சிறு வயதிலிருந்தே மனிதனாகப் பிறந்தவனுக்கு போட்டியும் பொறாமையும் கூடாது என்று ஊட்டி வளர்க்கப்பட்டிருக்கிறோம். அப்படிப்பட்ட குணங்கள் இருப்பவர்கள் நல்ல பண்பாடு உள்ள மனிதர்கள் இல்லை என்ற கருத்து நம் எல்லோருடைய மனதிலும் ஏதாவது ஒரு மூலையில் ஒளிந்து கொண்டிருக்கும். தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த போது மிச்சம் மீதி இருக்கிற மூளையைக் கொண்டு நான் இதைப் பற்றி கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன். அப்படி யோசித்தபோது தோன்றிய எண்ணங்களை, "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்கிற பரந்த நோக்கத்தில் உங்களுடன் பகிர்கிறேன்.
சில உதாரணங்களை எடுத்துக் காட்டினால் என்னுடைய கருத்துக்களைப் புரிந்து கொள்ள ஏதுவாய் இருக்கும். ஒரு ஓட்டப்பந்தயம் நடக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். பத்துப் பேர் பங்கெடுத்துக்கொள்கிறார்கள். இந்தப் பத்து பேரும் போட்டி மனப்பான்மை இல்லாதவர்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்கள் ஓடும்போது என்ன நினைப்பார்கள்? மற்றவர்களில் யாராவது ஜெயிக்கட்டுமே என்று தாராள மனப்பான்மையில் ஓடினால் என்ன ஆகும்? அவரால் தன் முழு சக்தியையும் காட்ட முடியாது. இப்படியே ஒவ்வொருவரும் நினைத்தால் அந்த ஓட்டப் பந்தயம் எப்படி இருக்கும்?
ஓட்டப்பந்தயம் வேறு, வாழ்க்கை வேறு. "வாழ்க்கையில்தான் போட்டி பொறாமை கூடாது என்று சொல்கிறோம்" என்று ஒரு சாரார் வாதம் செய்யலாம். சரி, அப்படியே வைத்துக்கொள்வோம். கல்லூரியில் ஒரு வகுப்பில் 100 மாணவர்கள் படிக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்களை அனைவரும் நமக்குள் எந்த வேற்றுமையும் கூடாது. போட்டி, பொறாமையெல்லாம் கெட்ட குணங்கள், ஆகவே நாம் அனைவரும் ஒரே மாதிரியான மார்க்குகள்தான் வாங்கவேண்டும் என்று முடிவு செய்தால் எப்படியிருக்கும்?
இப்படியே பல வருடங்கள் நடந்து கொண்டிருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் எல்லோரும் என்ன ஆவார்கள்? ஒரு மந்தையில் இருக்கும் ஆடுகளுக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கும்? எல்லோருக்கும் ஒரே மாதிரியான மந்த புத்தியே இருக்கும் அல்லவா?
வாழ்க்கைக்கு வருவோம். நாங்கள் அனைவரும் சமம், எல்லோரும் ஒரே மாதிரியான வேலை செய்வோம், ஒரே அளவு சம்பளம் வாங்குவோம் என்று இருந்தால் என்ன ஆகும்? சமூகத்தில் ஏதாவது முன்னேற்றம் ஏற்படுமா?
மக்களே, யோசித்துப் பாருங்கள். போட்டி, பொறாமை இருந்தால்தான் ஒவ்வொருவரும் தங்கள் தனிப்பட்ட திறமைகளை வெளிக்காட்ட முனைவார்கள். ஏனெனில் இறைவன் அனைத்து மனிதர்களையும் ஒரே மாதிரி படைக்கவில்லை. ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு திறமையை வைத்திருக்கிறான். சிலருக்கு தலைமைப் பண்பு இருக்கும். சிலர் சாதாரண வேலைகளைச் செய்யும் அளவிற்கே திறன் இருக்கும்.
அதனால் எல்லோரும் ஒரே மாதிரிதான் இருக்கவேண்டும் என்று நினைத்தால் மனித சமூகம் முன்னேறாது. ஆகவே போட்டியும் பொறாமையும் இவ்வுலகில் அவசியம்.
அவசியம்தான்! அப்போதான் சுவாரஸ்யமும் இருக்கும். இல்லாவிடில் 'சப்'பென்று போய்விடும்!
பதிலளிநீக்குவித்தியாசமான சிந்தனையுடன் கூடிய நல்ல நேர்மறைச்சிந்தனை. நம்மை மேம்படுத்திக்கொள்ள உதவும். நன்றி.
பதிலளிநீக்குவித்தியாசமான சிந்தனை ஐயா
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குபோட்டி அவசியம்தான் ஆனால் பொறாமை அவசியமில்லை. எல்லா இனத்தினரும் போட்டிமட்டும் போடுவார்கள் ஆனால் தமிழனுக்கு மட்டும்தான் பொறாமை அதிகம் இருக்கும். அதனால் போட்டியில் தான் வெற்றி பெறுகிறானோ இல்லையோ அல்லது போட்டியில் தான் பங்கெடுக்க வில்லையானாலும் பொறாமையால் மற்ற தமிழன் ஜெயிக்க கூடாது என்று அதற்காக முயற்சி செய்வான்
//போட்டி, பொறாமை இருந்தால்தான் ஒவ்வொருவரும் தங்கள் தனிப்பட்ட திறமைகளை வெளிக்காட்ட முனைவார்கள். ஏனெனில் இறைவன் அனைத்து மனிதர்களையும் ஒரே மாதிரி படைக்கவில்லை. ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு திறமையை வைத்திருக்கிறான். சிலருக்கு தலைமைப் பண்பு இருக்கும். சிலர் சாதாரண வேலைகளைச் செய்யும் அளவிற்கே திறன் இருக்கும்.
பதிலளிநீக்குஅதனால் எல்லோரும் ஒரே மாதிரிதான் இருக்கவேண்டும் என்று நினைத்தால் மனித சமூகம் முன்னேறாது. ஆகவே போட்டியும் பொறாமையும் இவ்வுலகில் அவசியம்.//
மிகவும் அழகாக எடுத்துச் சொல்லியுள்ளீர்கள்.
உங்களைப்பார்த்தால் எனக்கு மிகவும் பொறாமையாக உள்ளது.
பதிவுகளில் உங்களுடன் போட்டி போட இயலவில்லையே என்ற வருத்தம் ஏற்படுகிறது.
தலைமைப் பண்புகள் நிறைந்துள்ள தங்களுக்கு என் பாராட்டுகள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.
ஐயா
பதிலளிநீக்குகோவை என்றாலே கொஞ்சம் மாற்று யோசனை வந்துவிடும் போல் இருக்கிறது. உங்கள் ஊர்க்காரர் ஜக்கி வாசுதேவ் "அத்தனைக்கும் ஆசைப்படு" என்பார். நீங்கள் போட்டியும் பொறாமையும் வேண்டுவதே என்கிறீர்கள். சரி விசயத்திற்கு வருவோம்.
அந்தக் காலங்களில் ஊரில் உள்ள எல்லோரும் உறவாலோ மற்றும் நட்பினாலோ பிணைக்கப்பட்டிருப்பர். எல்லோருக்கும் எல்லோரையும் தெரியும். சண்டை சச்சரவு வராமல் இருக்கவும் வரவுக்கு ஏற்ற செலவு செய்து தொல்லை இல்லாமல் வாழவும் போட்டி பொறமை வேண்டாம்.என்று கூறினர்.
எப்படி பொய் சொல்லக்கூடாது என்று சொன்ன வள்ளுவர் நன்மை உண்டாகுமானால் பொய் சொல்லலாம் என்று கூறினாரோ அப்படியே போட்டியும் பொறாமையும் நன்மை உண்டாக்கும் எனில் கொள்ள வேண்டியதே.
எல்லோரும் உசுப்பி விட்டவுடன் நான் பதிவுலகில் இருந்து அம்பேல் இல்லை என்று ஓடி (தள்ளாத வயதிலும்) வந்தததற்கு நன்றி, பாராட்டுகள்.
--
Jayakumar
யாருக்கு தள்ளாத வயது? எனக்கா? இல்லவே இல்லை. எனக்கு இன்னும் தள்ள முடியும். வயதையும் வாழ்க்கையையும் தள்ளிக் கொண்டுதானே இருக்கிறேன்.
நீக்கு"போட்டிப் பொறாமைகளும் பொய்கூறும் வார்த்தைகளும் ஈட்டியின் முனைபோலடா அதனை எய்தவன் அழிவானடா" என்பது பாடல். போட்டி இருந்தால்தான் சுவாரசியம். அது உத்வேகத்தைக் கொடுக்கும். பொறாமை அழிவைத் தூண்டும். எண்ணுகிறவனுக்கு வயிற்றெரிச்சலை உண்டாக்கும். போட்டி அவசியம்.
பதிலளிநீக்குI envy you (உங்களைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது) என்பது, தன்னிரக்கம்தான். தனக்கு அந்தத் திறமை, வாய்ப்பு இல்லையே என்ற எண்ணம்தான். இது எதிர்மறையானது.
போட்டி அவசியம் பொறாமை தேவையா?
பதிலளிநீக்குதன்னைவிட மேலானவனைப் பார்த்து தான் அவனைப்போல் இல்லையே (தன்னைவிட அவன் மேலானவனாக இருக்கிறானே) என்று நினைப்பதுதான் பொறாமை என்று நான் கருதுகிறேன். அப்படிப் பொறாமைப்படும்போதுதான் தானும் அவனைப்போல் ஆகவேண்டும் என்று முயற்சிக்கிறான். இதுதானே போட்டி என்பது? என் வாதம் சரிதானா?
நீக்குபோட்டி இருக்கலாம். ஆனால் பொறாமை இருக்கக்கூடாது ஐயா! அய்யன் திருவள்ளுவர் இதற்காகவே அழுக்காறாமை என்ற அதிகாரத்தில் 10 குறள்களை படைத்துள்ளார். அதுவும் பொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த வேறு பகையே வேண்டா அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும் என்று
பதிலளிநீக்கு“அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார்
வழுக்கியுங் கேடீன் பது”
165 ஆவது குறளில் கூறியுள்ளாரே!
போட்டி வேண்டும் அப்போதுதான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும் ஆனால் பொறாமை தேவையில்லையே. பொறாமை வந்துவிட்டால் வேண்டாத குணங்கள் வந்து சேர்ந்துக் கொள்ளும். ஆரோக்கியமான போட்டி நல்லதே.
பதிலளிநீக்குபோட்டி தேவை.. பொறாமை தேவையில்லை என்றே நினைக்கிறேன்....
பதிலளிநீக்குவணக்கம் அப்பா ..வித்தியாசமான பார்வை....தேவை தான் போல இருக்குப்பா.
பதிலளிநீக்குஐயா! போட்டி இருக்கட்டும். அதுதான் உத்வேகத்தை கொடுக்கும். ஆனால், பொறாமை இருந்தால், [பொறாமை = போறாமை. அவனிடம் இருப்பது தன்னிடம் இல்லையே. அவனுக்கு கிடைப்பது தனக்கு கிடைக்கவில்லையே என்ற மனநிலை] விரக்தி மனநிலைக்கு கொண்டு சென்றுவிடும். உத்வேகத்தை முடக்கிவிடும். தவிர, எப்படியேனும் தான் ஜெயிக்கவேண்டும் என்ற தீயை வளர்த்து, போட்டியாளருக்கு தீமை செய்யத் தூண்டும் எனவே, பொறாமை கூடாது என்பதே என் எண்ணம்.
பதிலளிநீக்குபோட்டியும் பொறாமையும் இவை இரண்டையும் தவறாகப் புரிந்து கொண்டு எழுதிய கருத்துக்கள்
பதிலளிநீக்கு