ஞாயிறு, 20 மார்ச், 2016

8. இந்திய நிதி அமைச்சருடன் சந்திப்பு.

(இந்தத் தொடரில் வரும் சம்பவங்களும், சம்பவங்களில் வரும் அனைத்து நபர்களும் கற்பனையே)


மறுநாள் சரியாக 10 மணிக்கு பிரதம மந்திரியும் நிதி அமைச்சரும் வந்தார்கள். அவர்களை வரவேற்று கான்பரன்ஸ் ரூமுக்குப் போனோம்.    

                               

நிதி அமைச்சர் எங்களைக் கூப்பிட்ட விஷயம் என்ன? என்றார்.

நான் இருவரையும் பார்த்துச் சொன்னேன். தற்போது நமது நாட்டு நடப்பு மிகவும் மோசமாக இருக்கிறது. வெளிநாட்டுக்காரர்கள் நம்மைக் கேவலமாக மதிப்பீடு செய்கிறார்கள். இதையெல்லாம் மாற்றி நம் நாட்டை உலகின் ஒன்றாம் நெம்பர் நாடு என்று மாற்றவேண்டும் என்று நான் விரும்புகிறேன், என்றேன்.

எங்களுக்கும் அது விருப்பமே. ஆனால் அதை எப்படி நிறைவேற்றுவது என்றுதான் தெரியாமல் விழிக்கிறோம் என்றார்கள். நான் சொன்னேன், என்னிடம் இப்போது ஏராளமான செல்வம் மற்றும் சகல வல்லமைகளும் இருக்கின்றன. நீங்கள் சரி என்று சொன்னால் என் திட்டங்களை விவரிக்கிறேன், என்றேன். அவர்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டு,  பிறகு சொன்னார்கள். எங்களுக்கு விருப்பமே, ஆனால் பாருங்கள், இதில் எங்கள் கட்சித் தலைவரும் சம்பந்தப் பட்டிருக்கிறார். அவர் அனுமதி இல்லாமல் நாங்கள் எந்த முடிவும் எடுக்கமுடியாதே, என்றார்கள்.

அப்படியானால் அவரையும் கூப்பிட்டுக்கொள்வோம் என்றேன். அவர்கள் செல்போனில் பேசினார்கள். அடுத்த அரை மணி நேரத்தில் அவரும் வந்தார். அவரை மிக மரியாதையாக வரவேற்று அமரச்செய்தோம். அவருக்கும் என் விருப்பத்தைத் தெரிவித்தேன். அவர் எனக்கும் சில நீண்ட காலத் திட்டங்கள் இருக்கின்றன. அதை நீங்கள் நிறைவேற்றுவதானால் எனக்கு உங்கள் திட்டத்தில் ஆட்சேபணை இல்லை என்றார்கள்.

அதற்கென்ன, அப்படியே செய்து விட்டால் போகிறது என்று சொல்லிவிட்டு என் முதல் கேள்வியைக் கேட்டேன். இப்போது நமது இந்திய அரசுக்கு கடன் எவ்வளவு இருக்கிறது என்றேன். நிதி அமைச்சர் உள்நாட்டிலா, வெளி நாட்டிலா என்றார். இரண்டையும் சொல்லுங்களேன் என்றேன்.

உள் நாட்டுக்கடன் பத்தாயிரத்தெட்டு லட்சம் கோடி ரூபாய்கள், வெளிநாட்டுக் கடன் இருபத்தி இரண்டாயிரத்து மூன்று லட்சம் கோடி டாலர்கள் என்றார். இது போக வட்டி தனி என்றும் சொன்னார். இந்தத் தொகையைக் கேட்டு நான் கொஞ்சம் அசந்து விட்டேன்.

சரி, நிதி அமைச்சரே, இந்தத் தொகையை மொத்தமாக நான் தேவலோக பேங்கிடமிருந்து ஒரே தவணையில் தானமாகக் கொடுக்கச் சொல்கிறேன். இந்தக் கடன்களையெல்லாம் பட்டுவாடா செய்து முடிக்க எவ்வளவு நாட்களாகும் என்று கேட்டேன். ஒரு வாரத்தில் முடித்து விடுவோம் என்றார்.

குபேரனைக்கூப்பிட்டு, இவர் கேட்கும் பணத்தைக் கொண்டுபோய் டில்லியில் இவருடைய ஆபீசில் கொடுத்து விட்டு வாருங்கள் என்றேன் அவன் சரியென்று போய்விட்டான். இத பாருங்க நிதி அமைச்சரே, இதில் எந்த சொதப்பலும் இருக்கக்கூடாது. அடுத்த வாரம் இதே நாள் நாம் எல்லோரும் இங்கே கூடுவோம். அப்போது எந்தக் கடனும் நிலுவை இருக்கக் கூடாது, பார்த்து செய்யுங்கள், என்றேன். அவர்கள் மூவரும் சரியென்று தலை ஆட்டிவிட்டுப் புறப்பட்டார்கள்.

புறப்படும்போது அவர்கள் மூவருக்கும் ஒவ்வொரு சூட்கேஸ் பரிசளித்தேன். இதில் என்ன இருக்கிறது என்று கேட்டார்கள். நீங்கள் இந்த மீட்டிங்க்கில் கலந்து கொண்டதற்கான தினசரி அலவன்ஸ் என்றேன். சரி என்று வாங்கிக்கொண்டு போய்விட்டார்கள். அந்த சூட் கேசுகளில் ஒவ்வொன்றிலும் ஒரு கோடி ரூபாய் வைத்திருந்தேன்.

ஆடற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும், பாடற மாட்டை பாடி கறக்கவேண்டும், அல்லவா?

11 கருத்துகள்:

  1. //நீங்கள் இந்த மீட்டிங்க்கில் கலந்து கொண்டதற்கான தினசரி அலவன்ஸ் என்றேன். சரி என்று வாங்கிக்கொண்டு போய்விட்டார்கள். அந்த சூட் கேசுகளில் ஒவ்வொன்றிலும் ஒரு கோடி ரூபாய் வைத்திருந்தேன்.//


    ஐயா! அந்த அமைச்சர்கள் குழுவில் நான் இல்லாமல் போனேனே என்று வருத்தப்படுகிறேன்.

    ஆதாயமில்லாமல் ஒரு கோடி ரூபாய்களைக் கொடுத்த்திருக்கமாட்டேர்கள். காத்திருக்கிறேன் காரணத்தை அறிய!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆறு நிறைய பாலாய் ஓடுது, அம்மா குடி, அப்பா குடி கதைதான். அடுத்த பதிவில் உங்களுக்கும் ஒரு பதவி கொடுத்து விடுகிறேன். சந்தோஷம்தானே.

      நீக்கு
    2. மிக்க மகிழ்ச்சி ஐயா! காத்திருக்கிறேன் தங்களின் கீழ் பணிபுரிய.

      நீக்கு
  2. தளத்தின் background எல்லாம் மாற்றியது சரி... அப்படியே blogspot.in என்பதை blogspot.com என்று மாற்றி விடவும்... இல்லையென்றால் தமிழ்மணம் ஓட்டளிக்க முடியாது ஐயா...

    நன்றி...

    பதிலளிநீக்கு
  3. நிச்சயமாக அவர்கள் இதைச் செய்யப்போவதில்லை. ஏனெனில், நீங்கள் அவர்களுக்குத் தரவேண்டிய ஒருநாள் சம்பளம் அலவன்சை மட்டும்தானே தந்திருக்கிறீர்கள்? பிச்சைக் காசு ஒரு கோடி ருபாய்! அப்புறம் ஒருநாள் வருமானம் என்று கேட்டிருந்தால் இன்னும் பலமடங்கு கொடுத்திருக்க வேண்டியிருக்கும். இதனால் நீங்கள் போன பிறகு அவர்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டதை நீங்கள் கவனிக்கலையே? அப்புறம் முக்கியமான விஷயம் கைமாறும் பணத்தில் பத்துவிழுக்காடு கமிஷன் தராமல் காரியம் நடக்காதே? ஆகவே உள்நாட்டு, வெளிநாட்டுக் கடன் ரெண்டையும் கூட்டி, அதற்கான கமிஷனையும் உடன் கொண்டுவந்து தரும்படி அந்த குபேரனுக்கு உத்தரவிட்டு நம்நாட்டைக் காப்பாற்ற வேண்டுமாய்த் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நீங்க எவ்வளவோ செய்ஞ்சிருக்கீங்க...இதச் செய்ய மாட்டீங்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமக்கு கொடுக்கப்பட்டுள்ள பவர் அளவிட முடியாதது. அடுத்த பதிவில் பார்க்கவும்.

      நீக்கு
  4. குபேரப்பட்டிணத்தில் உள்ள பெரும்பாலான சொத்துக்களை இப்படி நம் தேச நலனுக்காகவும் கெளரவத்திற்காகவுமே செலவு செய்யத் துணிந்துள்ள தங்களின் தேசப்பற்று என்னை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

    ஆனால் இவையெல்லாம் சொன்னது சொன்னபடி நிறைவேற்றப்படுமா என்ற கவலையும் என்னை வாட்டாமல் இல்லை. பார்ப்போம். தொடரட்டும்.....

    பதிலளிநீக்கு
  5. ஸூட்கேசுக்குள் ஒரு கோடியாஆஆஆஆஆஆஆஆஆஆ ?
    தமிழ் மணம் 4

    பதிலளிநீக்கு