வெள்ளி, 23 மார்ச், 2012

நம் குழந்தைகளிடம் நடந்து கொள்வது எப்படி?

நம் குழந்தைகள்தான், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று இருந்த காலம் போய்விட்டது. இடுப்பில் கயறு கட்டி கிணற்றுக்குள் இறக்கி பயங்காட்டின நாட்கள் இப்போது இல்லை.

இன்றைய பெற்றோர்களின் பொறுப்பு மிக சிக்கலாக இருக்கிறது. குழந்தைகளுக்கு எது நல்லது, எதை எப்படி சொல்லிக்கொடுப்பது என்பது கஷ்டமான சமாசாரமாக இருக்கிறது. குழந்தை வளர்ப்புக்கென்று ஸ்பெஷல் கிளாஸ்கள் நடக்கின்றன என்று கேள்விப்படுகிறேன். உண்மையில் அவை அவசியம் என்றே தோன்றுகிறது.

இதோ இந்தப் பதிவைப் பாருங்கள். குழந்தைகளின் ஆதங்கத்தை நன்கு படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

குழந்தைகளிடம் அன்பு காட்டவேண்டியது அவசியம். ஆனால் அதீத அன்பு கெடுதல் விளைவிக்கும் என்பதையும் உணரவேண்டியது அவசியம். கண்டிப்பு தேவைப்படும் சமயங்களில் கண்டிப்பாக இருப்பது குழந்தைகளுக்கு நல்லது. ஆனால் எப்பொழுது அன்பு காட்டவேண்டும், எப்பொழுது கண்டிப்பாக இருக்கவேண்டும் என்பதை அனுபவத்தின் மூலமாகத்தான் கற்றுக்கொள்ள முடியும்.

குடும்பத்தின் பொருளாதார நிலையைக் குழந்தைகள் அவசியம் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் குடும்ப நிலைக்கு மீறி ஆசைப்படாமல் இருப்பார்கள். இளம் வயதில் கல்வி கற்பதுதான் ஒருவனின் நோக்கமாக இருக்கவேண்டும். உபரியாக ஏதாவது விளையாட்டு அல்லது நுண்கலையில் பரிச்சயம் இருந்தால் போதும். அதற்காக குழந்தைகளை பல்கலை நிபுணனாக வளர்க்கிறேன் என்று விரட்டுவது கூடாது.

தொலைக்காட்சிப் பெட்டியும் கணிணியும் இல்லாத வீடே இல்லை என்று ஆகிப்போனது. இந்த இரண்டும் பொது அறிவை வளர்க்கக் கூடியவைதான். ஆனால் அதற்கும் ஒரு நியதி இருக்கவேண்டும். வீட்டிலுள்ள பெரியவர்கள் எப்போதும் டி.வி. பார்த்துக்கொண்டு குழந்தைகளுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிப்பது சாத்தியமில்லை.

குழந்தைகளின் நடவடிக்கைகளின் மேல் பெற்றோர்களின் கண்காணிப்பு எப்போதும் அவசியம். அவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை பெற்றோர்கள்தான் கொடுக்கவேண்டும். அவர்களுக்குத் தேவையான வசதிகள் அனைத்தையும் செய்து கொடுத்திருக்கிறோமே என்று திருப்திப் பட்டுக்கொண்டு அவர்களை மனம் போல் நடந்து கொள்ள அனுமதிப்பது தவறு.

நம் குழந்தைகளின் எதிர்காலத்தை நல்ல முறையில் உருவாக்கிக் கொடுப்பது நம் பொறுப்பு. அதே சமயம் நம் அனைத்து செல்வங்களையும் அவர்களுக்காகவே தியாகம் செய்து விட்டு நம்முடைய வயதான காலத்தில் அவர்களை எதிர்பார்த்து நிற்கும் நிலைக்கு ஆளாகாதீர்கள்.

12 கருத்துகள்:

 1. குழந்தைகளின் நடவடிக்கைகளின் மேல் பெற்றோர்களின் கண்காணிப்பு எப்போதும் அவசியம். அவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை பெற்றோர்கள்தான் கொடுக்கவேண்டும்.

  பயனுள்ள பகிர்வுகள் ஐயா .. பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 2. //நம் குழந்தைகளின் எதிர்காலத்தை நல்ல முறையில் உருவாக்கிக் கொடுப்பது நம் பொறுப்பு. அதே சமயம் நம் அனைத்து செல்வங்களையும் அவர்களுக்காகவே தியாகம் செய்து விட்டு நம்முடைய வயதான காலத்தில் அவர்களை எதிர்பார்த்து நிற்கும் நிலைக்கு ஆளாகாதீர்கள்.//

  இன்றைய படிப்பு விற்கிற விலையில் நம் வருமானத்தோட சேர்த்து இருக்கிற சொத்தையும் வித்து செலவழிச்சாத்தான் நம்ம புள்ளைகளை சிறப்பாக படிக்க வைக்க முடியும் என்கிற நிலைமை. இதற்கு மீறி சம்பாதித்து தனக்கும் வைத்துக்கொள்ளுமளவுக்கு எல்லோருக்கும் வருமானம் இருக்குமா என தெரியவில்லை. அப்படி இருப்பவர்கள் உண்மையிலேயே கொடுத்துவைத்தவர்கள்.

  பகிர்வுக்கு மிக்க நன்றி..

  http://anubhudhi.blogspot.in/

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிரமம்தான்.

   ஆனால் வாழ்க்கையின் நிதரிசனத்தோடு ஒட்டி வாழ்வதுதானே புத்திசாலித்தனம். நாம் எல்லோரும் வாழ்க்கையை ஒரு கோணத்திலேயே பார்த்து பழகிவிட்டோம். கிராமங்களில் இன்றும் பலர் தமிழ் மீடியத்தில் படித்து பின்பு மேல் படிப்புகள் படித்து உயர்வதைக் காண்கிறோம்.

   நீக்கு
 3. அருமையான பகிர்வு ஐயா. நீங்க சொல்லும் கருத்துகள் அனைத்துமே பயனுள்ளவை.

  பதிலளிநீக்கு
 4. ”நம் குழந்தைகளின் எதிர்காலத்தை நல்ல முறையில் உருவாக்கிக் கொடுப்பது நம் பொறுப்பு. அதே சமயம் நம் அனைத்து செல்வங்களையும் அவர்களுக்காகவே தியாகம் செய்து விட்டு நம்முடைய வயதான காலத்தில் அவர்களை எதிர்பார்த்து நிற்கும் நிலைக்கு ஆளாகாதீர்கள்”.


  ஐயா ஏதாவது உள் குத்து அனுபவமா ?

  பதிலளிநீக்கு
 5. உள்குத்து ஒன்றும் இல்லை. எல்லாம் வெளிக் குத்துகள்தாம்!!!!!!

  பதிலளிநீக்கு
 6. மிகவும் பயனுள்ள பதிவு தான்.

  பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 7. பாஸ் மனைவியிடம் நடந்து கொள்வது எப்படின்னு ஒன்னு போடுங்க பாஸ்! நிறைய பேருக்கு உதவியா இருக்கும்!

  பதிலளிநீக்கு
 8. பெற்றோர் தமக்கு ஒரு தீர்மானம் பிள்ளைகளுக்கு ஒரு தீர்மானம் வைத்திருப்பதனாலேதான் பிள்ளைகள் பெற்றோரை எதிர்க்கின்ற நிகழ்வுகள் நடக்கின்றன. டி.வி விடயம் கம்ப்யூட்டர் விடயம் போலவேதான். சில பெற்றோர்கள் நாம் பட்ட கஷ்டம் பிள்ளைகள் படக்கூடாது என்று ஒரு காரணத்தைச் சொல்லி தமது பெருமையை வெளிக்காட்ட விலை உயர்ந்த பொருள்களை வாங்கிக்கொடுக்கின்றார்கள். அது எவ்வளவு பாரதூரத்தில் முடியும் என்பதை உணர்வதில்லை .இப்படப் பல தேவையான பதிவு சிந்தனையைத் தூண்டுங்கள் . அது ஒளிவிடட்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என் வாழ்க்கையில் நடந்தது. நான் எட்டாவது படிக்கும்போது எங்கள் வீட்டில் ஒரே ஒரு பைதான் இருந்தது. சாதாரண கித்தான் பை. அதில்தான் நான் ஸ்கூல் புக்ஸ் போட்டு எடுத்துக்கொண்டு போவேன். நான் பள்ளியிலிருந்து திரும்பியதும் என் அம்மா அந்தப் பையைத்தான் காய்கறி வாங்க எடுத்துக்கொண்டு போவார்கள். மறுநாள் நான் ஸ்கூலுக்குப் போக பையை எடுத்தால் அதிலிருந்து வெங்காயச் சருகு மற்றும் குப்பைகள் உதிரும். நான் அந்தப் பையை நன்றாக உதறி, பின்பு பள்ளிக்கு எடுத்துச் செல்வேன்.

   இப்படி பல முறைகள் நடக்கவே, நான் என் அப்பாவிடம் இந்த விஷயத்தைச் சொல்லி, எனக்கென்று ஒரு தனிப்பை வேண்டும் என்றேன். என் அப்பா சொன்னது இன்றும் மனதில் நிற்கிறது.

   "அப்படி ஆளாளுக்குப் பை வாங்கித்தர என்னால் முடியாது. உனக்கு சௌகரியப்பட்டால் படி. இல்லையென்றால் படிக்கவேண்டாம்."

   படிக்காவிட்டால் என்ன ஆகும் என்று தெரியும். வொர்க் ஷாப்பில் வேலைக்குச் சேர்த்து விடுவார்கள். மரியாதையாக அந்தப் பையை வைத்துக்கொண்டே படித்தேன். இன்று நன்றாக இருக்கிறேன்.

   இன்றைய பையன்களிடம் அப்படிச்சொன்னால் தூக்குப் போட்டுக்கொண்டாலும் போட்டுக்கொள்ளலாம்.

   நீக்கு