார்கள் வாங்குபவர்கள் எப்படியும் காற்று அழுத்தத்தை  சரி பார்ப்பார்கள் என்பது கார் உற்பத்தியாளர்களின் கணிப்பு. ஆனால் இந்த விபத்துக்குள்ளான காரை வாங்கினவர்கள் இந்த வேலை செய்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். கார் ஓடும்போது ரோடுகளில் உராய்வதால் டயர்கள் வெப்பமடைந்து டயர்களில் இருக்கும் காற்றின் அழுத்தம் அதிகமாகும். சாதாரண அழுத்தம் இருக்கும்போது இப்படி வெப்பத்தினால் அழுத்தம் அதிகமானாலும் டயர்  தாங்கிக்கொள்ளும். ஆனால் முதலிலேயே அதிக அழுத்தம் கொண்ட டயர்களில் இப்படி கார் ஓடும்போது மிக அதிகமான அழுத்தம்  உருவாகும்.

அது தவிர இந்தக் காரை வேகமாகவும் ஓட்டியிருக்கலாம். அப்போது டயர்கள் மிக சீக்கிரமாக அதிக வெப்பநிலை அடையும். இந்த அதிக வெப்பத்தினால் ஏற்பட்ட அதிக காற்று அழுத்தத்தை அந்த டயர்கள் தாங்கவில்லை. இதனால் அந்த டயர் வெடித்து விட்டது. வேகமாகப் போகும் காரில் ஒரு டயர், அதுவும் முன்பக்க டயர் வெடித்தால் விளைவு என்னவாக இருக்கும் என்று கார் ஓட்டுபவர்களுக்குத் தெரியும்.

இப்படித்தான் அந்த விபத்து ஏற்பட்டிருக்கும் என்று நான் நினைக்கிறேன். இதை உடனடியாக உறுதி செய்ய வாய்ப்பு இல்லை. ஏனெனில் அந்தக் காரில் பயணம் செய்த எல்லோரும் யமபட்டணத்தில் இருக்கிறார்கள். நான் அங்கு போகும்போது விசாரித்து விபரம் அறிந்து உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.

அது வரை புதுக் கார் வாங்குபவர்கள் டயர்களின் காற்று அழுத்தத்தை சரியான அளவில் வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

20 கருத்துகள்:

 1. நீங்கள் சொல்லும் காரணம் சரி என்றுதான் தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
 2. கம்பெனிக்காரர்கள் கணிப்பதை விட. புதிய கார் வாங்குபவர்களிடம் இதைப் பற்றியும் சொல்லலாம்...

  பதிலளிநீக்கு
 3. சரியான காரணமாகத் தான் தோன்றுகிறது. தயாரிக்கும்போது அதிக அழுத்ததில் இருந்தாலும் ஷோ ரூமில் இவற்றை சோதித்தபின்தான் வாங்குவோருக்கு கொடுக்கவேண்டும் என்று கம்பனி வற்புறுத்த வேண்டும் அல்லவா.கார் வாங்குவோர் அனைவரும் காரைப் பற்றி அறிந்தவர்களாக இருக்கவேண்டும் என்பது அவசியமில்லை அரிதாக நடக்கும் நிகழ்வு என்றாலும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்பது தெரிகிறது.நல பதிவு ஐயா

  பதிலளிநீக்கு
 4. மிகச் சரியாக துல்லியமாக காரணத்தை
  கண்டுபிடித்திருக்கிறீர்கள் ஐயா
  நன்றி
  தம +1

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் ஐயா இதற்க்கு இன்னொரு காரணமும் இருக்குகிறது வாங்கிய புதுக்கார் கடந்த ஒருவருடமாகவோ, இல்லை ஆறு மாதமாகவோ கோடவுனில் அதாவது திறந்தவெளியில் நின்றிருக்கும் அப்பொழுது காரின் டயர்கள் மழையிலும், வெயிலிலும் கிடந்து அதன் பலத்தை பெரும்பாலும் இழந்திருக்கும் ஆனால் தேய்மானம் இருக்காது வாடிக்கையாளர் வாங்கும்போது காரை வெளியில் எடுத்தவுடன் கம்பெனிக்காரர்கள் டயருக்கு வார்னீஷ் அடித்து கழுவிக்கொடுக்கும்போது கார் வாங்கும் சந்தோஷத்தில் இதையெல்லாம் பலரும் கவனிக்க மாட்டர்கள் இதன் காரணமாகவே காரின் டயர் வெடித்திருக்கலாம்.

  நாம் கார் வாங்கும்போது ஷோரூமில் மோடலுக்காக நிறுத்தியிருக்கும் இந்தக்காரே வேண்டுமென வலுக்கட்டாயமாக கேட்கவேண்டும் பெரும்பாலும் கொடுக்கமாட்டார்கள்.
  அல்லது எனக்கு டயர் மட்டும் 4 மாற்றிக்கொடுங்கள் எனக்கேட்கவேண்டும் (அதையும் நாம் நேரிலேயே காணவேண்டும் 80 முக்கியம்)

  சமூக நலன் வேண்டியிட்ட பதிவுக்காகவும், தமிழ் மணத்தில் நுளைப்பதற்காகவும் 7

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // ஆறு மாதமாகவோ கோடவுனில் அதாவது திறந்தவெளியில் நின்றிருக்கும் அப்பொழுது காரின் டயர்கள் மழையிலும் வெயிலிலும் கிடந்து அதன் பலத்தை பெரும்பாலும் இழந்திருக்கும்//

   இந்தியாவில் பணவசதியுள்ளவங்க கார் வைத்திருப்பதால் அவங்க வீட்டில் காருக்கென்று ஒரு நிறுத்துமிடம்- garage வாஸ்து பார்த்து கட்டி காரை பாதுகாக்கிறார்கள். துபாய், அமெரிக்காவிலும் அப்படியிருக்கலாம். வேறு பல நாடுகளில் காரின் டயர்கள் மழையிலும் வெயிலிலும் குளிரிலும் தெருவில் வருட கணக்காக நின்று தான் பாதுகாப்பாக ஓடுகின்றன, உழைக்கின்றன.பெரும்பாலான காரின் டயர் உற்பத்தியாளர்களினால் ஏற்று கொள்ளபட்டது ஒரு டயர் கூடியது 10 வருடங்கள்கள் வரை பாதுகாப்பாக உழைக்கும்.

   நீக்கு
 6. புதிதாய் கார் வாங்குபவர்களுக்கு உபயோகமான தகவல்.பகிர்ந்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 7. அன்புள்ள அய்யா,

  விபத்துக்குள்ளான புதுக் கார் பற்றி தாங்கள் தரும் செய்தி புதிதாகத்தான் இருக்கிறது. இனி கார் வாங்கும் பொழுது டயரில் காற்றிஅழுத்தத்தை அவசியம் சோதித்துப் பார்த்துத்தான் வாங்க வேண்டும். காரணம் காரின் டயர்களில் தாங்கள் சோதித்த பொழுது காற்றின் அழுத்தம் 60 பவுண்டுக்குப் பக்கமாக இருந்தது. வழக்கமாக டயர்களில் காற்றின் அழுத்தம் 30 பவுண்டுகள் வைப்பதுதான் வழக்கம்.

  கார் வாங்குவோர் அவசியம் கவனத்தில் கொள்ள வேண்டியது!
  நன்றி.

  பதிலளிநீக்கு
 8. உங்கள் கருத்தில் உடன்பாடில்லை,கார் விபத்துக்கு அது (அதிக அழத்தம்)மட்டுமே காரணமாக இருக்காது என் அனுமானம்.

  பதிலளிநீக்கு
 9. அன்புள்ள அய்யா:
  உங்களை மாதிரி பொது சேவை செய்யம், அதுவும் ஒய்வு பெற்ற உங்கள் மாதிரி மேன்மக்கள் இருப்பதால் தான் நம் நாடு இன்றும் இருக்கிறது.

  உங்கள தமிழ்மணம் ரேன்க் இப்போ 13. இந்த ரேன்க் தமிழ்மணம் நம்பர் ஒன்னாக வரும்--கடவுள் கிருபையால்.

  அன்புள்ள,
  ராமசாமி

  பதிலளிநீக்கு
 10. இதுக்குத்தான் நான் காரெல்லாம் வாங்கலை.
  தம+1

  பதிலளிநீக்கு
 11. "அந்தக் காரில் பயணம் செய்த எல்லோரும் யமபட்டணத்தில் இருக்கிறார்கள். நான் அங்கு போகும்போது விசாரித்து விபரம் அறிந்து உங்களுக்குத் தெரிவிக்கிறேன்." ஓ !அங்கிகிருந்து பதிவு போடவும் கற்றுக் கொண்டு விட்டீர்களா? அவசியம் படித்து விட்டு பின்னூட்டம் போடுகிறோம்..ஆனால் இப்போதைக்குஅவசப்படாதீர்கள்...மாலி.

  பதிலளிநீக்கு
 12. சொந்தமாக கார் வைத்திருப்பவர்களுக்கு மிக உபயோகமானதொரு பதிவு!

  பதிலளிநீக்கு
 13. கார் வாங்குபவர்களுக்கு மிகவும் உபயோகமான தகவல்.
  எவ்வளவோ பணம் கொடுத்து புது கார் வாங்கும் போது, கம்பனி- கார் டீலர்கள் டயரின் சரியான காற்று அழுத்தத்தை சரிபார்த்து கார் வாங்குபவரிடம் புது காரை கொடுக்கலாமே!

  பதிலளிநீக்கு
 14. மிகவும் நல்லதொரு தகவல். இதுவரை அறியாத ஒன்று. அந்தக் கார் விபத்து எப்படி நடந்ததோ...அதை விடுங்கள்...ஆனால் நீங்கள் கொடுத்திருக்கும் இந்தத் தகவல் மிகவும் பயனுள்ளது. மிக்க நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு