திங்கள், 12 நவம்பர், 2012

நான் நடத்திய ரேஷன் கடை - பாகம் 1


சமீபத்தில் வந்த ஜெயதேவ் அவர்களின்

 "பூமத்திய ரேகையில் நிகழும் அறிவியல் அற்புதம்." என்ற  பதிவில்  அவர் எழுதியிருந்த ஒரு வாசகம்.

நீங்கள் ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் வாங்கும்போது [கம்பியூட்டர் எல்லாம் பார்க்கிறீங்க, நீங்க எங்கே வாங்கியிருக்கப் போறீங்க..........!!] 

இதற்கு என்னுடைய பின்னூட்டம்
என்னங்க இப்படிச் சொல்லிப்புட்டீங்க? நான் ரேஷன் கடையே நடத்தீருக்கேன். அது பற்றி ஒரு தனிப் பதிவு போடுகிறேன்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வீராப்பா பின்னூட்டம் போட்டுட்டேன். பதிவு எழுதித்தானே ஆகணும்.


என்னுடைய உத்தியோகத்திற்கும் ரேஷன் கடைக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால் சம்பந்தம் உண்டாகி விட்டது. எப்படியென்றால் எனக்கு 1976 ல் மதுரை விவசாயக் கல்லூரிக்கு உத்தியோக உயர்வுடன் மாற்றல் வந்தது. மிகுந்த மனக் கஷ்டத்துடன் போய் வேலையில் சேர்ந்தேன். மனக்கஷ்டத்திற்கு காரணம் சில குடும்ப சூழ்நிலைகள். பிற்பாடு அவைகள் சரியாகிவிட்டன. மதுரையில் வேலை செய்த காலம் பொற்காலம் என்று நினைக்குமளவிற்கு சூழ்நிலைகள் மாறிவிட்டன.

மதுரை விவசாயக்கல்லூரி மதுரையிலிருந்து சுமார் 12 கி.மீ. தூரத்தில் ஒத்தக்கடை என்னும் இடத்தில் யானைமலை அடிவாரத்தில் இருக்கிறது.இங்கு பணி புரியும் அலுவலர்களுக்கு குடியிருப்புகள் உண்டு. தவிர சுமார் ஆயிரம் மாணவர்கள் விடுதியில் தங்கிப் படிக்கிறார்கள். இவர்களுக்கு வேண்டிய அன்றாடத்தேவைக்கான பொருள்களை வாங்க வேண்டுமென்றால் மூன்று கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஒத்தக்கடை என்னும் கிராமத்திற்குத்தான் போகவேண்டும்.

இவர்களுக்கு உதவுவதற்காக கல்லூரி வளாகத்திலேயே ஒரு கூட்டுறவு பண்டகசாலை ஆரம்பிக்கப்பட்டது. ஒரு சிறிய பொட்டிக்கடை மாதிரிதான் இருக்கும். இங்கு சோப்பு, பேஸ்ட், பிரஷ், பேனா, பென்சில், பலசரக்கு சாமான்கள் இத்தியாதி பொருட்கள் விற்றுக்கொண்டிருந்தார்கள். இங்கேயே ரேஷன் பொருட்களும் விற்பதற்கு அனுமதி வாங்கி, அந்த விற்பனையும் நடந்து கொண்டிருந்தது. ஆகவே அந்த ஸ்டோர் ஒரு பலசரக்கு மற்றும் ரேஷன் கடையாக பயன்பட்டுக் கொண்டிருந்தது. இதை நடத்துபவர் அங்கு குடியிருப்பில் வசிக்கும் ஏதாவது ஒரு பேராசிரியர். அவருக்கு அந்த ஸ்டோருக்கு செக்ரடரி என்று பதவிப்பெயர். ஊதியம் இல்லா கௌரவப் பதவி.

நான் அங்கு போய் வேலைக்கு சேருவதற்கு முன்பே,, அங்குள்ள கல்லூரித் தலைவர் எனக்கு அந்த வேலையைக் கொடுப்பதென்று முடிவு செய்திருக்கிறார். இந்த விஷயம் பிற்பாடுதான் எனக்குத் தெரிந்தது. அவர் எனக்கு ஆசிரியரும் கூட. அதனால் அவருடைய விருப்பத்தை என்னால் மறுக்கமுடியவில்லை. அங்கு போய் சில நாட்களிலேயே இந்தப் பதவி எனக்கு கொடுக்கப்பட்டது.

மாலை 6 மணி முதல் 8 மணி வரை கடையின் விற்பனை நேரம். ஆபீசிலிருந்து வீட்டுக்குப் போய் காப்பி குடித்து விட்டு கடைக்குப் போவேன் எனக்கு உதவிக்காக இன்னொரு பேராசிரியரையும் கல்லூரித்தலைவர் போட்டிருந்தார். எடுபிடி வேலைக்காக இரண்டு உதவியாளர்களை நாங்கள் நியமித்துக்கொண்டோம். எல்லாம் கல்லூரியில் வேலை செய்யும் நபர்கள்தான். 

ஸ்டோர் பதவி எடுத்துக்கொண்டவுடன் வியாபார நுணுக்கங்களை கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். சரக்கு கொள்முதல் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு சங்க விற்பனை நிலையத்தில்தான் வாங்கவேண்டும். அதுதான் சிறு கூட்டுறவு விற்பனை நிலையங்களுக்கு உண்டான சட்டம். அங்கு இல்லாத பொருட்களை வெளியில் வாங்கிக்கொள்ளலாம். ரேஷன் பொருட்களான அரிசி, கோதுமை, சர்க்கரை, மண்ணெண்ணை இவைகளை சிவில் சப்ளை டிபார்ட்மென்டிலிருந்து வாங்கிக்கொள்ளவேண்டும்.

இதில் இந்த ரேஷன் வியாபார நுணுக்கங்களை மட்டும் பார்க்கலாம். ரேஷன் அரிசி என்பது ஒரு தனி ரகம். அதை எவ்வளவு பேர் சாப்பிட்டுப் பார்த்திருப்பீர்கள் என்று தெரியவில்லை. அதை சாப்பிடுவதற்கு தனி தைரியம் வேண்டும். உடல் உழைப்புத் தொழிலாளிகள் இந்த சாப்பாட்டைத்தான் சாப்பிடுவார்கள்.  அதுதான் அவர்களுக்குக் கட்டுப்படியாகும்.

இந்த அரிசி ஏன் இப்படிப்பட்ட மகத்துவம் பெற்றது என்பது ஒரு தனிக்கதை. அதையும் எழுத ஆசைதான். ஆனால் தேசத்துரோகி என்று பிடித்து உள்ளே போட்டு விடுவார்களோ என்ற பயத்தினால் எழுதவில்லை.

இந்த ரேஷன் பொருட்களை வாங்க முதலில் சிவில் சப்ளை ஆபீசில் பணம் கட்டிவிட்டு கோடவுனுக்குப் போகவேண்டும். பணம் கட்டின ரசீதைக் காட்டினால் அங்குள்ள சிப்பந்திகள் அரிசி, கோதுமை, சர்க்கரை ஆகியவைகளை நாம் கொண்டு போயிருக்கும் வாகனத்தில் ஏற்றி விடுவார்கள். ஏற்றுக்கூலி தனியாகக் கொடுத்து விடவேண்டும். இதை இந்தப் பொருள்களின் விற்பனை விலையில் சேர்த்தக்கூடாது. சிவில் சப்ளை டிபார்ட்மென்ட் நிர்ணயித்துள்ள விலையில்தான் ரேஷன் பொருட்களை விற்கவேண்டும்.

கூட்டுறவு விற்பனை நிலையங்கள் தங்கள் மற்ற வியாபாரத்திலிருந்து வரும் லாபத்திலிருந்துதான் இந்தச் செலவை ஏற்றுக் கொள்ளவேண்டும்.  கூட்டுறவு விற்பனை நிலையங்கள் இந்தச் செலவை இவ்வாறு சரிக்கட்ட முடியும். ஆனால் தனியார் நடத்தும் ரேஷன் கடைகளில் எப்படி இந்த செலவை சமாளிக்க முடியும்?

இங்குதான் ரேஷன் கடை தில்லு முல்லுகள் ஆரம்பிக்கின்றன. எப்படி என்று அடுத்த பதிவில் பார்ப்போமா. 

21 கருத்துகள்:

 1. //இங்குதான் ரேஷன் கடை தில்லு முல்லுகள் ஆரம்பிக்கின்றன//
  பொருளின் எடையில் கைவைத்திருப்பீர்கள் என நினைக்கின்றேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லோரும் படிச்சவங்க. அங்க போயி இந்த மாதிரி பண்ணினா மானம் கப்பலேறிடும். பொறுங்க, ஒவ்வொரு டெக்னிக்கா சொல்லித்தாரேன்.

   நீக்கு
 2. இதில் இவ்வளவு இருக்கா, ரேசன் கடையில் சர்க்கரை வாங்கியதோடு சரி, அதற்கு மேல் நான் எதுவும் சிந்தித்தது இல்லை. சர்க்கரை வாங்க கூட அம்மாவின் திட்டை நொந்துக் கொண்டு போவேன், எடையைக் கூட கவனிக்காமல் குறைவாக வாங்கி வந்து மேலும் கூடுதல் திட்டு வாங்கிக் கொள்வேன் .. !

  பதிலளிநீக்கு
 3. ரேஷன் கடையில் நடக்கும் தில்லு முல்லுகளை தோலுரித்துக் காட்ட இருக்கும், தங்களின் அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உள்ள புடிச்சுப் போட்டுடுவாங்களோன்னு கொஞ்சம் பயமா இருக்கு நடனசபாபதி.

   நீக்கு
 4. ரொம்பவே சுவாரசியமா இருக்கு!

  சரவணன்

  பதிலளிநீக்கு
 5. தகவல் பகிர்வுகள் திகைக்க வைக்கின்றன...

  தங்களுக்கும் தங்கள் இல்லத்தார்க்கும் இனிய தீபாவளித்திருநாள் நல்வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 6. இவ்வளவு விசயங்கள் இருக்கா...?

  நன்றி ஐயா... தெரிந்து கொள்கிறேன்...

  பதிலளிநீக்கு
 7. ரேஷன் கடைக்கும் விவசாயக் கல்லூரிப் பேராசியருக்கும் எப்படிடா சம்பந்தம் இருக்கும்னு மண்டையைப் பிச்சுகிட்டேன். இப்படி ஒரு சங்கதி இருக்கும்னு யோசிச்சுப் பார்க்கலை!!

  ரேஷன் அரிசி, நெல்லை ஊற வைத்து வேக வைத்து அரைத்து காய வைப்பார்கள் அல்லவா? அங்கே சரியான கால அவகாசம் கொடுப்பதில்லை அதனால் தான் அது சாப்பிட கஷ்டமாயிருக்கிறது என்று சொல்கிறார்கள் உழைப்பவர்கள் ஜீரணப்பை கல்லையும் ஜீரணிக்கும், ஆகையால் சமாளிக்க முடிகிறது.

  \\அங்கு இல்லாத பொருட்களை வெளியில் வாங்கிக்கொள்ளலாம். \\ அப்புறம் எப்படி சலுகை விலையில் தர முடிகிறது?

  பதிலளிநீக்கு
 8. ஒரு சுவாரச்யமான பதிவுக்கு வழி கோலிய திரு ஜெயதேவ் வாழ்க!
  அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்.

  இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 9. எத்தனை எத்தனை அனுபவங்கள் சார் உங்களுக்கு? ஆச்சர்யமாகிறேன்.

  பதிலளிநீக்கு
 10. நம்மூரில் "கூப்பன் கடை" அல்லது "சங்கக் கடை" என்போம்.

  சங்கம் என்பது "பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம்" என்பதின் சுருக்கம். அதென்னது? Multi Purpose Co-operative Society என்பதின் நேரடித் தமிழாக்கம்.

  கூப்பன் (coupen) என்பது உங்களுரில் ரேஷன் அட்டை மாதிரி. எனவே 'கூப்பனைக்" கொடுத்துத் "தள்ளுபடி" விலையில் பொருட்களை வாங்குவதால் "கூப்பன் கடை" எனச் செல்லமாகச் சொல்வோம்.

  இங்கு விற்கும் அரிசியை (சோறாக்கி) உண்ண, உடல், உளப் பலம் நன்றாக இருக்கவேண்டும். (உங்களுர் மாதிரியேதான்!)

  பதிலளிநீக்கு
 11. சுவையான அனுபவ பகிர்வு! நன்றி! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 12. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 13. நியாய விலை கடையில் மேல் மட்டம் முதல் அடிமட்டம் வரை கவனிக்க படும் என்பது பொதுவாக அனைவரும் அறிந்தே .அருகில் உள்ள மளிகை கடையில் உள்ள பொருட்களை சோதனை போட்டாலே உண்மை தெரிந்து விடும் . பதிவை எழுதிவிட்டு பின்னுடம் எழுதுவதற்கு மட்டும் சட்டத்தை நினைவு படுத்துகிறீர்கள்.இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துக்கள் !!!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாமதான் புத்தி கெட்டுப்போய் பதிவு எழுத வந்துட்டோம், வர்ரத அனுபவிக்கோணும். நமக்கு பின்னூட்டம் போடறவங்க கஷ்டப்படக்கூடாதல்லவா? அதுக்குத்தான் எச்சரிக்கை.

   நீக்கு