சனி, 28 ஆகஸ்ட், 2010

அமெரிக்கப் பிரஜைகள் ?


பதிவர் கண்ணகியின் சொல்லத்தான் நினைக்கிறேன் பதிவில் சொன்ன ஒரு கருத்து.
//நாம தண்ணி கொண்டுவந்து கொடுத்தாக்கூட வேண்டாங்க்என்கிறார்கள்....சுடுதண்ணீர்தான்என்று சொன்னபிறகு தயக்கத்துடன் குடிக்கிறார்கள்...//
உண்மை.
இது உள்ளூர்க்காரர்கள் பண்ணும் அழும்பு. நம்மூர்க்காரங்களே அமெரிக்காவுல போயி கொஞ்ச வருஷம் இருந்து விட்டு நம்மூருக்கு வந்தாங்கன்னா அவங்க பண்ற அழும்பு இருக்கிறதே அது ரொம்ப அக்கிரமுங்க.
என்னுடைய கதையைக்கேளுங்கள்.
என் நண்பரின் மகள், அமெரிக்காவில் செட்டில் ஆனவள், தன்னுடைய மகளுடனும், அப்பா, அம்மாவுடனும் என் வீட்டிற்கு வந்திருந்தார்கள். அவர்கள் வருகிறார்களென்று தெரிந்தவுடனேயே கை கால்களையெல்லாம் டெட்டால் போட்டுக்கழுவி விட்டு வெந்நீர் கொதிக்கவைத்து ஆறவைத்து அதைத்தனியாகவும், அதில் ஜூஸ் தனியாகவும் கலக்கி வைத்திருந்தோம்.
வீட்டிற்கு வந்தவர்கள் என்ன சொல்லியும் அந்த தண்ணீரையோ, ஜூஸையோ குடிக்கவில்லை.
இரண்டு மாதம் கழித்து நாங்கள் ஒரு பெரிய ஓட்டலில் "கெட்டுகெதர்" வைத்திருக்கிறோம், நீங்கள் அவசியம் வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்கள். நாங்கள் ஏதோ ஒரு நொண்டிச்சாக்கு சொல்லிப் போகவில்லை. என்னுடைய தன்மானம் என்னைப்போக விடாமல் தடுத்தது.
ஆனால் எல்லோரும் அப்படியில்லை. போன வாரம் இன்னொரு நண்பரின் அமெரிக்க குடியுரிமை வாங்கிய மகள், மாப்பிள்ளை, பேத்தி ஆகியோர் இங்குள்ள என் நண்பரின் வீட்டுக்கு ஒரு வார விடுமுறையில் வந்திருந்தார்கள். நான் அவர்களை என் வீட்டுக்கு சாப்பிட அழைத்திருந்தேன். எந்தவித பந்தாவும் இல்லாமல் வீட்டுக்கு வந்து இரண்டு மணிநேரம் இருந்து நாங்கள் கொடுத்த கேசரி, இட்லி (முருங்கைக்காய் சாம்பார் - அந்தப்பேத்திக்கு பிடிக்கும் என்று தெரிந்து அதை வைத்திருந்தோம்), தயிர் சேமியா ஆகியவற்றை எந்த பிகுவும் பண்ணாமல் சாப்பிட்டுவிட்டுச் சென்றார்கள். மனதுக்கு மிகவும் திருப்தியாக இருந்தது.
அந்தப் பெண்ணும் மாப்பிள்ளையும் ஒரு “கெட்டுகெதர்” பார்ட்டிக்கு அழைத்திருந்தார்கள். சந்தோஷமாகப்போய் வந்தோம். படங்களைப் பாருங்கள்.



வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

பதிவர்களே உஷாராக இருங்கள்

பல பதிவர்கள் பல புதிய புரொக்ராம்களைப் பற்றி உயர்வாக தங்கள் பதிவுகளில் எழுதுகிறார்கள். அவர்கள் நல்ல எண்ணத்துடன்தான் "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்றுதான் எழுதுகிறார்கள். சில சமயம் அந்த புரொகிராம் எழுதின கம்பெனியே பதிவர்களைத் தொடர்புகொண்டு எங்கள் புரொகிராம் பற்றி உங்கள் பதிவில் எழுதினால் உங்களுக்கு அந்த புரொகிராமை இலவசமாகத் தருகிறோம் என்றும் ஆசை காட்டுவதுண்டு. என்னுடைய அனுபவத்தில் நான் தெரிந்துகொண்டதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

அந்தப் புரொகிராம் உங்களுக்கு மிகமிக அவசியம் என்றால் ஒழிய அதை தரவிறக்கவேண்டாம்.

அடுத்ததாக அந்த வேலையைச் செய்யும் புரொகிராம் ஏற்கனவே உங்களிடம் இருந்தால் (உதாரணத்திற்கு, ம்யூசிக் பிளேயர்கள்) புது புரொகிராமுக்கு போகவேண்டாம்.

மிக அவசியம் என்று தோன்றும் புரொகிராம்களை நாலு நண்பர்களிடம் விசாரித்துவிட்டு தரவிறக்கவும்.

அல்லது கம்ப்யூட்டரை கண்டெம்ன் பண்ணுவதாயிருந்தால் என்ன வேண்டுமானாலும் தரவிறக்குங்கள் நண்பர்களே.

புதன், 25 ஆகஸ்ட், 2010

கேதார்-பத்ரி யாத்திரை – 4




பழைய டில்லி ரயில்வே ஸ்டேஷனிலிருந்து ஹரித்துவார் வரை.
எல்லா ஊர் ரயில்வே ஸ்டேஷனிலும் பிரதான நுழைவாயிலில் புகுந்தால் முதலில் இருப்பது ஒன்றாம் நெம்பர் பிளாட்பாரம்தான். அதுதான் VIP பிளாட்பாரமாக இருக்கும். எல்லா பிளாட்பாரங்களையும் விட அதுதான் எல்லா வசதிகளுடனும் இருக்கும். அது மாதிரிதான் பழைய டில்லியிலும் இருக்கும் என்று நினைத்து ஏமாந்து போனேன். சில வருடங்களுக்கு முன் போனபோதுகூட அப்படித்தான் இருந்தது. திடீரென்று யாருக்கு கிறுக்கு பிடித்ததோ தெரியவில்லை, எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றியிருக்கிறார்கள்.
டில்லி பறப்படுவதற்கு முன்பாகவே பதிவர் நண்பர் திரு. வெங்கட் நாகராஜ் அவர்கள் டில்லியில் என்னைப் பார்க்க வருவதாகச் சொல்லியிருந்தார். நானும் என் புரோகிராமைச் சொல்லியிருந்தேன். நான் பழைய டில்லி ரயில்வே ஸ்டேஷன் சேர்ந்து அரை மணி நேரத்தில் அவர் எனக்கு போன் செய்தார். நானும் ரொம்ப ஜோராக, நான் பழைய ஞாபகத்தில் முதல் பிளாட்பாரத்தில் இன்ன கடைக்கு முன்பாக இருக்கிறேன், வாருங்கள் என்று சொல்லிவிட்டேன். அவரும் ரொம்ப உண்மையாக முதல் பிளாட்பாரத்தில் போய்த்தேடியிருக்கிறார். நான் சொன்ன கடை அங்கு இல்லை. நான் அரை மணி நேரம் கழித்து, என்னடா இவரை இன்னும் காணவில்லையே என்று மறுபடியும் போன் பண்ணினால் அவர் நான் முதல் பிளாட்பாரத்தில்தான் இருக்கிறேன், அங்கு நீங்கள் சொன்ன கடையைக் காணவில்லையே என்றார். அப்புறம்தான் நன்றாகப் பார்த்ததில் நாங்கள் இருந்தது 12 வது பிளாட்பாரம் என்று தெரிந்தது. இதில் இன்னொரு கூத்து என்னவென்றால் அந்தப் பிளாட்பாரத்திலேயே இன்னும் கொஞ்ச தூரம் போனால் அது 18 வது பிளாட்பாரமாகி விடுகிறது.
இந்த விபரத்தை வெங்கட்டிடம் சொன்ன ஐந்தாவது நிமிடத்தில் அவர் என் முன்னால் நின்றார். என் தற்போதைய மீசை, நான் எங்கிருந்தாலும் அடையாளம் காட்டிவிடும். அவர் அன்புடன் டில்லி பிளம்ஸ் பழங்கள் வாங்கி வந்திருந்தார். அவரை என் குடும்பத்தாருக்கு அறிமுகம் செய்துவிட்டு பொதுவான குடும்ப சமாசாரங்கள் பரிமாறிக்கொண்ட பிறகு பதிவுலகத்தைப் பற்றியும் சிறிது பேசினோம். பதிவுலகத்தை தற்போது பீடித்திருக்கும் முக்கிய வியாதியான ஜாதி, மதம் வேற்றுமைகளைப் பற்றிப் பேசினோம். அதைப்பற்றி இருவரும் ஒத்த கருத்துக்கள் கொண்டிருந்தோம். ஒரு 45 நிமிடம் அளவளாவிய பிறகு அவர் விடை பெற்றுச்சென்றார்.
டில்லி ஏர்போர்ட்டில் இறங்கும்போது வெளியில் உஷ்ண நிலை 45 டிகிரி செல்சியஸ் என்று சொன்னார்கள். கோவையில் 45 டிகிரி வெய்யிலைப் பார்த்ததே இல்லை. வெளியில் வந்தவுடனேயே வெய்யிலின் தாக்கத்தை எங்களால் தாங்க முடியவில்லை. தண்ணீர், பாட்டில் ஜூஸ், மாற்றி மாற்றி குடித்தும் தொண்டை வறட்சியை நிறுத்த முடியவில்லை. பழைய டில்லி ரயில்வே ஸ்டேஷன் வந்த பிறகு வெங்கட் வந்து பேசிவிட்டுப் போகும் வரை ஒரு மாதிரி வெய்யிலை மறந்திருந்தேன். அவர் போன பிறகு இரவு 10 மணி வரை என்ன செய்வது என்றே தெரியாமல் ஒருவிதமான மயக்கத்திலேயே இருந்தோம். பத்தரை மணிக்கு ஹரித்துவார் போகும் முஸ்ஸோரி எக்ஸ்பிரஸ் ரயில் முதல் பிளாட்பாரத்திற்கு வந்தது. வெங்கட் போனபிறகு மூட்டை முடிச்சுகளைத் தூக்கிக்கொண்டு உண்மையான முதல் பிளாட்பாரத்திற்கு வந்து விட்டோம்.
ரயில் வந்தவுடன் எங்கள் கம்பார்ட்மென்டில் (நல்ல காலம் ஏ.சி. கிளாஸ்) ஏறி உட்கார்ந்ததும்தான் ஒரு மாதிரி போன உயிர் திரும்பி வந்தது. ரயில் அரை மணி நேரத்தில் புறப்பட்டது. ரயில் புறப்பட்டவுடன் தூங்கி விட்டோம். காலை ஐந்தரை மணிக்கு ஹரித்துவார் சேர்ந்தோம். லக்கேஜ்களை இரண்டு சைக்கிள் ரிக்ஷாவில் ஏற்றி அய்யப்பன் கோவில் தங்குமிடத்துக்கு போனோம். அங்கு காலைக்கடன்களை முடித்துவிட்டு வெளியில் வந்தோம். வாசலில் தள்ளுவண்டியில் சென்னையைச் சேர்ந்த முருகேசன் என்பவர் இட்லி தயாரித்து விற்றுக்கொண்டிருந்தார். ஆளுக்கு நான்கு இட்லி வாங்கி சாப்பிட்டோம்.
ஹரித்துவாரில் ஒரு தாள் தங்கிவிட்டு அடுத்த நாள்தான் கேதார்நாத் புறப்படுவதாக முதலில் திட்டம். ஆனால் டிராவல் கம்பெனிக்கும் எனக்கும் நடந்த பேச்சுகளில் ஏற்பட்ட குழறுபடி காரணமாக அன்றே கேதார்நாத் புறப்பட அவர் டாக்சி 8 மணிக்கு அனுப்புவதாகச் சொல்லி விட்டார். வேறு வழியில்லை. டிபன் சாப்பிட்டவுடன் டாக்சி வந்துவிட்டது. உடனே புறப்படவேண்டியதாயிற்று. குழறுபடிக்குக் காரணம், டிராவல் ஏஜென்ட் இந்தியில் பேசினார். நான் எனக்குத் தெரிந்த காலே அரைக்கால் இந்தி. தமிழ், இங்கலீஷ் கலந்த பாஷையில் பேசினேன். எப்படியோ டாக்சி வந்துவிட்டது.



மூட்டைகளை ஏற்றி நாங்களும் ஏறி கேதார்நாத் மகாதேவ் சாமியைக் கும்பிட்டு விட்டுப் புறப்பட்டோம்.


தொடரும்…..

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

அநியாயம், அக்கிரமம், இதைக்கேட்பாரில்லையா?

டிஸ்கி: இந்தப்பதிவு பெண்களுக்கு எதிராகப் போடப்பட்ட ஆணாதிக்கப்பதிவு இல்லை என்று சொல்லிக்கொள்கிறேன்.



திரட்டிகளில் பதிவுகளை மேய்வது என்னுடைய ஒரு பொழுது போக்கு. கடந்த சில நாட்களாக நான் பார்த்தது என்னவென்றால் எந்தப்பெண் பதிவரின் தளத்துக்கு சென்றாலும் அவர்கள் எழுதுவது கத்தரிக்காய் சாம்பார் வைப்பது எப்படி? வெண்டைக்காய் பொரியல் செய்வது எப்படி? இப்படியே போய்க் கொண்டிருக்கிறது.

ஆகவே பெண்கள் சமையல் குறிப்புகள் எழுதுவதற்குத்தான் லாயக்கு என்று அவர்களே முடிவு எடுத்துவிட்டார்கள். இதில் ஆண்கள் சொல்வதற்கோ, செய்வதற்கோ என்ன இருக்கிறது. ஏதாவது சொல்லப்போனால் ஆணாதிக்கவாதிகள் என்ற பட்டம் சூட்டுவார்கள்.

அடுத்தது. ஏதோ பெண்களுக்கு மட்டும்தான் சமையற்கலையை ஒட்டுமொத்த குத்தகைக்கு விட்டமாதிரி தெரிகிறது. இது மிகவும் தவறான எண்ணம். ஆண்களுக்கும் சமைக்கத் (பெண்களைவிட நன்றாக) தெரியும். பதிவர் ஜெய்லானி போட்ட சமையல் குறிப்பை எல்லோரும் பார்த்திருப்பீர்கள். அதைத் தொடர்ந்து நானும் சமையல் குறிப்புப் போடலாம் என்று இருக்கிறேன். (பின்னூட்டங்களைப் பார்த்துவிட்டு ஒரு முடிவு எடுக்கிறேன்).

சனி, 21 ஆகஸ்ட், 2010

சும்மா இருப்பதே சுகம்

நான் ஒரு நல்ல சோம்பேறி. இதைச்சொல்ல நான் வெட்கப்படவில்லை. ஆன்மீகப் பெரியோர்கள் பலர் சும்மா இருப்பதே சுகம் என்று சொல்லிப் போயிருக்கிறார்கள். ஆகையினால் சோம்பேறியாய் இருப்பதில் தவறு ஒன்றுமில்லை.


அப்படியானால் ஆபீஸில் எப்படி ஆணி பிடுங்கி முன்னேறினீர்கள் என்றால், அது ஒரு பெரிய ரகசியம். உங்களிடம் மட்டும் சொல்கிறேன். வெளியில் சொல்லவேண்டாம். நான் சோம்பேறிதானே தவிர என் மூளை கொஞ்சம் ஷார்ப். இதை மற்றவர்கள்தான் சொல்லவேண்டும். இருந்தாலும் தன்னைப்பற்றி அறியாதவர்களிடம் தன்னைப்பற்றி சொல்வது தற்புகழ்ச்சி ஆகாது என்று நன்னூலில் சொல்லியிருக்கிறது. அந்தக் குணத்தினால் மற்றவர்கள் ஒரு நாள் முழுவதும் செய்யும் வேலையை நான் இரண்டு மணி நேரத்தில் முடித்துவிட்டு மீதி நேரம் முழுவதும் சோம்பிக்கழிப்பேன். அப்போது என்ன செய்வீர்கள் என்று கேட்காதீர்கள். அது பெரிய அரசு இரகசியம். அதை வெளியிட்டால் அரசு கவிழ்ந்து விடும்.

சரி. இதெல்லாம் இப்ப என்னத்துக்குன்னு கேக்கறீங்களா? ஒரு பதிவில படிச்சேன். மூணு நாளு பதிவு எழுதலீன்னா அந்தப்பதிவரை எல்லோரும் மறந்து விடுவாங்கன்னு. அதுக்காகத்தான் இந்த பதிவு. நாலு நாள் கம்ப்யூட்டர் ரிப்பேர். இன்னும் நாலு நாளைக்கு கல்யாணம். அதனால கேதார் பயணக்குறிப்புகள் தாமதம்.

ஆகவே இந்த மொக்கைப்பதிவு.

வாழ்க மொக்கைப் பதிவர்கள்.

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

கேதார்-பத்ரி யாத்திரை - 3 விமான பயணமும் சாதாரண குடிமகனும்.


கேதார்-பத்ரி யாத்திரை – 3
விமான பயணமும் சாதாரண குடிமகனும்.

(தப்பா எடுத்துக்காதீங்க, குடிமகன் = Ordinary Citizen, இப்பெல்லாம் செந்தமிழ்ல சொன்னாத்தான் ரொம்ப பேருக்கு புரியுது)



முந்தி பிந்தி ஏரோப்பிளேன்ல போகாதவங்களுக்கு விமான நிலைய வாசல்ல போயி இறங்கினவுடனே தலையும் புரியாது, காலும் புரியாது. இது சகஜம். ரெண்டு தடவ போய்ட்டு வந்தாச்சுன்னா, அப்புறம் ஏரோப்பிளேன்லயே பொறந்து வளர்ந்தா மாதிரிதான் பேச்சு வரும்.
டாக்சிக்காரன் ஏர்போர்ட் வாசலுக்கு கொஞ்ச தூரத்திலயே இறக்கி உட்டுட்டு சார்ஜை வாங்கிட்டுப் போய்டுவான். நீங்க திருதிருன்னு முளிச்சுட்டு நிக்கப்படாது. நாலு பக்கமும் சுத்தி ஒரு லுக் உடுங்க. உங்களை யாரும் பாக்கமாட்டாங்க. எல்லோரும் அவங்கவங்க வேலைலதான் கவனமாயிருப்பாங்க. அதனால வெக்கப்படாதீங்க. மொதல்ல உள்ள போறதுக்கு வாசல் எங்க இருக்குன்னு கண்டு பிடிங்க. எல்லாப்பயலும் சாமான்களையெல்லாம் ஒரு தள்ளு வண்டியில வச்சுட்டு ஒரு பக்கமாப்போய்ட்டு இருப்பானுங்க. அதுதான் வாசல். நீங்களும் அந்த மாதிரி ஒரு தள்ளு வண்டியப் புடிங்க. அங்கதான் பக்கத்துல எங்காச்சும் இருக்கும். அதுக்கு ஒண்ணும் காசு கொடுக்கவேண்டாம். ஒருத்தன் கிட்டயும் கேக்கவும் வேண்டாம்.

உங்க சாமான்களையெல்லாம் தள்ளுவண்டியில ஏத்தி தள்ளீட்டே ஏர் போர்ட் வாசலுக்குப் போங்க. உங்க டிக்கட், அடையாளச்சீட்டு ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா கையில வச்சுக்குங்க. அங்க வாசல்ல செக்யூரிடி அதைச் செக் பண்ணீட்டுத்தான் உள்ள உடுவான். உள்ள போனவுடனே நீங்க பறக்க வேண்டிய பிளேன் கம்பெனிக்காரங்க உங்களைப் பிடிச்சுவாங்க. உங்களை செக்இன் கவுன்ட்டருக்கு கூட்டிட்டுப்போவாங்க. அங்க உங்க ஏரோப்பிளேன்னுக்குள்ள போடற லக்கேஜ்களை மட்டும், அங்க வச்சிருக்கிற எடை மேடைல வச்சிருங்க. அவங்க லக்கேஜ் எடை, லிமிட்டுக்குள்ள இருக்கான்னு பாத்துட்டு ஒவ்வொரு லக்கேஜுக்கும் ஒவ்வொரு சீட்டுப்போட்டு, அதில ஒரு பாதியை லக்கேஜுல கட்டீடுவாங்க. மீதி பாதிய உங்களுக்கு கொடுக்கப்போற போர்டிங்க் பாஸுல ஒட்டிக்குடுப்பாங்க. உங்க டிக்கட்டப் பார்த்து உங்களுக்கு சீட் நெம்பர் கொடுத்து ஒரு சீட்டு கொடுப்பாங்க. அதைத்தான் போர்டிங்க் பாஸ்னு சொல்லுவாங்க.

அதை வாங்கிட்டு செக்யூரிட்டி செக்கப்புக்கு போகணும். நீங்க ஏரோப்பிளேனுக்குள்ள கொண்டு போற பைகளை கையில எடுத்துட்டு இந்த செக்யூரிடி கேட்டுக்குப் போகணும். இங்க உங்க பைகளை வாங்கி ஸ்கேன் மெஷினுக்குள்ள அனுப்பீடுவாங்க. உங்களை செக்யூரிடி ஸ்கேன் வாசல் வழியா வரச்சொல்லுவாங்க. நீங்க எதாச்சும் வெடிகுண்டு எடுத்துட்டுப் போனீங்கன்னா இந்த மெஷின் காச்சுமூச்சுன்னு சத்தம் போடும். அதக்கேட்டவுடனே செக்யூரிடி ஆளுங்க உங்களைத் தனியா தள்ளீட்டுப்போய் தனியாக் கவனிப்பாங்க. அப்படி வெடிகுண்டு ஒண்ணும் கொண்டு போகலீன்னா அந்த மெஷின் பேசாம சாதுவா இருக்கும். அப்புறமும் போலீஸ்காரன் (காரி) உங்களைத்தடவிப்பார்த்துட்டு அப்புறம்தான் அனுப்புவான். அதத்தாண்டி அந்தப்பக்கம் போனீங்கன்னா உங்க கைப்பை ஸகேன் ஆகி வந்திருக்கும். அதிலயும் வெடிகுண்டு இல்லைன்னா அத எடுத்துக்கிட்டு போயி அங்க இருக்கற சேர்கள்ள உக்காந்து வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்.

நீங்க போகப்போகிற ஏரோப்பிளேன் எங்கிருந்தாவது வந்து அப்புறம் நீங்க போகவேண்டிய ஊருக்குப் புறப்படும். மைக்குல இதயெல்லாம் சொல்லுவாங்க. கவனமா கேட்டுக்கோணும். உங்க பிளேன் புறப்பட ரெடியான உடனே அதுல பொறவங்க எல்லாம் வாங்கன்னு அறிவிப்பு கொடுப்பாங்க. அதக்கேட்டவுடனே புறப்பட்டு பிளேனுக்குப் போக வேண்டியதுதான். சில ஊர்கள்ல பிளேன் கொஞ்ச தூரத்தில நிற்கும். அப்ப உங்களை பஸ்சில ஏத்திக் கூப்பிட்டுட்டுப் போவாங்க. பிளேன் கிட்ட போனதும் பஸ்சைவிட்டு இறங்கி பிளேன்ல ஏர்றதுக்கு ஒரு ஏணி வச்சிருப்பாங்க.  அதன் முதல் படியில பிளேனோட கண்டக்டர் (?) நின்னிட்டிருப்பார். அவர்கிட்ட உங்க போர்டிங்க் பாஸைக் கொடுக்க வேண்டும். அவர் அதுல பாதியைக் கிழிச்சிட்டு மீதிய உங்க கிட்ட கொடுத்துடுவாரு. மேல ஏரோப்ளேன் வாசலுக்குப் போனா, அங்கே ஒரு சினிமா நடிகை மாதிரி ஒருத்தி, உங்களைக் கும்பிட்டு வாங்கன்னு வரவேற்பாங்க. அதை தலையாட்டி ஏத்துக்கிட்டு உள்ள போனா எங்க உக்கார்ரதுன்னு தெரியாம முளிக்காதீங்க. உங்க போர்டிங்க் பாஸ்ல சீட் நெம்பர் குறிச்சிருக்கும். உள்ள இன்னோரு சினிமாக்காரி இருப்பா. அவகிட்ட கேட்டா உங்கள உங்க சீட்ல கரெக்ட்டா உக்கார வச்சிருவா. நீங்க கையில் கொண்டு போன பேக்கை வாங்கி தலைக்கு மேல இருக்கிற கேபின்ல போட்டுடுவாங்க. இறங்கறப்ப மறக்காம இந்த லக்கேஜை எடுத்துக்கொண்டு இறங்கணும்.

அவ்வளவுதான். சீட்ல உக்காந்துட்டு சீட் பெல்ட் எங்க இருக்குதுன்னு பாருங்க. கார்ல இருக்கிற மாதிரிதான் இருக்கும். அத எடுத்து இடுப்புல கட்டிக்குங்க. எல்லா பாசஞ்சர்களும் வந்து உக்கார்ந்த பிறகு, ஏணியத் தள்ளீட்டுப்போயிடுவாங்க. அப்பறம் பிளேன் கேட்டச்சாத்துவாங்க. பிளேன் டிரைவர் (அவருக்கு பைலட்னு பேரு) பிளேனை ஸ்டார்ட் செய்வார். எல்லாம் ரெடியான பிறகு ஏர் டிராபிக் கன்ட்ரோல்லர் பிளேனுக்கு ரைட் கொடுப்பார். அப்புறம் பைலட் பிளேனைத் திருப்பி மெதுவா ஓடுபாதைக்கு கொண்டு போவார். பிளேன் கட்டைவண்டி ஸ்பீடுலதான் போவும். சலிச்சுப்போகும். ஓடுபாதைக் கடைசீக்குப் போய் பிளேனைத்திருப்பி போகவேண்டிய திசையில் நிறுத்துவார்.

எல்லாம் சரியாக இருந்தால் ஏர் டிராபிக் கன்ட்ரோல்லர் டபுள் ரைட் கொடுப்பார். அப்புறம்தான் பிளேன் பறக்கறதுக்கு ரெடியாகும், பைலட் இஞ்சினை ரெய்ஸ் பண்ணி ஸ்பீட் எடுப்பார் பாருங்க, காதெல்லாம் ஜிவ்வுன்னு ஆயிடும். கொஞ்ச தூரம் ஸ்பீடாப் போயி அப்பிறம் பிளேன் பறக்க ஆரம்பிக்கும். பிளேன் மேல ஏறிம்போது அடிவயிறு நெஞ்சுக்கு வந்துடும். வயித்துக்குள்ள இருக்கறது வெளிய வர மாதிரி இருக்கும். ஜன்னல் ஓர சீட்டா இருந்தா பூமி கொஞ்சம் கொஞ்சமா நம்மை விட்டு தள்ளிப்போவது நன்றாகத்தெரியும். வீடுகள் சின்னதாய் ஆகி, புள்ளியாய் மாறி, அப்புறம் கண்ணுக்கே தெரியாமல் போகும்.

பிளேன் கொஞ்ச நேரத்தில 30000 அடி உயரம் வந்த பிறகு சமமான நிலையில் பறக்கும். அப்போது உம்ம்ம்னு ஒரு சத்தம் மட்டும்தான் கேட்கும். ஒருவிதமான ஆட்டமும் இருக்காது. வீட்டுல சேர்ல உக்காந்துட்டு இருக்கிற மாதிரிதான் இருக்கும். மணிக்கு 800 கி.மீ. ஸ்பீடில் பறக்கும் உணர்வே தெரியாது. வெளியில் பஞ்சு மூட்டைகள் மிதந்து கொண்டிருக்கும். அவை எல்லாம் மேகங்கள். வீட்டில் சேரில் உட்கார்ந்துகொண்டிருப்பது போலத்தான் இருக்கும். விமானம் முழுவதும் .சி. செய்திருப்பார்கள். சில பேருக்கு ரொம்பக்குளிர்வது போல் இருக்கும். அப்போது ஒரு சினிமாக்காரியைக் கூப்பிட்டு சொன்னால் அவளுக்கு நல்ல மூட் இருந்தால் ஒரு ஷால் கொடுப்பாள். அதைப் போர்த்திக் கொள்ளலாம்.

சில சமயம் ஏர் பாக்கெட்டுகள் என்பது வரும். அதாவது ஆகாய வெளியில் காற்றே இல்லாத ஒரு வெற்றிடம் எங்காவது ஒரு பகுதியில் இருக்கும். அந்தப் பகுதியில் விமானம் பறக்கும்போது விமானத்தைத் தாங்கிப்பிடிக்க காற்று இல்லாததால் விமானம் தொபுக்கடீரென்று கீழே சரியும். அப்போது கட்டை வண்டியில் போகும் உணர்வும், ஆஹா, நம் ஆயுள் இன்றோடு முடிந்தது என்ற பயமும் ஒன்றாக வரும்.

நாம் முன்னே பார்த்த சினிமாக்காரிகள் இப்போது ரொம்பவும் மும்முரமாக இருப்பார்கள். அவர்கள் சினிமாக்காரிகள் அல்ல, விமான சிப்பந்திகள் (ஏர் ஹோஸ்டஸ் என்று அவர்களுக்கு நாமகரணம்) என்பது அப்புறம்தான் நமக்குப் புரியும். பயணிகளுக்கு வேண்டிய வசதிகள் செய்து தரவேண்டியதுதான் அவர்களுக்கு வேலை. ஆனால் பெரும்பாலான ஏர் ஹோஸ்டஸ்கள் ஏதோ தாங்கள்தான் விமானக்கம்பெனி முதலாளிகள் போல் நடந்துகொள்வார்கள். அதற்கு காரணம் அவர்களுக்கு கொடுக்கப்படும் அதிக சம்பளமும் மற்ற வசதிகளும். பயணிகளில் பெரும் பணக்காரர்களையும் சினிமா டைரக்டர்களையும் மட்டும் ஸ்பெஷலாக கவனித்துக்கொள்வார்கள். நம்மைப் போல் சாதாரண பயணிகளை பென்ஸ் காரில் போகிறவன் பிச்சைக்காரனைப் பார்ப்பது போல் பார்ப்பார்கள். அப்படியேதான் நம்மை நடத்துவார்கள். அவர்களிடத்தில் குறை சொல்லுவதில் எந்தப் பயனும் இல்லை. பிளேனை விட்டு இறங்கின பிறகு நாம் யாரோ அவர்கள் யாரோ?

இப்படிப்பட்ட விமானப்பயணத்தை என் குடும்பத்தினருக்கு அறிமுகப்படுத்தினேன். நாங்கள் புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் காலை 11 மணிக்குப் புறப்பட்டு ஒரு மணி நேரத்தில் ஹைதராபாத் அடைந்தது. இதற்குள் சாப்பாடு என்கிற பெயரில் ஒரு பொட்டலத்தையும் ஒரு சிறிய தண்ணீர் பாட்டிலையும் ஒரு சினிமாக்காரி கொண்டுவந்து கொடுத்தாள். அதற்குள் முதல் நாள் சுட்ட வடைகள் இரண்டும், இரண்டு பிஸ்கட்டும், ஒரு சிறிய லட்டும் இருந்தன. அதை விட்டால் வேறு வழி இல்லை என்பதால் அதை பெரும்பாடு பட்டு வயிற்றுக்குள் அனுப்பினேன். இதற்கு தனியாக 125 ரூபாய் டிக்கட்டுடன் கட்டியிருந்தோம். இப்படி பணம் கட்டாதவர்கள் புண்ணியவான்கள். தப்பித்தார்கள்.

ஹைதராபாத்தில் இறங்க வேண்டிவர்கள் இறங்கி, ஏறவேண்டியவர்கள் ஏறியதும் விமானம் புறப்பட்டு மாலை மூன்று மணிக்கு டில்லி விமான நிலைய ஓடுபாதையைத் தொட்டது. விமான ஓடுபாதை விமான நிலைய பயணிகள் கூடத்திலிருந்து சுமார் ஐந்து கி.மீ. தூரத்தில் இருக்கிறது. விமானம் தரையில் இறங்கிய பிறகு கட்டை வண்டி ஸ்பீடில்தான் போகும். சுமார் 15 நிமிட கட்டை வண்டி பயணத்திற்குப் பிறகு விமானம் பயணிகள் கூடத்திற்கு அரை கி.மீ. தூரத்தில் வந்து நின்றது. விமானக்கதவைத் திறந்து இறங்கும் ஏணி கொண்டுவந்து சேர்த்து பயணிகள் இறங்க ஆரம்பிக்க மேலும் ஐந்து நிமிடங்கள் ஆயின. அதற்குள் பெரும்பாலான பயணிகள் அடித்துப்பிடித்துக்கொண்டு இறங்க ஆரம்பித்தார்கள். நாங்கள் மெதுவாக இறங்கி கீழே வந்தோம். அங்கு பஸ்கள் காத்துக்கொண்டு இருக்கின்றன. அதில் ஏறி பயணிகள் கூடத்திற்கு அருகில் வந்து இறங்கினோம்.

பயணிகள் கூடத்திலதான் நாம் பிளேனுக்குள்ள போட்ட பெட்டிகள் எல்லாம் வரும். ஒரு வட்டமா, நீளமா கன்வேயர் பெல்ட் சுத்திக்கிட்டே இருக்கும். ஒவ்வொரு பிளைட்டுக்கும் ஒவ்வொரு கன்வேயர் பெல்ட். அதுக்குப்பக்கத்தில பிளைட் நெம்பர் எழுதியிருக்கும். ஒரு தள்ளு வண்டியப்புடிச்சுக்கிட்டு அதுக்குப்பக்கத்தில போயி, நின்னுக்கோணும். நம்ம பெட்டி வர்ரப்போ கரெக்ட்டா அடையாளம் கண்டு பிடிச்சு, லபக்குனு எடுத்துக்கோணும். உட்டுட்டோம்னா அது ஒரு ரவுண்டு போயிட்டு அப்பறம்தான் வரும். நம்ம பெட்டி, லக்கேஜ் எல்லாத்தையும் புடிச்சு தள்ளு வண்டியில ஏத்தி அந்த ஏரியாவை விட்டு வெளியில வரணும். வரப்போ லக்கேஜ்களை செக் பண்ணுவாங்க.


வெளியில வந்தாச்சா. இதுவரை .சி. யில குளு குளுன்னு இருந்ததுக்கு, வெளியில டில்லி வெயில் வறுத்தெடுக்கும் பாருங்க. அதை அனுபவிச்சாத்தான் தெரியும். தண்ணி பாட்டிலக் கையில வச்சுட்டு குடிச்சுக்கிட்டே இருக்கோணுமுங்க. இனி நாங்க ஹரித்துவார் போக பழைய டில்லி ரயில்வே ஸ்டேஷன் போகவேண்டும். இதற்கு பிரிபெய்டு டாக்சி பிடித்துக்கொள்ளுங்கள என்று ஊரிலேயே மாப்பிள்ளை கூறியிருந்தார். அப்படியே பிரிபெய்டு டாக்சி கவுன்டருக்குப் போய் இரண்டு டாக்சிகளுக்கு டோகன் வாங்கிக்கொண்டு, தள்ளு வண்டிகளோட டாக்சி ஸ்டேண்டுக்கு வந்தோம். பிரிபெய்டு டாக்சி என்பதினால் பேரம் பேச வழியில்லாததினால் இதற்கென்று சில அரதப்பழைய டாக்சிக்காரர்கள் மட்டுமே வருகிறார்கள். எப்படியோ இரண்டு டாக்சிகளைப்பிடித்து சாமான்களை ஏற்றி, நாங்களும் ஏறி பழைய டில்லி ரயில்வே ஸ்டேஷன் மாலை நான்கு மணிக்கு வெற்றிகரமாக வந்து சேர்ந்தோம்.
தொடரும்