சனி, 3 ஜனவரி, 2015

குடும்பப் பெண்கள் கடைப்பிடிக்கவேண்டியவை

                                              

இப்பதிவில் கூறும் குறிப்புகளை ஏற்கெனவே எல்லோரும் அறிந்திருக்கக்கூடும். ஆனால் நல்ல விஷயங்களைத் திரும்பவும் கேட்பதில் தவறில்லை. இந்தக் குறிப்புகள் ஒரு கல்யாணத்தில் கொடுக்கப்பட்ட கையேட்டில் இருந்து தொகுக்கப்பட்டது.

1. நெற்றியில் பொட்டில்லாமல் ஒரு நிமிடம் கூட இருக்கக் கூடாது.

2. இரண்டு கைகளாலும் தலையைச் சொறியக்கூடாது.

3. பெண்கள் முழுப் பூசணிக்காயை உடைக்கக் கூடாது. அரிவாளாலோ, மணையினாலோ, கத்தியினாலோ முழுப் பூசணிக்காயை வெட்டலாகாது.

4. கர்ப்பிணிகள் தேங்காயை உடைக்கக் கூடாது. தேங்காய்களை உடைக்கும் இடத்தில் இருக்கலாகாது. தேங்காய் உடைக்கும்போது ஏற்படும் நுண்ணலை அதிர்வுகள் கர்ப்பதைதப் பாதிக்கும்.

5. தம்பதியரைச் சேரவிடாமல் கலைப்பது மஹாபாவம். (அப்படிப்பட்ட டிவி சீரியல்களைப் பார்ப்பது அதனினும் மஹாபாவம்.) அப்படி கலைத்துப் பிரித்து வைத்தால் 21 தலைமுறை பாலவிதவைகள் ஆவார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. (சீரியல் பார்ப்பவர்களுக்கு தண்டனையில் கொஞ்சம் தள்ளுபடி உண்டு என்று அதே சாஸ்திரங்க்ள சொல்லுகின்றன).

6. இரவில் வீட்டைப் பெருக்கலாகாது.அப்படிப் பெருக்கினாலும் குப்பையைத் தெருவில் கொட்டக்கூடாது. பகலில் குப்பையை வீட்டில் ஓரிடத்தில் குவித்து வைக்கலாகாது. அப்படி குப்பையை வீட்டில் மூலையில் குவித்து வைத்தால் நல்ல நாட்களில் எல்லோருடனும் கலந்து இருக்க முடியாமல் விலக்கிவிடும்.

7. அதிகாலையில் எழுந்து வீட்டு வாசலுக்கு சாணம் அல்லது தண்ணீர்  தெளித்து கோலம் போடவேண்டும். இதை வீட்டு எஜமானியே செய்தால் மகாலட்சுமி மிக மகிழ்ச்சியுடன் நம் வீட்டிற்கு வருவாள்.

8. உணவிற்கு இலை போடுமுன் இலைக்கு கீழே பசும்சாணம் அல்லது வெறும் ஜலத்தால் நாலுமூலை சதுரமாக சுத்தம் செய்யவேண்டும்.

9. கையால் அன்னத்தையோ காய்களிகளையோ பரிமாறக்கூடாது. கரண்டியால் அமுதுகளைப் பரிமாறினால் தீமை வராது.

10. ஓர் இலைக்குப் பரிமாறிய மிச்சத்தை அடுத்த இலைக்குப் பரிமாறக்கூடாது.

11. தன் கணவன் அனுமதி பெற்றுத்தான் தானதர்மம், விரதம் ஆகியவைகளைக் கடைப்பிடிக்கவேண்டும்.

12. எந்தப் பொருளையும் இல்லையென்று கூறாமல் அந்தப் பொருள் வேண்டும், வாங்கி வாருங்கள் என்று கூறவேண்டும்.

13. எந்தக் குறையையும் எண்ணிக் கண்ணீர் விடக்கூடாது. அழுத வீட்டில் செல்வம் நிலைக்காது.

14. துன்பம் நேரும்போது வாய் விட்டு அசுப வார்த்தைகளைச் சொல்லக்கூடாது.

15.நம் இல்லத்திற்கு சுமங்கலிகள் வந்தால் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று, உபசரித்து, வெற்றிலை, பாக்கு, பழம், பூ கொடுத்து உபசரிக்கவேண்டும்.

16. குடும்பப் பெண்கள் எப்பொழுதும் தலையை விரித்துப் போட்டுக் கொண்டு இருக்கக்  கூடாது.


இவையெல்லாம் ஆணாதிக்கவாதிகள் சொல்லிவைத்துப் போனவை என்று நினைக்கும் பெண்கள் இவைகளைக் கடைப்பிடிக்க வேண்டியதில்லை.

31 கருத்துகள்:

 1. கல்யாணவீட்டில் கொடுத்த கையேடு பயனுள்ளது.
  எங்கள் அம்மா, மாமியார் எல்லாம் சொன்னது தான் நான் என் குழந்தைகளுக்கு சொல்வது. இப்படி .வழிவழியாக சொல்லி வந்த நல்ல விஷயங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 2. சரி. செஞ்சுறலாம். அடுத்ததாக 'குடும்ப ஆண்கள் கடைப்பிடிக்க வேண்டியவை 'பதிவை எதிர்பார்க்கின்றோம்.

  பதிலளிநீக்கு
 3. உங்கள் வீட்டு வாசலில் மாதர் சங்கத்தினர் கோஷம் போடுவது போலவும், உங்கள் வீட்டு அம்மணி (அப்புசாமியின் சீதாப் பாட்டி போல) அவர்களை வீட்டுக்குள் அழைத்து எல்லோருக்கும் சர்க்கரை போட்ட காபி கொடுப்பது போலவும் கனவு கண்டேன்.
  த.ம.2

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது என்ன புது வருஷ வாழ்த்தா? நடக்கட்டும். எது வந்தாலும் தாங்குவோம். சும்மாவா 38 வருடம் வாத்தியார் வேலை பார்த்தது?

   நீக்கு
 4. இரண்டு கைகளாலும் தலையைச் சொறியக்கூடாது.///////
  பிசாசு மாதிரி தோற்றமளிப்பார்கள் என்பதர்காக சொல்லியிருப்பாங்களோ :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இரண்டு கைகளாலும் தலையைச் சொறியக்கூடாது.
   //பிசாசு மாதிரி தோற்றமளிப்பார்கள் என்பதர்காக சொல்லியிருப்பாங்களோ :)

   அப்படிதான் நானும் நினைக்கிறேன் :)
   16வது குடும்பப் பெண்கள் எப்பொழுதும் தலையை விரித்துப் போட்டுக் கொண்டு இருக்கக் கூடாது என்பதும் அதுக்காகவே தாங்க.

   நீக்கு
 5. கொஞ்சம் தள்ளுபடி வேறு இருக்கிறதா...? ஹா... ஹா...

  முடிவு நன்று...

  பதிலளிநீக்கு

 6. ‘புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே
  தங்கச்சி காணே- சில
  புத்திமதிக சொல்லுறன் கேளு முன்னே’ என்று ‘பானை பிடித்தவள் பாக்கியசாலி’ என்ற திரைப்படத்தில் வரும் பாடலில் உள்ள புத்திமதிகள் போல் அல்லவா இருக்கிறது இந்த அறிவுரைகள்.

  ஆனாலும் கடைசியில் மறுதலிப்பாக (Disclaimer) நீங்கள் முடித்திருக்கும் விதம் உங்களுக்கே உரித்த பாணி.

  பதிலளிநீக்கு
 7. 5ல் உள்ள பல செய்திகள், புதிதாகவும் சுவாரஸ்யமாகவும் உள்ளன.

  எதற்கும் முன்னெச்சரிக்கையாக கடைசியில் 16க்குப் பிறகு 17 போலக்கொடுத்துள்ளது பாராட்டத்தக்கது. இன்றைய காலக்கட்டத்திற்கு இன்றிமையாததும் கூட. :) வாழ்க !!

  பதிலளிநீக்கு
 8. இதைப் படிப்பவர்கள் தங்கள் மனதில் தோன்றும் உண்மையானக் கருத்துக்களை கூறுவார்களா என்பது சந்தேகமே.

  பதிலளிநீக்கு
 9. இவையெல்லாம் குடும்பப் பெண்கள் கடைப்பிடிக்கவேண்டியவை. சரி..... பெண்கள் கடைப்பிடிக்கவேண்டியவை என்னென்ன?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தருமி சார், அந்தத் தகுதி எனக்கில்லை. டிவி சீரியல்களைப் பார்த்து தெரிந்து கொள்ளட்டும். ஆனால் அதற்கு கொஞ்சம் மூளை வேண்டும். இந்தக் காலத்துப் பெண்களுக்கு மூளை அதிகமாக இருப்பதுதான் ஆபத்து.

   நீக்கு
 10. 1. திருமணமானவளா, இல்லையா என்று அறிந்து கொள்ள உதவும். பெண் ஜாதகம் கொடுங்கள் என்று கேட்க வேண்டாம் பாருங்கள்!!

  2. பார்க்க நாகரீகமாக இருக்காது! அவசரத்துக்கு ஒரு கையாவது இன்னொரு வேலை பார்க்க வேண்டுமே....

  3, 4 தேங்காய் உடைவதைப் பார்க்கும்போது மனரீதியாக ஒரு அதிர்ச்சி ஏற்பட வாய்ப்புண்டு. உதாரணமாக சிறுநீர் கழிக்க சிரமப் படுபவர்களுக்கு கழிவறையில் குழாயை வேகமாகத் திறந்து விட்டு நீர் கொட்டியபடி இருக்க சிறுநீர் கழிக்க முயற்சி செய்யும்படி சொல்வார்கள்.

  5. இப்படி சாஸ்திர ரீதியாக பயமுறுத்தினால் மட்டுமே சில கொடூர மாமியார்களை (மாமனார்களை என்று சொல்ல வரவில்லை பாருங்கள்!) தடுக்க முடியும்!

  6. இரவில் வீட்டைப் பெருக்கக் கூடாது, ஏனென்றால், நுண்ணிய, சிறிய விலை மதிப்புள்ள பொருட்கள் - உதாரணமாக மூக்குத்தி, தோடுகளின் திருகுகள்) - குப்பையோடு போனால் பார்க்க முடியாது. அதனால்தான் விளக்கு வைத்தபிறகு குப்பை கொட்டக் கூடாது என்று சொல்வதும்!

  7. அதிகாலையில் எழும் நல்ல பழக்கம் வரும். சாணம் நல்ல கிருமி நாசினி. கோலம் அரிசி மாவில் போட வேண்டும். அதிகாலையில் ஒரு வீட்டு வாசலில் கோலம் இருப்பது அந்த வழி செல்லும் நண்பர்களுக்கு அந்த வீட்டில் எந்த 'அசுப' நிகழ்ச்சியும் இல்லை என்பதும் மனதில் படும். எறும்பு, அணில்களுக்கு ஆகாரம். எறும்புகளை வாசலோடு நிறுத்தி விடலாம் பாருங்கள்! இது போன்ற காரணங்களால் மண்புழு உற்பத்தியும் அதிகரிக்குமானால் மண்ணுக்கு உரம். செடிகள் வளர்க்கலாம்! காய்கறிகள் பயிரிட்டால் செலவு கம்மி!

  8. காற்றில் இலை பறக்காமலிருக்க, தரையோடு ஒட்டிக்கொள்ள! மேலும் சாப்பிடும்போது எறும்புகள் இலையை அணுகாதிருக்க!

  9. சுகாதாரம்!

  10. இல்லாவிட்டால் சுஷ்கம் வந்து விடும். எல்லோருக்கும் கொஞ்சம் கொஞ்சம்தான் பரிமாற வேண்டும் என்கிற எண்ணம் வந்து விடும்!

  11. (அந்தக் காலத்தில்) கணவன்தான் சம்பாதனை செய்பவன். அவனுக்குத்தான் ஆற்றில் எவ்வளவு அளந்து போடவேண்டும் என்று தெரியும்!!! மேலும் ஒருவேளை கணவன் ஏற்கெனவே அதே செலவைச் செய்திருந்தால்?

  12. தவறான வார்த்தைகளைப் பேச்சில் கொண்டுவரும் பழக்கம் வளரும்!

  13. சந்தோஷமாக இருக்கவும், எதைப் பற்றியும் கவலைப்பட்டு உடல்நலனைக் கெடுத்துக் கொள்ளாமலிருக்கவும் பயிற்சி.

  14. 12ன் பலன் இதில் தெரியும்!

  15. சக மனிதர்களை மதிக்கும் பயிற்சி.

  16. முடிகள் எல்லா இடத்திலும் விழும். ஆரோக்கியக்கேடு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம், பதிவை நன்கு மதிப்பிட்டிருக்கிறீர்கள். 12 வது குறிப்பிற்கு உங்கள் கருத்தில் ஏதோ உறுத்துகிறதே?

   நீக்கு
  2. ஐயோ, வேகத்தில் மாற்றிச் சொல்லி விட்டேன்! 'குறையும்' என்று இருக்க வேண்டும்!

   நீக்கு
 11. இதில் சில விஷயங்கள் ஆணுக்கும் பொருந்தும்
  துளசி கோபால் அவர்களின் கருத்தை ஆமோதிக்கிறேன்
  அதற்கான அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து....

  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 12. விதுர நீதியில் சொன்ன கருத்துக்கள் மாதிரி இருக்கிறது! ஏதோ பழைய பத்திரிக்கையில் படித்ததாகவும் நினைவு! பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 13. #பெண்கள் முழுப் பூசணிக்காயை உடைக்கக் கூடாது. அரிவாளாலோ, மணையினாலோ, கத்தியினாலோ முழுப் பூசணிக்காயை வெட்டலாகாது.#
  முழு பூசணிக் காயை சோற்றில் மறைக்க முடியாது என்பதில் நியாயம் இருக்கு ,பெண்கள் இதை செய்யக்கூடாது என்பதில் என்ன நியாயம் இருக்கு :)
  த ம 6

  பதிலளிநீக்கு
 14. எவ்வளவு மூடத்தனமான குறிப்புகள். வாசல் எங்கே இருக்கிறது , சாணம் தெளிக்க? பொட்டில்லாமல் இருக்கக் கூடாது சரி, அப்படியானால் கணவனை இழந்தோர்? தயவு செய்து அறிவியல் ரீதியான விஷயங்களை தாருங்கள்.
  --

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //தயவு செய்து அறிவியல் ரீதியான விஷயங்களை தாருங்கள்.//

   அது தெரியாத மூடனாக இருப்பதால்தானே இப்படிப்பட்ட பதிவுகள் எழுதிக்கொண்டு இருக்கிறேன்.

   அறிவியல் ரீதியான விஷயங்களைத் தருவதற்குத்தான் உங்களைப் போன்றவர்கள் இருக்கிறார்களே?

   நீக்கு
  2. மன்னிக்கவும் திரு கந்தசாமி. எனக்கும் மேலே பொன்னியின் செல்வன் கருத்து தான் இப்பதிவைப் படித்ததும் ஏற்பட்டது. அதனால் தான் உ’உள்குத்தோடு’ ஒரு பின்னூட்டம் முதலில் இட்டேன்.
   இதில் என்ன ஆச்சரியம் என்னவென்றால், பின்னூட்டம் இட்ட பலரும் இப்பதிவில் உள்ளவைகளைப் பொன்வாசகங்களாக ஏற்றுக் கொண்டு விட்டார்களே என்பது தான்!
   உங்களுக்கும் இதைப் பற்றிக் கூறியதும் கோபம் வந்து விட்டது. உங்கள் படிப்பு, அறிவு, வயது வைத்துப் பார்க்கும் போது நீங்கள் எப்படிங்க அறிவியல் தெரியாத ....க இருக்க முடியும்!!??

   நீக்கு
  3. நண்பரே, அறிவியல் என்பதுவும் ஒரு மக்கள் இனத்தின் கலாச்சாரமும் வேறு வேறு என்று நான் கருதுகிறேன். ஒரு இனத்தின் கலாச்சாரத்தை அழியாமல் காக்கவேண்டும் என்பதில் நமக்குள் வேறுபாடுகள் இல்லை என்று நான் நம்புகிறேன். கலாச்சாரம் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்படும் அந்தந்த இனங்களின் பழக்க வழக்கங்கள்தான். அவை அறிவியலுடன் ஒத்துப்போகவேண்டும் என்று எதிர் பார்ப்பதுதான் மூடத்தனம். அந்தப் பழக்க வழக்கங்கள் அழிந்து விட்டால் அந்த இனம் அழிந்து போகும். இதுதான் நான் உலக வரலாற்றிலிருந்து அறிந்து கொண்ட பாடம்.

   நான் அறிவியல் பூர்வமாக கடவுள் என்று ஒன்று இல்லை என்பதை உணர்கிறேன். ஆனாலும் தினமும் குளித்தவுடன் கடவுள் படத்திற்கு முன் நின்று விபூதி பூசிக்கொள்கிறேன். இது இரட்டை வாழ்வு அல்லது ஆஷாடபூதித்தனம் என்று பலர் நினைக்கலாம். ஆனால் வாழ்க்கையை இத்தனை ஆண்டு காலம் வாழ்ந்த பிறகு, வாழ்வில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும் அறிவியல் விளக்கம் இல்லை என்பதை உணர்ந்திருக்கிறேன். மனித மூளைக்கு அப்பாலும் ஏதோ ஒன்று இருக்கிறது, அது நம் வாழ்வோடு பிணைந்து இருக்கிறது என்றும் நம்புகிறேன்.

   கணவனை இழந்தவர்கள் தாங்கள் விதவைகள் என்று காட்டிக்கொள்ள விரும்பினால் காட்டிக்கொள்ளலாம். அது அவரவர்கள் விருப்பம்.

   தங்கள் கருத்தோடு ஒத்துப்போகாதவர்களை அறிவு இல்லாதவர்க்ள என்று சொல்வது எந்த வகையில் நியாயம்? என் கருத்துக்களை ஒத்துக் கொள்பவர்களுக்கு அறிவு இல்லை என்று அர்த்தமல்ல. அவர்களும் இனக் கலாச்சாரத்தைப் பேணுவதில் ஆர்வமுள்ளவர்கள் என்றுதான் அர்த்தம்.

   "...க" என்பதை மசக்கவுண்டன் என்று பொருள் கொள்ளவா? அல்லது அதற்கு வேறு ஏதாவது பொருளுடன் கிறிப்பிட்டீர்களா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

   ஒருவனை இன்னொருவன் அறிவில்லாதவன் என்று கூற அவனுக்கு உரிமை இல்லை. அப்படிக் கூறினால் கூறப்பட்டவனுக்கு கோபம் கொள்ள அதிகாரம் உள்ளது.

   நீக்கு
  4. திருத்தம் "கிறிப்பிட்டீர்களா" இதை "குறிப்பிட்டீர்களா" என்று திருத்தி வாசிக்கவும்.

   நீக்கு
  5. //"...க" என்பதை மசக்கவுண்டன் என்று பொருள் கொள்ளவா? //

   நீங்களே சொன்னீர்களே .. தெரியாத மூடனாக இருப்பதால்தானே .. அதைத் தான் நான் சொன்னேன். ஆனால் நீங்கள் //.."...க" என்பதை மசக்கவுண்டன் ..// என்றீர்களே... அது என்னங்க? ஏதோ சாதிப் பெயர் சொல்லி திட்ற மாதிரி இருக்கே... அப்படி எதுவும் மோசமாவா சொல்லியிருக்கப் போறீங்க..? இருக்காது .. இல்ல?

   நீக்கு
  6. //ஒரு இனத்தின் கலாச்சாரத்தை அழியாமல் காக்கவேண்டும் //

   ஆஹா! இது ரொம்ப நல்லா இருக்கே... பால்ய விதவைக்குத் தலை மழித்து மூலையில் உட்காரவைக்க வேண்டும். ஆம்பள பயலுக அப்படி ஆனா அடுத்ததைக் கட்டிக்கலாம். இதுவும் நம்ப கலாச்சாரம். பொம்பிளை விரதம் இருக்கணும்னா புருஷங்கிட்ட அனுமதி வாங்கணும். ஆம்பள தண்ணியடிக்க அதெல்லாம் தேவையில்லை. இதுவும் நமது கலாச்சாரம்...இப்படியே ‘நம்ப’ கலாச்சாரத்திற்குப்பெரிய பட்டியலே சொல்லலாம். ஆனா நீங்க சொல்றீங்க ...//இந்தப் பழக்க வழக்கங்கள் அழிந்து விட்டால் அந்த இனம் அழிந்து போகும்// அப்டின்றீங்க.... இது சரியான்னு கேட்டா கோபம் வரக்கூடாது; பதில் தான் தரணும்மய்யா.

   நீங்க ஏறக்குறைய காந்தி மாதிரியே பேசுறீங்க. அவர் சொன்னது இந்த மேற்கோள் :”சாதிகளை ஒழித்து, மேற்கத்திய சமுதாயக் கருத்துகளை நாம் மேற்கொண்டால் பிறப்பின் அடிப்படையினால் ஒவ்வொரு சாதியினரும் பரம்பரையாகத் தொடரும் வேலை அமைப்பினை விட்டொழிக்க வேண்டும். ஆனால் இதுவே சாதிகளின் அடிப்படை. பரம்பரையாக வரும் இவ்வழக்கம் அழிக்க முடியாத நிலையான ஒன்றாகும். இதனை மாற்றுவதால் எல்லாமே முரண்பட்டுப் போகும்”.

   நீக்கு
  7. http://valavan.wordpress.com/2015/01/07/சம்பிரதாயங்களை-துடைத்தெ/

   நீக்கு
 15. ****தருமிபுதன், 7 ஜனவரி, 2015 ’அன்று’ 8:55:00 முற்பகல் IST

  மன்னிக்கவும் திரு கந்தசாமி. எனக்கும் மேலே பொன்னியின் செல்வன் கருத்து தான் இப்பதிவைப் படித்ததும் ஏற்பட்டது. அதனால் தான் உ’உள்குத்தோடு’ ஒரு பின்னூட்டம் முதலில் இட்டேன்.
  இதில் என்ன ஆச்சரியம் என்னவென்றால், பின்னூட்டம் இட்ட பலரும் இப்பதிவில் உள்ளவைகளைப் பொன்வாசகங்களாக ஏற்றுக் கொண்டு விட்டார்களே என்பது தான்! ****

  :-)))))))))))))))

  -------------------

  கார்த்திக அம்மா ஆனஸ்ட்டா அவங்க உணர்வுகளை வெளியே சொல்லீட்டாங்க போல! பேசாமல் "சிறப்பான பதிவு"னு வாயளவில் சொல்லீட்டு, தான் சொன்ன கருத்தை மனநாக்கில் பேசி முடித்து இருக்கணும். அப்படி செய்திருந்தால் கந்தசாமி ஐயா வுக்கும் கோபம் வந்து இருக்காது.

  என்னவோ போங்க!

  பதிலளிநீக்கு