வியாழன், 28 ஜூலை, 2016

ஆர்க்கெஸ்ட்ராவில் எதுக்கு ஒருத்தன் ரெண்டு கையையும் ஆட்டிக்கொண்டு இருக்கிறான்.

      

இந்த இங்கிலீஷ்காரன் பாட்டுகள் ஆர்கெஸ்ட்ரா என்ற முறையில் நூற்றுக் கணக்கானவர்களை வைத்துக்கொண்டு பாடுகிறார்கள். பிரம்மாண்டமாகத்தான் இருக்கிறது. அதில் எல்லோரும் ஒரே சமயத்தில் அவரவர்கள் வாத்தியத்தை வாசிப்பார்களா, அல்லது ஒரு சிலர் மட்டுமே வாசித்துக் கொண்டு மற்றவர்கள் எல்லாம் டம்மியாக வாசிப்பது போல் பாவனை செய்வார்களா என்பது என்னுடைய தீராத சந்தேகம்.

ஏனென்றால் அத்தனை பேரும் ஒரே சமயத்தில் வாசித்தால் அது வெறும் சத்தமாகப் போய்விடுமே, சங்கீதம் வராதே  என்கிற எண்ணம்தான். இது ஒரு புறம் இருக்க, இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் ஒரு ஆள் டிப்டாப்பாக உடையணிந்து கொண்டு, கையில் ஒரு குச்சியை வைத்துக்கொண்டு டான்ஸ் ஆடுகிற மாதிரி கையையும் உடலையும் ஆட்டிக்கொண்டு நிற்கிறாரே அவர் எதற்கு அந்த மாதிரி சேஷ்டைகள் செய்து கொண்டு இருக்கிறார் என்று எனக்கு ரொம்ப நாளாகவே ஒரு சந்தேகம்.

என் ஆப்த நண்பர்களில் சிலர் இந்த மாதிரி பாட்டுகள் கேட்கக்கூடியவர்கள் இருக்கிறார்கள். இந்த சந்தேகத்தை அவர்களிடம் கேட்டுப் பார்த்தேன். அவர்கள் என்னைப் பட்டிக்காட்டானைப் பார்ப்பது போல் பார்த்து விட்டு பிறகு சொன்னார்கள். அந்த ஆளுக்குப் பெயர் ம்யூசிக் கண்டக்டர். அவர்தான் இந்த ஆட்களையெல்லாம் இயக்குகிறார். அவருடைய கை அசைவுகளைப் பார்த்துத்தான் இந்த பாடகர்கள் எல்லாம் பாடவோ வாசிக்கவோ செய்வார்கள் என்றார்கள்.

அப்புறமும் எனக்கு இன்னொரு சந்தேகம் வந்தது. அப்படியானால் எல்லோரும் அவர்களுக்கு முன்னால் காகிதத்தில் எதையோ எழுதி வைத்துக் கொண்டு, அதைப் பார்த்துப் பார்த்து வாசிக்கிறார்களே, அது எதற்காக என்றேன். என் நண்பர்களுக்கு அதற்கு விளக்கம் அளிக்க முடியவில்லை. சரி, தொலையட்டும் என்று விட்டு விட்டேன். ஆனால் இப்போது தமிழ் சினிமா உலகத்திலும் இந்த மாதிரி பேஷன் ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஒரு பிரபல இசையமைப்பாளர் இருக்கிறார். அவர் ஒரு பாட்டிற்கு ஏகப்பட்ட ஆட்களை வைத்துக் கொண்டு பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடத்தினார்.
   
               

இந்த நிகழ்ச்சியில் நூற்றுக் கணக்கானவர்கள் பல விதமான வாத்தியங்களை வாசிக்கிறார்கள். அவர்களுக்கு முன்னால் ஒருவன் கையை ஆட்டிக்கொண்டு இருக்கிறான். வாத்தியங்கள் வாசிக்கும் ஒருவனாவது அவரைப் பார்கிகிற மாதிரி எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் அவர்கள் அவர்கள் பாட்டுக்கு வாசித்துக்கொண்டு இருக்கிறார்கள். பாட்டு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இத்தனை பேரும் சேர்ந்துதான் அந்த இசையைக் கொண்டு வருகிறார்களா அல்லது சும்மா ஷோவுக்காக இத்தனை பேர்களை சேர்த்திருக்கிறார்களா என்பது எனக்கு இது வரை புரியாத ஒன்று.

அடுத்த விடியாவைப் பாருங்கள். ஒரு (அழகான) பெண் நாலைஞ்சு வாத்தியங்களுடன் இதே பாட்டைப் பாடுகிறாள். நன்றாகத்தான் இருக்கிறது.

                 

நம் கர்னாடக சங்கீதக் கச்சேரிகளை எடுத்துக் கொள்ளுங்கள். இந்தக் காலத்து வித்வான்கள் பாட்டு நோட்டை முன்னால் வைத்துக் கொள்கிறார்கள். அதை ஒரு கண்ணால் நோட்டம் விட்டுக்கொண்டேதான் பாடுகிறார்கள். ஆனால் அந்தக் காலத்து வித்வான்கள் பல மணி நேரம் கச்சேரிகள் செய்த போதும் எந்த விதமான குறிப்புகளையும் உபயோகப் படுத்தவில்லை. இந்தக் காலத்து வித்வான்களுக்கு மட்டும் ஏன் நோட்ஸ் தேவைப்படுகிறது?    அதேபோல் ஆங்கில இசை வித்வான்களுக்கு மட்டும் ஏன் நோட்ஸ் மற்றும் கண்டக்டர் தேவைப்படுகிறது என்பது ஒரு விடுகதையாகத்தான் தெரிகிறது. யாருக்காவது விடை தெரிந்தால் கூறலாம்.

இல்லை, உன் மரமண்டையில் இந்த நுணுக்கங்கள் எல்லாம் ஏறாது என்று நினைத்தால் அதையும் சொல்லி விடலாம். நான இந்த பிரச்சினையை மறந்து விட்டு வேறு பிரச்சினைகளை அலசுவதற்கு சரியாக இருக்கும்.

21 கருத்துகள்:

 1. What I think is :
  The music director (MD) in the center, is wholly responsible for the music. Every musicians already must have received the NOTE and plays individually as per their notes. MD is acting as per the notes but his actions on the stage will not influence the musicians. All those 100+ musicians are required to produce that music effect - as per MD's thinking. Few may be escaping from playing the instrument but it may be difficult for the MD to find out.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. You are wrong. As a teacher who finds inattentive among 100 students the Conductor will note that and will show it by a frown. MD and Conductor are different.

   நீக்கு
 2. ஐயா

  செவிக்கு உணவு இல்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

  இசை இசையுடன் பாடல் என்பவை மேற்கத்திய இசையானாலும் கர்நாடக சங்கீதமானாலும் செவிக்கு உணவாகும்.

  எப்படி உணவு வகைகள் பல உள்ளனவோ அவ்வாறு இசையும் மாறுபடும்.

  மேற்கத்திய இசை மேற்கத்திய டின்னர் போன்றது. அதில் எந்தப் பதார்த்தத்தை எப்போது எந்த அளவில் எப்படி பரிமாறவேண்டும் என்றெல்லாம் அவர்கள் நியமங்கள் உண்டாகி விட்டு அதை எல்லோரும் அறியும்படி நோட்ஸ் ஆக பரிமாறும் இசைக் கலைஞர்களுக்கு கொடுத்து விடுகிறார்கள். கண்டக்டர் அந்த விருந்தை மேலும் சுவைப் படுத்த நீ இதை இப்போது இப்படி இந்த அளவில் கொடு என்று முறைப்படுத்துகிறார். அவர் இல்லாவிட்டால் சில சமயம் கலைஞர்கள் அவர்களுக்கு தோன்றிய விதத்தில் பிச்சைக்காரனுக்கு போடுவது போன்று ஒவ்வொன்றாக கொட்டிவிடுவார்கள்.

  கர்நாடக சங்கீதத்திலும் அவ்வாறே. இங்கே கண்டக்டர் இல்லை என்றாலும் முக்கிய பாடகர் வழி நடத்தி செல்வார். அதனால் தான் தனி ஆவர்த்தனம் போன்றவை நடக்கின்றன.

  கச்சேரி அல்லது சிம்பொனி என்பவை கல்யாண விருந்துகள் போல. விருந்தில் பல ஐட்டம்கள் உள்ளது போன்று பல வாத்தியங்களின் இசை.

  மிகக்குறைந்த வாத்தியங்களைக் கொண்டு கொடுக்கப்படும் இசை மற்றும் இசையுடன் கூடிய பாடல் நமது காலை உணவு போன்றது. இட்லி வடை சட்னி சாம்பார் என்று திருப்திப் பட்டுக்கொள்வோம்.

  சாக்கில குத்து::

  நீங்கள் தான் பெரிய சாப்பாட்டு பிரியர் ஆயிற்றே (பதர் பேணி, பேப்பர் ஸ்வீட் பூத ரெகுலு, சுட்ட கத்திரிக்காய் சட்னி, வெஞ்சாய பஜ்ஜி, உருளை கிழங்கு போண்டா). அதனால் தான் சாப்பாட்டு உதாரணம் சொன்னேன்.

  ஜெயக்குமார்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னமோ, எனக்கு ஒரு மண்ணும் புரியல.

   ஆர்க்கெஸ்ட்ராவில் ஒரு பயலும் கண்டக்டரைப் பார்ப்பதாகக் காணோம்.

   இப்படி என்னைப் பலரும் சாப்பாட்டு ராமன் என்று சொல்லிச் சொல்லி இப்ப சாப்பாட்டைக் கண்டாலே வெறுப்பாக இருக்கு.

   நீக்கு
 3. சார் இதை நான் விளக்க முடியும். மியூசிக் கண்டக்டருக்கு முழு இசைக்கோர்வையும் தெரியும். அவரே இசைக்கோர்வையை எழுதியவராகவும் பெரும்பாலும் இருப்பார். அவருக்கு முழுப்பாடலும் (இசைச்சேர்ப்பும்) எப்படி வரும் என்பதும் தெரியும். (இளையராஜாவை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்). இப்போ எல்லோரிடமும் நோட்ஸ் இருக்கிறது. அவர் ஸ்டேஜின் முன்பு இசைக்கலைஞர்களை நோக்கி கையில் ஒரு சின்ன ஸ்டிக் அல்லது இரண்டுகைகளிலும் அல்லது வெறும்னே இரண்டு கைகளையும் ஃப்ரீயாக வைத்துக்கொண்டு இருப்பார். இசைக்கோர்வையின் தன்மைக்கேற்றபடி, அவர் கையை அசைப்பார். (இதை எழுதிப்புரியவைக்கமுடியவில்லை) அவர் கை அசைவைப்பார்த்தே எந்தப் பகுதியிலிருந்து இசை வரும், எப்படி வரும் என்பதைப் பார்வையாளர்கள் புரிந்துகொள்வார்கள். அவருக்கும் யார் சரியாக வாசித்தார்கள், யார் சொதப்பினார்கள் (அப்படி இருந்தால்), யார் எக்ஸலண்டாக வாத்திய இசையை வெளிப்படுத்தினார்கள் என்பது தெரியும். கடைசியில் இசை முடிந்ததும், அவர் பார்வையாளர்களை நோக்கி வணங்கி, அவர்களின் கரகோஷத்தை ஏற்றுக்கொள்வார்கள். இசைக்கோர்வை செய்தவர்கள், தான் செய்ததை எப்படி இசைக்கலைஞர்களிடமிருந்து வாங்குகிறார் என்பதும், அதற்கான அங்கீகாரத்தைப் பார்வையாளர்களிடமிருந்து பெறுவதும்தான் அவரின் presenceக்குக் காரணம். சிம்பொனி மாதிரி ஒத்திசைக்கு நிறைய இசைக்கலைஞர்கள், அதுவும், ஒவ்வொரு வாத்தியத்திற்கும் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள், சில சமயத்தில், 10 வயலின்'காரர்கள் இடப் பக்கத்திலும், இன்னும் 7 வயலின்'காரர்கள் வலப்பக்கத்தின் ஒரு ஓரமும் இருப்பார்கள்.

  பழைய காலத்தில், வித்வான்'களுக்கு வேறு கவனச் சிதறல் கிடையாது. அவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் கர்னாடகப் பாடல்கள் சிட்சையும், ப்ராக்டீஸும்தான். இப்போ அப்படியா? இது ஒரு ப்ரொஃபஷன் (அல்லது சைடு ப்ரொஃபஷன்) ஆகிவிட்டது. எல்லாக் கீர்த்தனைகளையும் பாடல்களையும் மனனம் செய்வதும் அதை நினைவில் வைத்திருப்பதும் கடினமாகிவிட்டது. அதுவும்தவிர, அந்தக் காலத்திலெல்லாம், வார்த்தைகள் தவறாக இருந்தால், அதைக் கண்டுபிடிப்பதற்கோ அல்லது அதைப் பற்றி எழுதி மானத்தை வாங்குவதற்கோ (proofஉடன்) வழி இல்லாமல் இருந்தது. இப்போ அப்படி இல்லை. பாடகர் பாடும்போதே ரசிகர்கள் ஸ்மார்ட்போனில் பாடல் வரிகளைக் கவனித்துக்கொண்டிருக்க முடியும். இந்த இரண்டும்தான் பாடகர்கள் புத்தகத்தை, ஐபேடைப் பார்த்துப் பாடுவதற்குக் காரணம்.

  ஆங்கில வித்வான்'களுக்கு ஏன் நோட்ஸ் தேவைப்படுகிறது - பல இசைக் கலைஞர்கள் அந்த அந்த நேரத்தில் அவரவர்க்கு உரிய இசையை இசைக்க வேண்டும் என்பதால் நோட்ஸ் தேவைப்படுகிறது. ஆரம்பத்தில் கண்டக்டரின் பங்கு இருந்தாலும், நன்றாக அந்த இசைக்கோர்வை பழகியபின், ஆட்டமேட்டிக்காகவே அந்த அந்த இடத்தில் அந்த அந்த Sub இசைக்குழு இசைக்க ஆரம்பித்துவிடும். இதைச் சரியாகக் கவனிக்க வேண்டுமானால், திரை இசை எவ்வாறு முழுமைபெறுகிறது (in traditional way) என்று கவனித்தாலே புரிந்துவிடும். (பெரும்பாலும் ஏ.ஆர். ரகுமான் அவர்கள் டிரெடிஷனல் மெதட் ஃபாலோ பண்ணுவதுபோல் தெரியவில்லை. ஒவ்வொரு இசைக் கலைஞரும் அவரவர்க்கு உரிய பங்கை அளித்தபின், ரகுமான் அவர்களே எல்லாவற்றையும் கணிணி மூலமாக இசைக்கோர்வை செய்வார் என்று நினைக்கிறேன்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விரிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி, நெல்லைத் தமிழன்.

   நீக்கு
  2. ஒவ்வொரு வாத்தியம் + பாட்டு ஆகியவைகளைத் தனித்தனியாக ரெக்கார்டு பண்ணி, பிறகு அதை ஒன்று சேர்த்தும் பாணிதான் தற்போது அனுசரிக்கப்படுகிறது என்று நினைக்கிறேன்.

   நீக்கு
  3. நண்பர் நெல்லைத்தமிழன் அவர்களின் விரிவான விளக்கவுரைக்கு நன்றி

   நீக்கு
 4. நன்றி அய்யா! பீதோவன் சிம்பொனி இசையை முழுதும் ரசித்தேன். உங்களுக்கு ஏற்பட்ட ஐய வினாக்கள் எனக்கும் உண்டு. நண்பர் நெல்லைத்தமிழன் தந்த விளக்கம் சில விஷயங்களை தெளிவு படுத்தியது. அவருக்கு எனது நன்றி. – எனக்கும் ஒரு சந்தேகம். ஒத்து ஊதுவது எதற்காக? (நிஜமாலுமே சந்தேகம்தான்) தனி பதிவாகவே எழுதினாலும் சரி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாய்ப்பாட்டு மற்றும் வாத்தியங்கள் இசைக்கும்போது அவற்றினூடே சிற்சில இடைவெளிகள் இருக்கும். தவிர ஏற்ற இறக்கங்கள் இருக்கும். அவைகளைத் தனியே கேட்டால் ஒரு வெறுமை இருப்பதைக் கவனித்திருக்கலாம். ஏதாவது கூட்டங்களில் தனியாக கடவுள் வாழ்த்து பாடும்போது கவனித்துப் பாருங்கள்.

   இதைச் சரிக்கட்டத்தான் சுருதி என்ற ஒரு இசை தேவைப் படுகிறது. சுருதி வழக்கமாக தம்புரா மூலம் இசைக்கப்பட்டது. நாதஸ்வரம் ஒரு அசுர வாத்தியம். அதற்கு தம்புரா சுருதி ஈடு கொடுக்க முடியாது. அதனால்தான் ஒத்து வாத்தியம் இசைக்கப்படுகிறது.

   இது என்னுடைய அனுபவத்தில் நானாக யூகித்து புரிந்து கொண்டது. சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் வேறு வியாக்யானம் கொடுக்கலாம்.

   நீக்கு
 5. நல்ல டவுட்டுத்தான் ஐயா...
  வீடியோஸ் அருமை...

  பதிலளிநீக்கு
 6. ஜேகே ஸார் பதிலும், நெல்லைத்தமிழன் விளக்கமும் நன்றாக இருந்தன.

  கந்தசாமி ஸார்... சர்வர் சுந்தரம் படப்பாடல் "அவளுக்கென்ன.." கட்சி பார்த்த நினைவு இருக்கிறதா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்பொழுதுதான் மீண்டும் பார்த்தேன். அந்த ஆள் கையை ஆட்டுவதை பாடகர் பார்ப்பதாகவே தெரியவில்லை. அவர் பாட்டுக்கு ஒரு நோட்டுப் புத்தகத்தைப் பார்த்து பாடிக்கொண்டு இருக்கிறார்.

   நீக்கு
 7. அனைவருடைய மனதில் எழும் சந்தேகத்தை அழகாகப் பகிர்ந்துள்ளீர்கள். உங்களுடன் சேர்ந்து நானும் விடை காண காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 8. தனது ''தலை''மையில் நடக்கின்றது என்பதை உலகறிய வேண்டும் என்பதற்காக இருக்குமோ...
  த.ம. 4

  பதிலளிநீக்கு
 9. நல்ல சந்தேகம். சந்தேகம் கொள்ள, சில அருமையான பதில்கள் கிடைத்திருக்கின்றன......

  இசையை ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 10. நல்ல சந்தேகம்ங்களுக்கு பதிவு போட சுவாரசிய விஷயம் ஏதாவது ஒன்னு கிடைச்சுடுது

  பதிலளிநீக்கு
 11. இசை ஒருங்கிணைப்பாளரின் பணி பற்றி கேள்வி கேட்ட தங்களுக்கும் அதற்குத் தகுந்த பதில் அளித்து விளக்கிய நெல்லைத் தமிழன் அவர்களுக்கும் நன்றிகள் பல!

  பதிலளிநீக்கு
 12. கூட்டி கழிச்சு பார்த்தல் கை இல்லாதவன் ஆர்க்கெஸ்ட்ரா கன்டக்ட் பண்ண முடியாது போல இருக்கே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படித்தான் எனக்கும் தோணுது. எதுக்கும் நாலு பேர நல்லா விசாரிச்சுக்குவோம்.

   நீக்கு