திங்கள், 11 நவம்பர், 2013

வயது வந்தவர்களுக்கு மட்டும்.


தலைப்பைக் கண்டு மயங்காதீர்கள். இது உண்மையிலேயே வயது வந்தவர்களுக்கு மட்டும்தான். அதாவது 70 வயதைத் தாண்டியவர்களுக்கு.

சமீபத்தில் ஒரு வயதானவரை எனக்கு வேண்டியவர்களின் குடும்பத்தில் பார்த்த போது என் மனதில் தோன்றிய எண்ணங்களின் சாரம்.

 மனிதன் வாழ்க்கையில் பல பருவங்களைத் தாண்டி வளர்கிறான். அதில் முதுமைப் பருவமும் ஒன்று.

மற்ற எல்லா பருவங்களுக்கும் தன்னைத் தயார் படுத்திக்கொள்ளும் மனிதன் இந்த முதுமைப் பருவத்தை எதிர் கொள்ள எந்த முன் நடவடிக்கைகளையும் எடுப்பதில்லை. நான் முதுமையடைய மாட்டேன் என்கிற மாயையால் பீடிக்கப்பட்டு, முதுமை அவனைப் பீடிக்கும்போது அவனால் அதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

இது வாழ்க்கையின் ஒரு மிகப்பெரிய அவலம். இம்மண்ணுலகில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் அந்திம காலம் என்று ஒன்று உண்டு. அதன் முடிவில் இறப்பு என்பதும் தவிர்க்க முடியாத ஒன்று. வாழ்க்கையில் சிந்திக்கத் தெரிந்த ஒவ்வொருவருக்கும் தெரிந்த, தெரிந்திருக்க வேண்டிய உண்மை இது.

ஆனால் மனிதன் முதுமையையும் மரணத்தையும் கண்டு அஞ்சுகிறான். ஆகவே அதைப்பற்றி சிந்திக்க மறுக்கிறான். அதைப்பற்றி சிந்திக்காமல் இருந்தால் அவை அவன் வாழ்வில் வராமல் போய்விடுமா என்ன?

இதனால் பல முதியவர்கள் தங்கள் இறுதிக்காலத்தில், மிகவும் வேதனைப்படுகிறார்கள். தாங்கள் வேதனைப்படுவது மட்டுமல்லாமல் தன்னைச் சேர்ந்தவர்களையும் வேதனைப்படுத்துகிறார்கள்.

ஏதாவது வைத்தியம் செய்து தன்னைப் பழைய மாதிரி (அதாவது இளமை நிலைக்கு) கொண்டு வரமாட்டார்களா என்று எதிர்பார்க்கிறார்கள். அது சாத்தியமல்ல என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். இதனால் அவர்களுக்கும் அவர்களை பாதுகாக்கும் குடும்பத்தினருக்கும் ஏற்படும் கஷ்டங்கள் சொல்ல முடியாது.

பழங்காலத்தில் செவ்விந்தியர் நாடோடிகளாக வாழ்ந்தார்கள். அவர்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாறும்போது நடக்க முடியாதவர்களை பழைய இடத்துலேயே விட்டு விட்டுப் போவது வழக்கம். அந்த ஆளுக்கு முன்னால் குச்சிகளினால் நெருப்பு மூட்டி விட்டு, பக்கமத்திலும் கொஞ்சம் குச்சிகளை வைத்து விட்டுப் போய்விடுவார்களாம். அந்த நெருப்பு முழுவதும் அணைந்த பிறகு ஏதாவது காட்டு மிருகங்க்ள வந்து அந்த ஆளை அடித்து சாப்பிட்டு விடுமாம்.

இந்த நடைமுறையைக் கேட்க காட்டுமிராண்டித்தனமாகத் தோன்றினாலும் அவர்களின் வாழ்வில் வேறு வழியில்லாததினால்தான் அப்படி ஒரு வழக்கம் வந்திருக்கும்.  இன்றும் கூட நம் தாய்த்திரு நாட்டில் மன நோயாளிகளைக் கொண்டு போய் கண் காணாத இடத்தில் விட்டு விட்டு வருவதைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

பழங்காலத்தில் முதுமக்கள் தாழி இருந்த செய்தி அநேகருக்குத் தெரியும். இன்று சாதாரண குடும்பங்களில் இந்த வழக்கங்களெல்லாம் கடைப்பிடிப்பதில்லை. ஆனால் வயதானவர்கள் இருக்கும் குடும்பங்களில் அவர்களைப் பராமரிப்பதில் பல சங்கடங்கள் இருக்கின்றன.

இதைப்பற்றிய சிந்தனை பல நாட்களாக என் மனதில் ஓடிக்கொண்டு இருக்கிறது. மரணம் என்பது சிலருக்கு அநாயாசமாக வந்து விடுகிறது. நேற்று பார்த்தேன், நல்லாத்தானே இருந்தார் என்று சொல்லும்படியான மரணங்கள் பெரும் புண்ணியம் செய்தவர்களுக்கே வாய்க்கும்.

மற்றவர்கள் தங்கள் இறுதிக்காலத்தில் பல துன்பங்களை சந்திக்க நேரலாம். அத்துன்பங்களை ஏதாவது மாத்திரைகள் சாப்பிடுவது மூலம் குறைத்துக்கொள்ளலாமே தவிர முற்றிலும் குணப்படுத்துவது இயலாத காரியம். ஆஸ்பத்திரியில் சேர்த்து உபாதைகளைக் குறைக்க எடுக்கும் முயற்சிகள் மிகுந்த பொருட்செலவைத் தரும் வேலைகள். தவிர அதற்குத் தகுந்த ஆள் பலம், பொருள் பலம் வேண்டும்.

ஆகவே சிறிதாவது சிந்திக்கத் தெரிந்தவர்கள் தங்கள் நிலையைப் புரிந்து கொண்டு முதுமையில் வரும் துன்பங்களை, மற்றவர்களுக்கு இடைஞ்சல் தாராமல் பொறுத்துக்கொள்ள பழக வேண்டும். இன்றுள்ள சமுதாயத்தில் எது எதற்கோ பயிற்சி வகுப்புகள் நடத்துகிறார்கள். இந்த முதுமையை எதிர்கொள்வது பற்றியும் பயிற்சி வகுப்புகள் ஆங்காங்கே நடத்தவேண்டும்.

இயற்கையைப் புரிந்து அதற்குத் தக்க வாழ எல்லோருக்கும் இறைவன் அருள் புரிவானாக.

38 கருத்துகள்:

  1. //புண்ணியம் செய்தவர்களுக்கே வாய்க்கும்./

    அவர்கள் புண்ணியம் செய்திருக்கிறார்களோ, இல்லையோ அவ்ர்கள் கூட இருப்பவர்கள் புண்ணியம் செய்திருக்கவேண்டும். பார்த்துகொள்ளவும் முடியாமல், குற்றவுணர்ச்சியையும் தவிர்க்க முடியாமல் இருக்கும். குறிப்பிட்ட வயதுக்குமேல் மருத்துவத்தைத் தவிர்ப்பது நல்லது என்று கருதுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு வயதிற்கு மேல் மருத்துவத்தை தவிர்ப்பது நல்லது என்றே நினைகிறேன் என்கிறீர்களே. உங்களுக்கே இது சரியாகப்படுகிறதா?
      காலையில் நாளிதழை திறந்தவுடன் விபத்துக்களை பார்க்கிறோம். நமக்கு சம்பந்தமில்லாதவர்கள் அந்த விபத்தில் சம்பந்தப்பட்டிருக்கும்போது எளிதாக மனதில் எந்த ஒரு கணமும் இல்லாமல் அடுத்த செய்திக்கு போய்விடுகிறோம். ஆனால் அதே விபத்தில் நமக்கு சம்பந்தப்பட்டிருப்பவர்கள் இருந்திருந்தால் - அடிபட்டவர்கள் மட்டும் அல்ல, விபத்துக்கு காரணமானவர்களே ஆனாலும் சரி - மனது கிடந்து துடிக்கிறதே. உடனே ஓடிபோய் உதவி செய்ய மனது அலை பாய்கிறதே. நீங்கள் ரொம்ப எளிதாக ஒரு வயதிற்கு மேல் மருத்துவத்தை தவிர்ப்பது நல்லது என்கிறீர்கள். உங்கள் உறவினர்களை நினைத்து பரிதாபபடுகிறேன்

      திருச்சி காயத்ரி மணாளன்

      நீக்கு
    2. சரியாக சொன்னீர்கள். உடல் நலகுறையுடன் இருக்கும் பெற்றோர்களோ அல்லது நெருங்கிய உறவினர்களோ ஒரு உதவி கிடைக்காதா என்று ஏங்கும் அந்த நேரத்தில் அவர்களுக்கு உதவி புரிய நிஜமாகவே புண்ணியம் செய்துதான் இருக்க வேண்டும். இங்கு தாயையும் தந்தையையும் தவிக்க விட்டுவிட்டு வெளிநாட்டில் போய் பணம் சம்பாதித்து அப்படி சம்பாதித்த பணத்தையும் பெற்றோருக்கு அனுப்பாமல் அப்பப்ப அது நிஜமாகவே கொடுமை. அத்தகைய பாவத்தை தயவு செய்து செய்து விடாதீர்கள். உதவி செய்து புண்ணியம் தேடிகொள்ளுங்கள்

      சேலம் குரு

      நீக்கு
  2. பிறப்புண்டேல் இறப்புண்டு
    என்றனர் நம் முன்னோர்.
    நாம் யார் என்பதையும்,
    நமது நிலை என்ன
    என்பதையும் ஒவ்வொருவரும்
    உணர்ந்து கொண்டால்,
    முதுமை கூட இனிமையே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம் யார் என்பதை உணர்ந்து நமது நிலை என்ன
      என்பதையும் ஒவ்வொருவரும் உணர்ந்து கொண்டால் கண்டிப்பாக ,
      முதுமை கூட இனிமைதான். ஆனால் அத்தகைய மனோநிலை வர நிறைய பக்குவம் வேண்டுமே. அத்தகைய பக்குவத்தை எல்லோரிடமும் எதிர்பார்ப்பது என்பது நிச்சயமாக முடியாதுதான். நல்லபடியாக வாழ்ந்து முடித்துவிட்டோம் என்ற எண்ணம் வருவது சற்றே கடினமான விசயம்தான். ஒன்று மாற்றி ஒன்று நமது விருப்பங்கள் தொடர்கதையாக வந்து கொண்டிருக்கையில் இத்தகைய பக்குவம் அடைவது முடியாது. எனவே முதுமை என்றும் இனிமையாக இருக்காது.

      திருச்சி அஞ்சு

      நீக்கு
    2. அருமை அருமை.
      உணர்ந்து கொண்டால், உண்மை நிலையை உணர்ந்து கொண்டால் முதுமை மட்டுமல்ல எல்லாமே இனிமைதான்.
      உணர்ந்து அதற்கு தக்கபடி இளவயது முதலே நடந்து கொண்டால் முதுமையில் நம்மை பார்த்துக்கொள்ள நீ நான் என்று போட்டி போட்டுகொண்டு வருவார்களே. இள வயதில் நாம் நம்மால் முடிந்த வரை அனைவருக்கும் உதவி புரிந்து கொண்டிருந்தால், நமது முதுமை வயதிலும் அப்படி உதவி புரிந்து கொண்டுதான் இருப்போம். அப்புறம் நம்மை பாத்துக்கொள்ள அத்தனை பேர் இருப்பார்களே. அப்புறம் முதுமை என்ன முதுமை அவ்வளவும் இனிமைதான்

      திருச்சி தாரு

      நீக்கு
  3. வணக்கம்

    நல்ல கருத்தை பதிவில் அருமையாக சொல்லிய விதம் நன்று வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. நான் இன்னும் எழுபதைத் தொடவில்லை. இருப்பினும் பதிவை விரும்பிப் படித்தேன்.

    பதிவின் ஒவ்வொரு வரியும் தெளிவாக உணர்ந்து எழுதப்பட்டவை.

    மனப் பயிற்சியுடன் உடற்பயிற்சியும் தவிர்க்கவே கூடாதவை.

    ஒரு மரியாதைக்குரிய முதியவரால் முதியவர்களுக்காக எழுதப்பட்ட ‘முத்திரைப் பதிவு’ இது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உடற்பயிற்சி சின்ன வயதிலிருந்தே செய்ய ஆரம்பித்திருந்தால் அதை விட சுவர்க்கம் ஒன்றுமேயில்லை. முதுமையில் நன்கு வாழலாம். மனபயிற்சி நல்லபடி இருந்தால் கொஞ்சம் முன்னே இன்னே இருந்தாலும் மனது ஏற்றுகொள்ளும். உடலும் நன்றாக இருக்கிறது மனமும் நடப்பதை ஒத்துகொள்கிறது என்றால் அப்புறம் முதுமையை நாம் இரு கரம் கூப்பி வரவேற்கலாமே

      சேலம் குருப்ரியா

      நீக்கு
  5. ‘’இந்த முதுமையை எதிர்கொள்வது பற்றியும் பயிற்சி வகுப்புகள் ஆங்காங்கே நடத்தவேண்டும்.’’

    நல்ல யோசனை. சில வங்கிகளில் பணி ஓய்வுபெறுவோருக்கு (பொது மேலாளரிலிருந்து கடை நிலை ஊழியர் வரை) ஓரிரு நாட்கள் பயிற்சி தருகிறார்கள். அதில் ஓய்வூதியத்தை எவ்வாறு பாதுகாப்பான முறையில் முதலீடு செய்வது, ஓய்வுக்குப் பின் வாழ்க்கை முறையை எவ்வாறு மாற்றி அமைத்து உடல் ஆரோக்கியத்தோடு வாழ்வது என்பது பற்றி வகுப்புகள் நடக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைய காலகட்டத்தில் இத்தகைய பயிற்சிகள் மிக்க அவசியம். ஆனால் அவை வங்கி வேலை புரிந்தவர்களுக்கு மட்டுமில்லாமல் மற்ற அனைவருக்கும் கொடுக்கப்படவேண்டும். "பணம் இல்லாதவன் பிணம்" என்பது வந்த ஓய்வூதியத்தை தனது குழந்தைகளுக்கு பகிர்ந்து கொடுத்து விட்டு அவர்களை எதிர்பார்த்து காலத்தை ஓட்டும் ஒய்வு பெற்றவர்களுக்குத்தான் தெரியும். எனவே ஓய்வூதியத்தை எப்படி முதலீடு செய்வது என்பது கண்டிப்பாக இருக்க வேண்டிய ஒன்றுதான்.

      சேலம் குரு

      நீக்கு
    2. வேலை செய்து ஓய்வூதியம் பெறுபவர்களுக்கே இந்த நிலை என்றால் சொந்தமாக வேலை பார்பவர்களுக்கும் விவசாயிகளுக்கும் சொந்தபந்தம் அற்ற அனாதைகளுக்கும் - ஓய்வூதியம் அற்றவர்கள் - எப்படிப்பட்ட நிலை என்பது பற்றி சொல்லவே வேண்டியதில்லை . முதுமை வந்த காலத்தில் வாழ்க்கை முறையை எவ்வாறு மாற்றி அமைத்து எப்படி தனது சொந்தங்களோடு, நண்பர்களோடு அட்ஜஸ்ட் செய்துகொண்டு உடல் ஆரோக்கியத்தோடு வாழ்வது என்பது பற்றி வகுப்புகள் எடுப்பது மிக மிக அவசியமான ஒன்றாகும்.

      திருச்சி காயத்ரி மணாளன்

      நீக்கு
  6. இந்த வாரத்தில் இதே தலைப்பு மூன்று முறை என்னை கடந்து சென்றது. 01. மகாபாரதம் பற்றி பேச்சில் யட்ச பிரச்னம் பகுதியில் உலகத்தின் விசித்திரம் என்ன என்ற கேள்விக்கு தர்ம ராஜர் எல்லோரும் ஒரு நாள் இறக்க வேண்டும் என்று தெரிந்தும் தான் மட்டும் நாளை இறக்க மாட்டோம் என்று மனிதன் நம்புவது தான் உலகத்தில் விசித்திரம் என்று பதில் கூறுவார். 02. எனது நண்பியின் தந்தை புற்று நோயால் அவதி பட்டு வருகிறார். எனது நண்பி அவர் நன்கு நடமாடும் போதே அவரை காசிக்கு ஒரு முறை பயணம் செய்து வைத்து விடலாம் என்று ஆவல். அவர் காசி வேண்டாம் வேண்டுமானால் தாஜ் மகாலுக்கு கூட்டி கொண்டு போ என்றார். ஆசையில் தவறு காணவில்லை ஆனால் தனது ஜீவன் முக்திக்கு வழி தேட வேண்டும் என்ற ஆவல் இல்லையே? சங்கரர் தனது பஜ கோவிந்தத்தில் இலக்கண இலக்கியங்கள் யாவும் நமது கடைசி காலத்தில் காப்பற்ற போவதில்லை கோவிந்தனின் நாமம் சொல்ல சொல்லி வேண்டுவார். 03. இந்த ப்ளாக் http://anmikam4dumbme.blogspot.in/2013/06/3.html

    பக்கெட் லிஸ்ட் என்று ஒரு ஆங்கில திரைப்படம் நினைவுக்கு வந்து சென்றது உங்களின் இந்த ப்ளாக்-ஐ கண்ட போது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லதொரு ப்ளாக் அட்ரஸ் கிடைக்கபெற்றேன்,. நன்றி

      சேலம் குருப்ரியா

      நீக்கு
    2. விசித்திரம் என்று சொல்ல வேண்டுமானால் - குறிப்பாக இந்தியாவில் - நமது சிறு வயதில் பெற்றோர் சொல்லுகிற மாதிரி, பின்னர் தனது கணவரோ/மனைவியோ சொல்கிற மாதிரி, அதற்கும் பின்னர் தனது குழந்தைகளின் அபிலாஷைகளை பூர்த்தி செய்கிற மாதிரி வாழ வேண்டியிருக்கிறது. எல்லா கடமைகளும் முடிந்து நமக்கு என்று இருக்கும் காலம் முதுமை காலம்தான். ஆனால் அப்போது கையில் காசிருக்காது அனால் மனது நிறைய ஆசை இருக்கும். கூடவே நோயும் வந்து விடும். இது ஒரு விசியஸ் சர்க்கிள் எனப்படும் மாயவழியாக தொடர்ந்து கொண்டேதான் இருந்தது, இருக்கிறது, இருந்து கொண்டே தான் இருக்கும் போலிருக்கிறது.

      திருச்சி அஞ்சு

      நீக்கு
    3. //காசி வேண்டாம் வேண்டுமானால் தாஜ் மகாலுக்கு கூட்டி கொண்டு போ என்றார். ஆசையில் தவறு காணவில்லை ஆனால் தனது ஜீவன் முக்திக்கு வழி தேட வேண்டும் என்ற ஆவல் இல்லையே?//

      அதனால்தானோ என்னவோ புத்தர் ஆசையே வேண்டாம் என்றார். ஆனால் அதை கடைபிடிப்பது கடினம்தான். ஆசையை அறவே ஒழித்துவிட்டால் எல்லோருமே புத்தர் ஆகிவிடுவார்களே. அப்புறம் புத்தருக்கு என்ன மதிப்பு, இல்லையா? எனவே ஆசையில் ஒன்றும் தப்பில்லை.

      திருச்சி தாரு

      நீக்கு
    4. //சங்கரர் தனது பஜ கோவிந்தத்தில் இலக்கண இலக்கியங்கள் யாவும் நமது கடைசி காலத்தில் காப்பற்ற போவதில்லை கோவிந்தனின் நாமம் சொல்ல சொல்லி வேண்டுவார். //

      இன்றைய கோவிந்தன், நமது அனைவருக்கும் தெரிந்த பணம்தான்.
      பணம் ஒன்றிருந்தால் போதும் கடைசிகாலம் மட்டுமில்லை எந்த காலத்திலும் நம்மை காப்பாற்ற ஆட்கள் இருப்பார்கள். இது ஒருவகை வியாக்யானம்
      மற்றொரு வகையில் சிந்தித்து பார்த்தால் கோவிந்தா கோவிந்தா என்று சொல்லிகொண்டிருந்தால் மனது பக்குவப்பட்டுவிடும் பிறகு நம்மைச்சுற்றி என்ன நடந்தாலும் அது நம்மை பாதிக்காத அளவு நம்மை கொண்டு சென்று விட்டுவிடும். எனவே கோவிந்தா கோவிந்தா என்று சொல்லிக்கொண்டு சிவனே என்று இருப்பது பரம உசிதம்.

      சேலம் குருப்ரியா

      நீக்கு
  7. தலைப்பு "வயதில் போனவர்களுக்கு மட்டும்" என்று இருக்க வேண்டும்.

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வயதில் "போனவர்களுக்கு" அல்ல இந்த பதிவு. போகவேண்டிய வயது வந்தும் போகதவர்களுக்காகத்தான்.
      வயதில் போய்விட்டால்தான் தொந்திரவே இல்லையே.
      போகாமல் இருந்து கொண்டு முதுமையில் அவஸ்தை படுபவர்களுக்குத்தான் இவ்வளவு புத்திமதியும்.

      திருச்சி காயத்ரி மணாளன்

      நீக்கு
  8. //தலைப்பைக் கண்டு மயங்காதீர்கள். இது உண்மையிலேயே வயது வந்தவர்களுக்கு மட்டும்தான். அதாவது 70 வயதைத் தாண்டியவர்களுக்//

    இவ்வளவு மன முதிர்ச்சியுடன் எழுதும் நீங்களே "வயது வந்தவர்களுக்கு" என்று சொல்லுகிறீர்களே தவிர "வயது ஆனவர்களுக்கு" என்று சொல்லவில்லையே. (நானும் அப்படித்தான்)

    சற்றே கடினம்தான். நாம் 20 வயதாக இருக்கையில் 40 வயது ஆட்கள் கிழவர்கள். நமக்கு 40 எனும்போது 60தான் கிழங்கள். நமக்கே 60 எனும்போது மனது 70-80 தைத்தான் வயது அதிகமான முதியோர் என்கிறது.

    மேலும் தோற்றத்தில்தான் வயதாகிவிட்டதே தவிர மனதளவில் அவர் இளைஞர்தான் என்று சொல்வர் சுற்றியிருக்கும்போது நமக்கு எப்படி அய்யா வயதாகும்? நாம் எப்போதும் இளைஞர்கள்தான்

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தோற்றத்தில்தான் வயதாகிவிட்டதே தவிர மனதளவில் அவர் இளைஞர்தான் என்று சொல்வர் சுற்றியிருக்கும்போது நமக்கு எப்படி அய்யா வயதாகும்? நாம் எப்போதும் இளைஞர்கள்தான்//

      80 வயது நிறைந்த இளைஞரே
      நீங்கள் சொல்வது முக்காலும் உண்மை
      மனது இளைஞர் என்கிறது.
      பதிவு தட்டச்சு செய்ய கை ஒத்துழைக்க மாட்டேன் என்கிறதே
      நான் இளைஞனா இல்லை முதியவனா
      எனக்கே தெரியவில்லை

      திருச்சி அஞ்சு

      நீக்கு
  9. அத்தனையும் உண்மை.ஆனால் மனம்தான் ஒத்து கொள்ள மறுக்கிறது.
    தெளிவான வாழ்க்கை கல்வி பாடத்தை வெளியிட்டதிற்கு நன்றி அய்யா ! .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சும்மாவா சொன்னார்கள் மனம் ஒரு குரங்கு என்று.
      என்றைக்கு நாம் உண்மையை ஒத்துகொள்கிறோமோ அன்று மன நிம்மதி தானாக தேடி வரும். மன நிம்மதி இருந்து விட்டால் முதுமையாவது ஒன்றாவது எதையும் சமாளித்து விடலாம்
      நமது மனம் நமது கையில் என்று ஒரு இயக்கம் ஆரம்பிக்கலாம் என்றிருக்கிறேன். சேர ஆசை உண்டா?

      சேலம் குரு

      நீக்கு
  10. இந்த முதுமையை எதிர்கொள்வது பற்றியும்
    பயிற்சி வகுப்புகள் ஆங்காங்கே நடத்தவேண்டும்.
    -
    வரவேற்கத்தக்க கருத்து

    பதிலளிநீக்கு
  11. அருமையான கருத்தை முன் வைத்திருக்கிறீர்கள்
    நிச்சயமாக இதற்கான ஆலோசனை மையங்கள்
    வைக்கவேண்டியது காலத்தின் கட்டாயம்
    இன்று பெருகிவரும் வயோதிகர் இல்லங்களே
    இதற்குச் சாட்சி
    அது குறித்துச் சிந்திக்கச் செய்த
    பகிர்வைத் தந்தமைக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வயோதிகர் இல்லங்கள் பெருகி வர காரணம் வயோதிகர்கள் அல்ல. உள்ளத்தில் அன்பு அருகி, சகிப்புத்தன்மை குறுகி, சுய நலம் பெருகி நிறைந்துவிட்ட வாலிபக்கூட்டங்கள்தான். நாளை நமக்கும் அதே நிலைதான் என்று உணராமல் வரும்போது பார்த்துகொள்ளலாம் இன்று நாம் தொந்திரவின்றி நிம்மதியாக இருந்தால் போதும் என்று நினைக்கும் மனசாட்சியற்ற வாலிப கூடங்கள்தான் முழு காரணமும்.

      சேலம் குரு

      நீக்கு
  12. // நான் முதுமையடைய மாட்டேன் என்கிற மாயையால் பீடிக்கப்பட்டு, முதுமை அவனைப் பீடிக்கும்போது அவனால் அதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. //

    நன்கு ஆழமாக சிந்தித்து இருக்கிறீர்கள். எழுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே உங்கள் கட்டுரையில் சொல்லப்பட்ட விஷயங்கள் பொருந்தும்.

    பதிலளிநீக்கு
  13. மிக மிக மிக அருமையான பதிவு. வாழ்வில் அனைத்துப் பருவங்களையும் அனைத்து உயிரினங்களும் கடந்தே ஆக வேண்டும். ஆனால் முதுமையை, மரணத்தை முழுமையாக உணர்ந்த உணரும் ஜீவன் மனிதனே. ஆனால் தாங்கள் சொன்னது போல முதுமையையும், மரணத்தையும் ஆனந்தமாய் ஏற்கும் மனோபாவம் பலருக்கும் இல்லை எனலாம். பண்டைய தமிழகத்தில் முதிர்ந்தோரை தாழிக்குள் அடைத்து ஜீவசமாதி செய்யும் வழக்கம் இருந்தது, சமணர்கள் பலரும் குறிப்பிட்ட வயதைக் கடந்த பின் உணவு நீக்கி வடக்கிருந்து உயிர் விடுவர், நாடோடி சமூகங்களில் முதிர்ந்தோரை அவ் விடத்திலே விட்டு அகல்வர். மரத்தில் இருந்து உதிரும் இலை போல மனித உயிரும் உதிரும் காலம் உண்டு, அந்த இலை விழ மறுத்து மரத்தைப் பற்றிக் கொள்வதால் மரத்துக்கும் சுமை, இலைக்கும் வலி. மண்ணில் வீழ்ந்து மண்ணோடு உரமாகி புதிய விருட்சங்களின் வாழ்வுக்கு வலுவூட்டப் படல் வேண்டும். இது தான் இயற்கை நியதி. அதனால் தான் தமிழர்கள் மரணத்தை ஆடிப்பாடிக் கொண்டாடி, கறிச்சோறு சமைத்து இறப்பையும் ஆனந்தமாய் தழுவிக் கொண்டனர் போல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக மிக சரியான வார்த்தைகள். முதுமையை, மரணத்தை முழுமையாக உணர்ந்த உணரும் ஜீவன் மனிதனே.
      ஏனென்றால் முதுமையை தள்ளி போடும், வியாதிகளி விளக்கி வைக்கும், தள்ளாமையை தள்ளி போடும் வித்தியை கற்றவன் மனிதன். எனவே அத்தகைய விளக்கி வைக்கும்/தள்ளி போடும் செயல்களை செய்ய இயலாமல் போகும்போது மனது வருத்தபடுகிறது. முதுமையையும், மரணத்தையும் ஆனந்தமாய் ஏற்கும் மனோபாவம் பலருக்கும் இல்லாமல் போக இதுதான் கரணம். ஒரு சிலரால் முடிகிறது நம்மால் ஏன் முடியவில்லை என்ற எண்ணம் இன்னமும் கொடுமை. முதுமை மரணம் கண்டு அஞ்ச இந்த இயலாமைதான் முக்கிய காரணம். அனைவருக்கும் ஒரே நிலைதான் என்று வந்து விட்டால் இந்த பயம் ஓடியே விடும்.

      திருச்சி காயத்ரி மணாளன்

      நீக்கு
  14. பிறப்பு என்று ஓன்று இருக்கும் போது இறப்பும் உண்டு.85வயதிலும் கடைசி நேரத்திலும் தனக்கு அதற்குள் மரணம் வர வேண்டுமா என்று வேதனை பட்டவர்களும் உண்டு.நான்கு வருடங்கள் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருப்பவர்களும்உண்டு. மனிதனை ஆசை தான் வாழ வைக்கிறது.நிராசைகள் வேதனை பட வைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த காலத்தில் மருத்துவ வசதிகள் இல்லை. எனவே சராசரி ஆயுட்காலம் குறைவாகவே இருந்தது. எனவே பால்ய விவாகங்கள் அதிகம். 40 வயதிலெல்லாம் பேரன் பார்த்து விடுவார்கள். பயாலாஜிக்கலாக உடல் தளரும் நிலையில் வாழ்வில் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்திருப்பார்கள். ஆனால் இன்று 40 வயது ஆணின் நிலையை நினைத்துப்பாருங்கள். ரெண்டாவது குழந்தைக்கு (சிலருக்கு முதல் குழந்தையாகக்கூட இருக்கலாம்)
      எல்கேஜி அட்மிசனுக்காக அலைந்து கொண்டிருப்பார். சர்க்கரையிலிருந்து எல்லா வியாதிகளும் எட்டிப்பார்த்துகொண்டிருக்கும். எனவேதான் இந்த நிலை.

      சேலம் குரு

      நீக்கு
  15. நல்லதொரு பகிர்வு.
    பணத்தின் அவசியத்தையும் கூடி வாழ்வதின் நன்மையையும் ஒருசேர ஒரே பதிவில் கொடுத்திருக்கிறீர்கள்

    வயதான காலத்தில் நோய் வராமல் இருப்பது பெரியதொரு வரம்.
    வந்தாலும் முகம் சுளிக்காமல் பார்த்துக்கொள்ள ஜனம் வேண்டும் நல்ல ஒரு மருத்துவமனைக்கு செலவு செய்ய பணம் வேண்டும்

    திருச்சி காயத்ரி மணாளன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அயல் நாடுகளில் இருப்பது போல அனைத்து மருத்துவமனைகளும் அரசாங்க மயமாக இருக்க வேண்டும். அங்கெல்லாம் பிரைவேட் ப்ராக்டீஸ் செய்யவே முடியாது. அனைத்து செலவுகளும் அரசாங்கத்தையே சார்ந்தது. பிரைவேட் ப்ராக்டீஸ் இருந்தால்தானே நீ அங்கு வந்து விடு நாள் சிகிச்சை கிடைக்கும் என்று சொல்ல வேண்டியிருக்கும். அதற்கு சான்ஸ் கொடுக்காமல் தவிர்த்துவிட்டார்கள்.
      நமது நாட்டில்தான் அரசு செய்ய வேண்டியதை தனியாரிடம் விட்டுவிட்டு தனியார் செய்ய வேண்டியதை எல்லாம் அரசு எடுத்துகொண்டிருக்கிறதே. என்ன செய்வது.

      சேலம் குருப்ரியா

      நீக்கு
  16. அருமையான பகிர்வு
    முதியோர் இல்லங்கள் அதிகமாகி வருகின்றன.
    பார்த்துக்கொள்ள ஆட்கள் இல்லை ஆனால் பணம் இருக்கிறது என்பவர்களுக்கு நல்ல முதியோர் இல்லங்கள் உள்ளன.
    பார்த்துக்கொள்ள ஆட்கள் உண்டு ஆனால் பணம் இல்லை
    என்பவர்களுக்குத்தான் தொல்லையே. கூடவே இருந்து அழத்தான் முடிகிறது.
    எதற்கெல்லாமோ வெளி நாட்டை காப்பி அடிக்கும் நாம் இந்த விசயத்தில் விட்டுவிட்டோம். சோசியல் செக்யூரிட்டி பண்ட் ஒன்று உருவாக்கி (ஆனால் இந்தியாவின் டிரேட் மார்க்கான ஊழலை தவிர்க்க வேண்டும்) அதன் மூலம் முதியோர்களை காப்பாற்றலாம்.

    திருச்சி அஞ்சு

    பதிலளிநீக்கு


  17. நல்லதொரு பதிவு. இத்தகைய நிகழ்வுகளை தவிர்க்க வேண்டித்தான் அந்த காலத்தில் வானபிரஸ்தம் என்று ஒரு முறை வைத்திருந்தார்கள் வயதானபிறகு தானாகவே காட்டுக்கு அல்லது காசி ராமேஸ்வரம் என்று சென்று விடுவார்கள். போகும்வழியில் ஏதாவது நடந்துவிடும்.
    நம்ம வீட்டு பெரியவர்கள் காசிக்கு போய்விட்டார்கள் அப்படியே சொர்கத்துக்கு பொய் விடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் மீதி பேர் வாழ்வை கழிப்பர்.

    திருச்சி தாரு

    பதிலளிநீக்கு
  18. இந்த முதுமையை எதிர்கொள்வது பற்றியும்
    பயிற்சி வகுப்புகள் ஆங்காங்கே நடத்தவேண்டும்.
    -
    வரவேற்கத்தக்க கருத்து

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரவாயில்லையே
      9.43க்கு ராம்மலர் எழுதிய கருத்தை 10.43க்கு வார்த்தை மாறாமல் அப்படியே பின்னூட்டமிட்டுள்ளீர்களே.
      இருவரும் ஒருவரேதானா என்று சந்தேகம் எழுகிறது.

      சேலம் குரு

      நீக்கு