திங்கள், 11 பிப்ரவரி, 2013

காதில் வண்டா? கவலை வேண்டாம்

ஸ்ரீராம்.22 ஜனவரி, 2013 7:49 PM என்னுடைய "காது குடைவது எப்படி" என்ற பதிவில் போட்ட பின்னூட்டம்.
மூக்கு சிந்துவது, பல் குடைவது பதிவுகள், காதில் வண்டு, பூச்சி புகுந்தால் எப்படி எடுப்பது போன்ற பதிவுகள் கியூவில் நிற்கின்றன என்பதைக் கவலையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.


நண்பர் ஸ்ரீராம் கேட்டதில் கடைசி பதிவு.


காது குடைவது எப்படி என்று சமீபத்தில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக காதில் ஏதாவது எறும்பு, கொசு, வண்டு, அல்லது வேறு பூச்சிகள் ஆகியவை சென்று விட்டால் என்ன செய்வது என்று பார்ப்போம்.

சாதாரணமாக இந்த மாதிரி பூச்சிகள் காதுக்குள் போகாது. அபூர்வமாகத்தான்  இது நிகழும். இருந்தாலும் களவும் கற்று மற என்ற பரம்பரையில் வந்த நாம் இதைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியம் என்பதால் இந்தப் பதிவை இடுகிறேன்.

எறும்பு யானைக் காதில் புகுந்தால் யானை இறந்து விடும் என்கிற புருடாவையெல்லாம் நம்பாதீர்கள். அப்படியெல்லாம் யானை இறக்காது. மனிதனும் அப்படித்தான். எறும்பு காதில் புகுந்த சில விநாடிகள் காதுக்குள் விநோதமாக உணர்வீர்கள். கொஞ்ச நேரம் அப்படியே இருந்தால் அந்த எறும்பு செத்துப் போய்விடும். பிறகு தானாகவே அந்த எறும்பின் உடல் வெளி வந்து விடும்.

ஆனால் அதற்குள் சில அவசரக்குடுக்கைகள் "ஐயோ, அம்மா" என்று அலறுவார்கள். அவர்களுக்கான வைத்தியம். ஒரு டம்ளரில் தண்ணீர் எடுத்துக்கொண்டு, அவர்களை ஒருக்களித்து படுக்கச்சொல்லி, காதில் அந்த தண்ணீரை மெதுவாக ஊற்ற வேண்டும். எறும்பு உயிருடன் இருந்தால் தண்ணீரில் நீந்தி வெளியே வந்து விடும். அது இறந்து போயிருந்தால், அதன் சடலம் மேலே மிதந்து வரும். அதை எடுத்து உரிய முறையில் அடக்கம் செய்து விடலாம்.

அவ்வளவுதான் வைத்தியம். இதே முறைதான் வேறு என்ன பூச்சிகள் காதுக்குள் போனாலும் கடைப்பிடிக்க வேண்டியது.

சிலருக்கு பூச்சி வெளியில் வந்த பிறகும், பூச்சி காதுக்குள்ளேயே இருப்பது போன்ற உணர்வு இருந்து கொண்டே இருக்கும். இதற்கு இன்னும் கொஞ்சம் தீவிர வைத்தியம் தேவை.

அந்தக் காலத்தில் வீடுகளில் குடுக்கை விளக்கு என்று ஒன்று இருக்கும். மண்ணெண்ணையில் எரியும் பெட்ரூம் விளக்கு அது. இப்போது ஏறக்குறைய மறைந்து போய் விட்டது. அது இல்லாவிட்டால் அகல் விளக்கு என்றால் எல்லோருக்கும் தெரியும். அதை எடுத்து ஏற்றி வைத்துக்கொள்ளுங்கள்.

பிரச்சினை பண்ணும் நபரை ஒருக்களித்துப் படுக்கவையுங்கள். ஒரு வரமிளகாய் எடுத்து காம்பைக் கிள்ளிவிட்டு, அந்தப் பக்கத்தில் ஒரு தெரிய ஓட்டை போடவும். அதில் உள்ள விதைகளை கொட்டி விடவும். அதில் முக்கால்வாசி நல்லெண்ணை ஊற்றவும். பிறகு ஒரு ஊசியினால் அந்த மிளகாயைக் குத்திக்கொள்ளவும்.

படத்தைப் பார்கவும்
அந்த ஊசியினால் மிளகாயை விளக்கு மூக்கில் சிறிது நேரம் காட்டவும். எண்ணை சூடானவுடன் அந்த எண்ணையை பிரச்சினைக்குரியவர் காதில் ஊற்றவும். இந்த சமயத்தில் நல்ல வலுவானவர்கள் நாலு பேர் அந்த பிரச்சினைக்குரியவரை அசையாமல் பிடித்துக் கொள்ளவேண்டும். அவ்வளவுதான் வைத்தியம் முடிந்தது. காதுக்குள் எந்த பூச்சி போயிருந்தாலும் இந்த வைத்தியத்தில் வெளியே வந்தே ஆகவேண்டும்.

மேலும் விளக்கம் வேண்டுபவர்கள் பின்னூட்டத்தில் குறிப்பிட்டால், எங்கள் கம்பெனி வைத்தியரை அனுப்பி வைக்கிறோம். அவர் டெமான்ஸட்ரேஷன் வகுப்புகள் நடத்தி விளக்கம் தருவார். 

14 கருத்துகள்:

 1. உப்புத்தண்ணீர் உபயோகித்தாலும் உடனே வெளியில் வந்துவிடும் .உபகயோகமான தகவல்

  பதிலளிநீக்கு
 2. வைத்தியம் காரமாக இருக்கிறது! அன்றொருநாள் அற்றைத்திங்களில் காதில் சிறு வண்டு புகுந்து கொடுத்த தொல்லையில் அருகிலிருந்த தனியார் மருத்துவமனையை நள்ளிரவில் அணுகி, அங்கிருந்த டாக்டர் பையன் விட்டு விடுங்கள் என்று கதறியும் கேட்காமல் ஏதேதோ காதுக்குள் ஊற்றி, விட்டுக் குடைந்து இம்சை தந்து, கடைசியாக கிளிசரின் ஊற்றி சூடாக்கி விட்டு, காலை வாருங்கள் ஆபரேஷன் செய்து விடலாம் என்றதும் எழுந்து ஓடியே வந்து விட்டேன். காலை வண்டு ஆபரேஷன் தேவையில்லாமல் தானாகவே வெளிவந்திருந்தது - உயிரில்லாமல்! அப்புறம் இரவுகளில் தனியார் மருத்துவமனைகளை நாடுவதில்லை! குறிப்பாக சிறு கிளினிக்குகளை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எப்படியோ உங்கள் காது தப்பிச்சது, எனக்கும் ஒரு பதிவாச்சுது.

   நீக்கு
 3. ஹா... ஹா... நல்ல வலுவானவர்கள் நாலு பேர் தேவை...

  நன்றி ஐயா...

  பதிலளிநீக்கு
 4. வரமிளகாய் வைத்தியம் நான் கேள்விப்படாத ஒன்று. பதிவுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 5. என் மகன் சிறுவயதிக் சிறு சிறு பொருட்களை காதில் போட்டுக்கொண்டு வந்து தொல்லை கொடுப்பார் ..

  பள்ளியில் அமரும் பாயிலிருந்து சிறு சிறு குச்சிகளை உடைத்து காதில் போட்டுக்கொண்டு வருவார் சிலேட்டு பென்சில்களை உடைத்து காதில் போட்டுக்கொண்டு வருவதுண்டு ..
  நானே ஹேர்பின் கொண்டு எடுத்துவிடுவேன் ..

  ஒருமுறை சிறு இரும்புக்குண்டு ஒன்று போட்டுக்கொண்டு வந்து பெருமையாக தெரிவித்தார் ,
  தலையை சாய்த்துப்பார்த்தும் உருண்டு வரவில்லை .. என்னமுயன்றும் அது ஹேர்பின்னுக்குள் சிக்கவில்லை

  அப்பாவும் வெளியூர் சென்றிருந்தார் .. காந்தத்தை உபயோகித்து வெளியில் எடுத்தேன் ....

  பதிலளிநீக்கு
 6. காதிற்குள் தண்ணீர் ஊற்றி எறும்பு எடுத்து பார்த்து இருக்கிறேன் .எண்ணெய் காரம் காது தாங்குமா ! புதுமையாக இருக்கிறது .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தண்ணீரைவிட எண்ணை சிறந்தது. எண்ணையில் இன்பெக்ஷன் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு. மிளகாயில் காய்ச்சுவதால் காரம் அவ்வளவு அதிகமாக இருக்காது. இது கொங்கு வட்டாரத்தில் கை வைத்தியம்.

   நீக்கு
 7. நள்ளிரவில் என் காதுக்குள் எறும்பு ஒன்று சென்று விட, ஏதோ வித்தியாசமாக காதில் படபட என்று சப்தமிட என் கணவரை எழுப்பி சொன்னேன். அவர் தண்ணீர் சிறிதளவு ஊற்ற எறும்பு வெளியே வந்து விட்டது.

  இராஜராஜேஸ்வரி மேடமின் பின்னூட்டம் திகிலடைய வைக்கிறது....

  பதிலளிநீக்கு

 8. நல்ல விஷயங்கள் நாலு பேருக்கு உதவுகிறார்போல. ! ஹி ஹி ஹி. !

  பதிலளிநீக்கு
 9. அறிவியல்பூர்வமான விழிப்புணர்வூட்டக்கூடிய பதிவு!

  பதிலளிநீக்கு
 10. உப்புத் தண்ணீர் வைத்தியம் தான் இன்றுவரை செய்து பார்த்திருக்கிறேன். மிளகாய் வைத்தியம் புதுசு.
  அதுவா காதுக்குள் போனால் சரி, தானே போட்டுக் கொண்டு வந்தால்...திருமதி இராஜராஜேஸ்வரியின் குழந்தை மாதிரி...பயமாயிருக்கே!

  பதிலளிநீக்கு