ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

எது சுகம் ?

                                         
                                           Image result for வெங்காய பஜ்ஜி

திருவள்ளுவர் அன்றே சொல்லி விட்டுப் போனார்.

கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் 
ஒண்டொடி கண்ணே உள

இந்தக் குறளின் பதவுரை, பொழிப்புரை எல்லாம் நமக்கு இப்போது தேவையில்லை. இதன் கருத்துரை என்னவென்றால் மனிதனுக்குள்ள ஐந்து புலன்களும் ஒரே சமயத்தில் தங்களுக்குண்டான இன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்பதுதான். அதுதான் சுகம் என்கிறார் வள்ளுவர்.

இன்று காலை, மன்னிக்கவும் அதிகாலை, காலை 2 மணியை எப்படிச் சொல்வது? ஏதோ ஒன்று. 2 மணிக்கு தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தபோது (எப்பத்தான் தூக்கம் வருது? எப்பவும்தான் முளிச்சிட்டு இருக்கறீங்க- இது என்னுடைய ஆசைப் பொண்டாட்டி) இந்தக் குறள் நினைவிற்கு வந்தது.

எனது கற்பனைக் குதிரையைத் தட்டியெழுப்பி, எது சுகம் என்று ஒரு குட்டி ஆராய்ச்சி செய்தேன். அந்த ஆராய்ச்சியின் முடிவுகள்தான் இந்தப் பதிவு.

 கண்ணுக்கு சுகம் பல இருந்தாலும் நான் அனுபவிப்பது நல்ல புத்தகங்கள் படிப்பது. இது கண்ணுக்கும் மனதிற்கும் ஒரு சேர இன்பம் பயப்பது ஆகும். ஆனால் ஒரு நிபந்தனை. படுக்கையில் தலைக்கு ஒரு மூன்று தலையணை வைத்துக் கொண்டு சாய்ந்து படுத்துக் கொண்டு படிக்கவேண்டும்.

படுக்கையில் மூன்று தலையணை வைத்துக் கொண்டு சாய்ந்து படுத்துக்கொள்வதில் எந்த சிரமமும் இல்லை. அந்த அனந்த சயன பாவத்தில் இந்தப் புத்தகத்தை கண்ணுக்கு வாகாக கையில் வைத்துக்கொண்டு படிப்பதில்தான் கஷ்டமே இருக்கிறது. கொஞ்ச நேரத்தில் கை வலிக்க ஆரம்பிக்கிறது.

இதற்கு ஏதாவது புத்தக-தாங்கியை யாராவது கண்டு பிடித்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. அப்படி யாராவது கண்டுபிடித்திருந்தால் அது எங்கு கிடைக்கும் என்று யாராவது சொன்னால் புண்ணியமாகப் போகும். அதை வாங்கி இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவு செய்யலாம்.

அடுத்ததாக செவிக்கு இன்பம். நல்ல இசையைக் கேட்பது இன்பம் என்று அனைவரும் ஒத்துக்கொள்வீர்கள். இந்த இன்பத்தை முழுமையாக அனுபவிக்க இந்த உடல் அனுமதிப்பதில்லை. மூன்று நிமிடம் இசையைக் கேட்டவுடன் தூக்கம் வந்து விடுகின்றது.

இதற்கும் யாராவது ஒரு கருவி கண்டு பிடித்தால் நல்லது. அதாவது அந்தக் கருவி ஒவ்வொரு மூன்று நிமிடத்திற்கு ஒரு தரம் நம்மைத் தட்டி எழுப்பிக்கொண்டு இருக்கவேண்டும். எங்கு கிடைக்கும் என்று இணையத்தில் விசாரிக்க வேண்டும்.

அடுத்து நாசிக்கு இன்பம். இது இக்காலத்தில் மிகவும் சுலபமாகக் கிடைக்கிறது. உங்களுக்கு எந்த வாசனை பிடிக்குமோ அந்த வாசனை கொண்ட பல பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றன. திரவ கொசு பத்தி மாதிரி பல சாதனங்கள் கிடைக்கின்றன. இதில் ஒரு கஷ்டமும் இல்லை.

அடுத்து மெய்யின்பம். அதாவது உடலுக்கு இதமாக இருப்பது. உண்மையைச் சொன்னால் தாய்க்குலம் பொங்கியெழும். ஆகவே அது வேண்டாம். ஒரு நல்ல மின் விசிறியை மாட்டி விட்டால் அதன் காற்று மெதுவாக உடலை வருடிக்கொடுக்கும். இதுவும் சிரமமில்லாத வேலைதான்.

கடைசியாக, மிக முக்கியமானது நாவிற்கு இன்பம் கொடுப்பது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தின்பண்டம் இன்பத்தைத் தரும். எனக்கு மிகவும் பிடித்தது வெங்காய பஜ்ஜியும் அதற்குத் தொட்டுக் கொள்ள நல்ல தேங்காய்ச் சட்டினியும். அனுதினமும் மூன்று வேளையும் கொடுத்தாலும் சாப்பிடுவேன்.

வெங்காய பஜ்ஜி சாப்பிடுவது ஒரு தனிக்கலை. வெங்காய பஜ்ஜி சூடாக சாப்பிட்டால்தான் சுகம். வெங்காய பஜ்ஜியைக் கையால் பிய்த்தால் வெங்காயம் தனியாகவும் வெந்த கடலை மாவு  தனியாகவும் வந்து விடும் அதைச் சாப்பிட்டால் வெங்காய பஜ்ஜி சாப்பிட்ட திருப்தி கிடைக்காது.

சூடாக இருக்கும் வெங்காய பஜ்ஜியை அப்படியே வாயில் போட்டுக் கொண்டால் வாலை விட்டு ஆப்பை எடுத்த குரங்கின் கதைதான். சூடாக இருக்கும் பஜ்ஜியை மெல்லவும் முடியாது. வாயில் வைத்திருக்கவும் முடியாது. துப்பவும் முடியாது.

இது தவிர தேங்காய்ச் சட்னி முழு பஜ்ஜியில் சரியாக ஒட்டவும் ஒட்டாது. இதற்காக நான் என் ஆராய்ச்சி மூளையைப் பயன்படுத்தி ஒரு செயல்முறை கண்டுபிடித்திருக்கிறேன். சும்மா வேலையில்லாமலா "பிஎச்டி" படித்தேன்.

பஜ்ஜி சுட ஆரம்பித்தவுடனே ஒரு நல்ல கத்தி எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும். வாணலியிலிருந்து பஜ்ஜியை எடுத்து தட்டில் போட்டவுடன் அவைகளை நடுவில் கத்தியால் வெட்டி இரு துண்டங்களாகப் பண்ணவும். இந்தத் துண்டங்கள் அரை வட்ட வடிவில் இருக்கும். வெங்காயம் தனியாகப் போய்விடாதபடி வெட்டவேண்டும். இதற்கு கத்தியை முதலிலேயே நன்றாகத் தீட்டி வைத்துக்கொள்ளவேண்டும்.

இப்படி வெட்டப்பட்ட அரை வட்ட வடிவில் இருக்கும் வெங்காய பஜ்ஜியை எடுத்து அந்த வெட்டுப்பட்ட பகுதியை சிறிது பெரிது பண்ணி அதற்குள் தேங்காய்ச் சட்னியை ஒரு தேக்கரண்டியில் எடுத்து அளவாகப் போடவேண்டும், அப்படியே பஜ்ஜியை வாயில் போடவேண்டியதுதான். இதுதான் சுகம். இதையே, அதாவது பஜ்ஜியை வெட்டி சட்னி உள்ளே வைத்துத் தரும் வேலையை வேறு யாராவது செய்து கொடுத்து நீங்கள் சாப்பிட்டால், அதுதான் சுகமோ சுகம்.

இப்படியாக நீங்கள் படுக்கையில் மூன்று தலையணை வைத்துப் படுத்துக்கொண்டு, ஒரு புத்தகத்தாங்கியில் புத்தகத்தை படிப்பதற்கு வாகாக வைத்துக்கொண்டு, மின் விசிறியை ஓடவிட்டு, சங்கீதம் ஒலித்துக் கொண்டு, நல்ல வாசனைத் திரவியம் வாசனை அளிக்க, வெங்காய பஜ்ஜி சாப்பிடும் சுகம் இருக்கிறதே அதுதாங்க திருவள்ளுவர் சொன்ன ஐம்புலன்களும் நுகரும் இன்பமுங்க.

வாழ் நாளில் இந்த சுகத்தை அனுபவிக்காதவர்கள் பெரிய துர்ப்பாக்கியசாலிகளே. 

37 கருத்துகள்:

 1. ஆஹா.... என்ன ஒரு ரசனை!

  :))))))))))))))))

  //காலை 2 மணியை எப்படிச் சொல்வது? ஏதோ ஒன்று//

  அதி அதி காலை!!

  புத்தகத் தாங்கிகள் கட்டாயம் கிடைக்கின்றன. கடைகளில் கிடைக்கும். ராமாயணம் மகாபாரதம் படிக்கக் கிடைக்கும் ஸ்டேன்ட் போல இன்னும் சில விதங்களிலும் கிடைக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதிஅதிகாலை - என்னமோ போல இருக்கு. நடு ஜாமம் அல்லது அர்த்த ராத்திரி - சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். சென்னை பாஷையில "அராத்து" இது எப்படி இருக்கு?

   நீக்கு
 2. நான் அப்பவே சொன்னேன்.
  எங்க நைனா கருத்தா சொல்லுவருன்னு
  பயபுள்ளைகதான் கேக்கலை.
  ஆராய்ச்சிக்கும் கண்டுபிடிப்புக்கும்
  போட்டாச்சி + 1

  பதிலளிநீக்கு
 3. நானும் இதே தலைப்பினில் கட்டுரை எழுதுவதற்கு குறிப்புகள் எடுத்துக் கொண்டு இருக்கிறேன். சில சமயம் இதுபோல் ஒரே சிந்தனையாக ஒரேசமயம் இருவர் எண்ணும்படி தோன்றி விடுகிறது. நீங்கள் முந்தி விட்டீர்கள். பரவாயில்லை. என்ன இருந்தாலும் உங்களைப் போல சுவாரஸ்யமாக நகைச்சுவையாக என்னால் எழுத முடியாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடா, நீங்களும் உங்கள் பாணியில் எழுதுங்கள். வெங்காய பஜ்ஜியை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். அது என்ன, எங்கள் பாட்டன் வீட்டுச் சொத்தா? இல்லையே.

   நீக்கு
 4. பதில்கள்
  1. do you think that suitable alternatives are available in Coimbatore? if so pl. suggest.

   நீக்கு
  2. அவரு நக்கல் பண்றாரு பெர்சு!

   நீக்கு
  3. ஆஹா..Phd ன்னா சும்மாவா?

   நீக்கு
  4. விவரமா கேக்கிறார்ல?
   ஒருத்தர உருப்படியா பிசினஸ் பண்ண விடமாட்டீங்களே !

   நீக்கு
  5. கூட்டாளி இல்லாம என்ன பிசினெஸ்ஸுங்க. வாங்க, கொளுத்தீடலாம்.

   நீக்கு
 5. ஆஹா ஆஹா என்ன சுவை............... என்ன ரசனை..................
  ஆப்பசைத்த குரங்காக நாங்கள் தான் அகப்பட்டுக் கொண்டோம் உங்கள் பதிவில்.
  நன்றி அய்யா!
  த ம ஏழு

  பதிலளிநீக்கு
 6. இளமையில் அனுபவித்த சுகமே வேறு ,இப்போ இப்படித்தான் சுகத்தை அனுபவிக்கணும்:)
  த ம 8

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பகவான்ஜி, இப்படி பழசையெல்லாம் நினைவுபடுத்தப்படாது. இது பச்சை அக்கிரமம்.

   நீக்கு
 7. அய்யய்யோ அந்த துர்ப்பாக்கியசாலி நானும்தானோ....
  தமிழ் மணம் - நவரத்தினம்

  பதிலளிநீக்கு
 8. வெங்காய பஜ்ஜி சாப்பிடும் விதத்தை மிகவும் ரசித்தேன்! எனக்கும் பஜ்ஜி வகைகள் மிகவும் பிடிக்கும் அதனால்தானோ என்னவோ நீங்கள் விவரித்த விதம் மிகவும் ரசிக்கும்படி அமைந்துவிட்டது! நன்றி!

  பதிலளிநீக்கு
 9. //எப்பத்தான் தூக்கம் வருது? எப்பவும்தான் முளிச்சிட்டு இருக்கறீங்க- இது என்னுடைய ஆசைப் பொண்டாட்டி//
  சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் உங்கள் பார்யாள்.
  தூங்காமல் விழித்து கொண்டிருந்தால், அதற்கு "முழிச்சிட்டு இருக்கிறீங்க" என்று சொல்லலாம். ஆனால் பேந்த பேந்த முழித்துக்கொண்டிருந்தால் "முளிச்சிட்டு இருக்கீங்க" என்றுதானே சொல்ல முடியும்.

  சேலம் குரு

  பதிலளிநீக்கு
 10. //எனக்கு மிகவும் பிடித்தது வெங்காய பஜ்ஜியும் அதற்குத் தொட்டுக் கொள்ள நல்ல தேங்காய்ச் சட்டினியும். அனுதினமும் மூன்று வேளையும் கொடுத்தாலும் சாப்பிடுவேன்.//

  இந்த வயதில்!
  அதுவும் வெங்காய பஜ்ஜி (எண்ணெய் மற்றும் பொரித்தது) ! தேங்காய் சட்னி (தேங்காயினால் கொழுப்பு) !

  அப்பப்பா, உங்கள் ஜீரண உறுப்புகள் நன்றாக இருக்கின்றன என்பதற்கு இதை விட சான்று வேண்டுமா என்ன?
  இருந்தாலும் கொஞ்சம் ஆசையை கட்டுப்படுத்திகொல்வது நல்லது.
  நான்கு புலன்களை அனுபவியுங்கள். இந்த ஐந்தாவது புலனாகிய நாக்கை கொஞ்சம் அடக்கி வையுங்கள்.

  திருச்சி அஞ்சு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆசையைக் கட்டுப்படுத்துகிறேன். ஆனால் யாரைக் கொல்வது?

   நீக்கு
  2. வேறு யாரை? பஜ்ஜி சாப்பிடும் ஆசையைத்தான் கொல்ல வேண்டும்.
   இல்லையென்றால் அது நம்மை கொன்றுவிடும்

   திருச்சி அஞ்சு

   நீக்கு
 11. //வாழ் நாளில் இந்த சுகத்தை அனுபவிக்காதவர்கள் பெரிய துர்ப்பாக்கியசாலிகளே. //

  அம்பானி கூட இத்தகைய சுகத்தை அனுபவித்திருப்பாரா என்பது சந்தேகம்தான். நிஜமாகவே அது சொர்கம்தான்.
  கூடவே ஆம்படையாள் காலை இதமாக பிடித்து விட்டுக்கொண்டிருந்தால் அது இன்னொரு விதமான சுகம்தான்.

  துளசி மைந்தன்

  பதிலளிநீக்கு
 12. //பஜ்ஜி சுட ஆரம்பித்தவுடனே ஒரு நல்ல கத்தி எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும்//
  பஜ்ஜியை அனுபவித்து சாப்பிடுவது எப்படி என்று அய்யா அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதற்கு என்னாலான உதவி. இந்த கத்தி தீட்டப்பட்டாலும் சில சமயங்களில் சரியாக வெட்டாமல் நமது ஆசையில் மண்ணை வாரி போட்டுவிடும். இதற்கு பர்மா பஜாரில் serrations உள்ள கத்தியாக - சமையல் நிபுணர்கள் உபயோகிப்பது. TV யில் பார்த்திருப்[போமே - வாங்கினால் பிசிறில்லாமல் "வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு" என்று சரியாக வெட்டி விடும். அப்புறமென்ன. பஜ்ஜி சுட வேண்டியதுதான் கத்தியால் வெட்ட வேண்டியதுதான் தேங்காய் சட்னி நிரப்ப வேண்டியதுதான் வாயில் போட வேண்டியதுதான். ஆனந்தத்தின் எல்லை அதுதான்
  ஆனால் கொஞ்சம் தப்பினால் விரலை பதம் பார்த்து விடும் ஜாக்கிரதை.

  திருச்சி தாரு

  பதிலளிநீக்கு
 13. //பஜ்ஜியை வெட்டி சட்னி உள்ளே வைத்துத் தரும் வேலையை வேறு யாராவது செய்து கொடுத்து நீங்கள் சாப்பிட்டால், அதுதான் சுகமோ சுகம்.//

  சோம்பேறித்தனத்தின் உச்சக்கட்டம்.
  இதுவெல்லாம் நமக்கு எதற்கு? புது மாப்பிள்ளைக்கு வேண்டுமானால் நடக்கலாம். நம்ம வயதில் ஆசைப்படத்தான் முடியும்.

  காயத்ரிமணாளன்

  பதிலளிநீக்கு
 14. இருந்தாலும் திருவள்ளுவரையும் வெங்காய பஜ்ஜியையும் சம்பந்தப்படுத்த உங்களால்தான் முடியும். பதிவின் முடிவில் திருக்குறள் மனதில் நிற்கவில்லை. வெங்காய பஜ்ஜிதான் நாக்கில் நிற்கிறது. வாழ்த்துக்கள்

  சேலம் குரு

  பதிலளிநீக்கு
 15. //அதாவது உடலுக்கு இதமாக இருப்பது. உண்மையைச் சொன்னால் தாய்க்குலம் பொங்கியெழும்//

  புரியவில்லையே !!!

  திருச்சி அஞ்சு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இரண்டு அப்ஸ்சரஸ் மாதிரி கன்னிகைகள் உடம்பு பிடித்து விட்டால் அதனுடைய சுகமே தனிதான். இதைச்சொன்னால் நான் மீள்வேனா?

   (இது வரையில் அந்த சுகம் கிடைத்ததில்லை. மேல் லோகத்தில் கிடைக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்)

   நீக்கு
  2. அப்ஸ்சரஸ் மாதிரி கன்னிகள் உமக்கு உடம்பு பிடித்து விட வேண்டுமானால் காசு செலவாகும். ஏனென்றால் அன்பினால் அவர்கள் யாரும் நமக்கு உடம்பு பிடித்து விடப் போவதில்லை! சரியா?

   நீக்கு
 16. சில சமயங்களில் சந்தோசமாக இருக்கும்போது அப்படியே போய்விட்டால் என்ன என்ற உணர்வு தோன்றும். அப்படிப்பட்ட ஒரு நிலையை இந்த பஜ்ஜி சாப்பிடும் விவரிப்பு ஏற்படுத்துகிறது. மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

  சேலம் குரு

  பதிலளிநீக்கு

 17. திருக்குறளில் ஆரம்பித்ததும் ஏதோ நண்பர் திரு திண்டுக்கல் தனபாலன் போல் சொல்ல வருகிறீர்கள் என நினைத்தேன். தூக்கம் வரவில்லை என ஆரம்பித்து கடைசியில் வெங்காய பஜ்ஜியை சட்டினியோடு எப்படி சாப்பிடுவது என்று சொல்லி அதை சாப்பிடும் ஆசையை தூண்டிவிட்டீர்களே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோயமுத்தூருக்கு வாங்க. வீட்டில வெங்காய பஜ்ஜி சுடச்சொல்றேன். உங்க சாக்கில எனக்கும் பஜ்ஜி கிடைக்குமல்லவா!

   நீக்கு
  2. திண்டுக்கல் தனபாலன் இப்பவெல்லாம் ரொம்ப ஒசரத்துக்குப் போய்ட்டாருங்க. நமக்கெல்லாம் அப்படி முடியாதுங்க.

   நீக்கு
 18. பஜ்ஜிக்கடையில் கூட்டம் அம்முது!!!!

  எனக்கும் வெங்காய பஜ்ஜி பிடிக்கும். ஆனால் சட்னி தேவை இல்லை.

  பதிலளிநீக்கு