வெள்ளி, 20 நவம்பர், 2015

நாம் எல்லோரும் வள்ளல்களே


                                            Image result for திருடன்
முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரிவள்ளல் என்று நம் தமிழ் இலக்கியங்கள் போற்றுகின்றன. நம்மையும் இப்படி யாராவது வள்ளல் என்று போற்ற மாட்டார்களா என்று ஒவ்வொருவர் மனதிலும் ஏதோ ஒரு மூலையில் ஒரு நப்பாசை ஒட்டிக்கொண்டிருக்கும். உங்களுக்கெல்லாம் எப்படியோ தெரியாது, ஆனால் என் மனதிற்குள் அப்படி ஒரு ஆசை ஒட்டிக்கொண்டு இருக்கிறது.

அந்த ஆசையைத் தீர்க்கவென்றே இப்போது தீவிரவாதிகள் கிளம்பியிருக்கிறார்களாம். அவர்கள் நம்மை வாரிவழங்கும் வள்ளல்கள் என்று போற்றுகிறார்களாம். எப்படி என்று கேட்கிறீர்களா?

தீவிரவாதிகளுக்கு இன்று முக்கியமாகத் தேவைப்படுவது ஒரு பெயர் அதாவது ஒரு Identity. உங்கள் பெயரை வைத்து ஒரு தீவிரவாதி தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள முடியும் என்கிறார்கள் வல்லுநர்கள். எப்படி?

பேங்க் அல்லது மொபைல் டீலர், கேஸ் கம்பெனி இப்படி பல இடங்களில் உங்களுடைய அடையாளத்தை நிரூபிக்க பல ஆதாரங்களைக் கேட்கிறார்கள். ரேஷன் கார்டு, வாக்குரிமை அட்டை, ஓட்டுனர் உரிமம், ஆதார் கார்டு இப்படி பல ஆதாரங்களின் நகல்களை இங்கு நாம் பாரிவள்ளல் ரேஞ்சில் வாரி வழங்குகிறோம். தற்சமயம் மோடியின் தயவால் அவைகளை நாமே சர்டிபை பண்ணிக்கொள்ளலாம்.

ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரி ஆதாரம் கேட்கிறார்கள். பேங்கில் ரேஷன் கார்டு செல்லாது. டெலிபோன் ஆபீசில் வாக்காளர் அட்டை செல்லாது. இப்படி ஒவ்வொருவரும் தங்களுக்கென்று தனி ரூல்ஸ் வைத்திருக்கிறார்கள். இப்படி அடுத்தடுத்து இந்த நகல்களைக் கேட்பதால் நான் அனைத்து அடையாள ஆதாரங்களையும் பத்துப்பத்து காப்பி எடுத்து அனைத்தையும் ஒரு பையில் வைத்திருக்கிறேன். இம்மாதிரி ஆதாரம் கேட்கும் இடங்களுக்குச் சென்றால் அந்தப் பையை அப்படியே கொண்டு போய்விடுவேன். அவர்கள் அட்ரஸ் புரூப் என்றால் அந்தப் பையில் இருக்கிம் அனைத்துக் காப்பிகளையும் அவர்கள் முன்னால் போட்டு உங்களிக்கு எத் பிடிக்கிறதோ அதை எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விடுவது வழக்கம்.

இந்த ஆதாரங்களைக் கொடுத்து நம் காரியங்களை முடித்தவுடன் இதைப்பற்றி நாம் அறவே மறந்து விடுகிறோம். ஆனால் இவை பின்னால் என்ன ஆகிறது தெரியுமா? எல்லோரும் இவ்வாறு செய்வதில்லை. ஆனாலும் சில இடங்களில் தில்லு முல்லு நடக்கிறது. தீவீரவாதிகள், அல்லது போலி பெயர்களில் உலாவ விரும்புகிறவர்கள் அனைவரும் நாம் இப்படிக்கொடுக்கும் நம் விவரங்கள் அடங்கிய காப்பிகளை விலைக்கு வாங்கிக்கொள்கிறார்கள். அதை வைத்து அவர்கள் பாஸ்போர்ட் வாங்குகிறார்கள், ரயில் டிக்கட் வாங்குகிறார்கள், பேங்க் கணக்கு ஆரம்பிக்கிறார்கள், இன்னும் என்னென்னமோ செய்கிறார்கள்.

இதற்கு என்று ஏஜண்டுகள் இருக்கிறார்கள். நீங்கள் வீட்டில் இருப்பதாக நினைத்துக்கொண்டிருப்பீர்கள். ஆனால் உங்கள் பெயரில் எவனோ ஒருவன் வெளி நாட்டுக்குப் பறந்து கொண்டிருப்பான். உங்கள் பெயரில் இருக்கும் பேங்க் கணக்கில் பல தில்லு முல்லுகள் நடக்கும். நினைத்தாலே பயமாக இருக்கிறதல்லவா? இது நாம் பாரி வள்ளலாக ஆனதின் விளைவு.

இதற்கு மாற்று என்ன? இன்று எனக்கு வந்த ஒரு மின்னஞ்சலில் ஒரு வழி சொல்லப்பட்டிருக்கிறது. இந்த மாதிரி ஆதாரங்களின் நகல்களில் சர்டிபை செய்ய கையெழுத்து போடும்போது இன்ன காரியத்திற்காக என்று குறிப்பிடவேண்டும். பேங்க் கணக்கு ஆரம்பிக்க, சிம் கார்டு வாங்க என்று குறிப்பிடவேண்டும். அதன் கீழ் கையெழுத்து போட்டுவிட்டு தேதியை மறக்காமல் எழுத வேண்டும். இந்த இரண்டு குறிப்புகளையும் கடைப்பிடித்தால் ஓரளவு திருட்டுகளைத் தவிர்க்க முடியும் என்று வல்லுநர்கள் சொல்லுகிறார்கள்.

இந்த விபரங்களை எல்லோருக்கும் அறிவியுங்கள்.

17 கருத்துகள்:

 1. மிகவும் அருமையானதோர் விழிப்புணர்வு பதிவு.

  என் பெயரில் எவன் எவன் எங்கெங்கு இந்நேரம் பறந்துகொண்டு என்னென்ன காரியங்கள் செய்துகொண்டிருக்கிறானோ. நினைத்தாலே நடுக்கமாகத்தான் உள்ளது. இனி தாங்கள் சொல்வதுபோல நா னு ம் கொஞ்சம் மேலும் உஷாராகவே இருப்பேன். மிக்க நன்றி, சார்.

  ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, PAN Card, Driving License, Voter's ID, Passport என வீட்டில் உள்ள ஒவ்வொருவருக்குமான ஒவ்வொன்றிலும் 10 Xerox Copies + அவற்றின் Original ஆகியவற்றை பத்திரமாக ஒரு தனிப்பையில் போட்டுத்தான் ஜாக்கிரதையாக எடுத்துப்போக வேண்டியுள்ளது.

  இதிலெல்லாம் என்னைப்போலவே தாங்களும் மிகவும் முன்னெச்சரிக்கையாக இருப்பது எனக்கு மிகவும் வியப்பளிக்கிறது. :)

  பகிர்வுக்கு நன்றிகள், சார்.

  பதிலளிநீக்கு
 2. சிறந்த விழிப்புணர்வுப் பதிவு ஐயா
  இனிமேல் தாங்கள் காட்டிய வழிதான்ஹ
  நன்றி ஐயா
  தம +1

  பதிலளிநீக்கு
 3. //இதிலெல்லாம் என்னைப்போலவே தாங்களும் மிகவும் முன்னெச்சரிக்கையாக இருப்பது எனக்கு மிகவும் வியப்பளிக்கிறது. :)//

  இந்த ஒருமித்த மனப்பான்மையினால்தான் நம் நட்பு வளர்ந்திருக்கிறது.

  பதிலளிநீக்கு
 4. அய்யா, ரொம்ப நாளாகவே எனக்கும் இந்த சந்தேகம் உண்டு. உங்கள் பதிவின் மூலம் தீர்த்து வைத்து விட்டீர்கள். எல்லா அலுவலகங்களிலும் (தனியார் உட்பட) குறிப்பிட்ட சில ஆவணங்களை, சில குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் எரித்துவிடச் சொல்வார்கள். ஆனால் அந்த பணியை முழுமையாகச் செய்கிறார்களா என்பதே சந்தேகம்தான்.

  பதிலளிநீக்கு
 5. ஐயா

  சாதாரணமாக அடையாளம் நிருபீக்க வேண்டிய இடங்களில் எல்லாம் ஒரிஜினல் கேட்பார்களே? அப்போது அந்த போலி பெயரில் உலாவ விரும்புவர்கள் என்ன செய்வார்கள். போட்டோவை எப்படி மாற்றுகிறார்கள். அப்படி போலி பாஸ்போர்ட் உண்டாக்ககூடியவர்கள் போலி விலாசம் உண்டாக்க முடியாதா?

  இரண்டு சின்ன ஏமாற்று வேலைகள் பற்றி சொல்கிறேன். கல்லூரியில் சேரும்போது "caution deposit" வாங்குவார்கள். கல்லூரி விட்டு செல்லும்போது அது மாணவனுக்கு திருப்பித் தரவேண்டும். பல மாணவர்கள் அதை மறந்து விடுவார்கள்.போலிக் கையெழுத்திட்டு கல்லூரி எழுத்தர்களே அதைக் கைப்பற்றிய விவரம் உண்டு.

  இரண்டாவது.

  வெளிமாநிலத்தில் வேலை செய்யும் ஒருவர் சொந்த ஊரில் உள்ள தனது சொத்துக்கு கிராம அலுவலகத்தில் சொத்து வரி கட்டினார். VAO இல்லாததால் ரசீது அடுத்த நாள் கொடுப்பதாகக் கூறினர். அடுத்தநாள் செல்ல அவர் மறந்து விட்டார். திடீரென்று ஒரு நாள் போலிஸ் அவர் வீட்டிற்கு வந்தது. என்ன என்று கேட்டபோது நீங்கள் ஜாமீன் நின்ற ஆள் தப்பி விட்டான். அதற்கு உங்களை கைது செய்ய வந்தோம் என்றனர்.

  அவர்கள் சொல்லத்தான் அவருக்கும் என்னவோ தில்லுமுல்லு நடந்திருப்பது தெரிய வந்தது. ஜாமீன் வாங்க சொத்து இருப்பதைக் காட்டினால் போதும். ஒரு கிரிமினல் கேசில் அவருடைய சொத்து வரி ரசித் காட்டப்பட்டு குற்றவாளி ஜாமீன் வாங்கியிருந்தது தெரிய வந்தது. ஆக வாங்க மறந்த ஒரு ரசீது செய்த வினை தான் இது. அவர் அரசு உத்தியோகத்தில் இருந்ததால் தப்பித்தார்.

  ""
  Jayakumar

  பதிலளிநீக்கு
 6. ஐயா! வங்கிகளில் நமது கணக்கு பற்றிய சான்றிதழ் கேட்டால் அதைத் தரும்போது கீழே அது எதற்காக தரப்படுகிறது எனக் குறிப்பிடுவார்கள். எடுத்துக்காட்டாக நாம் கடவுச்சீட்டுக்கு (Passport) விண்ணப்பிப்பதற்காக கேட்டால், சான்றிதழில் அது கடவுச்சீட்டு விண்ணப்பிப்பதற்காக தரப்படுகிறது என குறிப்பிட்டு தருவார்கள். அதை நாம் வேறு எதற்கும் உபயோகப்படுத்தமுடியாது. அது போல் நாமும் நமது விவரங்கள் கொண்ட படியை (Copy) பிறருக்கு தரும்போது அது எதற்காக தரப்படுகிறது என எழுதுவது நல்லதே. அனைவருக்கும் பயன் தரும் தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 7. உங்கள் கட்டுரையின் கருப்பொருள் மிக மிக முக்கியமான ஒன்று. கிரெடிட் கார்டு வாங்குவதற்காக (விளம்பர உச்சத்தில் இருக்கும் சில தனியார் வங்கிகளுக்கு) நீங்கள் விண்ணப்பிக்கும்போது உங்களால் தரப்படுள் எல்லா விவரங்களும் அவர்களது முகவர்களால் வேறு பல கிரெடிட் கார்டு கம்பெனிகளுக்கு ஏதோ ஒரு விலை வைத்து விற்கப்படுவதை நான் அறிவேன். சமீப காலத்தில் இதே மாதிரி நடக்கும் இன்னொரு மோசடியாவது: நீங்கள் ஏதாவதொரு கருணை இல்லத்திற்கு (எடுத்துக்காட்டாக உதவும் கரங்கள், சிவானந்த குருகுலம்.. இப்படி எத்தனையோ) நன்கொடை அனுப்பினால் அடுத்த சில நாட்களில் உங்கள் அலைபேசிக்கு இன்னும் பல கருணை இல்லங்களில் இருந்து குறுஞ்செய்தி வருகிறது. தொடர்ந்து வாய்மொழியாகவும் அழைப்பார்கள். எப்படி என்னுடைய நம்பர் கிடைத்தது என்றால் பதில் வராது. .. எல்லா இடத்திலும் எச்சரிக்கை தேவை. - இராய செல்லப்பா

  பதிலளிநீக்கு
 8. பயன் பெறும் தகவல்தான் நல்ல பதிவைத்தந்ந முனைவர் ஐயாவுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 9. தமிழ்மணத்தில் இணைக்கவும், வாக்கு அளிக்க நேரமாவதையும் admin@thamizmanam.com எனும் மின்னஞ்சலுக்கு தங்களின் மின்னஞ்சலிருந்து தகவல் அனுப்பவும்...

  முடிந்தால் செல்லும் தளங்களுக்கு எல்லாம் இதை (copy & paste) தெரிவிக்கவும்... செய்வீர்களா...? நன்றி...

  பதிலளிநீக்கு
 10. =====================================================================

  தமிழ்மணத்தில் இணைக்கவும், வாக்கு அளிக்க நேரமாவதையும் admin@thamizmanam.com எனும் மின்னஞ்சலுக்கு தங்களின் மின்னஞ்சலிருந்து தகவல் அனுப்பவும்...

  முடிந்தால் செல்லும் தளங்களுக்கு எல்லாம் இதை (copy & paste) தெரிவிக்கவும்... செய்வீர்களா...? நன்றி...

  ===========================================================================


  சிறந்த விழிப்புணர்வுப் பதிவு. எனக்கு(ம்) இது வாட்சப்பில் வந்தது.

  பதிலளிநீக்கு
 11. மிகவும் அருமையான விழிப்புணர்வுப் பகிர்வு ஐயா...

  பதிலளிநீக்கு
 12. நல்ல பதிவு அய்யா... இனி தொடர்கிறேன் இதைப்போல்... nandri

  பதிலளிநீக்கு
 13. //அட்ரஸ் புரூப் என்றால் அந்தப் பையில் இருக்கிம் அனைத்துக் காப்பிகளையும் அவர்கள் முன்னால் போட்டு உங்களிக்கு எத் பிடிக்கிறதோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்//
  ஒரு திரைப்படத்தில் நடிகர் விவேக் "பல வண்ணங்களில்" பதிவு எண் பலகை (number plate)யுடன் அலையும் காட்சியும் வசனமும் நினைவுக்கு வந்தது. பயனுள்ள தகவல்..!

  பதிலளிநீக்கு