திங்கள், 11 மார்ச், 2013

5. தேவலோகத்தில் பேங்க் உதயம்.

மறு நாள் விடிந்ததும் நாரதர் பேப்பரும் கையுமாக வந்தார். அவர் வாயெல்லாம் பல்.

மந்திரி பிரபோ, தேவலோகம்  முழுவதும் நேற்று இரவு எங்கும்  ஒரே ஆட்டபாட்டம்தான். தேவர்களின் உற்சாகம் கரை புரண்டோடுகிறது, என்றார். நல்லது, கேட்க சந்தோஷமாக இருக்கிறது. இதற்காகத்தானே மும்மூர்த்திகள் என்னை இங்கு வரச்சொன்னார்கள். இன்னும் பல மாற்றங்களைக் கொண்டு வரப் போகிறேன், பார்த்துக்கொண்டிருங்கள் என்றேன். நாரதர் சரி என்றார்.

அப்புறம் நாரதரே, மகாபாரதத்தில் யுத்தம் ஆரம்பிக்கு முன்பாக தருமர் இங்கு யாரிடமோ கடன் வாங்க வந்தாராமே, அது யார் என்றேன். அதுங்களா, இங்கே குபேரன் என்று ஒருவன் அம்பாரம் அம்பாரமாக வைரம், வைடூர்யம், தங்கம், வெள்ளி, பிளாட்டினம் ஆகியவைகளை வைத்துக்கொண்டு இருக்கிறான், என்றார். அவனைக்கூப்பிடுங்கள் என்றேன்.

சிறிது நேரத்தில் அவன் வந்தான். வந்து மந்திரி பிரபோ வணக்கம், என்றான். வாரும் குபேரா, நீ அந்த இலங்கை ராவணனின் தம்பியல்லவோ என்றேன். அவன் கொஞ்சம் அசந்து விட்டான். பிரபுவிற்கு என்னுடைய குலம் கோத்திரம் எல்லாம் அத்துபடி போலிருக்கிறது என்றான். நான் எல்லாம் அறிவேன், இப்படி உட்கார் என்றேன்.

நீ வைத்திருக்கும் செல்வங்களையெல்லாம் என்ன செய்கிறாய் என்றேன். ஒன்றும் செய்வதில்லை என்றான். அப்படியா, அப்படி செல்வ லக்ஷ்மியை சும்மா வைத்திருக்கலாமோ, அது அபச்சாரமல்லவா? நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அப்படியே செய்யலாம் என்றான்.

அப்படியானால் இங்கு ஒரு தேவலோக பேங்க் ஆரம்பிக்கலாம், மயனைக்கூப்பிடுங்கள் என்றேன். மயன் வந்தான். மயா. இங்கு ஒரு பேங்க் ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறோம். அதற்கு தேவ்லோக் பேங்க் என்று பெயர். ஸ்விட்சர்லாந்து என்று ஒரு நாடு பூலோகத்தில் இருக்கிறது. அங்குதான் உலகின் மிகப்பெரிய பேங்க் இருக்கிறது. நீயும் குபேரனும் அங்கு போய் அந்த பேங்க்கின் கட்டிடங்கள், பணம் வைக்கும் அறைகள் மற்றும் அதன் நடைமுறைகளைத் தெரிந்து வாருங்கள் என்றேன்.

ஒரு மணி நேரத்தில் திரும்பி வந்து விட்டார்கள். எல்லாம் பார்த்து விட்டோம் என்றார்கள். மயனே, அந்த மாதிரி இங்கு இன்னும் அலங்காரமாகவும், குபேரனின் செல்வங்கள் அனைத்தும் வைக்கும்படியாகவும் ஒரு பேங்க் கட்டுங்கள் என்றேன். உடனே தயாராகிவிட்டது.


குபேரா, இந்த பேங்கிற்கு நான் பிரசிடென்ட், நீதான் தலைமைக் கேஷியர், பொதுவும் செக்கும் டைரக்டர்கள். உனக்கு உதவிக்கு வேண்டிய ஆட்களை யமனிடமிருந்து வாங்கிக்கொள். இன்று மாலை திறப்பு விழா வைத்துக்கொள்ளலாம். இந்திரனுக்கு சமீபத்தில் ஒரு வேலையும் கொடுக்கவில்லை. அவனை வைத்து திறப்பு விழா நடத்துவோம். மும்மூர்த்திகளையும் விழாவிற்கு அழைத்துவிடுங்கள் என்றேன்.

மாலை நான்கு மணிக்கு "தேவலோக் பேங்க்" ஐ இந்திரன் ரிப்பன் வெட்டி திறந்தார். பேங்கிற்குள் இருக்கும் வசதிகளைப் பார்த்து மும்மூர்த்திகளும் அசந்து போய் விட்டனர். எல்லோரும் என்னை வாழ்த்த எனக்கு மிகவும் கூச்சமாகப் போய்விட்டது.


பிறகு விருந்துபசாரம் அரம்பித்தது. மேனகை, திலோத்தமை நடனத்துடன் ஆரம்பித்தோம். நளனும் பீமனும் தங்கள் திறமைகளை எல்லாம் காட்டி பலவித உணவு ஐட்டங்களை தயாரித்திருந்தார்கள். எல்லோரும் நன்றாக சாப்பிட்டுவிட்டு அவரவர் இருப்பிடம் போய்ச் சேர்ந்தார்கள்.

நாங்களும் தூங்கச்சென்றோம்.

அடுத்த பதிவு - 6. பூலோகத்தில் தேவலோக தூதரகம்.

24 கருத்துகள்:

 1. செல்வ லக்ஷ்மியை சும்மா வைத்திருக்கலாமோ,
  அது அபச்சாரமல்லவா?

  நல்ல அறிவ்ரை .....

  பதிலளிநீக்கு
 2. தேவ்லோக் பேங்க்’ கின் கிளையை, தமிழகத்தில்(குறிப்பாக சென்னையில்) திறக்க ஏதேனும் திட்டம் உண்டா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பேங்க் கிளை நம் ஊரில் திறக்காவிட்டால் நமக்கு என்ன பிரயோஜனம்? இடம் எல்லாம் பார்த்தாயிற்று. ஊட்டி மலைச்சாரலில் அமையப்போகும் தேவலோக தூதரகத்துக்குள் இந்த பேங்க்கின் கிளை திறக்கப்படும். திறப்பு விழாவிற்கு அவசியம் வரவேண்டும்.

   நீக்கு
  2. மிக்க மகிழ்ச்சி. நீங்கள் அழைத்துவிட்டீர்கள் அல்லவா.அதனால் அவசியம் திறப்பு விழாவில் கலந்துக்கொள்வேன்!

   நீக்கு
 3. உங்களுக்கு அபார கற்பனை! :)

  ரசித்தேன். தொடரட்டும் பதிவுகள்.

  பதிலளிநீக்கு
 4. //இங்கே குபேரன் என்று ஒருவன் அம்பாரம் அம்பாரமாக வைரம், வைடூர்யம், தங்கம், வெள்ளி, பிளாட்டினம் ஆகியவைகளை வைத்துக்கொண்டு இருக்கிறான்,//
  அர்த்தம் புரிகிறது.
  குபேரன் மட்டுமா வைத்திருக்கிறான்
  இந்தியாவில் வீட்டுக்கு வீடு, கோயிலுக்கு கோயில் அல்லவா இப்படிப்பட்ட வைரம், வைடூர்யம், தங்கம், வெள்ளி (அதென்ன பிளாட்டினம், அந்தக்காலத்தில் இருந்தத என்ன) குவிந்து கிடக்கின்றன. இவற்றையெல்லாம் வெளி கொணர்ந்தாலே போதுமே இந்தியா முன்னேறி விடுமே என்ற ஆதங்கம் புரிகிறது.
  ஆனால் எனக்கென்னவோ ஒரு சின்ன பயம் அது உண்மையான பயமும் கூட. இப்போது நடுத்தர மக்களிடம் உள்ள இத்தகைய செல்வங்கள் எல்லாம் வெளி கொணர்ந்த ஒரு சில வருடங்களில் ஒரு சிறு கூட்டத்தின் வழியாக swiss பாங்குக்கு சென்று சேர்ந்து விடுமே -

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடுத்த பதிவு வரை பொறுங்கள். ஸ்விஸ் வங்கிக்கு ஆப்பு வைக்கிறேன் பாருங்க.

   நீக்கு
 5. தேவலோகத்தில், வருமானவரி அலுவலகத்தை எப்போது திறப்பதாக உத்தேசம்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருமான வரி இந்தியாவிலேயே ஒழிக்கப்படப்போகிறது. அதற்குப் பதிலாக லஞ்ச வரி என்று ஒன்று கொண்டுவரப்போகிறேன். அதாவது லஞ்சம் சட்டபூர்வமாக்கப்படும். ஒவ்வொருவர் வாங்கும் லஞ்சத்தைப் போல் ஐந்து மடங்கு லஞ்ச வரி அவர்கள் பேங்க் அல்லது வேறு சொத்துக்கள் இவைகளிலிருந்து எடுத்துக்கொள்ளப்படும்.

   நீக்கு
  2. இதைப்பற்றி தனி பதிவும் விரிவாக போடலாமே...

   நீக்கு
 6. //மகாபாரதத்தில் யுத்தம் ஆரம்பிக்கு முன்பாக தருமர் இங்கு யாரிடமோ கடன் வாங்க வந்தாராமே, அது யார்//
  //சிறிது நேரத்தில் அவன் வந்தான். வந்து மந்திரி பிரபோ வணக்கம், என்றான். வாரும் குபேரா, நீ அந்த இலங்கை ராவணனின் தம்பியல்லவோ//

  மகாபாரதத்துக்கும் ராமாயணத்துக்கும் பொதுவான பாத்திரங்கள் ஹனுமார் மட்டும்தான் என்டு நினைத்திருந்தேன்.
  இராமாயணத்தில் ஹனுமார் பற்றி எல்லோருக்கும் தெரியும்.
  மகாபாரதத்தில் த்ரௌபதி ஒரு பூ கேட்டாள் என்று பீமன் நந்தவனம் போகையில், உள்ளே விடாமல் வாசலில் ஒரு வயதான குரங்காக ஹனுமார் படுத்திருந்தார் என்று சொல்லக்கேள்வி.

  இப்போது உங்கள் வழியாக இன்னுமொரு பாத்திரம் பற்றி தெரிந்து கொண்டேன். குபேரன் - ராமாயணத்தில் ராவணனின் தம்பியாக என்பதும் மகாபாரதத்தில் தர்மருக்கு கடன் கொடுப்பவருமாக என்பதும். இரண்டுமே புது தகவல்கள்.

  ஆனால் மகாபாரதத்திலாவது தர்மருக்கு கடன் கொடுத்தார். இராமாயணத்தில் இவர் பங்கு என்ன என்று அய்யா அவர்கள் சொன்னால் நன்றாக இருக்கும்.

  இவர்கள் இருவரை தவிர வேறு கதா பாத்திரம் இவ்விரு காவியங்களுக்கும் பொதுவாக இருக்கின்றனரா என்பதும் தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இராமாயணத்தில் குபேரனுடைய புஷ்பக விமானத்தைத்தான் இராவணன் பிடுங்கிக்கொண்டு போனான்.

   நீக்கு
 7. முதல் பதிவில் "அங்கு இந்திரன் ரம்பை ஊர்வசியின் நாட்டியத்தைப் பார்த்துக் கொண்டு நாங்கள் வந்ததையே கவனிக்கவில்லை" என்று சொல்லியிருந்தீர்கள். நீங்களும்தான் ரம்பை ஊர்வசியின் நாட்டியத்தைப் பார்த்திருப்பீர்கள் .
  இந்த பதிவில் "மேனகை, திலோத்தமை நடனத்துடன் ஆரம்பித்தோம்"
  என்கிறீர்கள்.
  அதற்குள் ரம்பா, ஊர்வசி நடனங்கள் போரடித்து விட்டதா அல்லது வெரைட்டிக்காக இவர்களையும் சேர்த்திருக்கிறீர்களா
  இனி மேல் நால்வரையும் சேர்ந்து ஆட சொல்லுங்கள்.
  முடிந்தால் ஒரு DVD போட்டு எங்களுக்கு அனுப்பினால் நாங்களும் பூலோகத்திலேயே தேவலோகத்தை அனுபவிக்கலாமே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. டான்ஸ் பார்க்கவெல்லாம் அங்கே நேரம் ஏது? திலோத்தமையும் மேனகையும் நம்மைப் புறக்கணிக்கிறார்கள் என்று நினைக்கப்படாதில்லையா, அதற்காகத்தான்.

   தேவலோக தூதரகம் திறக்கும்போது நால்வர் நடனம் வைத்து ஜமாய்த்து விடுவோம். பதிவர்கள் அனைவருக்கும் அழைப்பு உண்டு. டிவிடி யும் அப்போது எடுத்து விடுவோம்.

   நீக்கு
 8. //அடுத்த பதிவு - 6. பூலோகத்தில் தேவலோக தூதரகம்.//
  அடுத்த பதிவும் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டும் விட்டதால்
  ஆவலுடன் காத்திருக்கிறோம்
  பொதுவாக தூதரகம் என்றாலே நம்மை போன்ற நடுத்தர மக்களை பற்றி கொஞ்சமும் சட்டை செய்யாத கூட்டம்தானே அமர்ந்திருக்கும்.
  இந்த தேவலோக தூதரகத்திலாவது எங்களை மதிக்கும் ஆட்களாக வேலைக்கு அமர்த்துங்கள்
  விசா வாங்குவது போன்ற வேலைகளுக்கு உபயோகமாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நடுத்தர மக்களுக்கு அங்கே வேலை இல்லை. 100 கோடிக்கு மேல் வைத்திருப்பவர்களுக்குத்தான் தேவலோகத்திற்கு இம்மிக்ரேஷன் விசா கொடுக்கப்போகிறோம். உங்களுக்கு கதை மட்டும்தான்.

   நீக்கு
  2. நடுத்தர மக்களுக்கு எங்கும் திரிசங்கு சொர்க்கம்தானா
   பூலோகத்தில்தான் அந்த நிலை என்றால் தேவலோகத்திலாவது நிலைமை முன்னேறும் என்றிருந்தால் அதற்கும் சங்குதானா
   பொறந்தா அம்பானிக்கு பையனா பொறக்கோனும் இல்லின்னா அனாதையா பைசாவுக்கு பிரயோசனமில்லாம இருக்கோணும்
   அம்பானி பையனா இருந்தா நீங்க தேவலோகத்துக்கு அனுமதி தந்திடுவீங்க
   அனாதையா பைசாவுக்கு பிரயோசனமில்லாம இருந்த எல்லாமே அம்மா, அய்யா தயவுலே இலவசமா கிடைச்சுடும்
   நடுவாந்தரத்துலே நம்ம மாதிரி இருந்துட்டாதான் வாழவும் முடியாம சாகவும் முடியாம (இப்போ தேவேலோகமும் வர முடியாம) தினம் தினம் அவஸ்தைப்பட வேண்டியதிருக்கிறது

   ஏன் இவ்வளவு சொல்றேன்னா அப்பவாவது மனசிரங்கி எங்களுக்கும் விசா தர மாட்டீங்களான்னுட்டுத்தான்

   நீக்கு
 9. தேவலோக பேங்க்... ஹா... ஹா... அருமை...

  அசத்தீட்டீங்க ஐயா... தொடருங்கள்... தொடர்கிறோம்...

  பதிலளிநீக்கு
 10. //ஸ்விட்சர்லாந்து என்று ஒரு நாடு. அங்குதான் உலகின் மிகப்பெரிய பேங்க் இருக்கிறது. நீயும் குபேரனும் அங்கு போய் அந்த பேங்க்கின் கட்டிடங்கள், பணம் வைக்கும் அறைகள் மற்றும் அதன் நடைமுறைகளைத் தெரிந்து வாருங்கள் என்றேன். எல்லாம் பார்த்து விட்டோம் என்றார்கள். மயனே, அந்த மாதிரி இங்கு இன்னும் அலங்காரமாகவும், குபேரனின் செல்வங்கள் அனைத்தும் வைக்கும்படியாகவும் ஒரு பேங்க் கட்டுங்கள் என்றேன். உடனே தயாராகிவிட்டது.//
  ஆஹா என்ன ஒரு வேகம்
  வெளி நாட்டுக்கு பயிற்சிக்கு அனுப்பியது பாராட்டுக்குரியது.
  மயனும் அதே வேகத்துடன் அவ்வளவு சீக்கிரமாக தேவ்லோக் பேங்க் காட்டி முடித்தது மிக அருமை.
  இன்றோ ஒரு 4 வழி சாலை அதுவும் புற வழி சாலை இல்லாமல் கட்டி முடிப்பதற்குள் ஜனங்கள் படும் பாடு இருக்கிறதே சொல்லி மாளாது. அய்யா அவர்கள் அதை பற்றி ஒரு தொடர் பதிவே போடலாம். அந்த அளவு அவஸ்தைகள். இங்கு மயனை தயவு செய்து அனுப்பி வைக்க முடியுமா. எங்கள் தொந்திரவு சற்றே தீரும்.

  பதிலளிநீக்கு
 11. பட்ஜெட் சமயத்தில நீங்க தேவலோக பேங்க் திறக்கிறீங்க ...ஏதாவது

  உள் காரணம் இருக்குமோ ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வரும் பார்லிமென்ட் தேர்தலை மனதில் கொண்டுள்ளேன். நீங்கள் எல்லோரும் வாக்களித்தால் பிரதமர் ஆகும் ஆசை இருக்கிறது.

   நீக்கு
 12. உலகின் முதல் இருபது இணைய தளங்கள் ----- http://mytamilpeople.blogspot.in/2013/02/most-popular-websites-on-internet.html

  பதிலளிநீக்கு