செவ்வாய், 17 செப்டம்பர், 2013

இரு பிரயாணிகள்.


ஒரு ஆங்கிலக் கதையைத் தழுவியது.

ஒரு நாள் நன்கு படித்தவன் ஒருவன் ரயிலில் பிரயாணம் செய்தான். அவன் கூடவே ஒரு விவசாயியும் பிரயாணம் செய்தான். விவசாயியைப் பார்த்தாலே படிக்காத, உலக அனுபவம் இல்லாதவன் என்று பார்ப்பவர்களுக்குத் தோற்றமளித்தான்.

கொஞ்ச நேரம் ஆனதும் படித்தவன் விவசாயியைப் பார்த்து நேரம் போகவில்லையே, ஏதாவது விளையாட்டு விளையாடலாமே என்றான். விவசாயியும் சரி என்று ஒப்புக்கொண்டு, என்ன விளையாட்டு விளையாடலாம் என்று கேட்டான்.

அதற்கு படித்தவன், நான் ஒரு கேள்வி கேட்பேன், அதற்கு நீ சரியான விடை சொன்னால் நான் உனக்கு 100 ரூபாய் கொடுப்பேன், சரியான விடை சொல்லாவிட்டால் நீ எனக்கு 100 ரூபாய் கொடுக்கவேண்டும் என்றான். அதே போல் நீ கேட்கும் கேளவிக்கு நான் சரியான பதிலை சொன்னால் நீ எனக்கு 100 ரூபாய் கொடுக்கவேண்டும். பதில் சொல்ல முடியாவிட்டால் நான் உனக்கு 100 ரூபாய் கொடுக்கிறேன், என்றான்.

விவசாயியும் கொஞ்சம் யோசித்துவிட்டு, நல்ல விளையாட்டாகத்தான் தெரிகிறது. ஆனால் நீங்கள் நன்கு படித்தவர், நல்ல உலக அனுபவம் பெற்றவர், ஆகையால் உங்களுக்கு பல விஷயங்கள் தெரிந்திருக்கும். நானோ ஒரு ஏழை விவசாயி, உலக அனுபவம் பெறாதவன். ஆகையால் நீங்கள் கேட்கும் கேள்விக்கு எனக்கு பதில் தெரியாவிட்டால் நான் ஐம்பது ரூபாய் கொடுக்கிறேன். நீங்கள் நான் கேட்கும் கேள்விக்கு விடை தெரியாவிட்டால் நூறு ரூபாய் கொடுக்கவேண்டும் என்றான்.

படித்தவன், இந்த முட்டாள் அப்படி என்ன கேள்வி கேட்டுவிடப்போகிறான் என்று எண்ணிக்கொண்டு விளையாட்டிற்கு ஒப்புக்கொண்டான். படித்தவன் படிக்காதவனைப் பார்த்து நீயே முதலில் கேள்வி கேள் என்றான்.

படிக்காதவன் "மூன்று கால் உள்ள ஒரு மிருகம் பறக்கிறது, அது என்ன மிருகம்?" என்று தன் கேள்வியைக்கேட்டான்.

படித்தவன் பல நிமிடங்கள் யோசித்தும் அவனால் பதில் கண்டு பிடிக்க முடியவில்லை. நூறு ரூபாயை எடுத்து படிக்காதவனிடம் கொடுத்து விட்டு, அவன் தன்னுடைய கேள்வியைக் கேட்டான்.  "மூன்று கால் உள்ள ஒரு மிருகம் பறக்கிறது, அது என்ன மிருகம்?"

படிக்காதவன் ஐம்பது ரூபாயை எடுத்து படித்தவனிடம் கொடுத்து விட்டு எனக்கும் விடை தெரியவில்லை என்று சொன்னான்.

படித்தவர்கள் ஏன் வாழ்க்கையில் மேல் நிலைக்கு வருவதில்லை என்று புரிகிறதல்லவா.

20 கருத்துகள்:

  1. அப்போ ஏன் ஐயா!
    பிள்ளைகளைப் படி படி என வதைக்கிறார்கள்.
    கதை சுவையாகவுள்ளது.

    பதிலளிநீக்கு
  2. அருமையான கதை
    படிக்காதவனின் புத்திசாலித்தனம் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. படித்தவர்களுக்கு அவசரம். படிக்காதவர்களுக்குத் தற்காப்பு!! படித்திருக்கிறேன் இதை.

    பதிலளிநீக்கு
  4. சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் கதை. படித்தவர்களை விட படிக்காதவர்கள் எப்போதுமே விவரமானவர்கள்தான்.

    பதிலளிநீக்கு
  5. படித்தவன் சூதும் வாதும் செய்தால் நஷ்டப்படுவான் ..!

    பதிலளிநீக்கு
  6. அருமையான கதை. இதைப் படிக்கும்போது ‘படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு.’ என்ற பாடல் நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
  7. கதை சுவையாக உள்ளது நகைச் சுவையும் கலந்து!

    பதிலளிநீக்கு
  8. அவசரத்தில் இரு பிரியாணிகள் என்று படித்தேன்.
    (படிச்சாலே அவசரம் தானோ?)

    பதிலளிநீக்கு
  9. மூளை இருந்தால் படிக்காதவன் கூட படித்தவனை ஏமாற்றலாம்

    பதிலளிநீக்கு
  10. படிக்காத முட்டாளிடம் படித்த முட்டாள் தோற்றுப்போகிறான்

    பதிலளிநீக்கு
  11. படிக்காதவர்கள், படித்தவர்களின் காலை வாருவது பழங்காலம் தொட்டே இருந்துவரும் பழக்கம் தான். ஏட்டுசுரைக்காய் என்பார்கள்.
    துரையின் காமென்ட் நல்ல காமெடி!

    பதிலளிநீக்கு
  12. படிச்சவன் முட்டாள் -இந்த சித்தாந்தத்தை ரொம்ப காலமாவே பலர் பரப்பிக்கிட்டு வர்றாங்க, அந்த கூட்டத்தில மெத்தப் படிச்ச நீங்களும் சேர்ந்துகிட்டது வேடிக்கையாய் இருக்கு!!

    நிஜத்தில் பார்த்தா, படிக்காதவங்க உழைக்கிறாங்க, அவங்க உழைப்பை கொஞ்சம் வியாபாரிகளும், படித்தவர்களும் பிடிங்கித் தின்றுகொண்டிருக்கிரார்கள், உழைத்தவனுக்கு ஒன்றும் மிஞ்சுவதில்லை, நல்ல உணவும் கிடையாது, சில சமயம் தற்கொலை கூட செய்து கொள்ள வேண்டிய நிலை. இதை நிவர்த்தி செய்ய நாட்டை ஆளும் ஒருத்தனுக்கும் மனம் இல்லை..................

    பதிலளிநீக்கு
  13. ஆங்கிலத்தில் common sense என்று கூறுவார்கள். படித்தவனோ படிக்காதவனோ காமன் சென்ஸ் இருந்தால் போதும். தமிழில் பட்டறிவு என்று சொல்லலாமா? படிக்க படிக்க பயம்தான் அதிகம் வரும். துணிச்சல் குறைந்து விடும். எந்த காரியத்திலும் இறங்க பயப்படுவார்கள். . படிக்காதவர்களிடம் இத்தகைய பட்டறிவு அதிகமாக இருப்பதை பார்த்திருக்கிறேன். மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியிருக்கிறது.
    பொதுவாக common sense is the most uncommon thing in the wolrd என்பார்கள்

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
  14. //படித்தவன், இந்த முட்டாள் அப்படி என்ன கேள்வி கேட்டுவிடப்போகிறான் என்று எண்ணிக்கொண்டு விளையாட்டிற்கு ஒப்புக்கொண்டான்.........படித்தவர்கள் ஏன் வாழ்க்கையில் மேல் நிலைக்கு வருவதில்லை என்று புரிகிறதல்லவா//
    எதிரில் இருப்பவனை அவனுக்கென்ன தெரியும் என்று நினைத்தாலே போயிற்று நம் குழியை நாமே தோண்டிகொண்டிருக்கிறோம் என்றுதான் அர்த்தம்.
    இந்த முட்டாள் என்ன கேட்டு விட போகிறான் என்று நினைத்த போதே கதையின் முடிவு ஊகிக்க முடிகிறது,
    நான் படிக்காதவன் என்று தன்னிலை உணர்ந்து சொல்லும் அந்த அடக்கத்தினால்தான் அவன் ஜெயிக்கிறான். அத்தகைய தன்னடக்கம் இல்லாததால்தான் படித்தவர்கள் ஜெயிப்பதில்லை

    திருச்சி அஞ்சு

    பதிலளிநீக்கு
  15. இந்த கதையில் நான் ஒரு மூன்றாம் மனிதனின் - சாதாரண மனிதனின் - நிலையில் இருந்து பார்க்கிறேன். பொதுவாக நாம் எல்லோருமே நமக்கு மேலே இருப்பவர்களை பார்த்து அந்த நிலையை எட்ட முடியாதா என்று எண்ணுகிறோம் அது இயல்பு. வெளியேவும் சொல்லிக்கொள்ள முடியும். ஆனால் நம்மால் ஜெயிக்கமுடியாமல் போகும்போது வெளியே சொல்லிக்கொள்ள முடியாமல் இருப்பது ஒன்று உண்டு. அது நமக்கு மேலிருப்பவன் தோற்றுபோகும்போது நம்மையறியாமலேயே நம் மனத்தில் தோன்றும் ஒரு சந்தோசம். அந்த இனம் புரியாத சந்தோஷம்தான் - அது தவறு என்று தெரிந்தாலும் கூட சந்தோசபடாமல் இருக்க முடிவதில்லை என்பது உண்மை - இத்தகைய கதைகளின் வெற்றிகளுக்கு காரணம். படித்தவன் பெரும் நூற்றுக்கணக்கான வெற்றிகளை பற்றி யாரும் பொருட்படுத்துவதில்லை. ஏனென்றால் அது அவனது படிப்புக்கு அர்ப்பணம் செய்யபடுகிறது. அவன் அடையும் இத்தகைய தோல்விகள் பெரிதாக பேசப்படுகின்றன. இந்த தோல்விகளின் பரிமாணம் அதிகமாவதற்கு காரணமும் அவனது படிப்புதான். எனவேதான் படித்தவர்கள் ஒரு காரியம் செய்யும் போது அதிஜாக்கிரதையாக செயல் படவேண்டும் என்பது. எனவேதான் படித்தவர்கள் எதையும் யோசனை செய்து காரியமாற்றுவதை நாம் எந்த காரியம் ஆரம்பிக்கவும் பயப்படுகிறார்கள் என்று குறை கூற ஆரம்பித்து விடுகிறோம்.
    இது உளவியலாக ஆராய்ந்து பார்த்து நான் சொல்லும் காரணம்.
    (ஒரு சின்ன கதைக்கு இது தேவையா என்று கேட்காதீர்கள். ஏதோ தோன்றியது பதிந்து விட்டேன்)

    திருச்சி தாரு

    பதிலளிநீக்கு