செவ்வாய், 8 டிசம்பர், 2015

கல்யாணம் கட்டுவது எதற்காக?

                                       Image result for கல்யாணம்

இது என்ன கேள்வி? "கல்யாணம் கட்டுவது பிள்ளை பெறுவதற்காக" என்று எகத்தாளமாகப் பதில் சொல்வது சுலபம். ஆனால் கல்யாணத்தின் பின்னால் உள்ள அனைத்து காரணங்களையும் சிந்தித்துப் பார்க்கவேண்டும். பிள்ளை பெறவது என்பது கல்யாணத்தின் ஒரு முக்கிய அம்சம்தான். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் அதற்காக மட்டும்தான் கல்யாணம் செய்து கொள்கிறோமா?

மனித சமூகத்தில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சேர்ந்து வாழ்வது என்பது பல் காலமாக ஒரு தேவையாக இருந்து வந்திருக்கிறது. இனவிருத்தி ஒரு நோக்கமாக இருந்தாலும் இவ்வாறு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் கலாச்சாரத்தில் பல சௌகரியங்கள் இருக்கின்றன. ஒரு நம்பிக்கையான துணை வாழ்வில் ஒவ்வொருவருக்கும் அவசியம். மனைவி இந்த வகையில் ஒரு வாழ்க்கைத் துணைவியாக இருக்கிறாள்.

ஒரு குடும்பம் என்றால் ஒரு ஆண், ஒரு பெண், சில பல குழந்தைகள் சேர்ந்தது என்று அனைவரும் அறிவோம். பொதுவாக ஆண் குடும்பத்தலைவன் என்று அறியப்படுகிறான். குடும்பத்தின் பாதுகாப்பு, அதை வழிநடத்துவது, குடும்பத்திற்கு வேண்டிய பொருளாதாரத்தை ஈட்டுவது ஆகியவை இவனுடைய முக்கியப் பொறுப்புகள்.

அதே சமயம் குடும்பத்தலைவி என்று அறியப்படும் பெண், வீட்டில் இருந்து கொண்டு அந்தக் குடும்பத்தை நிர்வகிக்கிறாள். கணவனுக்கு உதவியாக இருத்தல், பிள்ளைகளைப் பேணுதல், குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் உணவு அளித்தல் ஆகியவை இவள் பொறுப்பாகும்.

கால மாற்றத்தால் பெண்களும் வெளியில் சென்று வேலை பார்க்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இப்படி ஆணும் பெண்ணும் பொருள் ஈட்டும்போது அவர்களின் பொறுப்புகளும் மாற்றத்திற்கு உட்படுகின்றன. குடும்ப வேலைகளை இருவரும் பங்கு போட்டுக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. அமெரிக்கா போன்ற நாடுகளில் வசிக்கும் இந்திய குடிமக்கள் கூட இந்த மாற்றத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

அப்படி வேலைக்குப் போகாமல் வீட்டிலேயே இருக்கும் பெண்களின் கடமைகள் என்னென்ன? அந்தப் பெண் நிறையப் படித்திருக்கலாம். ஆனால் அவள் வேலைக்குப் போய் சம்பாதிக்கவேண்டும் என்ற சூழ்நிலை அந்தக் குடும்பத்தில் இல்லாமல் இருக்கலாம். அப்போது அந்தப்பெண்ணின் நிலை என்ன?

எந்தக் குடும்பமானாலும் அதில் உள்ளவர்கள் சாப்பிட்டே ஆகவேண்டும். தினசரி வெளியில் ஓட்டல்களிலிருந்து உணவு வாங்கிச் சாப்பிடுவது உடம்புக்கு ஒத்துக்கொள்ளாது. அப்படியானால் வீட்டில் உணவு தயாரிப்பது யார்? ஒரு ஆள் வைத்து சமைத்தாலும் அந்த ஆளை சரியாக நிர்வகிப்பது யார்? இது ஒரு குடும்பத்தலைவியின் பொறுப்பாகத்தான் இது நாள் வரை இருந்து வருகிறது.

ஏன் குடும்பத்தலைவி மட்டும் உணவு தயாரிக்கவேண்டும்? குடும்பத் தலைவன் தயாரிக்கக் கூடாதா என்று பெண்ணுரிமைக் கழகத்தினர் கேட்கலாம். ஆனால் ஒரு குடும்பத்தில் ஆண் சம்பாதித்துக் கொண்டுவந்தால் பெண் மற்ற குடும்ப வேலைகளைக் கவனிப்பது என்பது வேலைகளைப் பங்கு போட்டுக் கொள்வதாகும்.

ஆனால் இந்த நடைமுறை வழக்கத்தை இந்தக் காலத்து நவநாகரிக யுவதிகள் கடைப்பிடிப்பதில்லை. அந்தக்காலத்தில் கல்யாணத்திற்காகப் பெண் பார்க்கப் போனால் "பெண்ணுக்கு சமைக்கத் தெரியுமா" என்று சம்பிரதாயமான் கேள்வி கேட்பது உண்டு. பெண்ணின் தாயாரும் "பெண்ணை சமையல் செய்யத் தெரியாமலா வளர்ப்போம்" என்று பதில் சொல்வதுவும் வழக்கமே.

ஆனால் இன்று பெண் பார்க்கச்செல்லும்போது இந்தக் கேள்வியை யாரும் கேட்பதில்லை.  அப்படிக்கேட்டால் பெண்ணின் தாயார் "என்ன உங்கள் வீட்டிற்கு நமையல்காரியைத் தேடுகிறீர்களா" என்று பதில் கேள்வி கேட்பார்கள். பெண்ணோ, "அம்மா அவர்கள் ஒரு நல்ல சமையல்காரியைப் பார்த்து அவர்கள் பையனுக்கு கட்டி வைக்கட்டும். எனக்கு இந்தப் பையன் வேண்டாம்" என்பாள்.

இப்படிக்கேள்வி கேட்காமல் கட்டிக்கொண்டு வரும் பெண் என்ன செய்கிறாள் என்றால் மாமியிர் ஆக்கிப்போடும் சோற்றை மூன்று வேளையும் விழுங்கி விட்டு தன்னுடைய ரூமில் டிவி பார்க்கிறாள். காலப்போக்கில் குழந்தையும் பெற்றுக்கொள்கிறாள். குழந்தையை கொஞ்சகாலம் பெண்ணின் தாயார் பார்த்துக்கொள்கிறாள். பிறகு புருஷன் வீட்டிற்கு வந்த பிறகு அந்த வேலையையும் மாமியாரே பார்க்கும்படியாகி விடுகிறது.

நானும் என் மனைவியிடம் இந்த நிலையைப் பற்றி விவாதித்தேன். இப்போது எந்தப் பொண்ணு சமையல் செய்யப் பழகுது? படிக்கப் போகுதுங்க, படிச்சு முடிச்சதும் கல்யாணம் கட்டிக் கொடுத்துடறாங்க. என் பொண்ணுக்கு சமையலறை எங்கே இருக்குன்னே தெரியாதுங்க அப்படீன்னு பெண்ணப் பெத்தவங்க பெருமையாச் சொல்லிக்கிறாங்க.

எனக்கு வருகின்ற சந்தேக்ம் என்னவென்றால், அப்போ கல்யாணக் கட்டிக்கிடறது எதுக்காக? பிள்ள பெறுவதற்காக மட்டுமா? அப்படியானால் வீட்டை யார் நிர்வகிப்பார்கள்? எதிர்காலத்தில் எல்லோரும் சாப்பாட்டிற்கு ஓட்டலையே நம்பிக்கொண்டிருப்பார்களா? எனக்கு வயசாகி விட்டதினால் இப்படி சந்தேகங்கள் வருகின்றனவா? அல்லது இவை நியாயமான சந்தேகங்கள்தானா?

இதைப் படிக்கும் பதிவர்கள் தங்கள் அபிப்பிராயங்களைக் கூறவேண்டுகிறேன்.

                        

24 கருத்துகள்:

 1. //எனக்கு வருகின்ற சந்தேகம் என்னவென்றால், அப்போ கல்யாணம் கட்டிக்கிடறது எதுக்காக? பிள்ளை பெறுவதற்காக மட்டுமா? அப்படியானால் வீட்டை யார் நிர்வகிப்பார்கள்? எதிர்காலத்தில் எல்லோரும் சாப்பாட்டிற்கு ஓட்டலையே நம்பிக்கொண்டிருப்பார்களா? எனக்கு வயசாகி விட்டதினால் இப்படி சந்தேகங்கள் வருகின்றனவா? அல்லது இவை நியாயமான சந்தேகங்கள்தானா?//

  தங்களுக்கு வயதாகி விட்டதினால்தான் இப்படியான சந்தேகங்கள் வருகின்றன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இருப்பினும் இவை நியாயமான சந்தேகங்கள் போலவும் தெரிகின்றன.

  நான் இவற்றைப் பற்றியெல்லாம் எனக்குள் கொஞ்சம் ஆராய்ச்சியே செய்து வைத்துள்ளேன். Case Study செய்தபோது ஒவ்வொருத்தர் ஒவ்வொரு type ஆக இருப்பதாலும், அவர்கள் ஒவ்வொருவரின் போக்கினிலும் [காதலியாக, மனைவியாக, தாயாக, தன் தாய் அல்லது மாமியாரை இழக்கும்போது, தானே ஒருநாள் மாமியாராக ஆகும் போது என] ஒவ்வொரு காலக்கட்டத்தில் சிற்சில மாற்றங்கள் ஏற்பட்டு வருவதால், இதில் ஒட்டுமொத்தமாக என்னால் இன்னும் ஓர் முடிவுக்கு வர இயலவில்லை.

  பிறரின் கருத்துக்களை அறிய மேலும் ஆவலுடன் உள்ளேன்.

  பதிலளிநீக்கு
 2. பதிவைப் படித்து விட்டேன். அபிப்ராயம் சொல்லத் தெரியவில்லை. வேறொரு பொதுவாக வேலைகளைப் பகிர்ந்து செய்வது நல்லது, சரி என்று படுகிறது. சம உரிமை என்பது எதெதில் என்பதிலும் கேள்வி எழுகிறது.நிறைய யோசிக்க, எழுத ஓடவில்லை!

  :)))

  பதிலளிநீக்கு
 3. ஐயா

  தங்களுடைய சந்தேகம் தற்போதைய இளம்தலைமுறையினருக்குத் தேவை இல்லாத ஒன்று. கல்யாணம் என்பது கணவன் மனைவி என்று சட்டப்படி அங்கீகாரம் பெறுவதற்கும் மற்றும் சட்டப் பிரகாரமுள்ள உரிமைகளைப் (விவாஹ ரத்து, ஜீவனாம்சம், சொத்து உரிமை) பெறுவதற்கு மட்டும் தான். மற்றபடி நீங்கள் குறிப்பிட்ட எல்லா அம்சங்களுக்கும் ஒரு கம்பனி உருவாக்கி பை லா உண்டாக்கி சேர்ந்து வாழ்ந்தால் போதும் என்று நினைப்பவர்கள்.

  --
  Jayakumar

  பதிலளிநீக்கு
 4. இந்த காலத்தில் கல்யாணம் கட்டுவது என்பது பெண்ணும் மாப்பிள்ளையும் மிக எளிதாக இல்லற வாழ்க்கையில் இருந்து தப்பி போகாது இருப்பதற்காக இருக்கும். அதனால்தான் இந்த கால்த்தில் லீவிங்க் டுகதர் என சேர்ந்து வாழ்கின்றார்கள் இதுதான் இந்த கால பேஷன்

  பதிலளிநீக்கு
 5. கல்யாணக் கட்டிக்கிடறது எதுக்காக?
  கல்யாணக் கட்டிக்கிடறது எனக்கு ஒரு புருஷன்/மனைவி 'லீகலாக' இருக்கிறார் என சொல்வதற்காக இருக்கும்

  பதிலளிநீக்கு
 6. //அந்தக்காலத்தில் கல்யாணத்திற்காகப் பெண் பார்க்கப் போனால் "பெண்ணுக்கு சமைக்கத் தெரியுமா" என்று சம்பிரதாயமான் கேள்வி கேட்பது உண்டு.//

  இந்த காலத்தில் பெண் பார்க்க போகும் போது என் பையனுக்கு நன்றாக சமைக்க தெரியுமாக்கும் என்று சொல்லுவார்கள் அப்பதான் பெண் வீட்டுகாரன் தன் பெண்ணை அந்த மாப்பிள்ளைக்கு தர சம்மதம் தெரிவிப்பார்

  பதிலளிநீக்கு
 7. ///அமெரிக்கா போன்ற நாடுகளில் வசிக்கும் இந்திய குடிமக்கள் கூட இந்த மாற்றத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.///

  இப்படி சொல்லுவதற்கு பதிலாக இந்த மதுரைத்தமிழனும் இந்த மாற்றத்தை ஏற்றுக் கொண்டுள்ளான் என்று நேரடியாக சொல்லாமல் உள்குத்து என்பது மாதிரி இருக்கிறது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  பதிலளிநீக்கு
 8. கல்யாணம் பண்ணி வாழ்க்கை நடத்தவில்லை என்றால் வயது ஆக ஆக எதிலும் ஒரு பிடிப்பு இல்லாமல் ஒரு விரக்தி ஏற்பட்டுவிடுகிறது அதைதான் பல சமயங்களில் இப்படி கல்யாணம் ஆகாமல் தனியாக வாழ்க்கை நடட்துபவர்களிடம் இருத்து நான் பார்த்து அறிந்து கொண்டது.

  பதிலளிநீக்கு
 9. ///எனக்கு வயசாகி விட்டதினால் இப்படி சந்தேகங்கள் வருகின்றனவா?//

  என்னது உங்களுக்கு வயசாகிவிட்டதா அப்படி யார் சொன்னார்கள்?

  பதிலளிநீக்கு
 10. ஐயா

  மேற்கூறிய எனது பின்னூட்டத்திற்கு ஒரு விரிவான விளக்கம் சொல்ல ஆசைப்படுகிறேன்.

  பரிணாம வளர்ச்சியின் காரணமாக மனிதன் தோன்றியபோதே ஆணாதிக்கம் என்பது உருவாகியது. குழுமம், குழுமத்திற்கு ஒரு வரையருக்கப்பட்ட வாழுமிடம், குழுமத்திற்கு ஒரு தலைவன், இன விருத்திக்கு அவனுக்கு சில பல பெண்கள் என்று விதிகள் உருவாகின. அதன் தொடர்ச்சி தான் கல்யாணம் என்பது. கல்யாணம் என்பது ஒரு ஆண் ஒரு பெண்ணின் மீது உரிமை கொள்வதைக் குழுமத்திற்கு அறிவிக்கும் நிகழ்ச்சி ஆகக் காணப்பட்டது.

  சற்றே முன்னோக்கி மன்னர் காலத்திற்கு வருவோம். அரசர்கள் பல பெண்களை மணம் புரிந்தனர்.பலரை தாசிகளாக்கி அந்தப்புரத்தில் வைத்திருந்தனர். ஏன் என்றால் மனைவிகளுக்கு உள்ள உரிமை தாசிகளுக்கு கிடையாது. மனைவி யார் என்பதை அறிவிக்கவே கல்யாணம் என்று ஆகியது. மேலும் கல்யாணம் என்ற உறவினால் மனைவியைச் சார்ந்தவர்கள் அரசர்களின் நண்பர்கள் ஆயினர்.

  சற்றே நகர்ந்து கேரள அரச பரம்பரையினர் வழக்கத்திற்கு வருவோம். வேணாட்டில் (பழைய பெயர்) உரிமைகள் யாவும் பெண் வழியாக இருந்தன.ராம வர்மா ( சரியாகத் தெரியவில்லை) என்ற வேணாடு மன்னன் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதல் கொண்டு மணமுடிக்க துணிந்தான்.(பீஷ்மர் கதை போல).அப்போது பெண்ணின் சமூகத்தார் உங்கள் நாட்டில் மருமக்கள் தாயம் உள்ளது. எங்கள் பெண்ணிற்கு பிறக்கும் பிள்ளைகளுக்கு பட்டம் கட்டுவதாயிருந்தால் பெணணைத் தருகிறோம் என்று கூறினர். அதன்படி ஒரு ஒப்பந்தம் செய்து நாட்டுப் பிரமுகர்கள் 8 பேர் சாட்சியாக மணம் புரிந்தான்.

  அவன் இறந்த பிறகு அவனுக்குப் பிறந்த மகன் பப்புத் தம்பி ராமன் தம்பி என்ற இருவருக்கும் அவனுடைய சகோதரி மகன் மார்த்தாண்ட வர்மாவிர்க்கும் இடையில் சண்டை ஏற்பட்டு மார்த்தாண்ட வர்மா அவர்களையும் அவர்களுக்குத் துணையாக இருந்த நாட்டுப் பிரமுகர்கள் 8 போரையும் கொன்று அரியணை ஏறினான். அவ்வாறு மருமக்கட் தாயம் நிலை நிறுத்தப்பட்டது.

  அந்தக் காலம் தொட்டு வேணாடு மன்னர்கள் கல்யாணம் செய்வதில்லை. சம்பந்தம் என்று பெண்களை தாசி போல் வைத்துக்கொண்டார்கள்.

  ஆக கல்யாணம் என்பது சட்டப்படி குடும்பம் உண்டாக தேவைப் படும் ஒரு நிகழ்வே அன்றி நீங்கள் கூறியவற்றிற்காக மட்டும் அல்ல. நீங்கள் கூறிய யாவும் கல்யாணம் நிகழ்ந்த பின் நடக்க கூடிய நடக்க வேண்டிய விதிகளே.
  Jayakumar

  பதிலளிநீக்கு
 11. நான் எதையாவது சொன்னால் இங்கிதம் தெரியாதவன் என்று பழிக்கப் படலாம் இருந்தாலும் திருமணம் என்பது ஒருவனும் ஒருத்தியும் உடலால் இணைய சமூகம் வழங்கும் ஒரு லைசென்சே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திருமணம் வேண்டாம் தனித்தே வாழ்ந்துவிடுவோம் என்பவர்களைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அவற்றின் சாதக பாதகங்களை உங்கள் பார்வையில் எழுதினால் என்னைப்போன்ற தனிமரங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

   நீக்கு
  2. திருமணம் வேண்டாம் தனித்து நிற்போம் என்பவர்கள் குடும்ப வாழ்கைப் போராட்டத்தைச் சந்திக்க பயப்படும் கோழைகள்.

   Jayakumar

   நீக்கு
  3. பக்கத்தூர்ல ஒரு தைரியசாலி நாலு கல்யாணம் கட்டியிருக்காருங்கோ!

   நீக்கு
 12. முனைவர் ஐயாவின் கேள்விகள் பல விடயங்களை என்னை அலச வைத்தது.
  தமிழ் மணம் 3

  பதிலளிநீக்கு
 13. தங்களுக்கு வந்த சந்தேகம் பலருக்கு, நான் உட்பட, வந்ததுண்டு. ஒரு கட்டுக்கோப்பினை உருவாக்குவதற்காக இவ்வாறான ஒரு நியதியை உண்டாக்கியிருக்கலாம் என்பது என் எண்ணம். வாழ்வின் ஒரு கூறாக இதனைக் கொள்ளலாம்.

  பதிலளிநீக்கு
 14. ஐயா! திருமணம் செய்துகொள்வது நிச்சயமாக சந்ததியை உருவாக்கத்தான் என்பதில் எந்த விட ஐயமும் இல்லை. அதை வரைமுறை படுத்தவே திருமண முறை ஏற்பட்டிருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் கணவன் மனைவி இருவரும் பணிக்கு செல்வதால் வீட்டை இருவருமே கூட்டாக நிர்வகிக்கவேண்டியதுதான்.

  பதிலளிநீக்கு
 15. ஐயா

  சற்றே சீரியஸ் பதிவு எழுதினாலும் எழுதினீர்கள். வழக்கமாக வருபவர்கள் கூட வரவில்லை. எல்லோரும் ரூம் போட்டு யோசிக்கிறாங்களோ?

  --
  Jayakumar

  பதிலளிநீக்கு
 16. பெரியவுங்க சொன்னா பெருமாள் சொன்ன மாதிரி...

  நீங்களே சந்தேகம் கேட்டா என்ன செய்ய?

  பதிலளிநீக்கு
 17. முன்பெல்லாம் அப்படி இல்லை தமிழர் வாழ்க்கை அப்படித்தான் சொல்லுகின்றது. இஷ்டம் போல் வாழ்க்கை. சமூகம் என்று கல்ச்சர்டாக ஆன பின் திருமணம் என்பது ஒரு சோசியல் சிஸ்டம் ஆகியது. கட்டுப்பாட்டிற்குள் ஒரு ஆணும் பெண்ணும் வாழ வேண்டும் என்பதால். இப்போது மீண்டும் பழைய வாழ்க்கை முறை வருகின்றதோ என்று தோன்ற வைத்துள்ளது லிவிங்க் டுகெதர்...

  இருவருமே வேலைக்குச் செல்வதால் இருவரும் எல்லா பணிகளையும் தெரிந்து வைத்துக் கொளல் நலம் சேர்ந்து செய்வதும் நலம்.

  பதிலளிநீக்கு
 18. இதை சமூக நீதியோடு முடிச்சுப்போட்டுப் பாருங்கள். பெண்களுக்கு, வீட்டுவேலை செய்பவள்தானே என்று மரியாதை தரவில்லை ஆண்சமூகம். வீட்டு வேலையோ அல்லது வெளி வேலையோ - இரண்டும் உழைப்பில் சமமே. வீட்டு வேலை இன்னும் உடலுழைப்பைக் கோருவது. அந்த மரியாதையைத் தராததால், எல்லோரும் சுலபமான வெளி வேலைக்குச் செல்ல ஆசைப்படுகிறார்கள். அப்போது, வீட்டு வேலையைப் பகிர்ந்துதான் ஆகவேண்டும். நம் கடமை சந்ததியை உண்டாக்கி அவர்களை சமூகத்துக்கு உகந்தவர்களாகச் செய்வது. இதை ஆண் பெண் இருவரும்தான் சேர்ந்து செய்ய வேண்டும். இது எல்லாம் சமூகக் கட்டுக்கோப்புக்குத்தான். உங்களுக்குத் தெரியும்தான். இருந்தாலும் சோர்வினால் (அனுபவச் சோர்வினால்) இதை எழுதியுள்ளீர்கள்.

  பதிலளிநீக்கு