ஒவ்வொரு நாட்டிற்கும் தேசீய குணம் என்று ஒன்று உண்டு. உதாரணமாக ஜப்பான் நாட்டை ஒடுத்துக்கொண்டால் அந்த நாட்டு மக்கள் உழைப்பிற்கு பெயர் போனவர்கள். ஜெர்மனி நாட்டவர்கள எடுத்துக்கொண்டால் தரமான பொருட்களை தயாரிப்பதில் வல்லுநர்கள். ஐரோப்பியர்களை எடுத்துக்கொண்டால் ஒழுக்கமும் எந்த சூழ்நிலையிலும் மனம் தளராமல் கடமையை செய்வதிலும் முனைப்பாக இருப்பார்கள். இப்படி ஒவ்வொரு நாட்டிற்கும் தனிப்பட்ட குணாதசியங்கள் இருக்கிறது.
ஆனால் இந்தியர்களை எடுத்துக்கொண்டால் அவர்களுடைய குணாதசியங்கள் என்று எதைக்கூறுவது என்பது பெரிய கஷ்டமான சமாசாரம் ஆகும். முக்கியமான ஒன்றை மட்டும் இங்கே சொல்கிறேன். நாடும் மற்றவர்களும் எக்கேடு வேண்டுமானாலும் கெட்டுப்போகட்டும்; நான் மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்ற பரந்த மனப்பான்மை ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.
மற்ற எல்லா நாட்டு மக்களும் என்ன நினைக்கிறார்கள் என்றால் நாடும் மற்ற மக்களும் நன்றாக இருந்தால்தான் நானும் நன்றாக இருக்க முடியும் என்று எண்ணி அதற்காக தங்கள் கடமைகளை சரியாகச்செய்கிறார்கள்.
ஆனால் இந்திய நாட்டு மக்களோ என்றால் எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம் என்று செயல்படுபவர்கள். அப்படி ஏதும் வீடு எரியவில்லை என்றால் அவர்களே வீட்டிற்கு தீ வைப்பதற்கும் தயாராக இருக்கிறார்கள்.
அப்படி வைத்த தீயைத்தான் சமீபத்தில் சின்னத்திரைகளில் விரிவாகக் காட்டினார்கள்.
சட்டத்தின் பாதுகாவலர்கள் என்று மக்கள் நம்பிக் கொண்டிருக்கும் காவல் துறையினரும் சட்ட வல்லுனர்களும் உயர்நீதி மன்ற வளாகத்திற்குள் நடத்திய போராட்டம் ஒரு உச்ச கட்ட ஜனநாயகப் படுகொலை. அநாகரிகத்தின் எல்லைக்கோடு. அதுவும் ஒரு நீதிபதிக்கும் கூட தலையில் காயம் பட்டிருக்கிறது.
தடியெடுத்தவன் தண்டல்காரன் என்ற போக்கு எல்லா இடங்களிலும் பரவி விட்டது. எதிர்காலத்தில் மக்கள் வீதிகளில் சுதந்திரமாக நடமாடுவது கூட அச்சத்துடன்தான் செய்ய வேண்டும் என்ற நிலை உருவாகியிருக்கிறது.
இப்படி ஏன் நடக்கிறது என்று யோசித்தால் அதற்கு காரணம் நமது நாட்டிற்கு என்று ஒரு தேசிய குணம் கிடையாது. தேசப்பற்று கிடையாது. நாட்டின் உச்ச ஸ்தாபனமான நாடாளுமன்ற சபையிலேயே மக்களின் நடவடிக்கைகளுக்கு முன் உதாரணம் இருக்கிறது. இந்த நாட்டின் தலை விதியையே நிர்ணயிக்கும் நாடாளுமன்ற உருப்பினர்களின் நடத்தையைப் பார்க்கும்போது உயர்நீதி மன்றத்தில் நடந்தவை மிகவும் சாதாரணமானவையே. இப்படிப்பட்ட நாட்டில் வாழ்வதற்கு நாம் மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
தொடரும்.....