திங்கள், 8 பிப்ரவரி, 2016

என் சதாபிஷேக புராணம்.


எங்கள் குடும்பம் பாரம்பரிய விவசாயக் குடும்பம். எங்கள் உறவினர்களும் விவசாயிகளே. ஒரு ஐம்பது அறுபது வருஷத்திற்கு முன்பு வரை, நிறையப் பேருக்கு தங்கள் பிறந்த நாள் எது என்றே தெரியாது. என்ன வயசு என்று கேட்டால் பொதுவாக 60, 70 என்று சொல்வார்களே தவிர சரியான வயதைச் சொல்லத் தெரியாது.

இப்படி இருக்கையில் எங்கள் உறவினர்களில் யாரும் பிறந்த நாள் விழா என்று கொண்டாடுவதோ, சஷ்டியப்த பூர்த்தி அல்லது சதாபிஷேகம் என்று கொண்டாடுவதோ வழக்கில் இல்லை. இதைப் பற்றிக் கேட்டாலும் "அப்படியா, பிறந்த நாளா? அப்படீன்னா என்ன" என்று கேட்கும் நிலையில்தான் இருந்தார்கள்.

என் குடும்பம் மட்டும் எங்கள் ஊரை விட்டு புலம் பெயர்ந்து கோயமுத்தூருக்கு நான் பிறப்பதற்கு முன்பே பிழைப்பைத் தேடி வந்து விட்டார்கள். நான் பிறந்தது கோயமுத்தூர் டவுனில்தான். நான் பிறந்து நான்கைந்து வயது ஆனவுடன் என்னை என்ன செய்வது என்று தெரியாமல் பக்கத்தில் அடுத்த ரோட்டில் இருந்த முனிசிபல் ஆரம்பப் பள்ளியில் கொண்டு போய் சேர்த்தார்கள். காசா, பணமா? இலவசக் கல்விதான் அப்போது. இப்படியாக சொந்த ஊரில் இருந்திருந்தால் மாடு மேய்த்துக் கொண்டிருக்க வேண்டியவன், டவுனில் பள்ளிக்கூடம் போக ஆரம்பித்தேன்.

என் வீட்டிற்குப் பக்கத்தில் பெரும்பாலும் அய்யர் குடும்பங்கள். அந்த வீடுகளில் இருக்கும் என் வயதுப் பையன்களை அந்தந்த வீடுகளில் இருக்கும் மாமிகள் "அந்த சூத்திரப் பையனோடு சேராதே, உன் படிப்பு கெட்டுப்போகும்"
என்று சொல்லி விட்டதினால் எனக்கு தோழர்கள் என்று யாரும் கிடையாது. அதனால் படிப்பதைத் தவிர வேறு வழியில்லை. படித்தேன்.

உயர் நிலைப் பள்ளி, கல்லூரிப் படிப்பு, தொழில் கல்விப் படிப்பு அனைத்தும் என் வீட்டிலிருந்து மூன்று கிலோ மீட்டருக்குள்ளேயே கிடைத்தன. வீட்டில் இருந்து கொண்டே படித்துக்கொள்ளலாம். செலவுகளும் அதிகம் இல்லை. தொழில் கல்லூரியில் படித்த காலத்தில் வருடம் ஒன்றுக்கு 300 ரூபாய் செலவாகியது. உயர் நிலைப்பள்ளிக்கு மாதம் 5 ரூபாய் கட்டணம்.

ஆனால் நானும் பெரிய மார்க்கெல்லாம் வாங்காவிட்டாலும், ஒரு வகுப்பிலும் பெயில் ஆகவில்லை. அப்படி பெரில் ஆகியிருந்தால் என்னை உடனே படிப்பை நிறுத்தி விட்டு ஏதாவது தொழிற்கூடத்தில் வேலைக்குச் சேர்த்து விட்டிருப்பார்கள். அப்படி நடந்திருந்தால் நான் இப்போது ஒரு டாடா அல்லது பிர்லா மாதிரி ஒரு பெரிய தொழிலதிபர் ஆகியிருப்பேன். விதி யாரை விட்டது?

படித்து முடித்து வேலைக்குச் சேர்ந்தது பற்றியெல்லாம் முன்பே பல பதிவுகளில் கூறியிருக்கிறேன். இப்படியாக நான் அரசு சேவை முடித்து பணி ஓய்வு பெற்றேன். எங்கள் டிபார்ட்மென்டில் பணி ஓய்வு 60 வயது முடிந்தவுடன் கிடைக்கும். நான் பணி ஓய்வு பெற்றது என்னுடைய பள்ளி சர்டிபிகேட்டுகளில் குறிப்பிட்டுள்ள தேதி பிரகாரம் நடந்தது. ஏனெனில் என்னைப் பள்ளிக்குச் சேர்க்கும்போது எனக்கு நான்கு வயதுதான் முடிந்திருந்தது. அந்தப் பள்ளியின் ஹெட்மாஸ்டர், பையனுக்கு ஐந்து வயது முடிந்திருந்தால்தான் பள்ளியில் சேர்ப்போம் என்று சொல்லி விட்டார். என்னைக் கூப்பிட்டுக்கொண்டு போனவர்கள், "சரீங்க ஐயா. அப்படியே வயதைப் போட்டுக்கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டார்கள். அவரும் அப்படியே ஒரு பிறந்த தேதியைப் போட்டு என்னை ஐந்து வயதுப் பையனாக ஆக்கி பள்ளியில் சேர்த்துக்கொண்டார்.

இந்த விபரங்களெல்லாம் பின்னாளில் என் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு ஒரு துண்டுத்தாளில் எழுதி வைத்திருந்த ஒரு டாகுமென்ட் கிடைத்து நானாக யூகித்து சேகரித்த விபரங்கள். இந்த விபரங்கள் தெரியும்போது இதனால் என்ன கெட்டுப்போச்சு என்றுதான் இருந்தேன். அரசுப்பணியில் இருந்த போது இந்த பிறந்த தேதியை மாற்ற முடியும் என்ற விபரம் தெரிந்த போது எனக்கு இந்த துண்டுக் காகிதத்தைத் தவிர வேறு முறையாக எழுதப்பட்ட ஜாதகம் இல்லாததினால் பிறந்த தேதியை மாற்ற நான் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

ஆகவே நான் பணி ஓய்வு பெற்றபோது என் வயது 59 மட்டுமே. இப்படி இருக்கையில் என் நண்பன் ஒருவன் (என்னைவிட ஆறு மாதம் பெரியவன்) திருக்கடையூர் சென்று சதாபிஷேகம் செய்து விட்டு வந்ததாகக் கூறினான். நாம் எல்லோருமே செம்மறி ஆட்டுக்கூட்டம்தானே. முன்னால் செல்லும் ஆடு ஒரு கிணற்றில் விழுந்தால் அத்தனை ஆடுகளும் கிணற்றில் விழுமாம்.

என் நண்பனிடம் விவரங்கள் கேட்டுக்கொண்டு எனக்கு ஜாதகப்பிரகாரம் 60 வயது முடியும்போது திருக்கடையூர் சென்று சஷ்டியப்த பூர்த்தி விழா செய்து வந்தேன். நான், என் மனைவி, என் இரண்டு பெண்கள் இவ்வளவுதான் கல்யாணக்கூட்டம். திரு. அமிர்த கடேசக்குருக்கள் என்பவர் இந்த சடங்கை நடத்திக்கொடுத்தார்.

ஆண்டவன் கிருபையினால் அதற்குப் பிறகு 80 வயது வரை உயிருடன் இருந்து விட்டேன். இதற்குக் காரணம் அமிர்த கடேஸ்வரரின் அருள்தான் என்று நம்புகிறேன். இந்த நம்பிக்கையின் பேரிலும், சதாபிஷேகமும் செய்தால் கனகாபிஷேகம் செய்யும் வாய்ப்பு கிட்டும் என்று செவி வழி செய்திகள் கேட்டதினாலும் சதாபிஷேகம் செய்து கொள்ளலாம் என்று முடிவு எடுத்தேன்.


சரி, திருக்கடையூரிலேயே செய்து கொள்ளலாம் என்றால் குடும்பத்தினர் எல்லோரையும் அவ்வளவு தூரம் கூட்டிக்கொண்டு போய் வருவது சிரமம் ஆதலால் வேறு வழி என்ன என்று யோசித்தோம். அப்போதுதான் திருக்கடையூருக்கு ஏறக்குறைய சமமான ஒரு கோயில் இங்கேயே பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் இருப்பதைக் கண்டுபிடித்தோம். திருக்கடையூரில் சாபம் பெற்ற எமன் இந்த ஊரில்தான் சாப விமோசனம் பெற்றான் என்பது ஸ்தல வரலாறு.

எமன் சந்தோஷப்பட்ட ஊரில் ஒரு சாந்தி செய்தால் அவன் மிகவும் சந்தோஷப்பட்டு நம் பக்கம் கொஞ்ச நாளைக்கு திரும்பிப் பார்க்கமாட்டான் என்பது நம்பிக்கை. ஆகவே இங்கேயே என் சதாபிஷேகத்தை நடத்துவது என்று முடிவு செய்தோம். எப்படி நடத்துவது என்று பல முறை பல மாற்றங்களை செய்து கடைசியில் மிக நெருங்கிய உறவினர்கள் மற்றும் ஆப்த நண்பர்களை மட்டும் அழைத்து விழாவை நடத்துவது என்று முடிவானது.

அதன் பிரகாரம் ஒரு நாள் குறித்து, அது தவறிப்போன செய்தி நீங்கள் அறிந்ததே. கடைசியாக 5-2-2016 அன்று என்னுடைய சதாபிஷேகம் நடந்தது. உறவினர்களும் நண்பர்களும் வந்திருந்து ஆசி பெற்றார்கள். என்னைவிட ஒரே ஒரு நண்பர் மட்டும் மூத்தவர். அவரிடம் நான் ஆசி பெற்றுக்கொண்டேன்.
எல்லோருக்கும் விருந்தும் அன்பளிப்புகளும் ஆசிகளும் வழங்கப்பட்டன.

இந்த வைபவத்தில் நான் ஒரு புனர் ஜன்மம் எடுத்தேன் என்றே சொல்லலாம். எப்படியென்றால் வைபவம் காலை ஐந்து மணிக்கு ஆரம்பித்தது. ஆயுஷ் ஹோமம், ம்ருத்யஞ்சய ஹோமம் ஆகியவை நடந்தன. அப்போது பல கலசங்கள் வைத்து  அந்த ஹோமங்கள் முடிந்த பின் அந்த கலச நீரால் தம்பதியருக்கு அபிஷேகம் செய்யும் வழக்கம் உண்டல்லவா. அந்த கலசங்கள் முதல் நாள் இரவே நீரால் நிரப்பப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. இதுவோ குளிர்காலம் நேரமோ அதி காலை.


எங்களை உட்காரவைத்து அந்தக் கலசங்களில் உள்ள நீரை அதற்கென்று உள்ள ஒரு ஜல்லடையில் வழியாக எல்லா உறவினர்களும் எங்களுக்கு அபிஷேகம் செய்யவேண்டும். ஆஹா, அந்த அனுபவம் இருக்கிறதே, அதை அனுபவித்தால்தான் தெரியும். நான் வேஷ்டி மட்டுமே அணிந்து மேல் துணி எதுவும் போடவில்லை. முதல் கலச நீரை ஊற்றினதுமே உடல் நடுங்க ஆரம்பித்தது. அடுத்தடுத்த கலச நீர்களை ஊற்றும்போது இந்த நடுக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து ஒரு கட்டத்தில் காலன் கருணை புரியப் போகிறான் என்ற நிலை வந்து விட்டது.

ஆனால் கால காலேஸ்வரர் கோயிலிலேயே காலன் கருணை புரிய தைரியம் வரவில்லை போலிருக்கிறது. மீண்டும் புனர் ஜன்மம் எடுத்தேன். நம் பதிவர்கள் சஷடியப்த பூர்த்தி மற்றும் சதாபிஷேகம் செய்து கொள்ளப்போகிறவர்கள் இந்த விஷயத்தை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இப்படியாக என் சதாபிஷேக வைபவம் நடந்தேறியது.

இந்தப் புராணப்பதிவை படிப்பவர்களும் படிக்கக் கேட்டவர்களும் தங்களுடைய சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் ஆகிய வைபவங்களைக் கொண்டாடவும் அவைகளில் நான் கலந்து கொள்ளவும் திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரரும் கோவில்பாளையம் கருணாகரவல்லி சமேத காலகாலேஸ்வரரும் அருள் புரிய பிரார்த்திக்கறேன். அனைவருக்கும் என் மனமார்ந்த ஆசிகளையும் உரித்தாக்குகிறேன். எனக்கு வாழ்த்துகள் தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.




14 கருத்துகள்:

  1. திருக்கடையூருக்கு இணையாக அங்கு ஒரு ஸ்தலம் இருக்கிறது என்பது நீங்கள் சொல்லித்தான் தெரியும். ஜலல்டையில் அபிஷேகம் செய்யும் தண்ணீரை வெது வெது என்று சூடு செய்து கொளல் ஆகாதா? நல்ல படங்கள். ஆசிகளுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. வழக்கமான நகைச்சுவையுடன் கூடிய தங்களுடைய ‘சதாபிஷேக புராணத்தை இரசித்துப் படித்தேன்.

    தங்களின் சதாபிஷேகம் விழாவில் கலந்துகொள்ளமுடியாவிடினும் கலந்துகொண்டதுபோன்ற உயன்றவு தங்களின் பதிவைப் படித்தபோது ஏற்பட்டது உண்மை.


    /

    பதிலளிநீக்கு
  3. உணர்வு என்பது தவறுதலாக ‘உயன்றவு’ என்று தட்டச்சில் வந்துவிட்டது. மன்னிக்க!

    பதிலளிநீக்கு
  4. வழக்கம்போல் மிகவும் நகைச்சுவை கலந்து மிக அருமையாக எழுதியுள்ளீர்கள். :)

    தாங்கள் கனகாபிஷேகம் செய்துகொள்ள கடவுள் புரியட்டும்.

    தம்பதியினருக்கு மீண்டும் என் நமஸ்காரங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தாங்கள் கனகாபிஷேகம் செய்துகொள்ள கடவுள் புரியட்டும். // =

      தாங்கள் கனகாபிஷேகம் செய்துகொள்ள கடவுள் அ ரு ள் புரியட்டும்.

      நீக்கு
  5. 5-2-16 அன்று நடந்த நிகழ்ச்சி புராணமாகி விட்டதா சதாபிஷேகத்துக்குத் தகுதிபெற ஆயிரம்பிறைகள் கண்டிருக்க வேண்டும் என்பார்கள். என்வணக்கங்களையா

    பதிலளிநீக்கு
  6. //நான் இப்போது ஒரு டாடா அல்லது பிர்லா மாதிரி ஒரு பெரிய தொழிலதிபர் ஆகியிருப்பேன்.
    // அதெல்லாம் பழசு. அம்பானி அதானி என்று சொல்லுங்கள்.

    //எமன் சந்தோஷப்பட்ட ஊரில் ஒரு சாந்தி செய்தால் அவன் மிகவும் சந்தோஷப்பட்டு நம் பக்கம் கொஞ்ச நாளைக்கு திரும்பிப் பார்க்கமாட்டான் என்பது நம்பிக்கை.//

    அது சாந்தி இல்லை. சடங்கு. சாந்தி சடங்கு என சொல்வதில் இது சடங்கு ஆகும்.சாந்தி என்பது பிதுர்க்கடன் போன்றது. ஆமாம் மற்ற ஊர்களில் எல்லாம் எமன் சந்தொசப்படவில்லையா?.

    //ஆனால் கால காலேஸ்வரர் கோயிலிலேயே காலன் கருணை புரிய தைரியம் வரவில்லை போலிருக்கிறது. //

    காலன் கருணை புரிந்ததால் தானே மேலே போகாமல் தப்பித்தீர்கள்.
    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா அவர்களெல்லாம் அந்தகாலத்து ஆசாமிகள். டாடா பிர்லா தான் தெரியும். அம்பானி, அதானி எல்லாம் இந்த காலத்து ஆட்கள். நமது வாண்டுகளுக்குத்தான் தெரியும்.

      குருச்சந்திரன்

      நீக்கு
  7. தங்களது பாணியில் விழாவை விவரித்த விதம் அருமை ஐயா வாழ்க வளமுடன்
    தமிழ் மணம் 3

    பதிலளிநீக்கு
  8. திருக்கடையூருக்கு நிகராக மற்றொரு கோவில் பற்றி அறிந்துகொண்டோம்..
    தங்கள் இருவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
  9. // நான் பிறந்து நான்கைந்து வயது ஆனவுடன் என்னை என்ன செய்வது என்று தெரியாமல் பக்கத்தில் அடுத்த ரோட்டில் இருந்த முனிசிபல் ஆரம்பப் பள்ளியில் கொண்டு போய் சேர்த்தார்கள்.//


    // அப்படி நடந்திருந்தால் நான் இப்போது ஒரு டாடா அல்லது பிர்லா மாதிரி ஒரு பெரிய தொழிலதிபர் ஆகியிருப்பேன். விதி யாரை விட்டது?//

    // நாம் எல்லோருமே செம்மறி ஆட்டுக்கூட்டம்தானே. முன்னால் செல்லும் ஆடு ஒரு கிணற்றில் விழுந்தால் அத்தனை ஆடுகளும் கிணற்றில் விழுமாம்.//

    //ஆண்டவன் கிருபையினால் அதற்குப் பிறகு 80 வயது வரை உயிருடன் இருந்து விட்டேன்.//
    //எமன் சந்தோஷப்பட்ட ஊரில் ஒரு சாந்தி செய்தால் அவன் மிகவும் சந்தோஷப்பட்டு நம் பக்கம் கொஞ்ச நாளைக்கு திரும்பிப் பார்க்கமாட்டான் என்பது நம்பிக்கை//.

    //இந்த வைபவத்தில் நான் ஒரு புனர் ஜன்மம் எடுத்தேன் என்றே சொல்லலாம். //

    //அடுத்தடுத்த கலச நீர்களை ஊற்றும்போது இந்த நடுக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து ஒரு கட்டத்தில் காலன் கருணை புரியப் போகிறான் என்ற நிலை வந்து விட்டது.//

    //ஆனால் கால காலேஸ்வரர் கோயிலிலேயே காலன் கருணை புரிய தைரியம் வரவில்லை போலிருக்கிறது. மீண்டும் புனர் ஜன்மம் எடுத்தேன்.//

    //இந்தப் புராணப்பதிவை படிப்பவர்களும் படிக்கக் கேட்டவர்களும் ...//

    தங்களின் நகைச்சுவை அதிகரித்துக்கொண்டேதான் போகிறது . கண் முன்னே நிகழ்ச்சி நடைபெறுவது போல சொல்வது ஒரு கலை என்றால் அதை நகைச்சுவை இழையோட சொல்வது அந்த கலையில் தேர்ச்சி பெற்றவர்களால்தான் முடியும். அந்த வகையில் நீங்கள் இன்னுமொரு 80 ஆண்டுகள் வாழ அந்த அமிர்த கடேஸ்வரரும் மற்றும் கால காலேஸ்வரரும் அருள் புரியட்டும்

    அன்புடன்

    குருச்சந்திரன்

    பதிலளிநீக்கு
  10. // நான் பிறந்து நான்கைந்து வயது ஆனவுடன் என்னை என்ன செய்வது என்று தெரியாமல் பக்கத்தில் அடுத்த ரோட்டில் இருந்த முனிசிபல் ஆரம்பப் பள்ளியில் கொண்டு போய் சேர்த்தார்கள்.//


    // அப்படி நடந்திருந்தால் நான் இப்போது ஒரு டாடா அல்லது பிர்லா மாதிரி ஒரு பெரிய தொழிலதிபர் ஆகியிருப்பேன். விதி யாரை விட்டது?//

    // நாம் எல்லோருமே செம்மறி ஆட்டுக்கூட்டம்தானே. முன்னால் செல்லும் ஆடு ஒரு கிணற்றில் விழுந்தால் அத்தனை ஆடுகளும் கிணற்றில் விழுமாம்.//

    //ஆண்டவன் கிருபையினால் அதற்குப் பிறகு 80 வயது வரை உயிருடன் இருந்து விட்டேன்.//
    //எமன் சந்தோஷப்பட்ட ஊரில் ஒரு சாந்தி செய்தால் அவன் மிகவும் சந்தோஷப்பட்டு நம் பக்கம் கொஞ்ச நாளைக்கு திரும்பிப் பார்க்கமாட்டான் என்பது நம்பிக்கை//.

    //இந்த வைபவத்தில் நான் ஒரு புனர் ஜன்மம் எடுத்தேன் என்றே சொல்லலாம். //

    //அடுத்தடுத்த கலச நீர்களை ஊற்றும்போது இந்த நடுக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து ஒரு கட்டத்தில் காலன் கருணை புரியப் போகிறான் என்ற நிலை வந்து விட்டது.//

    //ஆனால் கால காலேஸ்வரர் கோயிலிலேயே காலன் கருணை புரிய தைரியம் வரவில்லை போலிருக்கிறது. மீண்டும் புனர் ஜன்மம் எடுத்தேன்.//

    //இந்தப் புராணப்பதிவை படிப்பவர்களும் படிக்கக் கேட்டவர்களும் ...//

    தங்களின் நகைச்சுவை அதிகரித்துக்கொண்டேதான் போகிறது . கண் முன்னே நிகழ்ச்சி நடைபெறுவது போல சொல்வது ஒரு கலை என்றால் அதை நகைச்சுவை இழையோட சொல்வது அந்த கலையில் தேர்ச்சி பெற்றவர்களால்தான் முடியும். அந்த வகையில் நீங்கள் இன்னுமொரு 80 ஆண்டுகள் வாழ அந்த அமிர்த கடேஸ்வரரும் மற்றும் கால காலேஸ்வரரும் அருள் புரியட்டும்

    அன்புடன்

    குருச்சந்திரன்

    பதிலளிநீக்கு
  11. எதிர் பார்த்தபடி, தொடர்ச்சியாக, நகைச்சுவை ததும்ப ‘என் சதாபிஷேக புராணம்’ பாடியதற்கு நன்றி. உங்கள் ஆசீர்வாதம் என்போன்ற உங்களது வாசகர்களுக்கு எப்போதும் உண்டு. நன்றி.

    பதிலளிநீக்கு