ஞாயிறு, 27 டிசம்பர், 2015

பதிவுகளும் பின்னூட்டங்களும்.

பதிவுகளுக்கு யார் பின்னூட்டம் போடுகிறார்கள்? உங்களுக்கு தெரிந்தவர்கள், நண்பர்கள், வேண்டியவர்கள், அல்லது நீங்கள் பின்னூட்டம் போட்டிருக்கும் பதிவர்க்ள, இப்படி. இவை தவிர பின்னூட்டங்கள் அதிகமாக எந்தப் பதிவுகளுக்கு வருகிறது என்று என் பதிவுகளை வைத்து சிந்தித்துப் பார்த்தேன்.

ஒரு வித்தியாசமான கருத்து அல்லது பலரும் பல வகையான கருத்துகள் வைத்திருக்கும் ஒரு பிரச்சினை, இப்படிப்பட்ட பதிவுகளுக்கு பின்னூட்டங்கள் நிறைய வருகின்றன. அதில் பல வசை பாடுகின்றனவாக இருக்கும். அப்படிப்பட்ட வசைகளைக் கேட்க விரும்பாதவர்கள் அப்படிப்பட்ட பதிவுகள் எழுத மாட்டார்கள். எந்த விதமான கருத்து வேறுபாடுகளும் வரமுடியாத பதிவுகளாக எழுதுவார்கள்.

எனக்கு அப்படிப்பட்ட உப்புச் சப்பு இல்லாத பதிவுகள் எழுதுவதில் அவ்வளவு விருப்பமில்லை. பதிவுகள் காரசாரமாக இருக்கவேண்டும். பலருடைய சிந்தனைகளைத் தூண்டி விடவேண்டும். மாற்றுக்கருத்துகளும் வசைகளும் வரத்தான் செய்யும். அவைகளை நீங்கள் எப்படிக் கையாளுகிறீர்கள் என்பதில்தான் உங்கள் தனித்துவம் இருக்கிறது.

இந்த ஆள் இப்படித்தான் வம்பில் மாட்டிக்கொள்வார் என்று பலரும் சொல்லலாம். சண்டை வேண்டாம் என்று சொல்லலாம். ஆனால் ஆழமான விவாதம் செய்ய யாரும் முன் வருவதில்லை. இப்போது வரும் பதிவுகளில் பெரும்பாலும் அப்படித்தான் வருகின்றன. நிஜவாழ்க்கையில் இருக்கும் அக்கப்போர்களே போதும், பதிவுகளில் வேறு அக்கப்போர் எதற்கு என்று பல பதிவர்கள் பதிவுலகை விட்டே போய்விட்டார்கள். இருக்கும் கொஞ்ச நஞ்சம் பதிவர்களும் ஆன்மீகப் பதிவுகள், சமையல் குறிப்புகள், கை வைத்தியம், கணினி பராமரிப்பு இப்படி பதிவுகள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

இப்படி நான் எழுதக் காரணம் இன்று ஒருவர் என் பழைய பதிவிற்கு பின்னூட்டம் போட்டிருந்தார். எனக்கு அந்தப் பதிவே மறந்து போயிருந்தது. தலைப்பைப் பார்த்ததும் யாரோ எழுதிய பதிவு போல என்று நினைத்தேன் கடைசியில் பார்த்தால் அது நான் எழுதிய பதிவு.

அதைப்போய் படித்தேன். அந்த பதிவின் தலைப்பு -

காதலர் தினமும், தொடரும் அமில வீச்சுகளும்.

அந்தப் பதிவு மிகவும் காரசாரமாய் இருக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் சென்று படித்துப் பாருங்கள். அதில் பதிவை விட பின்னூட்டங்கள்தான் காரம் கொண்டவை. அது மாதிரி விஷயங்கள் சமீப காலமாகக் கிடைப்பதில்லை.
இனிமேல் பதிவுகள் எழுதினால் அந்த மாதிரிதான் எழுதவேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன்.

10 கருத்துகள்:

  1. எப்போதாவது நேரம் இருக்கும்போது, நல்ல எழுத்துக்களைப் படிக்க முயல்வேன். உங்கள் பழைய இடுகைகளெல்லாம் சில'நாட்களாகப் படித்தேன். இப்போது அதற்கு பின்னூட்டம் எப்படி எழுதுவது? அப்படியும் சில பதிவுகளுக்கு (பலருடையதும்) இப்போது பின்னூட்டம் எழுத கொஞ்சம் தயக்கமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. "பதிவுகளும் பின்னூட்டங்களும்"
    சரியான விளக்கம் சற்று குறைவுதான்
    விரிவான விளக்கம் விஸ்வரூபம் எடுத்தால்?
    பதிவுலகம் பாதாளம் நோக்கி சென்று விடும் நிலை வந்தாலும் வரலாம்!?
    தங்களது பழைய குறிப்பிட்ட பதிவை படித்தேன். கருத்தினை காலந்தாழ்ந்து தருவதா?
    என்று விட்டு விட்டேன் அய்யா!
    நல்ல பதிவை நண்பர்கள் போற்றத்தான் செய்வார்கள் !!!!
    (மனதளவில் மட்டும் மனசாட்சி பதில் சொல்லட்டும்)
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  3. நல்லதொரு சர்ச்சையை கிளப்பி இருக்கின்றீர்கள் இதை நானும் ஆமோதிக்கின்றேன் ஐயா தொடரட்டும் இவ்வகை பதிவுகள்.

    பதிலளிநீக்கு
  4. பதிவர்கள் பின்னூட்டமிடுவதில்லையென்ற உங்கள் கருத்தை வேறு ஒரு பதிவர் தளத்தில் காண நேர்ந்தது. நண்பர்கள்,தெரிந்தவர்கள்,பின்னூட்டமிடுபவர்கள் என்றில்லாமல் கருத்து தலையை சொறிந்தால் நேர் அல்லது எதிர் மறையாக கருத்துக்களை முன் வைக்கிறேன். உங்கள் தலைப்புகள் சிறப்பாக இருக்கின்றன.ஆனால் அந்த கணத்தில் என்ன சொல்வது என்று தெரியாமல் கடந்து போய் விடுவதுண்டு.

    உங்களுக்கும் சேர்ந்தே சொல்ல வேண்டிய பேரிடர் மேலாண்மை என்ற சொலலின் அறிமுகத்திற்கு உங்களுக்கும் சேர்ந்தே பதிவர் தமிழ் இளங்கோவின் பதிவில் குறிப்பிட்டிருதேன்.

    ஒரு பதிவின் வெற்றியே அதற்கான பின்னூட்டங்கள்தான்.நிறைய பேர் முகநூல்,ட்விட்டர் என போய் விட்டார்கள்.பலர் பதிவுகளே எழுதுவதில்லை. எனவே பின்னூட்டங்கள் வெற்றிடமாகவே காணப்படுகின்றன்.

    பதிலளிநீக்கு
  5. வில்லங்கமில்லாத உங்களைப் போன்ற பதிவர்களே பின்னூட்ட பெட்டியை முடி வைத்து விடுகிறீர்கள்.பெரும்பாலான பின்னூட்ட பெட்டிகள் மூடியே கிடக்கின்றன.இதற்கான காரணம் எனக்கு புரியவில்லை.

    பதிலளிநீக்கு
  6. பதிலுக்கு பதில் நாம் விவாதம் செய்ய நேரம் கிடைத்தால் எந்த பதிவையும் நாம் இன்ரஸ்டிங்காக மாற்றி விவாவதிக்கலாம் ஆனால் பலருக்கு நேரப்பற்றாக்குறை அல்லது நாம் மாறுபட்ட கருத்துகளை சொன்னால் நட்புக்களை காயப்படுத்திவிடுவோமோ என்று கருதி அமைதியாக சென்றுவிடுவார்கள் பலருக்கு தாங்கள் கொண்ட நட்பையும் சொல்லவிரும்பும் கருத்துகளையும் ஒன்றாக போட்டு குழப்பி கொள்கிறார்கள்

    பதிலளிநீக்கு
  7. மனதில் படுவதை பகிர்ந்துகொள்ளும்போதும் விவாதிக்கும்போதும் நம் எழுத்துகள் மேம்படுவதோடு நாமும் மேம்படுவதை உணரமுடிகிறது. தாங்கள் சொல்வதையும் மனதில் வைத்துக்கொண்டு எழுதுவது அவசியம். நன்றி.

    பதிலளிநீக்கு
  8. // வசைகளைக் கேட்க விரும்பாதவர்கள் அப்படிப்பட்ட பதிவுகள் எழுத மாட்டார்கள். எந்த விதமான கருத்து வேறுபாடுகளும் வரமுடியாத பதிவுகளாக எழுதுவார்கள்.//

    உண்மைதான் ஐயா. எல்லோராலும் உங்களைப்போல் வருகின்ற பின்னூட்டங்களை சரியாக கையாளமுடியாது என்பதால் அதுபோன்ற கருத்து வேறுபாடுகள் வராத பதிவுகளை எழுதுக்கொண்டு இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  9. ஐயா

    பின்னூட்டங்களுக்காகப் பதிவிடுபவர்கள் இப்போதும் உள்ளனர் (நம்பள்கி). நீங்களும் ஒரு கார சாரமான சமாச்சாரத்தை (பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லோனும்) நறுக் சுருக் என்று முடித்து பின்னூட்டங்களுக்கு அதிகம் விவிரம் இல்லாமல் செய்து விட்டீர்கள். பதிவுலகம் அப்படியே தான் இருக்கிறது. பதிவர்கள் தான் மாறியுள்ளனர். ஆகவே உங்கள் ஆதங்கமான விவாதமோ விதண்டாவாதமோ இனி பதிவைப் பொறுத்து தான் உண்டாக்கப் படும். அதற்க்கேபட்ப உங்கள் பழைய பாணியை பின் பற்றுங்கள்.
    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
  10. பின்னூட்டங்களில் கருத்து வேறுபாடு இருக்க வேண்டும் என்பதில்லை நாம் சொல்ல வருவது சரியாகச் சென்றடைகிறதாஎன்பதே முக்கியம் ஒரு நாணயத்துக்கு இரு பக்கங்கள் இருப்பது போல் நம் கருத்குக்கும் வேறு கருத்ட்பு இருக்கலாம் இல்லை அதையே செப்பனிடச் செய்யலாம் ஆனால் பின்னூட்டங்கள் எழுத ஒரு முனைப்பு தருகிறது என்பதை மறுக்க முடியாது

    பதிலளிநீக்கு