திங்கள், 29 ஆகஸ்ட், 2016

நெடுங்கதைகள் படிப்பதில் உள்ள சிரமங்கள்

                      

சமீப காலமாக பொழுதைப் போக்குவதற்கு ஒரு வழியாக கதைகள் படிக்கலாம் என்று முயற்சித்தேன். என் நண்பர் ஒருவர் அன்பளித்த கைக் கணிணியில் (Tablet)  நிறைய கதைகளைச் சேமித்து வைத்தேன்.

அதில் பல கதைகள் ஆங்கிலத்தில் இருந்தன. பரவாயில்லை, நமக்குத்தான் ஆங்கிலம் நன்றாகத்  தெரியுமே என்று சில கதைகளைப் படிக்க ஆரம்பித்தேன்.

இளம் வயதில் ஆங்கிலக் கதைகள் பல படித்திருக்கிறேன். அந்த ஆசிரியர்களைப் பற்றி இப்போதுள்ள இளைஞர்கள் அறிய மாட்டார்கள். கோனன் டாயில், மார்க் ட்வைன், ஆர். எல். ஸ்டீவன்சன், எச்.ஜி.வெல்ஸ், மாப்பசான், இப்படி பல ஆசிரியர்கள்.

இப்போது ஆங்கிலத்தில் பலர் நன்றாகவே எழுதுகிறார்கள். எனக்கு இப்போது, அதாவது வயதானபின் சேர்த்துள்ள பல சொத்துக்களில்  ஒன்று "மறதி". குறிப்பாக மனிதர்களின் பெயர்கள். ஏதாவது ஒரு விசேஷத்தில் புதிதாகப் பலரை சந்திக்க நேரிடுகிறது. யாராவது சிலர் அறிமுகப்படுத்தி வைக்கப்படுகிறார்கள். அப்படி அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் அந்தப் பக்கம் போனவுடன் அவர் பெயர் என்ன என்று எவ்வளவு யோசித்தாலும் நினைவிற்கு வருவதில்லை. சரி, போகட்டும் என்று விட்டு விடுவது வழக்கமாய் விட்டது.

அந்த மாதிரி பல கதாசிரியர்களின் பெயர்கள் நினைவிற்கு வருவதில்லை. அதுவாவது தொலையட்டும். கதைக்கு வருவோம். கதையில் கதாபாத்திரங்கள் பலர் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். இந்த இங்கிலீஷ்காரன்களின் பெயர்களே ஒரு பெரிய மர்மம். இத்தனை வயதிற்கு அப்புறமும் அந்த மர்மத்தை விடுவிக்க என்னால் முடியவில்லை.

உதாரணத்திற்கு ஒன்று: John Fitzgerald Kennedy  என்று ஒருவர் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தது  பலருக்கு நினைவிருக்கலாம். சாதாரண மக்கள் இவரை  Mr.Kennedy கூப்பிடவேண்டும். பெயரை எழுதும்போது முழுசாக John Fitzgerald Kennedy என்று எழுத வேண்டுமாம். அதையே சுருகி எழுதும்போது John F. Kennedy என்று எழுதுகிறார்கள். நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அவரை John என்று கூப்பிடலாமாம். பெண்டாட்டி இவரை "ஜோ" என்று செல்லமாகக் கூப்பிடுவாள்.

ஆங்கிலக் கதைகள் ஆரம்பிக்கும்போது ஒருவனை ஒரு பெயரில் அழைத்திருப்பார்கள். இரண்டு பக்கம் கழித்து அவனை இன்னொரு பெயரில் அழைப்பார்கள். இவன் யாருடா, புதிதாக இருக்கிறதே என்று யோசிப்பதற்குள் அவன் காதலி அவனை வேறு ஒரு செல்லப் பெயரில் கூப்பிடுவாள். இந்தக் குழப்பத்திலிருந்து விடுபடுவதற்குள் மளமளவென்று பத்துப் பதினைந்து நபர்கள் கதைக்குள் புகுத்தப்பட்டிருப்பார்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் சராசரியாக ஐந்து பெயர்கள்.

ஆச்சா, தலை சுற்ற ஆரம்பித்து விடும். சரி, முதலில் இருந்து வரலாம் என்று திரும்பவும் முதல் பக்கத்திலிருந்து ஆரம்பித்தால், இரண்டு மூன்று பக்கத்திற்கு மேல் கவனம் நிலைப்பதில்லை. புத்தகத்தை மூடி வைத்து விட்டு ஒரு இரண்டு மணி நேரம் கழித்துப் படிக்க ஆரம்பித்தால் கதையை எங்கே விட்டோமென்பது தெரியமாட்டேன்   என்கிறது.

மறுபடியும் முதல் பக்கத்திலிருந்து ஆரம்பிக்கவேண்டும். இப்படி ஒரு கதையைப் படிப்பதற்கு முதல் பக்கத்தை மட்டும் ஒரு ஐம்பது தடவை படித்திருப்பேன்.

தமிழ்க்கதைகளில் இந்த மாதிரி குழப்பங்கள் கிடையாது. பத்துப் பேர் கதையில் இருந்தாலும் எல்லாம் சுப்பன், குப்பன் என்றிருப்பதால் குழப்பம் வருவதில்லை. ஆனால் என்ன கஷ்டம் என்றால் தமிழ்க் கதைகளை எல்லாம் ஏற்கெனவே படித்து முடித்தாயிற்று. இப்போது வரும் கதைகள் மனதிற்கு உகந்ததாய் இல்லை.

ஆனால் எந்தக் கதைகளைப் படிக்க ஆரம்பித்தாலும் ஒரு சௌகரியம் இருக்கிறது. படிக்க ஆரம்பித்த மூன்றாவது நிமிடம் தூக்கம் வந்து விடுகிறது. வயதான காலத்தில் அது ஒரு பெரிய சௌகரியமல்லவா?

16 கருத்துகள்:

  1. வயதாகாமலேயே எனக்கும் ஐந்து பக்கம் படிப்பதற்கும் தூக்கம் வந்து விடுகிறது!

    பதிலளிநீக்கு
  2. உங்களுக்கு வயசான பிந்தான் இந்த மாதிரி குழப்பம் ஆனால் எனக்கு வயசாவதற்கு முன்பே குழப்பம் வந்துவிட்டது அதனால்தான் உங்கள் தளத்தை வேறு யாரோ எழுதும் தளம் என்று நினைத்து கடந்த சில மாதங்கள் படிக்காமல் விட்டு இருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  3. ஆங்கிலப் பெயர்களில் ராபர்ட் பாப் ஆவார் , வில்லியம்ஸ் பில் ஆவார், இன்னும் எவ்வளவோ இருக்கிறது பாழாய்ப்போன மறதி . நினைவுக்கு வரவில்லை

    பதிலளிநீக்கு
  4. தூக்கம் வந்தால் கொடுத்து வைத்தவர் தான் நீங்கள் ! ENJOY

    பதிலளிநீக்கு
  5. ஆரம்பம் முதல் கடைசி வரை சுவாரஸ்யமாக எழுதி, குறிப்பாக அந்தக் கடைசி பாராவில் உண்மையை அப்படியே புட்டுப்புட்டு வைத்துள்ளது எனக்கு மிகவும் பிடித்துள்ளது. பாராட்டுகள்.

    ஏனோ எனக்கு என் இந்தப்பதிவும் இப்போது நினைவுக்கு வந்தது.

    http://gopu1949.blogspot.in/2014/11/part-1-of-4.html

    எனக்குள் மிகவும் பலமாக வாய்விட்டுச் சிரித்துக்கொண்டேன்.

    மிகவும் கொடுத்துவைத்த நல்ல சுவாரஸ்யமான மனிதர் தாங்கள்.

    நானும் தூக்கம் வருவதற்காக மட்டுமே, நள்ளிரவு 2 மணிக்கு மேல் குறிப்பிட்ட சிலரின் பதிவுகள் பக்கம் போய், அதனைத் திறந்து கொஞ்சம் மட்டும் படிப்பதுண்டு. அவற்றில் எல்லாம் என் பின்னூட்டங்கள் ஏதும் இருக்காது.

    ஏனெனில் அவற்றை வேண்டா விருப்பாக நான் படித்து முடிப்பதற்குள், எப்படியும் நான் ஒருவழியாகத் தூங்கிப் போயிருப்பேன். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி, திரு வைகோ. நீங்கள் குறிப்பிட்ட பதிவைப் பார்த்தேன். நீனைவில் வைத்திருந்து பொருத்தமான இடத்தில் சுட்டிக் காட்டினது அருமை.

      நீக்கு
  6. சார்.. மறதி வயதினால் மட்டும் வருவதல்ல. எனக்கும் எந்தப் படமும் 15 அல்லது 30 நிமிடத்துக்குமேல் பார்க்க முடியாது. அதற்குள் தூங்கிவிடுவேன். இதுமாதிரி, நான் பார்க்காத படங்களே 500க்கு மேல் ஒரிஜனல் டிவிடிக்களாக இருக்கின்றன. ஆங்கில நாவல்கள் மட்டுமல்ல.. சமீபத்தில் பாலகுமாரன் அவர்கள் எழுதிய 'உடையார்' நாவலைப் படிக்கும்போதும் அவ்வப்போது யார் இவர் என்றெல்லாம் பல கேரக்டர்களைப் பற்றிச் சந்தேகம் வந்து மீண்டும் பழைய பக்கங்களைப் புரட்டவேண்டியதாயிற்று. இதுக்கு நம்முடைய இன்டெரெஸ்ட்தான் காரணம். நமக்கு முக்கியம் என்று நினைத்தால் 'நிச்சயம் யாரையும் நாம் மறக்கமாட்டோம்.

    மறதிதான் மனித குலத்தின் மிகப்பெரிய சொத்து. இல்லாட்டா நித்தம் நிம்மதியாத் தூக்கம் வராது.

    பதிலளிநீக்கு
  7. நானும் இந்த இனம்தான்
    நிறையப் பேர் இப்படி இருப்பதாகச் சொல்வது
    கொஞ்சம் ஆறுதல் தருகிறது
    சுவாரஸ்யமான பதிவு
    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு

  8. நன்றாக எழுதுகிறீர்கள் !.
    நானும் கூட நடுஇரவில் தூக்கம்வராமல்
    தவிக்கும் போது ஒரு புத்தகத்தை விரித்தால் தூக்கம் உறுதி (ஆங்கில புத்தகமாக இருந்ததால் விரைவில் பலன்)

    பதிலளிநீக்கு
  9. ஐயா

    உங்க வகுப்பில் எத்தனை பசங்களை தூங்க வச்சீங்களோ. அது போல நீங்கள் தேர்ந்து எடுக்கும் கதைகளின் ஆசிரியர்கள் உங்களை தூங்க வைக்கிறார்கள்.

    80 வயது ஆனால் மீண்டும் ஒரு குழந்தைப் பருவம் தொடங்கி விடும். ஆக மூளையை பொறுத்தவரை நீங்கள் ஒரு குழந்தையே. பகலில் தூக்கம். இரவில் தூக்கமின்மை போன்றவை அதிகரிக்கும்.

    ​அப்படி கதைகள் படிக்க வேண்டும் என்றால் aesop's fables, Pachathanthra tales, 1001 arabian nights, fairy tales, folklore, Robinhood, Alice in wonderland போன்ற சிறுவர் சிறுமியர் கதைகள் படியுங்கள். தமிழில் என்றால் தெனாலி ராமன் கதைகள், மரியாதை ராமன் கதைகள், பீர்பல் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள், முல்லா கதைகள் போன்றவற்றை படிக்கலாம். படித்து பதிவு எழுதி எங்களையும் கொஞ்சம் தூங்க வைக்கலாம்
    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
  10. ஆங்கிலப்புத்தகம் படிக்கும் அளவுக்கு முன்னேற்றம்மில்லை ஆனால் தமிழில் கதை படிக்க இன்னும் பிடிக்கும் இப்போதும் இண்டமுள்ளு வாசித்து முடித்துவிட்டேன் ஐயா!

    பதிலளிநீக்கு
  11. ஒரே ஆளுக்குப் பல பெயர்கள் - குழப்பம் தான். முன்பெல்லாம் நிறைய படிக்க முடிந்தது. இப்போது படிப்பது ரொம்பவே குறைந்திருக்கிறது.

    தூக்கம் - புத்தகம் எடுத்தாலும் வருவதில்லை! :) பகலில் நல்ல தூக்கம் வருகிறது!அலுவலகத்தில் தூங்க முடியாதே!

    பதிலளிநீக்கு
  12. IYYAH READING VANNADASAN VANNANILAVAN JEYAMOHAN JEYAKANTHANS WORKS PART BY PART GIVES ME AN ETERNAL PLEASURE>>> YOU PL TRY....

    பதிலளிநீக்கு