திங்கள், 1 ஆகஸ்ட், 2016

செய்நன்றியை எதிர் பார்ப்பது முட்டாள்தனம்

                               Image result for திருவள்ளுவர் images

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு - குறள்.

ஒரு வேளை இந்தக் குறள் திருவள்ளுவர் காலத்திற்குப் பொருத்தமாய் இருந்திருக்கலாம். ஆனால் நிச்சயம் இந்தக்
காலத்திற்குப் பொருந்தாது. என்னடா இவன் சுத்தக் கிறுக்கனா இருக்கானே என்று நீங்கள் நினைக்கலாம். ஒரு வகையில் நான் கிறுக்கன்தான். பதிவுலகில் கிறுக்கிக்கொண்டு இருக்கிறேனே, அதிலிருந்தே தெரியவில்லையா, நான் முழுக்கிறுக்கன் என்று?

விஷயத்திற்கு வருவோம். நன்றி என்பது என்ன? ஒருவர் இன்னொருவருக்கு உதவி செய்தால், அந்த உதவி பெற்ற நபர், அந்த உதவியைச் செய்தவருக்கு நன்றியுடன் இருக்கவேண்டும். இது ஓரளவுக்கு நியாயமானதாய்த்தான் தெரிகிறது. ஆனால் இந்த நன்றி உணர்வை எத்தனை காலத்துக்கு வைத்திருப்பது?

உதவி பெற்றவன் தன்னுடைய ஆயுள் காலத்திற்கும் இந்த நன்றியை மறவாதிருக்கவேண்டும் என்றால் பிரச்சினை இங்குதான் உருவாகிறது. ஒருவன் தன் ஆயுள் காலத்தில் பலரிடமிருந்து பலவிதமான உதவிகளைப் பெற்றிருப்பான். அத்தனை உதவி செய்தவர்களுக்கும் இவன் நன்றி பாராட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்றால் இவன் வேறு ஒரு வேலையும் செய்ய முடியாது.
தன்னையும் தன் குடும்பத்தையும் எப்படிக் காப்பாற்றுவான்?

உதாரணத்திற்கு ஒருவனுடைய பெற்றோர்களை எடுத்துக்கொள்ளுங்கள். இவன் பிறந்ததிலிருந்து இவனை வளர்த்து ஆளாக்கி, படிப்பித்து, வேலையில் சேர்த்து, கல்யாணம் செய்து வைத்து இவனை ஒரு மனிதனாக்கியவர்கள் அவர்கள்தான். அவர்கள் செய்த சேவைக்கு ஈடு இணை உண்டோ? ஆகவே ஒவ்வொருவனும் தன்னுடைய பெற்றோர்களுக்கு என்றென்றும் நன்றிக்கடன் பாராட்டிக்கொண்டு இருக்கவேண்டும். இதுதானே நியாயம்!

நியாயத்தைப் பார்த்துக்கொண்டு குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டிக்கொண்டு இருந்தால் ஒருவன் முன்னேறுவது எப்போது? படிச்சமா, அமெரிக்கா போனமா, அங்கேயே செட்டில் ஆனமா, கல்யாணம் கட்டுனமா, குழந்தை, குட்டி பெத்தமா, ஒரு வீடு வாங்கினமா, நெண்டு கார் வாங்கினமா அப்படீன்னு இருந்தாத்தான் ஒருவன் முன்னேறியதற்கு அடையாளம். அதை விட்டு விட்டு இங்க உள்ளூர்ல ஒரு குமாஸ்தா உத்தியோகம் பார்த்துட்டு அப்பா அம்மாவைச் சுத்திச் சுத்தி வந்தா அது என்ன வாழ்க்கைங்க?

இதே மாதிரிதான் உதவி செஞ்ச மத்தவங்களையும் ஒரு தேங்க்ஸ் சொல்லிவிட்டு மறந்து விடவேண்டும். அப்படி மறக்காமல் அவர்களைப் பார்க்கும்போதெல்லாம் "அன்னிக்கு நீங்க உதவி பண்ணாட்டா நான் வாழ்க்கையில முன்னேறியே இருக்க முடியாதுங்க" என்று சொல்லிக்கொண்டே இருந்தால் நீங்கள் இருக்கும் நிலையிலேயே இருக்கவேண்டியதுதான்.

மேலே போவதற்கு ஏணி அவசியம்தான். அதற்காக மேலை போனபின்பும் அந்த ஏணியையே பிடித்துக்கொண்டிருந்தால் அதற்கு மேலே போவது எப்படி? ஏறி வந்த ஏணியை உதைத்துத் தள்ளிவிட்டு அடுத்த ஏணியைப் பிடிக்க வேண்டும். அதுதான் வாழ்க்கையில் முன்னேற வழி.

இதைப் படிப்பவர்கள் அனைவரும் இந்த அறிவுரைகளை கடைப்பிடித்து வாழ்க்கையில் முன்னேறுவார்களாக!
                                     Image result for ஏணிப்படிகள்

15 கருத்துகள்:

  1. காலத்திற்கேற்ற வழியைக் கூறியுள்ளீர்கள் போலுள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பத்துப் பேரிடம் உதவி பெற்று ஒரு மாதிரியா மேலே போயிருப்போம். அந்தப் பத்துப்பேரையே நினைத்துக்கொண்டிருந்தால் அதற்கும் மேலே போவது எப்படி?

      நீக்கு
  2. //மேலே போவதற்கு ஏணி அவசியம்தான். அதற்காக மேலே போனபின்பும் அந்த ஏணியையே பிடித்துக்கொண்டிருந்தால் அதற்கு மேலே போவது எப்படி? ஏறி வந்த ஏணியை உதைத்துத் தள்ளிவிட்டு அடுத்த ஏணியைப் பிடிக்க வேண்டும். அதுதான் வாழ்க்கையில் முன்னேற வழி//

    ஏணியைப் பிடித்துக்கொண்டு இருக்கவேண்டாம்.ஆனால் அதையே உதைத்து தள்ளவேண்டும் என்று சொன்னால் எப்படி? கும்பிட்ட கைகளை முறித்ததுபோல் ஆகாதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏணியைப் பிடித்துக்கொண்டே இருந்தால் அதன் வழியே கீழே இறங்கவேண்டி வரும். அதனால் அதை உதைத்து தள்ளிவிட வேண்டும்.

      காலம் மாறுகிறது. நாமும் மாறவேண்டும். இல்லாவிட்டால் வாழ்க்கையில் முன்னேற முடியாது.

      நீக்கு
  3. வாழ்க்கையில் முன்னேறியவரின் அறிவுரையைப் பின் பற்றி உய்வோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜி.எம்.பி ஐயா ஏதோ உள்குத்து பண்ணுவதுபோல் தெரிகிறது.

      நன்றியை எதிர்பார்க்கவும் கூடாது. முன்னேறுவதற்குத் தடையாக இருக்கும் நன்றியை ஞாபகம் வைத்துக்கொள்ளவும் கூடாது. - எல்லோரும் இப்போது செய்வதுதான்.

      நீக்கு
  4. ஐயா

    --
    ​//​
    மேலே போவதற்கு ஏணி அவசியம்தான். அதற்காக மேலை போனபின்பும் அந்த ஏணியையே பிடித்துக்கொண்டிருந்தால் அதற்கு மேலே போவது எப்படி? ஏறி வந்த ஏணியை உதைத்துத் தள்ளிவிட்டு அடுத்த ஏணியைப் பிடிக்க வேண்டும். அதுதான் வாழ்க்கையில் முன்னேற வழி.
    ​//​


    ​மேலே மேலே போறவன் அங்கே எமதர்ம ராஜாவைக் கண்டால் கீழே இறங்க ஆசைப் படுவானே அப்போது கிஸி இறங்க ஏணி இருந்தால் உதவுமே. அதனால் ஏணி பாட்டுக்கு நிக்கட்டும். ​
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எமதர்ம ராஜாவைக் கண்டவுடன் ஏதாவது வரம் வாங்கிக்கொண்டு இன்னும் மேலே போவதை விட்டு விட்டு கீழே வர ஏன் ஆசைப்படணும்?

      ஏணி இருந்தா கொஞ்சம் கஷ்டம் வந்தவுடன் கீழே இறங்கத்தோன்றும். அதற்காகத்தான் ஏணியை உதைத்துத் தள்ளிவிடவேண்டும்.

      நீக்கு
  5. ஏறிவந்த ஏணியை விட்டு விட்டு (மிதிக்காமல்) அடுத்த ஏணியைப் பிடித்து இன்னும் உயரே போனால்தானே முன்னேற்றம்...

    நல்ல பகிர்வு ஐயா...

    பதிலளிநீக்கு
  6. நான் எனது உறவினர் ஒருவருக்கு பணி மாறுதல் விஷயத்தில் ஒரு சிறு உதவி செய்தேன். ஆனால் அவரே என்னை ஒரு சமயம் அவமானப்படுத்திய போது, இன்னொரு உறவினரிடம் நான் செய்த சிறு உதவியைச் சொல்லி வருத்தப் பட்டேன். அதற்கு அவர் தந்த பதில். “ நீங்கள் உதவி செய்தீர்கள் என்பதற்காக 24 மணி நேரமும் அதையே சொல்லிக் கொண்டு இருக்க முடியுமா?” என்பதுதான்.

    நீங்கள் நகைச்சுவைக்காக இப்படி எழுதினாலும் என்னால் இதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்கலாமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “ நீங்கள் உதவி செய்தீர்கள் என்பதற்காக 24 மணி நேரமும் அதையே சொல்லிக் கொண்டு இருக்க முடியுமா?”

      இதுதான் இன்றைய யதார்த்த நிலை. உதவி செய்தவர்களுக்கு நன்றி பாராட்டிக்கொண்டு இருப்பதென்றால் வேறு ஒரு வேலையும் செய்ய முடியாது. உலகத்தைப் புரிந்து நடந்து கொள்ளவேண்டும். நகைச்சுவைக்காக எழுதியிருந்தாலும் அதில் உள்ள நடைமுறை வாழ்க்கைத் தத்துவத்தை ஆழ்ந்து சிந்திக்க வேண்டுகிறேன்.

      நீக்கு
  7. ஏறி வந்த ஏணியை நினைத்துக் கொண்டாலே போதும். எட்டி உதைக்க வேண்டாம். நல்லது செய்ய முடியாவிட்டாலும், கெடுதலாவது செய்யாமல் இருக்கலாம். நான் சின்னஞ்சிறு உதவி செய்த ஒரு மாணவன் இன்றும் அதைச் சொல்லிக் காட்டிக் கொண்டிருப்பது கூச்சத்தைதான் தருகிறது எனக்கு. சில சமயம் நம்மைக் கிண்டல் செய்கிறானோ என்று கூடாது தோன்றுகிறது!!!

    பதிலளிநீக்கு
  8. நல்லதோர் அனுபவப் பகிர்வு. ஏறி வந்த ஏணியை தள்ளி விடவும் வேண்டாம். அதற்காக கட்டிக்கொண்டு அங்கேயே இருக்கவும் வேண்டாம். உதவி பெற்றது மனதளவில் இருந்தால் போதும்.

    பதிலளிநீக்கு
  9. பலரின் சிறு அல்லது பெரு உதவியில்லாமல் யாரும் மேலே வருவது கடினம். நமது காலம் முடியும்வரை எத்தனையோ பேரின் உதவியில்லாமல் நாம் வாழவும் முடியாது. காலம் தள்ளவும் முடியாது. அதனை மனதில் நினைத்து, மற்றவர்களுக்கும் நம்மாலான உதவி செய்வதே, நாம் பெற்ற உதவிகளுக்குச் செய்யும் நன்றி. ('நமக்கு நன்றி செய்தவர்களுக்கு மட்டுமல்ல, அதை நினைந்து அடுத்தவர்களுக்கும் உதவி தேவைப்படுபவர்களுக்கும்). என்றைக்காவது நமக்கு உதவி செய்தவரைக் காண நேர்ந்தால், மற்றவர் முன்னிலையில் அவரை, ஆஹா ஓஹோ என்று பாராட்டினால், அல்லது அவருக்கு உதவியளிக்கும் சந்தர்ப்பம் தானே அமைந்தால் முகம் சுளிக்காமல் உதவினால் போதுமானது.

    சிலர் எழுதியிருப்பதுபோல், யாரேனும் சொல்லிக்காண்பித்தால், நிச்சயம் உதவும் மனம் வரவே வராது. ஏனென்றால் மனித மனது தன் வெற்றியை அடுத்தவர்களுக்குப் பங்குபோட்டுக்கொடுக்க அனுமதியாது. அவர் என்ன முக்கியமான உதவி செய்திருந்தாலும், அதை இல்லை என்றுதான் சொல்ல விழையும்.

    பதிலளிநீக்கு
  10. NELLAI JI I DIFFER
    YOUR CONTENTION THAT WE COULD REACH GOOD POSITION ONLY WITH SOMEBODYS HELP IS NOT CORRECT
    I KNOW MANY PERSONS WHO FELT SHY TO APPROACXH PEOPLE FOR ANY HELP
    LATER BECAME VERY SUCCESSFUL BECAUSE OF THEIR ABILITY PATIENCE TALENTS AND PERSEVERENCE>>.......

    பதிலளிநீக்கு