திங்கள், 30 ஜனவரி, 2012

ஒரு கற்பனை நிகழ்வு (நிஜம்)



சமீபத்தில் ஒரு நாள் என் மச்சினன் வந்திருந்தான். அவன் வரும்போது நான் கணினியில் மும்முரமாக இன்டர்நெட்டில் பிளாக் பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் வந்ததைக் கூட கவனிக்கவில்லை. அவனாக என்னைக் கூப்பிட்டபோதுதான் அவன் வந்திருப்பது தெரிய வந்தது. பிறகு நடந்ததைப் பாருங்கள்.

மச்சினன்: என்னங்க மாமா, நான் வந்ததக் கூடப் பாக்காமெ என்ன பண்ணிட்டிருக்கீங்க?

மாமா: வா மாப்ளே, கம்ப்யூட்டரில் இன்டர்நெட் பார்த்திட்டிருக்கேன்.

மச்சினன்: இன்டர்நெட்னா அது என்னங்க மாமா?

மாமா: டேய், அதெல்லாம் சொன்னா உனக்குப் புரியாதுடா.

மச்சினன்: உங்களுக்குச் சொல்லத் தெரியல்ல, அத மறைக்கறதுக்கு இந்த சமாதானம் சொல்றீங்க.

மாமா: டேய், அது தெரியாமயா கம்ப்யூட்டர் வாங்கி வச்சிருக்கிறேன்.

மச்சினன்: அப்போ எனக்கு இன்டர்நெட்டுன்னா என்னன்னு சொல்லுங்க.

மாமா: அது ஒரு பிரபஞ்சம் மாதிரி. ஆரம்பம் எது, முடிவு எதுன்னே தெரியாது. சுரங்கத்தை வெட்டினா எப்படி போய்ட்டே இருக்குமோ அந்த மாதிரி இதுலயும் போய்ட்டே இருக்கும். சில சமயம் உள்ளே போய்ட்டு வெளில வரமுடியாமயும் போயிடும்.

மச்சினன்: அதுல நீங்க என்ன பண்ணறீங்க.

மாமா: நானா, அதுல பிளாக் எழுதறேன்.

மச்சினன்: அதென்னங்க பிளாக்கு, அப்படீன்னா என்னங்க மாமா?

மாமா: அது வந்து இன்டர்நெட் ஒரு பெரிய உலகம்னு சொன்னனில்லயா? அதுல ஒரு ஊர்ல ஒருத்தன் பெரிய சுவர் கட்டி உட்டுருக்கான். யார் வேணும்னா போயி அந்த செவுத்தில அவங்கவுங்களுக்கு தோண்றத எழுதி வச்சுக்கலாம். அதுதான் பிளாக்கு.

மச்சினன்: ஏன் மாமா அப்ப அந்த செவுத்த கட்டி வச்சிருக்கிறவன் ஏதாச்சும் வாடகை கேக்கமாட்டானா?

மாமா: இப்பத்திக்கு சும்மாதான் கொடுத்திருக்கான். பின்னாடி எப்பவாச்சும் காசு கேட்டாலும் கேப்பான். அப்படி காசு கேட்டான்னா, இப்ப பிளாக் எழுதிட்டு இருக்கறவென்லாம் துணியக் காணோம், துண்டக் காணோம்னு ஓடிப்போயிடுவாங்க.

மச்சினன்: இப்படி பிளாக் எழுதறீங்களே, அதனால என்ன வருதுங்க மாமா?

மாமா: ஒரு சிங்கிள் டீக்குக் கூட வக்கில்லே மாப்பளே.

மச்சினன்: அப்பறம் எதுக்கு இந்த கசமாலத்தைக் கட்டீட்டு அளுகிறீங்க, மாமா?

மாமா: அதுல பாரு மாப்ள, இந்த பிளாக் எழுதறது சீட்டாட்டம் மாதிரி. காசு வருதோ இல்லையோ, காலைல எந்திருச்ச ஒடனே கம்ப்யூட்டரத் தொறந்து பிளாக்கப் பாக்கலீன்னா பைத்தியம் புடிச்ச மாதிரி ஆகிப் போகுது மாப்ள.  

மச்சினன்: அக்கோவ், மாமாவுக்கு பயித்தியம் நல்லா முத்திப்போச்சு, அதுக்கு மந்திரிக்கோணும் அக்கா, எங்கூர்ல ஒரு நல்ல மந்திரவாதி இருக்கான் அக்கா, நான் இப்பவே போயி அவன கூட்டிட்டு வந்து ஒரு மண்டலம் மந்திரிச்சாதான் மாமா வழிக்கு வருவாரு அக்கா.

அக்கா: என்னமாச்சும் பண்ணி உங்க மாமாவை இந்தப் பயித்தத்திலிருந்து காப்பாத்திடறா தம்பி.

மச்சினன்: இப்பவே ஊருக்குப் போறேன் அக்கா.

முற்றிற்று

வியாழன், 26 ஜனவரி, 2012

திருப்பூர் முட்டாள்கள்


திருப்பூர் கடின உழைப்பாளிகள் நிறைந்த ஊர் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அதே அளவு முட்டாள்களும் இருப்பார்களென்று நான் கனவிலும் நினைக்கவில்லை.

மலேசியாவிலிருந்து ஒருவன் அடிக்கடி வந்து திருப்பூரில் ஒரு சொகுசு ஓட்டலில் தங்குவானாம். நம்ம புத்திசிகாமணி திருப்பூரில் ஒரு டிராவல் ஏஜென்சி வைத்திருக்கிறார். இவரிடம் மலேசியாக்காரர் அடிக்கடி விமான டிக்கெட் வாங்குவாராம். திருப்பூர்காரர்கள் இப்படிப்பட்ட ஆட்களைப் பார்த்தால் பெரிய ஆள் என்று எடை போடுவார்கள் போல இருக்கிறது. ஏனென்றால் பனியன் வாங்க வரும் வெளிநாட்டுக்காரன் எல்லாம் இப்படித்தான் சீன் போடுவான்.

அந்த ஆள் ஒரு நாள் நம்ம புத்திசிகாமணியை ஓட்டலுக்கு வரவழைத்து பார்ட்டி (தண்ணிப் பார்ட்டிதான். வேறென்ன) கொடுத்து தன் வலையை விரித்துள்ளான். தன்னிடம் உள்ள ஒரு பெட்டியைக் காட்டி இதற்குள் 4 கோடி ரூபாயும் ஒரு கிலோ தங்கமும் இருக்கிறது. இது பாரத ஸ்டேட் வங்கியின் பணப்பெட்டி. இதன் பூட்டைத் திறப்பதற்கு சென்னையிலிருந்து அந்த பேங்கின் ஆபீசர்தான் வரவேண்டும். அவர் மூன்று நாள் லீவு போட்டுவிட்டு சொந்த வேலையாக வெளியூர் போயிருக்கிறார். அதற்குள் எனக்கு கொஞ்ச அவசரத் தேவைக்காக 5 லட்சம் ரூபாய் வேண்டும். அந்த பேங்க்கின் ஆபீசர் வந்து இந்த பெட்டியைத் திறந்து கொடுத்தவுடன் நான் உங்கள் பணத்தை இரட்டிப்பாகக் கொடுத்துவிடுகிறேன். இப்படியாக ஒரு கதை சொல்லியிருக்கிறான்.

நம்ம புத்தி சிகாமணி, ஆஹா, மூன்று நாளில் நம் பணம் இரட்டிப்பாகப் போகிறது. இந்தப் பாழாப்போன பேங்க்குக்காரன்கள் நம் பணத்தை இரட்டிப்பாக்க ஏழு வருடம் ஆகுமென்கிறான். இதோ நம் கண்முன்னால் லட்சுமி நின்றுகொண்டு என்னை எடுத்துக்கொள் என்கிறாள். இதை விடலாமா என்று பேராசைகொண்டு உடனே வீட்டிற்குப்போய் 5 லட்சம் ரூபாயைக் கொண்டுவந்து அந்த ஆளிடம் கொடுத்து விட்டான்.

அவன் இதே மாதிரி இன்னும் பத்து பேருக்கு வலை விரித்துள்ளான். அதில் ஐந்தாறு பேர் நம்ம புத்தி சிகாமணிக்கு அண்ணன்மார்கள். அவர்களும் ஆளுக்கு ஐந்து லட்சம் வீதம் கொடுத்திருக்கிறார்கள். மூன்றாவது நாள் மலேசியாக்காரன் ஓட்டலைக் காலி பண்ணிவிட்டு போகுமிடத்தைச் சொல்லாமல் போய்விட்டான். புத்திசிகாமணிகளெல்லாம் ஓட்டலுக்குப் போனால் பட்சி பறந்து போன விஷயம் தெரிந்திருக்கிறது. நாலு நாள் காத்திருந்திருக்கிறார்கள். பட்சி வரும் என்று. பட்சி வராமல் போகவே, போலீசில் போய் புகார் கொடுத்திருக்கிறார்கள்.

நம்ம ஊரு போலீசும் திருடனுக்குத் திருடன்தானே! எப்படியோ வலை தயார் பண்ணி விரித்ததில் பட்சி சிக்கிவிட்டது. என்ன பிரயோஜனம்? பணமெல்லாம் ஸ்வாஹா. பட்சிக்கு இதுதான் முழுநேரத் தொழிலாம்.

இந்த விவகாரத்தில் எனக்குப் புரியாதது என்னவென்றால் திருப்பூரில் இப்படிப்பட்ட அடி மடையன்களும் இருப்பார்களா என்பதே?

நிற்க, எங்கள் ஊரும் ஒன்றும் திருப்பூருக்கு சோடை போனதல்ல. (எங்க ஊர் கோவைன்னு எல்லோருக்கும் தெரியும்னு நம்பறேன்). 

கோவையைப்பற்றி ரொம்ப நாளைக்கு முன்பு குமுதம் பத்திரிக்கையில் எழுதியிருந்தது என்னவென்றால் கோயம்புத்தூர்காரனுங்க (அப்ப கோவை ஆகவில்லை) தண்ணியை காசு மாதிரி செலவழிப்பானுங்க, ஆனா காசை தண்ணி மாதிரி செலவழிப்பானுங்க, அப்படீன்னு எழுதியிருந்தாங்க. அது ஒரு வகையில உண்மைதானுங்க. அந்தக் காலத்தில இங்க தண்ணிக் கஷ்டம் அதிகம் உண்டுங்க. (அந்தத் தண்ணியில்லீங்க, வெறும் தண்ணிதாங்க.) அந்தத் தண்ணிக்கு கடவுள் புண்ணியத்தில ஒரு கொறையும் இல்லீங்க. சாதா தண்ணிக்குத்தான் கொஞ்சம் கஷ்டம். இப்ப பரவாயில்ல.

இங்க கொஞ்சம் காசு ஜாஸ்திதானுங்க. (குசும்பும் கூடத்தானுங்க). நேத்து பாருங்க ரெண்டு பேரு (ஒருத்தன் நெலம் வித்தவன், இன்னொருத்தன் நெலம் வாங்கறவன்) இவங்க ரெண்டு பேரும் பணத்த காருல வச்சுட்டு ஏதோ வேலையா அக்கட்டால போயிருக்காங்க. இதப்பாத்துட்டு இருந்த முடிச்சவிக்கீக காரு கண்ணாடியை ஒடைச்சு பணத்தை எடுத்துட்டு ஓடிட்டானுங்க. காருக்காரனுங்க திரும்பி வந்து பாக்கறப்போ காசைக் காணோம். அப்பறம் என்ன, போலீஸ்தான். பணம் என்னமோ யானை வாயில போன கரும்புதான்.

அப்படி என்னங்க பணம் என்ன பொண கனமா இருக்கும்? அந்தப் பணத்தை கையோட எடுத்துட்டுப் போறதுக்கு அத்தனை கஷ்டமா? இப்ப பணம் முச்சூடும் போய்ட்டுதே, எந்தக் குட்டிச் செவுத்துல போயி முட்டிக்கறது?

இவங்க எல்லாம் எந்த ஜன்மத்தில திருந்துவாங்க?