வெள்ளி, 4 நவம்பர், 2011

பணம் என்னும் பேய்


பேய் பிசாசு பிடிச்சா விடறது ரொம்பக் கஷ்டம். ( நான் மனைவியைச் சொல்றதா யாராவது நினைச்சால் அதற்கு நான் பொறுப்பில்லை ). பணமும் ஒரு பேய்தான்.

பணம் இல்லாதவன் பிணம். கொஞ்சம் பணம் இருந்தா அவன் ஏழை. நெறய பணம் இருந்தா அவன் சுகவாசி, பணக்காரன். இப்படித்தான் நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம்.

ஆனால் உண்மை அதுவல்ல. எவன் ஒருவன் பணத்தை தன்னுடைய மற்றும் தன்னைச் சார்ந்தவர்களுக்காக, அவர்களின் சுகத்திற்காக செலவழிக்கிறானோ அவனே சுகவாசி, அவனே உண்மையில் பணக்காரன். நாம் சேகரித்த பணம் எல்லாம் நம் பணம் அல்ல. நாம் நல்வழியில் செலவழித்த பணமே நாம் சம்பாதித்த பணம். மற்றவையெல்லாம் யாரோ சம்பாதித்த பணம்.

நாம் எல்லோரும் பணத்தை எதிர்காலத் தேவைக்காக சேமித்து வைக்கிறோம். கொஞ்சம் பணம் சேர்ந்த பிறகு அதன் மேல் ஆசை அதிகரிக்கிறது. இன்னும், இன்னும், இன்னும் என்று மேன்மேலும் சேர்ப்பதிலேயே மனம் செல்லுமே தவிர, அந்தப் பணத்தை எதற்காக சேர்க்க வேண்டும் என்கிற உணர்வு இல்லாமல் போகிறது. பணப்பிசாசு அவனைப் பிடித்தது என்ற நிலை மாறி அவனே பணப்பிசாசாக மாறிவிடுகிறான்.

மேல் உலகத்திற்குப் போகும்போது இந்தப் பணத்தைக் கொண்டு போக நிச்சயம் முடியாது. நான் எல்லா பேங்குகளிலும் விசாரித்து விட்டேன். உங்கள் வாரிசுகள் நீங்கள் விட்டுப் போன பணத்தைப் பார்த்து என்ன சொல்லுவார்கள் தெரியுமா? கஞ்சப்பய, நல்லா சோறுகூட திங்காம எத்தன பணத்தை வச்சுட்டுப் போயிருக்கான் பாரு, கஞ்சப்பய, என்றுதான் சொல்லுவார்கள். இந்த பெயர் எடுக்கவா இவ்வளவு கஷ்டங்கள்?


ஆகவே, மக்களே நீங்கள் பிசாசாக எப்போது மாறப்போகிறீர்கள்? இல்லை, ஏற்கனவே ஆகிவிட்டீர்களா?


15 கருத்துகள்:

  1. நல்ல சிந்தனையைத் தூண்டும் பதிவு... என்னைப் பணம் எனும் பிசாசு பிடித்து ஆட்டாதிருக்கட்டும்....

    பதிலளிநீக்கு
  2. \\\நாம் சேகரித்த பணம் எல்லாம் நம் பணம் அல்ல. நாம் நல்வழியில் செலவழித்த பணமே நாம் சம்பாதித்த பணம். மற்றவையெல்லாம் யாரோ சம்பாதித்த பணம்.\\\ மிகச் சரி

    பதிலளிநீக்கு
  3. பணம் தேவைக்கு வேண்டும். ஆனால் அதற்கு அடிமையாகக் கூடாது.தேவைக்கு மீறி சம்பாதித்தால் அது எங்கோ யாரையோ பதிக்கும், என்று படித்ததாக நினைவு.

    பதிலளிநீக்கு
  4. பிசாசாக ஆகி கொண்டிருக்கிறேன். நறுக்கென ஒரு பதிவு...

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் அய்யா! தங்களது நகைச்சுவை உணர்வை அணியாக கொண்டு, எழுதும் தங்களது திறமை என்னை பிரமிக்க வைக்கிறது. பணப்பேய்களுக்கு, இந்த பதிவின் மூலம் தாங்கள் கோடாங்கியாக பரிணாமித்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  6. இனிய காலை வணக்கம் ஐயா,
    நலமா?

    நல்லதோர் பதிவு,

    உண்மையில் அதிகம் பணம் வைத்திருப்பவனுக்குத் தான் அதிக கவலைகள்.

    எந் நேரமும் பணத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்க வேண்டும், அதே நேரம் பணம் எங்கே தன்னை விட்டுப் போய் விடுமோ எனும் ஏக்கம்’?

    பணம் திருடப்பட்டு விடுமோ எனும் சந்தேகம் இவை காரணமாக மன அழுத்தமும் ஏற்படும்.
    ஆனால் ஏழைகள், பண வசதி அதிகம் இல்லாதோர் மாத்திரம் எப்போதும் சந்தோசமாக வாழுவார்கள்...

    ஹே...ஹே...

    பதிலளிநீக்கு
  7. நீங்க சொல்வது பொதுப்படையான உண்மை தான். ஆனால் சமகாலத்தை கருத்தில் கொண்டு வாங்க.

    மனிதர்களின் மனம் எப்போதும் கீழ்மையான விசயங்களில் தான் அதிக ஆர்வத்தை செலுத்துகின்றது. பொறாமை, வஞ்சகம், சூது, கோபம், அதீத எதிர்பார்ப்பு, என்று எல்லாவகையிலும் மிருக குணங்களை அப்படியே வைத்துக் கொண்டு வாழ்வது மனித இனம் மட்டுமே.

    எத்தனை உபதேசங்கள் கேட்டாலும் பார்த்தாலும் படித்தாலும் அதென்னவோ மனித மனம் எப்போதும் மேலே விஷத்தைதான் அதிகம் விரும்புகின்றது. ஒவ்வொன்றும் வலைபின்னலாக மாற இறுதியில் இந்த பணத்தை நேசிக்க இறுதியில் சுவாசிக்க தொடங்குகின்றது.

    நானும் நீங்க சொன்னபடியே தான் பலகாலம் வாழ்ந்தேன். இன்னும் பல விசயங்களில் மாற்றிக் கொள்ள முடியாமல் தவிக்கின்றேன். ஆனால் எதார்த்தம் மிக கொடுமையாக இருக்கிறது.

    படிப்பறிவு தகுதி நாணயம் இல்லாதவர்கள் மத்தியில் தான் இந்த வாழ்க்கையை வாழ்ந்து தொலைக்க வேண்டியிருக்கிறது. ஆனால் இந்த மூன்று குணங்கள் கொண்டவர்களிடம் தான் இந்த பணம் என்ற காகிதம் அதிகமாக இருக்கிறது. நகர்ப்புறங்களில் இப்படி என்றால் கிராமத்து மக்களிடம் இந்த பணம் படுத்தும் பாடு மிக அதிகமாகத்தான் இருக்கிறது.

    அம்மா முதல் உறவுகள் வரைக்கும் அத்தனை பேருக்கும் இந்த பணம் தான் முதல் மரியாதை.

    கதை கட்டுரை கவிதை இலக்கியம் என்று எந்தவித ஊடகத்தில் நுழைந்தாலும் மறைமுக ஆதிக்கம் செலுத்துவது இந்த பணமே.

    ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

    பணம் இல்லாத போது அல்லது அடிப்படை தேவைகளை நாம் நிறைவேற்ற முடியாத அளவுக்கு நம்மிட்ம் பண்ம் இல்லாத போதும் நம்முடைய மனம் எந்த அளவுக்கு பக்குவபடுத்தி வைத்துள்ளோம் என்பதில் தான் நாம் வாழும் வாழ்க்கையில் சூட்சுமம் இருக்கிறது என்பதை நான் அனுபவத்தின் மூலம் தான் உணர்ந்து கொண்டேன்.

    உணர்ந்தவர்கள் பாக்கியவான்கள்.
    உணர முயற்சிப்பவர்கள் புண்ணிய ஆத்மாக்கள்.

    பதிலளிநீக்கு
  8. ஜோதிஜி, உங்கள் கருத்துக்களை அப்படியே ஆமோதிக்கிறேன். பணம் இல்லாமல் வாழ்க்கை இல்லை. ஆனால் பணத்தை சம்பாதித்து சேமித்து வைப்பதினால் மட்டும் மனிதனுக்கு எந்த சுகமும் கிடைக்காது என்பதை மட்டும்தான் வலியுறுத்த விரும்பினேன்.

    //அம்மா முதல் உறவுகள் வரைக்கும் அத்தனை பேருக்கும் இந்த பணம் தான் முதல் மரியாதை.//

    அம்மா முதல் என்றவுடன் இந்த உலகம் முழுவதும் அடங்கி விடுகிறது. ஒரு அம்மாவிற்கு இரண்டு பையன்கள் இருந்து அதில் ஒருவன் மட்டும் பணக்காரனாக இருந்தால் நிச்சயம் அவன் பக்கம்தான் அம்மா இருப்பாள் என்பது நிச்சயம்.

    பதிலளிநீக்கு
  9. நேர்மையும், தர்மமும் பணத்தால் அடிமைப்பட்டு விட்டது.....

    கருத்துக்கள் அருமை...

    பதிலளிநீக்கு
  10. சாமி ஐயாவிற்கு வணக்கம்...
    பணத்தைப் பற்றி நன்றாக எழுதியுள்ளீர்கள். என் தாத்தா (அம்மாவின் தந்தை) ஈழமண்ணில் வல்வெட்டித்துறையில் பெரிய செல்வந்தர். நாட்டு சூழலின் காரணமாக சொத்துகள் அணைத்தும் இரு தரப்பினராலும் சூரையாடப் பட்டது (1985ல்). 1993ல் இறக்கும் போது சாதாரண மனிதராக சென்றார்.
    என் அப்பாவும் சென்னையில் பல தொழில்கள் நடத்தி வசதியாக இருக்கும் போது எங்கள் வீட்டில் அண்ணன், தம்பி, அத்தான், மச்சான் என்று சொந்தங்கள் உதவி கேட்டு வந்து கொண்டே இருப்பார்கள். அப்பாவும் சரி அம்மாவும் சரி எதிர்காலத்தைப் பற்றி நினைக்காமல் எல்லோருக்கும் உழைப்பதைப் பகிர்ந்தார்கள். மீண்டும் ராஜீவ் கொலை வழக்கால் அப்பா வியாபாரங்களை விட்டு விட்டு கொழும்பு சென்றார். அதுவரை நண்பர்களாக இருந்தவர்கள் கணக்கு மட்டும் காட்டினார்கள். பணம் ஏதுமில்லை. சாப்பாட்டுக்குக் கூட கஷ்டப் பட்டிருக்கிறோம். ஆனால் யாரும் திரும்பிப் பார்த்ததில்லை.
    இன்று அப்பாவின் பிள்ளைகள் லண்டனில் வியாபாரத்தில் கொடி கட்டிப் பறக்கிறோம். மீண்டும் சொந்தங்கள் தேடி வருகிறது. அப்பா முகம் சுழிப்பதில்லை. என்னால் அதை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. அப்பா “இது தான் உலகம், இது தான் நீதி” என்று மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் வசனம் சொல்கிறார். முன்பு செய்த தர்மத்தின் பலனால் தான் நீங்கள் இன்று சிறப்பாக இருக்கிறீர்கள் என்று கருத்தும் சொல்கிறார்.
    உறவினர்களைப் பெரிதாக மதிப்பதில்லை. ஆனால் நானும் என் அண்ணனும் நாங்கள் பிறந்த மண்ணை மறக்கவில்லை. உழைப்பதில் பெரும் பகுதியை மக்கள் நல திட்டங்களுக்காக செலவிடுகிறோம். அண்ணா அடிக்கடி சொல்வான் “இந்த முறை எங்களுக்கு பிரச்சிணை இல்லை. உழைத்து ஓய்ந்த பின் ஈழத்தில் உள்ள எங்கள் மக்களிடம் சென்று பசி என்று கேட்டால் சாப்பாடு போடுவார்கள்” என்று. இது தான் உண்மை. அடுத்த உலகிற்கு யாரும் கொண்டு போவதில்லை. இருக்கும் போதே எல்லோரையும் சந்தோஷப் படுத்துவோம்.
    செய்திதாள்களில் லட்சம் கோடி மோசடி என்று பார்க்கும் போது இவ்வளவு பணத்தியும் ஒரு சில் பேர் வைத்து என்னத்தை தான் செய்வார்கள் என்று குழப்பமாகவே இருக்கும். யாருக்காவது விடை தெரிந்தால் சொல்லுங்கள் ப்ளீஸ்...

    பதிலளிநீக்கு
  11. //ஷர்மி said//

    உங்கள் அனுபவங்கள் மிக்க மதிப்பு வாய்ந்தவை. உலக இயல்பை அப்படியே படம் பிடித்துக் காட்டுகின்றன. பணம் ஒரு பேய்தான். அதில் சந்தேகமில்லை. ஆனால் இந்த உலகில் வாழ்வதற்கு அந்தப் பேய் தேவைப்படுகிறது.

    தன் வாழ்நாளுக்குத் தேவையான பணத்தை ஒவ்வொருவரும் தவறாது சேமித்து வைத்திருக்கவேண்டும். தனக்கு மிஞ்சித்தான் தானதருமம்.

    பணத்துடன் கூடவே மனிதர்களும் தேவை. தன் மக்கள் இருந்தால் அவர்களை நல்ல பண்புடன் வளர்த்து பிற்காலத்திற்கு அவர்கள் உதவுமாறு செய்து கொள்ள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  12. விளக்கமான பகிர்வு.நன்றி

    காசேதான் கடவுள்!!

    பதிலளிநீக்கு