செவ்வாய், 5 மே, 2015

சமூக அவலங்கள் - ஒரு கற்பனை

                                  Image result for வீதிச் சண்டை
நம் கண் முன்னால் நடக்கும் பல காரியங்கள் சமூக விரோதச் செயல்கள் என்று நாம் உணர்ந்தாலும் அவைகளைத் தட்டிக் கேட்க நம்மால் முடிவதில்லை. நாம் ஒருவர் மட்டும் அதைத் தட்டிக்கேட்பதினால் என்ன ஆகிவிடப் போகிறது? இந்த நாடே நம் ஒருவரது செய்கையால் மாறி விடப்போகிறதா என்ற எண்ணம்தான் நம் மனதில் முன் நிற்கிறது.

ஒரு  அசம்பாவிதம் அல்லது ஒரு அக்கிரமம் நம் கண் முன்னால் நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதைப் பார்த்தவுடன் நாம் என்ன நினைக்கிறோம்? இது ஒரு அக்கிரமம், இதைத் தடுப்போம் என்று தோன்றுகிறது. ஆனால் அடுத்த நொடி, இதை நாம் தடுக்கப் போனால் சுற்றி இருப்பவர்கள் நம் உதவிக்கு வருவார்களா? நம் ஒருவரால் மட்டும் இந்தக் காரியத்தைத் தடுக்க முடியுமா? அப்படித் தடுக்கப்போய் நமக்கு ஏதாவது ஒரு தீங்கு வந்தால் அதைத் தடுப்பது யார்?

அந்த மாதிரி நாம் பாதிக்கப்பட்டால் நம் வீட்டிலுள்ளவர்கள் என்ன சொல்வார்கள்? "வெளியில் போனால் உங்கள் வேலையைப் பார்த்து விட்டு வருவீர்களா? ஊர் சண்டையில் எதற்குத் தலையிட்டு வீண் வம்பை விலைக்கு வாங்கி வந்திருக்கிறீர்கள்? ரோட்டில் அத்தனை ஜனங்கள் இருந்தார்களே? அவர்களுக்கு இல்லாத அக்கறை உங்களுக்கு எதற்கு? " இது நம் வீட்டில் நமக்குக் கிடைக்கும் அர்ச்சனை.

அந்த நிகழ்வில் ஒரு வேளை போலீஸ் வந்து விட்டார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் அங்கு இருக்கும் எல்லோரையும் போலீஸ் வேனில் அள்ளிப் போட்டுக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் கொண்டு போய் விடுவார்கள். போலீஸ்காரர்களுக்கு ஒரு சட்ட விரோதமான காரியம் நடக்கும் இடத்தில் இருப்பவர்கள் அனைவரும் குற்றவாளிகளே. அப்படி அள்ளிக்கொண்டு போகும்போது அவர்கள் யார் குற்றவாளி, யார் என்ன செய்தார்கள் என்றெல்லாம் அங்கு வைத்து விசாரணை செய்ய மாட்டார்கள். அவர்களுக்குப் போலீஸ் ஸ்டேஷன்தான் பாதுகாப்பான இடம். அது அவர்கள் கோட்டை.

அங்கு வைத்துத்தான் அவர்கள் ஒவ்வொருவராக விசாரிப்பார்கள். இந்த விசாரிப்பு உடனடியாக நடந்தாலும் நடக்கும், இல்லை தாமதானாலும் பல மணிகள் தாமதமாகலாம். அந்த போலீஸ் நலைய இன்ஸ்பெக்டருக்கு வரும் வேலைகளைப் பொறுத்து இந்த விசாரணை நடக்கும். அப்போது நீங்கள் நடந்ததைச் சொல்லி, நீங்கள் அந்த அக்கிரமத்தைத் தடுப்பதற்காகத்தான் அந்த நிகழ்வில் தலையிட்டீர்கள் என்று சொன்னீர்களேயானால், அந்தப் போலீஸ்காரர்களும், உங்கள் வீட்டில் கேட்கும் அதே கேள்விகளைத்தான் கேட்பார்கள்.

அந்த சம்பவம் நடக்கும் இடத்திற்கு எதற்காகப் போனீர்கள்? அந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் உங்களுக்குத் தெரிந்தவர்களா?  அந்த இடத்தில் எத்தனையோ பேர் இருந்தார்களே, அவர்களுக்கு இல்லாத அக்கறை உங்களுக்கு மட்டும் ஏன் வந்தது? இத்தியாதி, இத்தியாதி. போலீஸ்காரர்கள் உண்மையைத் தெரிந்து கொள்ள பல விதமான கேள்விகள் கேட்டுத்தான் ஆகவேண்டும்.

இதற்குள் உங்கள் வீட்டிற்கு தகவல் போய், உங்கள் வீட்டிலிருந்து ஒரு பட்டாளமே போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து விடும். அவர்கள் எல்லோருடைய கண்களிலும் கண்ணீர் வழியும். அவர்களும் இந்தப் போலீஸ்காரர்கள் கேட்ட கேள்விகளையே திரும்பவும் கேட்பார்கள். அங்கு ஏன் போனிர்கள்? எல்லோரும் சும்மா இருக்க நீங்கள் மட்டும் ஏன் இந்த வம்பிற்குப் போனீர்கள்? இத்தியாதிகள்.

இதையெல்லாம் பார்த்த பிறகு உங்களுக்கே நீங்கள்தான் ஏதோ செய்யத் தகாத செயலைச் செய்து விட்டுப் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்திருப்பதாகத் தோன்ற ஆரம்பித்து விடும். இந்த களேபரங்கள் எல்லாம் நடந்து முடிந்து நீங்கள் உண்மையில் நிரபராதி என்று போலீஸ்காரன் உணர்ந்து உங்களை வீட்டிற்குப் போகச் சொல்லும்போது அவன் கடைசியாகச் சொல்லும் வார்த்தை "பெரிசு, இந்த மாதிரி வம்புக்கெல்லாம் இனிமேல தலையிடாதீங்க" என்பதாகத்தான் இருக்கும். அதுபோக நம் வீட்டாருக்கும் ஒரு வார்த்தை சொல்லுவான். "பெரிசைத் தனியாக எங்கேயும் போக விடாதீங்க" என்பான். இதுதான் "டாப்" புத்திமதி.

இது எல்லாம் முடிந்து நீங்கள் வீட்டிற்கு வந்த பிறகு, தினமும் காலையில் எழுந்தவுடன் உங்களுக்கு ஒரு சஹஸ்ரநாம அர்ச்சனை நடந்த பிறகுதான் மற்ற வீட்டு வேலைகள் ஆரம்பிக்கும், சொந்தக்காரர்கள் எல்லாம் துக்கம் விசாரிக்க வருவார்கள். உங்கள் வீர தீரப் பிரதாபங்களை எல்லாம் கேட்ட பிறகு அவர்களும் இந்த மாமூல் கேள்விகளைக் கேட்பார்கள். அங்கு ஏன் போனீர்கள்? இத்தியாதி. இத்தியாதி.

இத்தோடு முடிந்து விடுமா? கேஸ் பைல் தயார் செய்து கோர்ட்டில் தாக்கல் செய்து விட்டால், அதில் நீங்கள்தான் முக்கிய சாட்சியாகும். ஒவ்வொரு வாய்தாவிற்கும் நீங்கள் கோர்ட்டுக்குப் போய்வர வேண்டியிருக்கும். உங்களுக்குத் துணையாக ஒருவர் வரவேண்டியிருக்கும். இல்லையென்றால் நீங்கள் போய் வருவதற்குள் வேறு வம்பு ஏதாவது சம்பாதித்துக் கொண்டு வந்து விடுவீர்கள் என்ற எண்ணம் உங்கள் குடும்பத்தினரின் மனதில் ஏடிக்கொண்டே இருக்கும். கோர்ட் கேஸ் முடிய பல வருடங்கள் ஆகலாம். அதற்குள் உங்கள் கேசை சித்திரகுப்தன் முடித்தாலும் முடித்து விடலாம்..

மொத்தத்தில் உங்கள் வாழ்க்கை, கொலைக் குற்றம் செய்து விட்டு பத்து வருடம் ஜெயிலுக்குப் போய் வந்தவன் நிலைக்குத் தள்ளப்படும். உங்கள் வாழ்க்கை நரக வாழ்க்கையாக மாறிவிடும். உங்கள் வீட்டில் நீங்கள் ஒரு கைதியாக நடத்தப்படுவீர்க்ள. இது நான் என் அனுபவத்தில் பார்த்த பல சம்பவங்களின் தொகுப்பு. ஆனால் இது மாதிரிதான் நிச்சயம் நடக்கும்.

இந்த கற்பனைகள் ஏன் வந்தன என்றால் தினமும் செய்தித்தாள்களில் கற்பழிப்புச் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றனவே, நம் கண் முன்னால், நம் துரதிர்ஷ்டவசமாக, அப்படி ஒரு நிகழ்வு நடந்தால் நாம் என்ன செய்யவேண்டும் என்று யோசித்தேன். அதனால் வந்த விளைவுதான் இது.
இதைப் படிக்கும் அன்பர்களும் தங்களை கற்பனைக் குதிரைகளைத் தட்டி விட்டு யோசியுங்கள். உங்கள் குடும்ப அங்கத்தினருடன் விவாதியுங்கள்.
நல்ல கருத்துகள் உதித்தால் அதை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.

13 கருத்துகள்:

  1. பயமுறுத்தும், வெறுப்பேற்றும் இந்நிகழ்வுகள் நீங்கள் சொல்கிறபடிதான் நடக்கும். உண்மைதான். இந்த நடைமுறையை மாற்றவும் முடியாது.

    பதிலளிநீக்கு
  2. ஐயா,
    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. படித்தவர்கள் பொதுவாக தலையிடுவதில்லை. முடிந்தால் வலையில் பதிவிடுகிறார்கள். குறைய படித்தவர்களும், முரட்டு மனிதர்களும்தான் நேரடியாக தலையிடுகிறார்கள்.என்பது என் கருத்து.

    பதிலளிநீக்கு
  3. ஒன்று சேர்ந்து தப்பை தட்டிக் கேட்கலாம்... தவறில்லை... பிரச்சனையுமில்லை... எங்கள் பகுதியில் நடந்துள்ளது...

    பதிலளிநீக்கு
  4. தப்பைத் தட்டிக் கேட்கலாம். அதே நேரத்தில் நமக்கு வேறு பிரச்னைகள் வந்துவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
  5. ஐயா

    நீங்கள் சொன்ன மூன்று குரங்குகள் தத்துவத்தைத்தான் போலீஸ் காரர்களும் வீட்டில் உள்ளவர்களும் சொல்கிறார்கள்.

    தீயதைப் பார்க்காதே, பேசாதே கேட்காதே.

    ஆகவே குற்றங்களைப் பார்க்காமல் பேசாமல் செல்வதே நல்லது.

    இது போன்ற இடபடல்களில் போலீஸ் காரன் கேட்கும் முதல் கேள்வி "நீ யார் என்னுடைய வேலையைச் செய்வதற்கு? குற்றம் நடப்பதைத் தெரியப்படுத்தினால் போதும். மீதி நாங்கள் பார்த்துக் கொள்வோம். "
    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
  6. திண்டுக்கல் தனபாலன் ஐயாஅவர்களின் கருத்துதான் என் கருத்தும் ஐயா
    தம+1

    பதிலளிநீக்கு
  7. மிகவும் யோசித்து அனுபவித்து அழகாக எழுதியுள்ளீர்கள்.

    இது மற்ற எல்லோருக்குமே, குறிப்பாக வயதான பெரியவர்களுக்கு நல்லதொரு பாடமே.

    வாழ்க நம் பாரதம் !

    பதிலளிநீக்கு
  8. அன்புள்ள அய்யா,

    சமூக அவலங்கள் - தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே! போன வாரம் 26 -ந் தேதி ஞாயிறன்று மணப்பாறையில் மாரியம்மன் கோவில் பூச்சொரிதலின் போது இரண்டு கோஷ்டிகளுக்கும்... இளைஞர்களுக்குள் ஊர்வலத்தின்போது ஏற்பட்ட மோதலில் உருட்டுக்கட்டை கொண்டு தாக்கியதில் இருவர் இறந்துபோய்விட்டனர் என்பது செய்தி. இதில் தடுக்கவந்தவருக்கும் கட்டையால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

    தட்டிக்கேட்க முற்பட்டால் அவர்கள் தட்டிக்கேட்கிறார்கள். நீங்கள் கூறியது போல்தான்......................................!

    நன்றி.
    த.ம. 8.

    பதிலளிநீக்கு
  9. இதுவே ஒரு அக்கிரமம் நம் வீட்டில் நடந்து நமக்கு அதிகம் பாதிப்பாகி விடும் பட்சத்தில் சுற்றியுள்ள சமூகம் எப்போதும் போல வேடிக்கை பார்க்கும் பட்சத்தில் நம் குடும்ப உறுப்பினர்கள் உறவினர்கள் இதைப் பற்றி எப்படி பேசுவார்கள்?

    பதிலளிநீக்கு
  10. "அதற்குள் உங்கள் கேசை சித்திரகுப்தன் முடித்தாலும் முடித்து விடலாம்.."

    நமக்கான சித்திரகுப்தன்
    வருவதற்குள் அநீதிகளின் சித்ரவதைகளை முன்னின்று களையெடுப்பதென்று
    முடிவுசெய்துவிட்டால்
    நீதியாவது, காவல்துறையாவது
    வெங்காயமாவது
    ஒருகை பார்த்துவிடலாம் ஐயா

    பதிலளிநீக்கு
  11. ‘பூனைக்கு யார் மணி கட்டுவது?’ என்று யோசிக்காமல் நம் முன்னே நடக்கும் அநியாயத்தை தட்டிக்கேட்பதே நல்லது. ஒரு வேளை தனியே முயற்சிக்க தயக்கம் இருப்பின் நண்பர்கள் துணையுடன் எதிர்கொள்ளலாம் .

    பதிலளிநீக்கு
  12. "நல்லவனாக இருக்காதே "என்பதே அறிவுரையின் சாராம்சம் ..
    புத்தி..புத்தி ..நன்றி..நன்றி !

    மாலி

    பதிலளிநீக்கு
  13. இந்த மாதிரி எண்ணங்கள் பரவலாக இருப்பதால்தான் மோகாவில் ஒரு சிறுமியையும் அவள் தாயையும் பேரூந்திலிருந்து தள்ளிவிட்டபோது அங்கிருந்தவர்கள் ( சுமார் இருபது பேர்) யாரும் தலையிடாதது பெருசுகள் மட்டும் அல்லவே இதையெல்லாம் பார்ப்பது.

    பதிலளிநீக்கு