திங்கள், 4 ஜூலை, 2016

நான் வேலையில் சேர்ந்த கதை.

 

1956 ம் வருட சுதந்திர தின நாள் என் வாழ்க்கையின் ஒரு முக்கியமான நாள். அன்றுதான் நான் படித்து முடித்தபின் முதல் முதலாக வேலைக்குப் போன நாள். எனக்கு வேலைக்கான உத்திரவு வந்து பதினைந்து நாட்களுக்கு மேல் ஆகிவிட்டன. ஆனாலும் என் மேலதிகாரி நான் வேலையில் உடனே சேருவதற்கு அனுமதிக்கவில்லை. அவர் படித்த முடித்த காலத்தில் இவ்வாறு வேலை சுலபமாக க் கிடைக்கவில்லை. அது காரணமாக இப்போது படித்து வருபவர்களுக்கு உடனே வேலை கிடைப்பதைக் கண்டு வயிற்றெரிச்சல் பட்டார்.

வேலைக்குச் சேருவதற்கான கடைசி நாளான ஆகஸ்ட் 16 ம் தேதி பிற்பகலில் சேர அனுமதித்தார். நான் ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவன். அரசு உத்தியோகத்தின் நெளிவு சுளிவுகளைச் சொல்லித்தர எனக்கு யாருமில்லை. ஆனால் நான் ஒரு விஷயத்தில் ஆழமான கருத்து கொண்டிருந்தேன். இந்த உத்தியோகம் எனக்கும் என் குடும்பத்திற்கும் மிக அவசியம். என் முட்டாள்தனத்தினால் இந்த வேலையை நான் போக்கிக்கொள்ளக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன்.

அந்த மேல் அதிகாரி வேலையைச் செய்வது எப்படி என்று சொல்லிக்கொடுத்ததே இல்லை. நானாகத் தெரிந்து கொண்டு செய்யும் வேலையிலும் குற்றம் கண்டுபிடிப்பதே அவர் வேலை. இப்படியாக இரண்டு வருடம் அவரிடம் வேலை பார்த்தேன். ஆனால் இந்த இரண்டு வருடத்தில் அரசு வேலைகளை நன்றாகக் கற்றுக்கொண்டு விட்டேன். எந்த வேலையானாலும் பயமில்லாமல் எதிர்கொள்ளும் தைரியம் வந்து விட்டது. கால நேரம் பார்க்காமல் உழைக்கும் மன தைரியமும் வந்து விட்டது. இந்த அனுபவம் பிற்காலத்தில் பல சவால்களைச் சந்திக்க உதவியது.

இப்படி இருக்கையில் நான் படித்த கல்லூரியில் 1958 ம் வருடம் முதுகலை வகுப்புகள் ஆரம்பித்தார்கள். அப்போது என் மேல் அதிகாரி அந்தப் படிப்பிற்கு விண்ணப்பித்து அதில் சேர்ந்தார். அப்போது அவருக்கு 18 வருட அனுபவம். கல்யாணமாகி நாலைந்து குழந்தைகள். இதைக்கண்ட எனக்கும் நானும் இந்தப் படிப்பில் சேர்ந்தால் என்ன என்று தோன்றியது. அது மட்டுமல்ல. இந்த ஆள் படித்து முடித்துவிட்டு திரும்பும்போது நான் இந்த இடத்தில் இருக்க க்கூடாது என்று முடிவு செய்தேன். அடுத்த வருடம் நானும் விண்ணப்பித்தேன். இடம் கிடைத்தது. முதுகலை வகுப்பில் சேர்ந்தேன்.

இந்த மாதிரி ஒரு மிக கடுமையான மேலதிகாரியிடம் முதன் முதலில் வேலை பார்த்ததில் நான் பெற்ற அனுகூலங்கள்.

1. எந்த வேலையையும் பயமில்லாமல் எதிர்கொள்வது.

2. கால நேரம் பார்க்காமல் வேலை பார்ப்பது.

3. மேல் படிப்பிற்குச் சேர்ந்தது.

இப்படி நான் அப்போது முதுகலை வகுப்பில் சேர்ந்ததினால்தான் என் பிற்கால உத்தியோக வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமைந்தது. ஆகவே அந்த முதல் மேலதிகாரியை அவ்வப்போது நன்றியுடன் நினைத்துக் கொள்வேன்.

9 கருத்துகள்:

  1. இது மாதிரி கடுமையான அதிகாரிகளிடம் வேலை பார்க்கும்போதுதான் நம் திறமையும் பட்டை தீட்டுப்படுகிறது என்பது என் அனுபவமும் கூட - அந்த நேரத்தில் இருந்த மன உளைச்சல்களை மறந்து விடவேண்டும்!

    பதிலளிநீக்கு
  2. உங்கள் அனுபவம் பகிர்ந்ததற்கு நன்றி. இப்படி சில மேலதிகாரி இருப்பதும் நல்லது தான்.....

    பதிலளிநீக்கு
  3. சில அனுபவங்களும் சந்தர்ப்பங்களும் ஒருவரது முன்னேற்றத்தை நிர்ணயிக்கின்றன. அனுபவப் பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  4. உங்கள் பதிவு எனக்கும் இது போல் நடந்த ஒரு நிகழ்வை ஞாபகப் படுத்தியது . பதிவாக இட உள்ளேன்

    பதிலளிநீக்கு
  5. //ஆகவே அந்த முதல் மேலதிகாரியை அவ்வப்போது நன்றியுடன் நினைத்துக் கொள்வேன் //அப்பப்போதா? எப்போதும் நினைப்பீர்கள் போலுள்ளதே! சில இப்படியான மனநோயாளிகளால் வேலையை விட்டவர்களும் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் அப்போது அப்படி நினைத்ததுண்டு. ஆனால் கடவுள் கிருபையினால் அவ்வாறு செய்யவில்லை. இன்று நல்ல பென்ஷன் வாங்கிக் கொண்டு சௌகரியமாக இருக்கிறேன்.

      நீக்கு
  6. ஆரம்ப காலத்தில் சிரமமாக நாம் நினைப்பவை பல நல்ல அனுபவங்களைப் பெற்றுத் தருகின்றன என்பதே உண்மை. பகிர்வுக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  7. ஒரு சில அனுபவங்கள் நமக்கு எதிராக இருந்தாலும் பிடிக்காதவையாக இருந்தாலும் நமக்கு நல்ல விஷயங்கள் பல கற்றுக் கொடுக்கும். பல சமயம் முன்னேறவும் வழி வகுக்கும். எதிரிகளே கூட நமக்கு மறைமுகமான வழிகாட்டிகளாக இருப்பார்கள்...நல்ல அனுபவம் உங்களுக்கு

    பதிலளிநீக்கு