முதலில் ஒரு சந்தேகம். "900 ஆவது" என்ற சொல், அதாவது எண்ணையும் எழுத்தையும் இணைத்து உருவாக்கிய சொல், இலக்கண விதிகளின்படி சரியா? "தொள்ளாயிரமாவது" என்று எழுதியிருக்கவேண்டுமோ? சரி, இதை இலக்கண நிபுணர்களின் விவாதத்திற்கு விட்டு விட்டு நம்ம சமாச்சாரத்திற்கு வருவோம்.
இதுவரை, இந்தப் பதிவோடு சேர்த்து தொள்ளாயிரம் (எதுக்கு வம்பு, இலக்கணப்பிரகாரமே எழுதி விடுவோம்) பதிவுகள் எழுதியாகி விட்டது. வயதும் 80 ஆகி விட்டது. மூளையின் உயிரணுக்கள் குறைந்து கொண்டே போகின்றன. ஒரு வித சோம்பல் மனதையும் உடலையும் பீடிக்கிறது. பதிவு எழுத ஆர்வம் குறைகிறது.
இந்தப் புலம்பல்களை பதிவில் எழுதி என்ன ஆகப்போகிறது? பதிவுலக நண்பர்கள் சில ஆறுதல் வார்த்தைகள் கூறலாம். ஒரு நண்பர் (எதிரி நண்பர் என்று சொல்லலாம் என்று கருதுகிறேன்) நீங்கள் பதிவு எழுதாவிட்டால் உலகம் அஸ்தமித்துப் போய்விடுமா என்று கூடக் கேட்டார். இன்னொருவர் முனைவர் பட்டம் வாங்கி என்ன பயன்? பகுத்தறிவு இல்லையே என்கிறார்.
ஆகவே இந்த இரண்டு கருத்துக்களுக்கும் ஒரு தீர்வு காணவேண்டும். பத்து நாளாக நான் பதிவு எழுதவில்லை. உலகம் அஸ்தமித்துப் போன மாதிரி தோணவில்லை. ஆகவே நான் பதிவு எழுதுவதற்கும் உலகம் அஸ்தமிப்பதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை என்று நிரூபணம் ஆகி விட்டது.
ஆனால் சென்னையில் மழை கொட்டோ கொட்டென்று கொட்டி மக்களை மிகவும் வதைத்து விட்டது. நான் பதிவு எழுதாததிற்கும் இதற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என்று ஆராய வேண்டும். என்னமோ "கேயாஸ் தியரி" என்று ஒன்று இருக்கிறதாமே? நம் கமல் கூட தசாவதாரம் படத்தில் இது பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அது பிரகாரம் இந்த நிகழ்வுகளுக்குள் என்ன தொடர்பு என்று ஆராயவேண்டும். யாராவது இந்த ஆராய்ச்சிக்கு மான்யம் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
அடுத்து பகுத்தறிவுக்கும் முனைவர் பட்டத்திற்கும் உள்ள தொடர்புகளைப் பற்றி ஆராயவேண்டும். இது இன்றைய வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்று. இந்த ஆராய்ச்சியை எப்படி செய்வது என்று இந்த துறையில் உள்ள நிபுணர்கள் கருத்துகள் சொன்னால் என்றென்றும் மிகவும் நன்றியுடையவனாக இருப்பேன்.
ஆஹா, எப்படியோ சோம்பிக் கிடந்த நரம்புகளைத் தட்டியெழுப்பி ஒரு பதிவைத் தேத்தியாகி விட்டது. என் பிதற்றல்களைத் தவறாது படித்து வரும் நண்பர்களுக்கு நன்றி. அடுத்த பதிவில் சந்திப்போம்.