சனி, 31 மார்ச், 2012

மனைவியிடம் நடந்து கொள்வது எப்படி?


"பாஸ் மனைவியிடம் நடந்து கொள்வது எப்படின்னு ஒன்னு போடுங்க பாஸ்! நிறைய பேருக்கு உதவியா இருக்கும்!"

நிலவன்பன் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி இந்தப் பதிவு போடுகிறேன். தெரிந்த விஷயங்களை தெரியாதவர்களுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டியது ஒரு முக்கிய மனித நேயப் பண்பாடு. ஆகவே எனக்குத் தெரிந்ததை எல்லோருக்கும் சொல்லிக்கொடுப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால், இந்தப் பதிவினால் வரும் பாவ புண்ணியங்கள் அனைத்தும் நிலவன்பனையே சேரும் என்று தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதலில் ஒரு கதை சொல்லுகிறேன்.


ஒரு ஊரில் ஒரு பெரிய ஜகஜ்ஜாலக் கில்லாடி இருந்தார்.(என்னை மாதிரி இல்லாவிட்டாலும் என்னில் பாதி அளவுக்கு தேறுவார்). அவருக்கு பெரிய பேச்சாளர் ஆகவேண்டும் என்ற ஆசை. ஒரு பேச்சாளரிடம் போய் ட்யூஷன் எடுத்துக்கொண்டார். பிறகு அடுத்த ஊருக்குச் சென்று ஒரு விளம்பரம் செய்தார். உங்களுக்கு பணக்காரர் ஆக விருப்பமா? இன்று அதைப் பற்றிய பேச்சு இந்த ஊர் பார்க்கில் நடக்கிறது. விருப்பமானவர்கள் எல்லோரும் கலந்து கொள்ளலாம். அனுமதிக்கட்டணம் 100 ரூபாய் மட்டுமே. இவ்வாறு விளம்பரம் செய்தார். 


யாருக்குத்தான் பணத்தின் மேல் ஆசை இல்லை?


அந்தக் குறிப்பிட்ட நாளில் அந்தப் பார்க்கில் ஏகப்பட்ட கூட்டம். நம்ம பேச்சாளர் மேடை ஏறினார். கூட்டத்தைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார். இங்கு பணக்காரர்கள் யாரோ, அவர்கள் எல்லாம் கையைத் தூக்குங்கள். பாதிபேர் கையைத் தூக்கினார்கள். அடுத்து இன்னொரு கேள்வி கேட்டார். யார் யாரிடம் பணம் இல்லையோ அவர்கள் எல்லாம் கையைத் தூக்குங்கள் என்றார். மீதிப் பாதிப் பேர் கையைத்தூக்கினார்கள்.

பிறகு பேச்சாளர் சொன்னார். யார் யாரிடம் பணம் இல்லையோ அவர்கள் எல்லாம் மீதிப் பேர்களிடம் பணக்காரர் ஆகும் வழியைக் கேட்டுக்கொள்ளுங்கள், என்று சொல்லிவிட்டு மேடையை விட்டு இறங்கிப் போயவிட்டார். கூடியிருந்த ஜனங்களுக்கு வெகு நேரம் கழித்துத்தான் தாங்கள் முட்டாளாக்கப்பட்டது விளங்கியது.

அந்த மாதிரி இந்தப் பதிவைப் படிப்பவர்களில் பாதிப்பேராவது மனைவியிடம் எப்படி நடந்து கொள்வது என்று அனுபவத்தில் கற்றுக்கொண்டிருப்பார்கள். இந்த வித்தை தெரியாதவர்களை அவர்களிடம் கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லலாம் என்றுதான் முதலில் நினைத்தேன். அப்புறம்தான் மனதில் உறைத்தது. மனைவியிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று தெரிந்தவர்கள் ஒருவரும் அடுத்தவர்களுக்கு அந்த வித்தையைக் கற்றுக்கொடுக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் வீட்டுக்கு வெளியில் மிகுந்த தன்மானம் கொண்டவர்கள்.

பக்தி மார்க்கத்தில் இருப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும். முக்தியடைவதற்கு சுலபமான வழி பூரண சரணாகதிதான். கடவுளே, நீயேதான் எல்லாம், உன்னையே சரணடைந்தேன், எனக்கு முக்திக்கு வழிகாட்டுவது உன் பொறுப்பு என்று பகவான் பாதத்தில் விழுந்து விடுவதுதான் அந்த வழி.

இந்த தத்துவத்தை நன்றாக மனதில் இருத்திக் கொள்ளுங்கள்.

இப்போது நமது சப்ஜெக்ட்டுக்கு வருவோம். மனைவியிடம் நடந்து கொள்வது எப்படி? தலைப்பில் ஒரு தவறு. மனைவியிடம் காலம் தள்ளுவது எப்படி என்று இருந்திருக்க வேண்டும். அதுதான் சரியான தலைப்பு. அப்படி காலம் தள்ளுவது என்றால் என்னென்ன செய்யவேண்டும் என்று பார்ப்போம்.

1. பரிபூர்ண சரணாகதித் தத்துவத்தை பூரணமாக கடைப்பிடிக்கவேண்டும். இதில் கொஞ்சம் கூட தயக்கம் இருக்கக்கூடாது.

2. எது நடந்தாலும் அதை பகவத் பிரசாதமாக ஏற்றுக்கொள்ளவேண்டும்.

3. எப்படிப்பட்ட உணவாக இருந்தாலும் ரொம்ப பேஷ், பிரமாதம் என்று சொல்ல வேண்டும்.

4. நீங்கள் மனவி போட்ட கோட்டைத் தாண்டுவது இல்லை என்கிற விஷயம் யாருக்கும் தெரியக்கூடாது. குறிப்பாக உங்கள் அலுவலக நண்பர்களுக்கு.

5. எக்காரணம் கொண்டும் நண்பர்களையோ அல்லது உங்கள் வழி சொந்தக் காரர்களையோ வீட்டுக்கு வரவழைக்கக் கூடாது. அவர்களைப் பார்க்க வேண்டுமென்றால் ரயில்வே ஸ்டேஷனிலோ அல்லது பஸ் ஸ்டேண்டிலோ பார்த்துவிட்டு அனுப்பி விடவும்.

6. உங்கள் மனைவி வழி சொந்தக்காரர்கள் வந்தால் முகத்தை உம்மென்று இஞ்சி தின்ற குரங்கு மாதிரி வைத்துக்கொள்ளக் கூடாது. சந்தோஷமாக இருப்பது போல் நடிக்கவேண்டும்.

7. சம்பளம் வாங்கி வந்ததும் நயாபைசா குறையாமல் மனைவியிடம் கொடுத்து விடவேண்டும். தினமும் என்னென்ன செலவு என்று சொல்லி தேவையான பணம் மட்டும் வாங்கிக் கொள்ளவேண்டும்.

8. வீட்டில் எல்லா முடிவுகளையும் மனைவி எடுத்தாலும் நீங்கள் எடுத்ததாகத்தான் கணக்கு. யார் கேட்டாலும் அப்படித்தான் சொல்ல வேண்டும்.

9. கேட்கும் கேள்விக்குத்தான் பதில் பேச வேண்டும். நீங்களாக எதுவும் பேசக்கூடாது.

10. உங்களுக்கு பையன்கள் இருந்தால் அவர்களுக்கு இந்தப்பாடங்களை ஒழுங்காக சொல்லிக் கொடுக்கவும்.


வேறு சந்தேகங்கள் இருந்தால் எழுதி அனுப்பவும்.

27 கருத்துகள்:

 1. கடைசியா ஒண்ணு - ' உன்கூட ஷாபிங் பண்ண எனக்கு ரொம்ப பிடிக்கும்'னு சொல்லணும்; அத செயல்ல காட்டணும்..
  // சம்பளம் வாங்கி வந்ததும் நயாபைசா குறையாமல் மனைவியிடம் கொடுத்து விடவேண்டும். //
  அதுக்கெல்லாம் அவசியமே இல்லைங்க..ATM கார்ட எங்ககிட்ட குடுத்திடுங்க..போதும்..

  எல்லா வீடும் மதுரை இல்லைங்க; சிதம்பரமும் இருக்கு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படீங்களா அம்மா, நல்ல காலம் என் கண்ணைத் தொறந்தீங்க. நான் எல்லா ஊட்லயும் என் வீடாட்டமா மதுரைன்னுதான் இத்தனை நாளா நெனச்சுக்கிட்டிருந்தேன்!!

   நீக்கு
 2. நல்ல கருத்துகள்.

  ATM கார்டைக் கொடுக்றதுன்னா பேங்கில அக்கவுன்ட் வேணும். கல்யாணம் ஆனவுடனே அக்கவுன்ட் தேவையில்லைன்னு குளோஸ் பண்ணியாச்சு. ஊட்ல அம்மா (அதாங்க பொண்டாட்டி) இருக்கிறப்போ இந்த பேங்க் அக்கவுன்ட் எல்லாம் எதுக்குங்க?

  பணத்தையெல்லாம் முழுசாக் கொடுத்ததுக்கப்புறம் ஷாப்பிங்க்குக்கு எதுக்கு கூடப்போகணும்? வாங்கற சாமான்களை சொமக்கறதுக்கா?

  பதிலளிநீக்கு
 3. சரி சார்..
  ஒரு மனைவி இருந்தா நீங்க சொன்னதுபடி செஞ்சிபுடலாம்..
  மனைவிகள் உள்ளவர்களுக்கு .. ?

  ஹிஹி..

  (இது சிலபல அரசியவாதிகளுக்காக.. அவர்களின் சார்பில் கேட்கப்பட்ட கேள்வி..)

  பதிலளிநீக்கு
 4. எல்லோருக்கும் ஒரே சட்டம்தான். அடிக்கடி கொள்கைகளை மாத்தக்கூடாது. பொண்டாட்டியை மாத்திக்கலாம்.

  பதிலளிநீக்கு
 5. கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகள் யாவும் அருமையோ அருமை.

  //பரிபூர்ண சரணாகதித் தத்துவத்தை பூரணமாக கடைப்பிடிக்கவேண்டும். இதில் கொஞ்சம் கூட தயக்கம் இருக்கக்கூடாது.//

  வேறு வழி?

  //மனைவியிடம் நடந்து கொள்வது எப்படி? தலைப்பில் ஒரு தவறு. மனைவியிடம் காலம் தள்ளுவது எப்படி என்று இருந்திருக்க வேண்டும். அதுதான் சரியான தலைப்பு. //

  காலம் தள்ளுவது தான் மிகச்சரியான தலைப்பு. கோபத்தில் கருங்கல்லில் நாம் தலையைக்கொண்டுபோய் முட்டிமோதிக்கொண்டால் நம் மண்டை தான் உடையும்.

  அதனால் சரணாகதி தத்துவமே சாலச்சிறந்தது என்றாலும், விதியின் கொடுமையை நினைத்தால் சில சமயங்களில், கருங்கல்லில் தலையை மோதிக்கொள்ள வேண்டும் போல ஓர் ஆசை ஏற்படத்தான் செய்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை என்று யாரோ சொல்வது போலத் தெரிகிறது, ஐயா. நிச்சயம் நான் சொல்லவில்லை. ஏனென்றால் //கேட்கும் கேள்விக்குத்தான் பதில் பேச வேண்டும். நீங்களாக எதுவும் பேசக்கூடாது// என்றும் சொல்லி விட்டீர்களே.

  பிறகு வாயைத்திறந்து நான் கருத்துக்கள் கூற வழியேது?

  மிகச்சிறந்த உருப்படியான பயனுள்ள பதிவு. பகிர்வுக்கு நன்றிகள். vgk

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நகைச் சுவைக்காகப் போடப்பட்ட பதிவாக இருந்தாலும் ஆழ்ந்து கவனிப்பவர்களுக்கு இதிலுள்ள பல உண்மைகள் நடைமுறையில் எவ்வளவு பயனுள்ளவை என்று புரியும். குறிப்பாக வயதானவர்களுக்கு மிகவும் பயன்படும்.

   நீக்கு
 6. :))) பயனுள்ள யோசனைகள்..... அனுபவசாலி கிட்ட நிறைய விஷயம் கற்றுக்கொள்ளலாம் என்பது சரிதான்........

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அனுபவம் கூடக்கூடத்தான் வாழ்க்கையின் நுட்பங்கள் பிடிபடும்.

   நீக்கு
 7. எனக்கு இன்னும் அனுபவம் வரலிங்க. ஆனா இதிலும் ஆன்மிக தத்துவத்தை புகுத்தி அசத்தி விட்டீர்கள் சார் :)

  பதிலளிநீக்கு
 8. நகைசுவைக்காக நையாண்டி அடித்தாலும் நீங்கள் கூறிய அனைத்தும் முற்றிலும் உண்மையே! வயதானால் பெரும்பாலோருக்கு "ஆன்மீகத்தில் " நாட்டம் வருவதற்கு இதுதான் காரணம். முன்பு எங்கோ படித்து நினைவுக்கு வருகிறது.

  குளக்கரையில் ஒரு நடுத்தர வயது நபரும் ஒரு இளைஞரும் பேசிகொள்கின்றனர்.

  இளையவருக்கோ கல்யாண ஆசை. பெரியவர் அவருக்கு அறிவுரை சொல்கிறார்:

  // இதோ பாரு.......முற்பிறவியில் நம்மிடம் தீராத பகை கொண்டு அதனை பழி தீர்க்க இயலாமல் செத்துப்போனவர்கள் தான் இப்பிறவியில் பெண்ணாக வந்து மனைவியாக ஆகி தங்கள் பழைய கணக்கை சரி செய்து கொள்வார்கள். எனவே கல்யாணம் மட்டும் பண்ணிக்காதே///

  அதென்னவோ பெரும்பாலோருக்கு இப்படித்தான் வாய்க்கிறது! :))

  பதிலளிநீக்கு
 9. இந்தப் பதிவை கோபாலுக்கு அனுப்பி இருக்கேன். சிலசமயம் தனி ஒருத்தரா முடிவு எடுத்துடறார்!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்னுமா அப்படிப் பண்றார்? நீங்க சரியா பாடம் நடத்துல போலிருக்கு!!!!!!

   நீக்கு
 10. சபா....நல்லவேளை நமக்கு இன்னும் கல்யாணம் ஆகல்ல.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சீக்கிரமே விவாகப் பிராப்திரஸ்து அதாவது சீக்கிரமே விலங்கு மாட்டப்படுவாயாக!

   நீக்கு
 11. பதில்கள்
  1. எப்படியோ ஜனங்க சந்தோஷமா இருந்தா அது போதுங்க நமக்கு.

   நீக்கு
 12. WIFE என்றாலே WORRIES INVITED FOR EVER என்று தெரியாதவர்கள் சொல்வார்கள்..அது அப்படி அல்ல..அவர்கள் மனதால் நினைத்ததை நாம் செயலில் செய்து விட்டோம் என்றால் எங்கிருந்து வரும் பிரச்னை? அவர்கள் எள் என்பதற்கு முன் நான் எண்ணெய் ஆக நிற்க வேண்டும் சுவையான பதிவு?அந்த சரணாகதி தத்துவம் சூப்பர்.அவர்கள் மனம் கோணாமல் நடந்தால் எல்லாம் கிடைக்கும். பாருங்களேன் இன்று எங்கள் வீட்டில் நடந்த சம்பாஷனை!
  மனைவி : நம்ம கலியாணம் நேற்று நடந்தால் மாதிரி இருக்குங்க..
  நான் : (சும்மா இருக்கக் கூடாதா..என் நாக்கில் சனி உட்காந்திருப்பான் போல
  இருக்கிறது)
  நேற்று அப்படி என்ன மோசமாய் நடந்தது?
  விளைவு : சாப்பாடு கட்! குலைப் பட்டினி!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆழ்ந்த அனுதாபங்கள். இவ்வளவு அனுபவம் ஆகியும் சனியை நாக்கில் வைத்துக் கொண்டிருக்கலாமா? பார்த்து சூதானமா இருங்க நண்பரே.

   நீக்கு
 13. ஏனுங்க - நான் கேட்டேனே? ஒரு வார்த்தை சொன்னிங்களா? இப்பிடி உனக்கு உபயோகமா ஒரு பதிவு போட்டிருக்கேன்னு????

  பழைய பதிவுகளை தேடி பார்த்தா எனக்கான பதிவு - அவ்வ்வ்!

  நானும் ஜூன் மாத பதிவெல்லாம் படிச்சுட்டேன் ஆனா இப்பிடி கவுத்துட்டீகளே!!!!

  ஆனா பத்து பாயிண்ட்டும் சான்சே இல்லை

  ///நீங்கள் மனவி போட்ட கோட்டைத் தாண்டுவது இல்லை என்கிற விஷயம் யாருக்கும் தெரியக்கூடாது. குறிப்பாக உங்கள் அலுவலக நண்பர்களுக்கு./// சே சே இதயெல்லாம் சொல்லுவமா???

  வீட்டில் எல்லா முடிவுகளையும் மனைவி எடுத்தாலும் நீங்கள் எடுத்ததாகத்தான் கணக்கு. யார் கேட்டாலும் அப்படித்தான் சொல்ல வேண்டும்.//// எனக்கென்ன டவுட் அப்படின்னா ப்ளாக்ல நீங்க எழுதுவதெல்லாம்கூட அவர்கள் சொல்லித்தான் எழுதுவதுபோல தெரிகிறது.

  மறுபடியும் அவ்வ்வ்வ்!

  பதிலளிநீக்கு
 14. அய்யய்யோ, உங்களுக்கு சொல்லியனுப்போணும்கறது தோணவேயில்லைங்க! எப்படியோ பதிவப் புடிச்சிட்டீங்க இல்ல, கெட்டிக்காரங்கதான்.

  அப்புறம் இப்படியெல்லாம் ரொம்ப நுணுக்கமா கேள்வியெல்லாம் கேட்கப்படாதுங்க. சூசகமா, ஒரு கோடி காட்டுனா புடிச்சுக்கோணுமுங்க. எல்லாத்தையும் புட்டுப் புட்டு வைக்கக் கூடாதுங்க. இதெல்லாம் நம்ம வயசானதுக்கப்பறம்தான் புடிபடுமுங்க.

  பதிலளிநீக்கு
 15. அற்புதமான அறிவுரைகள்.. படித்து விட்டு, விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டு இருக்கிறேன்!! :))

  பதிலளிநீக்கு
 16. >கேட்கும் கேள்விக்குத்தான் பதில் பேச வேண்டும். நீங்களாக எதுவும் பேசக்கூடாது

  இதைத்தான் ஐயா நான் செய்கிறேன். ஆனால் "கல்லுளி மங்கன்" என்கிறாள் என் மனைவி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கல்லுளி மங்கன் என்பது நல்ல பட்டமாயிற்றே? இப்படியே இருங்கள். மாறினீர்களானால் விபரீதமாகிவிடும்.

   நீக்கு