வியாழன், 12 நவம்பர், 2015

காது கருவிகள்

                                             Image result for காது மிஷின்
வயசானா பல்லு போகும். கண்ணு தெரியாது. காது கேட்காது. இவைகள் எல்லாம் சித்திரகுப்தன் தமக்கு அனுப்பும் நோட்டீசுகள். "அப்பா, பூலோகத்தில  பட்ட கஷ்டம் எல்லாம் போதும்ப்ஃபா, இங்க வந்திருங்க. உங்களுக்காக எல்லா சௌகரியங்களும் பண்ணி வச்சிருக்கோம் " னு அவன் அனுப்பும் நோட்டீசுகள் அவை.

ஆனால் நாம் கேட்போமா? "இன்னும் கொஞ்ச நாள் இங்கே இருக்கும் சொகங்களை அனுபவிச்சுட்டு வரேண்டா, மகனே" என்று இருப்பவர்கள்தான் அதிகம் பேர்.

பல்லு போனா செயற்கைப் பற்கள் வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் அதில் இருக்கும் சிரமங்களை அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும். கண்ணு தெரியலைன்னா கண்ணாடி போட்டுக்கிடலாம். அதில் அதிகம் சிரமம் இல்லை. எங்காவது மறந்து வச்சுட்டா தேடறதுக்கு இன்னொரு கண்ணாடி வேண்டும். அவ்வளவுதான்.

இந்தக் காது கேட்கறது இருக்குதே, இது ஒரு பெரிய சவால். இதை ஒரு சாபமாகவும் எடுத்துக் கொள்ளலாம்,  இல்லை, ஒரு வரமாகவும் எடுத்துக்கொள்ளலாம். பெண்டாட்டி வையறது கேட்காதுங்கறது ஒரு பெரிய வரம். ஆனால் நமக்கு வேலை ஆகவேண்டிய இடங்களில், பாங்க் போன்ற இடங்களில் நாம் ஒன்று கேட்க அவர்கள் ஒரு பதில் கூற, அது நமக்கு கேட்காமல் நாம் ஏறுமாறாக எதையாவது கூறப்போக, வம்பு வந்து விடும்.

காது கேட்காவிட்டால் வெளி வேலைகளுக்குப் போகாமல் இருந்து விட்டால் என்ன என்று சிலர் கேட்கலாம். இத்தனை நாட்களாக நாமே பார்த்த வேலைகளை இன்னொருவரை வைத்துப் பார்க்க மனது ஒப்புவதில்லை. இதுதான் பெரிய வேதனை.

சரி, காது மிஷின் வாங்கி வைத்துக்கொள்ளலாம் என்று டாக்டர் பேச்சைக் கேட்டு என் நண்பர்கள் பலர் மிஷின் வாங்கி வைத்தார்கள். கொஞ்ச நாள் கழித்துப் பார்த்தால் அவர்களை அந்த மிஷினை உபயோகப்படுத்துவதாகக் காணோம். ஏனென்று கேட்டால் சும்மா இருக்கும்போது கூட உஸ் என்று ஒரு சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. அந்த சப்தத்தைக் கேட்டுக்கொண்டே இருப்பது கஷ்டமாக இருக்கிறது என்ற பதில் வந்தது.

ஏனென்றால் அந்த மிஷின் வெளியில் இருக்கும் எல்லா சப்தங்களையும் பெரிதாக்கி காதுக்குள் செலுத்துகிறது. நாம் காதை கையினால் மூடிக்கொண்டால் ஹூம் என்று ஒரு நாதம் வருகிறதல்லவா.இந்த நாதத்தைத்தான் "ஓம்" என்று ஆன்மீகவாதிகள் கூறுகிறார்கள். நாம் கையை எடுத்து விட்டால் இந்த சப்தம் நமக்கு கேட்காது. ஆனால் காது மிஷின் வைத்திருப்பவர்களுக்கு இந்த சப்தம் எப்போதும் பலமாகக் கேட்டுக்கொண்டே இருக்கும். காது மிஷின்களில் இதுதான் பெரிய தொந்திரவு.

இந்த சப்தம் கேட்காமல் இருக்க மிகவும் அதிக விலை கொடுத்து, ஏறக்குறைய ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து, மிஷின் வாங்க வேண்டியிருக்கும். அவ்வளவு விலை கொடுத்து வாங்க மனது வராது. விலை குறைவான மிஷின்களுக்கே வாரம் ஒரு முறை பேட்டரி மாற்றவேண்டும். ஒரு பேட்டரியின் விலை 30 ரூபாய். இந்த விலைக்குப் பயந்துகொண்டு மிஷினை அடிக்கடி அணைத்து வைப்பார்கள். இப்படி அடிக்கடி அணைத்து பிறகு அதை ஆன் செய்வதால் இந்த சுவிட்ச் பழுதாகி மிஷினே உபயோகமற்றுப் போவதும் உண்டு.

பொதுவாக நான் சிபாரிசு செய்வது என்னவென்றால் பேசாமல் ஒரு அட்டையில் "எனக்கு காது கேட்காது" என்று எழுதி கழுத்தில் தொங்கவிட்டுக் கொள்வதுதான்.

12 கருத்துகள்:

 1. சில பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டுமானால்
  சில பிரச்சினைகளைச் சந்தித்தே ஆக வேண்டும்
  நன்றி ஐயா
  தம+1

  பதிலளிநீக்கு
 2. கடைசி வரியை படித்து ‘விழுந்து விழுந்து’ சிரித்தேன்!

  பதிலளிநீக்கு
 3. ஐயா

  உங்களுக்கு என்னைத் தெரியுமே. காது கேளாதவர்களில் நானும் ஒருவன். என்னுடைய மற்றும் என்னைப்போன்றவர்களின் அனுபவங்கள் மற்றும் அவஸ்தைகளை எழுதி உள்ளீர்கள்.நீங்கள் எழுதியவை யாவும் சரி.

  அதனால் தான் நான் தெரியாதவர்கள் அல்லது மெல்லப் பேசுபவர்களோடு பேசுவதற்கு ஒரு சிறப்பு காது அல்லது மொழி பெயர்ப்பாளர் (மனைவி) உதவி கோருகிறேன். மனைவி இல்லாமல் பேசினாலும் திரும்ப என்ன பேசினேன் என்பதை அவரிடம் சொல்ல வேண்டுமே. இந்த நிலை பேங்க் மருத்துவர் போன்ற இடங்களுக்கும் பொருந்தும்.

  இதனால் எனக்கு என்று தனியான ரகசிய விவரங்கள் சேகரிக்க சேமிக்க பாதுகாக்க கணினியை உபயோகிக்கிறேன். தற்போது online banking மூலம் பேங்க் வேலைகளை online மூலம் முடித்துக்கொள்கிறேன்.

  பின்னூட்டம் விரிவாகிறது, மேலும் விவரங்கள் ஒரு மின் அஞ்சலாக அனுப்புகிறேன்.
  --
  Jayakumar

  பதிலளிநீக்கு
 4. என் அம்மாவிற்கு காதுமிஷின் வாங்கி கொடுத்துள்ளோம்! நீங்கள் சொல்லும் அத்தனை உபாதைகளும் உண்டு. போதாக்குறைக்கு நன்றாக கேட்டுக்கொண்டிருந்த ஒரு காதும் இப்போது மிஷின் இல்லாமல் கேட்பது இல்லை! உபயோகமான பதிவு!

  பதிலளிநீக்கு
 5. கடைசியில் வைத்தீர்களே ‘’பஞ்ச்’’ ஸூப்பர் ஐயா.
  தமிழ் மணம் 5

  பதிலளிநீக்கு
 6. அன்புக்குறிய முனைவர் ஐயாவுக்கு வணக்கம்
  தங்களை தொடர் பதிவு ஒன்றில் இணைத்திருக்கிறேன் எனது தளம் வருகை தந்து விபரம் அறிய அழைக்கின்றேன்.
  முகவரி -
  http://www.killergee.blogspot.ae/2015/11/1.html
  அன்புடன்
  தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  12.11.2015
  U.A.E. Time: 03.38 pm

  பதிலளிநீக்கு
 7. ஹியரிங் எய்ட் வைத்திருப்பவர்கள் நிலையை அழகாகச் சொல்லி விட்டீர்கள்

  பதிலளிநீக்கு
 8. //பொதுவாக நான் சிபாரிசு செய்வது என்னவென்றால் பேசாமல் ஒரு அட்டையில் "எனக்கு காது கேட்காது" என்று எழுதி கழுத்தில் தொங்கவிட்டுக் கொள்வதுதான்.//

  இதை காரின் 'L' Board போல முன்பக்கமும், பின்பக்கமும் பளிச்சென்று தெரிவதுபோல தொங்க விட்டுக்கொண்டால் மிகவும் நல்லது. ஏனெனில் பின்னால் வரும் வாகனக்காரர் எவ்வளவுதான் ஹாரன் அடித்தாலும் இவர் காதில் அது விழாமல் போவதால் இவர் சற்றும் நகரவே மாட்டாரே.

  யோசிக்க வைக்கும் பகிர்வுக்கு நன்றிகள், சார்.

  பதிலளிநீக்கு