வெள்ளி, 13 நவம்பர், 2015

இந்து மத சம்பிரதாயங்களும் சங்கடங்களும்.

                                            Image result for திதி கொடுத்தல்

இந்து மதத்தின் பல முகங்கள் வெளியில் தெரிவதில்லை அல்லது அதைப் பற்றி அதிகமாக யாரும் பேசுவதில்லை என்று வைத்துக்கொள்ளலாம். இந்த மாதிரி பல பழக்கவழக்கங்களைப் பற்றி ஏதாவது இந்து மதப் புத்தகங்கள் இருக்கிறதா என்றும் தெரியவில்லை. எல்லாம் செவி வழி வந்த சம்பிரதாயங்கள்தான்.

அதில் ஒன்று இறப்பு பற்றியது. மனிதனாகப் பிறந்தவன் இறப்பது திண்ணம். ஆனால் அப்படி இறந்த பிறகு அவனுடைய உறவினர்களுக்கு ஏகப்பட்ட நியதிகள் வந்து விடுகின்றன. குறிப்பாக இறப்புத் தீட்டு என்பது ஒன்று. இறந்த வீட்டிற்குப் போய் வந்தால் தலை முழுகவேண்டும். இறந்த வீட்டுக்காரர்கள் யார் வீட்டிற்கும் போகக்கூடாது. இப்படி பல நடைமுறைக் கட்டுப்பாடுகள் வந்து விடுகின்றன.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்தக் கட்டுப்பாடுகள் இறந்தவரின் பங்காளிகளுக்கும் வந்து விடுகின்றன. அவர்களும் பதினாறு நாட்கள் தீட்டுக் காக்க வேண்டும் அவர்களும் யார் வீட்டிற்கும் போக க்கூடாது. நல்ல, கெட்ட விசேஷங்களுக்குப் போகக்கூடாது. கோயிலுக்குப் போகக்கூடாது. வீட்டில் உள்ள சாமியையும் கும்பிடக்கூடாது. இப்படியெல்லாம் நடைமுறைச் சட்டங்கள் இருக்கின்றன. இவைகளை யார் இயற்றினார்கள், எந்தப் புத்தகங்களில் இவை தொகுக்கப்பட்டிருக்கின்றன என்று யாருக்கும் தெரியாது. ஆனாலும் அவைகளை நாம் கடைப் பிடிக்கிறோம்.

என்ன திடீரென்று இந்த ஆராய்ச்சி என்று யோசிப்பவர்களுக்கு; என் பங்காளியின் மனைவி முந்தாநாள் ஹார்ட் அட்டாக்கில் காலமாகி விட்டார்கள். பங்காளி வீட்டில் எது நடந்தாலும் அனைத்து பங்காளிகளும் கலந்து கொண்டுதான் ஆகவேண்டும். நானும் போய்வந்தேன். அனைத்துப் பங்காளிகளும் நடைமுறைப்பிரகாரம் 16 நாள் தீட்டு அனுசரிக்கவேண்டும்.

இதற்கு நடுவில் என் சதாபிஷேகம் இன்னும் நான்கு நாளில் கொண்டாட ஏற்பாடுகள் செய்திருந்தேன். ஆனால் இந்த சம்பவம் நடந்த பிறகு தீட்டு வந்துவிட்டதே. என்ன செய்யலாம் என்று காலகாலேஸ்வரர் கோவில் ஐயரைப் போய் விசாரித்தேன். (அங்குதான் என் சதாபிஷேகத்தை நடத்தத் திட்டமிட்டிருந்தேன்). கோயிலுக்குள் நான் போகக் கூடாதல்லவா?அதனால் என் மச்சினன் ஒருவனைக் கூடக் கூட்டிக்கொண்டுபோயிருந்தேன்.

அந்த ஐயர் திட்டவட்டமாக 16ம் நாள் காரியம் முடியாமல் எந்தக் காரியமும் செய்யக் கூடாது என்று சொல்லி விட்டார். பிறகு என்ன செய்ய முடியும்? அடுத்த மாதம் என் ஜன்ம நட்சத்திரம் வரும் வரையில் காத்துக்கொண்டிருக்க வேண்டியதுதான். ஒருவனின் வாழ்வில் விதி எப்படி விளையாடுகிறது பாருங்கள்.

32 கருத்துகள்:

  1. அடடா...கண்மூடித்தனமாக பின்பற்ரும் நம்பிக்கைகளில் இதுவும் ஒன்று..முன்பெல்லாம் ஒரே ஊரில் வசிப்பார்கள்..ஒரே தெருவில் கூட ...அப்போது அவர்களை விட்டு கொண்டாடினால் சங்கடம் என்பதால் இம்முறை வந்திருக்கும் ..அதை இப்போதும் தொடர வேண்டுமா? என்பதில் உள்ளது பகுத்தறிவு....வருத்தம் தான்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் ஒரு தனி மனிதனல்லவே. நான் என் சமூகத்தின் ஒரு அங்கமே. என் சமூகத்தினரின் அங்கீகாரம் பல காரணங்களினால் எனக்கு அவசியமாகிறது. நான் ஒரு விசேஷத்திற்குப் போனால் என் சமூகத்தினர் என்னை அவர்களுள் ஒருவனாகப் பாவிக்கவேண்டும். இல்லாவிட்டால் நான் தனிமைப் படுத்தப்பட்டவனாவேன்.

      நான் அமெரிக்காவில் இருந்தால் இந்த சட்டதிட்டங்களை நான் கடைப்பிடிக்க வேண்டியதில்லை. இல்லை, நான் எங்கோ கண் காணாத ஊரில் இருந்தாலும் இவைகளைக் கண்டு கொள்ள வேண்டியதில்லை. ஆனால் நான் என் சமூகத்தினரின் மத்தியில் வாழ்கிறேன். அவர்களின் ஒப்புதல் இல்லாத காரியங்களை நான் செய்யமுடியாது. அது பகுத்தறிவிற்கு எள்ளளவு பொருத்தம் இல்லாவிட்டால் கூட நான் அவைகளைப் பின்பற்றியே ஆகவேண்டும். இதுதான் நிதரிசனம்.

      நீக்கு
  2. நட்சத்திரங்களுக்காக காத்திருங்கள்.....ஆனால் நாங்கள் முன்கூட்டியே சொல்லிவிடுகிறோம்.. வாழ்த்துக்கள்...கவலைப்படாதீர்கள் உங்கள் நூற்றாண்டு விழாவில் ஒரு பிரச்சனையும் வாராது....அப்போது நாங்கள் நேரில் வந்து உங்களை வாழ்த்துவோம்..

    பதிலளிநீக்கு
  3. மார்க்கண்டேயனுக்கு என்றும் 16. உங்களுக்கு என்றும் 80.
    ஐயோ பாவம்! 15ஆம் தேதியைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கும் பதிவர் வாசகர் நண்பர்களுக்கு புதிய தேதி அறிவிக்கவும்.

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
  4. நிர்வாண ஊரில் கோவணம் கட்டியவன் காட்டுமிராண்டி என்று சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
  5. தங்களின் கருத்து நியாயமானதே என்ன செய்வது ஐயா ஊரோடு கூடி வாழ் என்று சொல்வார்கள் அதுதான் நிலை
    தமிழ் மணம்3

    பதிலளிநீக்கு

  6. சில சமயம்,ஏன் பல சமயங்களில் நாம் சம்பிராதாயத்திற்காக அனுசரித்து போக வேண்டியுள்ளது. எனவே காத்திருப்பதில் தவறில்லை.

    பதிலளிநீக்கு
  7. இப்படியே சொல்லிக்கொண்டு போனால் பூனைக்கு யார்தான் மணி கட்டுவது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் கேட்கும் கேள்வி பகுத்தறிவிற்கு உகந்ததுதான். ஈவேரா கடவுள் மறுப்பு இயக்கம் ஆரம்பித்து நடத்தினார். எத்தனை மக்கள் மாறியிருக்கிறார்கள்? எத்தனை கல்யாணங்கள் ராகு காலத்தில் நடக்கின்றன? கடந்த 30 ஆண்டுகளில் பதிதாக உருவாக்கப்பட்ட கோவில்கள் எத்தனை?

      சம்பிரதாய மாற்றங்கள் அத்தனை எளிதாக நடப்பதில்லை.

      நீக்கு
  8. //வருகிற நவம்பர் 15 ம் தேதி காலை எட்டரை மணிக்கு கோயமுத்தூர் சத்தி ரோட்டில் பாரதி நகரில் இருக்கும் அன்னபூர்ணா ஹோட்டலுக்கு வந்து விடுங்கள். அருமையான விருந்து காத்திருக்கிறது.// என்று ’மதுரைத்தமிழன்’ அவர்களுக்கு தாங்கள் அழைப்பு விடுத்துள்ளீர்கள். அன்று அவர் வந்து அங்கு நிற்பாரோ என்ற கவலை எனக்கு அதிகமாக உள்ளது.

    -=-=-=-

    என்ன செய்ய? எல்லாம் நன்மைக்கே என எடுத்துக்கொள்ளுங்கள்.

    மேலும் இந்த சதாபிஷேகம் என்ற 80ம் வயது பூர்த்தியாகும் விழாவினைப்பற்றி, இதோ இந்த என் பதிவின் இறுதியில் http://gopu1949.blogspot.in/2013/08/blog-post_15.html நான் கேள்விப்பட்டுள்ள பல விஷயங்களை விரிவாக எடுத்துச்சொல்லியுள்ளேன்.

    அவைகளும் தங்களுக்கு தற்சமயம் மன ஆறுதலை நிச்சயமாகத் தரலாம்.

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த அன்னபூர்ணா ஓட்டலின் வாசலில் ஒரு ஆளைப்போட்டு மதுரைத் தமிழனுக்காக காத்திருக்கச் செய்கிறேன் ?

      நீக்கு
  9. ஐயரிடம் ஆலோசனைக் கேட்டால் இப்படித்தான் சொல்வார் ,கட்டிய மனைவியிடம் கேளுங்கள் .அவர் சரியென்றால் சதாபிஷேகத்தை ஜாம் ஜாம்னு நடத்தி விடலாம்,காசு கொடுத்தால் வராத அய்யரும் அய்யரும் வருவார் ,சொந்த பந்தமும் வரும் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமக்குன்னு ஒரு மனச்சாட்சி இருக்கு இல்லையா? இந்த தீட்டைப் பற்றி சொல்லாமலேயே இருந்திருந்தால் அய்யர் இந்த சடங்கை ஜாம் ஜாம் என்று நடத்தி வைத்திருப்பார். இந்தச் சடங்கு நடத்துவதே ஒரு மனச்சாந்திக்குத்தான். அதை முறை தவறிச் செய்தால் என்ன மனச்சாந்தி வரப்போகிறது? அப்படி எந்த வரைமுறை இல்லாமல் செய்யலாம் என்றால் இந்தச் சடங்கே தேவையில்லையே. எல்லோரும் இந்த சதாபிஷேக சடங்கைச் செய்கிறார்களா என்ன? நானும் அப்படியே இருந்திருக்கலாமே? ஒரு காரியத்தைச் செய்வது என்றால் அந்தக் காரியத்துக்குரிய வரைமுறைகளை அனுசரிப்பதே நல்லது.

      நீக்கு
  10. சில விஷயங்களில் ஊரோடு ஒத்துப்போவதுதான் சிறப்பு! தீட்டு பற்றிய பல்வேறு புத்தகங்கள் வந்திருக்கின்றன. கூகூளில் தேடிப்பார்க்கவும்.

    பதிலளிநீக்கு
  11. நம் மனதுக்கு ஒவ்வாத காரியத்தைச் செய்ய முடியாதுதான். எல்லாம் நன்மைக்கே.

    பதிலளிநீக்கு
  12. சில விஷயங்களில் நாம் பகுத்தறிவு, அது, இது என்று பேசினாலும், உறவினர்களுக்காக சிலவற்றை செய்து ஆக வேண்டி உள்ளது. தங்களது 80 – ஆம் கல்யாண வைபவத்தை (சதாபிஷேகத்தை) தள்ளி வைத்தது சரிதான். நாம் மீறி நடத்தினாலும் பங்காளிகள் கலந்து கொள்ள மாட்டார்கள். நமக்கும் மகிழ்ச்சி இருக்காது. இதில் என்ன பெருமை இருக்கிறது. இன்னொருநாள் ‘ஜாம் ஜாம்’ என்று நடத்துங்கள். முனைவருக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. தங்கள் வருத்தம் நியாமானதே...
    இருப்பினும் ஊரோடு சேர்ந்து வாழ்ன்னு சொல்லியிருக்காங்களே...
    அதன்படி அடுத்த மாதத்திற்காக காத்திருங்கள்...
    சிறப்பாக நடக்கும் ஐயா...

    பதிலளிநீக்கு
  14. இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி ஏமாளி ஆக்கப்பட்டவர்கள் நாம். அது என்ன தீட்டு? குளித்தால் போய்விடுமா? மயிறு நாசுவனிடம் போனால் குலுக்கனும். இது தீண்டாமை. beauty parlor போய் மயிறு வெட்டி சகஜம் எல்லாம் செய்தால் குளிக்க வேண்டாம்? சென்னையிலே உயர்சாதி பெண்களளே beauty parlor வேலை செய்வதாலோ? என்னவோ?

    மூட நம்பிக்கையில் இருந்து வெளியேறாமல் இருக்க அதற்கு ஒரு அறிவியல் விளக்கம்.
    ஒரு இடுகை எழுதும் அளவிற்கு பின்னூட்டங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் அமெரிக்காவில் இருந்திருந்தால் ஒரு புனைபெயருக்குப் பின்னால் இருந்துகொண்டு இதைவிடத் தீவிரமாக எழுதியிருப்பேன். அதற்கு வக்கில்லாமல் போனதால் இந்தச் சாக்கடையில் உழன்று கொண்டிருக்கிறேன்.

      நீக்கு
    2. நீங்கள் தீவீரமாக எழுதியிருப்பேன் என்று சொல்வதை விட உண்மையை எழுதியிருப்பேன் என்று சொல்வதே சரி! அதே மாதிரி, நான் தீவிரமாக எழுதுகிறேன் என்று சொல்வதை விட உண்மையை எழுதுகிறேன் என்று சொல்வதே சரி! மேலும், அதை இங்கு நான் கடை பிடிக்கவும் செய்கிறேன்! சுருங்க சொனால், எனக்காக நான் வாழ்கிறேன்!

      நீக்கு
    3. அமெரிக்காவில் அது முடியும். இந்தியாவில் முடியாது.

      நீக்கு
    4. இந்தியாவில முடியும்-ஏன் நானே செய்திருக்கிறேன் ---30-35, வருடம் முன்பும்--இன்றும் இந்தியா வந்தால்.மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. இடம என்ன செய்யும்? சுற்றம் என்ன செய்யும் மனது இருந்தால். இன்றும் உங்கள் பின்னால் உங்கள் சொந்தம் பங்காளிகள் பேசுவார்கள்----அதை தடுக்க முடியாது--உங்களுக்காக வாழுங்கள்.

      இந்த விவாதத்தை நான் வளர்க்க விரும்பவில்லை--உங்கள் இடுகையில்.
      நானே ஒரு இடுகை போடுகிறேன். தங்களுக்கு பிடிக்காத சில விஷயங்களை விவாதித்தால் 'மனது புண்படுது' என்று சொல்பவர்கள் உண்டு.அதானால், என் தளத்தில் பேசுவோம்.

      இடத்திற்கும் கொள்கைக்கும் சம்பந்தமில்லை. நான் இந்தியாவில் வாழ்ந்த போதும், இப்போது வந்தாலும் இந்த எந்த மூட நம்பிக்கையும் follow செய்தது இல்லை. இன்றும் இந்தியா வந்தால் மயிர் வெட்டிகொள்வது செவ்வாய்க் கிழமை "மட்டும்" தான் --அதுவும் mobile-வீட்டிற்க்கு வந்து மயிறு வெட்டி விடுவார்.

      என் நண்பர்கள், என் மனைவி பழனி முருகனை பார்க்கவேண்டுமானால் செவ்வாய்க் கிழமை ராகுகாலம் தான் சரியானா நேரம்-ஒரு ஈ காக்கை இருக்காது! இல்லாவிட்டால் no palani murugan.

      நீங்கள் சொல்வது சரியல்ல--- இந்தியாவில் இருந்து இங்கு வரும் இளைய தலைமுறை வரும் போதே நல்ல சம்பளத்துடன் வருவதால் இவர்கள் இந்தியவ்ர்களைவிட மோசம்---மூட நம்பிக்கைகளை வளர்பதில். . என்ன ஐயருக்கு டாலரில் அழுது so-called பரிகராகம் செய்து கொள்வார்கள்.

      மூட நம்பிக்கைகளுக்ம் இடத்திற்கும் சம்பந்தம் இல்லை--ஆனால், மனதிற்கு உண்டு!

      நீக்கு
    5. நிர்வாண ஊரில் கோவணம் கட்டியவன் காட்டுமிராண்டி.

      நீக்கு
    6. மிகவும் உண்மை. இமாசலக் காடுகளில் யாரும் இல்லாத பிரதேசங்களில் கோவணம் கூட இல்லாமல் உலாத்தலாம். கோயமுத்தூரில் அப்படி உலாத்தினால் கல்லடி பட்டு சாகவேண்டியதுதான்.

      நீக்கு
  15. தயவு செய்து வேதங்களை யும் உபநிடதக்களையும் பாருங்கள். தங்களது கேள்வி க்கு பதில் உள்ளது.

    பதிலளிநீக்கு
  16. அடுத்த மாதம் கொண்டாடிக் கொள்ளுங்கள் - தவறில்லை. இல்லையெனில் கோவிலில் செய்யாமல் உங்கள் வீட்டில் அதே நாளில் கொண்டாடுங்கள்.....

    இப்போது கொண்டாடினாலும், அடுத்த மாதம் கொண்டாடினாலும்..... எங்கள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  17. இதற்கும் உங்கள் பிறந்த நாளுக்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை. அது உங்கள் தனிப்பட்ட உரிமை. கருந்து நன்றாக இருக்கவே பதிவு செய்யலாம் என்று நினைத்தேன். வெளியீடு செய்யவோ செய்யாமல் இருப்பதோ உங்கள் விருப்பம். உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன்.

    பிறந்த நாள் கொண்டாடுவது பற்றி ......
    விகடனில் திரு ராமகிருஷ்ணன் “ இந்திய வானம் “ என்ற கட்டுரையில் எழுதியது என் மனத்தை தொட்டது . அதில் மிகவும் விவரித்து நிறைய எழுதி உள்ளார். அருமையாக உள்ளது
    அதை சுருக்கமாக எழுதி உள்ளேன் .............
    சிலர் பிறந்த நாளை இப்போது எல்லாம் ஒரு அனாதை காப்பகத்திலோ , பார்வையற்றவர்கள் காப்பகத்திலோ கொண்டாடுவது என்று இருக்கிறார்கள் .
    ஒருவர் தனது பிறந்த நாளை ஒரு பார்வையற்றவர்கள்
    காப்பகத்தில், அங்குள்ளவர்களுடன் கொண்டாடி அவர்களுக்கு பரிசு பொருக்கள் கொடுக்கும் போது , ஒரு பார்வையற்றப் பெண் ஒருவர் பரிசுக்களை வேண்டாம் என்று கூறினாளாம்.
    அதை கேள்விப்பட்ட அந்த நபர் அவளிடம் என்ன கோபம் என்று கேட்க , அதற்க்கு அவள் எரிச்சலான குரலில் ‘ உங்களது பிறந்த நாளை நாங்க ஏன் கொண்டாடவேண்டும் ?
    உங்களிடம் நிறைய பணம் இருக்கு , அதனாலே எங்களை பிச்சைக்காரங்க மாதிரி நடத்தீரிங்க . உங்களுக்கு உண்மையில் மனசு இருந்தா எங்கள் ஒருவருக்கு பிறந்த நாள் கொண்டாடி இருக்கணும்
    .எங்களுக்கும் பிறந்த நாள் வருது, ஆனால் கொண்டாடுவது இல்லை , ஏன்னா எங்ககிட்டே காசு இல்லை. உங்களை போன்றோர் காசு உள்ளவர்கள் இங்கே வந்து அவங்களின் பிறந்த நாளை நாங்க கொண்டாடுகிறோம் .
    யாருக்கு எப்போ பிறந்த நாள் என்று நாங்க வெளியே சொல்லறது கூடக்கிடையாது. எங்களுக்கும் ஆசை இருக்காதா ? கண்ணுதெரியாம பிறந்து விட்டோம் . உங்கள் கிபிட் வேண்டாம் என்று சொன்னார் .
    அந்த மறுப்பு குரல் என்னை உலுக்கிவிட்டது .
    இந்த பெண்ணை போல் எத்தனையோ பேர் வெளியே சொன்னது கிடையாது , அவர்களை யார் சந்தோஷபடுத்துவது ?
    அவர் சொன்னதைக் கேட்டபோது ‘பிறந்த நாள் ‘ என்பது நாம் சந்தோஷம் கொள்ளும் நாளாக மட்டும் ஏன் சுருங்கிப்போனது ? என்ற எண்ணம் தோன்றியது .
    இனி வரும் காலங்களில் பிறந்த நாள் கொண்டாடுவது இல்லை என்று முடிவு செய்துவிட்டேன் .அந்த பணத்தை அந்த காப்பகத்துக்கு கொடுத்துவிட முடிவு செய்து விட்டேன்.
    இது என் பிறந்த நாள் கொண்டாடுவதை விட அதிகமாக சந்தோஷம் தரும் என்பதில் சந்தேகம் இல்லை .
    வயது வளர வளர சந்தோஷம் என்பது பொதுவில் பகிர்ந்து கொள்ளபடவேண்டியது . அதுவும் பெறுவதை விட கொடுப்பதில் இன்பம் அதிகம் என்பதை உணரவேண்டும் அல்லவா ?
    நாம் வாழ்வின் நோக்கம் குறித்து சற்று சிந்திக்க வேண்டும் எது உண்மையான சந்தோஷம் என்பதை அறிந்து கொள்ளவேண்டும்.

    பதிலளிநீக்கு
  18. நமது எண்ணங்கள் கருத்துகள் வேறாக இருந்தாலும், சில சமயம் இது போன்ற நம்பிக்கைகளால், நமக்கு விருப்பம் இல்லாவிட்டாலும், சமூகத்திற்கு வேண்டித் தர்மசங்கடமான நிலைகளுக்குத் தள்ளப்படுகின்றோம்தான். உங்கள் தலைமுறைகளில் இதனைப் பின்பற்றுபவர்கள் அதிகம்தான். எங்கள் தலைமுறையினர்களில் மாறி வருகின்றார்கள். அடுத்த தலைமுறையில் பல குழந்தைகளும் நன்றாகவே மாறிவிட்டார்கள். நிறைய கலப்புத் திருமணங்களும் நடைபெறுவதால் இந்த மாற்றங்கள் உருவாகிவருகின்றன.

    உங்கள் பிறந்தநாள் என்றானாலும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள் உண்டு ஐயா.

    பதிலளிநீக்கு
  19. இந்த நம்பிக்கைகள் வழிவழியாக வருவது. வீம்புக்காக நான் தனி என்று சொல்லலாம். ஆனால் நாம் சமூகத்தின் அங்கம். வழி வழி வருவதை மாற்றுவது எளிதல்ல. நம்மால் முடிந்தது, நாம் சரியல்ல என்று கருதுவதை, நம் குழந்தைகளுக்கு அதைப் பயிற்றுவிக்காமல் இருப்பது. இந்த சமூக நடவடிக்கைகளில், வீட்டு விலக்கு, முடி வெட்டினால் துணியை நனைத்துக் குளித்துவருவது, பிறந்த இறந்த தீட்டு போன்று பல இருக்கின்றன. இதனை மறுத்து விதண்டாவாதம் செய்யலாம். (பழனிக்குப் போய்தான் முருகனை தரிசிக்கணுமா.. வடபழனி முருகனோ அல்லது நம் தெருக்கோயிலில் உள்ள முருகனோ வேறயா என்று எப்படி வேண்டுமானாலும் வாதம் செய்யலாம்). ஊரோடு நியாயமானதற்கும், தொந்தரவு இல்லாததற்கும் ஒத்துப்போவது உத்தமம்.

    பதிலளிநீக்கு
  20. ஆன்மிகம்.blog.spot ல் சனவரி 10 2016 ல் தங்களுக்காண விளக்கம் உள்ளது

    பதிலளிநீக்கு