திங்கள், 25 மே, 2015

ஆனந்தம் என்றால் என்ன?

                                        Image result for குண்டலினி சக்தி
இவ்வுலகில் இன்பத்தை விரும்பாதவர்கள் யாரும் இல்லை. அதே போல் துன்பத்தை வெறுக்காதவர்களும் யாரும் இல்லை. வாழ்க்கையின் குறிக்கோள் இந்த இரண்டு மட்டுமே என்று ஆகிப்போனது. சம்ஸ்கிருதத்தில் இதையே "சுகப்பிராப்தி, துக்க நாஸ்தி" என்று சுருக்கமாகச்
சொல்லுகிறார்கள்.

படிப்பதற்கும் கேட்பதற்கும் இது எவ்வளவு எளிமையாகத் தோன்றுகிறது. ஆனால் நடைமுறையில் எல்லோராலும் இந்த நோக்கத்தை அடைய முடிகிறதா? இல்லையே? ஏன்?

இந்தக் கேள்விக்கு பதிலைத் தேடித்தான் எல்லோரும் அலைகிறோம். எனக்கு மட்டும் இந்தக் கேள்விக்கான பதில் தெரிந்திருந்தால் நான் இன்று உலகத்திற்கே ராஜாவாக இருப்பேன். ஆனால் என்னுடைய நல்ல காலமோ கெட்ட காலமோ, அந்த விடை தெரியவில்லை. வீட்டிற்கு ராஜாவாகவே முடியவில்லை. உலகத்திற்கு ராஜாவாகிறாராம் என்று வீட்டுக்காரி வேறு முனகுகிறாள்.

இருக்கட்டும். விடை எங்கே கிடைக்கும் என்றாவது யோசிப்போம்.

ஆன்மீகவாதிகள் என்ன சொல்கிறார்கள் என்றால் "நீ உன்னை அறிந்தால் சுக-துக்கம் இரண்டையும் ஒன்றாக உணர்வாய்" என்கிறார்கள். அதாவது நீ என்பது ஆத்மா. ஆத்மா வேறு. அநாத்மா (அதாவது உன் உடல்) வேறு, அதனால் உன் உடலுக்கு ஏற்படும் சுக துக்கங்களுக்கும் உனக்கும் ஒரு சம்பந்தமுமில்லை,

இதைப் புரிந்து கொள்ள இந்த ஒரு ஜன்மம் போறாது. முதலில் ஆத்மா என்றால் என்னவென்று புரிந்து கொள்ளவேண்டும். பிறகு ஆத்மா வேறு அநாத்மா வேறு என்பதை உணரவேண்டும். பிறகு சுகதுக்கங்கள் நம்முடையவை (அதாவது ஆத்மாவினுடையவை) அல்ல. அவை அநாத்மாவினுடையவை என்று புரியவேண்டும்.

தலைவலி வந்து விட்டால் அது யாருக்கோ வந்திருக்கிறது, நமக்கென்ன என்று இருக்கவேண்டும். ஆத்மாவை உன் உடலிலிருந்து ஐந்தடி உயரத்தில் இருப்பதாக பாவனை செய்துகொள். அப்போது நீ உன் உடலை தனியாக ஒரு இடத்தில் இருந்து பார்க்கிறாய். அப்போது உன் உடலுக்கு ஏற்படும் எந்த உணர்வும் உன்னைப் பாதிக்காது அல்லவா?

இப்படி யாரும் இதுவரை செய்ததாக சரித்திரம் இல்லை. ஆனால் இதைக் காலம் காலமாய் நிஜ சாமியார்களும் போலி சாமியார்களும் சொல்லிச் சொல்லியே காசு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படி செய்யக்கூடிய சக்தி உங்களில் யாருக்காவது இருந்து நீங்கள் (அதாவது உங்கள் ஆத்மா) உடலிலிருந்து ஐந்தடி மேலே போனால் அவ்வளவுதான், மின் மயானத்திற்கு உங்கள் அநாத்மாவைக் கொண்டு போய் தகனம் செய்து விடுவார்கள்.

ஆகவே இந்த உபாயம் நமக்கு உதவாது. வேறு ஏதாவது உபாயங்க்ள இருந்தால் இதைப் படிக்கும் அன்பர்கள் சொல்லவேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன். அதுவரை சுகம் வரும்போது ஆனந்தத்தையும் துன்பம் வரும்போது துக்கத்தையும் அனுஷ்டிக்கவும்.

20 கருத்துகள்:

  1. இன்பம் வரும்போது சீக்கிரம் இது முடிந்து விடும் என்ற கவலையும், துன்பம் நேரும்போது (எவ்வளவு சிறிய காலமாயினும்) இன்னும் எவ்வளவு நேரம் தாங்கணுமோ என்கிற மலைப்பும்தான் மனித மனதின் பலவீனங்கள்! துன்பத்தில் சிரிக்கிறோமோ இல்லையோ, சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்காமல் அமைதியாக இருக்கப் பழகினாலே இரண்டாவதும் விரைவில் கைகூடும்!

    பதிலளிநீக்கு
  2. சைவ சித்தாந்த வகுப்பில் அமர்ந்துள்ளது போல் இருந்தது, உங்களது பதிவைப் படிக்கும்போது. தெரிந்தது போல இருக்கும், ஆனால் தெரியாது. தெரியாதது போல இருக்கும் ஆனால் தெரியும். நன்றி.

    பதிலளிநீக்கு
  3. வரவர நாத்திகம் பேச ஆரம்பிச்சீங்களோன்னு இருக்கு!!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆத்திகமும் நாத்திகமும் ஒன்றுதானே அம்மா, இருவரும் கடவுளைப் பற்றித்தானே பேசுகிறார்கள். ஒருவர் கடவுள் இருக்கிறது என்கிறார், இன்னொருவர் கடவுள் இல்லை என்கிறார். யோசித்துப் பார்த்தால் இருவரும் கடவுளைப் பற்றிய சிந்தனையில்தானே இருக்கிறார்கள்? கடவுள் அனுக்ரஹம் இரு சாராருக்கும் சமமாகவே கிடைக்கும்.

      நீக்கு
  4. மனிதனாய்ப் பிறந்துவிட்டோம், முன்ஜென்ம கர்மவினைகளையும் இந்த ஜென்மத்தில் செய்துகொண்டிருக்கும் செயல்களுக்கான விளைவுகளையும் அனுபவித்தே ஆகவேண்டும்.... எல்லாவற்றையும் தான்கிக்கொள்வோம்...

    பதிலளிநீக்கு
  5. // வேறு ஏதாவது உபாயங்கள் இருந்தால் இதைப் படிக்கும் அன்பர்கள் சொல்லவேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன். //

    உபாயம் தெரிந்திருந்தால், இந்நேரம் ஒரு ஆன்மீக அலுவலகம் திறந்து காசு பார்த்திருப்போமே!

    பதிலளிநீக்கு
  6. //தலைவலி வந்து விட்டால் அது யாருக்கோ வந்திருக்கிறது, நமக்கென்ன என்று இருக்கவேண்டும்.//

    அது எப்படி முடியும்? எனக்கு இப்போதே இதைப்படித்ததும் தலைவலி தாங்க முடியாமல் உள்ளதே :)

    >>>>>

    பதிலளிநீக்கு
  7. //அப்படி செய்யக்கூடிய சக்தி உங்களில் யாருக்காவது இருந்து நீங்கள் (அதாவது உங்கள் ஆத்மா) உடலிலிருந்து ஐந்தடி மேலே போனால் அவ்வளவுதான், மின் மயானத்திற்கு உங்கள் அநாத்மாவைக் கொண்டு போய் தகனம் செய்து விடுவார்கள்.//

    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! அதே .. அதே .. நல்லதொரு எச்சரிக்கை :)

    பதிலளிநீக்கு
  8. //ஆகவே இந்த உபாயம் நமக்கு உதவாது. வேறு ஏதாவது உபாயங்கள் இருந்தால் இதைப் படிக்கும் அன்பர்கள் சொல்லவேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன். //

    அவர்கள் வேறு எதையாவது சொல்லி [உளறி] நம்மை மேலும் குழப்ப வேண்டுமா?

    //அதுவரை சுகம் வரும்போது ஆனந்தத்தையும் துன்பம் வரும்போது துக்கத்தையும் அனுஷ்டிக்கவும்.//

    ஓக்கே.

    பயனுள்ள சிந்திக்க வைக்கும் சிறப்பான பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  9. //ஆனந்தம் என்றால் என்ன?//

    அந்தக்காலத்தில், என் இளமைப்பருவத்தில், என் மீது தனி அன்பு செலுத்திய ஓர் இனிய தோழிதான் ‘ஆனந்தம்’ :)))))))))))))))

    ’ஆனந்தம் வரவாக ! ...... ஆனந்தம் செலவாக !!’

    என்று ஒரு சினிமா பாட்டினில் நம் வாத்யார் எம்.ஜி.ஆர். பாடியிருக்கிறார்.
    அந்தப்பாடலின் முதல் வரி:

    ‘கண்ணே, கனியே, முத்தே, மணியே, அருகே வா !’

    அந்தநாள் ...... ஞாபகம் ...... நெஞ்சிலே வந்ததே ....... ! :)

    பதிலளிநீக்கு
  10. ஐயா

    ஆனந்தம் என்பது சாமியார்கள் அனுபவிப்பது அதனால் தான் எல்லா சாமியார்களும் ஆனந்தா என்று முடியும் பெயர் வைத்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கு துக்கம் என்பதே கிடையாது.

    நீங்களும் ஆனந்தத்தை மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்றால் சாமியாராகி விடுங்கள் காவித் துணி தான் வந்து விட்டதே. பெயர் கந்தானந்தா என்று வைத்துக் கொள்ளலாம்.
    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
  11. நான் பதிவிட்டிருந்த கடவுளோடு ஒரு உரையாடல் படித்துப் பாருங்கள். கொஞ்சம் தெளிவு கிடைக்கலாம் PAIN IS INEVITABLE BUT SUFFERING IS OPTIONAL.

    பதிலளிநீக்கு
  12. நானும் யோசித்து சொல்கிறேன் ஐயா

    பதிலளிநீக்கு
  13. மிகப் பெரிய சித்தாந்தத்தை மிக லாவகமாக கையாண்டு வெற்றியும் பெற்றுவிட்டீர்கள்.

    பதிவைப் புரிந்து கொண்டபோதும் புரியாதமாதிரியாக ஒரு பிரமை எழுகிறதே...! ஒருவேளை இதைத்தான் செல்லியிருக்கிறீர்களோ..?

    நன்று.

    God Bless You

    பதிலளிநீக்கு
  14. ஐயா வணக்கம் .
    சில விசயங்கள் நம் தர்க்க அறிவில் சோதனை பண்னவே விரும்புகிறோம் .அதனால் விடைகள் கைக்கெட்டும் தூரத்தில் இருந்தும் உணர முடியவில்லை ஆனால் சித்தர்கள் ,ஞானிகள் ,யோகிகள் உணர்ந்தார்கள் .சொன்னார்கள் ஆனால் பாடலாக .(படிக்க தெரிந்தவன் புரிந்து கொள்ளட்டும் என்ற நோக்கமாக இருக்கலாம்) ”.தலைவலி வந்து விட்டால் அது யாருக்கோ வந்திருக்கிறது, நமக்கென்ன என்று இருக்கவேண்டும்” நீங்கள் கேட்கும் இதை உடல் ,உயிர் ,மனம் உணர ஆசைப்பட்ட அத்தனை பேரும் உணர முடியும் ,எளிய உடற் கூறியல் புரிந்து கொண்டால் போதும் .நீங்கள் இதை புரிந்து கொள்ள வேதாத்ரி மஹரிசி புத்தகங்கள் போவது இன்னும் சிறப்பு

    பதிலளிநீக்கு
  15. ஆத்மா என்று சொல்லுகின்றார்கள் தான்? அது எந்த உருவில் இருக்கும்? எப்படி இருக்கும்? புரியவில்லை.....அதாவது தாமரை இலை தண்ணீர் போல் இருக்க வேண்டும் சிம்பிளாகச் சொல்லப்போனால் இல்லையா ஐயா?!!! அது எல்லா காரியங்களுக்கும் பொருந்தாத ஒன்று....

    ம்ம்ம் கண்ணக் கட்டுது! தலை சுத்துது.....இந்த ஆத்மாஅ, அனாத்மா என்று தத்துவங்களைச் சொல்லி அதில் ஆழ்ந்து மூளையைப் பிய்த்துக் கொண்டு (இப்படி பலர் இருப்பதாக ஆய்வுகள் அதுவும் இந்தியாவில் இருப்பதாகச் சொல்லுகின்றன....) சொல்லுவதை விட எளிமையான "அன்பே சிவம்" என்ற தத்துவத்தைப் பின்பற்றி எல்லோரையும் அன்பு செய்யத் தொடங்கினால் மனிதம் தழைக்குமே.!!

    பதிலளிநீக்கு