புதன், 25 செப்டம்பர், 2013

ம்யூச்சுவல் பண்ட் என்றால் என்ன?


இது ஒரு உயர்ந்த நோக்கம் கொண்டு ஆரம்பிக்கப் பட்ட ஒரு நிதி திட்டம். ஆனால் கழுதை தேய்ந்து கட்டெறும்பானது போல் இது இன்று ஒரு நாற்றம் பிடித்துப்போன அழுகிய திட்டம்.

முதல் முதல் ஆரம்பிக்கப்பட்ட ம்யூச்சுவல் பண்ட் திட்டம் யூடிஐ என்று அழைக்கப்பட்டது. இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாட்களில் மனிதர்களுக்கு மனச்சாட்சி என்று ஒன்று இருந்தது. (இன்று அது கிலோ என்ன விலை என்று கேட்குமளவிற்குப் போய்விட்டது வேறு விஷயம்.) மக்களிடமிருந்து திரட்டிய பணத்தை நல்ல வருமானம் தரக்கூடிய கம்பெனிகளில் ஷேர்களாக முதலீடு செய்தார்கள். வந்த வருமானத்தில் நிர்வாக சொலவுகள் போக மீதியை முதலீடு செய்த பொது மக்களுக்கு பிரித்துக் கொடுத்தார்கள்.

நிர்வாகச் செலவுகள் மொத்த முதலீட்டில் 1 அல்லது 2 சதவிகித த்திற்கு மேல் போகக்கூடாது என்ற வரைமுறை இருந்தது. வெகு காலத்திற்கு இது ஒன்றுதான் ம்யூச்சுவல் பண்ட் வகையில் இருந்தது. பிறகு அரசாங்கத்தை நடத்தும் மக்கள் பிரதிநிதிகள் மனச்சாட்சி என்ற வேண்டாத ஒன்றை தூக்கிப்போட்டு விட்டார்கள்.

"மீதே மாதி, மாதே மாதி" தெலுங்கில் சொல்லப்படும் ஒரு சொல்வடை. அதாவது நமக்குள் பேதமில்லை என்று காட்டுவதற்காக சொல்லப்படுவது. கூர்ந்து கவனித்தால்தான் அதன் பொருள் சரியாக விளங்கும். "என்னுடையது என்னுடையதே, உன்னுடையதும் என்னுடையதே".

இரண்டு பேர் சேர்ந்தாங்களாம். அதில் ஒருவன் புத்திசாலி. அவன் அடுத்தவனைப் பார்த்து சொல்கிறான். இப்போது நாம் இருவரும் சும்மாதானே இருக்கிறோம். நீ வீட்டுக்குப்போய் கொஞ்சம் அவல் கொண்டு வா, நான் வீட்டிற்குப்போய் உமி கொண்டு வருகிறேன். இரண்டையும் கலக்குவோம். இருவரும் அதை ஊதி ஊதி தின்போம் என்றானாம். இவன் கொண்டு வருவதோ வெறும் காசுக்காகாத உமி. ஏதோ இவனும் தன் பங்குக்கு ஒன்றை கொண்டு வருகிறானாம். கதை எப்படி பார்த்தீர்களா?

இதை நான் இன்னும் கொஞ்சம் மேம்படுத்தியிருக்கிறேன். நீ அவல் கொண்டு வா, நான் உமி கொண்டு வருகிறேன். இரண்டையும் கலக்குவோம். நீ ஊதி ஊதிக் கொடு, நான் சாப்பிடுகிறேன். மேம்போக்காகப் பார்த்தால் ஆளுக்கு ஒரு பொருள் கொண்டு வருகிறார்கள், ஆளுக்கு ஒரு வேலை செய்கிறார்கள். ஆனால் ஆதாயம் யாருக்கு என்று பார்த்தீர்களா?

மனச்சாட்சியைக் கடாசி விட்ட அரசாங்க அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் மக்களை எப்படி எப்படி மொட்டை அடிக்கலாம் என்று பார்த்தார்கள். அப்போதுதான் இந்த ம்யூச்சுவல் பண்ட் திட்டம் தோன்றியது. மக்கள் தங்கள் சேமிப்பை அப்போது பேங்குகளில் பிக்சட் டெபாசிட்டாக வைத்திருந்தார்கள். வரும் வட்டியில் திருப்தி அடைந்தார்கள்.

அவர்களுக்கு ஆசை காட்டினார்கள். ம்யூச்சுவல் பண்ட்டில் பணம் போட்டால் அது குட்டிக்கு மேல் குட்டி போடும். பேங்க் டெபாசிட் வட்டியை விட இரண்டு மூன்று மடங்கு வருமானம் கிடைக்கும் என்று விளம்பரப்படுத்தினார்கள். ஆனால் நடந்தது என்ன? முதலுக்கே மோசம் வந்து விட்டது. ம்யூச்சுவல் பண்ட்டில் பணம் போட்டவர்கள் எல்லாம் தலையில் துண்டைப்போட்டுக் கொண்டார்கள்.

ஏன் இவ்வாறு நேர்ந்தது? நான் பொருளாதார நிபுணன் அல்ல என்று முதலிலேயே சொல்லி இருக்கிறேன். ஆனால் பொது அறிவு இருக்கிறது. இத்தகைய ம்யூச்சுவல் பண்ட்களில் நிர்வாகச்செலவு 2 சதத்திற்கு மேல் போகக் கூடாது என்ற ரூலை முதலில் தூக்கி எறிந்தார்கள். பொது மக்கள் முதலீடு செய்யும் பணத்தை நல்ல கம்பெனிகளில் ஷேர் வாங்க வேண்டுமல்லவா? அதற்காக பெரிய பொருளாதார நிபுணர்களை லட்சக்கணக்கில் சம்பளம் கொடுத்து வேலைக் கமர்த்தினார்கள். (எல்லோரும் ஆளும் வர்க்கத்திற்கு ஏதோ ஒரு வகையில் மாமன் மச்சான் உறவுகள்)

இவர்களும் மனச்சாட்சியை துடைத்து விட்டு வந்தவர்கள்தான். புதிதாக ஆரம்பிக்கும் கம்பெனிகள், ஆரம்பித்து திவாலாகும் நிலையில் இருக்கும் கம்பெனிகள் இவைகளைத் தேடிப்பிடித்து முதலீடு செய்தார்கள். அந்தக் கம்பெனிகளும் மிகுந்த நன்றியைக் காட்டினார்கள். அப்புறம் என்ன, ம்யூச்சுவல் பண்ட் வருமானமா ஈட்டும்? வருடா வருடம் நஷ்டம்தான். மக்களுக்கு அவர்கள் போட்ட பணத்தில் பாதி கூட கொடுக்க முடியவில்லை. ம்யூச்சுவல் பண்ட்டை திவால் பண்ணினார்கள்.

ஈமு கோழி, தேக்கு மரம் போன்ற திட்டங்களுக்கும் இதற்கும் அதிக வித்தியாசமில்லை. என்ன அவைகள் தனி நபர்களால் ஆரம்பிக்கப்பட்டவை. ம்யூச்சுவல் பண்ட்கள் பெரிய அரசாங்க நிறுவனங்களினால் ஆரம்பிக்கப்பட்டவை. தனி நபர்களை சட்டத்தினால் கைது பண்ணி விட்டார்கள். அரசாங்க நிறுவனங்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் இருவரும் செய்தது மக்களை ஏமாற்றியதுதான்.

இதில் எனக்குப்புரியாத ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இன்றும் புதிது புதிதாக ம்யூச்சுவல் பண்ட்கள் முளைத்துக்கொண்டே இருக்கின்றன. மக்களும் பணத்தைப் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள். மொட்டை அடிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

நானும் ஒரு ம்யூச்சுவல் பண்ட் ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன். பதிவர்கள் அனைவரும் ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறேன். 

16 கருத்துகள்:

  1. மற்ற முதலீட்டைப்போலவே Mutual Funds இல் முதலீடு செய்வதும் ஆபத்தானதுதான். அதுவும் பங்குகளில் முதலீடு செய்யும் Equity Fund இல் Bonds களில் முதலீடு செய்யும் Fixed Income Fund ஐ விட risk அதிகம். பங்குகளின் விலையில் ஏற்ற இறக்கம் ஏற்படும்போது Mutual Funds இன் Net Asset Value மாறும். மேலும் Mutual Funds கள் புதிய Fund தொடங்கும்போதே அந்த நிறுவனங்கள் 'Mutual Fund investments are subject to market risk. Please read the offer document carefully before investing' என்றுதான் விளம்பரப்படுத்துகின்றன. நாம் தான் ஜாக்கிரதையாய் இருக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. வாங்க, பொதுமக்களிடம் உதை வாங்குவதற்கு ஒரு ஆள் வேண்டுமே என்று காத்துக்கொண்டிருந்தேன்.

      நீக்கு
  3. இதில் எனக்குப்புரியாத ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இன்றும் புதிது புதிதாக ம்யூச்சுவல் பண்ட்கள் முளைத்துக்கொண்டே இருக்கின்றன. மக்களும் பணத்தைப் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள். மொட்டை அடிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.//

    இதைத்தான் மந்தை குணம் என்பார்கள். இதுக்கு முன்னால எவ்வளவு பேர் ஏமாந்திருந்தாலும் நாம ஏமாற மாட்டோம்கற எண்ணம். ஆனால் சாமான்யர்கள் பங்குசந்தையில் முதலீடு செய்து பயன் அடையட்டுமே என்ற நல்ல நோக்கத்தோடு UTI துவங்கி வைத்த திட்டம்தான்.... சில தனிநபர்களின் பேராசை, ஒழுங்கீனம் நல்லதொரு திட்டத்தை நாசப்படுத்திவிட்டது.

    பதிலளிநீக்கு
  4. நான் தான் முதலில்...! ஹிஹி...!!! வாழ்த்துக்கள்...

    அன்புடன் DD

    http://dindiguldhanabalan.blogspot.com/2013/09/Desire-Greedy.html

    பதிலளிநீக்கு
  5. மியுச்சுவல் பண்ட் பற்றி இவ்வளவு எளிமையாக சிறப்பாக விளக்கிவிட்டு உங்கள் பண்டில் சேரச் சொல்கிறீர்களே! நல்லதொரு பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேசத்தெரிஞ்சா போதுமுங்க, முட்டாப்பசங்க எந்த திட்டத்தில வேணுமின்னாலும் சேருவாங்க.

      நீக்கு
  6. மிக அழகாக எளிதில் புரியும் படி எழுதியுள்ளீர்கள்.
    அருமை ஐயா.
    இதைப்படித்தாவது மக்கள் திருந்தினால் சந்தோசம்.

    பதிலளிநீக்கு

  7. மியூச்சுவல் ஃபண்ட் பற்றிப் பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  8. மக்களுக்கு தேவையானதை தந்துள்ளீர்கள்
    நன்றி

    பதிலளிநீக்கு
  9. இன்றும் புதிது புதிதாக ம்யூச்சுவல் பண்ட்கள் முளைத்துக்கொண்டே இருக்கின்றன. மக்களும் பணத்தைப் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள். மொட்டை அடிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

    ஏமாறத்தயாராக இருப்பதால் ஏமாற்றுகிறார்கள்..!

    பதிலளிநீக்கு
  10. ஐயா ,நீங்க எனக்கு பணம் கடனா கொடுங்க நான் என் பெயரில் உங்க கம்பெனியில் முதலிடு பண்ணுகிறேன் ,
    உங்க பணம் எங்கேயும் போகாம உங்க கையிலேயே இருக்கும் பாரு

    பதிலளிநீக்கு
  11. தங்கள் பதிவைப் படித்ததும் எனது அனுபவம் நினைவுக்கு வந்தது. நானும் வங்கியிலிருந்து விருப்பஓய்வு பெற்றவுடன் ஒரு தொகையை வங்கி மியூட்சுவல் பண்டில் கட்டினேன். சுண்டைக்காய் வட்டிக்கு வருமானவரி, அது இது என்று ஆயிரத்தெட்டு கேள்விகள். கணக்கை முடித்து விட்டேன்.

    பதிலளிநீக்கு
  12. ஐயா அவர்களிடம் பிடித்ததே அந்த கடைசி குறும்புத்தனமான கேள்விதான்.....உங்க கம்பெனியில் கள்ளநோட்டு வாங்குறதுன்ன சொல்லுங்க இப்பவே சேர்ந்துக்குறேன்.அப்படியே கள்ள நோட்டு எப்படி அடிக்குறது அப்படினு கத்து கொடுத்துடுங்க.

    பதிலளிநீக்கு