புதன், 14 அக்டோபர், 2015

இரு பிரபல வலைப்பதிவர்களின் சந்திப்பு

                            Image result for திருச்ச மலைக்கோட்டை

புதுக்கோட்டை பதிவர் திருவிழாவிற்குச்  செல்வதென்று முடிவு செய்தவுடனேயே என்னுடைய பயணத்திட்டத்தில் திரு வை.கோபால கிருஷ்ணன் இடம் பிடித்து விட்டார். திருச்சியில் அவரை சந்தித்துவிட்டுப் பிறகு புதுக்கோட்டை செல்வதென்று முடிவு செய்து அவருக்கும் செய்தி அனுப்பினேன்.

உடனே அவரிடமிருந்து பதில் வந்தது. அந்த பதிலைப் பார்த்தவுடன்  "வாங்கோ, வாங்கோ, பேஷா வாங்கோ" என்கிற அழைப்புச் சத்தம் நேரில் கேட்கிற மாதிரியே இருந்தது. அவர் ஒரு பின்னூட்டப்போட்டி வைத்திருந்தது பதிவர்களுக்கு நினைவு இருக்கலாம். அந்தப் போட்டியை நான் நிறைவு செய்ததற்காக அவர் எனக்கு ஒரு பரிசு கொடுக்க விரும்பினார். ஆகவே ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்து விடலாமே என்று திட்டமிட்டேன். அதற்குத் தகுந்த மாதிரி ரயில் டிக்கெட்டுகள் வாங்கினேன்.

திருச்சி ஜங்ஷனில் இறங்கியதுமே அவருக்குப் போன் செய்தேன். ஒன்றாம் நெம்பர் பஸ்சில் ஏறி மெயின்கார்டு கேட் வந்து இறங்குங்கள். நான் வந்து உங்களை "பிக்அப்" செய்துகொள்கிறேன் என்றார். அதே மாதிரி மெயின்கார்டு கேட்டில் இறங்கி ரோடை தாண்டியதுமே அங்கு காத்துக் கொண்டு இருந்தார். என்னை ஒரு ஆட்டோவில் ஏற்றி நேராக அவர் வீட்டிற்குப் பக்கத்தில் இருக்கும் "மதுரா கபே" க்கு அழைத்துச் சென்றார்.
திரு வைகோவும் மதுரா கபே 
ஓட்டல் முதலாளி திரு ஸ்வாமிநாத அய்யரும்

அந்த ஓட்டலின் முதலாளி திரு.ஸ்வாமிநாதய்யர் தஞ்சாவூரிலிருந்து வெகு நாட்களுக்கு முன் இங்கு வந்து இந்த ஓட்டலை நடத்திக்கொண்டு இருக்கிறார், அவர் குடும்பம் முழுவதும் அங்கேயே குடியிருக்கிறார்கள். அனைத்து ஐட்டங்களையும் வீட்டில் செய்வது போலவே அவ்வளவு சுவையாகவும் சுத்தமாகவும் செய்கிறார்கள். தலை வாழை இலை போட்டு ஒவ்வொரு பதார்த்தத்தையும் மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுபவர்கள் திருப்தி அடையும் அளவிற்கு பரிமாறுகிறார்கள். சாப்பாடு "அன்லிமிடட்".

நான் சாப்பிட்ட அன்று பீட்ரூட் பொரியல், புடலங்காய் கூட்டு, கடாரங்காய் ஊறுகாய், அப்பளம், வடை,பாயசம், சாம்பார், மோர்க்குழம்பு, ரசம், தயிர், மோர் ஆகியவை பரிமாறப்பட்டன. அனைத்தும் மிகவும் சுவையாக இருந்தன. நான் வழக்கமாக சாப்பிடுவதைப்போல் இரண்டு மடங்கு சாப்பிட்டேன்.

சாப்பிட்ட பிறகு வைகோ அவர்களின் வீட்டிற்குப் போனோம். அங்கு அவர்கள் எனக்கு மாலை மரியாதைகள் செய்து திக்கு முக்காடச் செய்துவிட்டார். அத்தோடு அவர் வைத்திருந்த போட்டிக்கான பரிசையும் கொடுத்தார்.இந்தப் பரிசைப் பற்றின தகவல்கள் தனிப்பதிவாக வரும்.


நான் வைகோ அவர்களுக்குச் செய்த பதில் மரியாதை

இவ்வறு பரிசு மழையில் மூச்சு முட்டிப்போன நிலையில் அவர் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கொள்கிறீர்களா என்று கேட்டவுடன் அவர் அறையில் படுத்துவிட்டேன். ஏசி அறை. பயணக் களைப்பு. பிறகு சொல்லா வேண்டும். ஒரு மணி நேரம் சோர்க்கத்திற்குப் போய்த் திரும்பினேன்.

எழுந்து முகம் கழுவி வந்து உட்கார்ந்ததும் சூடாக பஜ்ஜி, இன்னும் பல பலகாரங்கள் வந்து விட்டன. முடிந்தவரை அவைகளைச் சாப்பிட்டுவிட்டுப் பிறகு வந்த டிகிரி காப்பியைக் குடித்தேன். மணி மூன்றரை ஆகிவிட்டது. உடனே புறப்பட்டால்தான் புதுக்கோட்டை மாலைக்குள் போய்ச்சேர முடியும். அதனால் அவர்களிடம் பிரியா விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டேன்.

வைகோ அவர்களின் வீட்டிலிருந்து சத்திரம் பஸ் ஸ்டேண்ட் இரண்டு பர்லாங்க் இருக்கும். என்னை ஆட்டோவில் ஏற்றி அங்கு கொண்டு விடுகிறேன் என்று வைகோ அடம் பிடித்தார். ஐயா, எனக்கு வழி நன்றாகத்தெரியும், நான் பத்திரமாக நடந்து போய்விடுவேன் என்று பல முறை வற்புறுத்திக் கூறியதால் அரை மனதாக என்னைத் தனியாகப் போக விட்டார். அப்போதும் லிப்டில் என்னுடன் கீழே இறங்கி வந்து "பார்த்துப்போங்கோ, பார்த்துப்போங்கோ," என்று பல முறை பத்திரம் சொல்லி என்னை வழியனுப்பினார்.

சில அடிகள் எடுத்து வைத்தவுடன் என்னைக் கூப்பிட்டுக்கொண்டே பின்னால் வந்து விட்டார். என்னவென்றால் அவர் வீடு இருக்கும் வீதி முனையில் ஒரு கருப்பராயன் கோவில் சமீபத்தில் கும்பாபிஷேகம் செய்திருக்கிறார்கள். அந்த கருப்பராயனையும் தரிசனம் செய்து விட்டுப் போங்கோ என்று ஒரு வேண்டுகோள். அப்படியே செய்து விட்டு சத்திரம் பஸ் ஸ்டேண்ட் போய்ச்சேர்ந்தேன். உடனே ஒரு டவுன் பஸ் திருச்சி மத்திய பஸ் ஸ்டேண்ட் செல்லப் புறப்பட்டுக்கொண்டு இருந்தது. அதில் ஏறி எந்த விதமான சிரமமும் இல்லாமல் திருச்சி மத்திய பஸ் ஸ்டேண்ட் போய்ச் சேர்ந்தேன்.

உடன் பிறந்தவர்கள் கூட இவ்வளவு பரிவுடன் ஒருவரை கவனிக்க மாட்டார்கள். அவ்வளவு பரிவுடனும் பாசத்துடனும் என்னை உபசரித்த திரு வைகோ அவர்களுக்கு என்ன கைம்மாறு செய்யப்போகிறேன் என்று தெரியவில்லை. அவருக்கு என் நன்றியை பல முறை சொல்லிக்கொள்கிறேன்.

28 கருத்துகள்:

 1. இனியதோர் சந்திப்பு பற்றி அறிந்து மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 2. ஹ்ம்ம் ... பீட்ரூட் பொரியல்... சாப்பிட்டுதான் எவ்வளவு நாள் ஆச்சி.. இந்த வாரம் செய்யணும்.
  நல்ல சந்திப்பு, உபசரிப்பு.. பதிவு...

  பதிலளிநீக்கு
 3. பதிவு எழுதி என்ன சம்பாதித்தோம் என்று பலர் நினைக்கிறார்கள். அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது இது போல பல நல்ல நட்புக்களை எந்த வித எதிர்பார்ப்புகள் இல்லாமலே நாம் சம்பாதிக்கிறோமே அதைவிட வேற என்ன வேண்டும்

  பதிலளிநீக்கு
 4. அப்பா நீங்கள் காட்டிய பரிசுக்கு பின் இவ்ளோ இருக்கா...உண்மைதான் பா..வலைப்பதிவர்கள் அன்பு எதையும் எதிர்பார்க்காத ஒன்று....மிக்கநன்றிபா..

  பதிலளிநீக்கு
 5. திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களை சந்தித்தது பற்றி படித்தபோது நானே அவரது உபசரிப்பை அனுபவித்தது போல் உணர்ந்தேன். இந்த சந்திப்பை சுவையாய் பகிர்ந்த உங்களுக்கும் இதற்கு காரணமாக இருந்த திரு வை.கோ அவர்களுக்கும் நன்றி!

  பதிலளிநீக்கு
 6. அருமையான பதிவு அய்யா! மதுரைத் தமிழன் சொல்வதுபோல் பதிவு எழுதுவதில் சம்பாதித்தது இந்த பாசத்தைதான் என்பதை வலைப்பதிவர் சந்திப்பில்தான் புரிந்துக் கொண்டேன். நன்றி அய்யா!

  பதிலளிநீக்கு
 7. முனைவர் அய்யா அவர்களுக்கு வணக்கம்! மூத்த வலைப்பதிவர் V.G.K என்று அன்பாக அழைக்கப்படும் திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களை அவரது இல்லத்தில் நீங்கள் சந்தித்ததில் உள்ள உங்கள் ஆனந்தத்தை பதிவின் எழுத்துக்கள் எதிரொலித்தன. உங்களின் இந்த பதிவு, பழைய மலரும் நினைவலைகளை மனதில் ஏற்படுத்தி விட்டது.

  அவர் குடியிருக்கும் ஆண்டார்தெரு கடைவீதியில் உள்ள “நியூ மதுரா ஹோட்டல்” சாப்பாட்டு பிரியர்களில் நானும் ஒருவன். முப்பது வருடங்களுக்கு முன்பு டவுனில் உள்ள பல அரசாங்க அலுவலக ஊழியர்கள் மதியம் இங்கு வந்து விடுவார்கள். (இப்போது அரசு அலுவலகங்கள் அனைத்தும் புறநகர்ப் பகுதிக்கு சென்று விட்டன) இதன் பழைய பெயர் ‘மதுரா லாட்ஜ்”. முன்பு நாங்கள் திருச்சி டவுனில் குடியிருந்த போதும், பணிபுரிந்த போதும் இங்கு அடிக்கடி சாப்பிட்டு இருக்கிறேன். இன்றும், எனது மனைவி சென்னையில் உள்ள மகள் வீட்டிற்கு சென்று விடும் நாட்களில், சுவையான சாப்பாடு சாப்பிட வேண்டும் என்றால் இந்த ஹோட்டலுக்கு சென்று விடுவேன்.

  வை.கோபாலகிருஷ்ணன் அய்யா அவர்களையும் இந்த ஹோட்டல் சாப்பாடு பற்றி தனியே ஒரு பதிவு எழுதச் சொல்லி இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆகவே மதுரா லாட்ஜுக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லுங்கள். அந்தக் காலத்தில் அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள் தங்கள் மதிய சாப்பாட்டை இந்த ஓட்டலுக்கு ஆள் அனுப்பி வாங்கி வரச்செய்வார்கள் என்று திரு.கோபு சொன்னார்.

   நீக்கு
 8. உங்கள் திருச்சிப் பயணம் அறிந்திருக்கவில்லை. மாலையில் வைகோ அவர்களையும் நண்பர்களையும் சந்தித்தேன் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 9. ஆஹா, பதிவு அருமை. தொடரட்டும்.

  வடை + பாயஸம் பிரபல மூத்த எழுத்தாளராகிய தங்களுக்கு மட்டும் இரகசியமாகப் பரிமாறியுள்ளதை நான் அன்று சரியாக கவனிக்கவில்லை போலும். பரவாயில்லை, எனக்கும் இதில் சந்தோஷமே ! :)

  அந்த ‘நியூ மதுரா ஹோட்டல்’ உரிமையாளர் திரு. ஸ்வாமிநாத ஐயர் அவர்கள், காட்டுப்புத்தூர் அருகேயுள்ள நாகைநல்லூர் என்ற ஊரைச் சேர்ந்தவர். இருப்பினும் பல்லாண்டுகளாக இங்கு திருச்சியில்தான் உள்ளார்கள்.

  அந்தக்காலத்தில் (ஒரு 25-30 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம்) ஐயர்கள் வீட்டு திருமணங்களில் பிரபல ‘நாகைநல்லூர் சமையல் கோஷ்டி’யின் சமையல் என்றாலே மிகவும் புகழ்ந்து, பாராட்டி பேசப்பட்டு வந்தது என்பதையும் இங்கு நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

  அன்புடன் கோபு

  பதிலளிநீக்கு
 10. மதுரா கபே... குறித்து வைத்துக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம். புதன், 14 அக்டோபர், 2015 ’அன்று’ 12:58:00 பிற்பகல் IST

   வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.

   //மதுரா கபே... குறித்து வைத்துக் கொள்கிறேன்.//

   அதன் இன்றைய பெயர் : ’நியூ மதுரா ஹோட்டல்’ என்பதாகும். சரியாகக் குறித்துக்கொள்ளுங்கள். விலாசம்: Number 4, North Andar Street, Tiruchi-620 002 இங்கு சாப்பாடு மட்டுமே கிடைக்கும். நேரம் காலை 9.30 முதல் பிற்பகல் 3 மணி வரை. பிறகு இரவு 7 மணி முதல் 10 மணி வரை.

   அதன் எதிர்புறம், ரோட்டின் மேல் உள்ள, சமீபத்தில் கும்பாபிஷேகம் ஆன ‘கருப்பண்ண ஸ்வாமி’ கோயிலுக்கு அருகே உள்ளதுதான் ‘ராமா கஃபே’ என அழைக்கப்படும் மற்றொரு பிரபல சிற்றுண்டி ஹோட்டல். அங்கு அனைத்து டிபன் வகைகளும் மட்டுமே சூடாகவும், சுவையாகவும், இருவித சட்னிகள் + சூப்பர் சாம்பாருடன் கிடைக்கும். நேரம்: காலை 5 மணி முதல் 10 மணி வரை. மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை. - VGK

   நீக்கு
  2. இன்னா கோல்டன் சான்ஸு. அதா குருஜி பதிவுல கமண்டு போட்டாழ்ல நீங்க ரொம்ப லக்கினு சொல்லினனு. படிச்சுகிடவே நெரம்ப சந்தோசமாகீதுல.

   நீக்கு
  3. நன்றி வை கோ ஸார். நமக்கு டிஃபனும் முக்கியம்! வெறும் சோறு வேலைக்கு ஆகாது!

   :))))

   நீக்கு
 11. ஐயா

  //அது ஓட்டல் அல்ல. அதுவும் கோபு சார் வீடு மாதிரிதான். அந்த ஓனர் பற்றி ஒரு சிறப்புப் பதிவு வரப்போகுது.

  அங்க கிடைச்ச சாப்பாடு மாதிரி அவர் வீட்ல கிடைக்குமோ என்னமோ, என் வீட்டில் நிச்சயமாக கிடைக்காது. நான் வீட்டில் சாப்பிடும் அளவைப்போல் இரு மடங்கு, நிஜமாக இரு மடங்கு சாப்பிட்டேன்.//

  வீட்டுக்காரம்மா பதிவுகள் எல்லாம் படிப்பார்களா? இதைப் பார்த்துட்டு உங்களுக்கு தினம் கம்பம்கூழு ஊத்தப்போறாங்க (உங்களுக்கு சக்கரை வியாதி உண்டல்லவா?)

  சைவசாப்பாடு என்று அசைவ சாப்பாட்டு பிரியரான நீங்கள் புலம்பினீர்கள். தற்போது திருச்சி மற்றும் புதுக்கோட்டை சாப்பாடுகளைப் பற்றி ஆஹா ஓஹோ என்று புகழ்கிறீர்கள்.

  --
  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒன்று கிடைக்காவிட்டால் அதையே நினைத்து வருந்துவது புத்திசாலித்தனமல்ல என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

   இரண்டாவது எனக்கு பல் வைத்தியம் நடந்து கீழ்தாடைப்பற்கள் அனைத்துயும் எடுத்து விட்டு ஒரு பல் செட் வைத்திருப்பது பதிவுலகம் அறிந்ததே. அது இன்னும் முழுதாக செட் ஆகவில்லை. அதனால் அது செட் ஆகும் வரை அசைவத்தைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. ஆகவே கிடைத்த சைவத்தை அனுபவிப்போம்.

   அடுத்தது, என்னை என்ன பொண்டாட்டிக்குப் பயந்தவன் என்று நினைத்தீர்களா? நான் மீசை வைத்த ஆம்பிளையாக்கும்? அம்மணி என்ன சொன்னே, கூப்பிட்டியா, இதோ வந்துட்டேன்.

   நீக்கு
 12. வை.கோ அவர்கள் விருந்தினர்களை உபசரிப்பதில் சிறந்தவர் என்பது பல விருந்தினர் பதிவுகளை படித்து தெரிந்து வைத்திருக்கிறேன்! உங்கள் அனுபவமும் சிறப்பு. மதுரா கபே மற்றும் ராமா கஃபே நினைவில் நிறுத்தி கொள்கிறேன்! விரைவில் புதுக்கோட்டை பதிவர்களை சந்திக்கும் எண்ணம் இருக்கிறது. அப்போது திருச்சிக்கும் வரலாம். நன்றி!

  பதிலளிநீக்கு
 13. எனது படிப்பு 7 வதிலிருந்து M.A வரை திருச்சியில் தான் . ஸ்கூல் காலேஜு கிட்டத்தட்ட இதே ஏரியாதான் .பழைய நினைவுகளைக் கிளறி விட்டது. 1976ல் திருச்சியை விட்டு வந்தபின் எப்போதோ ஒரு முறை போவேன் ,இன்னும் சில கடைகளில் காண்டக்ட் உள்ளது. இதைத் தனி பதிவாகவே போடுகிறேன்
  .
  மதுரா லாட்ஜ் அப்போது இல்லை என நினைக்கிறேன்

  பதிலளிநீக்கு
 14. வணக்கம் ஐயா தங்களது அனுபவத்தை பகிர்ந்த விதம் அருமை தொடரட்டும் தங்களது நட்பு வலையம்.
  தமிழ் மணம் 5

  பதிலளிநீக்கு
 15. மதுராவில் மதியம் unlimited பச்சரிசி சோறு சாப்பிட்டு ஒரு தூக்கம் போட்ட சொர்க்கம் :)

  பதிலளிநீக்கு
 16. அருமையான சந்திப்பும் அழகான உபசரிப்பும்.

  பதிலளிநீக்கு
 17. உங்களது அனுபவத்தைப் பகிர்ந்தவிதம் அருமை. நன்றி.

  பதிலளிநீக்கு
 18. இன்னும் திருச்சிலேயே இருந்தா!?எப்படி! வாங்க புதுக் கோட்டைக்கு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பழைய மாதிரி சுறுசுறுப்பா நடக்க முடியலைங்க. மெதுவாகத்தான் நடக்க முடிகிறது. எப்படியும் வந்து விடுவேன்.

   நீக்கு
 19. வை கோ அவர்களின் அன்பு மழையில் நநனைந்திருக்கிறீர்கள் . அவரும் பதிவர் விழாவிற்கு வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

  பதிலளிநீக்கு