புதன், 24 மார்ச், 2010

நான் வேலைக்கு சேர்ந்த கதை-பாகம் 2


(சில பேர் தலைப்பு தப்பு, சரியான தலைப்பு “ஆணி புடுங்க சேர்ந்த கதை ன்னு இருக்கவேண்டும் என்கிறார்கள். ஆனா நான் கடலை புடுங்கத்தான் போனேன். எது சரின்னு எனக்குத்தெரியலீங்க. நீங்களே முடிவு பண்ணிக்கோங்க)


திறந்து பார்த்தால், விவசாய இலாக்கா இயக்குனரிடமிருந்து வேலை நியமன உத்திரவு. இந்த மாதிரி கவர்மெண்ட்டு ஆர்டர்களை நான் முந்தி பிந்தி பாத்ததில்லை. ஒண்ணும் சரியா புரியலே. நாலுபேருகிட்ட காண்பித்த பிறகுதான் முழு விவரமும் புரிஞ்சது. இன்னும் 15 நாட்களுக்குள் ஆனைமலை நிலக்கடலை ஆராய்ச்சிப்பண்ணையில் “நிலக்கடலை ஆராய்ச்சி உதவியாளர் பதவியில் சேரவேண்டும் என்று அந்த ஆர்டரில் குறிப்பிட்டிருந்தது.

வீட்டில் எல்லோருக்கும் சந்தோஷம். எனக்கும் நாமும் சம்பாதிக்கப்போகிறோம் என்ற சந்தோஷம் இருந்தது. என்ன, கோயமுத்தூர் சர்வே வேலை கொஞ்சம் பாக்கி. சரி, வேலையில் சேர்ந்து விடவேண்டியதுதான் என்று முடிவு செய்தேன். இதில்தான் ஒரு சிக்கல் வந்தது. ஆனைமலை எங்கு இருக்கிறதென்பதில் குழப்பம். அது மலைமேல் இருக்கிறது என்று சிலரும், இல்லை இல்லை, அது சமவெளியில் உள்ள ஒரு ஊர்தான் என்று சிலரும் குழப்பினார்கள்.


சரி, எதற்கும் விவசாய காலேஜிலேயே விசாரித்து விடுவோம் என்று காலேஜுக்கே போனேன். அன்று பார்த்து, ஆனைமலையில் நான் வேலைக்கு ரிப்போர்ட் பண்ண வேண்டிய ஆபீசரே வந்திருந்தார். என்னை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள். அவர் ஆனைமலைக்கு வரும் வழியெல்லாம் சொல்லி, சேரவேண்டிய கடைசி நாளன்று வந்தால் போதும் என்று சொன்னார். சரி என்று வீட்டுக்கு வந்தேன். சேரவேண்டிய கடைசி நாள் ஆகஸ்ட் 16 ம் தேதி (1956 ம் வருடம்).

பொள்ளாச்சியில் எனக்கு ஒரு மாமா இருந்தார். அவர் ஏபிடி பஸ் சர்வீசில் கோவை-பொள்ளாச்சி ரூட்டில் டிரைவராக இருந்தார். அதனால் போகும்போது அவரைப்பிடித்துக் கொள்ளலாம் என்று முடிவு ஆகியது. போய் அங்கே தங்குவதற்கு தேவையான தளவாடங்கள் தயார் செய்தேன். ஒரு ஜமக்காளம், ஒரு தலையணை, ஒரு பெட்ஷீட், இருக்கிற சட்டை பேண்ட்டுகள் (போட்டிருந்தது தவிர மூன்று செட்டுகள்), துண்டு, வேட்டி, சோப்பு, சீப்பு, இத்தியாதிகள். இதையெல்லாம் போட்டு எடுத்துக்கொண்டு போக “ஆளவந்தார் பெட்டி சைசில் ஒரு தகரப்பெட்டி. புதுசாய் வாங்கினோம்.

அதென்ன ஆளவந்தார் பெட்டி என்கிறீர்களா? 1940க்கு முன் பிறந்தவர்களுக்கு ஆளவந்தார் கொலைக் கேஸைப்பற்றி நன்கு தெரிந்திருக்கும். அந்தக்காலத்தில் (1952) ல் மிகப்பிரபலமான கேஸ். (இப்போதைய நித்தி கேஸ் மாதிரி). என்ன, நித்தி கேஸ் பத்து நாளில் பிசுபிசுத்துப் போய்விட்டது. ஆளவந்தார் கேஸ் ஏறக்குறைய ஒரு வருடம் நடந்தது. 200 சாட்சிகள் விசாரிக்கப்பட்டார்கள். கோர்ட்டு விசாரணை விபரங்கள் தினத்தந்தியில் இரண்டு முழு பக்கங்கள் வெளியாகும். கொஞ்சம் நேரங்கழித்து கடைக்குப்போனால் காப்பி தீர்ந்து விடும். சுஜாதாவின் துப்பறியும் நாவலுக்கு சற்றும் குறையாத விறுவிறுப்புடன் செய்திகள் வெளியாயின. அந்தக்காலத்தில் இரண்டு பேர் சந்தித்தால் முதலில் பேசுவது ஆளவந்தார் கொலைக் கேஸைப்பற்றித்தான்.

அந்தக்கேஸில் பிரபலமானது ஒரு டிரங்க் பெட்டி. அது மாதிரி ஒரு பெட்டியைத்தான் நான் வாங்கினேன்.

ஆளவந்தார் கேஸ் என்னவென்று தெரிந்துகொள்ள அனைவரும் ஆவலுடன் இருப்பீர்கள். இரண்டு நாள் பொறுத்துக் கொள்ளுங்கள்.15 கருத்துகள்:

 1. ஆஹா!! விறுவிறுப்பான ஒரு நாவல் படிப்பது போல் இருக்கிறது, தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
 2. சைவகொத்துப்பரோட்டா சொன்னது:

  //ஆஹா!! விறுவிறுப்பான ஒரு நாவல் படிப்பது போல் இருக்கிறது, தொடருங்கள்.//

  ஆஹா,அதுக்குள்ள படிச்சிட்டீங்களா? செம பாஸ்ட்டுங்க. நான் பேப்பர்ல படிச்ச சுவாரஸ்யத்துல கால்பங்காவது கொண்டுவந்தால் நான் என்னையே மெச்சிக்கொள்ளலாம்!

  பதிலளிநீக்கு
 3. சுவாரஸ்யமாக செல்கிறது..... தொடரட்டும்.......

  பதிலளிநீக்கு
 4. //பொள்ளாச்சியில் எனக்கு ஒரு மாமா இருந்தார். அவர் ஏபிடி பஸ் சர்வீசில் கோவை-பொள்ளாச்சி ரூட்டில் டிரைவராக இருந்தார்.//

  ஏ.பி.டி(ஆனைமலை பஸ் டிரான்ஸ்போர்ட்)அட்டகட்டி மலைப் பிரதேசத்தில் முதன் முதலாக பஸ் விட்ட அசாதாரணமான துணிச்சலுக்கு பொள்ளாச்சி மகாலிங்கத்தின் அப்பாவுக்கு பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 5. ஐயா!
  நல்லாச் சொல்லுறீங்க! ஆளவந்தார் கதையும் இருக்கு என்கிறீங்க!
  யாழ்ப்பாணத்திலும் கீரிமலை; சுதுமலை என மலையில்லா ஊர்ப்பெயர் உண்டு.

  பதிலளிநீக்கு
 6. ஆளவந்தார் பெட்டி நன்றாய் செல்கிறது.

  பதிலளிநீக்கு
 7. ஆளவந்தார் கொலை வழக்கு தினத்தந்தியின் வரலாற்றுச்சுவடுகள் தொடரில் மீண்டும் 2002ம் ஆண்டு முழுமையாக வெளியிடப்பட்டதே! மேலும் விஷ ஊசி கொலை வழக்கு, என். எஸ். கே. வழக்கு ஆகியவையும் மறு வெளியீடாகின. உங்கள் கதையைக் கேட்கவே ரீடரில் படிக்கிறேன் சார்!

  பதிலளிநீக்கு
 8. //ஆனைமலை நிலக்கடலை ஆராய்ச்சிப்பண்ணையில்//

  அய்யா, மதுரை மேலூர் ரோட்டுல ஒரு யானைமலை இருக்கு, அங்கு ஒரு விவசாயகல்லூரியும் இருக்கு, நீங்க சொல்ற ஆனைமலை அதுவாங்கய்யா.

  //ஆளவந்தார் கொலைக் கேஸை//

  நல்ல துப்பறியும் நாவல் போல suspense ஆ இருக்குங்கய்யா.

  பதிலளிநீக்கு
 9. ஒன்றில் மற்றொன்றை கொண்டுவந்து, பின்னர் அதிலிருந்து வேறு ஒன்று என வலை பின்னலாக சங்கிலித்தொடராக கொண்டு செல்கிறீர்கள்,அதனால் "வெறுமனே " என்று DRY ஆக இல்லாமல் சுவாரஸ்யமாக ,கொஞ்சம் புதிய செய்திகள், கொஞ்சம் நகைசுவை, சற்று கிண்டல்........................
  நாங்கள் கற்று கொள்கிறோம்.

  பதிலளிநீக்கு
 10. Engineering,ராஜ நடராஜன்,யோகன்-பாரிஸ்,மாதேவி,Anonymous,சரவணன் ஆகியோருக்கு,

  உங்கள் ஊக்கத்திற்கு மனமார்ந்த நன்றிகள். தனித்தனியாக பதில் போடாததிற்கு மன்னிக்கவும்.

  பதிலளிநீக்கு
 11. முகுந்த் அம்மா சொன்னது:

  //அய்யா, மதுரை மேலூர் ரோட்டுல ஒரு யானைமலை இருக்கு, அங்கு ஒரு விவசாயகல்லூரியும் இருக்கு, நீங்க சொல்ற ஆனைமலை அதுவாங்கய்யா.//

  அது ஒத்தக்கடை யானைமலை. அங்கு 1965ல் திரு. கக்கன் விவசாய மந்திரியாக இருந்தபோது, ஒரு விவசாயக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
  நானும் அங்கே 5 வருடம் வேலையில் இருந்தேன்.

  நிலக்கடலை ஆராய்ச்சிப்பண்ணை இருந்த ஆனைமலை பொள்ளாச்சியிலிருந்து 15 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. அங்கு மாசானியம்மன் கோவில் ஒன்று மிகப்பிரபலமாக இருக்கிறது.

  //ஆளவந்தார் கொலைக் கேஸை//

  நல்ல துப்பறியும் நாவல் போல suspense ஆ இருக்குங்கய்யா.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 12. மாணிக்கம் அவர்கள் சொன்னது:

  //ஒன்றில் மற்றொன்றை கொண்டுவந்து, பின்னர் அதிலிருந்து வேறு ஒன்று என வலை பின்னலாக சங்கிலித்தொடராக கொண்டு செல்கிறீர்கள்,அதனால் "வெறுமனே " என்று DRY ஆக இல்லாமல் சுவாரஸ்யமாக ,கொஞ்சம் புதிய செய்திகள், கொஞ்சம் நகைசுவை, சற்று கிண்டல்........................
  நாங்கள் கற்று கொள்கிறோம்.//

  பதிவுலகத்துக்குள் வந்தாச்சு. வாரத்துக்கு ரெண்டு பதிவாவது ஜனங்கள் படிக்க வைக்கற மாதிரி எழுதியாகணும். அரசியல் எனக்குப்பிடித்தமில்லை.

  சமீபத்தில் சாமியார்கள் எல்லாம் நல்ல பிள்ளைகள் ஆகிவிட்டார்கள். அப்புறம் உங்களைப்போன்ற பழைய பதிவர்கள் எல்லா சப்ஜெக்டுகளையும் எடுத்துக்கொண்டு விட்டீர்கள்.

  நான் வயசான காலத்திலெ என்ன பண்றது? இந்த மாதிரிதான் கயிறு திரிச்சு காலத்தெ ஓட்டவேண்டியிருக்கு. ஆனா விவசாயக்காலேஜிலெ வாத்தியா இருக்கறப்போ இதில நாம எக்ஸ்பெர்ட்டில்ல.

  பதிலளிநீக்கு
 13. அட..தேர்ந்த எழுத்தாளர் மாதிரி அடுத்த பதிவை படிக்க வைக்க சஸ்பென்ஸ் வைக்கிறீங்களே

  பதிலளிநீக்கு
 14. ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது:

  //அட..தேர்ந்த எழுத்தாளர் மாதிரி அடுத்த பதிவை படிக்க வைக்க சஸ்பென்ஸ் வைக்கிறீங்களே//

  ஆமாங்க, எப்படியாச்சும் ஆள் புடிச்சாகணுங்களே. இல்லீன்னா "மொக்கப்பதிவு" ண்ணு சொல்லிப்போடறாங்க.

  பதிலளிநீக்கு
 15. //ஆனைமலை பொள்ளாச்சியிலிருந்து 15 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. அங்கு மாசானியம்மன் கோவில் ஒன்று மிகப்பிரபலமாக இருக்கிறது.//
  மிளகாய் வத்தல் ஆட்டுக்கல் வேண்டுதல் செய்யும் கோவில்தானே. இதிலிருந்து இன்னொறு கிளைக்கதை ஆரம்பிக்கலாம். நன்றாக எழுதுகிறீர்கள். கேட்க ஆர்வமாய் இருக்கிறது.

  பதிலளிநீக்கு