திங்கள், 5 மார்ச், 2012

மட ஆசிரியனும் மணியான மாணவனும்.


நான் சுமார் பத்து வருடம் விவசாய இளங்கலை மாணவர்களுக்கு ஆசிரியனாக இருந்தேன். அதனால் பல இடங்களில் என் பழைய மாணவர்கள் என்னைப்பார்த்து வணக்கம் சொல்லி நலம் விசாரிப்பார்கள். மனதுக்கு இதமாகவும் பெருமையாகவும் இருக்கும். இந்த மாதிரி பல சமயங்களில் நடக்குமாதலால் கொஞ்சம் தலைக்கனம் வந்துவிட்டது. (அந்தக் காலத்தில் ஆகாயத்தைப் பார்த்துத்தான் நடப்பேன். தரையைப் பார்த்து நடக்கும் வழக்கம் இல்லை).

ஒருவர் அனுபவம் பெறப்பெற, அவருக்கு பதவி உயர்வு கொடுப்பது அரசு முறைமை. அப்படி நான் ஆசிரியப்பணியிலிருந்து பதவி உயர்வு பெற்று ஆராய்ச்சிப்பணி மேற்பார்வையாளராக (Professor and Head) தஞ்சாவூருக்கு மாற்றலானேன். அங்கு எங்கள் ஆராய்ச்சிப் பண்ணை நாகப்பட்டினம் ரோடு மாரியம்மன் கோவிலுக்குப் பக்கத்தில் இருக்கிறது. எங்கள் பண்ணை வளாகத்திலேயே விவசாய இணை இயக்குநர் அலுவலகமும் இருக்கிறது.

இந்தப் பண்ணையின் ஆபீஸ் தஞ்சாவூரில் இருக்கிறது. பண்ணை தஞ்சாவூர் டவுனிலிருந்து 5 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. டவுன் பஸ்கள் அடிக்கடி இல்லை. வரும் பஸ்களும் கூட்டம் அதிகமாக இருப்பதால் இந்த ஸ்டாப்பில் நிறுத்தமாட்டார்கள். நான் காலையில் பண்ணைக்குப் போய்விட்டு 12 மணி வாக்கில் ஆபீஸ் திரும்புவேன். அப்போது அந்த பஸ் ஸ்டாப்பில் யாராவது நின்றிருந்தால் அவர்களை என் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு வந்து டவுனில் இறக்கி விடுவது உண்டு. பொதுவாக விவசாய இணை இயக்குநர் ஆபீசுக்கு வரும் ஆட்கள் அப்படி நிற்பார்கள்.

ஒரு நாள் அப்படி ஒருவரை ஏற்றிக்கொண்டேன். ஜீப்பில் வரும்போது அவர் என்னைத் தெரிகிறதா, சார் என்று கேட்டார்.

நான்தெரியவில்லையே, நீங்கள் யார்என்று கேட்டேன்.

அவர் : நான் உங்களிடம் படித்த மாணவன் சார். என்றார்.

எனக்கு கர்வம் தலைக்கு ஏறி விட்டது. நம் மாணவர் ஒருத்தர் நம்மை ஞாபகம் வைத்திருக்கிறார், ஆஹா, என்னே நம் மகிமை என்று சந்தோஷப்பட்டுக்கொண்டு மேலும் விசாரித்தேன். எந்த வருஷம் படித்தீர்கள், பெயர் என்ன என்றெல்லாம் விசாரித்த பிறகு அவர் சொன்னார்.

சார், நீங்கள் கெமிஸட்ரியில் என்னை பெயில் பண்ணிவிட்டீர்கள், என்றார். அப்போது நான் கெமிஸ்ட்ரி அசிஸ்டன்ட் புரொபசராக இருந்தேன்.

நான்: ஐயையோ, அப்படியா, வருந்துகிறேன், வேண்டுமென்று நடந்திருக்காது, என்றேன்.

அவர்: பரவாயில்லை, சார், அப்படி பெயிலானதினால்தான் பிரைவேட் கம்பெனியில் சேர்ந்து இப்போது நன்றாக இருக்கிறேன், என்றார்.

நான்: அப்படியா, ரொம்ப சந்தோஷம் என்றேன்.

இதற்கு அப்புறம்தான் கிளைமாக்ஸ். போட்டாரே ஒரு போடு.
இல்லையென்றால் நான் உங்கள் மாதிரி அசிஸ்டென்ட் புரொபசர் ஆகி லோல்பட்டுக் கொண்டிருந்திருப்பேன், என்றார்.

நான் காற்றுப் போன பலூன் மாதிரி நொந்து நூடுல்ஸ் ஆனேன்.



14 கருத்துகள்:

  1. மட ஆசிரியன் இல்லை, மடாசிரியன் மாதிரி இருக்கு.

    பதிலளிநீக்கு
  2. நீங்களே பின்னூட்டம் போட்டுக்கிடறதா என்றுதானே கேட்கிறீர்கள்? மத்தவங்க போடாட்டி நாமளே போட்டுக்கவேண்டியதுதான்!!!

    பதிலளிநீக்கு
  3. என்ன இது.....உங்களைப்பத்தி நீங்களே சொல்லிகிட்டு .....நொந்து நூடுல்ஸ் மட்டுமா....பிரைட் ரைஸ் கூட ஆயிருப்பீங்களே

    பதிலளிநீக்கு
  4. மணியான மாணவனுக்கு வாழ்த்துகள்..

    அருமையான ஆசிரியருக்குப் பாராட்டுக்கள்...

    பதிலளிநீக்கு
  5. ஹா ஹா .... இதுக்கு பேர்தான் சார் கலாய்க்கிறது. தமிழ்ல வஞ்ச புகழ்ச்சின்னு சொல்லுவாங்க.

    பதிலளிநீக்கு
  6. ஹா...ஹா...ஹா...

    இதை தங்களிடமே நேரிடையாக சொல்ல அவருக்கு தைரியம் தான்....

    பதிலளிநீக்கு
  7. அருமையான கதை! ( சம்பவம் ) காமெடியாகவும் இருக்கு! ஆனா கருத்தும் இருக்கு! நல்ல மாணவன் + நல்ல ஆசிரியர் :-)

    பதிலளிநீக்கு
  8. அருமையான கருத்துகள்.. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  9. அய்யா அந்த மாணவர் சரியாத்தான் சொல்லி இருக்காரு..இப்பவும் உங்களுக்கு அந்த மாதிரிதான் நெனப்பு போல ஹாஹா!

    பதிலளிநீக்கு
  10. நாம் நினைத்துப் பார்க்காமலேயே. நமக்கு அறியாமலேயே சில நல்ல காரியங்கள் நடந்து விடுவதுண்டு. இண்டெரெஸ்டிங் பதிவு.

    பதிலளிநீக்கு