சனி, 28 பிப்ரவரி, 2015

இரண்டு உ.கிழங்கு போண்டா விலை 5000 ரூபாய்

                               
                               Image result for heart attack symptoms

நுணலும் தன் வாயால் கெடும். இதை ஆரம்பப் பள்ளியிலேயே படித்திருக்கிறோம். ஆனாலும் வயதான பின்பு ஆரம்பப் பள்ளியில் படித்தவற்றை முற்றிலுமாக மறந்து விடுகிறோம். வாழ்க்கையில் அடிபட்ட பிறகுதான் அடடா, சின்ன வயசிலேயே படித்தோமே என்று அங்கலாய்க்க முற்படுகிறோம்.

நேற்று காலை என் நண்பர் ஒருவர் வீட்டிற்கு வந்திருந்தார். இருவரும் சேர்ந்து மூன்றாவது நண்பர் ஒருவரைப் பார்க்க அவர் வீட்டிற்குப் போனோம். போகும் வழியில் நாங்கள் வழக்கமாக தேனீர் அருந்தும் கடை வந்தது. சரி, நண்பர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது ஏதாவது சாப்பிட்டுக் கொண்டு பேசினால் "செவுக்குணவு இல்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்" என்ற பழமொழியை நடைமுறைப்படுத்தலாமே என்று ஒரு பத்து உ.கிழங்கு போண்டா (அப்போதுதான் சுட்டுக்கொண்டிருந்தார்கள்) வாங்கிக்கொண்டு சென்றோம்.

ஆளுக்கு இரண்டு வீதம் சாப்பிட்டு விட்டு மீதியை நண்பர் வீட்டில் யாராவது சாப்பிடட்டும் என்று வைத்து விட்டோம். மதிய உணவுக்கான நேரம் நெருங்கி விட்டபடியால் அவரவர் வீட்டிற்குத் திரும்பினோம். மதிய உணவு வழக்கம்போல் 1 மணிக்கு பரிமாறப்பட்டது. சாப்பிட உட்கார்ந்தேன். உணவுக் குழாயின் கீழ்ப்பகுதியில் அதாவது நெஞ்சுப் பகுதியில் லேசாக ஏதோ அசௌகரியமாக உணர்ந்தேன்.

சாப்பிடுவதற்கு கஷ்டமாக இருந்தது. எப்படியோ முதலில் போட்ட சாதத்தை குழம்புடன் சேர்த்து சாப்பிட்டேன். மீதியைத் தட்டிலேயே வைத்து விட்டு எழுந்து போய் கையைக் கழுவிவிட்டு படுக்கையில் படுத்துக்கொண்டேன். நெஞ்சில் உள்ள அசௌகரியம் தொடர்ந்து இருந்தது. கற்பனைக் குதிரை இறக்கை கட்டிக்கொண்டு பறக்க ஆரம்பித்தது.

முதல் உதவி வாகனம் வருவது போலவும், அதில் என்னை ஏற்றிக் கொண்டு போய் மருத்துவமனை அவசரப் பகுதியில் சேர்த்து விட்டதாகவும் பல பரிசோதனைகள் செய்யவேண்டும் என்று மருத்துவர்கள் சொல்வதாகவும், இவ்வாறாக பல கற்பனைகள். எதற்கும் பார்க்கலாம் என்று எழுந்து வந்து  ஒரு "ஆன்டாசிட்" மாத்திரை சாப்பிடலாம் என்று மனைவியைக் கூப்பிட்டேன். அவள்தான் இந்த மாத்திரையை வழக்கமாக சாப்பிடுவாள்.

நான் சரியாகச் சாப்பிடாமல் படுக்கப் போய்விட்டு, திரும்ப எழுந்து மனைவியைக் கூப்பிட்டவுடன் அவளுக்கு பயம் வந்து விட்டது. அலார மணி அடித்துவிட்டாள். மனைவி, டாக்டருக்குப் படித்து முடித்துவிட்டு மேற்படிப்பிற்காக காத்துக் கொண்டிருக்கும் பேரன், டாக்டர் மகள் எல்லோரும் வந்து விட்டார்கள். நான் கேட்ட மாத்திரையை வாங்கி சாப்பிடுவதற்குள் பல கேள்விகள். என்ன செய்கிறது? என்று ஆளாளுக்குக் கேட்டார்கள்.

இங்குதான் "நுணலும் ...." என்கிற பழமொழி வேலை செய்தது. போண்டா சாப்பிட்ட சமாச்சாரத்தைச் சொல்லி விட்டேன். சிக்கிக்கொண்டேன். யார் உங்களை போண்டா வாங்கிச் சாப்பிடச்சொன்னது? வெளியில் போனால் சும்மா வருவதில்லை? வம்பை விலைக்கு வாங்கி வருவதே உங்கள் வேலையாகப் போயிற்று? இத்தியாதி, இத்தியாதி.

இதற்குள் "ஆன்டாசிட்" மாத்திரை வேலை செய்து வயிற்று அசௌகரியம் சரியாகி விட்டது. ஆனாலும் ஒரு இருதய நோய் நிபுணரைப் பார்த்து முழு பரிசோதன் செய்து விடலாம் என்று முடிவாகியது. இது ஒன்றுமில்லை, வெறும் வாயுத் தொந்திரவுதான் என்று நான் சொன்னதை யாரும் காதில் போட்டுக்கொள்ளவில்லை.

சமீபத்தில்தான் பக்கத்து வீட்டு அம்மாள் 5000 ரூபாய் செலவு செய்து இந்த பரிசோதனைகளை முடித்திருந்தார்கள். அந்த டாக்டர் பக்கத்துத் தெருவில்தான் இருக்கிறார். என் பெண்ணுக்குத் தெரிந்த டாக்டர்தான். அவரிடம் காட்டுவதென்று முடிவாகி விட்டது.

என்னுடைய ஆட்சேபணைகளை யாரும் கேட்பதாகத் தெரியவில்லை. ஆக மொத்தம் இரண்டு போண்டாக்கள் 5000 ரூபாய் செலவு வைக்கிறது. நான் என்ன செய்ய முடியும். நான் என் சூழ்நிலைக்கு அடிமை. குடும்பத்து அங்கத்தினர்கள் சொல்வதை நிராகரிக்க முடியாது. நாளைக்கு நிஜமாகவே ஏதாவது வந்து விட்டால் நாங்கள் அன்றைக்கே சொன்னோமே என்று சொல்லிச்சொல்லியே என் பிராணனை எடுத்து விடுவார்கள். ஆகவே இந்த பரிசோதனைக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறேன்.

மருத்துவரிடம் போய்வந்த பிறகு அந்த அனுபவத்தைத் தனியாக எழுதுகிறேன்.

19 கருத்துகள்:

 1. இரண்டு போண்டா படுத்தும் பாடு....

  உடல் நலனைப் பார்த்துக் கொள்ளுங்கள் ஐயா.

  பதிலளிநீக்கு
 2. ஐயா!
  2 போண்டாவில் ஒரு பதிவு தேற்றி விட்டீர்கள். இன்னுமொன்றும் உள்ளதென்கிறீர்கள்.
  நலமாக இருங்கள்.

  பதிலளிநீக்கு
 3. நமது பயம் டாக்டர்களுக்கு கொண்டாட்டம் . போனால் போகிறது. ஒன்றும் இல்லை என்று தெரிந்ததும் நிம்மதியாக இருக்கலாம் அல்லவா அந்த நிம்மதிக்கு விலை 5000 என்று என்று நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்

  பதிலளிநீக்கு
 4. போண்டாவின் பின்விளைவு! நெஞ்சு எரிச்சல் என்பதால் முன்விளைவோ!

  :))))))))))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படித்தான் இருக்க வேண்டும். ஆனால் குடும்பத்தில் இருப்பவன் மற்ற குடும்ப அங்கத்தினர்களுக்கு அடிமையாகத்தான் இருக்கவேண்டியதாய் இருக்கிறது.

   நீக்கு
 5. எல்லாம் நாக்கு ருசி படுத்தும் பாடு.
  த.ம.5

  பதிலளிநீக்கு
 6. உடல் நலம் முக்கியம் ஐயா... பதிவு எல்லாம் அப்புறம்...

  பதிலளிநீக்கு
 7. படித்த பாடங்கள்

  1. உ போண்டா சாப்பிட்டால் antacid மாத்திரைகள் போட்டுக்கொள்ளவேண்டும்.

  2. பொய் சொல்லாவிட்டாலும் எல்லா உண்மைகளையும் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. சில உண்மைகளை விழுங்கிவிடுவது நல்லது.

  3. Retire ஆகிவிட்டால் நம்முடைய control நம் கையில் இல்லை. மனைவி முதல் கொள்ளுப்பேரன் வரை சொல்வதை எல்லாம் கேட்க வேண்டும்.

  4. கடைசியாக வெங்காய பஜ்ஜி தவிர வேறு எதையும் விரும்பக்கூடாது.

  --
  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயோ, ஐயய்யோ, விஷப்பரீட்சையெல்லாம் செய்ய மாட்டேன். என்னால் தாங்க முடியாது. பேசாமல் வீட்டுக்காரி போடறதச் சாப்பிட்டுட்டு சிவனேன்னு கிடப்பேன்.

   நீக்கு
  2. அஷ்டவர்க்கச்சூரணம் என்று சித்தா மருந்து கடைகளில் கிடைக்கும். இந்த மாதிரி 'போண்டா' சாப்பிட ஆசை இருக்கும்போது அதை கையில் வைத்துக்கொண்டு சாப்பிடுங்கள். வாய்வு பிடிப்பு, வயிறு உப்புசம் மாதிரியான தருணங்களில் இந்த சூரணத்தை இளஞ்சூடான நீரில் அரை teaspoon அளவு கரைத்து குடித்து விடுங்கள். 10 - 15 நிமிடங்களுக்குள் நிவாரணம் கிடைத்து விடும். முயற்சி செய்து பாருங்கள்.

   நீக்கு
 8. ‘நாவடக்கம்’ தேவை என்பது பேசுவதற்கு மட்டுமல்லாமல் சாப்பிடுவதற்கும் தானோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான். நாவடக்கம் ருசிக்கும் பேச்சுக்கும் அவசியம் தேவை.

   நீக்கு
 9. அக்கறை இருப்பதால் தானே கேட்கிறார்கள் ஐயா? அஜீரணம் என்று அலட்சியமாக விடக்கூடாது என்பதே என் கருத்தும்.

  சரி.. உகிபோ எப்படி இருந்தது? (இந்தத் திண்டி உண்டு சுமார் ஏழெட்டு வருசமாவது இருக்கும்)

  பதிலளிநீக்கு
 10. சில நோய்களின் அறிகுறிகளைப் புரிந்து கொள்வது சிரமம். இந்த வயது காலத்தில் ஒரு மருத்துவ செக் அப் புக்கு போண்டா காரணமாக இருந்தது.all is well that ends well. வெளி இடங்களில் உணவுப் பொருட்களை கூடிய மட்டில் தவிர்ப்பது நல்லது. ஆசை என்பது யாரை விட்டது. உடல் நிலை தெரிந்து நாவாசை கொள்ளலாம்

  பதிலளிநீக்கு
 11. பஜ்ஜி சாப்பிடுவதில் உள்ள சுகம் போண்டாவில் இல்லை போலிருக்கிறது! அட என்ன இது சோதனை!

  பதிலளிநீக்கு
 12. உடல் நலம் முக்கியம் ஐயா
  ஆனால் நமது பயத்தையோ முதலீடாய் மர்ற்றும்
  மருத்துவர்களும் இருக்கிறார்கள்
  தம +1

  பதிலளிநீக்கு
 13. இப்படித்தான் நமது அல்ப ஆசைகள் சிலசமயம் நம்மை வேண்டாத செலவில் கொண்டு விடுகின்றன! சுவாரஸ்யமாக பகிர்வு!

  பதிலளிநீக்கு
 14. !!!! என்னுடைய ஆட்சேபணைகளை யாரும் கேட்பதாகத் தெரியவில்லை. இங்க மட்டும் என்னவாம்???. ஆக மொத்தம் இரண்டு போண்டாக்கள் 5000 ரூபாய் செலவு வைக்கிறது. நான் என்ன செய்ய முடியும். நான் என் சூழ்நிலைக்கு அடிமை. இன்னா நைனா சொல்றீங்க?! யாராவது வருமானத்துக்கு அதிகமா போண்டா சாப்டீங்கண்ணு கெளப்பி ஊட்டுறப்போறாங்க.
  வாழ்த்துகள்.
  ஏதாவது என்ன மாதிரி பொல்லாத கண்ணு பட்டு இருக்கும். சுத்தி போடசொல்லுங்க நைனாம்மா..

  பதிலளிநீக்கு
 15. தங்களின் போண்டா அனுபவம் பலருக்கு எச்சரிக்கையைத் தந்திருக்கும். உடம்பை கவனித்துக்கொள்ளுங்கள்.

  பதிலளிநீக்கு