வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

போர்வையில் கால்மாடு தலைமாடு தெரியுமா?

என்னமோ மாட்டைப் பற்றிய பதிவு என்று எண்ணி ஓடிவிடாதீர்கள். எல்லாம் நம்மைப் பற்றியதுதான். நான் என்ன மாடா என்று சண்டைக்கு வராதீர்கள். மாட்டுக்கும் இந்தப் பதிவிற்கும் ஸ்நானப்பிராப்தி கூடக் கிடையாது.

விக்கிரமாதித்தன் கதை எல்லோருக்கும் தெரியும். அதில் விக்கிரமாதித்தன் பேசாமடந்தையை வெற்றி கொள்வதற்காக பல தடைகளைத் தாண்டிச் செல்லுகிறான். கடைசியில் அவன் பேசாமடந்தையின் சயன அறைக்குள் நுழைகிறான். அங்கே ஒரு "அம்சதூளிகாமஞ்சம்" போட்டிருக்கிறது. "அம்சதூளிகாமஞ்சம்" அப்படீன்னா என்னென்னு கேக்கறீங்களா? நாம படுக்கிற கட்டில்தானுங்க. என்ன, கொஞ்சம் நெறய சிற்ப வேலைகளெல்லாம் செஞ்சிருப்பாங்க.


பேசாமடந்தை பெட் ரூமில் இருந்த கட்டிலின் படம் கிடைக்கவில்லை. கூகுளில் வேறு படம்தான் கிடைத்தது. மன்னிக்கவும். இதற்கும் அதற்கும் என்ன வித்தியாசம் என்றால், பேசாமடந்தை கட்டிலில், கட்டிலின் இரு புறமும் ஒரே மாதிரி இருக்கும்.

அதில் ஒரு கண்டிஷன் போட்டிருந்தார்கள். அதாவது இந்தக் கட்டிலின் கால்மாடு, தலைமாடு கண்டுபிடித்து, தலை மாட்டில் உட்கார்ந்தால், பேசாமடந்தை வந்து உங்களை வரவேற்பாள். மாறி உட்கார்ந்தால் அடியாட்கள் வந்து உங்களை கவனிப்பார்கள், என்று எழுதியிருந்தது.

நம்ம விக்கிரமாதித்தன் என்ன சாதாரண ஆளா, உடனே வேதாளத்தைக் கூப்பிட்டு ஒரு எலுமிச்சம்பழம் கொண்டு வரச்சொன்னான். அந்த எலுமிச்சம்பழத்தை கட்டிலின் நடுவில் வைக்க, அது உருண்டு சென்று கட்டிலின் ஒரு ஓரத்தில் சேர்ந்தது.

அப்போது பட்டி சொன்னான். எலுமிச்சம்பழம் சேர்ந்த இடம் கால்மாடு, அதற்கு எதிர்புறம் தலைமாடு. தேவரீர் தலைமாட்டில் உட்காருங்கள் என்று சொன்னான். பிறகு விக்கிரமாதித்தன் கட்டிலின் தலைமாட்டில் உட்கார்ந்து பேசாமடந்தை வந்து, அவளைப் பேசவைத்து, பிறகு அவளைத் திருமணம் புரிந்து, மீதி நடந்தது எல்லாம் பெரிய கதை. அது இப்போது நம் சப்ஜெக்ட்டுக்கு வேண்டியதில்லை.

சாராம்சம் என்னவென்றால், கட்டிலில் தலைமாடு கால்மாடு பார்த்துத்தான் படுக்கவேண்டும். இப்போதுள்ள கட்டில்களில் அது சுலபம். படத்தைப் பார்க்கவும். சைடு உயரமாக இருக்கும் பக்கம்தான் தலைமாடு.

முன்காலத்தில், அதாவது நான் சின்னப்பையனாக இருந்த காலத்தில் இந்த வம்பெல்லாம் கிடையாது. வீட்டிலுள்ள அனைவருக்கும் ஆளுக்கு ஒரு பாய், அதாங்க கோரைப்பாய், இருக்கும். அவைகளை எல்லாம் சுருட்டி வீட்டின் ஒரு மூலையில் சாத்தி வைத்திருப்பார்கள். ராத்திரி சாப்பிட்டவுடன் ஆளுக்கு ஒரு பாயை எடுத்து உதறி, விரித்துப் போட்டு, கிடைத்த தலையணை, போர்வையுடன் படுத்தால் விடிந்த பிறகு யாராவது எழுப்பினால் எழுந்திருப்போம்.

இப்ப என்னடாவென்றால், ஆளுக்கு ஒரு ரூம், அதில் தனி கட்டில், இத்தியாதிகள் வந்து விட்டன. மெத்தை என்று சொல்லப்படுவதில்தான் எத்தனை வகை? ரப்பர் மெத்தை, ஸ்பிரிங்க் மெத்தை, டெக்ரான் மெத்தை என்று பலவகை வந்து விட்டன. இந்த ரகளையில் இலவம்பஞ்சு மெத்தை காணாமல் போய்விட்டது. ஆனால் அதுதான் உடலுக்கு நல்லது.

இப்படி ஒரு மெத்தையில் படுத்து தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருக்கும்போது, திடீரென்று விக்கிரமாதித்தன் கட்டில் ஞாபகத்திற்கு வந்தது. அதன் தாக்கம் காரணமாக என் சிந்தனை இறக்கையில்லாமலேயே பறக்க ஆரம்பித்தது.


எதைப்பற்றிய சிந்தனை என்றால் நாம் அன்றாடம் உபயோகிக்கும் போர்வையைப் பற்றியதுதான். இதைப் பற்றி யாரும் தீவிரமாக சிந்தித்து இருக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன். நாம் எல்லோரும் தினமும் போர்வையைப் போர்த்திக் கொள்ளுகிறோம். காலிலிருந்து தலை வரை நன்றாக இழுத்திப் போர்த்திக் கொள்ளுகிறோம். காலையில் எழுந்தவுடன் பெரும்பாலானோர் போர்வையை அப்படியே போட்டுவிட்டுப் போவதுதான் வழக்கம். அவர்கள் இந்தப் பதிவைப் படிக்கவேண்டியதில்லை.

என்னைப் போல் பழங்கட்டைகள் சிலர் எழுந்தவுடன் அந்தப் போர்வையை நான்காக மடித்து பிறகு குறுக்காக இரண்டு தடவை மடித்து மெத்தையின் ஒரு புறம் வைப்பது வழக்கம். மறு நாள் தூங்கப் போவதற்கு முன் இந்தப் போர்வையை எடுத்து விரித்து உதறி மீண்டும் பயன்படுத்துவோம். இதுதான் பொதுவான வழிமுறை.

அப்படி மறுநாள் அந்தப் போர்வையைப் பயன்படுத்துமுன், யாராவது அதில் கால்மாடு, தலைமாடு பார்ப்பதுண்டா? பார்க்கவேண்டாமா? முன்தினம் போர்வையின் ஒருபக்கம் கால்மாடாக இருந்திருக்கும். என்னதான் நீங்கள் காலை சுத்தமாக கழுவிக்கொண்டு படுத்திருந்தாலும் காலில் மிச்சம் மீதி இருக்கும் தூசி தும்புகள் அந்தப் போர்வையின் கால் மாட்டில் ஒட்டிக் கொள்ளும் அல்லவா? மறுதினம் ஒருக்கால் அந்தப் பக்கம் உங்கள் தலைமாடாக வந்து விட்டால் அந்த தூசிதும்புகள் உங்கள் மூக்கு, கண், வாய் ஆகியவைகளில் சேருமல்லவா? அது நம் ஆரோக்கியத்திற்கு கேடு அல்லவா?

ஆஹா, என்ன ஆராய்ச்சி என்று மூக்கின் மேல் விரல் வைக்காமல், நன்றாக யோசியுங்கள். நான் பல நாட்கள் இதைப் பற்றி யோசனை செய்து இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கண்டுபிடித்திருக்கிறேன்.


அதாவது ஒரு போர்வைக்கு நான்கு மூலைகள் இருக்கும் விவரம் உங்களுக்கு ஏறகனவே தெரிந்திருக்கும். அதில் உங்களுக்கு விருப்பமான ஒரு மூலையில் நல்ல கெட்டி நூலால் ஒரு வளையம்  மாதிரி தைத்து விடவேண்டியது. எம்பிராய்டரி அல்ல. சும்மா ஒரு வளையம் மட்டுமே. உங்கள் கை விரல் அதற்குள் நுழைகிற அளவு இருந்தால் போதும். அவ்வளவுதான், வேலை முடிந்தது. 

இனி தினமும் படுக்கும்போது இந்த நூல் வளையம் உங்கள் தலை மாட்டில் இடது கைப் பக்கம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். உங்கள் போர்வையின் தலைமாடு கால்மாடு மாறவே மாறாது. உங்கள் போர்வையைத் துவைத்தாலும் (அந்தப் பழக்கம் இருந்தால்) இந்த நூல் வளையம் அப்படியே இருக்கும்.

இதைக் கடைப்பிடித்தீர்களானால் உங்கள் அலெர்ஜி தொந்திரவுகள் காணாமல் போய்விடும். இந்தக் கண்டுபிடிப்பை பேடென்ட் ஆபீசில் ரிஜிஸ்டர் பண்ணலாமென்று இருக்கிறேன். அப்படி நான் பேடென்ட் வாங்கிவிட்டால் அதன் பிறகு இந்த டெக்னிக்கை உபயோகிப்பவர்கள் அனைவரும் எனக்கு ராயல்டி கொடுக்கவேண்டு வரும்.

18 கருத்துகள்:

  1. Hello There. I discovered your weblog the use of msn.
    This is a really smartly written article.
    I will make sure to bookmark it and come back to learn more of your helpful information.
    Thank you for the post. I will certainly return.
    My web-site - airbnb scam

    பதிலளிநீக்கு
  2. நல்ல யோசனை சார். நானும் உபயோகப்படுத்தலாம் என இருக்கிறேன்.. நீங்கள் இன்னும் பேடன்ட் வாங்காததால் இன்றே தொடங்கிவிடுகிறேன்!

    பதிலளிநீக்கு
  3. முனைவர் ஐயா! நானும் பழங்கட்டை என்பதால், தினம் போர்வையை மடித்து வைப்பதுண்டு. நீங்கள் எழுப்பியிருந்த ஐயம் எனக்கு பல நாள் வந்ததுண்டு. உங்கள் யோசனையும் கண்டுபிடிப்பும் அருமை. சீக்கிரம் காப்புரிமையை பதிவு செய்யுங்கள். அதுவரை உங்கள் கண்டுபிடிப்பை உபயோகிக்க இருக்கும் என்னைப் போன்றோர்களிடமிருந்து உரிமைத்தொகை வராமல் போகும்!

    பதிலளிநீக்கு
  4. ஹா... ஹா... என்னவொரு சிந்தனை...! ஆனால் பயன்கள் உண்டு... ((துவைப்பது))

    பதிலளிநீக்கு
  5. What should I do if I forget, is the ring is for head or the feet? Please make it fool proof. As the age catching up I may become senile.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. There are several fool proof solutions to your issue. If you are keen on knowing them, I can put them in a separate post. But be forewarned that some of the solutions may be unpalatable.

      நீக்கு
    2. For the present, I can give one solution. It is up to you to take it or leave it.

      The ring is for neither the head nor the feet. It is really for the neck. Sometimes it is called a "noose" also or more correctly "hanger's noose". You have to put the ring around your neck, tie the other end of the rope to a branch of the nearest tamarind tree from your house and hang yourself. You won't have senility problems catching you.

      நீக்கு
  6. \\அப்படி நான் பேடென்ட் வாங்கிவிட்டால் அதன் பிறகு இந்த டெக்னிக்கை உபயோகிப்பவர்கள் அனைவரும் எனக்கு ராயல்டி கொடுக்கவேண்டு வரும்.\\ பில் கேட்ஸை சுலபமாக முந்திவிடுவீர்கள் என நினைக்கிறேன்!!

    பதிலளிநீக்கு
  7. ஆஹா! இந்த ஒரு நல்ல செய்தியை சொல்வதற்காக, விக்ரமாதித்தன் வேதாளம் வரைக்கும் போயிட்டிங்க, ஆஹா சூப்பர். நான் மடித்து வைப்பதுதான் பழக்கம்.

    பதிலளிநீக்கு
  8. நல்ல கண்டுபிடிப்பு தான் ஐயா. இதுவரை இப்படி ஒரு விஷயத்தை யோசித்ததே இல்லையே...

    பதிலளிநீக்கு
  9. அருமையான சிந்தனை சிற்பிக்கு பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  10. மிகவும் தேவையான ஒன்று என்று இந்தப் பதிவைப் படித்த பின் தோன்றுகிறது. இத்தனை நாள் யோசித்ததே இல்லை.
    சீக்கிரம் பேடன்ட் உரிமை வாங்கிவிடுங்கள், ஐயா!

    பதிலளிநீக்கு
  11. I think the admin of this site is really working hard in favor
    of his web site, because here every data is quality based stuff.
    Also see my page :: www.allvoices.com

    பதிலளிநீக்கு
  12. நல்ல யோசனைதான்
    ஆனால் நான் போர்ப்பது
    மிக அரிதாகத்தான் என்பதால் பிரச்சனையில்லை.
    மருத்துவ ரீதியாக ஒரு கருத்து தலையணை பாடுக்கை விரிப்பு போர்வை போன்றவற்றை அடிக்கடி வெயிலில் போட வேண்டும். இல்லையேல் டஸ்ட் மைட் தொல்லையால் சளி ஏற்பட வாய்ப்புண்டு.

    பதிலளிநீக்கு