வெள்ளி, 16 ஜனவரி, 2015

பதிவுலகம்பற்றி என் சிந்தனைகள்


பதிவுலகம் ஒரு நல்ல பொழுது போக்கு தளம். அதே சமயம் புதுப் புதுக் கருத்துகளை அறிந்து கொள்ளவும் உதவுகின்றது. இது பதிவர்களின் சுதந்திர உலகம் என்று சொல்லலாம்.

என் மனதில் தோன்றும் எண்ணங்களை நான் முன்பு டைரியில் அல்லது ஒரு தனி நோட்டுப் புத்தகத்தில் குறித்து வந்தேன். பிளாக்குகள் தோன்றி எனக்கு அவை அறிமுகமானபின் பிளாக்குகளில் எனது மன ஓட்டங்களைப் பதிகிறேன். அவைகளை எல்லோரும் படிக்கலாம் என்ற முறையில் என் பதிவைப் பொதுவில் அதாவது ஓபனாக வைத்திருக்கிறேன்.

என் பதிவைப் படிப்பதும் படிக்காததும் வாசகர்களின் விருப்பம். என் பதிவை நீங்கள் படித்துத்தானாக வேண்டும் என்று யாரும் யாரையும் கட்டுப்படுத்த முடியாது. வாசகர்கள் படித்தாலும் படிக்காவிட்டாலும் பதிவு எழுதும் ஆர்வம் கொண்டவர்கள் எழுதிக்கொண்டுதான் இருப்பார்கள். சொல்லும் எண்ணங்கள் புதுமையாக இருந்தால் வாசகர்கள் தானாகவே அந்தப் பதிவைப் படிப்பார்கள்.

ஆனாலும் இங்கும் சில வரைமுறைகள் இருக்கின்றன. பதிவர்கள் தங்கள் கருத்துகள் எதுவானாலும் கூறலாம். ஆனால் அவை ஆபாசமாகவோ அல்லது தனி நபர் தாக்குதலாகவோ, வன்முறைகளைத் தூண்டுவதாகவோ, ஒரு தேசத்தின் நலனுக்கு எதிராகவோ, இருக்கக் கூடாது.  இப்படி வரைமுறைகள் உண்டு.

இந்த வரைமுறைகளுக்கு உட்பட்டு பதிவர்கள் தங்கள் கருத்துக்களை எழுதலாம். அப்படி எழுதும் கருத்துகளுக்கு அவர்களே பொறுப்பு ஏற்கவும் வேண்டும். பதிவு எழுதுவது என்பது பிள்ளையைப் பெற்றுவிட்டு குப்பைத்தொட்டியில் போட்டு விட்டுப் போகும் சமாச்சாரமல்ல. ஒவ்வொரு பதிவர் எழுதும் கருத்துகளும் அவருடைய தனித்துவம் வாய்ந்ததாகவே இருக்கும்.

பின்னூட்டங்கள் இடுபவர்கள் விளக்கம் கேட்கலாம். கருத்தை ஒட்டி விவரங்கள் கொடுக்கலாம். உங்கள் கருத்து தவறென்று சுட்டிக்காட்டலாம். அப்படிக் கூறப்பட்ட பின்னூட்டங்களுக்கு அந்தப் பதிவர் பதில் கூறலாம். கூறாமலும் விடலாம். அதை தன் பதிவில் போடலாம் போடாமலும் இருக்கலாம். அதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது.

பின்னூட்டமிடுபவர்கள் அந்தப் பதிவரைக் கலாய்க்க அல்லது சிண்டு முடிய அல்லது வீண் வம்பு வளர்க்க நினைக்கலாம். அப்படி வரும் பின்னூட்டங்களுக்கு அந்தப் பதிவர்  சரியான பதிலடி கொடுக்கக் கூடும். நான் அப்படித்தான் செய்கிறேன். பின்னூட்டமிடுபவர் என்ன நோக்கத்துடன் எழுதியிருக்கிறார் என்பதை அடையாளம் கண்டு அதற்குப் பொருத்தமான பதில் கொடுக்க நான் தயங்கியதே இல்லை.

பதிவுலகில் பதிவர்களின் நிஜ அடையாளம் காண்பதில் பல சிக்கல்கள் உள்ளன. பெரும்பாலானோர் தங்கள் உண்மையான அடையாளங்களை மறைத்தே வைத்திருக்கின்றனர். அதனால் பின்னூட்டங்களை யார் எழுதுகிறார்கள் என்பதை கணிக்க முடிவதில்லை. அவர்கள் எழுதும் பின்னூட்டங்களை வைத்தே அதற்கு பதில் தர வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதில் சில சமயங்களில் குழப்பம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதற்கு அப்படி அடையாளத்தை மறைத்து வைத்திருக்கும் பதிவர்களே காரணமாவார்கள்.

நான் படித்து பின்னூட்டம் இடும் பதிவுகளில் அந்தப் பின்னூட்டத்தை பிரசுரிப்பதோ நிராகரிப்பதோ அந்தப் பதிவரின் உரிமை. என் பின்னூட்டத்தை ஏன் நிராகரித்தீர்கள் என்று கேட்க முடியாது. இதை ஒரு படிப்பினையாக எடுத்துக்கொண்டு அந்தப் பதிவில் பின்னூட்டம் இடாமல் இருந்து விட வேண்டியதுதான்.

பதிவுகளினால் பெரிய சமுதாயப் புரட்சி வெடித்து விடும் என்று நான் நம்பவில்லை. காரசாரமான விவாதங்கள் நடக்கலாம். அவ்வளவுதான். சில நாட்களில் அது நீர்த்துப்போகும். ஏதோ பொழுதைப் போக்க ஒரு வழி என்கிற அளவில்தான் பதிவுகளை நான் உபயோகப்படுத்துகிறேன். மறைமுகமான கிண்டலும் நகைச்சுவையும் என் பதிவுகளில் கையாள்கிறேன். இதில் ஒரு சோகம் என்னவென்றால் பலருக்கு அந்த நகைச்சுவையை அடையாளம் கண்டு கொள்ள முடிவதில்லை.

நான் வம்புச்சண்டைக்குப் போவதில்லை. ஆனால் வந்த சண்டையை விடுவதுமில்லை. அதற்கு நான் பிறந்த ஊர், இனம், வளர்ந்த சூழ்நிலை ஆகியவைகளே காரணம். அதற்காக நான் வருந்தவில்லை. என் பாணியை மாற்றவும் போவதில்லை. மாற்ற நினைத்தாலும் பழகின தோஷம் அவ்வளவு சீக்கிரம் மாறாது.  நான் தவறு செய்திருந்தால் அந்த தவறுக்காக மன்னிப்பு கேட்க தயங்குவதில்லை. ஆனால் காரணமில்லாத குற்றச்சாட்டுகளைக் கண்டு சும்மாவும் இருக்கமாட்டேன்.

நடப்பவை நடக்கட்டும். நடப்பவை நன்றாகவே இருக்கட்டும்.

36 கருத்துகள்:

 1. உங்களை கலாய்க்க முடியுமா ஐயா...?

  இளமை என்றும் ஊஞ்சலாடட்டும்...

  பதிலளிநீக்கு
 2. பதிவுலகு குறித்து அறியாதவர்களுக்கு
  ஒரு எளிமையான அருமையான விளக்கம்
  ஏறக்குறைய என்னுடைய என்னுடைய கருத்தும் இதுவே

  இனிய பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. //இதில் ஒரு சோகம் என்னவென்றால் பலருக்கு அந்த நகைச்சுவையை அடையாளம் கண்டு கொள்ள முடிவதில்லை//அவர்கள் கொடுத்து வைத்தது அவ்வளவு தான் ஐய்யா! நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள்.

  பதிலளிநீக்கு
 4. இனிய பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

  ஏறத்தாழ நீங்கள் சொல்லும் கருத்துக்கள் யாவையுமே என்னுடையவும் தான்,

  சுப்பு தாத்தா.
  www.subbuthatha.blogspot.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றிகள், நன்றிகள், நன்றிகள்.

   நீக்கு
 5. நகைச்சுவையினை அடையாளம் கண்டு கொள்ள நகைச்சுவை உணர்வாளர்களால் மட்டும்தான் முடியும்
  தொடருங்கள் ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னுடைய அறிவியல் பதிவு 1 முழுவதும் நகைச்சுவைப் பதிவே. ஆனால் அதை சரியாக அடையாளம் கண்டு கொண்டவர்கள் மிகச் சிலரே.

   நீக்கு
 6. // பின்னூட்டமிடுபவர்கள் அந்தப் பதிவரைக் கலாய்க்க அல்லது சிண்டு முடிய அல்லது வீண் வம்பு வளர்க்க நினைக்கலாம்.//
  அப்படிப்பட்ட பின்னூட்டங்களை கண்டுகொள்ளாமல் இருப்பதே நல்லது ஐயா.

  பதிலளிநீக்கு
 7. பதிவர்கள் பின்னூட்டங்களை நிராகரிப்பது ஏற்புடையதல்ல.அப்படிப்பட்டவர்கள் கோழைகள் என்று கூறத்தயங்கமாட்டேன்

  பதிலளிநீக்கு
 8. நான் உங்கள் பதிவுகளை ரசித்துக் கொண்டேதான் இருக்கிறேன் ..சுவைகளிலே ,உங்களைப் போன்றே நானும் நகைச் சுவைதான் :)
  த ம 7

  பதிலளிநீக்கு
 9. வம்புச்சண்டைக்கு போகக்கூடாது; வந்த சண்டையை விடக்கூடாது என்பது, நல்ல கொள்கை ஐயா. இந்த கொள்கை விளக்கத்துக்கும், பதிவில் இருக்கும் படத்துக்குமான தொடர்பு, எனக்கு புரியவில்லையே, ஐயா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புயலுக்கு முன்னும் பின்னும் அமைதி நிலவும். அந்த நிலவுதான் இந்தப் படம்.
   தொடர்பு புரிந்ததல்லவா?

   நீக்கு
 10. நான் தவறாமல் படிக்கும் சுமார் 10- 15 பதிவுகளில் தங்களுடையதும் ஒன்று..நான் படிக்கும் பதிவுகளுக்கெல்லாம் பின்னூட்டம் இடுவது என்று வழக்கம் ஏற்படுத்திக்கொள்ளவில்லை...தங்களுடைய

  நகைச்சுவை உணர்வு போற்றத் தகுந்ததாகவே இருக்கின்றது; infantile -ஆக இல்லை..
  "நான் அறிவியல் பூர்வமாக கடவுள் என்று ஒன்று இல்லை என்பதை உணர்கிறேன். ஆனாலும் தினமும் குளித்தவுடன் கடவுள் படத்திற்கு முன் நின்று விபூதி பூசிக்கொள்கிறேன். இது இரட்டை வாழ்வு அல்லது ஆஷாடபூதித்தனம் என்று பலர் நினைக்கலாம். ஆனால் வாழ்க்கையை இத்தனை ஆண்டு காலம் வாழ்ந்த பிறகு, வாழ்வில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும் அறிவியல் விளக்கம் இல்லை என்பதை உணர்ந்திருக்கிறேன். மனித மூளைக்கு அப்பாலும் ஏதோ ஒன்று இருக்கிறது, அது நம் வாழ்வோடு பிணைந்து இருக்கிறது என்றும் நம்புகிறேன்." இந்த தங்களுடைய விளக்கம் எனக்கும் மிகவும் ஏற்புடையதே.தொடருங்கள். In the ultimate analysis , you very well know , that it is Quality not quantity that counts...

  பதிலளிநீக்கு
 11. எனக்கு தெளிவாக புரிந்துவிட்டது...

  நல்லதே நினைப்போம் நல்லாதாகவே நடக்கும்...
  நம் வழியில் நடப்போம்...

  பதிலளிநீக்கு
 12. ஐயா ,
  நான் (கார்த்திக் அம்மா ,..கலாகார்த்திக் ) எந்த காரணம் கொண்டும் என் சுய விவரத்தை மறைக்கவில்லை.பதிவு எழுதும்போதும் சரி, பின்னூட்டம் இடும்போதும் சரி, என் கண்ணில் 24 மணிநேரமும் நடனமிடும் என் கார்த்தியின் நினைவுகள் 90 % நேரம் கண்ணீரை வரவழைத்துவிடும். அந்த நேரங்களில் மதி மயங்கி பெயர் (அ ) சொல்ல வந்த கருத்துகளை கூட முழுமையாக சொல்லாமல் விட்டிருப்பேன். என் பதிவுகளை படித்தாலே தெரியும். ஒரு பின்னூட்டத்தில் சொல்லியது மறைந்தவரின் உடமைகளை எப்படி போற்றி பாதுகாக்கிரோமோ அது போல்தான் என் மகனின் வலையை பாதுகாக்கிறேன்.மகன் மறைந்த துக்கம் ( ஒருவர் சொன்னார் ..9 வருடங்கள் ஆகியும் ..என்று) இன்னும் 100 பருடங்கள் ஆனாலும் துக்கம் கூடுகின்றதே அன்றி குறையவில்லை.பேதை நான். கார்த்தி இதை மூட நம்பிக்கை என்று வாதிட்டிருப்பான். அவன் ஒட்டியே பின்னூட்ட்டம் இட்டேன். யார் மனதையும் புண்படுத்த அல்ல.
  அன்புடன்
  கலாகார்த்திக் (கார்த்திக் அம்மா )

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்போது நீங்கள் இட்டிருக்கும் பின்னூட்டத்தில் கலா கார்த்திக் என்று பெயரிட்டிருக்கிறீர்க்ள.

   ஆனால் "குடும்பப்பெண்களுக்கு சில அறிவுரைகள்" என்ற பதிவில் இட்ட பின்னூட்டத்தில் இவ்வாறு நீங்கள் பெயர் குறிப்பிடவில்லை. உங்கள் பின்னூட்டம் இதோ

   //Ponniyinselvan/karthikeyanபுதன், 7 ஜனவரி, 2015 ’அன்று’ 7:31:00 முற்பகல் IST
   எவ்வளவு மூடத்தனமான குறிப்புகள். வாசல் எங்கே இருக்கிறது , சாணம் தெளிக்க? பொட்டில்லாமல் இருக்கக் கூடாது சரி, அப்படியானால் கணவனை இழந்தோர்? தயவு செய்து அறிவியல் ரீதியான விஷயங்களை தாருங்கள்.//

   இந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ள குறிப்புகள் காலம் காலமாக இருந்து வரும் இந்து மத சம்பிரதாயங்கள்தானே? அதில் எங்கே மூடத்தனம் வந்தது? இந்து மதத்தில் பெண்கள் பொட்டில்லாமல் இருக்கக் கூடாது என்கிற சம்பிரதாயத்தை சுட்டிக்காட்டினால் விதவைகள் என்ன செய்வது என்று கேட்பது விதண்டாவாதம்தானே? இந்து மதத்தில் விதவைகள் திலகம் வைப்பதில்லை என்பது மரபுதானே? இதை கேள்வியாகக் கேட்பது என் வாயில் இருந்து ஏதாவது வந்தால் அதை வைத்து தொடர் விவாதம் செய்யத்தான் என்று நான் அனுமானித்தேன். நீங்கள் ஒரு கைப்பெண் என்பது உங்கள் பின்னூட்டத்தில் இருந்து நான் எவ்வாறு அனுமானிக்க முடியும்?

   வாசல் எங்கே இருக்கிறது? என்ற குறிப்பு கொஞ்சம் அதிகப் பிரசிங்கித்தனமாக இல்லை? இன்றைய அபார்ட்மென்ட்டுகளில் வாசல் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இங்கு கூட முன் கதவிற்கு முன் இருக்கும் சிறிய இடத்தை வாசலாகக் கருதி இன்றும் பெண்கள் கோலம் இடத்தான் செய்கிறார்கள். இதை அறிந்திருந்தும் வாசல் எங்கே என்று கேட்பது என்ன நியாயத்தில் சேர்ந்தது?
   தவிர சம்பிரதாயங்களுக்கு அறிவியல் ரீதியாக என்ன விளக்கம் தர முடியும்?
   அறிவியல் ரீதியான விஷயங்களைத் தாருங்கள் என்று குறிப்பிட்டுள்ளீர்களே? அதற்காகத்தான் அறிவியல் ரீதியாக "பேன் ஆராய்ச்சிக் கட்டுரை" ஒன்று எழுதியுள்ளேன். அந்தப் பதிவு முழுக்க முழுக்க உங்களை மனதில் வைத்தே எழுதப்பட்ட பதிவு. அப்படிப்பட்ட பதிவுகளையே இனிமேல் எழுதவா?

   நான் என் நிலையை எடுத்துச் சொல்லியிருக்கிறேன்.

   திரு தமிழ் இளங்கோ உங்கள் நிலையை எடுத்துக் காட்டியவுடன் அந்தப் பதிவிலேயே நான் என் கருத்தைச் சொல்லியிருக்கிறேன். அதாவது அந்த பின்னூட்டம் ஒரு பெண்மணி எழுதியது என்று தெரிந்திருந்தால் என் பதில் வேறு மாதிரியிருந்திருக்கும் என்று சொன்னேன். அந்தப் பதிவிலேயே என் வருத்தத்தையும் தெரிவித்திருந்தேன்.

   யாரையும் புண்படுத்துவது என் இயல்பல்ல. ஆனால் குதர்க்கமான பின்னூட்டங்களுக்கு அதற்கு தகுந்த மாதிரி பதில் கொடுப்பது என் வழக்கம். உங்கள் பின்னூட்டம் குதர்க்கமானதாக எனக்குப் பட்டது. அதனால் பதிலும் குதர்க்கமாக அமைந்தது. அவ்வாறு பின்னூட்டமிட்டது சரியல்ல.

   நீக்கு
  2. சார்: நீங்க 21ம் நூற்றாண்டில் "பெண்கள் எப்படி இருக்க வேண்டும்?" என்று எழுதிய பதிவு நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்று. அதை நீங்கள் முதலில் புரிந்து கொள்ளுங்கள். அதை "குதர்க்கப்பதிவு" "பெண்களை இழிவு படுத்தும்" பதிவு என்றும் சொல்லலாம். நாம் குதர்க்கமாக பதிவு எழுதுவது நம் உரிமை. அதற்கு குதர்க்கப்பின்னூட்டமிடுவது பாதிக்கப்பட்டவர்கள் உரிமை. உங்க வயது, உங்க தகுதி, உங்க அனுபவம் எல்லாம் எல்லாருக்கும் புரிகிறது. அப்படி குதர்க்கப் பின்னூட்டமென்று நீங்கள் கருதினால்,முதற்கண் அதை வெளியிட வேண்டியதில்லை.

   கார்திக் அம்மாவோ, அல்லது இன்னொரு ஆணோ, இந்தக் கருத்தை வைப்பதில் எந்தத்தவறும் இல்லை. உங்களுக்கு குதர்க்கமாகத் தெரிவது பலருக்கு நியாயமாகத் தெரிகிறது. பலர் உங்க வயதை மதித்து அதை சொல்லவில்லை. வயதுக்காக உங்களுக்கு ஆறுதலாக எழுத்கிறார்கள். பிரச்சினை ஆரம்பித்தது குதர்க்கப் பின்னூட்டத்தில் இல்லை. குதர்க்கப் பதிவில் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!

   திரும்பத் திரும்ப நீங்க இதையே/உங்கள் நிலையை நியாயப்படுத்துவதால், திரும்பத் திரும்ப எதிர் தரப்பும் தங்களை நிலையை நியாயப்படுக்கிறது. அவ்வளவே!

   You are as guilty as the other person you are fingering at. yeah, we are all making mistakes. We will make mistakes for rest of our life. No big deal. Let us just move on. Let us not try make or justify that his/her mistake is bigger than mine! Take care, Sir!

   நீக்கு
  3. //நீங்க 21ம் நூற்றாண்டில் "பெண்கள் எப்படி இருக்க வேண்டும்?" என்று எழுதிய பதிவு நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்று.//

   நான் எழுதிய பதிவில் கூறியவைகளை பெரும்பாலான பெண்கள் இன்றும் கடைப்பிடித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். நீங்கள் தடைமுறைக்கு ஒவ்வாதவை என்று சொல்வதினால் பெண்கள் அந்தப் பழக்கங்களை விட்டு விடப் போவதில்லை.

   பின்னூட்டங்களை வெளியிடுவதும் வெளியிடாததும் என் விருப்பம். அதற்கு தகுந்த மாதிரி பதில்கள் போடுவதும் என் விருப்பம்.

   என் வயதையோ, படிப்பையோ காரணமாக்கி எந்த வாதத்தையும் முன்
   வைக்கவேண்டாம்.

   //வயதுக்காக உங்களுக்கு ஆறுதலாக எழுத்கிறார்கள்.// இது உங்கள் கற்பனை.

   நான் என் பதிவில் என்ன எழுதவேண்டும் என்பது என் விருப்பம். அதை எப்படி வேண்டுமானாலும் விமரிசிப்பது உங்கள் உரிமை. ஆனால் பின்னூட்டங்களைப் பிரசுரிக்கவேண்டாம் என்று கூற உங்களுக்கு உரிமை இல்லை.

   நீங்கள் என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதலாம். எனக்கும் அதற்குத் தகுந்தவாறு பதில் எழுதத் தெரியும்.

   எப்பொழுதிலிருந்து நீங்கள் கார்த்திக் அம்மாவிற்கு வக்கீலாக ஆனீர்கள்? குதர்க்கப் பின்னூட்டம் போட்டவர்களுக்கு என் கருத்துக்கு பதில் எழுதத் தெரியாதா?

   Let us just move on. இதை நான் முன்பே உங்களுக்குச் சொல்லி விட்டேன். இருந்தாலும் தொடர்கிறீர்கள். எனக்கு எந்த வித ஆட்சேபணையும் இல்லை. இந்த வாதத்தைத் தொடருவோம்.

   ஒன்று ஆங்கிலத்தில் எழுதுங்கள். இல்லை தமிழில் எழுதுங்கள். இந்தக் கலப்படம் வேண்டாம்.

   நீக்கு
  4. //திரும்பத் திரும்ப நீங்க இதையே/உங்கள் நிலையை நியாயப்படுத்துவதால், திரும்பத் திரும்ப எதிர் தரப்பும் தங்களை நிலையை நியாயப்படுக்கிறது. அவ்வளவே!//

   என் நிலையை நான் நியாயப் படுத்தாமல் வேறு யார் நியாயப் படுத்துவார்கள். அப்படி நான் நியாயப் படுத்தவில்லையானால் நான் எழுதினதை நானே நம்பவில்லை என்று அர்த்தம். அப்படி யாரும் நினைக்க நான் விடமாட்டேன்.

   குதர்க்கப் பின்னூட்டம் போட்டவர்களே தங்கள் நிலையை நியாயப் படுத்துகிறார்கள். நியாயமாக எழுதின நான் எதற்காகப் பின் வாங்கவேண்டும்? இன்னும் எவ்வளவு பின்னூட்டம் போட்டாலும் நான் பதில் எழுதுவேன்.

   நீக்கு
  5. ***என் நிலையை நான் நியாயப் படுத்தாமல் வேறு யார் நியாயப் படுத்துவார்கள்.***

   உண்மைதான் .. இதில் "என்" என்பது டாக்டர் கந்தசாமி மட்டுமல்ல, உலகில் உள்ள அனைவருமே அந்த "என்" னில் அடங்குவார்கள். அவரவர் பேசுவது அவரவருக்கு நியாயமாகத்தான் தெரியும். இந்த உண்மை விளங்காமல் இல்லை! நன்றி. :)

   ***என் வயதையோ, படிப்பையோ காரணமாக்கி எந்த வாதத்தையும் முன்
   வைக்கவேண்டாம்.***

   நல்லது. இனிமேல் உங்க விருப்பப்படி உங்களை ஒரு சகபதிவராகவே பாவித்து பின்னூட்ட மிடுகிறேன். :)

   ***எப்பொழுதிலிருந்து நீங்கள் கார்த்திக் அம்மாவிற்கு வக்கீலாக ஆனீர்கள்? **

   நான் வக்கீலுக்குப் படிக்கவில்லை! நான் அவர்களுக்காக வாதாடவும் இல்லை. எனக்க்காக எனக்கு சரி என்று தோன்றுவதை மூடி மறைக்காமல் சொல்லுகிறேன். இங்கே இவ்விவாதத்தில் என் சிந்தனையும், அவர்கள் சிந்தனையும் ஒரே அலைவரிசையில் இருப்பதால். நான் அவர்கள்பக்கம். அவ்வளவே! நாளைக்கே அவர்களுக்கு எதிரணியிலும், அவர்கள் கருத்துக்கு எதிர் கருத்தும் சொல்லலாம். அது பிரச்சினையை பொறுத்தது. :)

   ***ஒன்று ஆங்கிலத்தில் எழுதுங்கள். இல்லை தமிழில் எழுதுங்கள். இந்தக் கலப்படம் வேண்டாம்***

   நல்ல அறிவுரை. இனிமேல் இதை மனதில்கொண்டு எழுதுகிறேன். :)

   நீக்கு
 13. நல்ல பதிவு ஐயா, உங்களுடைய கருத்து முற்றிலும் நிதர்சனம். தொடருங்கள் ஐயா.

  பதிலளிநீக்கு
 14. நீங்கள் மனம் திறந்து பதிவாக எழுதிவிட்டீர்! நான் எழுதவில்லை !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த வயதிற்குப் பின்பும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் நாடக வாழ்க்கை வாழ வேண்டிய அவசியமில்லை என்று கருதியதால்தான் இந்தப் பதிவு.

   நீக்கு
  2. அய்யா வணக்கம். வேறொரு பதிவரின் பக்கத்தில் தங்களின் தளமறிந்து தொடர்ந்து வருகிறேன்.
   மிக நாகரிகமும், பொறுப்பு உணர்வுடனும் பதிவிடும் தங்கள் தளத்தின் மூலம் நல்ல பல தகவல்களை பகிர்வதுடன் பின்னூட்டங்களை நேர்மையுடன் எதிர்கொள்ளும் தங்களின் தளமே நல்ல ஜனநாயக தன்மைக்கு சிறந்த உதாரணம். சுருங்கச்சொல்வதானால்

   'கருத்துக்கு மாறுபட்டு
   கருத்திடும்
   கருத்தாளர்களின்
   கருத்துக்கும்'
   மதிப்பளிக்கும் தாங்கள்
   பதிவுலகில்
   ஆச்சரியமான !!! ஆனால் அவசியமான..,
   ஒரு
   முன் மாதிரி பதிவர்.. நன்றி அய்யா.

   நீக்கு
  3. வருகைக்கு நன்றி, "அன்பே சிவம்". பொது வெளியில் புழங்கும்போது பலதரப்பட்ட கருத்துக்களை எதிர் கொள்ளும் மனநிலை வேண்டும். அது இல்லாதவர்களுக்கு பதிவுலகம் பொருத்தமல்ல.

   நீக்கு
  4. அய்யா இன்னொரு வேண்டுகோள்.
   வீண் வாதங்கள் தான்
   விதண்டாவாதமாகி பின்
   விவாதமாக மாறிவிட்டதோ
   என கருதும் அளவுக்கு
   எல்லோருக்கும் பதில் சொல்லி உங்கள் நேரத்தை விராயமாக்குவதை தவிர்த்து உங்கள் பாணியில் + ve
   பலம் தரும் பல
   பதிவுகளை தருவதன் மூலம்
   பதில் தரலாமே.
   இது அன்பு வேண்டுகோள்தானே தவிர அறிவுரை இல்லை.

   நீக்கு
  5. நீங்கள் சொல்லும் யோசனையை வரவேற்கிறேன். ஆனால் என்னுடைய கொள்கையை சற்று கேளுங்கள். பதிவில் நான் கூறும் கருத்துகள் எதுவாயினும் அவைகளில் எனக்கு நம்பிக்கையில்லாவிடில் அதைக் கூறலாமா? அப்படிக்கூறினால் நான் ஒரு பொய்யன். அதாவது ஒரு அயோக்கியன் அல்லவா? இந்த நிலையை ஒப்புக் கொள்கிறீர்களா?

   அப்படி நான் நம்பி வெளியிடும் ஒரு கருத்தை ஒருவர் மூடத்தனம் என்று விமரிசிக்கிறார் என்று வைத்துக் கொள்வாம். அதற்கு நான் மறுப்பு கூறாவிட்டால் நான் மூடன் என்பதை ஒப்புக்கொண்டதாகி விடும் அல்லவா? அப்படி நான் ஒத்துக் கொண்ட பிறகு நான் பதிவுகள் எழுதலாமா?

   பதிவுகள் தருவது மட்டும் முக்கியமல்ல. அதற்கு மாற்றுக் கருத்துகள் வரும்போது உங்கள் கருத்தை வலியுறுத்துவதும் அவசியமே. அப்படி வலியுறுத்தும் சக்தி ஒருவருக்கு இல்லையென்றால் அவர் பதிவுகள் எழுதுவதில் அர்த்தமே இல்லை.

   என் பதிவுகளுக்கு வரும் அனைத்து பின்னூட்டங்களையும் வெளியிடுவேன். அவைகளுக்குத் தேவையான பதில்களையும் தருவேன். அப்படி முடியாவிட்டால் பெருமாள் முருகன் செய்த மாதிரி தற்கொலை செய்து கொள்வேன்.

   நீக்கு
 15. நானும் வலைபதிவுகளால் என்ன மாற்றத்தை உருவாக்க முடியும் என்றே யோசித்துள்ளேன். ஆனால் சமூக மாற்றத்தை விட தனிப்பட்ட நபர்களின் மனமாற்றத்தை உருவாக்க முடியும் என்பதனை அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளேன். பலரும் அழைத்து பேசி உள்ளனர். சிலருக்கு சில விசயங்களைக் குறித்து அதன் நீள ஆழ விபரங்களை தெரிந்து கொள்ளும் ஆவல் இருக்கும்., அது நம் என் எழுத்தின் வாயிலாக முழுமையாக தெரிந்து கொண்டேன் என்று தெரிவிக்கும் போது இதை விட வேறு என்ன மகிழ்ச்சி வேண்டும் நமக்கு?

  பதிலளிநீக்கு
 16. பதிவுலகம் பற்றி மிகச்சரியாக புரிந்துகொண்டுள்ளீர்கள்! அருமையான பதிவு! நன்றி!

  பதிலளிநீக்கு
 17. பதிவுலகம் பற்றிய தங்களது பதிவு நல்ல அலசலாக உள்ளது. இன்னும் தெரிந்துகொள்ளவேண்டியது அதிகம் இருக்கிறது என்பதை தங்களின் பதிவு மூலமாக அறிந்தேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 18. நான் வம்புச்சண்டைக்குப் போவதில்லை. ஆனால் வந்த சண்டையை விடுவதுமில்லை. அதற்கு நான் பிறந்த ஊர், இனம், வளர்ந்த சூழ்நிலை ஆகியவைகளே காரணம். அதற்காக நான் வருந்தவில்லை. என் பாணியை மாற்றவும் போவதில்லை. மாற்ற நினைத்தாலும் பழகின தோஷம் அவ்வளவு சீக்கிரம் மாறாது. நான் தவறு செய்திருந்தால் அந்த தவறுக்காக மன்னிப்பு கேட்க தயங்குவதில்லை. ஆனால் காரணமில்லாத குற்றச்சாட்டுகளைக் கண்டு சும்மாவும் இருக்கமாட்டேன்.

  அருமை ஐயா மற்றவர்களுக்காக தங்களை மாற்ற வேண்டிய இல்லை என்தே எமது கருத்து.

  பதிலளிநீக்கு