திங்கள், 30 செப்டம்பர், 2013

நட்பு யாருக்குள் தொடரும் ?


மகாபாரதக் கதைகளில் முக்கியமானது துரோணருக்கும் துருபதனுக்கும் ஏற்பட்ட கருத்து வேற்றுமையும் அதனால் ஏற்பட்ட மோதல்களும். ஆனால் இந்தக் கதையிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியவை நிறைய இருக்கிறது.

அக்னி வேச்யர் என்ற குருவிடம் துரோணரும் பாஞ்சால இளவரசன் துருபதனும் கல்வி கற்றார்கள். அப்போது இருவருக்குமிடையில் மிகுந்த நட்பு இருந்தது. துருபதன் அப்போது துரோணரிடம் சொன்னான், "நான் அரசனான பின்பு உனக்கு பாதி ராஜ்யம் வேண்டுமென்றாலும் கொடுப்பேன்" என்றான்.

கால ஓட்டத்தில் இருவரும் வெவ்வேறு நிலைக்கு மாறினார்கள். துருபதன் பாஞ்சால நாட்டின் ராஜாவானான். துரோணருக்கு வாழ சரியான வழி இல்லாமற்போனது. தன் குழந்தைக்குப் பால் வாங்கிக்கொடுக்கக் கூட சக்தியில்லாமல் போனது. அப்போது துருபதன் ஞாபகம் வந்து, அவனிடம் ஒரு பசு மாடு வாங்கி வரலாம் என்று துரோணர் அவன் நாட்டுக்குப் போனார்.

வாயிற்காப்போன் யாரென்று கேட்டதற்கு நான் துருபதனின் நண்பன், அவனைக்காண வந்திருக்கிறேன் என்றார். வாயிற்காப்போன் இதை மன்னனிடம் அப்படியே போய்ச்சொன்னான். திருபதன் துரோணரை சபைக்கு வரச்செய்து அவரை அவமதித்தான். நீ ஒரு பிச்சை எடுத்து பிழைக்கும் ஒரு ஏழைப்பார்ப்பான். நானோ இந்நாட்டு மன்னன். நீ என்னை உன் நண்பன் என்று சொல்லிக்கொள்ள என்ன அருகதை இருக்கிறது. எப்பொழுதோ சிறு வயதில் நீ என் நண்பனாக இருந்திருக்கலாம். ஆனால் கால ஓட்டத்தில் எவ்வளவோ மாற்றங்கள் ஏற்படுகின்றன. பழைய உறவுகள் மறைந்து போகின்றன.

தவிர, நட்பு என்பது சரி சமமானவர்களுக்கிடையேதான் ஏற்படும். பணக்காரனுக்கும் ஏழைக்கும் நட்பு ஏற்பட முடியாது. வீரனுக்கும் கோழைக்கும் நட்பு இருக்க முடியாது. இதையெல்லாம் யோசிக்காமல் நீ என்னை நண்பனென்று கூற உனக்கு என்ன தகுதி இருக்கிறது. இவ்வாறு துரோணரை துருபதன் அவமானப்படுத்தி திருப்பி அனுப்பி விட்டான்.

பிற்காலத்தில் துரோணர் அர்ஜுனன் மூலமாக துருபதனை பழிவாங்கியது அனைவரும் அறிவர். இந்தக் கதையின் நீதி இன்றும் நடைமுறையில் பொருந்துகிறது என்பது ஒரு உண்மை. சிறு வயதில் நல்ல நண்பர்களாக இருப்பவர்கள் பின்னாளில் அந்தஸ்து வேறுபாட்டினால் அந்த நட்பைத் தொடர முடிவதில்லை. உறவுகளுக்குள்ளும் அதே நிலைதான். வாழ்க்கையில் உயர்ந்த வசதிகள் பெறும் உறவினர்கள் தங்கள் ஏழை உறவினர்களைப் புறக்கணிப்பதைப் பார்க்கிறோம்.

நட்பு, உறவு ஆகியவைகளை விட, திருமணங்களில் இந்த சமநிலை அந்தஸ்து மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது. சம்பந்திகள் சம நிலை அந்தஸ்து இல்லாவிட்டால் அந்த திருமணங்கள் பெரும்பாலும் வெற்றியடைவதில்லை. காதல் திருமணங்கள் தோல்வியுறுவதற்கு முக்கிய காரணம் இந்த அந்தஸ்து வேறுபாடுதான்.

இந்தக் காலத்து தெய்வீகக் காதலர்களும் அவர்களைப் போற்றுபவர்களும் இந்த உண்மையைப் புரிந்து கொண்டால் அவர்களுக்கும் அவர்கள் சார்ந்த சமூகத்திற்கும் நன்மை பயக்கும்.

17 கருத்துகள்:

  1. //காதல் திருமணங்கள் தோல்வியுறுவதற்கு முக்கிய காரணம் இந்த அந்தஸ்து வேறுபாடுதான்.//
    உண்மைதான். என்னதான் சொன்னாலும், சம அந்தஸ்து இல்லையென்றால் அந்த நட்போ அல்லது உறவோ நிலைக்காது என்பது உலகறிந்த உண்மை.

    பதிலளிநீக்கு
  2. கடைசி வரிகள்....

    ரசித்தேன். புரிந்து கொண்டால் பிரச்சனையில்லை.

    பதிலளிநீக்கு
  3. பின்னாளிலோ, என்னாளிலோ என்றும் தொடர்வது தான் உண்மையான நட்பு... திருமணங்களில் அந்த "அந்தஸ்து" இருக்கலாம்...

    பதிலளிநீக்கு
  4. சம்பந்திகள் சம நிலை அந்தஸ்து இல்லாவிட்டால் அந்த திருமணங்கள் பெரும்பாலும் வெற்றியடைவதில்லை.

    சிந்திக்கவேண்டிய பகிர்வுகள்..!

    பதிலளிநீக்கு
  5. உறவுகளுக்குள்ளும் அதே நிலைதான். வாழ்க்கையில் உயர்ந்த வசதிகள் பெறும் உறவினர்கள் தங்கள் ஏழை உறவினர்களைப் புறக்கணிப்பதைப் பார்க்கிறோம்.//

    சத்தியமான உண்மை..... பணம் இல்லையென்றால் பாசமும் இல்லைதான்.

    பதிலளிநீக்கு
  6. உண்மை நட்பு அந்தஸ்து பார்க்காது! ஆனாலும் இந்த கால நட்புக்களும் உறவுகளுக்கும் தாங்கள் சொல்வது பொருத்தமே!

    பதிலளிநீக்கு
  7. உண்மையான நட்பு என்பதே அரிதாகிவிட்டது. சம அந்தஸ்து இருந்தாலும்.

    பதிலளிநீக்கு
  8. சாரசரி மனிதர்களுக்கும் புரிகின்ற வகையில் அருமையான எடுத்துக் காட்டுக்கள்... நன்றி அய்யா...

    பதிலளிநீக்கு
  9. கடைசியில் அழகாக சொல்லி முடித்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  10. 'உண்மையான நட்பு' எது?
    எல்லாவகையான நட்பிலும் சுயநலம் இருக்கும் என்கிறார் சாணக்கியர்.
    நம் எல்லைக்குள் இருந்தால் நட்பு, உறவு எல்லாமே நன்றாக இருக்கும். இதைதான் கண்ணதாசன் 'இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே' என்கிறார்.

    பதிலளிநீக்கு
  11. 786 - முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்
    தகநக நட்பது நட்பு.

    இன்முகம் காட்டுவது மட்டும் நட்புக்கு அடையாளமல்ல; இதயமார நேசிப்பதே உண்மையான நட்பாகும்.
    787 - அழிவி னவைநீக்கி ஆறுய்த் தழிவின்கண்
    அல்லல் உழப்பதாம் நட்பு.

    நண்பனைத் தீயவழி சென்று கெட்டுவிடாமல் தடுத்து, அவனை நல்வழியில் நடக்கச் செய்து, அவனுக்குத் தீங்கு வருங்காலத்தில் அந்தத் தீங்கின் துன்பத்தைப் பகிர்ந்து கொள்வதே உண்மையான நட்பாகும்.
    788 - உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
    இடுக்கண் களைவதாம் நட்பு.

    அணிந்திருக்கும் உடை உடலைவிட்டு நழுவும்போது எப்படிக் கைகள் உடனடியாகச் செயல்பட்டு அதனைச் சரிசெய்ய உதவுகின்றனவோ அதைப்போல நண்பனுக்கு வரும் துன்பத்தைப் போக்கத் துடித்து செல்வதே நப்புக்கு இலக்கணமாகும். நட்பு பற்றி வள்ளுவர் கூறுவது உண்மை

    பதிலளிநீக்கு
  12. புராண கால உதாரணம் சொல்லி
    மிகச் சரியாக இன்றைய நிலையுடன்
    இறுதியாக இணைத்தது மிக மிக அருமை
    மனம் கவர்ந்த அருமையான பயனுள்ள
    பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  13. உண்மையை ஆணித்தனமாக சொன்னதற்கு நன்றி

    பதிலளிநீக்கு