சனி, 25 ஜூன், 2016
நண்பனைச் சிக்கலில் இருந்து விடுவித்த கதை.
ஒரு நல்ல திருடன்தான் ஒரு நல்ல போலீஸ்காரன் ஆகமுடியும் என்று சொல்வார்கள். அதேபோல் சில தந்திரவாதிகளின் ஏமாற்றுதலில்
இருந்து தப்பிக்க நீங்களும் ஒரு ஏமாற்றுப் பேர்வழியாக இருக்க வேண்டும். ஏமாற்ற வேண்டும் என்று அவசியமில்லை. ஆனால் அந்த குயுக்தி முறைகளை அறிந்திருப்பது அவசியம்.
என் நண்பர் ஒருவர் தன் வீட்டில் உள்ள ஒரு போர்ஷனை வாடகைக்கு விட்டிருக்கிறார். அதில் குடியிருந்த ஒருவன் இவரிடம் அவ்வப்போது ஆயிரம் இரண்டாயிரம் என்று கைமாத்து வாங்குவான். சொன்ன நாளில் திருப்பிக்கொடுத்து விடுவான். இப்படி சில மாதங்கள் ஆகியவுடன் என் நண்பருக்கு அவன் மீது அபார நம்பிக்கை வந்து விட்டது.
ஒரு நாள் அவன் தன் மனைவியின் வேலையை நிரந்தரமாக்க அவள் வேலை செய்யும் நிறுவனத்தில் இரண்டு லட்சம் ரூபாய் கேட்கிறார்கள், கொடுக்கலாமா என்று இவரிடம் கேட்டிருக்கிறான். இவருக்கு அந்தக் கம்பெனியை நன்றாகத் தெரியும். கொடுக்கலாம் என்று சொல்லியிருக்கிறார். இரண்டு நாள் கழித்து அவன் இவரிடம் வந்து, சார், ஒரு லட்சம் ரூபாய் சேகரித்து விட்டேன். இன்னும் ஒரு லட்சம் வேண்டும். நாளைக்குள் பணம் கட்டவேண்டும் என்கிறார்கள். ஊரில் ஒரு இடம் இருக்கிறது. அதை விற்றால் ஒரு லட்சம் வரும். வந்தவுடன் கொடுத்து விடுகிறேன். நீங்கள்தான் என்னை எப்படியாவது காப்பாற்றவேண்டும் என்று அழுதிருக்கிறான்.
நண்பருக்கு அப்படியே மனது வெய்யிலில் வைத்த ஐஸ் கட்டியாக உருகிவிட்டது. ஒரு லட்சம் ரூபாய்க்கு ஒரு செக் கொடுத்திருக்கிறார். அவனும் அதை பவ்யமாக வாங்கிக்கொண்டு போய் பணத்தை வாங்கிவிட்டான். இவர் அவனிடம் ஒரு புரோநோட் வேண்டுமென்றிருக்கிறார். அவன் ஸ்டேஷனரி கடையில் விற்கும் ஒரு புரோநோட் பாரத்தை வாங்கி ஒன்றும் எழுதாமல் கீழே மட்டும் ஒரு கையெழுத்து போட்டுக் கொடுத்திருக்கிறான். நண்பரும் அதை வாங்கி வைத்துவிட்டார்.
நாலைந்து மாதம் ஆகி விட்டது. பணம் திரும்பி வரவில்லை. இதனிடையில் அவன் வேறு வீட்டிற்கு குடி போய்விட்டான். இவர் அவனை நெருக்கியிருக்கிறார். அவன் ஒரு நாள் ஒரு லட்சத்தி நான்காயிரத்திற்கு (நான்காயிரம் வட்டி) இவர்பேரில் ஒரு செக் கொடுத்து விட்டு, சார் இதை உடனே பேங்கில் போடவேண்டாம், ஊரில் இருந்து வரவேண்டிய பணம் இன்னும் வரவில்லை, வந்தவுடன் நான் சொல்கிறேன், அப்போது இந்த செக்கைப் பேங்கில் போடுங்கள் என்று சொல்லியிருக்கிறான்.
நண்பரும் சரியென்று அந்த செக்கை வாங்கி வைத்துக்கொண்டார்.
ஒரு மாதம் சென்றது. அவனிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை. போன் பண்ணினால் எடுப்பதில்லை. சரி, என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்று நண்பர் செக்கை கலெக்ஷனுக்குப் போட்டார். கணக்கில் பணம் இல்லை என்று செக் திரும்பி வந்து விட்டது.
இந்த நிலைமையில் நண்பர் என்னிடம் ஆலோசனைக்கு வந்தார். நான், பொறுப்போம், பார்க்கலாம், அவனை எப்படியாவது பிடித்து என்ன விவரம் என்று கேளுங்கள் என்றேன். இரண்டு நாள் கழித்து நண்பர் ஓடோடி வந்தார். இதற்குள் அவர் யாரையோ சிபாரிசு பிடித்து பேங்க் மேனேஜரைக் கைக்குள் போட்டுக்கொண்டார். அவர் மூலம் அவன் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று பார்த்துக்கொண்டார். இரண்டாயிரம் ரூபாய்தான் இருந்தது. அவன் வருவதாகச் சொன்ன ஒரு லட்சம் ரூபாய் வந்தாலும் மொத்தம் ஒரு லட்சத்தி இரண்டாயிரம் ரூபாய்தானே இருக்கும், நம் செக் ஒரு லட்சத்தி நாலாயிரம் ரூபாய்க்கு அல்லவா, இது எப்படி பாஸ் ஆகும் என்று புலம்பினார்.
நான் அவரை ஆசுவாசப்படுத்திவிட்டு. நாளைக்கு பேங்குக்கு வரும்போது உங்கள் செக் புக்கை எடுத்து வாருங்கள், மிச்ச்த்தை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று உறுதி கூறி அவரை அனுப்பி வைத்தேன். மறுநாள் பேங்க்குக்குப் போனால் நண்பர் காத்துக் கொண்டிருந்தார். அந்த கடன் வாங்கினவனும் கூட இருந்தான். அவனிடம் என்னப்பா இன்றைக்கு செக்கை கலெக்ஷனுக்குப் போட்டு விடலாமா என்று கேட்டேன். அவன் தாரளமாகப் போடலாம் சார் என்றான்.
அவனுடைய எண்ணம் அவன் கணக்கில் வரப்போகும் ஒரு லட்சத்தையும் சேர்த்து மொத்தம் ஒரு லட்சத்து இரண்டாயிரம்தானே இருக்கும். நாம் இவர்களுக்குக் கொடுத்தது ஒரு லட்சத்தி நாலாயிரம் ரூபாய்க்கான செக்கல்லவா? இவர்கள் அந்தச் செக்கை பாஸ் பண்ணமுடியாது என்ற நினைப்பில் சம்மதம் சொல்லிவிட்டான். அதுவுமில்லாமல் கவுன்டர் கிளார்க்கிடம் ஐம்பதாயிரத்திற்கு தனியாக ஒரு செக் கொடுத்து வைத்திருந்தான். இவன் எதிர் பார்க்கும் பணம் வந்தவுடன் அந்த ஐம்பதாயிரம் பணத்தை எடுப்பது அவன் திட்டம்.
நானும் நண்பரும் மேனேஜர் ரூமுக்குப் போய் அவருக்கு முன்னால் அமர்ந்தோம். அவர் இன்னும் தபால் வரவில்லை, கொஞ்சம் பொறுங்கள் என்றார். சிறிது நேரத்தில் தபால் வந்தது. எதிர் பார்த்த ஒரு லட்சம் ரூபாயும் வந்திருந்தது. அவர் அந்த கடன்காரனின் கணக்கைப் பார்த்தார். பார்த்துவிட்டு எங்களிடம் சென்னார், இந்தப் பணத்தைப் போட்டாலும் ஒரு லடசத்தி இரண்டாயிரம் ரூபாய்தானே வருகிறது. உங்கள் செக் ஒரு லட்சத்தி நாலாயிரம் ரூபாய் அல்லவா? பாஸ் ஆகாதே என்றார்.
அவரிடம் நான், சார் எவ்வளவு ரூபாய் பற்றாக்குறையாக இருக்கிறது என்றேன். அவர் இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாய் பற்றாக்குறையாக இருக்கிறது என்றார். நான் நண்பரிடம் மேனேஜர் சென்ன தொகைக்கு உங்கள் செக் ஒன்று அந்த திருடன் பெயருக்கு எழுதுங்கள் என்றேன். அப்படியே எழுதிக்கொடுத்தார். மேனேஜரிடம் அந்தச் செக்கைக் கொடுத்து சார் இந்தப் பணத்தை அவன் கணக்கில் சேர்த்து விட்டு பிறகு எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது பாருங்கள் என்றேன். அவர் அப்படியே செய்து விட்டு, சார் உங்கள் செக் இப்போ பாஸ் ஆகிவிடும் என்றார். அப்படியே செய்யுங்கள் என்று சொல்லி என் நண்பருடைய செக்கைப் பாஸ் பண்ண வைத்தேன்.
இரண்டாயிரத்தி ஐந்நூறு செலவில் ஒரு லட்சத்தி இரண்டாயிரம் பணம் வசூலாகி விட்டது. பேங்க் மேனைஜர் அசந்து விட்டார். சார் நீங்கள் பலே கில்லாடியாக இருக்கிறீர்களே என்று பாரட்டினார். அவருக்கு நன்றி சொல்லிவிட்டு வெளியே வந்தோம்.
அதற்குள் இந்த செக் பாஸான விவரம் கவுன்டர் கிளார்க் மூலம் அந்த கடன்காரனுக்குத் தெரிந்து விட்டது. வெளியில் எங்களைப் பார்த்தவுடன் காச் மூச்சென்று கத்தினான். நான் சொன்னேன், நீ செக்கைப் போடச் சொன்னதினால்தானே நாங்கள் போட்டோம், இப்ப எதற்கு கத்துகிறாய், உன் வேலையைப் பார் என்று சொல்லி அவன் அனுப்பினோம்.
அடுத்த நாள் ஒரு பெரிய பிரியாணி ஒட்டலில் நான் கேட்ட ஐட்டங்கள் எல்லாம் என் நண்பர் வாங்கிக் கொடுத்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சபாஷ்... என்ன ஒரு ஐடியா!
பதிலளிநீக்குமுள்ளை முள்ளால் எடுத்து அசத்திவிட்டீர்கள்!
பதிலளிநீக்குஎத்தனுக்கு எத்தன்....?
பதிலளிநீக்குகொடுத்த ஐடியாவுக்கு பிரியாணியா..... ஸூப்பர் ஐயா
பதிலளிநீக்குத.ம.3
நல்ல ஐடியா.....
பதிலளிநீக்குஅருமை நன்று. criminal mind. வாழ்த்துக்கள். நான் சில வருடங்களாக உங்கள் பதிவுகளை படித்து வருகிறேன்.silent reader .இப்போதுதான் முதல் command ஐ போடுகிறேன். மீண்டும்வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநன்று. வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குCan I get farming consultation from you please?
பதிலளிநீக்குI don't.
நீக்குஐயா! நல்ல வேலை செய்தீர்கள். ஆனால் வங்கியில் அந்த நபரின் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது எனத் தெரிந்தாலொழிய இந்த முறையை பயன்படுத்தமுடியாது. உங்கள் நண்பரின் அதிர்ஷ்டம் அந்த வங்கி மேலாளர் கணக்கில் உள்ள இருப்புத்தொகையை சொல்லியிருக்கிறார்.வங்கியின் விதிமுறை சட்டங்கள் படி இன்னொருவரின் கணக்கில் உள்ள இருப்புத்தொகை எவ்வளவு என்று மூன்றாவது மனிதருக்கு சொல்லக்கூடாது.(அவரது மனைவியாய் இருந்தால் கூட)
பதிலளிநீக்குReminds me of a Perry Mason story by Earl Stanley Garner.
பதிலளிநீக்குஐயா செம ஐடியா! உங்கள் சமயோசித புத்தியை வெகுவாகப் பாராட்டலாம்...
பதிலளிநீக்கு