சனி, 14 மார்ச், 2015

சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும்.

                                                 Image result for fox and grapes story

நரியும் திராக்ஷைக் குலைகளும் கதையைக் கேட்காதவர்கள் இருக்க மாட்டார்கள். ஆனால் இந்தக் கதை ஒரு எதிர் மறைத் தத்துவத்தை எடுத்துக் காட்டத்தான் பெரும்பாலும் சொல்லப் படுகிறது.

ஏதோ நரி சொல்லத்தகாத வார்தைகளைச் சொல்லிவிட்ட மாதிரியான தொனி இந்தக் கதையில் வலியுறுத்தப்படுகிறது. இந்த மாதிரி சொல்பவர்கள் எல்லாம் கேலிக்குரியவர்கள் என்றுதான் நமக்குப் போதிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நம் அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய அருமையான வாழ்க்கைத்த் தத்துவம் இந்தக் கதையில் அடங்கியிருக்கிறது. இதை உணராமல் நாம் எல்லோரும் அந்த பாவப்பட்ட நரியை ஏளனமாகப் பார்த்து வந்திருக்கிறோம்.

உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன். ஒருவன் நன்றாகப் படித்து நல்ல பட்டங்கள் எல்லாம் வாங்கியிருக்கிறான். அவன் பல வேலைகளுக்கு விண்ணப்பிக்கிறான். நேர்முகத் தேர்விற்கு பலரால் அழைக்கப்படுகிறான். அவனுக்கு ஏதோ ஒரு கம்பெனியில் வேலைக்கான உத்திரவு கிடைக்கிறது. ஆனால் அவன் எதிர்பார்த்ததோ வேறு ஒரு கம்பெனியின் உத்திரவை.

இப்போது அவன் என்ன செய்யவேண்டும்? அவன் எதிர்பார்த்த கம்பெனியில் இருந்து உத்திரவு வரவில்லையே, என் வாழ்வு வீணாகிப் போனதே என்று புலம்பிக்கொண்டு இருந்தால் என்ன ஆகும்? அவன் வாழ்வு வீணாகித்தான் போகும்.

சரி, கிடைத்த வேலையில் சேர்வோம், அந்த வேலை என்ன பெரிய சர்க்கரைக் கட்டியா? என்று மனதைச் சமாதானப் படுத்திக் கொண்டு கிடைத்த வேலையில் சேர்வதுதானே புத்திசாலித்தனம்?

நரி அதைத்தானே செய்தது? அந்த திராக்ஷைப் பழம் எட்டவில்லை. அதற்காக அங்கேயே உட்கார்ந்து கொண்டு புலம்பினால் அந்தப் பழம் கிடைக்குமா என்ன? ஆகவே அது புத்திசாலித்தனமாக கிடைக்காத பழம் புளித்த பழம், நாம் இன்னொரு தோட்டத்தில் முயன்றால் நல்ல இனிப்பான பழம் கிடைக்கக் கூடும் என்று அந்த இடத்தை விட்டுச் சென்று விட்டது.

இது புத்திசாலித்தனமா? இல்லை அங்கேயே நின்று கொண்டு கிடைக்காத பழத்தைப் பார்த்து ஏக்கப்பட்டுக் கொண்டிருப்பது புத்திசாலித்தனமா? மக்களே, யோசியுங்கள். வாழ்க்கையில் நம்மால் எது முடியுமோ அதைச் செய்யுங்கள். நம்மால் முடியாதவற்றை எண்ணி ஏங்கிக்கொண்டு இருக்காதீர்கள்.

29 கருத்துகள்:

 1. ஐயா

  எப்படியோ ஒரு சின்ன கமெண்ட் போட்டு உங்களை உசுப்பி விட்டேன். அந்த வரையில் மகிழ்ச்சி. தமிழ் மனம் அல்லாது சொல்வனம் வல்லமை தமிழ்வெளி திரட்டி கீற்று என்று எத்தனையோ மின்னிதழ்கள் உள்ளன. என்ன அவையெல்லாம் கொஞ்சம் சீரியஸ் ஆன பதிவுகளையே வெளியிடும். எதுவும் இல்லை என்றால் இருக்கவே இருக்கிறது wordpress. ஆனால் எங்கே போகிறீர்கள் என்று மட்டும் சொல்லி விடுங்கள். உங்கள் ஈமெயில் அட்ரஸ் தந்தால் நான் எனது மெயில் அட்ரஸ் தருகிறேன். அப்போது தெரியப்படுத்துங்கள்.

  --
  Jayakumar

  பதிலளிநீக்கு
 2. உண்மைதான் அய்யா அவர்களே. முடியாததை நினைத்து ஏங்கிக்கொண்டிருக்கக்கூடாததுதான். ஆனால் முடிந்ததை மட்டுமே செய்து கொண்டு முடியாததை செய்ய முயற்சிக்காமல் இருக்கக்கூடாதல்லவா? போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்துதான். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் முயற்சி திருவினையாக்குமல்லவா?

  சேலம் குரு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முயற்சி வேண்டியதுதான். ஆனால் ஒரு காரியம் எவ்வகை முயற்சியினாலும் கிடைக்காது என்று உறுதியாகத் தெரியும்போது இலக்கை மாற்றுவதே புத்திசாலித்தனம். அதே இலக்கை நோக்கி முயற்சித்துக் கொண்டிருப்பது மடமையாகுமல்லவா?

   நீக்கு
  2. The world is not changed by those who change with thw world but only by those who stick on to their principles என்பது போன்று ஒரு சொலவடை ஆங்கிலத்தில் உண்டு. எந்த வகை முயற்சியினாலும் கிடைக்காது என்று புரியும் வரையாவது முயற்சிக்க வேண்டுமல்லவா? அது எது வரை என்பது அனுபவத்தில் வருவதுதான். எல்லாம் தானே அனுபவித்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்காமல் இப்படி அய்யா போன்ற அன்பவஸ்தர்கள் சொல்வதை கேட்டால் எது வரை முயற்சிக்கலாம் என்பதற்கு விடிய கிடைத்துவிடும்.

   காயத்ரி மணாளன்

   நீக்கு
 3. //ஆகவே அது புத்திசாலித்தனமாக கிடைக்காத பழம் புளித்த பழம்,//

  இந்த மனோபாவம்தான் தவறு. நமக்கு கிடைக்காத பழத்தை பற்றி தப்பான கருத்து சொள்ளக்கூடாதல்லவா. "நமக்கு கிடைக்காத அந்த பழமும் நல்ல பழமாக கூட இருக்கலாம். நமது முயற்சி பற்றாததால் (அல்லது நம்ம்மால் இயலாததால்) அந்த பழம் நமக்கு கிடைக்கவில்லை. வேறு இடத்தில் முயற்சிக்கலாம்" என்பதுதானே சரியான எண்ணம். "நமக்கு கிடைத்து விட்டால் அது நல்ல பழம் கிடைக்காததெல்லாம் புளிக்கும் பழம்" எட்ன்று நினைப்பதுதான் தவறு.

  திருச்சி அஞ்சு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதுதான் மனோதத்துவம். கிடைக்காத ஒன்றை நல்லதென்று நினைத்துக்கொண்டிருந்தால் அடுத்துக் கிடைப்பதும் இனிக்காது.
   காதலியைக் கைப்பிடிக்க முடியாவிட்டால் கட்டியவளைக் காதலிப்பதே முறை.

   நீக்கு
  2. உண்மைதான்.
   கல்யாணத்துக்கு முன் வரும் காதலை விட கல்யாணத்துக்கு பிறகு வரும் காதலே வாழ்க்கையின் வெற்றிக்கு உதவும்.
   கல்யாணத்துக்கு முன் வரும் காதலில் வெற்றியும் உண்டு தோல்வியும் உண்டு. ஆனால் கல்யாணத்துக்கு பிறகு வரும் காதலில் வெற்றி ஒன்று மட்டுமே உண்டு. அது வாழ்கையை நெறியாக நடத்தவும் உதவும். எனவே கட்டியவளை காதலிப்பதே நல்லது.

   சேலம் குரு

   நீக்கு
  3. அங்கும் அப்படித்தானா? கட்டியவளைத்தான் காதலிக்க வேண்டியிருக்கிறதா? பரவாயில்லை. நாம் எல்லோரும் அப்படித்தான்.
   மனதை தேற்றிக்கொள்ளுங்கள்.

   துளசி மைந்தன்

   நீக்கு
  4. அப்பா அம்மாவைத்தான் நம்மால் தேர்ந்தெடுக்க முடியவில்லை. கூட பிறந்தவர்களையும் முடியாது. நமக்கு பிறக்கப்போகும் குழந்தைகளையும் நம்மால் தேர்ந்தெடுக்க முடியாது. முடிந்த ஒன்றே ஒன்று நமக்கு வரும் மனைவியைத்தான். அதனால்தான் காதல் என்ற வலையில் விழுகிறோம். ஆனால் அங்கும் பாதிபேருக்கு மேல் வெற்றி கிடைப்பதில்லை. சந்தோசமாக இருக்க வேண்டுமென்றால் அந்த ஒரு தேர்ந்தெடுக்கும் வாய்ப்பையும் நமது பெற்றோரிடம் விட்டுவிட வேண்டியதுதான். அய்யா அவர்கள் சொல்வது போல பிறகு காதலித்துக்கொல்லலாம்.

   காயத்ரி மணாளன்

   நீக்கு
  5. ஆம் "காதலித்துக் கொல்லலாம் "
   --
   Jayakumar

   நீக்கு
  6. ஜெயக்குமார்,
   ஆஹா, இதுவும் ஒரு நல்ல வழியாகத்தான் தெரிகிறது. ஆனால் இந்த வயதில் (80) இந்த வழியினால் என்ன பிரயோஜனம்?

   காயத்ரி மணவாளன்தான் சொல்லவேண்டும்?

   நீக்கு
  7. சரிதான். இப்படி பெற்றோர் பார்த்து செய்துவைக்கும் கல்யாணத்துக்கு அப்புறம் மனைவியை காதலிப்பதன் மூலம் "கல்யாணத்துக்கு முன் காதலிக்கவில்லையே" என்ற ஆசையை "கொல்லலாம்". மனைவியை காதலித்து "கொள்ளலாம்"

   அப்பப்பா கல்யாணத்துக்கு முன் காதலித்த காதலியோ அல்லது கல்யாணத்துக்கு பின் காதலிக்கும் மனைவியான காதலியோ கொடுக்கும், கொடுத்துகொண்டிருக்கிம் தொந்திரவுகளை விட இந்த "ல"வும் "ள"வும் செய்யும் தொந்திரவுகள் மிக அதிகமாக இருக்கும் போலிருக்கிறதே.

   காயத்ரி மணாளன்

   நீக்கு
  8. என்ன ஆயிற்று? ஆம்படையாளுடன் ஏதேனும் மனஸ்தாபமா? ரொம்ப மனசு வருந்தி இந்த வயதில் தெரிந்து என்ன ஆகப்போகிறது என்று சொல்கிறீர்களே. வரிசையாக சமையல் பற்றி எழுதும் போதே நினைத்தேன். தனியாக தவிக்க விட்டுவிட்டு தன அம்மா வீட்டுக்கு சென்று விட்டார்களா என்ன? நேராக கிளம்பி போய் ஒரு தட்டு தட்டி (உண்மையில் தனி அறைக்கு கூட்டிக்கொண்டு போய் காலில் விழுவதைத்தான் வெளியே வீராப்பாக ரெண்டு தட்டு தட்டி என்று சொல்வோம் என்று தெரியாதவரா நீங்கள்.?) அழைத்து வந்து விடுங்கள். இப்படிப்பட்ட தப்பான எண்ணங்கள் எலாம் தோன்றாது.

   திருச்சி தாரு

   நீக்கு
  9. ஆமாம் திரு ஜெயகுமார் அவர்களே. கல்யாணத்துக்கு பிறகு தனது மனைவியை காதலித்தால் கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் தனது அன்பினால் மற்றவரை கொல்லலாம். ஆனால் யாருக்கும் ஒன்றும் ஆகாது. இன்னும் நெருக்கம் அதிகம்தான் ஆகும்.
   எனவே கல்யாணத்துக்கு பிறகு மனைவியை கண்டிப்பாக காதலித்து ஒருவரை ஒருவர் தனது அன்பினால் கொல்லுங்கள். எந்த தாணாகாரனும் வந்து உங்களை பிடித்துக்கொண்டு போகமாட்டான். ஒருவேளை காயத்ரி மணாளன் இந்த அர்த்தத்தில்தான் சொல்லியிருப்பாரோ என்னவோ

   துளசி மைந்தன்.

   நீக்கு
  10. //சந்தோசமாக இருக்க வேண்டுமென்றால் அந்த ஒரு தேர்ந்தெடுக்கும் வாய்ப்பையும் நமது பெற்றோரிடம் விட்டுவிட வேண்டியதுதான்.//
   அதவும் சரிதான். எப்போதுதான் நாம் சொந்தமாக decision எடுத்திருக்கிறோம். கல்யாணத்துக்கு முன்னால் அப்பா அம்மா முடிவுகள். கல்யாணத்துக்கு பின்னால் மனைவி எடுக்கும் முடிவுகள். ஆனால் இதில் என்ன ஒன்று என்றால் கல்யாணத்துக்கு அப்புறமும் மாறாமல் இருந்தால் "அம்மா கோண்டு" என்ற பெயர் வரும். மாறிவிட்டால் "பொண்டாட்டி பின்னால் போய் விட்டான்" என்று பெயர் கிடைக்கும். மொத்தத்தில் நாமெல்லாம் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகளாக இருப்பதில் கை தேர்ந்தவர்கள். அப்படித்தான் வாழ்க்கையை ஓட்ட வேண்டுமென்று இருந்தால் என்ன செய்ய முடியும்.

   சேலம் குரு

   நீக்கு
 4. அதெல்லாம் அந்தக்காலம். இப்போது போட்டிகள் நிறைந்த காலம். எது கிடைக்கிறதோ அதில் நமது சாமார்த்தியத்தை வெளிப்படுத்தி முன்னுக்கு வருவதுதான் சரியான வழி. நான் உங்கள் கருத்துடன் ஒத்துபோகிறேன் அய்யா.

  திருச்சி தாரு

  பதிலளிநீக்கு
 5. அருமையான மாற்றுச்சிந்தனை ஐயா உண்மை, உண்மை.

  பதிலளிநீக்கு
 6. கந்தசாமி ஐயா,

  இந்த வலைத்தளம் போயிருக்கிறீர்களா? பழைய நினைவுகள் வரலாம்.

  http://paathachsuvadukal.blogspot.in/

  பதிலளிநீக்கு
 7. //நம்மால் எது முடியுமோ அதைச் செய்யுங்கள். நம்மால் முடியாதவற்றை எண்ணி ஏங்கிக்கொண்டு இருக்காதீர்கள்.//

  உண்மைதான் ஐயா. சரியான அறிவுரை.

  பதிலளிநீக்கு
 8. நரி புத்திசாலிதான் ஒப்புக்கொள்கிறேன்

  பதிலளிநீக்கு
 9. இதுவரை விவாதிக்கப்படாத கோணத்தில் மாற்று கருத்து. ஆனால் ஏற்றுக்கொள்ள, சிந்திக்கவேண்டியதே. இந்த நோக்கில் தாங்கள் பார்த்தவிதம் நன்று.

  பதிலளிநீக்கு
 10. // வாழ்க்கையில் நாம்மால் எது முடியுமோ அதைச் செய்யுங்கள். நம்மால் முடியாதவற்றை எண்ணி ஏங்கிக்கொண்டு இருக்காதீர்கள்.//

  கான முயலெய்த அம்பினில் யானை
  பிழைத்தவேல் ஏந்தல் இனிது.

  பதிலளிநீக்கு
 11. //மக்களே, யோசியுங்கள்//

  என்ன அய்யா அவர்களே "மக்களே" உபயோகபடுத்த் ஆரம்பித்து விட்டீர்கள். அந்த வார்த்தை நமது தமிழக அரசியல்வாதி ஒருவரின் trade mark வார்த்தை ஆயிற்றே. ஏதாவது வழக்கு கிழக்கு போட்டு விடப்போகிறார். ஜாக்கிரதையாக இருங்கள்.

  திருச்சி அஞ்சு

  பதிலளிநீக்கு
 12. நல்ல அறிவுரை....உங்களின் பகிர்வுக்கு ரொம்ப நன்றி....

  மலர்
  https://play.google.com/store/apps/details?id=com.aotsinc.app.android.wayofcross

  பதிலளிநீக்கு
 13. ஐயா! நீங்கள் சொல்லிருக்கும் வகையில் தான் நாங்களும் கற்றோம், குழந்தைகளுக்குச் சொல்லியும் வந்திருக்கின்றோம். அதனுடன் கூட ஒன்றும் சேர்த்துக் கொண்டு.

  அதாவது உலகில் இருந்த விஞ்ஞானிகளைப் பற்றியும், பல துறைகளிலும் சாதனையாகளர்கள் பற்றியும், பல கண்டுபிடிப்புகளை இந்த உலகிற்குத் தந்து அதை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் பற்றியும், பல வருடங்கள் கடினப்பட்டு வெற்றிகண்ட ஹென்றி ஃபோர்ட், மற்றும் எழுத்தாளர்கள் பற்றியும் நாங்கள் சொல்லிக் கொடுக்கும் போது ராபர்ட் ப்ரூஸ் கதையைத்தானே சொல்லிக் கொடுத்து, இவர்களை எல்லாம் போன்று லட்சியத்தில் குறியாக, ஃபோக்கஸ்டாட இருந்து உழைக்க வேண்டும் என்பதைத்தான் சொல்லிக் கொடுக்கின்றோம்.

  நவீன முறையில் நாங்கள் சொல்லுவது என்னவென்றால், இந்தப் பழம் புளிக்கும் என்று அதை விட்டு (இப்போதைக்கு) தற்காலிகமாகக் கிடைப்பதை ஏற்றுக் கொண்டு அதே சமயம், இலக்கிலிருந்து சிந்தனையை அகற்றாமல், அதை அடைவதற்கான வழிமுறைகளைக் கையாள வேண்டும் என்று குறிக்கோள், உழைப்பு, அவமானங்களைச் சகித்துக் கொள்ளும் மனப்பக்குவத்தையும் சேர்த்துச் சொல்லிக் கொடுக்கின்றோம். ஐயா. ஏனென்றால் தற்காலத்தில் குழந்தைகள் பாவம் வெகு சீக்கிரமே மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றார்கள்.

  நல்லதொரு மாற்றுச் சிந்தனைதான் ஐயா! மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 14. வெகு நாட்களாகத் தங்கள் தளத்திற்கு வந்து வாசிக்க வேண்டும் என்று நினைத்து இன்று வந்து விட்டோம். தொடர்கின்றோம். ஐயா தங்கள் தளத்தில் ஏனோ நுழையவோ, சேரவோ முடியவில்லையே!

  பதிலளிநீக்கு