புதன், 29 ஏப்ரல், 2015

வயதாவதின் நன்மைகள்.

                                       Image result for மூன்று குரங்குகள்

நேற்றைய பதிவில் மகாத்மா காந்தி மூன்று குரங்குகளின் பொம்மை வைத்திருந்தார் என்று பார்த்தோம். அதில் ஒன்று கண்ணை மூடிக்கொண்டும், இன்னொன்று காதைப் பொத்திக்கொண்டும், மற்றொன்று வாயைப் பொத்திக்கொண்டும் இருக்கும்.

அந்த பொம்மைகளின் தாத்பரியம் என்னவென்றால் தீயதைப் பார்க்காதே. தீயதைக்கேட்காதே, தீயதைப் பேசாதே என்பதாகும். ஒருவன் நல்லவனாக வாழ அவன் இந்தக் கொள்கைகளை அனுசரிக்கவேண்டும்.

ஆனாலும் இளமை வேகத்தில் இதையெல்லாம் யோசித்து அனுசரிக்கும் பொறுமை பெரும்பாலானோருக்கு இல்லை. மனிதனைப் படைத்த கடவுள் இதற்கு ஒரு நல்ல வழியை ஏற்படுத்தியுள்ளார். இளமையில் அவன் எப்படியோ இருந்து விட்டுப் போகட்டும், வயதான பின்பாவது அவன் இந்தக் குற்றங்களைச் செய்யாமல் போகும் வழிக்குப் புண்ணியம் சேர்த்துக்கொள்ளட்டும் என்று சில ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்.

முதலில் கண்களை எடுத்துக் கொள்வோம். வயதாக வயதாக கண் பார்வை மங்குகிறது. இது நம்மைப் படைத்தவன் ஏற்பாடு. இதை மனிதன் தன்னுடைய மூளூயினால் எப்படியோ ஓரளவு சரி செய்து காலத்தை ஓட்டுகிறான். ஆனாலும் கடைசி காலத்தில் அவனுக்கு முழுவதுமாக பார்க்க முடிவதில்லை. இப்போது அவனால் கெட்டது எதையும் பார்க்க முடியாதல்லவா?

இரண்டாவது காதுகளை எடுத்துக்கொள்வோம். அறுபது வயதானால் எல்லோருக்கும் காது கேட்கும் திறன் குறையும். நல்ல புண்ணியம் செய்த ஒரு சிலருக்கு சீக்கிரம் காது மந்தமாகி விடும். (காது நன்றாகக் கேட்கும் வயதானவர்கள் புண்ணியம் குறைவாக செய்திருக்கிறார்கள் எனக்கொள்க.) இதனால் அவர்கள் தீயவைகளைக் கேட்கும் வாய்ப்பு குறைந்து போகிறது.

மூன்றாவது வாய். இது இரண்டு வகைகளில் மனிதனுக்கு எதிரி. நாக்கு இளம் வயதில் ருசியை நன்கு அறிந்து கொள்வதினால் கண்டதையும் சாப்பிடத் தோன்றும். இரண்டாவது வாய் நன்றாகப் பேச முடிவதால் கண்டதையும் பேசத் தோன்றும். வயதானவர்களுக்கு நாக்கு ருசி போய்விடும். எதைத் தின்றாலும் மண்ணைத் தினபது போலவே இருக்கும். அதனால் கண்டதைச் சாப்பிட முடியாது. அடுத்து பேச்சு குழறும். இதனால் இவர்கள் பேசுவதைக் கேட்க ஆட்கள் இருக்க மாட்டார்கள். இப்படி இவர்கள் தீயதைப் பேச மாட்டாமல் கடவுள் ஆக்கி விட்டார்.

ஆகவே மனிதர்களே, நீங்கள் இயற்கையோடு ஒத்துழைத்தீர்களேயானால் ஆண்டவன் உங்களுக்கு நற்கதி அளிக்கக் காத்துக்கொண்டிருக்கிறான் என்பதை அறியவும்.

21 கருத்துகள்:

  1. எனக்கு இளமையிலே ஆண்டவன் நற்கதி அளித்துவிட்டான் போல அதனால மனைவி பக்கதில் வரும் போது கண் ஆட்டோமேடிக்காக மூடிவிடும் அவள் அர்ச்சனை செய்யும் போது காது கேட்காமல் போய்விடும் இந்த சமயத்தில் வாயை திறந்தால் பூரிக்கட்டையால் அடிவிழுவது நிச்சயம் அதனால திறக்க வாய்ப்பு இல்லை. ஆமாம் இப்படி எனக்கு மட்டும்தான் கடவுள் ஆசிர்வதிப்பாரா அல்லது கல்யாணம் பண்ணிக் கொள்ளும் எல்லொருக்குமே இப்படிதானா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரும்பலானோருக்கு இப்படித்தான் கடவுள் ஆசீர்வதிக்கிறார்.

      நீக்கு
    2. இந்த கருத்தை சொல்லி என் நெஞ்சில் பாலை வார்த்தீங்கய்யா...

      நீக்கு
  2. ஐயா பெரியவரே நீங்களும் மதுரைத்தமிழன் போல அறிவே இல்லாமல் இருக்கிறீர்கள் அதனால்தான் பதிவின் இறுதியில் ஆண்டவரை பதிவிற்குள் இழுத்துவிட்டிருக்கிறீர்கள் காந்தி குரங்கை வைத்து நல்ல கருத்தை சொன்னார் என்றால் நீங்கள் அதை திரித்து பார்பனிய ஆதரவை அதில் கலந்து விஷம் போல தருகிறீர்கள் நீங்கள் பார்பானின் அடிமை. உங்களின் இந்த பார்பனிய ஆதரவு பதிவால் நீங்கள் வாங்கிய டாக்டர்பட்டத்தின் மேல் இந்த வலையுலகத்திற்கு சந்தேகம் வந்துவிட்டது இப்படி எழுத உங்களுக்கு வெட்கமாக இல்லை நீங்கள் அப்பாவியான பெரியவர் வேஷம் போட்டு எழுதிகின்றீர்கள் அந்த வேஷம் இன்று கலைந்துவிட்டது.

    ( நானும் மற்றவர்கள் மாதிரி கருத்து போடலாம் என்று நினைத்து எழுதியது எப்படி இருக்கிறது என் கருத்து )

    பதிலளிநீக்கு
  3. இப்படி எடுத்துக் கொள்வது நன்றாய் இருக்கிறது. ஆனால் நன்மைகளையும் பார்க்க / கேட்க/ பேச, சுவைக்க முடியாமல் போய்விடுமே!!!

    பதிலளிநீக்கு
  4. ஐயா தங்கள் கருத்து நகைச்சுவையாகச் சொல்லப்பட்டாலும் மிகமிகப் பொருத்தமே. வாயும், காதும்.....அதில் வாயை வார்த்தைகளுக்கு மட்டுமல்ல உணவிற்கும் கட்டுப்படுத்திக் கொண்டால், இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தால் நல் வாழ்வே.....அருமை. ஐயா....(எங்கள் இருவரின் கருத்து)


    (கீதா: ஹஹஹஹஹ்ஹ் ஐயா எங்கள் வீட்டில் மதுரைத் தமிழன் சொன்னதற்கு ஜஸ்ட் ஆப்போசிட். டிட்டோ அதாவது தமிழனின் நிலையில் நான்...ஹஹஹஹஹ் எனக்கு இப்போதே காது சிறிது மந்தமாகி மூன்றாவது காதுடன் தான் வாழ்கின்றேன். கணவர் கத்தத் தொடங்கினால்...மூன்றாவதுகாதைக் கழட்டி வைத்து விடுவேன்.

    நல்ல கருத்துரையாக இருக்கின்றது ஐயா. )

    பதிலளிநீக்கு
  5. சரி தான்... இயற்கையோடு இயற்கையாக வாழ்வோம்...!

    பதிலளிநீக்கு
  6. //நேற்றைய பதிவில் மகாத்மா காந்தி மூன்று குரங்குகளின் பொம்மை வைத்திருந்தார் என்று பார்த்தோம்.//

    ஐயா நேற்றைய பதிவில் இதைப்பற்றி குறிப்பிடவில்லையே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் பதிவின் டிராப்டை முடித்த பின் அனாமதேயப் பதிவு ஒன்று அவசரமாகப் போடவேண்டி வந்தது. அதனால் வந்த குழப்பம் இது.

      நீக்கு
  7. ஐயா

    அதாவது வயதானவர்கள் எல்லோரும் நல்லவர்கள் என்று நீங்கள் (நீங்கள் உள்பட) என்று சொல்கிறீர்கள். ஏன் எனில் அவர்கள் தீயதைப் பார்க்காமல், கேட்காமல், பேசாமல் இருக்கிறார்கள். வயது குறைந்தவர்கள் தீயதைப் பார்க்காமல் கேட்காமல் பேசாமல் இருக்கமுடியாது என்று சொல்வது போல் இருக்கிறது.

    ஐயாவோட லாஜிக் கொஞ்சம் குண்டக்க மண்டக்க என்றல்லவா இருக்கிறது.

    இப்போ எனக்கும் மூன்றாவது காது தான்.
    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
  8. மதுரையில் ஐந்து வருஷம் வேலை பார்த்ததினால் குண்டக்க மண்டக்கவும், கோளாறும் தெரியும். அதென்னங்க லாஜிக், அப்படீன்னா என்னங்க?

    பதிலளிநீக்கு
  9. மிருகங்களுக்கு நாலு கால் உண்டு.
    நாலு கால் உள்ளது மிருகம்.
    நாற்காலிக்கு நாலு கால் உண்டு.
    ஆகவே நாற்காலி ஒரு மிருகம்.

    இதுதான் லாஜிக்

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
  10. இதையெல்லாம் வைத்துதான் வயோதிகம் தண்டனையா என்று எழுதி இருந்தேன் ஸ்ரீராம் சொல்வதிலும் ஒரு உண்மை இருக்கிறது.புலன்கள் மழுங்கி விட்டால் வாழ்க்கையில் நல்லதும் தெரியாமல் போய் விடும்

    பதிலளிநீக்கு
  11. வயதானால் எல்லாம் தானாக மூடிக்கொள்கிறது! வயசு இருக்கும் போது சந்தர்ப்பத்திற்கு ஏற்ப மூடிக்கொண்டால் நலமாய் இருக்கும் என்று தோன்றுகிறது! மதுரைத் தமிழனின் நிலைதான் பெரும்பாலான வீடுகளில் என்று சொல்லி எனக்கும் பால் வார்த்தீர்! நன்றி!

    பதிலளிநீக்கு
  12. இதை தவறான வாதம் (Fallacy) என்று சொல்வார்கள். இதற்கு இன்னொரு எடுத்துக்காட்டும் சொல்லலாம். அதாவது
    God is Love
    Love is blind
    So God is blind என்று சொல்வது போல.

    பதிலளிநீக்கு
  13. மன்னிக்கவும். இந்த கருத்தை திரு ஜெயக்குமார் அவர்களின் கருத்துக்கு கீழே தர எண்ணினேன். தவறுதலாக இங்கு தந்துவிட்டேன்.

    பதிலளிநீக்கு
  14. புதுமை அருமையாகத்தான் இருக்கு.
    தமிழ் மணம் 4

    பதிலளிநீக்கு
  15. மூன்று குரங்குகள் சொல்லும் கருத்துக்கள் உங்களின் கற்பனை வழியே மிக அழகாய் இருக்கிறது! அதுவும் குரங்கு வாயை மூடிக்கொள்வதற்கான கருத்து மிகவும் அருமை!

    பதிலளிநீக்கு
  16. அன்பின் இனிய வலைப் பூ உறவே!
    அன்பு வணக்கம்
    உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்
    இனிய "உழைப்பாளர் தினம்" (மே 1)
    நல்வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    பதிலளிநீக்கு