செவ்வாய், 27 டிசம்பர், 2011

சாவக்கட்டு என்னும் சூதாட்டம்



சாவக்கட்டு என்று கொங்கு நாட்டில் அழைக்கப்படும் சேவல் சண்டை தென் மாநிலங்களில் அதிக அளவில் நடக்கிறது. போலீஸ் கெடுபிடி இருந்தாலும் எப்படியோ அவர்களைச் சரிக்கட்டி இந்த திருவிழா நடந்துகொண்டுதான் இருக்கிறது.

நான் நகரத்தில் பிறந்து வளர்ந்திருந்தபடியால் என் எண்ணங்கள் கிராமத்தில் வளர்ந்தவர்களிடமிருந்து வேறாக இருப்பதில் ஆச்சரியமில்லை. நான் நினைத்துக் கொண்டிருந்தது, “சாவல்கட்டு” என்பது கிராமங்களில் வேலை வெட்டியில்லாமல் திரிந்து கொண்டிருப்பவர்களின் பொழுதுபோக்கு என்பதுதான். ஆனால் சமீபத்தில் ஈமு பண்ணையைப் பார்க்கப் போனபோது அங்கு நிறைய சேவல்கள் கட்டி வைக்கப் பட்டிருந்தன. அவைகளைப் பற்றி விசாரித்ததில் பல புது விஷயங்களைத் தெரிந்து கொண்டேன்.  

இந்த சாவல்கட்டு ஏறக்குறைய குதிரைப் பந்தய விளையாட்டு போன்றது. பந்தயக்குதிரைகள் போலவே சேவல்களும்  பல்லாயிரக்கணக்கில் விலை மதிப்புள்ளவை. சேவல் வளர்க்கிறவர்களுக்கு இது ஒரு முழு நேரத் தொழில். ஜல்லிக்கட்டு போல் இது சாதாரண கிராம மக்களுக்கு ஒரு வீர விளையாட்டு. ஆனால் குதிரைப் பந்தயத்தைப் போல இதில் லட்சக்கணக்கான ரூபாய்கள் பந்தயமாக புரள்கிறது. குதிரைப் பந்தயம் மேல்தட்டு மக்களின் சூதாட்டம். சாவக்கட்டு சாதாரண மக்களின் சூதாட்டம்.

இந்த பந்தயத்தில் ஈடுபடுபவர்கள் இரண்டு வகை. முதல் வகை --- சொந்தமாகப் பணம் போட்டு சேவல்கள் வாங்கி வளர்த்து பந்தயத்திற்கு கொண்டுபோகும் முதலாளிகள். சண்டைக்கு லாயக்கான சேவல்களைக் கண்டால் என்ன விலையானாலும் இவர்கள் அதை வாங்கி விடுகிறார்கள். இதோ இந்தச் சேவல் 20000 ரூபாயாம்.


இவைகளை வளர்ப்பதும் சண்டைக்குத் தயார் செய்வதும் ஒரு தனிக்கலை. ஆகாரத்தில் மிக கவனமாக இருக்கிறார்கள். எங்காவது சாவல்கட்டு நடக்கிறதென்றால் இவர்களுக்கு தகவல் வந்துவிடும். மிகவும் தூரத்தில் உள்ள ஊர்களுக்குப் போகமாட்டார்கள். காரணம் அங்குள்ள மக்களின் மனோபாவம் தெரியாது. வீண் கஷ்டங்கள் ஏற்படும். சாவல்கட்டுக்கு புறப்படுவது என்பது ராஜாக்கள் போருக்குப் புறப்படுவது போல்தான். ஏகப்பட்ட முஸ்தீபுகள் செய்யவேண்டும். குறைந்தது பத்து சகாக்கள் வேண்டும். சண்டைப் பயிற்சி கொடுத்தவர் கண்டிப்பாக வேண்டும்.

இப்படி போனால்தான் ஏதாவது தகராறு என்ற வந்தால் சமாளிக்க முடியும். இதற்கெல்லாம் செலவை சேவல் சொந்தக்காரர்தான் செய்யவேண்டும். சேவல் சண்டையில் ஜெயித்தால் வருமானம் வரும். இல்லையென்றால் கைக்காசைத்தான் செலவழிக்கவேண்டி வரும். அது தவிர பல ஆயிரம் கொடுத்து வாங்கின சேவலும் கை விட்டுப் போய்விடும். ஆக மொத்தம் சாவக்கட்டு என்பது சூதாட்டம்தான்.

சேவல் சொந்தக்காரன் கட்டாயம் பந்தயம் வைத்துத்தான் ஆகவேண்டும். அது தவிர பார்வையாளர்களும் தங்களுக்குள் பந்தயம் வைத்துக்கொள்வார்கள். இப்படி சாவக்கட்டு நடக்கும் இடங்களில் லட்சக்கணக்கில் பணம் புரளும். சூதாட்டம் என்பதினால் அது குறித்து வரும் சண்டை சச்சரவுகளும் வரத்தான் செய்யும். அதனால்தான் இதை அரசு அனுமதிப்பதில்லை. இருந்தாலும் இது ஒரு வீர விளையாட்டு என்று கூறி நீதி மன்றங்கள் மூலமாக அனுமதி வாங்கி சாவக்கட்டுகள் நடந்து வருகின்றன.

ஆந்திரா, கர்னாடகா மாநிலங்களில் சாவக்கட்டு மிகவும் பிரசித்தியுடன் நடக்கிறது. அமெரிக்காவிலும் கூட சாவக்கட்டு நடக்கிறதென்று கூகுள் தேடலில் தெரிந்தது. வரும் பொங்கல் சமயத்தில் பல இடங்களில் சாவக்கட்டு நடக்கலாம்.




ஞாயிறு, 25 டிசம்பர், 2011

Happy Chritsmas



எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லால் வேறோன்றறியேன் பராபரமே.


வெள்ளி, 23 டிசம்பர், 2011

எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம் - ஈமு வளர்ப்பு


எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்

இந்தப் பழமொழி பிடிக்கலைன்னா இதைப் பாருங்க.

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.

இதுவும் வேண்டாமா? அப்ப இங்கிலீசுக்குப் போலாமா?

Make hay while sun shines.

இத்தனை பீடிகை எதுக்குன்னா, எல்லாம் நம்ம ஈமு கோழிக்காகத்தான்.

இன்றைய நிலவரப்படி ஈமு கோழிகளை வளர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்று வியாபாரக் கம்பெனிகள் சொல்லும் தகவல்களை கீழே கொடுத்திருக்கிறேன். முக்கியமான பாய்ன்ட் என்னவென்றால் அவர்கள் சொல்வது அனைத்தும் இன்றைய தேதியில் 100 சதம் உண்மை, உண்மையைத் தவிர வேறில்லை. அப்படியானால் அதில் என்ன தவறு கண்டேன் என்று கேட்கிறீர்களா? அதுதான் பெரிய சிதம்பர ரகசியம். தொடர்ந்து படியுங்கள்.

  1.   ஈமு கோழிகள் வளர்க்க சுலபமானவை.
  2.   அவை மூன்று வருடத்தில் முட்டை இட ஆரம்பிக்கும்.
  3.   முட்டைகள் சுலபமாக, ஒரு முட்டை ரூ.1250 வீதம் விற்பனையாகின்றன. உங்கள் பண்ணைக்கே வந்து கொள்முதல் செய்யப்படும்.
  4.   ஈமு கோழிகளின் இறைச்சி கிலோ 400 ரூபாய்க்கு விலைக்குப் போகும்.
  5.   அவைகளின் தோலிலிருந்து விலை உயர்ந்த கைப்பைகள், அலங்காரப் பொருள்கள் செய்யலாம். அதனால் தோலுக்கு நல்ல மார்க்கெட் இருக்கிறது.
  6.   அவைகளின் இறகுகளிலிருந்து பல்வேறு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.
  7.   அவைகளின் கொழுப்பிலிருந்து எடுக்கப்படும் எண்ணை பல்வேறு மருத்துவக் குணங்கள் உடையது.
  8.   இப்படி ஈமு கோழியின் ஒவ்வொரு பாகமும் பல உபயோகங்களுக்கு மூலப் பொருளாகப் பயன்படுவதால் அவைகளிலிருந்து நல்ல பலன் உண்டு.
  9.   உங்கள் முதலீட்டுக்கு வேறு எந்தத் தொழிலிலும் கிடைக்க முடியாத அளவு நல்ல லாபம் எடுக்கலாம்.
 10. எப்போது வேண்டுமானாலும் பண்ணையைக் கலைத்துவிட்டு நீங்கள் போட்ட முதலீட்டை திரும்ப எடுத்துக் கொள்ளலாம்.

இந்த விளம்பரங்களைப் பார்க்கும் எந்த விவசாயிக்கும் ஆசை வருவது இயற்கையே. அவர்கள் உடனே இந்தக் கம்பெனிகளைப் படையெடுக்கிறார்கள். இந்தக் கம்பெனிக்காரர்கள் கில்லாடிகள். முதலில் சொன்ன பழமொழிகள் எல்லாம் இவர்களை மனதில் வைத்துத்தான் சொல்லப்பட்டவை. வசீகரமான, நல்ல விற்பனைத் திறமை கொண்டவர்களை வேலைக்கு வைத்திருக்கிறார்கள். அவர்கள் சொல்லும் திட்டம் விவசாயிகளின் காதில் தேன் பாய்வது போல் இருக்கும். உடனே கடன் வாங்கியாவது அவர்கள் கேட்கும் டெபாசிட் தொகையைக் கட்டி விடுவார்கள்.

அவர்களின் திட்டம் என்னவென்று முன்பே எழுதியிருக்கிறேன். இருந்தாலும் இன்னொரு முறை சொல்கிறேன்.

  1.   விவசாயிகள் ஒன்றரை லட்சம் ரூபாய் இந்தக் கம்பெனிகளிடம் டெபாசிட்டாகக் கொடுக்கவேண்டும்.
  2.   கம்பெனி, விவசாயிகளுக்கு மூன்று ஜோடி, மூன்று மாதமான ஈமுக் குஞ்சுகள் கொடுக்கும்.
  3.   அந்தக் குஞ்சுகளுக்கு வேண்டிய கம்பி வேலி கம்பெனி சிலவில் அமைத்துக் கொடுக்கப்படும்.
  4.   குஞ்சுகளுக்குத் தேவையான தீனி அவ்வப்போது தேவைக்கேற்ப கொடுக்கப்படும்.
  5.   இந்தக் குஞ்சுகளைப் பராமரிப்பதற்காக அந்த விவசாயிக்கு மாதம் ஆறு ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும். சில கம்பெனிகள் எட்டாயிரம் வரை கொடுப்பதாகச் சொல்லுகின்றன.
  6.   டாக்டர், இன்சூரன்ஸ் ஆகியவைகளைக் கம்பெனி கவனித்துக்கொள்ளும்.

இதில் கோழிகள் முட்டை வைக்க ஆரம்பித்த பின்னர் என்ன கண்டிஷன் என்பதைப் பற்றிய விவரங்கள் ஒன்றும் சொல்லப் படவில்லை. அவர்கள் போடும் பத்திரத்தில் இதைப் பற்றி குறிப்பிட்டிருக்கலாம்.

பிறகு நடப்பவைகளைப் பற்றி எனக்கு நேரடி அனுபவம் இல்லை. இதைப் பற்றி ஒரு சர்வே எடுக்க வேண்டும். பிறகு அதைப்பற்றி எழுதுகிறேன். இதற்கு முன் இதைப்போல் பல கம்பெனிகள் தேக்கு மரம் வளர்க்கிறேன், அரிசி தருகிறேன், சர்க்கரை தருகிறேன் என்றெல்லாம் சொல்லி மக்களை மொட்டை போட்ட வரலாறு மறந்திருக்காது என்று நம்புகிறேன்.

ஈமு வளர்ப்பில் இருக்கும் இன்னொரு சிதம்பர ரகசியம் என்னவென்றால், இந்த மார்க்கெட் நிலை எவ்வளவு நாட்கள் நீடிக்கும் என்பதுதான். இப்பொது எல்லோரும் ஈமு பண்ணை வைப்பதில் மும்முரமாக இருப்பதால் முட்டைகளும் கோழிகளும் இந்த விலைக்கு விற்கின்றன. எதிர்காலத்தில் பண்ணை வைக்க முடிபவர்கள் எல்லாம் பண்ணை வைத்தான பிறகு, இதே விலை நிலவரம் இருக்குமா என்பது பெரிய கேள்விக்குறி. எல்லாப் பண்ணைகளிலிருந்தும் வரும் முட்டைகளை யார் வாங்குவார்கள்? கோழியை கறிக்காக விற்க முடியுமா? முட்டைகளின் விலையும் கறியின் விலையும் எவ்வளவு இருக்கும்? அவைகளுக்கு எவ்வளவு தேவை இருக்கும்?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் இப்போது பதில் கண்டு பிடிப்பது கடினம். காலம்தான் பதில் சொல்லவேண்டும். ஆனாலும் தற்போதைய மார்க்கெட் நிலை இன்னும் பத்து வருட காலத்திற்கு நீடிக்கலாம். அது வரை கம்பெனிகள் விவசாயிகளை ஏமாற்றலாம். புத்திசாலி விவசாயிகள் சொந்தமாக பேங்கில் கடன் வாங்கியோ அல்லது சொந்த சேமிப்பில் இருந்தோ ஈமு பண்ணை அமைத்தால் ஓரளவு பணம் ஈட்டலாம்.



வியாழன், 22 டிசம்பர், 2011

ஈமு கோழி வளர்ப்பு (ஒரு நேரடி ரிப்போர்ட்)


ஈமு கோழி பித்தலாட்டம் என்ற என் பதிவை 1000 பேருக்கு மேல் பார்த்துள்ளார்கள். அவர்களுக்கு என் கடமை ஒன்று இருக்கிறது. களத்தில் (Field) உள்ள நிலைமை என்ன என்பதை அவர்களுக்கு விளக்க வேண்டியது என் கடமையல்லவா? நான் ஒரு கடமை வீரன் என்பது உங்களுக்கு நான் சொல்லித்தான் தெரியவேண்டியதில்லை என்பது வேறு விஷயம்!

ஈமு கோழி ஆஸ்திரேலியாவின் பறவை. அவைகளை ஐரோப்பியர்கள் இனம் கண்டு அவைகளை வளர்க்க ஆரம்பித்தார்கள். அவர்கள் ஈமுவின் மாமிசத்தை விரும்பி உண்டார்கள். இந்த மாமிசம் கொழுப்புச் சத்து குறைந்தது. ஆகவே இருதய நோயாளிகளும் உண்ணலாம். மேலும் இந்த மாமிசம் பல மருத்துவ குணங்கள் பொருந்தியது என்று சொல்கிறார்கள். ஆனால் இந்த குணத்தை யாரும் ஆராய்ச்சி செய்து பார்க்கவில்லை. இந்த மாமிசம் கிலோ 400 ரூபாய்க்கு விற்கும் என்று சொல்லுகிறார்கள். ஆனால் இதை இந்தியாவில் யாரும் இன்னும் சாப்பிட ஆரம்பிக்கவில்லை.

ஈமு கோழியை இந்தியாவுக்கு யார் கொண்டு வந்தார்கள் என்று அதிகாரபூர்வமான தகவல் ஏதும் இல்லை. 1998 வாக்கில் ஆந்திர பிரதேசத்தில் இதை வளர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். தற்போது அங்கு பெரிய ஈமு பண்ணைகள் இருக்கின்றன. சுமார் பத்து வருடங்களுக்கு முன் இந்த ஈமு தமிழ்நாட்டில் அறிமுகமாயிருக்கிறது. தற்போது பரவலாக தமிழ் நாட்டின் மேற்கு மாவட்டங்களில் பலர் ஈமு வளர்க்கிறார்கள். இதைப் பற்றிய ஒரு விழிப்புணர்வு விவசாயிகளின் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.

இந்த விழிப்பணர்வை வியாபார ரீதியில் உபயோகப்படுத்த பலரும் ஆரம்பித்திருக்கிறார்கள். நான் ஈரோடு சங்கமத்திற்கு போய்வந்த வழியெங்கிலும் நிறைய விளம்பரங்களையும் இரண்டொரு ஈமு பண்ணைகளையும் பார்த்தேன். விளம்பரங்கள் எப்போதும் மக்களை ஈர்க்கும். அதுவும் நல்ல வாசகங்களை உபயோகப்படுத்தினால் அவைகளின் ஈர்ப்பு இன்னும் அதிகம். “குறைந்த முதலீட்டில் மாதம் ஆறு ஆயிரம் பணம் ஈட்டுங்கள்” என்று ஈமு கோழியின் படத்தைப் போட்டு விளம்பரம் செய்து இருக்கிறார்கள். இவர்கள் என்ன திட்டம் வைத்து இருக்கிறார்கள், அதில் உள்ள ஓட்டைகள் என்ன என்று வேறு ஒரு பதிவு போடுகிறேன்.

என்னுடைய உறவினர் ஒருவர் ஆறு வருடங்களுக்கு முன்பு ஈமு பண்ணை ஆரம்பித்திருக்கிறார் என்று கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் சென்று பார்த்ததில்லை. அதற்கு அவசியம் வந்ததால் (பதிவு போடத்தான்-வேறு என்ன அவசியம்?) இன்று சென்று பார்த்து வந்தேன். அங்கு நான் அறிந்து கொண்டவைகளை இங்கு உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.


ஈமு வளர்ப்பு ஏறக்குறைய கோழி வளர்ப்பு மாதிரிதான். ஏற்கனவே கோழி வளர்ப்பு பரவலாக இருக்கும் நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை மாவட்டங்களின் சீதோஷ்ண நிலையில் இவைகள் நன்கு வளரும். ஆண் பெண் இணைந்த ஜோடிகளாகத்தான் இவைகளை வளர்க்க வேண்டும். வளர்ந்த ஜோடிகள் விலை ரூ. 30000.00 வரை இருக்கும். பொதுவாக மூன்று மாதக் குஞ்சுகளை வாங்கி வளர்ப்பதுதான் நல்லது. அவைகள்தான் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து வளர்ந்துவரும்.

மூன்று மாதக்குஞ்சுகள் ஒரு ஜோடி 12000 முதல் 15000 வரை விற்கிறது. ஏன் இவ்வளவு விலை என்றால் இவைகளின் முட்டைகளின் தற்போதைய மார்க்கெட் விலை முட்டை ஒன்றுக்கு 1250 ரூபாய். என் உறவினர் ஆறு வருடங்களுக்கு முன் 15 ஜோடி (ஜோடி 15000 ரூபாய்) வாங்கி வளர்க்க ஆரம்பித்திருக்கிறார். அதற்கு நல்ல கெட்டியான வலைக்கம்பி வேலி போட்டிருக்கிறார். ஒரு ஈமு கோழிக்கு சுமார் 20 ச.அடி இடம் வேண்டும். மொத்தம் 600 சதுர அடி. தரையைச் சுத்தமாக வைக்கவேண்டும். இதற்கு ரூ.30000 செலவு செய்திருக்கிறார்.

ஈமு கோழிகளுக்கு சாதாரண கோழித்தீவனமே போடலாம். நன்கு வளர்ந்த கோழிகள் ஒரு நாளில் ஒரு கிலோ (20 ரூ.) தீவனம் சாப்பிடும். தண்ணீர் நிறையக் குடிக்கும். நல்ல தண்ணீர் சுத்தமான பாத்திரத்தில் வைக்க வேண்டும். மூன்று வருடங்களில் கோழிகள் முட்டையிட ஆரம்பிக்கும். அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான காலத்தில்தான் முட்டையிடும். மூன்று நாட்களுக்கு ஒரு முட்டை வீதம் 100 நாட்களில் சுமார் 30 முட்டைகள் இடும். முட்டை கரும் பச்சை நிறத்தில் 600 கிராம் எடையில் இருக்கின்றன. முட்டையை தற்போது பெரிய அடைகாக்கும் நிறுவனங்கள் முட்டை ஒன்றுக்கு 1250 ரூபாய் என்று விலை கொடுத்து பண்ணைக்கே வாரம் ஒரு முறை வந்து வாங்கிச் செல்லுகிறார்கள்.



இந்தக் கோழிகள் 40 வருடம் வரை வாழும் என்று சொல்கிறார்கள்.

வரவு செலவு விவரங்கள்: 30 கோழிகளுக்கு.

வேலி அமைக்க                     :     ரூ.   30,000
30 கோழிகளின் விலை              :     ரூ.  1,80,000
30 கோழிகளை 3 வருடம் வளர்க்க    :    ரூ. 3,00,000
                                        ---------------------------
                         மொத்தம்  :     ரூ.  5,10,000
                         ஏறக்குறைய      5 லட்சம்

நான்காவது வருடத்திலிருந்து வரவு செலவு;

கோழி ஒன்றுக்கு ஒரு கிலோ தீவனம் @ ரூ.20 வீதம்
               30 x 20 x 365              :     ரூ.  2,19,000
தினம் ஒரு பெண் கூலியாள் @ 150 ரூ.   :     ரூ   555,000
          வேறு சிலவுகள்                :     ரூ   26,000
                                                    ----------
                                   மொத்தம்        3,00,000
                              அதாவது            3 லட்சம்

கோழி ஒன்றுக்கு 30 முட்டை வீதம் 15 பெட்டைக்கோழிகள் இடும்
முட்டைகள் @ 1250 ரூ.=  15 x 30 x 1250=  ரூ. 5,62,500

                    நிகர லாபம்         ரூ. 2,62,500
                         அதாவது      2.5 லட்சம்

மொத்தம் 5 லட்சம் முதலீட்டுக்கு வருடம் ஒன்றுக்கு 2.5 லட்சம் லாபம் கிடைக்கிறது.

இது மிகவும் லாபகரமான தொழிலாகத்தான் தெரிகிறது. ஆனால் இதில் கண்ணுக்குத் தெரியாத நுணுக்கங்கள் இருக்கின்றன. இந்தப் பதிவுக்கு வரும் பின்னூட்டங்கள் ஊக்கமளித்தால் அடுத்த பதிவில் அந்த விவரங்களை எழுதுகிறேன்.




ஞாயிறு, 18 டிசம்பர், 2011

ஈரோடு பதிவர் சங்கமம் 2011

பதிவர் சங்கமத்திற்கு போய்விட்டு இப்போதுதான் வீடு திரும்பினேன். (மாலை 4.30). இருநூறு பேருக்கு மேல் பதிவர்கள் மற்றும் இணைய ஆர்வலர்கள் வந்திருந்தார்கள். இணையத்தில் சீரிய முறையில் பணியாற்றிய பதினைந்து பதிவர்களை பரிசு கொடுத்து மேடையில் அமர்த்தி அவர்களுடைய சேவைகளைக் குறிப்பிட்டு பாராட்டினார்கள். திரு ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் தலைமை தாங்கி சிறப்பான தலைமையுரை ஆற்றினார்கள்.

நான் எடுத்த சில புகைப்படங்கள்.
(படங்களை கிளிக் செய்தால் பெரிதாகத் தெரியும்.)

கூட்டம் நடந்த ஹால்-






விருந்தினரின் ஒரு பகுதி-வலது ஓரத்தில் சிகப்பு ஜிப்பாவுடன் இருப்பவர்தான் பிரபல பதிவர் "தருமி" அவர்கள்.



வரவேற்புரை-




ஈரோடு கதிர் (விழா நாயகன்) சிறப்பு பதிவர்களை அறிமுகப்படுத்துகிறார்-


சிறப்பு பதிவர்கள் மேடையில்


தலைமையுரை - ஸ்டாலின் குணசேகரன்


செயலாளர் பாலாஜி நன்றி கூறுகிறார்


இனி நம்ம ஐட்டங்கள்.

காலை டிபன் - நான் சாப்பிட்ட இட்லிகளும் பூரிகளும்.




சீனா அய்யாவும் ஜாக்கி சேகரும்


மதிய உணவு-

சைவம்


நம்மோடது


தமிழ்நாட்டின் மூத்த பதிவரைப் பார்த்துக் கொள்ளுங்கள்.(நடுவில் இருப்பவர்) போனால் வராது.


அனைவருக்கும் வணக்கம். விவரங்கள் அதிகம் வேண்டுமென்பவர்கள் கதிர் பதிவு போடும் வரை பொறுத்திருக்கவும்.

சனி, 17 டிசம்பர், 2011

ஈமு கோழி பித்தலாட்டம்

விவசாயிகளை தொழிற்சாலைகள் எவ்வாறு பழி வாங்குகின்றன என்று பலருக்கும் தெரியும். அவர்களை இப்போது சில சமூக விரோதிகளும் எப்படி ஏமாற்றுகிறார்கள் என்று பார்ப்போம்.

ஈமு கோழி என்று ஒரு ரகம்.


சுமார் 5 அல்லது 6 அடி உயரம் வளரும். அறுபது அல்லது எழுபது கிலோ எடை இருக்கும். ஒன்றரை வயது ஆன கோழி முட்டையிட ஆரம்பிக்கும். முட்டை ஒன்று ஆயிரம் ரூபாய்க்கு விலை போகும் என்று சொல்கிறார்கள். ஆனால் இப்போதைக்கு கோழியின் இறைச்சிக்கோ முட்டைக்கோ மார்க்கெட் இல்லை.

ஆனால் இந்தக் கோழியைக் காட்டி பலர் லட்சக்கணக்கில் விவசாயிகளை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். கூகுளில் பல ஏமாற்றுக்கதைகள் வெளியாகி உள்ளன. ஆனாலும் மக்கள் மேலும் ஏமாறத் தயாராக இருக்கிறார்கள்.

லேடஸ்ட்டாக கோவை சாயிபாபா காலனியில் ஒரு கம்பெனி ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களிடம் நீங்கள் ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுத்துவிட்டால் உங்களுக்காக அவர்களே அவர்கள் வைத்திருக்கும் ஈமு பண்ணையில் ஆறு ஈமு கோழிகள் வாங்கி விட்டுவிடுவார்கள். அவைகளைப் பராமரிப்பது, முட்டைகளை விறபது ஆகிய அனைத்து வேலைகளையும் அவர்களே பார்த்துக்கொள்வார்கள்.

ஈமு கோழி வளர்ப்பில் எக்கச்சக்கமான லாபம் வருவதாக அவர்கள் சொல்லுகிறார்கள். அதனால் உங்கள் முதலீடான ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு மாதம் ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுப்பதாக விளம்பரம் செய்திருக்கிறார்கள். எவ்வளவு பேர் முதலீடு செய்திருக்கிறார்கள் என்ற விவரம் தெரியவில்லை. ஆனால் மற்ற மாவட்டங்களில் இந்த மாதிரி கம்பெனிகளுக்கு இருக்கும் ஆதரவைப் பார்த்தால் ஏகப்பட்ட பேர் முதலீடு செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள்.

என்னுடைய சிற்றறிவுக்கு எட்டியவரை ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு மாதம் பத்தாயிரம் லாபம் கொடுக்கக் கூடிய தொழில் மீட்டர் வட்டித் தொழில்தான். அதிலும் அதிக முதலீடு செய்தால் அந்த அளவுக்கு லாபம் காண முடியாது. ஆகவே இந்த கம்பெனி முழுதுமாக மோசடிக் கம்பெனி என்று படுகிறது. மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும்.


வியாழன், 15 டிசம்பர், 2011

பதிவர் சங்கம் தேவையா?

பல வருடங்களுக்கு முன்பு 2011 ல் நான் எழுதிய ஒரு பதிவு. இப்போது பதிவர் சங்கம் பற்றிய பதிவுகள் வருகின்றபடியால் அதை மீள்பதிவு செய்கிறேன்.


பதிவுலகம் ஒரு மாயாலோகம். இங்கு பெரும்பான்மையோருக்கு நிஜமுகம் கிடையாது. கூகுளாண்டவர் புண்ணியத்தாலே நாம் எல்லோரும் எதையெதையோ எழுதிக்கொண்டிருக்கிறோம். கூகுள் பஸ் புஸ் ஆனதைப்போல பதிவுகளும் நித்திய கண்டம் பூர்ணாயுசாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

நாம் எழுதும் எழுத்துக்கள் விரசமாகவோ, புரட்சிகரமாகவோ இல்லாத வரை நம்மைக் கேட்பார் இல்லை. இதில் நமக்கு என்ன குறை இருக்கிறது அல்லது வரப்போகிறது என்று யாருக்கும் ஒரு கருத்தும் கிடையாது. இதில் சங்கம் வைத்து என்ன செய்யப் போகிறோம் என்று எனக்குப் புரியவில்லை.

தொழிற் சங்கங்கள் தொழிலாளர்களுக்கு முதலாளிகளிடமிருந்து பாதுகாப்பு தேவைப் பட்டதால் உருவான அமைப்புகள். இதைத் தொடர்ந்து பல்வேறு துறைகளிலும் அவரவர்கள் பாதுகாப்பைக் கருதி சங்கங்கள் உருவாக்கப் பட்டன. கோவையில் நடைப் பயிற்சியாளர்களும் கூட சங்கம் வைத்திருக்கிறார்கள். இவைகளுக்கெல்லாம் ஒரு பாதுகாப்பு நோக்கம் இருக்கிறது. ஏனெனில் அவர்களுக்கு பல விதமான பாதுகாப்புகள் தேவைப்படுகின்றன.

ஆனால் கனவுலகப் பயணிகளான பதிவர்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பு தேவைப்படுகிறது? பதிவர்கள் சந்தித்து கலந்துரையாட வேண்டுமென்றால் அதற்கு ஒரு அமைப்பு உருவாக்குவது தேவை. இந்த மாதிரியான அமைப்புகள் ஏற்கனவே உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. ஈரோடு பதிவர் சங்கமம் ஒரு நல்ல முன்மாதிரியாக செயல்படுகிறது. நெல்லையில் திரு. சங்கரலிங்கம் ஒரு பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

சென்னையில் பதிவர் சந்திப்பு அவ்வப்போது நடக்கிறது என்பது பதிவுகளிலிருந்து தெரிகிறது. அங்குதான் பதிவர்கள் அதிகம் இருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன் சென்னைப் பதிவர்கள் ஒரு சங்கம் ஆரம்பிக்க முயன்று அந்த முயற்சி வெற்றி பெறவில்லை என்பது பல பதிவர்கள் அறிந்ததே.

பதிவர்கள் கலந்துரையாடல்களுக்காக மட்டும், எந்த வித சட்ட கட்டுப்பாடுகளும் இல்லாத அமைப்புகள்தான் வெற்றிகரமாக செயல்படும்.

பெயர் மாற்றம்

சின்ன வயசுல என்னை எல்லோரும் "கந்தா, காரவடை" என்று கூப்பிட்டபோது ஏன் என் பெற்றோர் எனக்கு இந்தப் பெயரை வைத்தார்கள் என்று நொந்துகொண்டதுண்டு. பிறகு வயதான பிறகு இது கடவுள் பெயரல்லவா, இந்தப் பெயர் நமக்குக் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று சமாதானமாகி விட்டேன்.

பதிவு எழுத வந்த சமயத்தில் நினைவுக்கு வந்த பெயர் அலுவலகத்தில் உபயோகப் படுத்திய பெயரான Dr.P.Kandaswamy,Ph.D. என்பதுதான். ஏனென்றால் என் அலுவலகத்திலிருந்து போகும் எல்லாக் கடிதங்களிலும் இந்தப் பெயர்தான் கடிதத்தின் மேல் பகுதியில் இருக்கும். அதன் கீழ் என்னுடைய அலுவலகப் பதவியின் பெயர், விலாசம் எல்லாம் இருக்கும். அந்த அலுவலக ஆபீசர் தோரணை முற்றிலும் விலகாத காரணத்தினால் அந்தப் பெயரை வைத்து பிளாக்கை ஆரம்பித்து விட்டேன்.

அதன் பிறகு இந்தப் பெயரைப் பற்றி எதுவும் சிந்திக்கவில்லை. சமீபத்தில் கூகூளார் இந்த வலைப்பதிவில் கொண்டுவந்த மாற்றங்களில் பயோ டேட்டாவை புதிப்பிப்பதும் ஒன்று. எப்படியோ அதில் நான் பார்த்த வேலைகளைப் பற்றிய குறிப்பு போடும்போது புரொபசர் என்று குறிப்பிட்டு விட்டேன். கூகுளார் அப்புறம் என் பெயரை Prof. Dr.P.Kandaswamy,Ph.D என்று போட ஆரம்பித்து விட்டார்கள். இந்தப் பெயர் கண்றாவியாய் இருந்தாலும் நான் அதைப்பற்றி தீவிரமாக சிந்திக்கவில்லை.

என் பதிவைப் படித்த ஒரு அமெரிக்காவில் வசிக்கும் அன்பர், என்னங்க அப்போ நீங்க SSLC, Plus 2, இளம்கலை, முதுகலைப் படிப்பு எல்லாம் படிக்கலியா, ஏன் அதையெல்லாம் பேரோட போடாம உட்டுட்டீங்கன்னு கேட்டுட்டார். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. கூகுளாண்டவரே சரணம் என்று சரண்டைந்ததில் அவர் சொன்னார், மகனே, இந்த வம்பே வேண்டாம், சர்வதேச ஸ்டைலில் ஒரு பெயர் கொடுக்கிறேன், அதை வைத்துக்கொள் என்றார்.

அந்தப் பெயர்தான் Palaniappan Kandaswamy. Palaniappan  என்னுடைய அப்பா பெயர்.  Kandaswamy  என்பது என்னுடைய பெயர் என்று நான் கூறவேண்டியதில்லை. இப்படியாக என்னுடைய இரண்டாவது நாமகரண விழா நடந்தேறியது. அனைவரும் வாழ்த்துமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.


புதன், 14 டிசம்பர், 2011

தொழிற்சாலைகளும் விவசாயமும்



இந்தியாவை வல்லரசாக்கும் முயற்சியில் தொழிற்சாலைகளை ஊக்குவிக்கும் அரசு மறைமுகமாக விவசாயத்தை நசுக்குகிறது என்கிற உண்மை பலருக்குத் தெரியாது. தொழிற்சாலைகளுக்கு நிலம் சலுகை விலையில் தரப்படுகிறது. கட்டிடங்கள் கட்டுவதற்கும், இயந்திரங்கள் வாங்குவதற்கும் சலுகை வட்டியில் கடன்கள் கொடுக்கப்படுகின்றன. தொழிற்சாலை ஆரம்பித்து பல வருடங்களுக்கு வரிச்சலுகைகள் கொடுக்கப் படுகின்றன.

இவற்றையெல்லாம் அனுபவிப்பவர்கள் யாரென்று பார்த்தால் ஏற்கனவே தொழில்துறையில் ஏகபோக உரிமைகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் பணமுதலைகளும் அவர்களுக்கு பக்கபலமாக இருக்கும் அரசியல்வாதிகளும்தான். இத்தகைய முதலாளிகளில் பெரும்பான்மை ஆசாமிகளின் வழிமுறை என்னவென்றால் – பேங்குகளில் ஏகப்பட்ட கடன் வாங்கி தொழிற்சாலை ஆரம்பிக்கவேண்டியது. ஆரம்பித்திலிருந்தே பொய்க் கணக்குகள் எழுதி பெரும்பகுதி பணத்தை ஸ்வாஹா செய்து ஸ்விஸ் வங்கிகளில் போட்டுவிடுவது. சில வருடங்கள் கழித்து நஷ்டம் என்று சொல்லி தொழிற்சாலையை மூடிவிடுவது.

இந்த தொழிற்சாலைகள் தங்கள் தொழிலாளிகளுக்கு கொடுக்கும் சலுகைகளினாலும் மற்ற ஆசை வார்த்தைகளினாலும் மக்கள் விவசாய வேலைக்குப் போகாமல் இந்த தொழிற்சாலைகளுக்கு சென்று விடுகிறார்கள். இவர்களுடன் இந்த விவசாயிகள் போட்டிபோட முடியாமல் நிலத்தை விற்றுவிடுகிறார்கள் அல்லது கடன் சுமை தாங்காமல் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இந்த கொள்கை நீடிக்குமானால் இந்தியா எதிர்காலத்தில் கல்லையும் மண்ணையும் சாப்பிட்டுத்தான் வாழ வேண்டியிருக்கும்.

ஞாயிறு, 11 டிசம்பர், 2011

தொழில் நகரங்களும் விவசாயமும்



இந்தியா ஒரு விவசாய நாடு. ஏனெனில் நிலப்பரப்பில் பாதிக்கு மேல் விவசாயம்தான் நடைபெறுகிறது. நாட்டின் வருமானத்தில் பெரும் பங்கு விவசாயம் மூலமாகவே கிடைக்கின்றது. ஆனால் விவசாயம் மட்டும் பண்ணிக்கொண்டிருந்தால் இந்தியா வல்லரசாக முடியாது.


கி.பி. 2020 ம் ஆண்டு இந்தியா வல்லரசாகிவிடும் என்று ஒருவர் கனா காணச் சொல்லிவிட்டுப் போனார். அது பகற்கனவாகவே போய்விடுமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இந்தியா வல்லரசாக முதல் தேவை இந்தியா ஒரு தொழில் நிறைந்த நாடாக மாற வேண்டும். இது சரியா, தவறா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அரசியல்வாதிகள் இது சரியென்று கருதுவதால் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார்கள்.

இதனால் நாட்டின் பொருளாதாரம் மிகுந்த மாற்றமடைந்துள்ளது. நிலங்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்துள்ளன. தொழில் நகரங்களைச் சுற்றியுள்ள நிலங்கள் அதிக விலைக்குப் போவதால் விவசாயிகள் தங்கள் நிலங்களை விற்றுவிட்டு வரும் பணத்தை பேங்கில் போட்டு வரும் வட்டியை வைத்து வாழ்கிறார்கள்.

இந்த நிலை நாட்டின் நலனை எவ்வகையில் மாற்றும் என்பது தெரியவில்லை? வருங்காலத்தில் மக்கள் உணவிற்கு யாரிடம் கையேந்த வேண்டி வரும் என்பது ஒரு பெரிய கேள்வி?    




ஈரோட்டில் பதிவர் சங்கமம் 18.12.2011


பதிவர் சந்திப்பு வருகிற 18.12.2011 ஞாயிறு அன்று ஈரோட்டில் நடைபெற உள்ளது.
இடம் : ரோட்டரி சி.டி ஹால், பழையபாளையம், ஈரோடு.

வியாழன், 8 டிசம்பர், 2011

சில தனிப்பாடல்கள்



திருவண்ணாமலை தீபத்திருநாளாம் இன்று மூன்று முத்தான பாடல்களைத் தந்துள்ளேன். படித்து பலன் பெறுக.

மெய் வருத்தம் பாரார் பசி நோக்கார் கண் துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொளார் - செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்பும் கொளார்
கருமமே கண்ணா யினார்.

கல்லாப் பிழையும் கருதாப் பழையும் கசிந்துருகி
நில்லாப் பிழையும் நினையாப் பிழையும் நின்னஞ்செழுத்தை
சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே.

மானங்குலங் கல்வி வண்மை அறிவுடைமை தானந்
தவம் முயற்சி தாளாண்மை தேனின் கசிவந்த
சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும் பசி வந்திடப்
பறந்து போம்.


திங்கள், 5 டிசம்பர், 2011

நல்ல பதிவர் யார்?


நண்பர் அப்துல் பஸ்ஜித் அவர்கள் பிளாக்

ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-8]

 Abdul Basith 

இந்தப் பதிவில் நண்பர் அப்துல் பஸ்ஜித் அவர்கள் பதிவு ஆரம்பிப்பது எப்படி என்று ஒரு தொடர் எழுதி வருகிறார். ஆனால் பிரபல பதிவர் ஆவது எப்படி என்று ஒரு செய்தியையும் கொடுக்கவில்லை. அதற்காகத்தான் இந்தப் பதிவு.

1.   தினம் ஒரு பதிவு போடவேண்டும். அதற்கு மேலும் போடவேண்டுமென்றால் சி.பி.செந்தில்குமாரிடம் (ஈரோடு) பர்மிஷன் வாங்க வேண்டும். அதற்கான காப்பிரைட் உரிமையை அவர்தான் வைத்திருக்கிறார்.

2.   பதிவுகளை சனி, ஞாயிறு, மற்றும் விடுமுறை நாட்களில் போடாதீர்கள். யாரும் படிக்க வர மாட்டார்கள். இதில் ஒரு பெரிய தொழில் நுணுக்கம் இருக்கிறது. அதைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் என்னைத் தனியே தொடர்பு கொள்ளவும்.

3.   பதிவு போட்டவுடன் அதை எல்லா திரட்டிகளிலும் இணைக்கவேண்டும்.

4.   தெரிந்தவர்கள், நண்பர்கள், எதிரிகள், முன்பின் தெரியாதவர்கள் அனைவருக்கும் ஈமெயில், ட்விட்டர், முகப்புத்தகம் மூலமாக பதிவு போட்ட செய்தியை அனுப்பவேண்டும்.

5.   ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை பிளாக்கை ஓபன் செய்து கீழ்க்கண்டவைகளை பரிசோதிக்க வேண்டும்.
a.   பின்னூட்டங்கள்.
b.   ஹிட் கவுன்ட்டர்
c.   பின்பற்றுவோர்
d.   ஓட்டு நிலவரம்
e.   தமிழ்மணம் மற்றும் அலெக்ஸா ரேட்டிங்க்.

6.   எல்லாப் பின்னூட்டங்களுக்கும் பதில் போடவேண்டும்.

7.   பின்னூட்டம் போட்ட பதிவர்களின் பதிவுகளுக்குப் போய், அங்கு பின்னூட்டம் மற்றும் ஓட்டுகள் போடவேண்டும்.

8.   அந்தப் பதிவுகளில் பின்பற்றுவோர் ஆக சேரவேண்டும்.

9.   மற்ற நேரங்களில், புதிய பதிவுகளைப் பார்த்து பின்னூட்டம் போடவேண்டும்.

10. தங்கள் பதிவுகளிலேயே திரட்டிகளுக்கு ஒரு ஓட்டுப்போட வசதி உண்டு. அதைத் தவறாமல் போடவும்.

11. அதிக பின்னூட்டங்கள் வராவிடில் நண்பர்களுடன் சிண்டிகேட் ஏற்படுத்தி பின்னூட்டங்களை அதிகப் படுத்தவும். இதற்கான வழிமுறைகளை தெரிந்து கொள்ள, அதிக பின்னூட்டங்கள் (நூற்றுக்கு மேல்) வரும் பதிவரைத் தொடர்பு கொள்ளவும்.

12. தொடர் பதிவுகளை ஆரம்பித்து அப்பாவிப் பதிவர்களைக் கோர்த்து விடவும்.

13. தொழில் நுட்ப பதிவுகளைத் தவறாமல் பார்த்து அடிக்கடி பதிவை மேம்படுத்திக் கொள்ளவும்.

14. முடிந்தால் யாரையாவது அடிக்கடி வம்புக்கு இழுக்கவும். வம்பு சமாளிக்க முடியாமல் போனால் உடனே ஒரு மன்னிப்புப் பதிவு போட்டுவிட வேண்டும். (காசா, பணமா?)

நீங்கள் முதல் பதிவு போட்டவுடனேயே பிரபலமாக மனமார்ந்த வாழ்த்துக்கள்.