வியாழன், 15 நவம்பர், 2012

தொழில் நுட்ப பதிவு - ரேஷன் கடை


ரேஷன் கடை நடத்துவது பற்றி நான் எழுதுவது எல்லோரும் அறிவீர்கள். இந்த அனுபவங்கள் அனைத்தும் 1976ல் ஏற்பட்டவை. அந்த அனுபவங்களுக்கும் இன்றைய காலகட்ட நடைமுறைகளுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது என்று முழு மனதுடன் நம்புகிறேன். அதற்குப்பின் வந்த அரசுகள் மக்களின் நல்வாழ்வுக்காக  பல சீர்திருத்தங்கள் கொண்டுவந்துள்ளார்கள். அதனால் இந்த தில்லு முல்லுகள் இப்போது இல்லை என்று உண்மையாக நம்புகிறேன். படிப்பவர்களும் இந்த கால வித்தியாசத்தை நன்கு உணர்ந்து படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ரேஷன் அரிசி தயாராகும் முறையை விவரமாகப் பார்த்தோம். இதிலும் சில விதிவிலக்குகள் உண்டு. தஞ்சாவூர் மாவட்டம் தவிர இதர மாவட்டங்களில் கொள்முதல் செய்யும் நெல் இந்த மாதிரி ஈரத்துடன் இருக்காது. அங்குள்ள சில "வெள்ளைச்சோள" மில்காரர்கள் அந்த நெல்லை எப்போதும்போல் வேகவைத்து, காயவைத்து, அரைத்து அனுப்புவார்கள். இந்த அரிசி நன்றாகவே இருக்கும். இந்த மாதிரி லோடு வந்தவுடன் சிவில் சப்ளை கோடவுனில் இருக்கும் கலாஸ்காரர்கள் அதை மோப்பம் பிடித்து அந்த மூட்டைகளை தனியாக அடுக்கிவைத்து விடுவார்கள்.

ரேஷன் அரிசியை சாப்பிடும் முறைபற்றி தோழர் வலிப்போக்கன் எழுதியுள்ளதை இந்தப் பதிவில் பார்க்கவும்.

தனியார் ரேஷன் கடைக்காரர்களுக்கு இந்த விஷயம் தெரியும். அவர்கள் கலாஸ்காரர்களுக்கு "சம்திங்க்" கொடுத்து இந்த மூட்டைகளில் நான்கைந்தை வாங்கிக்கொள்வார்கள். அவர்களின் ரேஷன் கடைக்குப்போகும் வழியில் ஏதாவது ஒரு ஓட்டல்காரரிடம் அக்ரீமென்ட் இருக்கும். இந்த மூட்டைகளை அங்கு இறக்கிவிட்டுப் போய்விடுவார்கள். அப்படியே ஓரிரு சர்க்கரை மூட்டைகளும் "தானாகவே" அங்கே இறங்கிக்கொள்ளும்.

இப்படி சரக்குகள் குறைந்தால் ரேஷன் கடை கணக்குகளை எப்படி சரி செய்வது? அந்தக் காலத்தில் நிறைய கணக்குப்புலிகள் இருந்தார்கள். அவர்களுக்கு ஆடிட்டர்கள் என்று பெயர். ஆனைக்கு அல்வா வாங்கின கணக்கையும் கூட சரி செய்யக்கூடிய சாமர்த்தியசாலிகள் அந்தக் காலத்தில் உண்டு. இதற்கு மேல் இந்த விஷயத்தின் உள் வயணத்தைச் சொல்ல எனக்கு கூச்சமாக இருக்கிறது. ஏனென்றால் நானும் அப்படி செய்திருக்கிறேன்.

ரேஷன் கடைகளில் எடை குறைவாகப் போடுவது என்பது காலம் காலமாக வந்த ஒரு நடைமுறை. ஒரு 200 கிராம் எடைக்கல்லை சாமான் போடும் தட்டின் கீழ் புளியை வைத்து ஒட்டி விட்டால் அது பாட்டுக்கு தன் வேலையை செய்து கொண்டிருக்கும். ஒரு கிலோ போடும்போது 200 கிராம் குறைந்தால் அப்பட்டமாகத் தெரிந்து விடும். அதனால் ஒரு கிலோ போடும்போது தாராளமாகப்போடுவது போல் அதிகமாகப்போடுவார்கள். நாலு கிலோ போடும்போது 200 கிராம் குறைந்தால் தெரியாது. யாராவது அதிகாரிகள் வந்தால் அதை நைசாக எடுத்து விடலாம். இந்த விஷயத்தில் ஒரு தார்மீக நியாயமும் இருக்கிறது.

சர்க்கரை மூட்டை ஒன்று 100 கிலோ. இந்த எடை சாக்கையும் சேர்த்து உண்டான எடை. சாக்கு ஒன்றரை கிலோ. ஆக சர்க்கரை 98.5 கிலோதான் இருக்கும். இதை எப்படி நூறு கிலோவாக பில் போடமுடியும்? தவிர இந்த சில்லரை வியாபாரத்தின் இன்னொரு நுணுக்கம்- நூறு கிலோ சரக்கை ஒவ்வொரு கிலோவாக நிறுத்து விற்றால் 97 அல்லது 98 கிலோதான் வரும். அதற்குக் காரணம்- ஒரு கிலோவை தங்கம் எடை போடுகிறமாதிரி அவ்வளவு துல்லியமாகப் போட முடியாது. அப்படிப் போட்டால் வாங்குகிறவர்கள் சண்டைக்கு வருவார்கள். ஒரு பத்துப் பதினைந்து கிராம் கூடப் போய்விடும். இப்படி நூறு கிலோவிற்கு ஒன்றிரண்டு கிலோ குறைபாடு வந்துவிடும்.

ஆக மொத்தம் 100 கிலோ சர்க்கரை மூட்டையைப் பிரித்தால் 97 கிலோதான் விற்க முடியும். இதை சட்டம் ஏற்றுக்கொள்வதில்லை. நூறு கிலோவிற்கும் பில் போடவேண்டும். இது எப்படி சாத்தியமாகும்? மறுபடியும் கணக்குப்புலிகளின் கிருபைதான்.

மண்ணெண்ணை விற்பனை இன்னும் மோசம். கொஞ்சம் ஏமாந்தால் எண்ணை வழிந்துவிடும். அந்த எண்ணையை ஒன்றும் செய்யமுடியாது. தவிர எண்ணை ஆவியாகிக்கொண்டே இருக்கும். எவ்வளவு ஜாக்கிரதையாக அளந்து விற்பனை செய்தாலும் 200 லிட்டர் பேரலுக்கு 5 லிட்டர் எண்ணை கணக்கில் வராது. இந்த 5 லிட்டருக்கு யார் பணம் கட்டுவது? மறுபடியும் புலிகள்தான்.

இவ்வளவு போதும் என்று நினைக்கிறேன். மேல் விபரங்கள் தேவைப்படின் நேரில் வரவும். 

20 கருத்துகள்:

 1. IT act section 66 A எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்குது பார்த்தீர்களா? என் பதிவைப் படித்து விட்டு "நம்பள்கி" உப்பில்லை, காரமில்லை அப்படீன்னு கமென்ட் போட்டா நான் என்ன பண்ணமுடியும்?

  பதிலளிநீக்கு
 2. 66A - வா கொக்கா! நான் பல்லவன் போக்குவரத்து கழக பஸ் ரூட் பத்தி சொன்னேன்!

  [[அதற்குப்பின் வந்த அரசுகள் மக்களின் நல்வாழ்வுக்காக பல சீர்திருத்தங்கள் கொண்டுவந்துள்ளார்கள். அதனால் இந்த தில்லு முல்லுகள் இப்போது இல்லை என்று உண்மையாக நம்புகிறேன்]]

  பதிலளிநீக்கு
 3. என்ன சார் மோடிமஸ்தான் வித்தை காட்டுமாப்போல் புலி வருது புலி வருது என்டு சவுண்டு விடுரியள். புலியைக் காணோமே சாரே!!!

  பதிலளிநீக்கு
 4. //ஏனென்றால் நானும் அப்படி செய்திருக்கிறேன்.//

  சார்... உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு.

  இந்தக் கணக்கு அட்ஜஸ்ட்மென்ட்கள் எல்லா துறைகளிலும் உண்டு. காவல் நிலையங்கள் பற்றி கூட அங்கு யாராவது வி ஐ பி வந்தால் எப்படி செலவு அட்ஜஸ்ட் செய்வார்கள் என்று படித்த ஞாபகம் இருக்கிறது!

  பதிலளிநீக்கு
 5. //என்ன சார் மோடிமஸ்தான் வித்தை காட்டுமாப்போல் புலி வருது புலி வருது என்டு சவுண்டு விடுரியள். புலியைக் காணோமே சாரே!!!//

  புலியக் காட்டீட்டா அப்பறம் என்ன இருக்கு வித்தை காட்டறதுக்கு?

  பதிலளிநீக்கு
 6. தொழில் ரகசியங்களை போட்டு உடைக்கிறீர்கள்.
  கமெண்ட் ரிப்ளை பட்டனுக்கு முயற்சி செய்திருக்கிறீர்கள் போல் தெரிகிறது!

  பதிலளிநீக்கு
 7. //கமெண்ட் ரிப்ளை பட்டனுக்கு முயற்சி செய்திருக்கிறீர்கள் போல் தெரிகிறது!//

  ரிப்ளை பட்டன் முதலில் இருந்தது. திடீரென்று காணவில்லை. போலீஸ் கமிஷனரிடம் போகலாம் என்று இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 8. சூப் தடியன்கள், கொலை கேசை விட பதாகை கேசுங்களுக்கு தான் முன்னுரிமை கொடுப்பானுங்க...

  [[ரிப்ளை பட்டன் முதலில் இருந்தது. திடீரென்று காணவில்லை. போலீஸ் கமிஷனரிடம் போகலாம் என்று இருக்கிறேன்.]]

  பதிலளிநீக்கு
 9. ‘தொழில்’ நுணுக்கங்களை ‘விலாவாரியாக’ விளக்கியமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 10. இப்பல்லாம் சர்க்கரை 1 கிலோ பேக்கிங்கில் அடைக்கப்பட்டு வருவதால் இந்த 97 கிலோ பிரச்சினை இருக்காது என்று நினைக்கிறேன்! ஆளுக்கு இத்தனை பேக் என்று கொடுத்தால் போதும்.

  சரவணன்

  பதிலளிநீக்கு
 11. நடைமுறையில் கோணிப்பை எடை, அளக்கும் போது துல்லியமாக இலக்க முடியாது, மண்ணெண்ணெய் ஆவியாதல் போன்ற சிக்கல்களையும் மேலே உட்கார்ந்துகிட்டு இருக்கிறவங்க யோசிக்கணும், அதுக்கு சரியான தீர்வையும் கண்டுபிடிக்கணும் சர்க்கரைக்கு பாக்கெட் வந்து விட்டதாக நண்பர் சொல்கிறார், இது நல்ல தீர்வு, இதே மாதிரி மதத்துக்கும் செஞ்சா நல்லாயிருக்கும். ம்ம்ம்..... நம்ம நாட்டில இத எங்க எதிர்பார்க்கிறது............

  பதிலளிநீக்கு
 12. உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி...

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  பதிலளிநீக்கு
 13. தொழில் இரகசியங்கள் அருமை! இன்னும் கூட கிராமங்களில் ரேசன் அரிசி வாசனைதான் வருகிறது! நன்றி!

  பதிலளிநீக்கு

 14. / எனது பதிவுகள் அனைத்தும் கற்பனையே/........?

  பதிலளிநீக்கு
 15. பதிவை சுவராசியமாக ஆக்கிய ஐயா அவர்களுக்கு நன்றி !

  பதிலளிநீக்கு
 16. நல்ல பதிவு ஐயா. எங்கட ஊரில சங்ககடை என்று அளைப்போம்.
  //ஆனைக்கு அல்வா வாங்கின கணக்கையும் கூட சரி செய்யக்கூடிய சாமர்த்தியசாலிகள் அந்தக் காலத்தில் உண்டு//
  இப்பவும் வெளிநாடுகளில் நிட்சயமாக இங்கிலாந்தில் இந்த விடையங்களில் பழம் சாப்பிட்ட ஆட்கள் பல பேர் இருக்கினம்.

  பதிலளிநீக்கு