புதன், 25 மார்ச், 2015

கீரை வடையும் அன்னபூர்ணா ஹோட்டலும்.

                                        Image result for கோவை அன்னபூர்ணா ஓட்டல்
இது ஐம்பது வருடத்திற்கு முந்திய கதை. நான் 1960 களில் விவசாயக் கல்லூரியில் உதவி ஆசிரியனாகப் பணி புரிந்த காலம். நாங்கள் மொத்தம் 6 பேர். இளநிலை விவசாயப் படிப்பு அப்போது 4 வருடத்துப் படிப்பாகும். இப்போதும் அப்படித்தான்.

ஒவ்வொரு வருடத்திலும் 162 மாணவர்கள். இவர்களுக்கு வேதியல் பாடத்தில் செய்முறை வகுப்புகள் எடுப்பதுதான் எங்கள் வேலை. செய்முறை வகுப்புகள் அநேகமாக காலை வேளைகளில்தான் இருக்கும். காலை 7 மணிக்கே வகுப்புகள் ஆரம்பமாகும். 9 மணிக்கு ஒரு பேட்ச் முடிந்து 9.30 க்கு அடுத்த பேட்ச் வரும். இந்த பேட்ச் 11.30 க்கு முடியும். ஒவ்வொரு பேட்சிற்கும் மூன்று ஆசிரியர்கள் வேண்டும்.

இந்த வேலையை நாங்கள் முறை வைத்துக் கொண்டு நிறைவேற்றுவோம். தினமும் வகுப்புகள் உண்டு. காலையில் வகுப்புகள் முடிந்து விடும். பிறகு வீட்டுக்குப் போய் சாப்பிட்டு விட்டுத் தூங்கி எழுந்து மாலையில் மூன்று மணிக்குத்தான் ஆபீசுக்கு வருவோம். எல்லோரும் பக்கத்தில் குவாட்டர்சில்தான் இருந்தோம்.

மாலையில் என்ன வேலை என்றால் பசங்களுடைய ரிக்கார்டு நோட்டுகளைத் திருத்துவதுதான். இதை அப்படியே அரட்டை அடித்துக்கொண்டே செய்யும்போது மாலை 4 மணி ஆனால் வயிற்றுக்குள் ஒரு மணி அடிக்கும். அதாவது அதற்கு ஏதாவது சிறுதீனி வேண்டும் என்று அர்த்தம்.

அப்போதுதான் வடகோவையில் சென்ட்ரல் தியேட்டர் என்று ஒன்று புதிதாகக் கட்டியிருந்தார்கள். அங்கு நடந்து கொண்டிருந்த கேன்டீனில் கீரைவடை என்று ஒன்று போடுவார்கள். சாதாரணப் பருப்பு வடை மாவில் ஏதாவது ஒரு கீரையை நன்றாக சிறு துண்டுகளாக வெட்டிப் போட்டு பிசைந்து வடை சுடுவார்கள். வடை மொறுமொறுவென்று அவ்வளவு ருசியாக இருக்கும்.
விலை கொஞ்சம் ஜாஸ்தி.ஒரு வடை அரை அணா  என்று நினைவு.

ஆறு பேருக்கு ஆளுக்கு நாலு வடை வீதம் 24 வடைக்கு எவ்வளவு ஆகும் பாருங்கள்? 12 அணா, சுளையாக முக்கால் ரூபாய். எங்களுக்கு அப்போது சம்பளமே மாதத்திற்கு 150 ரூபாய்தான். ஆனாலும் இது அத்தியாவசியச் செலவு என்பதால் முறை வைத்துக் கொண்டு (ஆளுக்கு ஒரு நாள்- வாரத்தில் ஆறு நாள்) செய்தோம். இது தவிர ஆறு பேருக்குக் காப்பி. ஒரு காப்பி விலை ஒன்றரை அணா. ஆறு காப்பிக்கு 9 அணா. 24 வடைக்கு 12 அணா. ஆக மொத்தம் ஒரு நாளைக்கு 21 ஆணா. அதாவது ஒரு முழு ரூபாயும் ஐந்து அணாவும். அதாவது இன்றைய கணக்கில் ஒரு ரூபாய் முப்பது பைசா.

தினம் ஒருவர் முறை வைத்துச் செலவு செய்வதால் ஒருவருக்கு வாரம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் ஐந்தணா அவ்வளவு பெரிய செலவாகத் தோன்றவில்லை. இது தவிர அவ்வப்போது பெரிய கடை வீதியில் உள்ள "பாம்பே ஆனந்த பவன்" ஓட்டலுக்குப் போகவேண்டி வரும். யாராவது ஒருவர் ஏதாவது ஒரு வாக்குவாதத்தில் சிக்கித் தோற்றுப்போனால் அவர் அன்று மற்றவர்களுக்கு அந்த ஒட்டலில் இட்லி சாம்பார் வாங்கித்தரவேண்டும். எப்படியும் இந்த வைபவம் வாரத்திற்கு ஒரு முறையாவது நடக்கும். அதைப் பற்றி தனியாக ஒரு பதிவு எழுதுகிறேன்.

 எங்களுக்கு செய்முறை வகுப்புகளில் உதவி செய்வதற்காக "லேப் பாய்" என்று ஒரு கடைநிலை ஊழியர்கள் ஐந்தாறு பேர் உண்டு. மாலையில் இவர்களுக்கும் வகுப்புகள் இல்லாததால் வேறு வேலை இல்லை. இவர்களில் ஒருவனைப் பிடித்து கீரைவடை வாங்கவும் இன்னொருவனைப் பிடித்து காப்பி வாங்கவும் அனுப்புவோம். நான்கு மணிக்கு இவை இரண்டும் வந்து விடும். இவைகளைச் சாப்பிட்டு முடிக்கும் போது ஐந்து மணி ஆகிவிடும். அவ்வளவுதான். கடையைக் கட்டிவிட்டு வீட்டுக்குப் போய் கைகால் கழுவிவிட்டு 6 மணிக்கு ஆபீசர்ஸ் கிளப் போவோம். அந்தக் கதையை வேறொரு பதிவில் பார்க்கலாம்.

இப்போ இந்தக் கீரைவடையின் மூலத்திற்கு வருவோம். அந்தக் காலத்தில் கோயமுத்தூரில் நூற்பாலைகள் அதிகம். அவைகளைப் போதுவாக நூல்மில்கள் என்று அழைத்துப் பிறகு வெறும் மில் என்றாலே நூல்மில் என்று ஆகிப்போனது. அதிகம் படிக்காத உள்ளூர் பசங்கள் எல்லாம் மில் வேலைக்குத்தான் போவார்கள். அங்கு வேலை செய்பவர்களுக்கு நல்ல சம்பளம். நாங்கள் 18 வருடம் படித்து எம்எஸ்சி பட்டம் வாங்கி பெரிய அரசாங்க உத்தியோகம் என்ற பெயரில் வேலை பார்க்க சம்பளம் 150 ரூபாய். ஸ்கூலுக்கே போகாமல் குண்டு விளையாடிக்கொண்டிருந்து விட்டு மில் வேலைக்குப் போகிறவர்களுக்கும் அதே 150 ரூபாய் சம்பளம். அது தவிர தீபாவளிக்கு 6 மாத சம்பளம் போனஸ் தருவார்கள்.

அன்றைக்கு இருந்த பொருளாதார நிலை அப்படி. இன்றைய நிலை எப்படி என்று சொன்னால் எல்லோருடைய வாயும் வயிறும் வெந்து விடும். வேண்டாம், அந்தப் பாவம் எனக்கு வேண்டாம். ஆனாலும் அப்படி மில் வேலைக்கு போய்கொண்டிருந்த சிலர் தாங்கள் வாழ்க்கையில் முன்னேறவேண்டும் என்ற குறிக்கோளுடன் பற்பல தொழில்கள் செய்து முன்னேறியிருக்கிறார்கள்.

அந்த மாதிரி நாலு பேர் சேர்ந்துதான் இந்த சென்ட்ரல் தியேட்டர் கேன்டீனை குத்தகைக்கு எடுத்து நடத்தினார்கள். அவர்களுடைய அம்மாவிற்கு சமையலில் கைப் பக்குவம் அதிகம். அவர்கள் வழிகாட்டுதலில் இந்தக் கேன்டீன் ஜேஜேவென்று ஓடியது. அவர்கள் போட்ட கீரை வடை கோயமுத்தூர் ஜில்லா முழுவதும் பெயர் பெற்றது.

இப்படியாக அனுபவம் பெற்ற அவர்கள் ஆர்எஸ்புரம் திவான் பகதூர் ரோட்டில் ஒரு கடை வாடகைக்கு எடுத்து சிறியதாக ஒரு ஓட்டல் ஆரம்பித்தார்கள். அவர்களின் முழு கவனமும் விற்பனை செய்யும் உணவுப் பொருட்கள் தரமாகவும் ருசியாகவும் விலை அதிகமில்லாமலும் இருக்கவேண்டுமென்பதில்தான் இருந்தது. இப்படி ஒரு ஓட்டல் நடந்தால் அது வளர்வதற்குத் தடை ஏது?

அந்த நாலு பேரும் அல்லும் பகலும் உழைத்தார்கள். அந்த ஓட்டல் வளர்ந்தது. சொந்தமாக இடம் வாங்கினார்கள். உள்ளூரில் கிளைகள் போட்டார்கள். எல்லாக் கிளைகளிலும் வியாபாரம் அமோகமாக நடந்தது. வெளியூரிலும் கிளைகள் ஆரம்பித்தார்கள். கோயமுத்தூர் வரும் வெளியூர் ஆட்கள் இந்த ஓட்டலுக்குப் போய் சாப்பிட்டால்தான் கௌரவம் என்ற அளவிற்கு இந்த ஓட்டல் பெயர் பெற்றது.

அந்த ஓட்டல்தான் இன்று கோவையில் கோலோச்சி வரும் அன்னபூர்ணா-கௌரிசங்கர் குரூப் ஓட்டல்கள்.
                                  Image result for அன்னபூர்ணா ஓட்டல்

70 கருத்துகள்:

  1. சூடாக வடை தருவீர்கள் என்று வந்தேன்
    முதலிலேயே மொய்யும் (தம 2) வச்சிட்டேன். எனவே ஏமாற்றம் தராமல்
    வடையை துரித அஞ்சலில் (கொரியர்) அனுப்பிடுங்க நைனா.

    பதிலளிநீக்கு
  2. சென்ட்ரல் தியேட்டர் கேட்டு இடைவேளை முடிந்ததும் வெளியே இருந்து காண்டீனுக்கு வருபவர்களுக்காக திறக்கப்படும். அப்போது நண்பர்களுடன் போய் அரட்டை அடித்துக் கொண்டு கீரை வடை, காஃபி சாப்பிடுவது வழக்கம். இதெல்லாம் முப்பது வருஷம் முன்பு. இன்னும் அந்த கீரை வடை ருசியும் காஃபி மணமும் மனத்தை விட்டு அகலவில்லை. - கிரிஷ்

    பதிலளிநீக்கு
  3. 'யாராவது ஒருவர் ஏதாவது ஒரு வாக்குவாதத்தில் சிக்கித் தோற்றுப்போனால் அவர் அன்று மற்றவர்களுக்கு அந்த ஒட்டலில் இட்லி சாம்பார் வாங்கித்தரவேண்டும்.'
    அப்ப
    நிஜமா
    சொல்லுங்க
    நிறைய
    நாட்கள்
    உங்களுக்கு
    நிறைய
    இட்லிகள்
    இலவசமாக
    இல்லையில்லை
    விலையில்லாமல்
    கிடைத்ததுதானே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படியெல்லாம் கிடுக்கிப்பிடி போடறது ஆட்டத்தில தப்பாட்டம். நான் இந்த ஆட்டத்துக்கு வரலை. அம்பேல். ஆளை உடுங்க.

      நீக்கு
  4. ஒவ்வொரு புகழ் பெற்ற நிறுவனங்களுக்கும் பின்னணியில் ஒரு அயராத உழைப்பும் புத்திசாலித் தனமும் இருக்கிறது.ஆனால் வளர்ந்த பின் சேவையும் தரமும் பல இடங்களில் குறைந்து விடுகிறது.
    கீரை வடை மூலம் நல்ல தகவல் அறிந்தோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்னபூர்ணாவில் இன்னமும் அதே தரம் இருக்கிறது. ஆனால் என்ன நாம் சாப்பிடுக்கொண்டிரும்போதே நமக்கு பினனால் டோக்கனுடன் நின்று கொண்டிருப்பதால் சாப்பாட்டை ருசித்து சாப்பிட முடிவதில்லை. அவசரம் அவசரமாக விழுங்கி விட்டு வர வேண்டியதை இருக்கிறது. இதற்கு மாற்று ஏற்பாடு செய்தால் பரவாயில்லை.

      துளசி மைந்தன்

      நீக்கு
    2. கடைவீதியிலும் கோர்ட்டுக்குப் பக்கத்திலும் உள்ள கிளைகளில் நீங்கள் சொல்கிற மாதிரி இருக்கலாம் மற்ற கிளைகளில் அவ்வளவு கூட்டம் இல்லையென்று நினைக்கிறேன். நான் சாப்பிடுவதற்காக அன்னபூர்ணா போய் பல வருடங்களாய் விட்டன.

      நீக்கு
  5. எனக்கும் இந்த கௌரவம் ஒருமுறை கிடைச்சுருக்கு. 1977 இல்.

    இந்த 2014 பயணத்தில் வேறு ஒரு இடத்தில் பகல் உணவு. அந்தக் கதையை வேறொரு பதிவில் பார்க்கலாம்:-)

    பதிலளிநீக்கு
  6. இந்த அன்னபூர்ணா உணவகத்தில் சாப்பிட்ட அனுபவம் எனக்கும் உண்டு. 1970 இல் ரூபாய் 5 க்கு மதியம் வடை பாயசத்துடன் சிறப்பு சாப்பாடு போடுவார்கள். சாப்பிடும்போது கல்யாண வீட்டில் உபசரிப்பது உபசரிப்பார்கள். பின்னாட்களில் இந்த உணவகம் மிகப் பெரிய நிறுவனமானபோது உணவகத்தின் நிறுவனர் புது டில்லியில் நடந்த ஒரு ஜெர்மன் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த ஒரு இயந்திரத்தின் விலை பற்றி கேட்டதற்கு அவரது எளிய உடையைப் பார்த்து இகழ்ச்சியாக உங்களால் இதை வாங்க இயலாது என்றார்களாம். உடனே அவர் அவர்களுக்கு கையொப்பமிட வெற்று காசோலையைக் கொடுத்து வேண்டிய தொகையை நிரப்பிக்கொள்ளுங்கள் என்றாராம். உடனே அவர்கள் அவரது வங்கியை தொடர்பு கொண்டு அவரைப் பற்றி விசாரித்து அறிந்து அவரை தாழ்வாக நினைத்தற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டு அந்த காசோலையை அவர்களது நிறுவனத்தில் கண்ணாடிப் பேழைக்குள் வைத்து காட்சியாக வைத்திருந்தார்களாம்.
    உழைப்பால் உயர்ந்த கோவைக்காரர்கள் இவர் போல் பலர் உண்டு. இவர்களைப்பற்றி தாங்கள் எழுதலாமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முயற்சிக்கிறேன். தகவல் சேகரிக்க கொஞ்சம் அலைய வேண்டி இருக்கும். நண்பர்களையும் உறவினர்களையும் கேட்டு அந்த கேள்வி ஞானத்தை வைத்து என் சொல் அலங்காரங்களை வைத்து பதிவுகள் போடுகிறேன்.

      நீக்கு
  7. கோவையில் வேலை தேடி மில் மில்லாக ஏறி இறங்கினது நினைவுக்கு வருகிறது/ வேலை தேடும் படலம் என்னும் பதிவும் எழுதி இருக்கிறேன். எனக்கும் கோவை நினைவுகள அவ்வப் போது வரும்/ தேர்ட் ஃபார்ம் ஃபோர்த் ஃபார்ம் அங்குதானே படித்தேன்.

    பதிலளிநீக்கு
  8. 1980 களில் நான் கல்லூரி (கோவை தொழில் நுட்ப கல்லூரி) படிக்கும் வரையில் கீரை வடை சாப்பிட்டு ரசித்திருக்கிறேன். கிரிஷ் சொன்னது போல சென்ட்ரல் தியேட்டர் கேட்டு இடைவேளை முடிந்ததும் வெளியே நண்பர்களுடன் போய் அரட்டை அடித்துக் கொண்டு கீரை வடை, காஃபி சாப்பிடுவதும் என்னடைய வழக்கம். இதெல்லாம் இருபத்து ஐந்து வருஷம் முன்பு. இன்னும் அந்த கீரை வடை ருசியும் காஃபி மணமும் மனத்தை விட்டு அகலவில்லை. மேலும் ஒரு தகவல். அன்னபூர்ணா முதலில் ஆர்.எஸ்.புரத்தில் இப்போதும் உள்ள "ரங்கசாமி செட்டியார்" மளிகைக்கடை பின்புறம் இருந்தது. பழைய நினைவுகள்.. மறக்க முடியுமா?

    பதிலளிநீக்கு
  9. ரங்கசாமி செட்டியார் பற்றியும் ஒரு பதிவு போடவேண்டும். கோவையில் உழைத்து முன்னேறியவர்களில் அவரும் ஒருவர். அவரை நினைவு படுத்தியதற்கு நன்றி. அன்னபூர்ணா மளிகைக் கடையின் தெற்குப் பக்கத்தில் அகலம் குறைந்ததாக நீள வாக்கில் இருந்ததாக நினைவு.

    பதிலளிநீக்கு
  10. யாராவது ஒருவர் ஏதாவது ஒரு வாக்குவாதத்தில் சிக்கித் தோற்றுப்போனால் அவர் அன்று மற்றவர்களுக்கு அந்த ஒட்டலில் இட்லி சாம்பார் வாங்கித்தரவேண்டும். எப்படியும் இந்த வைபவம் வாரத்திற்கு ஒரு முறையாவது நடக்கும் அதைப் பற்றி தனியாக ஒரு பதிவு எழுதுகிறேன்.// ரொம்பவே ஆவலோடு இருக்கின்றோம்...ஏனென்றால் தங்களுக்கு நிறையவே கிடைத்துருக்கும் என்று நம்புவதால் நிறைய சுவாரஸ்யங்கள் இருக்குமே!

    நல்ல உழைப்பளிகள்....எந்த ஒரு புகழ் பெற்ற நிறுவனத்திற்கும் பின்புறத்தி இது போன்ற கதைகள் இருக்கும்...கிருஷ்ணா ஸ்வீட்ஸ்?

    சென்னை சரவணா ஸ்டோர்ஸ், நல்லி குப்புசாமி அவர்கள் எல்லோரும் கூட சிறுவயதில் தலையில் துணி சுமந்து விற்றதாகத்தான் சொல்லக் கேட்டிருக்கின்றோம்.

    (கீதா: நாங்கள் கோயம்பத்தூரில் இருந்த போது இந்த அன்ன பூர்ணா உணவகத்தில்தான் சாப்பிடுவோம். பீளமேட்டு பிஎஸ்ஜி டெக் குவார்டர்ஸ் லருந்து ரயில் நிலையம்..வரை சென்று....ம்ம்ம் அவ்வப்போது...3 வருடங்கள். கோவை கோவைதான்..

    பதிலளிநீக்கு
  11. //அவர்களின் முழு கவனமும் விற்பனை செய்யும் உணவுப் பொருட்கள் தரமாகவும் ருசியாகவும் விலை அதிகமில்லாமலும் இருக்கவேண்டுமென்பதில்தான் இருந்தது//

    விற்பனை செய்யும் உணவுப்பொருட்கள் தரமானதாக இருக்க வேண்டும் - இன்றைக்கும் இருக்கிறது
    விலை அதிகமில்லாமலும் இருக்க வேண்டும் - இன்று இருக்கிறதா?

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைய நிலவரம். இரண்டு இட்லி - 25 ரூபாய் , ஒரு வடை 25 ரூபாய், ஒரு காப்பி 25 ரூபாய். வரிகள் தனி. இது அதிகமா, குறைவா என்று நீங்கள்தான் சொல்லவேண்டும்.

      நீக்கு
  12. //இளநிலை விவசாயப் படிப்பு அப்போது 4 வருடத்துப் படிப்பாகும். இப்போதும் அப்படித்தான்.//

    அன்று நாலு வருடம்; இன்று மாறியிருந்தால் "அப்போது" "இப்போது" என்று சொல்லலாம். எப்போதும் நாலு வருடம்தான் எனும்போது இப்போது போல அப்போதும் நாலு வருடத்து படிப்புதான் என்றே சொல்லி விட்டு போகலாமே

    திருச்சி அஞ்சு

    பதிலளிநீக்கு
  13. //பிறகு வீட்டுக்குப் போய் சாப்பிட்டு விட்டுத் தூங்கி எழுந்து மாலையில் மூன்று மணிக்குத்தான் ஆபீசுக்கு வருவோம்.//

    இந்த மத்தியான தூக்கம்தான் உங்கள் ஆரோக்கியமான இளமையான வாழ்க்கைக்கு காரனம என்று நினைக்கிறேன்.

    திருச்சி தாரு

    பதிலளிநீக்கு
  14. //மாலை 4 மணி ஆனால் வயிற்றுக்குள் ஒரு மணி அடிக்கும்.//

    வயிற்றுக்குள் மணி அடித்து இப்படி சிறு தீனி சாப்பிட்டால் பரவாயில்லை,
    வெளியே மணி அடித்து சாப்பிட்டால்தான் வேறு மாதிரி "மணி அடிச்சா சோறு" என்று நினைக்கத்தோன்றும்

    காயத்ரி மணாளன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்படியோ, என்னை உள்ளே அனுப்ப பலர் ஆசைப் படுகிறார்கள். உங்கள் ஆசையைக் கூடிய சீக்கிரம் நிறைவேற்றுகிறேன்?

      நீக்கு
  15. //விலை கொஞ்சம் ஜாஸ்தி.ஒரு வடை அரை அணா என்று நினைவு.//

    அரை அணாவை விலை அதிகம் என்று சொல்லும் நீங்கள் இன்றைய களத்தில் விற்கும் விலையை எப்படி ஜீரணித்து கொள்கிறீர்கள்? யூனிஎன்சைம் மாத்திரை சாப்பிட்டுத்தான் என்று சொல்லாதீர்கள்.

    துளசி மைந்தன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்று என் சம்பளத்தில் இரண்டு பவுன் தங்கம் வாங்கலாம். இன்றைக்கும் அதே நிலைதான். என்ன நெம்பர்கள் மாறுபடுகின்றன. அவ்வளவுதான்.

      நீக்கு
  16. // ஆனாலும் இது அத்தியாவசியச் செலவு என்பதால் ...//

    ஆமாம் ஆமாம் நாக்குக்கு ருசி வயிற்றுக்கு தேவை என்பதால் இது ஒரு அத்தியாவசிய செலவுதான் ஒத்துக்கொள்கிறோம் அய்யா

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
  17. //ஆறு பேருக்கு ஆளுக்கு நாலு வடை ...//

    நன்றாகத்தான் வாழ்க்கையை அனுபவித்திருக்கிறீர்கள் அய்யா.
    நல்ல கள்ளி சொட்டு பாலில் முதல் டிகாஷனில் போட்ட காபி, நான்கு கீரை வடை, கூட அரட்டை அடிக்க ஒத்த நண்பர்கள். நினைத்துப்பார்க்கவே சுகமாக இருக்கிறது. இன்று இத்தகைய நட்பை டாஸ்மாக்கில் கூட பார்க்க முடியாது.

    திருச்சி அஞ்சு

    பதிலளிநீக்கு
  18. //(ஆளுக்கு ஒரு நாள்- வாரத்தில் ஆறு நாள்)//

    இதெல்லாம் சரிதான். அந்த ஏழாவது நாள் சரியாக நான்கு மணிக்கு வயிற்றில் ஒரு பெரிய கண்டாமணி அடித்திருக்குமே. அதற்கு என்ன செய்தீர்கள். (தனி பதிவு போட என்னமோ?)

    திருச்சி தாரு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்றைக்குத்தான் எண்ணைக் குளியல். அது முடித்து மதியம் ஆபீசர்ஸ் மெஸ்சில் பிரியாணி. சாப்பிட்டு விட்டுத் தூங்கினால் சூரியன் மறைந்ததற்கு அப்புறம்தான் விழிப்பேன். அதனால் மாலை நான்கு மணிக்கு தலைமேல் இடி விழுந்தால் கூடத் தெரியாது.

      நீக்கு
  19. //யாராவது ஒருவர் ஏதாவது ஒரு வாக்குவாதத்தில் சிக்கித் தோற்றுப்போனால் அவர் அன்று மற்றவர்களுக்கு அந்த ஒட்டலில் இட்லி சாம்பார் வாங்கித்தரவேண்டும்.//

    யாருக்கு செலவோ என்னவோ அந்த ஹோட்டல்காரனுக்கு வரும்படிதான். இப்படி வாராவாரம் ரெகுலராக செல்வதால் ஏதாவது ஸ்பெஷல் கவனிப்பு இருந்திருக்குமே.

    காயத்ரி மணாளன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்களைப் பார்த்தாலே சர்வர்களுக்கு டெர்ரர்தான். காரணம் நாங்கள் இட்லி சாப்பிட்டு விட்டு வந்ததிற்குப் பிறகு மற்றவர்களுக்காக தனியாக இன்னொரு முறை சாம்பார் வைக்கவேண்டுமே?

      நீக்கு
  20. //மாலையில் என்ன வேலை என்றால் பசங்களுடைய ரிக்கார்டு நோட்டுகளைத் திருத்துவதுதான். இதை அப்படியே அரட்டை அடித்துக்கொண்டே செய்யும்போது ...//

    பாவம் பசங்க. அரட்டை அடித்துக்கொண்டே ரிகார்ட் நோட்டுகளை திருத்தும்போது என்ன மாதிரி கவனம் இருந்திருக்குமோ? எல்லாருக்கும் ஆவரேஜாக (குத்துமதிப்பாக) ஒரு மதிப்பெண் போட்டு விடுவீர்களா? இல்லை சரியான மதிப்பெண்கள்தான் விழுந்திருக்குமா?

    துளசி மைந்தன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா, அதிலெல்லாம் நாங்க பெரிய கில்லாடியாக்கும்? பரீட்சைப் பேப்பரை கையில் தூக்கிப் பார்த்தே மார்க் போடுவோமாக்கும்? சரியாக இருக்கும்.

      நீக்கு
  21. வடை சாப்பிட்ட கதையோடு ஒரு ஹோட்டல் அருமையான உழைப்பினால் உருவான கதையும் சொல்லி உழைப்பே உயர்வு என்று சொல்லிவிட்டீர்கள்! நன்றி!

    பதிலளிநீக்கு
  22. //மாலையில் என்ன வேலை என்றால் பசங்களுடைய ரிக்கார்டு நோட்டுகளைத் திருத்துவதுதான். இதை அப்படியே அரட்டை அடித்துக்கொண்டே செய்யும்போது மாலை 4 மணி ஆனால் வயிற்றுக்குள் ஒரு மணி அடிக்கும். அதாவது அதற்கு ஏதாவது சிறுதீனி வேண்டும் என்று அர்த்தம்.//

    திருத்தப்பட்ட ரிகார்டு நோட்டுகளில் மதிப்பெண் அருகே நீங்கள் எழுதும் கமெண்ட்டுகளில் கீரை வடை பற்றி ஏதும் இருந்திருக்காதல்லவா? உங்களை கேட்டு பிரயோஜனமில்லை. உங்கள் மாணவர்கள் யாரையேனும் கேட்டால் உண்மை வெளியே வந்து விடும்.

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொதுவாக ரிக்கார்டு நோட்டுகளில் பெரிய தவறுகள் இருந்தால் ஒழிய குறிப்புகள் எழுத மாட்டோம். ஏனென்றால் இந்த ரிக்கார்டு நோட்டுகளை வருட முடிவில் நடக்கும் பப்ளிக் எக்சாமில், வெளியிலிருந்து வரும் எக்ஸ்டெர்னல் எக்சாமினர் பார்க்கும்போது, அதிக திருத்தல்கள் இருந்தால் சொல்லிக்கொடுத்த ஆசிரியர் மேல் தப்பபிப்ராயம் வரும். அதனால் ரிக்கார்டு நோட்டுகளில் அதிகம் திருத்த மாட்டோம்.

      நீக்கு
  23. //எப்படியும் இந்த வைபவம் வாரத்திற்கு ஒரு முறையாவது நடக்கும் அதைப் பற்றி தனியாக ஒரு பதிவு எழுதுகிறேன்.//

    ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருப்போம். அத்தனை முறையும் அய்யா அவர்களுக்கு மற்றவர்கள் வாங்கிகொடுப்பதுதானா இல்லை அய்யா என்றாவது வாக்குவாதத்தில் தோற்றதுண்டா?
    (கவனம் - நான் வீட்டில் ஆம்படையாளுடன் வரும் வாக்குவாதத்தை கேட்கவில்லை. உங்கள் நண்பர்களுடன் நடந்த வாக்குவாதங்களைப்பற்றி சொல்லுங்கள்)

    திருச்சி அஞ்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்படையாளுடன் நடக்கும் வாக்குவாதத்தில் யார் ஜெயிப்பார்கள் என்று என்ன கேள்வி. இதற்கெல்லாம் 33% ஒதுக்கீடு பார்த்துக்கொண்டிருக்க முடியுமா என்ன? பெருந்தன்மையுடன் 100% நான் விட்டுக்கொடுத்துவிடுவேன். ஒரு தடவை அவர்கள் ஜெயிப்பார்கள். இன்னொரு முறை நான் தோற்று விடுவேன். இப்படியே மாற்றி மாற்றி நடக்கும். ஆனால் எப்போதும் நான்தான் இட்லி சாம்பார் வாங்கிகொடுக்க வேண்டியிருக்கும். அதில் மாற்றமே இல்லை. அய்யா அவர்களின் அனுபவம் எப்படி?

      சேலம் குரு

      நீக்கு
    2. நண்பர்களுடன்தான் நாம் அட்லீஸ்ட் எப்போதாவது ஜெயிக்கிறோமே என்று நான் எப்போதும் என் வீட்டுக்காரம்மாவுக்கே வெற்றியை விட்டுக்கொடுத்துவிடுவேன். அதுதான் நமது உண்மையான வெற்றி. நாம் சித்து விட்டால் அது உண்மையில் மிகப்பெரிய தோல்வி. ஒரு முறை ஜெயித்து விட்டு நான் பட்ட பாடு இருக்கிரதே. போதுமடா சாமி என்று அதன் பிறகு அவர்களையே ஜெயித்துக்கொள்ளட்டும் என்று நான் பணிந்து போய்விடுவேன்

      துளசி மைந்தன்

      நீக்கு
    3. ஆம்படையாளுடன் வாக்குவாதம் வந்தால் ஒருமுறை கூட நான் ஆம்படையாளை ஜெயிக்க விட்டதே இல்லை. எப்போதுமே நான்தான் ஜெயக்கொடி நாட்டியிருக்கிறேன்.
      (பின்பக்கம் திரும்பி) என்னம்மா நீ சொல்லச்சொன்னது மாதிரி நான் சொல்லிவிட்டேன். சரிதானே.

      காயத்ரி மணாளன்

      நீக்கு
  24. //அதிகம் படிக்காத உள்ளூர் பசங்கள் எல்லாம் மில் வேலைக்குத்தான் போவார்கள். அங்கு வேலை செய்பவர்களுக்கு நல்ல சம்பளம்//

    ஒரு காலத்தில் உழைப்புக்குத்தகுந்த கூலி இருந்தது. இன்று போராட்டங்கள் நடத்தினால்தான் கூலியே எப்ற நிலை அல்லவா நிலவுகிறது. காலங்கள் மாறிவிட்டன.

    திருச்சி தாரு

    பதிலளிநீக்கு
  25. //இவர்களில் ஒருவனைப் பிடித்து கீரைவடை வாங்கவும் இன்னொருவனைப் பிடித்து காப்பி வாங்கவும் அனுப்புவோம்//

    நீங்கள் சொல்லியிருப்பதை பார்த்தால் (ஆறு பேர், ஆளுக்கு நாலு வடை வீதம் 24 வடை, ஆறு காபி) பாவம் வாங்கிக்கொண்டு வரும் அந்த கடைநிலை ஊழியனுக்கு ஒன்றும் கொடுப்பதில்லையா?
    இல்லை பதிவில் சொல்லாமல் விட்டு விட்டீர்களா?

    காயத்ரி மணாளன்

    பதிலளிநீக்கு
  26. //"லேப் பாய்" என்று ஒரு கடைநிலை ஊழியர்கள் ஐந்தாறு பேர் உண்டு.//

    அய்யா மிகுந்த நன்றி. எனக்கு வந்திருந்த பெருத்த சந்தேகம் இன்று தீர்ந்தது. அந்த ஊழியர்களுக்கு ஏன் கடை நிலை ஒழ்சியர்கள் என்று பெயர் வந்தது என்று புரியாமல் இருந்தது. உங்களை மாதிரி ஆசிரியர்களுக்கு வடையும் காப்பியும் வாங்கி வர அடிக்கடி கடைக்கு சென்று வருவதால்தான் கடை நிலை ஊழியர்கள் என்ற பெயர் வந்ததென்று இன்றுதான் அறிந்து கொண்டேன் அய்யா

    துளசி மைந்தன்

    பதிலளிநீக்கு
  27. //நாங்கள் 18 வருடம் படித்து எம்எஸ்சி பட்டம் வாங்கி பெரிய அரசாங்க உத்தியோகம் என்ற பெயரில் வேலை பார்க்க சம்பளம் 150 ரூபாய். ஸ்கூலுக்கே போகாமல் குண்டு விளையாடிக்கொண்டிருந்து விட்டு மில் வேலைக்குப் போகிறவர்களுக்கும் அதே 150 ரூபாய் சம்பளம்.//

    ஒன்றுமே படிக்காமல் அரசியலில் குதித்து விட்டால் உங்களை மாதிரி நூறு பேருக்கும் மில்வேலையாட்கள் மாதிரி நூறு பேருக்கும் சம்பளம் கொடுக்கும் அளவு சொத்து சேர்த்து விடலாம்.

    ஹா ஹா

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
  28. //நாங்கள் 18 வருடம் படித்து எம்எஸ்சி பட்டம் வாங்கி பெரிய அரசாங்க உத்தியோகம் என்ற பெயரில் வேலை பார்க்க சம்பளம் 150 ரூபாய். ஸ்கூலுக்கே போகாமல் குண்டு விளையாடிக்கொண்டிருந்து விட்டு மில் வேலைக்குப் போகிறவர்களுக்கும் அதே 150 ரூபாய் சம்பளம்//

    ஒன்று மூளை உபயோகித்து செய்யும் வேலை.
    இன்னொன்று உடலை வருத்தி செய்யும் வேலை.
    உங்களுக்கு "பென்சன்" உண்டு. அவர்களுக்கோ "பெண்"ணும் "சன்"னும் தான் உண்டு. அவர்களும் காப்பாற்றுவார்களா என்று தெரியாது. ஆனால் உங்கள் பென்சன் உங்களை காப்பாற்றும்.

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். அந்தக் காலத்தில் மில் வேலைக்குப் போய் இப்போது ரிடையர் ஆகி இருப்பவர்களின் நிலையைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. சும்மாவா சொன்னார்கள் "காலணா உத்தியோகமானாலும் கவர்மென்ட் உத்தியோகமா இருக்கவேண்டும்" என்று.

      நீக்கு
  29. //அது தவிர தீபாவளிக்கு 6 மாத சம்பளம் போனஸ் தருவார்கள்.//

    அது அவர்கள் மில் முதலாளிகளுக்கு லாபமாக சம்பாதித்து கொடுத்ததில் ஒரு சிறிய பங்குதானே. அதனால்தான் பிழைத்துப்போகட்டும் விட்டுவிடுங்கள் அய்யா.

    திருச்சி அஞ்சு

    பதிலளிநீக்கு
  30. //அவர்கள் போட்ட கீரை வடை கோயமுத்தூர் ஜில்லா முழுவதும் பெயர் பெற்றது.//

    இந்த காலத்தில் என்றால் நாலு பேரும் பிரிந்து போய் நாலு கடை ஆரம்பித்து ஒன்றுமே கடைசியில் சரியில்லாமல் போயிருக்கும் ஒற்றுமையாக இருந்து வியாபாரத்தை நடத்தியதால்தான் இன்று
    அன்னபூர்ணாவாக ஜொலித்துக்கொண்டிருக்கிறது.

    திருச்சி தாரு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த நால்வர் வேறு யாருமல்ல. சொந்த சகோதரர்கள்தான்.
      மூத்தவர் திரு தாமோதரன் நாயுடு தனது சகோதரர்களுடன் (திரு ரங்கசாமி நாயுடு, ராமசாமி நாயுடு, திரு லக்ஷ்மணன் நாயுடு) சிறப்பாக நடத்தி வந்தார்.

      1960களின் ஆரம்பத்தில் திரு தாமோதரன் நாயுடு அவர்களால் கோவை RS புரம் திரை அரங்கில் ஒரு சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்டது. பிறகு காபி, டீ, மற்றும் டிபன் வகையறாக்களை விற்கும் ஒரு காபி கடையாக அது மாற்றப்பட்டது.

      1968இல் ஸ்ரீ அன்னபூர்ணா ஹோட்டல் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பிறகு விரிவாக்கம்தான். No going back till now. லாட்ஜ் 1983இல்தான் ஆரம்பமானது.

      இன்றைய அளவில் சமையல் உபகரணங்கள் உற்பத்தி செய்வதும், உடனடி readymade உணவு வகை தயாரிப்பும் அன்னபூர்ணா வியாபாரத்தில் அடங்கும்
      மூத்தவர் திரு தாமோதரன் நாயுடு அவர்கள் நவம்பர் 2006இல் heart attack காரணமாக காலமானார்.
      அவருக்கு அவினாசிலிங்கம் யுனிவர்சிட்டி கௌரவ டாக்டர் பட்டம் அளித்துள்ளது.

      சேலம் குரு

      நீக்கு
  31. //அவர்களின் முழு கவனமும் விற்பனை செய்யும் உணவுப் பொருட்கள் தரமாகவும் ருசியாகவும் விலை அதிகமில்லாமலும் இருக்கவேண்டுமென்பதில்தான் இருந்தது. இப்படி ஒரு ஓட்டல் நடந்தால் அது வளர்வதற்குத் தடை ஏது?//

    இன்று இவை மட்டும் போதாது. ஒரு அரசியல்வாதியின் பின்புலம் வேண்டும். போலிஸ் அதிகாரிகளை கவனித்துக்கொள்ள வேண்டும். ஜனங்களை ஈர்க்க விளம்பரங்கள் வேண்டும். சொகுசாக அமர்ந்து சாப்பிட ஏசி வேண்டும். வயிற்றுக்கு சரியோ இல்லையோ வாய்க்கு ருசி வேண்டும். சாப்பிடும் பண்டங்கள் கண்ணுக்கும் இதமாக இருக்க வேண்டும். இன்னமும் என்னென்னவோ வேண்டும். இவையெல்லாம் சேர்ந்துதான் ஹோட்டல் சாப்பாடு விலையை மங்கல்யானில் ஏற்றி எங்கோ அனுப்பி விட்டன.

    காயத்ரி மணாளன்

    பதிலளிநீக்கு
  32. அருமையான மலரும் நினைவுகள் கூடவே அன்னபூர்ணா ஹோட்டல் பற்றிய தொடக்க கால வரலாறு, என்று பிரமாதப்படுத்தி விட்டீர்கள் அய்யா!
    த ம 6

    பதிலளிநீக்கு
  33. ஐயா!
    பின்னூட்டங்களும் நிறைய சேதி சொல்லுகின்றன.
    80 களில் யாழ்பாணத்திலிருந்து 300கிமீ தூரத்திலுள்ள
    பதுளையில் வேலைசெய்த போது, ஊருக்கு (யாழ்) பயணம் செய்பவர், புகைவண்டி நிலையம் வழியனுப்ப வரும் நண்பர்களுக்கு , உணவகச் சாப்பாட்டுக்குப் பணம் கொடுத்து விட்டுச் செல்லும் பழக்கம் , நண்பர்கள் மத்தியில் இருந்தது.
    எங்கும் இப்படியான நட்பு இருந்துள்ளது, மீள நினைக்க மகிழ்வாக உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல நடைமுறைதான். இன்றும் நீலகிரியில் வசிக்கும் படகர் இன மக்கள் தங்கள் உறவினர் யாராவது மருத்துவமனையில் வைத்தியம் பார்த்துக் கொண்டிருந்தால், போய் பார்த்து விட்டு வரும்போது அவரவர் சக்திக்கு ஏற்ப பணத்தை தலையணைக்கடியில் வைத்துவிட்டு வரும் பழக்கம் உள்ளது. அந்தப் பணம் அந்த சமயத்தில் அவர்களுக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும்.

      நீக்கு
  34. In 1920, the college was affiliated to the Madras University and a new course of study leading to a degree in Agriculture, B.Sc. (Ag.) was introduced and the first batch came out in 1923. To start with, only eight students were admitted for the three year degree course, the qualification for admission being a pass in the Intermediate examination with 11 years of study in school and two years of Intermediate before entering the Agricultural College, thus bringing the total duration of study for an Agricultural graduate to 16 years.... A four year integrated B.Sc. (Ag.) course was started when the one year Pre-University course came into existence in 1960 thus maintaining the total duration at 16 years for first Graduation in Agriculture.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களாவது அல்லது உங்கள் உறவினர் யாராவது விவசாயக் கல்லூரியில் படித்திருக்கவேண்டும். இல்லாவிடில் இவ்வளவு துல்லியமாக விவசாயக் கல்லூரியின் சரித்திரம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

      நான் இவ்வாறுதான் 11 + 2 + 3 வருடங்கள் படித்து 1956 ல் இளங்கலை வகுப்பு முடித்தேன். பிறகு முதுகலை வகுப்புகள் 1958ல் ஆரம்பிக்கப்பட்டன. நான் 1959ல் முதுகலை வகுப்பில் சேர்ந்து 1961ல் முடித்தேன்.

      அதற்குள் பாடத்திட்டங்களில் பல மாற்றங்கள் வந்து விட்டன. ஆனாலும் இளங்கலை வகுப்பு முடிக்க ஆகும் வருடங்களை மாற்றாமல்தான் இன்று வரை வைத்திருக்கிறார்கள்.

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  35. இங்கும் கீரைவடை கிடைக்கிறது இப்போது. அது அப்போதே தொடங்கியதா?

    பதிலளிநீக்கு
  36. பழனி. கந்தசாமி சார்.

    நீங்கள் கூறியது சரி. என் தந்தை தான் பி.எஸ்.சி விவசாயம் (1957-60) படித்தவர். (இப்போது அவர் இல்லை). நானல்ல. அவர் பி.எஸ்.சி விவசாயம் மூன்றாண்டு படித்ததாக சொன்னதும் TNAU அப்போது "மெட்ராஸ் விவசாய கல்லூரி" என்ற விவரமும் நினைவில் உள்ளது.

    நாம் இதைப்பற்றி முன்னரே பேசியுள்ளோம். .. ஆம்... நான் எனது உறவினருடன் (அவர் TNAUல் Ph.D படித்தவர், Sugarcane Breeding Inst.ல் வேலை பார்க்கிறார்) உங்கள் இல்லத்தில் ஒரு காபி குடித்துக்கொண்டே பேசி உள்ளோம். (2013, டிசம்பர்). நீங்கள் ஒரு புகைப்படம் கூட எடுத்தீர்கள். ....

    மறதி எல்லாருக்கும் சகஜமானது தான். .. உங்கள் எழுத்து எங்களுக்கு “Boost” மாதிரி. தொடருட்டும் அந்தப் பணி. ...

    அன்புடன்,

    (கோவையை சேர்ந்த, ஆம்ஸ்டர்டாமில் வசிக்கும்)
    சங்கர நாராயணன். தி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள திரு. சங்கரநாராயணன் அவர்களுக்கு,
      நீங்களும் உங்கள் உறவினரும் என் வீட்டுக்கு வந்து காப்பி சாப்பிட்டு விட்டுப் போனது நன்றாக நினைவில் உள்ளது. ஆனால் சங்கரநாராயணன்தான் tshankar89 என்று என்னால் தொடர்பு படுத்திப் பார்க்க இயலவில்லை.
      நலம்தானே?
      அன்புள்ள,
      ப.கந்தசாமி.

      நீக்கு
  37. //நான் 1960 களில் விவசாயக் கல்லூரியில் உதவி ஆசிரியனாகப் பணி புரிந்த காலம்.//

    அறுபதுகளில் என்றால், அதவும் உதவி ஆசிரியராக என்றால். நீங்கள்தான் ஆஸ்ப்ரோ. அந்த காலத்தில் தலைவலிக்கு ஆஸ்ப்ரோ மாத்திரைதான் உபயோகிப்பார்கள். எனவே Asst professor களை "வகுப்பு எடுக்கிறேன் பேர்வழி என்ற பெயரில் தலை வலி கொடுப்பவர்கள்" என்று மாணவர்கள் அழைப்பார்கள். நீங்களும் ஆஸ்ப்ரோ வாக இருந்திருக்கிறீர்கள். ஆனால் இவ்வளவு நன்றாக பதிவிடுபவர் அன்றும் நகைச்சுவையாகத்தான் வகுப்புகளை நடத்தியிருப்பீர்கள். அதைப்பற்றி ஒரு பதிவிடுங்களேன்.

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் இன்னொரு நண்பருக்கும் மாணவர்கள் வைத்த பெயர் - எனக்கு முன்பல் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். அதனால் என் பெயர் - "பல்லவராயன்". என் நண்பர் பெயர் கோதண்டராமன், அதனால் அவருக்குப் பெயர் "தாண்டவராயன்".

      இந்தப் பெயர்களெல்லாம் கல்கியின் பொன்னியின் செல்வன் கதையிலிருந்து எடுக்கப்பட்டவை.

      நீக்கு
  38. வணக்கம் அய்யா!
    என்னது போகிற போக்கை பார்த்தால் "பெயரில்லா" வுக்கு பதில சொல்லியே
    பெயர் வாங்கி விடுவீர்கள் போலிருக்கிறதே?
    கீரை வடை வாங்கி பார்சல் அனுப்பினால் இந்த அன்புத் தொல்லை இருக்காது அல்லவா?
    த ம + 1
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  39. வணக்கம் அய்யா!
    என்னது போகிற போக்கை பார்த்தால் "பெயரில்லா" வுக்கு பதில சொல்லியே
    பெயர் வாங்கி விடுவீர்கள் போலிருக்கிறதே?
    கீரை வடை வாங்கி பார்சல் அனுப்பினால் இந்த அன்புத் தொல்லை இருக்காது அல்லவா?
    த ம + 1
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் பெயரில்லாப் பதிவர்களை நான் முன்பு நிராகரித்து வந்தேன். ஆனால் யோசித்துப் பார்த்ததில் பதிவுலகில் பலரும் ஏதோ ஒரு புனைபெயரில்தான் உலாவுகிறார்கள். அந்தப்பெயர்களை நாம் ஏற்றுக் கொள்கிறோம். "அனாமதேயம்" அல்லது "பெயரில்லா" என்பதும் ஒரு புனை பெயர்தானே. அப்படியானால் அவர்களைத் தவிர்க்க வேண்டிய அவசியம் என்ன என்ற ஞானோதயம் ஏற்பட்டது. அதனால் எந்தப் பின்னூட்டமும் (ஆபாசமானவைகளைத் தவிர்த்து) யார் போட்டாலும் வெளியிடுவது என்ற கொள்கையைக் கடைப் பிடிக்கிறேன். பதில் போட வேண்டிய அவசியம் இருந்தால் போடுகிறேன்.

      நீக்கு
  40. வடை வியாபாரம் நல்லா போகுது போகட்டும்.
    ஐயா உங்களுக்கு நான் அன்று சப்போர்ட் செய்து கருத்துரை இட்டதாலோ என்னவோ பெயரில்லாத அந்தப்பார்ட்டிதான் எனக்கும் கருத்துரை போட்டு இருக்குனு நினைக்கிறேன் எனக்கு ஒன்றுமே புரியவில்லை இருப்பினும் பதில் கொடுத்துள்ளேன் பாருங்கள்.
    தமிழ் மணம் 9

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்த்தேன், படித்தேன், புரிந்து கொள்ள முயற்சித்தேன், முடிவில்லை. இது யாரோ இலங்கைத் தமிழராக இருக்கலாம் என்று நினைக்கிறேன். என்ன சொல்ல நினைக்கிறார் என்று புரிய வில்லை.

      "போற்றுவார் போற்றட்டும், புழுதி வாரித் தூற்றுவார் தூற்றட்டும், என் கடன் பதிவு எழுதிக் கிடப்பதே" என்ற மூதுரையை நான் கடைப்பிடிப்பது போலவே நீங்களும் கடைப்பிடிப்பது கண்டு மகிழ்வுற்றேன்.

      அந்த பின்னூட்டத்தையும் நீங்கள் கொடுத்த பதிலையும் காப்பி பண்ணி வைத்திருக்கிறேன். சாவகாசமாகப் படித்து புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

      அந்த பின்னூட்டம் ஒரு தனி பதிவிற்கானது. பதிவாகப் போட்டால் யாராவது அதற்கு விளக்கம் கொடுக்கக் கூடும். உங்கள் முடிவிற்கு விட்டு விடுகிறேன். செய்திக்கு நன்றி.

      வடை நல்லா விக்குதுங்க. பாருங்க இண்ணைக்கு என் தமிழ்மணம் ரேங்க் 10 க்கு வந்து விட்டது. இந்த அளவு போதும்னு நினைக்கிறேன். இதுக்கு மேல ஓட முடியவில்லை. கொஞ்சம் ஸ்பீடைக் குறைக்கலாமா என்று யோசித்துக் கொண்டு இருக்கிறேன்.

      நீக்கு
    2. எமது கருத்துரைக்கு மதிப்பளித்து வந்தமைக்கு நன்றி ஐயா தங்களது யோசனையும் எனக்கு தோன்றியது அதையே தாங்களும் சொன்னது சந்தோஷம் ஆனால் இது கண்டிப்பாக எனக்கு இல்லை காரணம் எனது பதிவுகளுக்கு தொடர்பில்லாத கருத்துரை.
      தமிழ் மணம் 10 ஆனதற்க்கு வாழ்த்துகள் அந்தப்பத்தில் 0 வரை எடுக்கும்வரை ஓடுங்கள் அந்தநிலையை பிடிக்க எமது அட்வான்ஸ் வாழ்த்துகள்.

      ஜூன் மாதம் கோவை எனது சகோதரர் மகளுக்கு திருமணம் நான் வருவேன் தங்களை சந்திக்கிறேன். நன்றி.

      நீக்கு
  41. //ஆனாலும் இது அத்தியாவசியச் செலவு என்பதால் முறை வைத்துக் கொண்டு (ஆளுக்கு ஒரு நாள்- வாரத்தில் ஆறு நாள்) செய்தோம். //

    :) ரசித்தேன். சிரித்தேன்.

    கடும் உழைப்பும், நேர்மையும், தொழில் ஆர்வமும் இருந்தால் இதுபோல வாழ்க்கையில் முன்னேறி வாழலாம் என்பதை இந்தத்தங்களின் பதிவு நன்கு விளக்குகிறது. மிகவும் சுவையான ருசியான பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.

    பதிலளிநீக்கு