சனி, 4 ஜூன், 2016

கோவை கிறுக்கர்கள் தமிழ்ச்சங்கத்தின் மூடு விழா

                                
டிரைவரைக் கூப்பிட்டு ஆபீசின் முன்னால் மாட்டப்பட்டிருந்த சங்கத்தின் போர்டைக் கழட்டச்சொன்னேன். பிறகு எல்லோரையும் கூப்பிட்டு ஆலோசனை நடத்தினோம்.

பேங்க் மேனேஜரைக் கூப்பிட்டு எங்கள் சங்கக் கணக்கில் எவ்வளவு பணம் மீதி இருக்கிறது என்று கேட்டேன். அவர் ஏழு கோடியே ஐம்பது லட்சம் இருக்கிறது என்றார். சரி அப்படியா என்று கேட்டுக் கொண்டேன்.

டிரைவரைக் கூப்பிட்டு ஐயா. நடந்தவைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தீர்கள் அல்லவா. இனி நீங்கள் வேறு வேலைதான் பார்த்துக்கொள்ளவேண்டும். இருந்தாலும் நீங்கள் எங்களுக்கு விசுவாசமாக இருந்தபடியால் உங்களுக்கு ஒரு பத்து லட்சம் ரூபாய் கொடுக்கிறோம். அந்தப் பணத்தில் ஒரு டாக்சி வாங்கி ஓட்டிப் பிழைத்துக்கொள்ளுங்கள் என்று அவருக்கு பத்து லட்சம் ரூபாய் கொடுத்து அனுப்பினேன். அவர் சங்கத்தின் கார் சாவியை என் மேஜை மீதி வைத்து விட்டு நன்றி சொல்லி விடை பெற்றார்.

ஸ்டேனோவைக் கூப்பிட்டு, இதோ பாருங்க அம்மா, சங்கத்தை நாங்கள் மூடுகிறோம். இந்தக் கம்ப்யூட்டர், அதற்குண்டான மேஜை, நாற்காலி ஆகியவைகளை நீங்கள் எடுத்துக்கொண்டு போய் எங்காவது ஒரு கம்ப்யூட்டர் சென்டர் வைத்துப் பிழைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எங்களுக்கு விசுவாசமாக இருந்ததிற்காக உங்களுக்கு பத்து லட்சம் ரூபாய் கொடுக்கிறோம் என்றேன். அந்த அம்மா சந்தோஷமாக விடை பெற்றுச் சென்றார்.

பொதுவிடம் சொன்னேன். உங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றி. நான் என்னென்னமோ கனவு கண்டு கொண்டிருந்தேன். அத்தனையும் வீணாகப் போய்விட்டது. உங்களையும் சென்னையிலிருந்து இங்கே கூப்பிட்டு அலைக்கழித்து விட்டோம். என்னை மன்னித்து விடுங்கள் என்று சொல்லி சமாதானப் படுத்தினேன். உங்கள் சிரமங்களுக்காக உங்களுக்கு இருபது லட்சம் ரூபாய் இந்தப் பையில் இருக்கிறது. எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி ஒரு இன்னோவா சேலன்ஜர் ஏசி டாக்சியைக் கூப்பிட்டேன். அந்த டிரைவரிடம் இவரைப் பத்திரமாக சென்னைக்குக் கூட்டிக்கொண்டு போய் அவர் வீட்டில் விட்டு விட்டு திரும்பி வந்து எனக்குத் தகவல் சொல்லவேண்டும் என்று சொல்லி அவருக்கு விடை கொடுத்து அனுப்பினேன்.

அந்த டாக்சி எங்கள் கூட பணி புரிந்த நண்பருடைய சொந்தக்காரருடையது. எங்களுக்கு எப்போது டாக்சி வேண்டுமானாலும் அவர்தான் அனுப்புவார். அந்தக் கம்பெனியின் எல்லா டிரைவர்களும் நல்ல பழக்கம். அந்த டிரைவரைக் கூப்பிட்டு, இப்போது நீங்கள் கூட்டிப்போகும் நண்பர் ஒரு மிக மிக முக்கியமானவர். மற்ற பயணிகளை நடத்துவது போல் இவரை நடத்தாதீர்கள். டோல்கேட் கட்டணங்களை எல்லாம் நீங்களே கட்டுங்கள். நடுவில் நல்ல ஓட்டல்களில் நிறுத்தி அவருக்கு அவ்வப்போது டிபன் காப்பி வாங்கிக்கொடுங்கள். பில் நீங்கள் கொடுத்து விடுங்கள். அவரை வீட்டில் விட்டவுடன் ஏதாவது டிப்ஸ் கொடுத்தால் வாங்கக்கூடாது.

தவிர, நான் இப்போது சொல்லும் லிஸ்ட்டில் உள்ளவைகளை உடனே வாங்கிக் கொண்டு அவரை அவர் விட்டில் இறக்கி விடும்போது அந்தப் பொருட்களை அந்த வீட்டு அம்மாவிடம் கொடுத்து விடுங்கள்.

1. கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாக் - 5 கிலோ
2. ஜே.ஆர் இங்கிலீஷ் பேக்கரியில் ஒரு ஐந்து வகை கேக்குகள் ஒவ்வொரு டஜன்.
3. காளம்பாளையம் விதையில்லா புளூ திராக்ஷை - 4 பெட்டி
4. மல்கோவா மாம்பழம் - 50
5. காஷ்மீர் ஆப்பிள் - 5 கிலோ
6. சிறுமலை வாழைப் பழம் - 100
7. ஊட்டி உருளைக்கிழங்கு - 10 கிலோ
8. கல்லார் மங்குஸ்தான் - 10 கிலோ
9. ராம்ராஜ் கடையில் ஐயா சைசிற்கு ஒரு பட்டுச்சட்டை, ஒரு பட்டு வேஷ்டி
10. நம்ம பிஎஸ்ஆர் கடையில் அம்மாவிற்கு ஒரு பட்டு சேலை.

எல்லாவற்றையும் கம்பெனி கணக்கில் வாங்கிக் கொண்டு பிற்பாடு பில்களை என்னிடம் கொடுங்கள். சென்று வாருங்கள் என்று அவர்களை வழி அனுப்பி வைத்தேன்.

இப்போது நாங்கள் மூன்று பேர் மட்டும் இருந்தோம். நான், உபதலைவர், காரியதரிசி ஆகியோர். அவர்களிடம் நான் சொன்னேன். இந்த அட்வென்சர் ஏதோ தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போன மாதிரி ஒரு வழியாய் முடிந்தது. இனி நாம் நம் வழக்கமான சாப்பிடுவதும் தூங்குவதுமான வேலையைப் பார்க்கலாம்.

சங்க சொத்துக்களை என்ன பண்ணலாம் என்று யோசித்தோம். சங்கத்திற்கு வாங்கின காரை நான் வைத்துக்கொள்கிறேன். ஆபீசில் இருக்கும் தட்டுமுட்டுச் சாமான்களை நீங்கள் இருவரும் எடுத்துக்கொள்ளுங்கள். பேங்கில் செலவு போக மீதி இருக்கும் ஏழு கோடியில் நான் மூன்று கோடி எடுத்துக்கொள்கிறேன். உங்கள் இருவருக்கும் ஆளுக்கு இரண்டு கோடி வைத்துக்கொள்ளுங்கள் என்றேன். அவர்களும் சந்தோஷமாக ஒத்துக்கொண்டார்கள்.

இப்படியாக கோவை கிறுக்கர்கள் தமிழ்ச்சங்கத்தின் மூடு விழாவை வெற்றிகரமாக முடித்து விட்டு ஆபீஸ் சாவியைக் கட்டிடத்துக்காரரிடம் கொடுத்து விட்டு சங்கத்தின் காரில் ஏறி மூவரும் ரெசிடென்சி ஓட்டலுக்குப் போய் மூடு விழாவைக் கோலாகலமாகக் கொண்டாடி விட்டு அவரவர்கள் வீடு போய்ச்சேர்ந்தோம்.
                    

13 கருத்துகள்:

  1. Very interesting story told in a very simple manner...thank u...read with great interest...thanks again and again...

    பதிலளிநீக்கு
  2. கடைசியில் ஒரு புத்திசாலித்தனமான முடிவு பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு

  3. ஐயா! முழுமையாய் பணியாற்றாத எனக்கு நீங்கள் ‘தந்த’ 20 இலட்சம் ரூபாய் மிக அதிகம். நீங்கள் அனுப்பிய வாடகை மகிழூந்து ஓட்டுனர் நீங்கள் சொன்னபடியே சென்னை வரும் வரை என்னை செலவழிக்கவிடாமல் நல்லபடையாய் கவனித்துக்கொண்டார். தாங்கள் சொன்னபடி அவர் வாங்கி கொடுத்ததை (வேட்டி,புடவை நீங்கலாக) எங்கள் தெருவில் உள்ள அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து மகிழ்ந்தோம். நன்றி சொல்ல தகுந்த சொற்களைத்தேடுகிறேன்.

    (தங்களின் கீழே பணியாற்றும் வாய்ப்பு கிடைக்காவிடினும் கற்பனை நிகழ்வில் பணியாற்றியதற்கு மகிழ்ச்சி அடைகிறேன்)

    பதிலளிநீக்கு
  4. நல்ல கற்பனை. சங்கம் பற்றிய அனைத்து பதிவுகளும் இப்போது தான் படித்தேன்....

    பதிலளிநீக்கு
  5. ஐயா வேலையைத் தொடங்கவே இல்லை இதற்காக நண்பர் திரு.நடனசபாபதி அவர்களுக்கு 20 லட்சமா ??????????????
    நாமலும் ஒருவேலை கேட்டு வாங்கி இருக்கலாமோ ?
    தமிழ் மணம் 4

    பதிலளிநீக்கு
  6. ஐயா ஒரு சந்தேகம். 10 கோடி, 20 லட்சம் என்றெல்லாம் கூறியுள்ளீர்கள். ஆனால் எங்கேயும் மறந்து போய் ரூபாய் என்று குறிப்பிடவில்லை. அப்போ இதெல்லாம் புளியங்கொட்டையா?
    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் சந்தேகத்தைத் தீர்க்க வேண்டியது என் கடமை. அதற்கு முன் ஒரு சந்தேகம். நீங்கள் எப்பொழுதாவது புளியங்கொட்டை வியாபாரம் செய்திருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். உண்டா?

      நீக்கு
    2. புளியங்கொட்டை இல்லை ரூபாய் தான். நான் தான் தப்பு.
      --
      Jayakumar

      நீக்கு
  7. அளவில்லா கற்பனை. விறுவிறுப்பான தொடர். ரசித்தோம். மூடுவிழா என்றவுடன் சற்றே சங்கடம்தான்.

    பதிலளிநீக்கு
  8. சங்கத்தில் எனக்கும் ஒரு பதவி கேட்கலாம் என்று இருந்தேன். அதற்குள் மூடுவிழா நடத்தி விட்டீர்களே அய்யா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா, மொதல்லயே தெரியாமப் போச்சே? வருந்துகிறேன். இனி ஏதாவது இந்த மாதிரி சங்கம் ஆரம்பித்தால் உங்கள் ஆசையை நிறைவேற்றுகிறேன்.

      நீக்கு
  9. தமிழ்ச் சங்கம் பற்றியமுந்தைய பதிவுகளையும் வாசித்துவிட்டோம் ஐயா...10 கோடியா மான்யம் ....ஒன்றுமே நடக்கவில்லை..அதற்குள் மூடுவிழா ..ஏப்பம் சத்தம் கேட்கிறதே அஹஹ்ஹஹஹஹ்

    பதிலளிநீக்கு