ஞாயிறு, 7 மார்ச், 2010

வாழ்வு முன்னே நிர்ணயிக்கப்பட்டதா ?

கேள்வி:அன்பு அண்ணா, வாழ்வு முன்னே நிர்ணயிக்கப்பட்டதா ?

பதில்:- முதல் பாகம்.


இந்தக் கேள்வி என்னிடம் என் நெருங்கிய உறவினர் ஒருவர் கேட்ட கேள்வி. வழக்கமாக இப்படிப்பட்ட கேள்விகள் ஆன்மீக ஞானிகளிடம் மட்டுமே கேட்கப்படும். என் உறவினர் என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்டாரென்றால், நான் சாதாரண மனிதனுக்குப் புரிகிற மாதிரி பதில் கொடுக்கக்கூடும் என்கிற நம்பிக்கையில்தான்.

வாழ்க்கையை நான் புரிந்து கொண்ட அளவில்தான் என்னால் இந்தக் கேள்விக்கு பதில் அளிக்க முடியும். அந்த பதில்கள் ஏதோ ஒரு அளவிற்கு அவருடைய மனதிற்கும் மற்ற வாசகர்களுக்கும் ஏற்புடையதாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
சூரியனும் அதைச்சார்ந்த கிரகங்களும் ஓயாது சுற்றிக்கொண்டே இருக்கின்றன. அவைகளிடமிருந்து பல்வேறு வகையான ஒளிக்கதிர்கள் பூமியை வந்தடைகின்றன. இந்தக்கதிர்கள் பல வகைகளில் மனிதனைப் பாதிக்கின்றன என்று விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்படி வரும் கதிர்களின் வீரியம் அதாவது அவைகளின் சக்தி, அந்த சமயத்தில் சூரியனும் மற்ற கிரகங்களும் ஆகாய ஓடு பாதையில் எங்கு இருக்கின்றன, ஒன்றுக்கொன்று எவ்வளவு தூரத்தில் இருக்கின்றன என்பதைப்பொருத்து அமையும் என்றும் விஞ்ஞானம் கண்டுபிடித்திருக்கிறது. ஒரு கிரகத்திலிருந்து வெளிவரும் கதிர்வீச்சு மற்ற கிரகத்தின் கதிர்வீச்சுடன் சேர்ந்து அதிக வீரியம் பெறலாம். அல்லது ஒன்றுக்கொன்று எதிர்மறையாக இருந்து அந்த கதிர்வீச்சின் வீரியத்தைக்குறைக்கலாம்.

இந்தப்பாராவை மீண்டும் ஒரு முறை ஆழ்ந்து படிக்கவும். அதன் பொருள் முழுவதும் நன்கு மனதில் பதிந்த பிறகு மேற்கொண்டு படிக்கவும்.

இந்துக்கள் எல்லோரும் ஒரு குழந்தை பிறந்தவுடன் செய்யும் முதல் காரியம், அந்த குழந்தையின் ஜாதகத்தைக் கணிப்பது. ஜாதகம் என்பது அந்த குழந்தை பிறந்தபோது இந்த சூரியன் உட்பட்ட நவகிரகங்களும் ஆகாயவீதியில் எந்தெந்த இடத்தில் இருந்தன என்ற ஒரு குறிப்பு.
அந்த நவக்கிரகங்களிலிருந்து வரும் கதிர் வீச்சுகள் ஒவ்வொரு மனிதனையும் பாதிக்கின்றன என்பது விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்று பார்த்தோம். இந்த விஞ்ஞான உண்மைகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு வெகு காலம் முன்பாகவே நம் நாட்டு ஞானிகள் இந்த உண்மைகளைப் புரிந்துகொண்டு அதை ஜோதிட சாஸ்திரமாக நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார்கள்.

நவக்கிரகங்கள் இடம் மாறிக்கொண்டே இருக்கிறதல்லவா, அவைகள் இடம் மாறும்போது அவைகளிடமிருந்து வரும் கதிர்வீச்சுகளும் மாறும் அல்லவா, அப்படி கதிர்வீச்சுகள் மாறும்போது மனிதர்களின் மேல் அவைகள் ஏற்படுத்தும் விளைவுகளும் மாறும் அல்லவா, இந்த சமாசாரங்களைத்தான் ஜோசிய சாஸ்திரம் சொல்கிறது.

இந்த சாஸ்திரத்தை நன்கு கற்றுத்தேர்ந்த பண்டிதனால் ஒவ்வொரு தனி மனிதனின் வாழ்க்கையில் ஏற்படும் மாறுதல்களையும் துல்லியமாக கணித்து சொல்ல இயலும்.தொடரும்.....

10 கருத்துகள்:

 1. வாழ்வு முன்னரே நிர்ணயிக்கப்பட்டதா என்றால் ஆமாம் என்பதே பதில்..

  சோதிடம் நம்மிடம் உள்ளதைக்காட்டும் கண்ணாடி,

  நல்ல பகிர்வு நண்பரே

  பதிலளிநீக்கு
 2. ஐயா!
  தற்போது விஞ்ஞானம் மேலும் சில கோள்கள் சூரியக் குடும்பத்துள் இருப்பதாகக் கூறிகிறார்களே!
  ஆனால் சோதிடர் இன்னும் 9 கிரகங்கள் எனவே கணிக்கிறார்கள்.
  இது எவ்விதம் பொருந்தும்.
  மேலும் நன்கு கற்றுணர்ந்த சோதிடரை எப்படிக் கண்டுபிடிப்பது.
  அப்படி இருக்கிறார்களா?
  நமது நாட்டு அரசியல் வா(வியா)திகளாலே கூட இன்னும் சரியான சோதிடரைக் கண்டுபிடிக்கமுடியவில்லை.
  தேர்தலுக்குத் தேர்தல் மாற்றுகிறார்கள்.
  உங்களுக்கு அப்படி யாரையாவது தெரியுமா?
  கூலி எனக்குக் கட்டுப்படியாகுமா?

  பதிலளிநீக்கு
 3. நிகழ்காலத்தில், நினைவுகளுடன்-நிகே,

  வருகைக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 4. யோகன்-பாரிஸ் அவர்களுக்கு,
  என்னுடைய அடுத்த புராஜெக்ட் ஜோசியராவதுதான். ஃபீஸ் எவ்வளவு வைக்கலாம் எனபதில்தான் கொஞ்சம் சிக்கல். அதைக்கூடிய சீக்கிரம் தீர்த்து விட்வேன். அப்புறம் உலகத்திலுள்ள அத்தனை பத்திரிக்கைகளிலும் விளம்பரம் கொடுக்கவேண்டும். அதற்கான நல்ல ஏஜன்சியைத்தேடிக்கொண்டு இருக்கிறேன். அது செட்டில் ஆனதும் முதல் போணி நீங்கள்தான்.

  பதிலளிநீக்கு
 5. கையிலுள்ள கைத்தொலைபேசி இயங்குவதை நம்பும் மனிதன் வானிலுள்ள கோள் மனிதனை இயற்க்குவதை நம்ப மறுக்கிறான்.

  பதிலளிநீக்கு
 6. - இந்தக்கதிர்கள் பல வகைகளில் மனிதனைப் பாதிக்கின்றன என்று விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. -

  ஐயா.. இதற்கு உசாத்துணைகள் அல்லது ஆதாரங்களை எங்கிருந்தாவது தரமுடியுமா?

  சூரியன் மட்டும்தான் ஒளியைத் தருகிறது. மற்றக் கோள்களில் ஒளி தெறித்து வருகிறது. பட்டுத் தெறிப்பதனால் அவ்வொளியில் வீரியங்கள், சக்திகள் கோள்களுக்கேற்ப மாறும் என்று விஞ்ஞானத்தில் எங்குமே இல்லை. நீஙகள் ஈர்ப்பு சக்கதியுடன் ஒளியை சேர்த்து குழப்புகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

  தயவுசெய்து என் சந்தேகங்களைத் தீர்த்து வையுங்கள் ஐயா.

  பதிலளிநீக்கு
 7. உருத்திரா,
  கையிலுள்ள கைத்தொலைபேசி இயங்குவதை நம்பும் மனிதன் வானிலுள்ள கோள் மனிதனை இயற்க்குவதை நம்ப மறுக்கிறான்.

  ---

  கைத்தொலைபேசி இயங்குவதற்கும், கோள் இயக்குவதற்கும் என்ன சம்மந்தம் என்று சிறிது விளக்க முடியுமா?

  பிரியமுடன்
  மதுவதனன் மௌ.

  பதிலளிநீக்கு
 8. மதுவதனன் சொன்னது:

  //இந்தக்கதிர்கள் பல வகைகளில் மனிதனைப் பாதிக்கின்றன என்று விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. -

  ஐயா.. இதற்கு உசாத்துணைகள் அல்லது ஆதாரங்களை எங்கிருந்தாவது தரமுடியுமா?

  சூரியன் மட்டும்தான் ஒளியைத் தருகிறது. மற்றக் கோள்களில் ஒளி தெறித்து வருகிறது. பட்டுத் தெறிப்பதனால் அவ்வொளியில் வீரியங்கள், சக்திகள் கோள்களுக்கேற்ப மாறும் என்று விஞ்ஞானத்தில் எங்குமே இல்லை. நீஙகள் ஈர்ப்பு சக்கதியுடன் ஒளியை சேர்த்து குழப்புகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

  தயவுசெய்து என் சந்தேகங்களைத் தீர்த்து வையுங்கள் ஐயா.//
  (14 March 2010 22:24)

  வசமா மாட்டிட்டேன் போல இருக்கு.
  எதுக்கும் கூகுளாண்டவரைக் கும்பிட்டுப்பார்க்கிறேன். அவர் ஆசி வழங்கினால் இன்னுமொரு பதிவில் இதற்கு மறுமொழி வழங்குகிறேன்.மதுவதனன் மன்னிப்பீராக.

  பதிலளிநீக்கு