செவ்வாய், 13 நவம்பர், 2012

ரேஷன் அரிசி தயாராகும் விதம்.


எல்லோருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

ரேஷன் அரிசிக்கு என்று தனி நெல் ரகம் இருக்குன்னுதான் டவுனில் குடியிருக்கும் பெரும்பான்மையான மக்கள் நினைத்துக் கொண்டிருப்பார்கள். இவர்களில் சிலர் நெல் காய்க்கும்  "மரத்தை" பார்த்தே இருக்கமாட்டார்கள்.

அப்படி ரேஷன் அரிசிக்கு தனி நெல் ஒன்றும் இல்லை. அதே நெல்லை வீட்டில் நாம் பதப்படுத்தி அரைத்தால் அந்த அரிசி சூப்பராய் இருக்கும். அப்படியானால் அதே நெல்லிலிருந்து எப்படி ரேஷன் கடைகளில் விற்கும் அல்லது விலையில்லாமல் கிடைக்கும் நாற்றம் பிடித்த அரிசியை தயார் செய்கிறார்கள் என்பது ஒரு சிதம்பர ரகசியம். அதை நான் இப்போது உங்களுக்கு கூறப்போகிறேன்.

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர் ஜில்லாவில்தான் சிவில் சப்ளை டிபார்ட்மென்டின் நெல் கொள்முதல் 90 சதம் நடைபெறுகிறது. குறிப்பாக குறுவை நெல் மகசூல் முழுவதும் சிவில் சப்ளை டிபார்ட்மென்ட் கொள்முதல் செய்துகொள்கிறது. குறுவை நெல் அறுவடை சமயத்தில் தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் மழை பெய்து கொண்டிருக்கும். அறுத்த நெற்பயிரை அப்படியே அடித்து வரும் நெல்லை சாக்கில் பிடித்து கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வந்து விடுவார்கள்.

நெல்லில் ஈரம் 10/15 சதம் இருக்கும். இதற்குக் கூடவே இருந்தாலும் இருக்கலாம். அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள் இவைகளின் பல போராட்டங்களால் இந்த ஈர நெல்லை அப்படியே கொள்முதல் செய்ய அரசு ஆணையிட்டிருக்கிறது. நெல்லில் ஊரப்பதம் எவ்வளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு விலையில் குறைத்துக்கொள்வார்கள். ஈரப்பதத்தை அளக்க புதுமையான கருவிகள் எல்லாம் உண்டு. இந்த கணக்கெல்லாம் போட்டு விவசாயி கொண்டுவந்த நெல்லைக் கொள்முதல் செய்வார்கள்.

இப்படிக் கொள்முதல் செய்த நெல் அப்படியே நெல் அரைவை மில்களுக்குப் போய்விடும். சிவில் சப்ளை டிபார்ட்மென்ட் இந்த மில்களுடன் ஒப்பந்தம் போட்டிருக்கும். ஈரப்பசைக்கான கழிவுகள் போக மிச்சமிருக்கும் நெல்லில் 68 சதம் அரிசி உற்பத்திசெய்து கொடுக்கவேண்டும். அதாவது இது புழுங்கல் அரிசிக்கான கணக்கு.

சாதரணமாகவே புழுங்கல் அரிசி தயார் செய்யும்போது 70 சதம் அரிசி கிடைக்கும். புழுங்கலரிசி தயார் செய்ய நெல்லை ஒரு முறை வேக வைப்பார்கள். ஆனால் இந்த மில்காரர்கள் இந்த நெல்லை இரு முறை வேகவைப்பார்கள். அப்போது அரிசி அவுட்டர்ன் 73 அல்லது 74 சதம் கிடைக்கும். ஆகவே சிவில் சப்ளை ரூல்படி 68 சதம் அவர்களுக்கு கொடுத்துவிட்டால் மீதி 6 சதம் மில்காரர்களுக்கு உபரி லாபம். தவிர ஈரப்பசை கணக்கில் பல குளறுபடிகள் செய்து அதிலும் லாபம் வரும்.

இப்படி தயார் செய்த அரிசி ஏறக்குறைய ஊறவைத்த அரிசி மாதிரி ஈரமாகத்தான் இருக்கும். அந்த அரிசியை சாக்கில் பிடித்து சிவில் சப்ளை கோடவுனுக்கு அனுப்பி விடுவார்கள். அந்த கோடவுன்களில் எப்போதும் 6 மாத ரேஷன் தேவைக்கான அரிசி ஸ்டாக் வைத்திருப்பார்கள். புதிதாக வந்த அரிசி மூட்டைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அட்டி போட்டு அடுக்கி வைப்பார்கள். இப்படி வந்த அரிசி ரேஷன் கடைகளுக்குப் போக எப்படியும் 6 மாதம் ஆகும். சில சமயம் அதற்கு மேலும் ஆகலாம்.

நாம் வீட்டுக்கு அரிசி வாங்கி வந்தால், நம் வீட்டுப் பெண்கள் அந்த அரிசியை ஒரு ஓரமாக கொட்டி பரத்தி வைப்பார்கள். இரண்டு நாட்கள் கழித்து அதை ஏதாவது பாத்திரத்தில் எடுத்து வைப்பார்கள். அப்போதுதான் அந்த அரிசியில் உள்ள ஈரப்பதம் போய் அரிசி கெடாமல் இருக்கும். அரிசி வாங்குவதில் அனுபவம் உள்ளவர்கள் அரிசி வாங்கும்போது இரண்டு அரிசியை எடுத்து வாயில் போட்டு கடித்துப் பார்ப்பார்கள். கடிக்கும்போது "கடுக்" என்று சத்தம் வரவேண்டும். அப்போதுதான் அந்த அரிசி நன்றாகக் காய்ந்த அரிசி என்று பொருள். அந்த அரிசியையே இரண்டு நாள் ஆறவைத்து பிறகுதான் எடுத்து வைப்பார்கள்.

சிவில் சப்ளை கோடவுனுக்கு வரும் அரிசி ஏறக்குறைய இட்லிக்கு ஊறவைத்த அரிசி மாதிரிதான் இருக்கும். இதை காற்றோட்டம் இல்லாத கோடவுனில் பத்துப்பனிரெண்டு மூட்டைகளாக அட்டி போட்டு ஆறு மாதம் வைத்திருந்தால் என்னென்ன மாறுதல்கள் அந்த அரிசியில் உண்டாகும் என்று யோசித்துப் பாருங்கள். அந்த அரிசி மக்கி, பூசணம் பிடித்து, கம கம என்று ஒரு ஸ்பெஷல் வாசனை ஏற்பட்டு மஞ்சள் கலராக மாறி இருக்கும். இதுதான் ரேஷன் அரிசி தயாரிக்கும் முறை.  

32 கருத்துகள்:

  1. தீபாவளி வாழ்த்துக்கள் சார்.

    அது எப்படி ஒரு அரசும் இந்த தவறை சரி செய்ய முனையவில்லை? ஏழைகள் என்றால் எல்லோருக்குமே இளப்பம் தானா?

    பதிலளிநீக்கு
  2. இதுவரை நான் புரியாது
    குழம்பிக் கொண்டிருந்த விஷயம்
    தெளிவாக்கியமைக்கு நன்றி
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய தீபாவளித் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. உங்களுக்கும் உங்கள் உறவினர்கள் அனைவருக்கும் இந்நாள்
    நல்லதோர் பொன்னாளாக என்றும் அமைய என் இனிய தீபாவளி
    வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் ஐயா ......

    பதிலளிநீக்கு
  4. புரிகிறது. நல்ல அரிசி கிடைக்க அரிசி அரசியலில் எதை எதையெல்லாம் களைய வேண்டும்? நம் அரசியலில் சாத்தியமே இல்லை!

    தீபாவளி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. தீபாவளி வாழ்த்துக்கள். இப்போது சிங்கப்பூரில் இருந்தாலும் சின்ன வயதில் ரேஷன் அரிசியை சாப்பிட்டு வளர்ந்தவன். ரொம்ப கஷ்டமாக இருக்கும் சாப்பிடுவதற்கு.

    பதிலளிநீக்கு
  6. விளக்கம் அறிந்தேன்... நன்றி ஐயா...

    தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  7. இதுவரை புரியாத புதிராக இருந்து வந்ததை, இன்வெஸ்ட்டிகேட் ஜர்னல் என்றுசொல்லி பொய்யை உண்மைபோல சொல்லிவரும் தமிழகத்தின் புகழ் பெற்ற வார இதழ்களில் கூட இந்த உண்மைச் செய்தி வெளிவந்ததில்லை ஆனால் தனி ஒரு பதிவாளராக யாருக்கும் புரியாமல் தெரியாமல் இருந்ததை மிக தெளிவாக சொல்லி பதிவாளர்களின் பெருமையை உயர்த்திய உங்களை எவ்வள்வு பாராட்டினாலும் தகும். வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. நல்ல பொருளை நாசப் படுத்தி வீணாக்குறானுங்களே ............ நெஞ்சு பொறுக்குதில்லையே...........

    பதிலளிநீக்கு
  9. ரேசன் பொருட்கள் என்றாலே :(


    உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. ஏன் இந்த அரசு இப்படி இருக்கிறது? அரசு என்பது மக்களுக்காக இல்லையா?

    பதிலளிநீக்கு
  11. ரேஷன் அரிசி 'தயார்' செய்யும் முறை படித்து அதிர்ச்சியாக இருந்தது.

    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  12. ஐயா அவர்களுக்கு தீப திரு நாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  13. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    ரேசன் கடை அர்சியின் காரம், மணம், குணம் பற்றி உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன். நன்றி!

    பதிலளிநீக்கு
  14. ரேஷன் அரிசியில் திரும்பத் திரும்ப பாலீஷ் செய்யாமல் இருப்பதால் அடிப்படை சத்துக்கள் அப்படியே இருக்கும். நவீன ரக அரிசிகளை சாப்பிட்டு விட்டு உடனே பசியெடுப்பது போல தோன்றும். இது கம்மென்று இருக்கும். நீங்க சொன்ன மாதிரி வெயிலில் காய வைத்தால் ஜம் ஜம் தான்.

    அரசி வியாபார நுணுக்கமே இந்த ஈரப்பதம் தான். எங்கள் ஊரும் அரிசிக்கு பெயர் போன (?) ஊர் தான்.

    பதிலளிநீக்கு
  15. அடுத்த பதிவில் தில்லு முல்லு விஷயத்தை விவரமாக பதிவிடுமாறு பணிவுடன் ஐயாவை கேட்டு கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  16. ரேசன் அரிசிக்குன்னு ஒரு டிரேட் மார்க் வேணுமில்ல! அதுக்குத்தான் இப்படி! பாவம் மக்கள்! அருமையான விளக்கமான பதிவு! நன்றி!

    பதிலளிநீக்கு
  17. முதலில் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் ஐயா.

    உங்கள் பதிவின் மூலம் ரேசன் அரிசியின் பிறப்பு பற்றி அறிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  18. Thank You sir , today i am learn many things from you . Please continue your valueble writing.

    பதிலளிநீக்கு
  19. தகவல் பகிர்வுகளுக்கு நன்றிகள் ஐயா..

    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
    மங்களம் நிறைய,
    மகிழ்வொடு வாழ்த்துவம்!

    பதிலளிநீக்கு
  20. நிறைய பேர் புழுங்கல் அரிசி என்றால் மட்டம் என்று நினைத்துக் கொள்கிறார்கள்; கேரளாவில் போடும் சிகப்பு அரிசியை நினைத்துக் கொள்கிறரர்கள். பச்சை அரிசியை விட புழுங்கல் அரிசி விலை அதிகம். பொன்னி பச்சரிசியை விட பொன்னி புழுங்கல் விலை தாயகம்; மேலும், புழுங்களில் சாதம் நிறையவே காணும்.

    இங்கு நல்ல பச்சரசி 50 பவுண்டு 19 டாலர்கள் (2.212 - ல் வகுத்தால் கிலோ கணக்கு வரும்)
    20 பவுண்டு பொன்னி புழுங்கல் 22 டாலர்கள். நான்கு பேர் உள்ள குடுமப்த்த்ற்க்கு மாதம் 20 பவுண்டு பொன்னி புழுங்கல் செலவாகும். தாய்லாந்து ஜாஸ்மின் பச்சர்சியும் விலை கம்மி தான்; அமெரிக்கன் Texas பச்சரிசியை விட கொஞ்சம் தான் விலை அதிகம்.

    ஆனால், நிறைய தமிழர்கள் விலை குறைவானா அமெரிக்கன் Texas பச்சரிசியைத் தான் வாங்குகிறார்கள். எதில் compromise செய்வது என்று யோசிக்கவேணும்; அரிசி நம் staple food..!

    பதிலளிநீக்கு
  21. அரிசி வீணா போனாலும் பரவாயில்லை. ஏழைகளுக்கு கொடுக்கமாட்டோம் என்று சொல்கிற அரசியல்வாதிகள் இருக்கிறவரை ரேஷன் அரிசியின் சாபவிமோசனத்திற்கு வழியில்லை!

    பதிலளிநீக்கு
  22. நல்ல தகவல்கள், இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

  23. அன்பரே! ரேஷன் அரிசியைப் பற்றிய தகவல் மிக்க அதிர்ச்சி தருகிறது. யாரைநோவது?

    கோவை வந்த போது தாங்கள் தேடி வந்து சந்தித்து உரையாடிய பொருந் தன்மைக்கு நான் என்றும் தலை வணங்க நன்றி செலுத்துவேன்! தாங்கள் சென்னை வரும் போது எனக்கு தகவல் தர வேண்டுகிறேன் நன்றி

    பதிலளிநீக்கு
  24. உண்மையை போட்டு உடைத்து இருக்கிறீர்கள் !நல்ல பதிவு

    பதிலளிநீக்கு
  25. தீபாவளி நல் வாழ்த்துக்கள்!
    ‘ரேஷன்’ அரிசி ‘தயாராகும்’ விதத்தை, நெல் காய்க்கும் "மரத்தை" பார்த்தே பார்த்தே இராதவர்களுக்கும், பார்த்தவர்களுக்கும் உண்மையை அழகாக சொல்லிவிட்டீர்கள்!

    பதிலளிநீக்கு
  26. இது முழுமையாக ஏற்கத்தக்க கருத்து அன்று. நானும் அங்கு எப்படி புழுங்கல் அரிசி தயார் செய்யப்படுகிறது என்பதை பார்த்தவனே. பச்சரிசியை விட, புழுங்கள் அரிசிதான் அதிகமான துர்வாடையை கொண்டிருக்கும். கட்டுரையில் சொல்லப்பட்டபடி ஈரப்பதம், ஆறு மாதங்கள்தாம் முக்கிய காரணம் என்றால், இரண்டு அரிசி வகைகளிலுமே ஒரே மாதிரியான துர்வாடைத்தானே வர வேண்டும்? ஆனால், அப்படி வருவதில்லையே!

    பொதுவாக வீடுகளில், புழுங்கல் அரிசிக்கான நெல்லை சுத்தமான முறையில், ஒருநாள் மட்டுமே ஊற வைத்து, பின் அவித்து நன்றாக காய வைப்பார்கள். ஆனால், ரேசன் அரிசிக்கான நெல்லை குறைந்தது ஐந்து நாட்கள் முதல் ஒருவாரம், பத்து நாட்கள் என சுத்தம் செய்யப்படாத தொட்டிகளில் கொட்டி ஊறவைத்து, பின் அவித்து காய வைப்பார்கள்.

    வீட்டில் ஊறவைத்து அவிக்கும் போது, அதற்கே உரிய மனம் வரும். ஆனால், இங்கு அவிக்கும் போதே துர்நாற்றம்தான் வரும். மில் களங்களில் காயப் போட்டிருக்கும் போது, அந்த ஏரியா முழுவதுமே துர்நாற்றம் வீசும். ஆனால், அங்கு வசிப்பவர்கள் அதற்கு பழகி இருப்பார்கள். புதிதாக செல்வோர் மூக்கைப் பிடித்து கொண்டு நடையை கட்டுவார்கள். இதனை நானும் செய்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  27. Warrant Balaw said.
    பச்சரிசியை விட, புழுங்கல் அரிசிதான் அதிகமான துர்வாடையை கொண்டிருக்கும். //

    உண்மையே.
    உங்கள் கருத்துக்கும் என் கருத்துக்கும் அதிக வித்தியாசமில்லையே. தஞ்சாவூரிலிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லிலிருந்து பச்சரிசி தயார் செய்யமாட்டார்கள். வேறு மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் காய்ந்த நெல்லிலிருந்துதான் பச்சரிசி தயார் செய்வார்கள்.

    அதில் ஈரப்பதம் இல்லாததினால் கோடவுன்களில் சேமித்து வைத்திருக்கும்போது அதில் வாடை வராது. வண்டுகள்தான் வரும்.

    பதிலளிநீக்கு