வெள்ளி, 15 ஜூலை, 2016

ஜோசியத்தை நம்பி வாழ்க்கையைத் தொலைத்தவர்கள்.


                                  Image result for நவ கிரகங்கள்       
நமது சூரிய மண்டலத்தின் அமைப்பைப் பற்றி அநேகர் அறிந்திருப்பார்கள். படிக்காதவர்கள் கூட "நவக்கிரகங்கள்" என்றால் புரிந்து கொள்வார்கள்.

சூரியன் ஒரு நட்சத்திரம். அது நிலையாக ஒரே இடத்தில் இருந்து கொண்டு இருக்கிறது. (இது உண்மையா, கற்பனையா என்று தெரியாது). சூரியனைச்  சுற்றி பல கிரகங்கள் உள்ளன. அவைகளில் பூமியும் ஒன்று. அனைத்து கிரகங்களும் சூரியனை பல வேகங்களில் சுற்றி வருகின்றன. இந்த வானவியல் உண்மைகள் எல்லாம் அரசல் புரசல்களாக எல்லோருக்கும் தெரியும்.

 இந்த கிரக நிலைகளைப் பற்றிய சாஸ்திரம் வானவியல் சாஸ்திரம். இந்த வானவியல் மிகவும் நுட்பமானது. கணித அடிப்படையில் அமைந்தது. மிகவும் துல்லியமாக கிரக நிலைகளைக் கணிக்கும் வல்லமை உள்ளது.

ஜோதிடம் என்கிற சாஸ்திரம் இந்த கிரக நிலைகளை அடிப்படையாக வைத்து தோன்றிய ஒரு கலை. வானவியல், கணக்குகளின் அடிப்படையில் துல்லியமாக அமைந்துள்ளதை வைத்து இந்த ஜோசியர்கள், ஜோதிட சாஸ்திரமும் வானவியலை அடிப்படையாகக் கொண்டது. ஆகவே இதுவும் கணிதத்தின் அடிப்படையிலேயே அமைந்தது. ஆகவே துல்லியமானது என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். பெரும்பாலானோர் இந்த வாதத்தை நம்புகிறார்க்ள.

ஒரு மனிதன் இந்தப் பூமியில் பிறக்கும்போது இந்த நவக்கிரகங்களும் ஒவ்வொரு இடத்தில் இருக்கும். அதிலிருந்து வரும் கிரணங்கள்  அப்போதுதான் பிறந்த அந்த ஜீவனைப்  பாதிக்கும். இந்தப் பாதிப்பில்தான் ஒருவனுடைய விதி அடங்கியிருக்கிறது. இந்த கிரகங்கள் இடம் மாறும்போது அந்த ஜீவனின் நிலையும் மாறுகின்றது. இந்த மாற்றங்களுக்கு ஏற்பத்தான் அவனுடைய வாழ்க்கை அமைகின்றது.

சூரிய மண்டலத்திலுள்ள பல்வேறு கிரகங்களிலிருந்து கிரணங்கள் (Electro-magnetic Radiations) பூமிக்கு வருகின்றன என்பது விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை. ஆகவே ஜோதிடர்கள் இப்படிச் சொல்லும்போது பெரும்பாலான மக்கள் "ஆஹா, ஜோதிடம் ஒரு உண்மையான விஞ்ஞான சாஸ்திரம்தான்" என்று நம்பி விடுகிறார்கள்.

சரி, நடைமுறைக்கு வருவோம். முதல் குறிப்பு - கிரகங்களின் நிலை ஒரு ஜாதகனின் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கும் என்பது வெறும் யூகமே. இதற்கு எந்தவிதமான விஞ்ஞான ஆதாரங்களோ அல்லது நடைமுறை ஆதாரங்களோ கிடையாது. ஒரு ஜாதகனின் கடந்த கால வாழ்க்கையை துல்லியமாகச் சொல்லிய பல ஜோதிடர்கள் உண்டு. ஆனால் அந்த ஜாதகனின் எதிர்காலம் பற்றி அப்படி துல்லியமாகச் சொன்னவன் எவனுமில்லை.

ஜோதிடர்கள் தங்கள் வாக்குச் சாதுர்யத்தினால் மக்களை வசப்படுத்துகிறார்களே தவிர கிரகங்களின் நிலைக்கும் ஜாதகனின் வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பை அறிந்தவன் எவனுமில்லை. மக்கள் ஜோதிடத்தின் பேரில் வைத்திருக்கும் தங்கள் அதீத நம்பிக்கையினால் ஜோதிடன் சொல்வது அப்படியே நடக்கும் என்று நம்பி தங்கள் வாழ்க்கையைத் தொலைக்கிறார்கள்.

குறிப்பாக கல்யாணத்திற்காக ஜோசியம் பார்க்கும் பல பெற்றோர்கள் ஜோசியனின் வார்த்தைகளை நம்பி தங்கள் வாரிசுகளின் கல்யாணங்களைத் தள்ளிப் போடுகிறார்கள். ஒரு கட்டத்தில் அந்த வாரிசுகளின் வயது அதிகமாகி அவர்களுக்கு நல்ல வரன் அமையாமல் போகிறது. ஒவ்வொரு வீட்டிலும் இந்த மாதிரி அவலங்கள் அதிகமாக இருக்கின்றன.

ஒவ்வொருவரும் தாங்கள்தான் சிந்தித்து இந்த அதீத நம்பிக்கையை கைவிட வேண்டும்.

9 கருத்துகள்:

 1. மூன்றாவதாகச் சொல்லியிருக்கும் விஷயம் எங்கள் ஒரு உறவிலேயே நடக்கிறது. பாவமாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 2. ​​மூன்றாவதாகச் சொன்ன ஜாதகப் பொருத்தம் பற்றி சில வார்த்தைகள்.
  திருமணம் என்பது வாழ்நாளில் ஒருமுறைதான். ஆகவே திருமணம் செய்யப்போகும் ஆண்/பெண் பற்றி முழுமையாக தெரியாதபோது முடிவெடுக்க ஒரு மார்க்கம் அல்லது வழி தேவைப்படுகிறது. அதில் ஓன்று தான் ஜாதகப் பொருத்தம் பார்ப்பது. பொருத்தம் பார்ப்பது என்பது ஒரு நம்பிக்கை தான். இந்த மாதிரி நம்பிக்கைகளே மனித வாழ்வின் அடிப்படை. செய்யும் செயல் சரி என்று ஒரு திருப்தி கொள்ளவே இது போன்ற நம்பிக்கைகள். கடவுள் நம்பிக்கை, ஜாதக நம்பிக்கை, குரூ நம்பிக்கை, என்று நம்பிக்கை கொள்பவர்கள் இவற்றை மூட நம்பிக்கை என்று கொள்வதில்லை. நம்பிக்கை இல்லாதவர்களைப் பற்றி இவர்கள் கவலைப் படுவதும் இல்லை. "நீங்கள் உங்கள் வேலையை கவனியுங்கள். நாங்கள் எங்கள் வேலையைக் கவனித்துக் கொள்கிறோம்" என்பதே இவர்கள் போக்கு.

  ஆகவே நீங்கள் என்ன எழுதினாலும் சரி யாரும் மாறப் போவதில்லை.
  ​​
  ​​--
  ​​
  Jayakumar

  -- ​​

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜோசியம் பார்த்துத்தான் நான் எந்தக் காரியத்தையும் செய்வேன் என்பது அவரவர்களுடைய நம்பிக்கை. கொடுக்கும் தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்கும் என்பதற்காக கூரையைப் பிரித்து வைத்துக்கொண்டு ஒருவன் உட்கார்ந்திருந்தானாம்.

   ஆண்/பெண் பற்றி ஒன்றும் தெரியாதபோது ஜாதகம் பார்ப்பது என்பது நடைமுறையில் பலராலும் கடைப்பிடிக்கப்படுகிற பழக்கமே. இதைப்பற்றி யாரும் ஒன்றும் சொல்லப்போவதில்லை. ஆனால் ஜோசியத்தை மட்டுமே நம்பி கல்யாணத்தை வரைமுறையின்றி தள்ளிப் போடுவது நியாயமா?

   காரியம் நடக்கவேண்டியது அவசியமல்லவா? காலம் கடந்து போனபின் வருத்தப்பட்டு என்ன பயன்? ஜாதகம் பார்க்கும்போது இந்த தம்பதிகளின் வாழ்க்கை இன்னும் ஐம்பது வருடம் கழித்து எப்படியிருக்கும் என்று பார்ப்பது முட்டாள்தனமில்லையா?

   இது எல்லோரும் சிந்திக்க வேண்டிய ஒரு விஷயம். நான் அப்படித்தான் இருப்பேன் என்றால் அதற்குப் பதில் யாரும் சொல்லமுடியாது.

   நீக்கு
 3. அருமையாக சொல்லி இருக்கின்றீர்கள் ஐயா அதேநேரம் காதலித்து ஓடிப்போனவர்கள் பலரும்கூட வீட்டை பகைத்துக்கொண்டு நல்ல வாழ்க்கை வாழ்பவர்களும் உண்டு, நாசமாகப் போனவர்களும் உண்டு இவர்கள் பொருத்தம் பார்த்தார்களா ? அதேநேரம் உயர்ந்த ஜாதிப்பெண்ணை தாழ்ந்த ஜாதிக்காரன் காதலித்தான் என்றால் அவனது ஜாதகத்தை கணிக்க சோசியர் தேவையில்லை நானும், நீங்களும் கூட கணிக்கலாம் நடக்கப்போவதை...

  மனநம்பிக்கையை ஆழமாக நம் முன்னோர்கள் பதித்து விட்டார்கள் அவ்வளவு சுலபமாக விட்டு விட முடியாது ஐயா.
  த.ம.3

  பதிலளிநீக்கு
 4. என்ன உங்க பேரனுக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிட்டீங்களா? அதான் இப்படியெல்லாம் எழுதுறீங்களோ?

  --
  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தக் காலத்து பசங்களுக்கு நாம பொண்ணு பார்க்க முடியுமுங்களா? அதுக்குண்டானவங்க பாத்துக்குவாங்க.

   நீக்கு
 5. நல்ல கட்டுரை...
  ஜாதகப் பொருத்தம் பார்ப்பது என்பது காலாகாலமாக தொடர்வது... அது மாறாது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Proof of the pudding is in the eating என்றொரு ஆங்கிலப் பழமொழி தெரிந்திருக்கும். என்னமோ பார்த்துக் கொள்ளட்டும். காரியம் நடந்தால் சரி.

   நீக்கு
 6. நல்ல பகிர்வு. பலருக்கும் இந்த நம்பிக்கை இருக்கிறது. அதனால் சிலருக்கு பிழைப்பும் நடக்கிறது..

  பதிலளிநீக்கு