வியாழன், 22 நவம்பர், 2012

என் தகப்பனாரின் திதிநேற்று என் தகப்பனாருக்கு திதி கொடுத்தேன்.

பிராமணல்லாதவர்கள் வருடத்தில் மூன்று அமாவாசை (ஆடி, புரட்டாசி, தை) மற்றும் தாயார், தகப்பனார் திதி அதாவது திவசம் இவைகளை அனுஷ்டிப்பது வழக்கம். ரொம்ப நாளைக்கு முன்பு ஒவ்வொரு கிராமத்திற்கும் அல்லது இரண்டு மூன்று கிராமங்களுக்கு சேர்த்து ஒரு பஞ்சாங்க அய்யர் இருப்பார். அமாவாசைக்கு தர்ப்பணம் கொடுப்பது வசதியானவர்கள் மட்டும் செய்வார்கள். ஆனால் எல்லோரும் திதி கொடுக்கத் தவறமாட்டார்கள். திதி எப்பொழுது வருகிறது என்று இவர் சில தினங்களுக்கு முன்பே வந்து சொல்லுவார். திதியன்று வீட்டிற்கு வந்து திதியை நடத்தி வைத்துவிட்டுப் போவார். ஆனால் இப்போது அந்த மாதிரி பஞ்சாங்க ஐயர்கள் இல்லை.

திதியன்று பேரூர் போனால் அங்கு ஆற்றங்கரையில் கொட்டகை போட்டுக்கொண்டு ஏகப்பட்ட அய்யர்கள் உட்கார்ந்து கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு அய்யருக்கும் ஒவ்வொரு ஏஜென்ட் உண்டு. இந்த மாதிரி திதி மற்றும் அந்திமக் காரியங்கள் செய்ய வருபவர்களை அவர்கள் கரெக்ட்டாக மோப்பம் பிடித்து, அமுக்கி, அவர்களின் கொட்டகைக்கு தள்ளிக்கொண்டு போய்விடுவார்கள். அந்த மெயின் அய்யர் நல்ல அனுபவம் வாய்ந்தவராக இருப்பார். பார்ட்டியைப் பார்த்ததுமே எவ்வளவு தேறும் என்று கணித்து விடுவார்.

அவர் தரத்திற்கு இல்லையென்றால் பக்கத்து கொட்டகைக்கு தள்ளிவிடுவார். தன்னுடைய தரத்திற்கு ஏற்றவர்களை மட்டும் நிறுத்திக்கொள்வார். நமக்குப் புரியாத வார்த்தைகளை உச்சரித்து ஐந்து நிமிடத்தில் காரியத்தை முடித்து விடுவார். கடைசியில் இறந்தவர் பெயரைக்கேட்டு அவரும், அதற்கு முந்தின ஏழேழு தலைமுறையினரும் சொர்க்கத்தில் க்ஷேமமாக வாழட்டும் என்று சொல்லி, தக்ஷிணையை வாங்கிக்கொண்டு அடுத்த கிராக்கியை கவனிக்க ஆரம்பித்து விடுவார்.
கொஞ்சம் அரிசியைக் கொடுத்து அதை அன்றைய சமையலில் சேர்த்துக்கொள்ளச் சொல்லுவார். அவ்வளவுதான். நாம் நம் முன்னோர்களைக் கடைத்தேற்றி விட்டாயிற்று என்ற திருப்தியுடன் வீட்டுக்கு வந்து மற்ற வேலைகளைக் கவனிக்கவேண்டியதுதான்.
மற்ற வேலைகள் என்னவென்றால், அன்றைக்கு விரதம் இருந்து விதிப்பிரகாரம் உண்டான சமையல் செய்யவேண்டும். விதிகள் என்னென்னவென்றால்:

கீழ்க்கண்ட காய்கறிகள் சேர்த்துக் கொள்ளக்கூடாது.
வெங்காயம்
கத்தரிக்காய்
இங்கிலீஷ் காய்கறிகள்.

சேர்த்துக்கொள்ளவேண்டிய காய்கறிகள்.
வாழைக்காய்
பாவற்காய்
சேனைக்கிழங்கு
அரசாணிக்காய்
கொத்தவரங்காய்
அவரைக்காய்
பிரண்டை
அகத்திக்கீரை
வெண்டைக்காய்
வாழைப்பூ
வாழைத்தண்டு

இதெல்லாம் அய்யர் சொல்லிக் கொடுத்ததுதான்.
அன்றைய சமையல் கொஞ்சம் தடபுடலாக இருக்கும். வடை, பாயசம் கண்டிப்பாக உண்டு.

சமையல் முடிந்ததும் ஒரு கிழக்குப்பார்த்த சுவரில் பக்கம் பக்கமாக, மூன்று இடத்தில் விபூதியை தண்ணீரில் குழைத்து முப்பட்டை போடவேண்டும். இவைகள் காலம் சென்ற மூன்று தலைமுறைகளைக் குறிக்கும். அவற்றிற்கு சந்தனப்போட்டு வைத்து குங்குமம் வைத்தால் மூன்று தலைமுறையினரை வீட்டில் எழுந்தருளச் செய்தாகி விட்டது.
இதற்கு முன்னால் ஒரு தலைவாழை இலை போட்டு அதில் அன்று செய்த உணவு வகைகள் எல்லாவற்றையும் பரிமாற வேண்டும். பக்கத்தில் ஒரு விளக்கு ஏற்றி வைக்கவேண்டும். ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு, இரண்டு பழம், ஒரு தேங்காயை உடைத்து இரண்டு மூடியையும் வைக்கவேண்டும்.

ஊதுபத்தி கொளுத்தி, அதற்கு ஸ்டேண்ட் இருந்தால் அதில் வைக்கலாம், இல்லாவிட்டால் அந்த வாழைப் பழத்தில் செருகி வைத்துவிடலாம். ஒரு சின்ன சொம்பில் சுத்தமான தண்ணீர் வைக்கவேண்டும். தேங்காய் உடைக்கும்போது வரும் இளநீரை இந்தச் சொம்பில் பிடித்து வைக்கவேண்டும்.

எல்லாம் ரெடி. இனி சாமி கும்பிடவேண்டியதுதான். முதலில் தண்ணீர் சுற்றிப்போடவேண்டும். பிறகு ஊதுபத்தி சுற்றவேண்டும். முன்னொரு காலத்தில் விறகு அடுப்புகள் இருந்த காலத்தில், சாம்பிராணி வைத்திருப்பார்கள். கேஸ் வந்த பிறகு அந்த வழக்கங்கள் வழக்கொழிந்து போயின. பிறகு கற்பூரம் பற்றவைத்து தீபாராதனை காட்டவேண்டும். பிறகு இன்னொரு முறை தண்ணீர் சுற்றிப்போட்டால் பூஜை முடிந்தது. எல்லாரும் கும்பிட்ட பிறகு, அந்த தலைவாழை இலையில் இருக்கும் உணவுகளை எல்லாம் ஒன்றாகச் சேர்த்து பிசைந்து, வேறு ஒரு இலையில் எடுத்து வைக்கவேண்டும்.

குடும்பத்தினர் அனைவரும் இதைச் செய்யவேண்டும். படையல் இலையில் கொஞ்சம் உணவு மீதி இருக்கவேண்டும். இப்படி தனியாக எடுத்த உணவைக் கொண்டு போய் காகத்திற்கு வைக்கவேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் இதற்கென்று ஒரு இடம் இருக்கும். அங்கு வைத்தால்தான் காகம் வரும். நம் முன்னோர்கள் காக ரூபத்தில் வந்து நாம் வைக்கும் உணவைச் சாப்பிட்டுவிட்டுப் போவதாக ஐதீகம். இதுவும் அய்யர் சொல்லிக் கொடுத்ததுதான். மாடு மேய்ப்பவனுக்கு இதெல்லாம் வேற எப்படித்தெரியும்?

காகம் வந்து சாப்பாடு எடுத்த பிறகுதான் குடும்பத்தினர் சாப்பிடலாம். படையல் போட்ட இலையில், அன்றைய திதி கொடுத்தவன் சாப்பிடவேண்டும். மற்றவர்கள் எல்லோருமே அன்று வாழை இலையில்தான் சாப்பிடவேண்டும். இலையில் மிச்சம் வைக்கக் கூடாது.
தரையில் உட்கார்ந்துதான் சாப்பிடவேண்டும். நான் வருடத்தில் ஐந்து நாட்கள் இப்படி தரையில் உட்கார்ந்து சாப்பிடுகிறேன். அதாவது மூன்று அமாவாசை, இரண்டு திதிகள், ஆகியவற்றுக்காக.

அன்று இரவு சாப்பாடு சாப்பிடக்கூடாது. வடை பாயசம் மிச்சம் இருப்பதை சாப்பிடலாம்.

கடவுள், மறுபிறவி இவைகளுக்கு எல்லாம் அப்பாற்பட்ட ஒரு நிகழ்ச்சி இது. ஏதோ ஒரு வகையில் நம் முன்னோர்களை வழிபட உண்டான ஒரு முறை. அந்த வகையில் இதை நான் வருடா வருடம் கடைப்பிடிக்கிறேன். ஆனால் பேரூர் போய் அய்யருக்கு காணிக்கை கொடுப்பதில்லை. வீட்டில் சாமி கும்பிடுவதோடு சரி.

கடந்த 45 வருடங்களாக இந்த திதி கொடுப்பதைச் செய்து வருகிறேன். முன்னோர்களுக்கு செய்யவேண்டிய கடமைகளைச் செய்த ஆத்ம திருப்தி கிடைக்கிறது.

31 கருத்துகள்:

 1. அந்நாட்களில் ஐந்து அல்லது பத்து ஏழைகளுக்கு உணவுப் பொட்டலங்கள் வங்கிக் கொடுப்பது என் தந்தையார் வழக்கம். அல்லது அரிசி 1 கிலோ, பாசிப் பருப்பு கால் கிலோ, து. ப கால் கிலோ வாங்கி இதே போன்ற ஏழைகளுக்குக் கொடுத்து விடுவார்!

  இப்போதெல்லாம் சாம்பிராணி கப்ஸ் கிடைக்கிறதே... அங்கு கிடைப்பதில்லையா? தனி ஒரு கப் ஐந்து ரூபாய்! மினி வாளி போல இருக்கும் கப்பை அப்படியே கொளுத்த வேண்டியதுதான். வாசனைப் புகை வீட்டைச் சூழும்.

  பதிலளிநீக்கு
 2. //கடந்த 45 வருடங்களாக இந்த திதி கொடுப்பதைச் செய்து வருகிறேன். முன்னோர்களுக்கு செய்யவேண்டிய கடமைகளைச் செய்த ஆத்ம திருப்தி கிடைக்கிறது.//
  நல்ல விஷயம்

  பதிலளிநீக்கு
 3. நான் கடவுள் மறுப்பாளனாக இர்புந்தாலும், உங்கள் செயலை முழுதும் ஆமோதிக்கிறேன்; இதில் தவறே இல்லை; ஒவ்வொரு மனிதனும் அவனுக்கு பிடித்த முறையில் வாழானும். மறு பிறவி மன்னன்ங் கட்டி பிறவியை நம்புகிறார்கள் நம்பட்டும். அதில் தப்பு இல்லை...

  தட்சனை "மட்டும்" கொடுக்காதீர்கள் என்று தான் நான் சொல்வேன்!

  [[கடந்த 45 வருடங்களாக இந்த திதி கொடுப்பதைச் செய்து வருகிறேன். முன்னோர்களுக்கு செய்யவேண்டிய கடமைகளைச் செய்த ஆத்ம திருப்தி கிடைக்கிறது.]]

  பதிலளிநீக்கு
 4. முன்னோர்களுக்கு செய்யவேண்டிய கடமைகளைச் செய்த ஆத்ம திருப்தி கிடைக்கிறது.

  அன்று பசுமாட்டுக்கு பழம் அகத்திக்க்கீரை தருவது விஷேசம் ..

  பதிலளிநீக்கு
 5. திதி கொடுக்கும் காட்சிகளை தினசரி பார்பதுண்டு .ஒரு சிலர் மட்டுமே ஒவ்வொரு வருடமும் திதி கொடுகிறார்கள் .இரவில் ஒன்றும் உண்ணவிரதம் என்பது புதுமையாக இருக்கிறது .அய்யர் சொல்லும் சொலோகத்தினால் மட்டும் மோட்சம் என்பதில் எனக்கு உடன்பாடில்லை .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லாவற்றிற்கும் மனதே பிரதானம். நீங்களே உங்கள் பிரார்த்தனைகளை மனதிற்குள் சொன்னாலும் கடவுள் என்று ஒருவர் இருந்தால் கண்டிப்பாக ஏற்றுக்கொள்வார் என்று முழுமையாக நான் நம்புகிறேன்.

   நீக்கு
 6. உங்கள் நம்பிக்கைகளைக் கேள்வி கேட்க விரும்பவில்லை. எனக்கு ஏற்பட்ட சந்தேகங்களையே கேட்கிறேன்.

  1) விறகு அடுப்பு போய் கேஸ் அடுப்பில் சமைக்கிறோம்; மேசையில் அமர்ந்து சாப்பிடுவதில் என்ன தவறு?

  2)இரவு வடை பாயாசமே சாப்பிடலாம் என்றால் ரசம் சாதம் சாப்பிடக்கூடாதா?

  உங்களுக்கு விருப்பம் இருந்தால் இவற்றுக்கு உங்கள் பார்வையில் பதில் சொல்லலாம்!

  சரவணன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதலில் ஒன்று சொல்ல விரும்புகிறேன். நான் வாழ்ந்துகொண்டு இருப்பது எனக்காக மட்டும் அல்ல. என் குடும்பம் முக்கியமாக என் மனைவியின் விருப்பங்களை முக்கியம் என்று கருதுகிறேன். ஆகவே சூழ்நிலைக்கேற்ப என் செயல்களை செய்ய வேண்டியவனாகிறேன்.

   உங்கள் கேள்விகளுக்கு என்னுடைய கருத்து.

   1. இப்பொழுது பலர் உடல் ஆரோக்கியத்திற்காக யோகாசனம் பயில்கிறார்கள். அதில் பத்மாசனம் ஒன்று. அதனால் நான் கண்ட பலன் கால்களை நன்கு சுழற்ற முடிகிறது. கீழே உட்கார்ந்து சாப்பிடும்போது இந்த பத்மாசனத்தின் பலனை உணறுகிறேன்.

   2. காலையில் ஒன்றும் சாப்பிடாமல் இருந்து மதியம் நன்றாக சாப்பிட்டால் மாலையில் வயிறு மந்தமாக இருக்கிறது. அப்போது லைட்டாக சாப்பிட்டால் போதும். ரசம் சாதத்திற்கும் வடை பாயசத்திற்கும் கலோரி என்று பார்க்கும்போது வித்தியாசம் இல்லையென்றாலும் மனதுதான் காரணம்.

   நீக்கு

 7. ஏதோ நம்பிக்கை இல்லாவிட்டாலும் சில சடங்குகளைச் செய்வதில் திருப்தி அடைகிறீர்கள் போலிருக்கிறது....!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாங்க. நம்மால் முடிந்ததை செய்துவிடலாமே என்ற எண்ணம்தான்.

   நீக்கு
 8. எங்க தாத்தனுக்கும், ஆத்தாவுக்கும் வருசா வருசம் அய்யன் திதி கொடுத்து வருகிறார். ஆனா காலவோட்டத்தில் அவரு தலைமுறையோட இந்தச் சடங்குகள் நின்று விடப்போகின்றன.

  பதிலளிநீக்கு
 9. உங்களுக்கு திருப்தி கிடைத்ததே போதும்... அது தான் முக்கியம்...

  பதிலளிநீக்கு
 10. காகம் வந்து சாப்பாடு எடுத்த பிறகுதான் குடும்பத்தினர் சாப்பிடலாம்
  ///////////////////////

  காகமே இல்லாத இடத்தில இருக்கிறவ்அங்க என்ன செய்வார்கள் ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காகமே எப்பொழுதும் இல்லாமல் இருக்கும் இடத்தில் என்ன செய்வார்களென்று எனக்கும் தெரியவில்லை. காகங்கள் முன்பு இருந்து இப்போது இல்லாமலிருக்கும் இடங்களில் சும்மா பேருக்கு காகத்திற்கு வைத்து விட்டு சாப்பிட ஆரம்பிப்பார்கள். கோவை ஆர். எஸ் புரம் பகுதிகளில் முன்பு காகங்கள் இருந்தன. இப்போது அறவே இல்லை.கால மாற்றம்.

   நீக்கு
  2. மேலே சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் (சாஸ்திரங்கள்) பழைய கால கட்டங்களில் நமது (தமிழ்) கலாச்சாரத்தில் உள்ள நல்ல விஷயங்கள்... அவை இந்த கால கட்டத்தில் எந்த அளவிற்கு மாறியுள்ளது (மாற்றப்பட்டுள்ளது) என்பதை எண்ணிப்பாா்க்க வேண்டும். ஒரு உயிருக்கு உணவிட்டு பின் உண்ண வேண்டும் என்பது தான் இதன் பொருள். தற்போது நவீன காலத்தில் காகம், சிட்டுக்குருவி போன்ற பட்சிகளை காண முடியாததற்கு காரணம் என்னவென்று நாம் யோசிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்று... இதைத்தான் நாம் Survival of Fitness என நாம் கூறிக் கொண்டு இருக்கிறோம்...

   நீக்கு
 11. இது பற்றி தாங்கள் கூறியதால் திதிக்கு என்ன செய்வார்கள் என்பதை தெரிந்து கொண்டேன் ஐயா.இது வரை சும்மா கேள்வி பட்டதோட உண்டு என்னென்ன செய்வார்கள் என்பது இது வரை தெரியாது.முழுவிளக்கம் அளித்ததிற்கு நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 12. எங்கள் வீட்டிலும் வீட்டு வழிபாட்டுடன் ஆச்சிரம மதிய உணவை கொடுக்கும் வழக்கம் உண்டு.

  நீங்கள் கூறியதுபோல மனத்திருப்திக்காக செய்பவைதான்.

  பதிலளிநீக்கு
 13. முன்னோர்களுக்கு திதி கொடுப்பது மிகவும் சிறந்த விசயம்! அது போல கயாவில் சிரார்த்தம் செய்ய ஒரு மகனாவது வருவான் என்று பெற்றவர்கள் காத்து இருப்பார்கள் என்று சொல்வார்கள்! இருக்கும்போதும் இறந்தபின்னும் பெற்றோரை திருப்தி செய்த பிள்ளைகள் கட்டாயம் உயர்வார்கள்! உங்களின் விரிவான விளக்கத்திற்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கயாவிலும் சிரார்த்தம் கொடுத்திருக்கிறேன், நண்பரே. என்னால் முடிந்தவரையில் என் முன்னோர்களுக்கும் உயிருடன் இருக்கும் என் குடும்பத்தினருக்கும் என் நெருங்கிய நண்பர்களுக்கும் நான் செய்யவேண்டிய கடமைகளையும் உதவிகளையும் தவறாமல் செய்து கொண்டு வருகிறேன். இதைத் தவிர வேறு சமூக சேவையோ இறை வழிபாடோ தேவையில்லை என்பது என் கருத்து.

   நீக்கு
 14. //ஏதோ ஒரு வகையில் நம் முன்னோர்களை வழிபட உண்டான ஒரு முறை. அந்த வகையில் இதை நான் வருடா வருடம் கடைப்பிடிக்கிறேன். ஆனால் பேரூர் போய் அய்யருக்கு காணிக்கை கொடுப்பதில்லை. வீட்டில் சாமி கும்பிடுவதோடு சரி. //

  ஐயா இதுவே என் வழியும்.
  இங்கும் காகம் உண்டு காண்பதரிது. அதனால் ஒரு பிடியை யன்னலால் எறிந்து விடுவோம்.

  பதிலளிநீக்கு
 15. உங்களை எவனோ நன்னா ஏமாத்தியிருக்கான்; எங்க அப்பா வருடத்திற்கு ஒரு முறை தான் கொடுக்கிறார்; one for each: தாத்தா. பாட்டி
  [[பிராமணல்லாதவர்கள் வருடத்தில் மூன்று அமாவாசை (ஆடி, புரட்டாசி, தை) மற்றும் தாயார், தகப்பனார் திதி அதாவது திவசம் இவைகளை அனுஷ்டிப்பது வழக்கம்.]]

  பதிலளிநீக்கு
 16. உங்கள் இடுகைகளைப் படித்தாலே பல இடுகைகள் எழுதலாம்.
  உதாரணம்...அதில் பத்மாசனம் ஒன்று...
  யார் அந்த பத்மா? உங்க ஆத்துக்காரி உங்களை ஒன்னும் சொல்ல மாட்டார்களோ?
  நீங்கள் பாக்யசாலி...!

  1. இப்பொழுது பலர் உடல் ஆரோக்கியத்திற்காக யோகாசனம் பயில்கிறார்கள். அதில் பத்மாசனம் ஒன்று. அதனால் நான் கண்ட பலன் கால்களை நன்கு சுழற்ற முடிகிறது. கீழே உட்கார்ந்து சாப்பிடும்போது இந்த பத்மாசனத்தின் பலனை உணறுகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கு பத்மாவைத் தெரியாதா? ஐயோ பாவம். நான் தினமும் அவளை வணங்கிவிட்டுத்தான் அடுத்தவேலை.

   பத்மம்= தாமரை
   பத்மா= தாமரையில் வசிப்பவள் = லக்ஷ்மி = பணம்

   நீக்கு
 17. நானும் என் தாமரை-யை நித்தம் மூன்று வேளை கும்பிடாவிட்டால் நேக்கு செருப்படி தான்..!

  புரியவில்லையா? என்ன கொங்கு நாட்டு தங்கம் நீங்க?

  Cut and paste and enjoy this song...!
  http://www.youtube.com/watch?v=Bkq9CroHdW8&feature=related

  கோவை குசும்பன் பாக்கிராஜ் சொல்லும் தாமரை இது தான்; படம்: இது நம்மாளு!

  பதிலளிநீக்கு
 18. சில விஷயங்களை கேள்வி கேட்காமல் செய்து விடுவது மனதுக்கு நிம்மதி தரும். அதில் இந்த திதி கொடுப்பதுவும் ஒன்று.
  நல்ல பகிர்வு!

  பதிலளிநீக்கு
 19. very useful information sir,thanku ,we offer new set of clothes along with padayal,i've a Query some say we should wet the clothes nd dry them b4 offering in the padayal,is it necessary and how many banana leaves we 've to serve,is it 1,3 or 5

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது அவரவரகள் குடும்ப வழக்கத்தைப் பொருத்தது. நீத்தாரை நினைவு கூர்வது என்பதுதான் முக்கியம். மற்றவை மனது சாந்திக்காக.

   நீக்கு
 20. ஒருவர் இறந்து விட்டால் ஓரு வருடம் கோவிலுக்கு செல்லக் கூடாது எங்கிறார்களே ஏன்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒருவர் என்பதை தன் குடும்பத்தில் ஒருவரை என்று கொள்கிறேன். அதாவது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் இப்படி. இவர்களின் மறைவு உங்களுக்குள் ஏற்படுத்திய தாக்கம் மறைவதற்கு ஒரு வருடம் ஆகலாம் என்பது ஒரு குத்து மதிப்பான காலம். அதற்குள் கோவிலுக்குச் சென்றால் உங்கள் மனம் கடவுளின் பேரில் பூரணமாக செல்லாது. உங்கள் இழப்பையே நினைத்துக் கொண்டிருக்கும். அதனால்தான் ஒரு வருடத்திற்கு கோவிலுக்குப் போகவேண்டாம் என்று சொல்கிறார்கள்.

   நீக்கு
 21. திதீ கொடுக்கும் வீட்டில் பிறர் சாப்பிலாமா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சாப்பிடுவது சாப்பிடுபவரின் பிரியம். திதி கொடுப்பவர் அடுத்தவர்களுக்கு அன்று அன்னமிடுதல் புண்ணியம் சேர்க்கும்.

   நீக்கு