சனி, 29 டிசம்பர், 2012

பயமும் ஒழுக்கமும்


மனிதன் ஆதிகாலத்திலிருந்தே பயத்தை அறிந்திருக்கிறான். பயம் ஒரு தற்காப்பு உணர்ச்சி என்று கண்டு கொண்டிருக்கிறான். அவனுடைய வாழ்வில் பல ஆபத்துகளை வெல்ல இந்தப் பயம் தேவைப் பட்டிருக்கிறது.

நெருப்பு, வெள்ளம், காற்று இவைகள் அவனுடைய வாழ்வில் மிகுந்த சேதத்தை விளைவித்தன. ஆகவே அவைகளைக் கண்டு பயப்பட்டான். அவைகளிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வழிகளைக் கண்டு பிடித்தான். அவன் வாழ்வு நீண்டது.

காலம் மாற மாற, அவன் பயப்படும் பொருள்களும் மாறிக்கோண்டே வந்தன. தனக்குப் புரியாதவைகள் பயத்தை உண்டு பண்ணிவதால் அவைகளைப் புரிந்து கொள்ள முயற்சி செய்தான். புரிந்து போனதும் பயமும் விலகி விட்டது.

ஆனால் அன்றும் இன்றும் அவனைப் பயத்துக்குள்ளாக்கும் சில விஷயங்கள் மாறாமலேயே இருக்கின்றன. அதில் ஒன்று இருட்டு. ஏனெனில் இருட்டில் எதிரி ஒளிந்திருந்தால் ஆவனைப் பார்க்க முடிவதில்லை. அந்த எதிரி ஆபத்தைக் கொடுக்க முடியும். ஆகவே மனிதன் இருட்டைக் கண்டு இன்றும் பயப்படுகிறான்.

அடுத்தது, புதிதாக இருப்பவைகளைப் பார்த்து பயந்தான். புது மனிதர்கள், புது இடம், புது சூழ்நிலைகள் இவைகளைக் கண்டு பயந்தான். இந்த பயம் அவனுடைய தற்காப்புக்கு உதவியது.

அவன் நாகரிகமடைந்து சமுதாயமாக மாறிய பிறகு, சில கட்டுப்பாடுகளை ஏற்படுத்தினான். அந்தக் கட்டுப்பாடுகளை மீறுபவர்களை சமுதாயம் ஒதுக்கி வைத்தது. மற்றவர்கள் தன்னை மதிப்பதற்காக மனிதன் அந்தக் கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொண்டான். இதை ஒருவனின் மனச்சாட்சி என்று கூறினோம். மனச்சாட்சி பிரகாரம் நடப்பவன்தான் மனிதன் என்று ஒரு காலத்தால் இருந்தது.

பிறகு சட்டங்கள் வந்தன. சட்டத்தை இயற்றுபவர்கள், சட்டத்தை அமுல்படுத்துபவர்கள் என்று இருவகையான அமைப்புகள் இருக்கின்றன. இந்த இரு அமைப்புகளும் சரியாக இருந்தால்தான் ஒரு சமுதாயம் ஆரோக்யமாக இருக்கும்.

ஆனால் இன்று யாரும் சட்டத்திற்கு பயப்படுவதில்லை. காரணம் சட்டத்தை இயற்றியவனே அதை மதிப்பதில்லை. சட்டத்தை அமுல்படுத்த வேண்டியவன் தன்னுடைய இச்சைப்படி அமுல்படுத்துகிறான். அவனை அந்த நிலைக்கு, சட்டம் இயற்றுபவர்கள் தள்ளி விட்டார்கள்.

மக்களின் பிரதிநிதிகள், நாட்டு மக்களுக்கு உதாரண புருஷர்களாக இருக்கவேண்டியவர்கள் எப்படி இருக்கிறார்களோ, அப்படித்தான் அந்த நாட்டின் கடைசி குடிமகனும் இருப்பான். அதுதான் இன்று நடக்கிறது.

தனி மனிதனுக்கு மனச்சாட்சி இல்லை, சட்டத்திடம் பயமும் இல்லை. எதனிடமும் பயம் இல்லை. அப்புறம் நாட்டில் எப்படி ஒழுக்கத்தை எதிர் பார்க்க முடியும்?

23 கருத்துகள்:

 1. டில்லியில் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான பெண் நேற்று இறந்து விட்டதாகத் தகவல்.

  தமிழ் நாட்டில் பல பொது இடங்களில் சிறு வயது ஆணும் பெண்ணும் சேர்ந்து திரிகிறார்கள். இவர்களைக் குறிவைத்து ஒரு கும்பல் திரிகிறது.

  ஆகவே டில்லி சம்பவம் போல் பல சம்பவங்கள் இங்கும் நடக்க வாய்ப்புகள் இருக்கின்றன. நடந்துகொண்டும் இருக்கின்றன. ஆனால் இரு சாராரும் பயப்படுவதாகக் காணோம்.

  எல்லோரும் ஒரு சம்பவம் நடந்த பிறகு குய்யோ முறையோ என்று சத்தம் போடுகிறார்களே தவிர. அத்தகைய சம்பவங்கள் நடப்பதற்கு முன் ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை, அந்தப் பெண்ணின் பெற்றோர் உட்பட.

  கிழவன் சொற்பேச்சு கின்னாரக்காரனுக்கு ஏறுமா?

  பதிலளிநீக்கு
 2. //தனி மனிதனுக்கு மனச்சாட்சி இல்லை, சட்டத்திடம் பயமும் இல்லை. எதனிடமும் பயம் இல்லை. அப்புறம் நாட்டில் எப்படி ஒழுக்கத்தை எதிர் பார்க்க முடியும்?//

  Dear Sir,

  5.12.2012 அன்று டெல்லியில் திரு ரவி சங்கர் குருஜி என்பவர் ART OF LIVING GROUP VOLUNTEERS களுக்காக ஓர் மிக அருமையான சொற்பொழிவு ஆங்கிலத்தில் சுமார் ஒரு மணி நேரம் கொடுத்துள்ளார்கள், சார்.

  அதை அப்படியே தமிழாக்கம் செய்து தந்து உதவுமாறு கேட்டு எனக்கு அந்த இயக்கத்தினை சார்ந்த நபர்களால் அது ஆங்கிலத்தில் அனுப்பப்பட்டது சார்.
  2 நாட்களுக்குள் வேண்டும் என்றார்கள். அதனை நான் கஷ்டப்பட்டு செய்து கொடுத்துள்ளேன். சற்றே மிகப்பெரிய சொற்பொழிவு அது.

  மிகப்பெரிய அந்த சொற்பொழிவினை நான் தமிழாக்கம் செய்யும் போதே மிகவும் ஆச்சர்யப்பட்டேன் சார்.

  இன்னும் எனக்கு நம்பிக்கை உள்ளது சார்.

  இந்தியாவில் குற்றங்களும், லஞ்சமும் முற்றிலும் ஒரு நாள் ஒழியும். தனிமனித ஒழுக்கம் மேம்படும்.
  இந்தியா தலைசிறந்த தர்மபூமியாகத் திகழும்.

  அதற்கான எல்லா வழிகளும், அவற்றை நடைமுறை படுத்துவதற்கான மிகச்சுலபமான வழிமுறைகளும் அதில் சொல்லப்பட்டுள்ளது சார்.

  அந்த என் தமிழாக்கம் விரைவில் அவர்களின் WEB Page இல் வெளியிடப்படும். அப்போது உங்களுக்கு அதன் இணைப்பை அனுப்புகிறேன்.

  WISHING YOU A VERY VERY HAPPY NEW YEAR Sir.

  VGK

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி திரு.வை.கோ.

   உங்கள் கட்டுரை லிங்க்கை எதிர்பார்க்கிறேன்

   நீக்கு
 3. மக்களின் பிரதிநிதிகள், நாட்டு மக்களுக்கு உதாரண புருஷர்களாக இருக்கவேண்டியவர்கள் எப்படி இருக்கிறார்களோ, அப்படித்தான் அந்த நாட்டின் கடைசி குடிமகனும் இருப்பான். அதுதான் இன்று நடக்கிறது.//

  அப்படியும் சொல்லலாம் அல்லது
  மக்களைத்தான் மக்கள் பிரதிநிதிகள்
  பிரதிபலிப்பார்கள் எனவும் கொள்ளலாம்
  என நினைக்கிறேன்
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மக்களில் கொஞ்சம் மேம்பட்டவர்கள்தான் பிரதிநிதியாகிறார்கள் என்று நம்புகிறேன். அப்படிப்பட்டவர்கள் மக்களுக்கு வழிகாட்டுவது அவர்கள் கடமையாகிறது. இது ஒரு ஆதர்ச நிலை. ஆனால் நிஜ நிலை அவ்வாறில்லை என்பது நாளுக்கு நாள் நிரூபணமாகிக்கொண்டு வருகிறது.

   எனக்கு என்ன அதிசயம் என்னவென்றால் இவ்வளவு கலாட்டாக்களுக்கு இடையிலேயும் நாடு நடந்து கொண்டிருப்பதுதான்.

   நீக்கு
 4. நாட்டில் இன்னும் கணிசமான மக்கள் சட்டத்தையும் ஒழுங்கையும் பின்பற்றுபவர்கள் நம்புபவர்கள் இருக்கிறார்கள். ஆளும் இடத்துக்கு வந்தால் அவர்களுக்கு தாங்கள் நினைப்பதை அவ்வளவு எளிதாக சாதிக்க முடியாமல் போகிறது. சுயநலமும், பேராசையும் கொண்ட மக்கள் அந்த இடங்களில் அதிகம் இருக்கிறார்கள். ஒரு அந்நிய ஆக்கிரமிப்பு போலவோ, உலக அழிவு போலவோ பொது ஆபத்து வந்தால் பெரும்பான்மை எண்ணம் மாறுமோ என்னவோ... இது மாதிரி சிந்திக்கும் ஒவொரு நபரும் நம்பிக்கை இழக்காமல் குறைந்தபட்சம் இன்னும் ஒரு மனிதருக்காவது இந்த நம்பிக்கையைப் பாஸ் செய்ய வேண்டும். இளைய தலைமுறையினரை, குழந்தையிலிருந்தே இந்த எண்ணங்களை மிகக் கண்டிப்பாக ஊட்டி வளர்க்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பொதுவாக சட்டத்தையும் ஒழுங்கையும் மதிக்கும் மக்கள் எப்போழுதும் பின்புலத்தில்தான் இருப்பார்கள். தங்களை ஒருபோதும் முன்னிலைப்படுத்திக் கொள்வதில்லை. சட்டத்தை துச்சமாக எண்ணுகிறவர்கள்தான் பொது வாழ்விற்கு வருகிறார்கள். அவர்கள்தான் ஆளும் பீடத்தில் அமருகிறார்கள்.

   நீக்கு
 5. உங்கள் எழுத்துகளைப் படித்த effect இல் நானும் கொஞ்சம் புலம்பி விட்டேன்! :))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் பலம்பல்களைப் படித்தேன். புலம்பித்தான் நம் வருத்தங்களை வெளியேற்ற முடியும்.

   நீக்கு
 6. தனி மனித ஒழுக்கம் இல்லாத நாட்டில் சட்டத்திற்கு பயப்படுவதை எப்படி எதிர்பார்க்கமுடியும்? இந்த சமயத்தில் கவிஞர் வாலி எழுதிய ‘தனி ஒரு மனிதன் திருந்திவிட்டால் சிறைச்சாலைகள் தேவையில்லை’ என்ற திரைப்படப் பாடல்தான் நினைவுக்கு வருகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நம்மைப் போன்றவர்கள் அங்கலாய்ப்பதைத் தவிர வேறென்ன செய்யமுடியும்?

   நீக்கு
 7. இந்தியாவில், சட்டம் இயற்றுபவர்களுக்கு அல்ல அது அப்பாவி மக்களுக்கு மட்டும்தான் என்பதுதான் இந்தியாவின் முதல் மற்றும் எழுதாத சட்டம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்த அப்பாவி மக்களை ஒடுக்கத்தான் அந்த சட்டங்களை உபயோகிக்கிறார்களே தவிர, அவர்களுக்கு எந்த விதத்திலும் உதவ அல்ல.

   நீக்கு
 8. மிக மிக சரியாக சொன்னிங்க....

  நன்றி,
  மலர்
  http://www.tamilcomedyworld.com/

  பதிலளிநீக்கு

 9. நாட்டு நடப்புகள் எச்சரிக்கையாக இருக்கிறது. எந்தக் குழுவிலும் 20 சதவீதம் பேர் மிகவும் நல்லவர்களாகவும் 20 சதவீதம்பேர் மிகவும் மோசமானவர்களாகவும் மீதி இருக்கும் 60 சதவீதம்பேர் சராசரிகளாகவும் இருக்கிறார்கள். இந்த விகிதம் எல்லாதரப்புக்கும் பொறுந்தும். ஆகையினால் கவலை வேண்டாம் .எல்லாம் சமன்பட்டுவிடும். நம்பிக்கை கொள்வோம். நலம் பெறுவோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து நாம் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். தனி மனித ஒழுக்கம் மற்றும் பொது வாழ்வில் ஒழுக்கம் எவ்வாறு சீர்குலைந்து கொண்டு வருகிறது என்று கண்கூடாகக் காண்கிறோம்.

   இனிமேல் மக்கள் திருந்துவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. உங்களுக்கு இருப்பதைப் பற்றி மிக்க மகிழ்ச்சி. இன்னும் வரும் சீர்கேடுகளைக் காண நாம் இருக்க மாட்டோம் என்பது ஒன்றுதான் ஆறுதலளிக்கும் விஷயம்.

   நீக்கு
 10. Dear Sir,

  அந்த திரு. ரவிசங்கர் குருஜி அவர்கள் ART OF LIVING என்ற அமைப்பின் தன்னர்வத் தொண்டர்களுக்காக 05.12.2012 அன்று நம் தலைநகர் புது டெல்லியில் ஆற்றிய ஆங்கில சொற்பொழிவினை நான் இரண்டே நாட்களுக்குள் தமிழாக்கம் செய்துதர பணிக்கப் பட்டிருந்தேன்.

  அந்த என் தமிழாக்கம் இப்போது அவர்களின் WEB PAGE இல் அப்படியே வெளிய்டப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பினை இங்கு தந்துள்ளேன்.
  தயவுசெய்து எல்லோருமே பொறுமையாக அதனைப் படித்துப்பாருங்கள்.

  இந்தியாவில் தற்போது ஏற்பட்டுவரும் குற்றங்களின் எண்ணிக்கையும், லஞ்ச லாவண்யங்களும் நிச்சயமாக படிப்படியாகக் குறைந்து ஒரு நாள் அது PURE INDIA ஆக மாறிவிடும். தர்ம நெறிகளுடன் கூடிய நம் இந்தியா உலகத்தின் தலைசிறந்த [சத்திய + தர்ம பூமியாக] நாடாகத் திகழும் என்பதில் ஐயம் இல்லை.

  மக்களின் மனத்தினை அடியோடு மாற்றவும், அவர்கள் ஒருவருக்கு ஒருவர் அன்புசெலுத்தி ஒற்றுமையாகி, சமுதாய சீர்திருத்தங்கள் ஏற்படவும் இது போன்ற தன்னார்வ இயக்கங்கள் ஆங்காங்கே உலகம் முழுவதும் ஏற்பட்டு மிக நன்றாகவே செயல் பட்டு வருகின்றன.

  But, It will take sometime to get a complete change.

  இணைப்பு:
  http://wisdomfromsrisriravishankartamil.blogspot.in/2012/12/blog-post_5.html

  தலைப்பு:
  நம் பாரதத்தை மேம்படுத்த சேவை மனப்பான்மையுள்ள தொண்டர்களே,முன்வாருங்கள்!

  அனைவருக்கும் என் ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துகள். HAPPY NEW YEAR 2013.

  அன்புடன் தங்கள்
  வை. கோபாலகிருஷ்ணன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவனம். சிரி-சிரி, சத்தியம் பற்றி பேசுவது நல்ல வேடிக்கை. அந்தக் கூட்டம் விற்கும் "சக்தி லேகியம்" பற்றி விசாரித்துப்பாருங்கள்.

   நீக்கு
 11. தனிமனித ஒழுக்கம் என்பது சிலருக்கு தெரிவதே இல்லை தனிமனித ஒழுக்கம் என்றால் என்ன? ஒரு நபர் அசைவம் சாப்பிடுவது அவரது விருப்பம் உரிமை அதையே அதற்க்காக காய்கறி உணவை மட்டுமே உண்பர்கள் மத்தியில் அமர்ந்து நான் மாமிசம் சாப்பிடுவேன் என்பது ஒழுக்கமா? அதைத்தான் இன்று சிலர் ஒழுக்கம்போல் கற்பிக்க முயல்கிறார்கள் இது ஒரு உதாரணம் தான்.

  காதலர்கள் காதல் லீலைகளில் ஈடுபடுவது அவர்கள் உரிமை அதை குழந்தைகள் விளையாடும் பூங்காக்களில் செய்வது ஒழுக்கமா?

  பதிலளிநீக்கு
 12. ஒரு மனிதனின் வெற்றி என்பது அவனது பொருளாதார நிலைமையில் இருந்துதான் இப்போதெல்லாம் நிர்ணயிக்கப் படுகிறது! இது மாறாதவரையில் குற்றங்கள் குறையாது! முட்டாள்களால் எதிர்காலம் குறித்து ந்ன்றாக கணிக்க இயலாது, எனவே எவ்வளவு முடியுமோ அவ்வளவு சுருட்டு என்றுதான் குறுக்கு புத்தி நினைக்கும்! இந்த நிலையை மாற்ற யாரால் முடியும்? இது ஒரு இயற்கை நிகழ்வே! மனித சமூகம் இப்படித்தான் தனது அழிவை சந்திக்கும்...!

  பதிலளிநீக்கு