வெள்ளி, 30 ஜனவரி, 2015

தமிழ் மொழி அழியுமா?

                                
இன்றைய வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.in/ கலை அரசி என்பவர் எழுதியிருக்கும் கருத்தைக் கவனியுங்கள்.
--------------------------------------------------------------------------------------------------------------------------

இன்று நாம் பேசும் தமிழ் எப்படியிருக்கிறது? 

“அலார்ம் வைச்சு இயர்லி மார்னிங் ஏந்திரிச்சி பிரஷ் பண்ணிட்டு ஹீட்டர் போட்டுக் குளிச்சிட்டு பிரேக்பாஸ்ட் முடிச்சி பசங்களுக்கு லஞ்சிக்கு வெஜ் ரைஸ் செஞ்சி டிபன் பாக்ஸு வைச்சிட்டேன்.  ஆட்டோக்காரன் டைமுக்கு வராம லேட் பண்ணிட்டான்,  சன்னுக்கு  எக்ஸாம் வேற. ரொம்ப டென்ஷன் ஆயிட்டான்.  அப்புறம் ஹஸ்பண்ட் பைக்ல கூட்டிட்டுப் போயி ஸ்கூல்ல டிராப் பண்ணிட்டு வந்தாரு. 

அதுக்கப்புறம் எனக்கும் லஞ்சி பாக் பண்ணிட்டு ஸ்கூட்டியை எடுத்தா ஸ்டாட்டிங் டிரபிள்.   ரோடு வரைக்கும் வாக் பண்ணி வந்து ஆட்டோ பிடிச்சேன்.  ரெண்டு சிக்னல்வெயிட் பண்ணி ரவுண்டானா வரும் போது ஹெவி டிராபிக்.  ஒன் அவர் லேட்டாயிடுச்சி..  அதுக்கப்புறம் தேர்டு புளோர் இருக்குற ஆபீசுக்கு ஓடி வந்து சிஸ்டம ஆன் பண்ணி செட்டில் ஆறதுக்குள்ளாற போதும் போதும்னு ஆயிடுச்சி.  லைஃபே ரொம்ப ஹெக்டிக்கா இருக்கு.”     


பார்த்தீர்களா?  இது தான் இன்றைக்கு நாம் பேசும் தமிழ்! ஆங்கிலத்துக்கு இடையே அங்கொன்றும் இங்கொன்றுமாக தமிழ்!  நம்மையும் அறியாமல் பேச்சு வழக்கில் ஆங்கிலம் இரண்டறக் கலந்து விட்டது. 
-------------------------------------------------------------------------------------------------------------------------------
இது உண்மையல்ல என்று எந்தத் தமிழனாவது தன் நெஞ்சில் கை வைத்துச் சொல்ல முடியுமா?

இது ஏன் என்று ஆராய்வது ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த நிலை தொடர்ந்தால் என்ன ஆகும் என்று யோசியுங்கள். தமிழ் மொழி அழிந்து போன பிறகு அங்கு தமிழ் இனம் என்பது ஏது?

நான் சில நாட்களுக்கு முன் "பெண்கள் கடைப்பிடிக்கவேண்டிய அறிவுரைகள்" (http://swamysmusings.blogspot.in/2015/01/blog-post_3.html) என்று ஒரு பதிவு போட்டிருந்தேன். அதன் பின்னூட்டத்தில் ஒரு இடத்தில் ஒரு இனத்தின் கலாச்சாரம் அழிந்து போனால் அந்த இனமே அழிந்து விடும் என்று குறிப்பிட்டிருந்தேன். ஒரு இனத்தின் கலாச்சாரத்தில் மிக முக்கியமான பண்பு அவர்கள் பேசும் மொழியாகும். அது அழிந்து போன பிறகு அங்கு தமிழ் இனம் ஏது?

நான் குறிப்பிட்ட பெண்களின் கலாச்சாரப் பழக்க வழக்கங்களை விமரிசித்து மூன்று முன்னணிப் பதிவர்கள் என்னை கேவலமாக விமரிசித்தார்கள். 

அந்த மூன்று முன்னணிப் பதிவர்கள் இந்த மொழிச் சீர்கேட்டுக்கு என்ன தீர்வு சொல்லுவார்கள்?

வியாழன், 29 ஜனவரி, 2015

கதிர்வீச்சும் மனிதர்களும்

                                                    
இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் மீது அமெரிக்காக்காரன் அணுகுண்டு போட்டான். அதனுடைய கதிர்வீச்சுகளின் தாக்கம் இன்றும் அங்கு இருக்கிறது. அதனால் அந்த இடம் மனிதர்கள் வாழ லாயக்கில்லை.

படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை நம்பிக் கொண்டிருக்கும் செய்தி இதுவே. அதாவது கதிர் வீச்சு என்றாலே மனிதர்களுக்கு ஆபத்து என்றுதான் நம்புகிறோம். இது ஓரளவிற்குத்தான் உண்மை. அவர்கள் கதிர் வீச்சு என்றால் என்ன? அது என்ன செய்யும் என்கிற விஞ்ஞான உண்மைகளை அறியாதவர்கள் ஆவார்கள்.

இயற்கையில் எல்லாப் பொருள்களும் கதிர்வீச்சை வெளிப்படுத்துகின்றன. இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு பொருளும் கதிர் வீச்சை வெளிப்படுத்தும் திறன் கொண்டவை. மனிதனும் அவ்வாறே கதிர் வீச்சினை வெளிப்படுத்துகிறான். இதில் நாம் அறிந்து கொள்ளவேண்டிய முக்கிய அம்சம் என்னவென்றால் அந்த கதிர்வீச்சின் திறன் அதாவது சக்தி எவ்வளவு இருக்கிறது என்ற தகவல்தான்.

சக்தியைப் பொறுத்து கதிர்வீச்சில் மூன்று வகைகள் இருக்கின்றன. ஆல்பா, பீட்டா, காமா என்பவை அந்த மூன்று வகை. இதில் ஆல்பா வகை கதிர் வீச்சுக்கள் நம்மை ஒன்றும் செய்யாது. நமது மேல் தோலே அவைகளைத் தடுத்து விடும். பீட்டா வகை கதிர் வீச்சு நம் உடலுக்குள் செல்லும் ஆனால் பெரும் தீங்கு விளைவிக்காது. எக்ஸ்ரே கதிர் வீச்சுகள் இவ்வகைப் பட்டவை.

காமா வகை கதிர் வீச்சுகள்தான் ஆபத்தானவை. இவை நம் உடலுக்குள் சென்றால் அங்கு பல நாட்கள் தங்கியிருந்து பல தீங்குகளை ஏற்படுத்தும். இந்த காமா வகை கதிர்வீச்சுகளினால் தீங்குகளைத் தவிர சில நன்மைகளும் உண்டு. புற்று நோய் வைத்தியத்தில் இந்த காமா வகை கதிர் வீச்சுகளைப் பயன்படுத்துகிறார்கள்.

ஜப்பானில் போடப்பட்ட அணுகுண்டுகளில் இருந்து இந்த காமா வகை கதிர் வீச்சுகளே அதிகம் வெளிப்பட்டன. தவிர அந்த கதிர் வீச்சகளின் அளவும் மிக அதிகமாக இருந்தது. இதுவே அன்றைய நாசத்திற்குக் காரணம்.

கதிர் வீச்சுகளைக் கண்டு மனிதன் அஞ்சுவதற்கு முக்கிய காரணம் இவைகளினால் ஏற்படும் தீங்குகள் மட்டுமல்ல. இந்தக் கதிர் வீச்சுகள் மண்ணுக்குத் தெரியாது என்பதுதான் பயத்திற்கு முக்கிய காரணம். தெரியாத தேவதையை விடத் தெரிந்த சைத்தானே மேல் என்று சொல்வதற்குக் காரணம் இதுதான்.

தெரிந்தவைகளிடமிருந்து நம்மைக் காத்துக்கொள்வது சுலபம். ஆனால் கண்ணுக்குத் தெரியாத எதிரியை எவ்வாறு எதிர் கொள்வது? இதுவே நாம் கதிர்வீச்சைக் கண்டு அஞ்சுவதற்குக் காரணம்.

கதிர் வீச்சுகளிடமிருந்து நம்மைக் காத்துக்கொள்ள ஒரே வழி, அப்படிப்பட்ட கதிர் வீச்சுகள் இருக்கும் இடங்களுக்குப் போகாமல் இருப்பதுதான். அப்படிப்பட்ட இடங்களில் தகுந்த எச்சரிக்கை அறிவிப்புகள் இருக்கும். அதை பொருட்படுத்தாமல் நடந்து கொண்டால் அது அவரவர்கள் தலைவிதி.

செவ்வாய், 27 ஜனவரி, 2015

நான் விடுதலை ஆகிறேன்.

                                       

பதிவுலகம் என்பது ஒரு மாயா உலகம் என்பதை நான் அடிக்கடி வலியுறுத்தி வந்திருக்கிறேன். இந்த பதிவுலகில் நடக்கும் எதுவும் நம் நிஜ உலக வாழ்வை பாதிக்கப் போவதில்லை. பதிவுலக சந்திப்புகள் நடக்கும். அங்கு பதிவர்கள் சந்தித்து அளவளாவுவார்கள். சில பல தொடர்புகளும் சிநேகங்களும் தொடரும். இதைத் தவிர பெரிய மாற்றங்கள் நம் வாழ்வில் ஏற்படப்போவதில்லை.

நான் பதிவுலகம் புகுந்ததே என் மூளையைத் துருப்பிடிக்காமல் வைத்துக் கொள்வதற்காகவே. என் பதிவுகளை பலர் படிக்கிறார்கள் என்பது மனதிற்கு ஒரு உற்சாகத்தைக் கொடுத்தாலும் அது என் கருத்து சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதாக உணர்கிறேன். பாராட்டுகளும் எதிர்ப்புகளும் எப்படியும் என்னுள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதை என்னால் மறுக்க முடியவில்லை.

முக்கியமாக இந்த தாக்கம் என்னுடைய கருத்து சுதந்திரத்தைப் பாதிக்கின்றது. நான் நினைப்பதை முழுவதுமாக வெளிப்படுத்த இயலவில்லை. எதிர்ப்புகளை எண்ணி அஞ்சுகிறீர்களா என்று கேட்கலாம். எதிர்ப்புகள்தான் ஒருவனுக்கு டானிக். நான் எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சவில்லை. பாராட்டுகளைக் கண்டுதான் அஞ்சுகிறேன்.

பாராட்டுகளை நான் வாங்கும் கடன்களாகக் கருதுகிறேன். கடன் பட்டார் நெஞ்சம் போலும் கலங்கினான் இலங்கை வேந்தன் என்று கம்பன் கூறியது போல் அவ்வப்போது எனக்கு கலக்கம் வருகிறது. இந்தப் பாராட்டுகள் என் மேல் ஒரு சுமையை ஏற்றி வைக்கின்றன. அதை இறக்கிவைக்க நான் பதில் பாராட்டுகள் செய்யவேண்டி வருகிறது. அது என்னால் முடியவில்லை.

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்

என்ற வள்ளுவர் வாக்கின்படி நான் என் நிஜ வாழ்வில் பல பொறுப்புகளிலிருந்து விலகி நிற்கிறேன். அத்தியாவசியக் கடமைகள் தவிர வேறு கடமைகளை ஏற்றுக் கொள்வதில்லை. இதனால் என் வாழ்வை எளிமையாக வைத்திருக்கிறேன். பதிவுலகிலும் அதே எளிமையைக் கொண்டு வர விரும்புகிறேன்.

அதனால் இன்றுடன் என் பதிவில் இருக்கும் பின்னூட்டப் பெட்டியை மூடிவிட்டேன். இதுகாறும் என் பதிவுகளில் பாராட்டியும் எதிர்கருத்துகளைக் கூறியும் என்னை உற்சாகப் படுத்திய அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த செயல் மூலம் நான் என் கருத்துக்களை இன்னும் சுதந்திரமாக வெளியிட முடியும் என்று நம்புகிறேன்.

நன்றி, வணக்கம்.

ஞாயிறு, 25 ஜனவரி, 2015

சுயநலம் vs பொது நலம்

                              

"சுயநலம்" "Selfish" என்றாலே ஏதோ செய்யத்தகாத குற்றம் செய்ததாக கருதும் உலகத்தில் இன்று நாம் வாழ்கிறோம். சுயநலம் கொண்டவன் என்று ஒருவனைக் குறை கூறுவது மிகவும் சாதாரணமாக நடக்கிறது. ஆனால் இது போலித்தனத்தின் (Hypocrisy) உச்சகட்ட சிந்தனையாகும்.

சுயநலம் என்பது தீண்டத்தகாத வார்த்தை அல்ல என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ளவேண்டும். தன்னைக் காப்பாற்றிக்கொண்டால்தான் அடுத்தவர்களைக் காப்பாற்றத் தேவையான சக்தி பிறக்கும். தன்னைக் காப்பாற்றிக் கொள்ளாமல் நான் பொது நலவாதி,  பிறரைக் காப்பாற்றுவதே என் பிறவி நோக்கம் என்று இருந்தால் நீங்கள் மறைந்து போவதைத் தவிர வேறு ஒன்றும் நடக்காது.

ஒரு குடும்பத்தில் ஒருவன் மூத்த மகனாகப் பிறக்கிறான். அவனுக்குக் கீழே நான்கு உடன் பிறப்புகள். அனைவரையும் கடைத்தேற்ற வேண்டிய பொறுப்பு மூத்த மகனுக்கு உண்டு. ஆனால் அவன் தன்னுடைய நலத்தைக் கருதாமல் உடன் பிறப்புகளை மட்டும் கடைத்தேற்றி விட்டு வயதான காலத்தில் தனி மரமாக நின்று கொண்டு இருந்தால் அவன் மீது கூடப் பிறந்தவர்களோ உறவினர்களோ அனுதாபம் காட்ட மாட்டார்கள் என்பதை அவன் புரிந்து கொள்ளாவிட்டால் அவன் இந்த உலகில் வாழத் தகுதி அற்றவன்.

சிலர் பொது நல சேவை செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு தான் சம்பாதிப்பதை எல்லாம் பிறருக்குச் சேவை செய்தே காலம் கழிப்பார்கள். தன் குடும்பம் எப்படி நடக்கிறது என்பதைக் கண்டு கொள்ள மாட்டார்கள். அவர்க்ள எல்லோரும் இந்நாளைய அரசியல்வாதிகளைப் பார்த்து நடந்து கொள்ளவேண்டும்.

ஆகவே சுயநலம் என்பது தீண்டத்தகாத வார்த்தை அல்ல. தனக்கு மிஞ்சித்தான் தானதருமம் என்று சொல்லியதை நினைவில் கொள்ளவேண்டும். மகாபாரதத்தில் வரும் கர்ணனைப் போல் பகழ் பெறவேண்டும் என்று ஆசைப்படாதீர்கள்.


வெள்ளி, 23 ஜனவரி, 2015

கலாச்சாரம்


கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம், பண்பாடு என்று பல சொற்களால் குறிக்கப்படும் குணம் அறிவியலுக்கு அப்பாற்பட்டது. இது மக்களின் பழக்க வழக்கங்களைக் குறிப்பிடுவது ஆகும். பெரும்பாலும் இது நம்பிக்கை சார்ந்ததே ஆகும். நம் முன்னோர்கள் கடைப்பிடித்தார்கள், நாமும் கடைப்பிடிப்போம் என்ற வகையில் வருவதே இந்த கலாச்சாரப் பண்புகள்.

ஒரு தனி மனிதனின் பண்புகள் அவன் வாழும் சமூகக் கலாச்சாரத்தை ஒட்டி அமைவது இயற்கை. அந்தக் கலாச்சாரத்தின் அங்கங்களை அவ்வப்போது சுட்டிக்காட்டிக்கொண்டு இருக்கவேண்டியது அந்த சமூகத்தில் உள்ள அனுபவமிக்கவர்களின் கடமையாகும்.

ஆனால் இன்றைய விஞ்ஞான அறிவு அபரிமிதமாக வளர்ந்துள்ள நிலையில் இத்தகைய கலாச்சார அடையாளங்கள் தேவையில்லை என்று பலர் நினைக்கிறார்கள்.  மக்கள் மனம் மாற்றமடையும்போது கலாச்சாரங்கள் மற்றமடையத்தான் செய்யும்.

இத்தகைய மாற்றங்களைக் கண்டு சிலர் புலம்புவார்கள். அவர்களை பழமைவாதிகள் என்று உலகம் புறக்கணித்து விட்டு தன் போக்கில் போய்க்கொண்டே இருக்கும்.

"பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே"
என்ற கொள்கையினை பழங்காலத்திலேயே தமிழன் உண்டாக்கியிருக்கிறான். ஆகவே மாற்றங்கள் நடைபெற்றே தீரும். அவைகள் நன்மை தருமாயின் நன்றே. இல்லாவிடில் சமூகம் சீரழியும்.

வியாழன், 22 ஜனவரி, 2015

வீடு வாங்குவது எப்படி? ஒரு புலம்பல்.


                                       

கார் வாங்குவதைப் பற்றி எழுதப்போக ஒருவர் வீடு வாங்குவதைப்பற்றி எழுதச்சொன்னார். நானும் பெரிய கித்தாப்பாக எழுதுகிறேன் என்று சொல்லிவிட்டேன். அப்புறம் இதைப் பற்றி யோசிக்கும்போதுதான் வீடு வாங்குவது என்பது இன்றைய கால நிலவரத்தில் எவ்வளவு கடினமான விஷயம் என்பது உறைத்தது.

இன்றைய பொருளாதார நிலையில் ஒருவன் எவ்வளவு சம்பாதித்தால் ஜீவிக்க முடியும் என்பதற்கு ஒரு நிலையான பதில் கண்டு பிடிப்பது மிகவும் கடினம். நடுத்தர வர்க்கம் என்று சொல்லக் கூடியவர்கள் படும்பாடுதான் சொல்லில் அடங்காதது.

ஒரு பெரு நகரத்தில் இன்று வீட்டு வாடகை ஆகாசத்தில் இருக்கிறது. குழந்தைகளின் பள்ளிச் செலவோ நினைத்துப் பார்க்க முடியாதபடி உயர்ந்து இருக்கிறது. உணவுப் பொருட்கள், கேஸ், காய்கறிகள் இவைகளைத் தவிர்க்க முடியாது. பண்டிகைகள், ஊர்ப்பிரயாணம், கல்யாணம் மற்றும் மற்ற விசேஷங்கள், வைத்தியம் இப்படி தவிர்க்கமுடியாத செலவுகளினால் மாதச் சம்பளக்காரர்கள் படும் சிரமங்களை எழுத்தில் வடிக்க முடியாது.

இப்படி இருக்கையில் எதிர் காலத்திற்காக எப்படிச் சேமிப்பது, வீடு வாங்குவது எப்படி, குழந்தைகளுக்கு கல்யாணம் செய்வது எப்படி என்று யோசித்தால் மலைப்பாக இருக்கிறது. இந்த சோதனைகளையெல்லாம் எப்படித் தாண்டி வந்தேன் என்று நினைத்தால் ஒரு குழப்பம்தான் மிஞ்சுகிறது.

இந்த நிலையில் வீடு வாங்க என்ன யோசனை சொல்ல முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. இந்த நிலைக்கு முக்கிய காரணம் என்னவென்றால் என்னுடைய வயதுதான் என்று நினைக்கவேண்டி இருக்கிறது. என்னால் இன்றுள்ள பொருளாதார நிலையை, அதில் வரும் சிக்கல்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை. என் அனுபவம் இன்றைய காலகட்டத்தில் எதற்கும் உதவாது என்று புரிவதற்குத்தான் உதவும் என்று புரிகிறது.

நான் வளர்ந்த, வாழ்ந்த காலம் அப்படி. ஒரு மூட்டை (100 கிலோ) அரிசி 10 ரூபாய் என்று விற்றதைப் பார்த்தவன் நான். மார்க்கெட்டுக்கு ஐந்து ரூபாயைக் கொண்டு போனால் ஐந்து பேர் கொண்ட என் குடும்பத்திற்கு ஒரு வாரத்திற்குத் தேவையான காய்கறிகளை வாங்கி வருவேன். என் கல்யாணத்திற்கு (1964) ல் மொத்தமாக 2000 ரூபாய் செலவு செய்தேன். நேற்று ஓட்டலுக்குப் போய் வந்த என் பேரன் ஆறு பேர் சாப்பிட்டதற்கு 2000 ரூபாய் பில் ஆகியது என்கிறான்.

இன்று ஒரு நடுத்தரக் குடும்பத்திற்கு மாதம் ஒன்றுக்கு என்ன செலவு ஆகிறதென்பது எனக்குத் தெரியவில்லை. நான் பிறந்து வளர்ந்தது ஒரு சாதாரண நடுத்தர வர்க்கத்தின் அடி மட்டத்திலுள்ள ஒரு குடும்பத்தில்தான்.
ஆடம்பரம் என்றால் என்னவென்று தெரியாமலேயே வளர்ந்தவன் நான்.

அப்படி வளர்ந்த என்னாலேயே இன்றைய பொருளாதாரத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. இன்று உள்ள பொருளாதார நிதர்சனங்களை உள்வாங்கிக்கொள்ள இயலவில்லை. ஆகையால் ஒரு சாதாரண நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவனால் ஒரு வீடு எப்படி வாங்க முடியும் என்பதற்கு வழி காட்ட எனக்குத் தெரியவில்லை.  நான் என் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்.

புதன், 21 ஜனவரி, 2015

மகாபாரதமும் மாதொரு பாகனும்



"நிர்வாணபுரியில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்" என்று ஒரு பழமொழி உண்டு. நான் முதலிலேயே அரைப் பைத்தியம்.  முழுப்பைத்தியம் ஆகாமலிருக்கத்தான் இந்தப் பதிவு.

மாதொரு பாகனைப் பற்றி ஏறக்குறைய பெரும்பாலானோர் தங்கள் தங்கள் கருத்துக்களை பதிவேற்றி விட்டார்கள். நேற்று ராத்திரி, (எதையாவது கற்பனை செய்து கொள்ளாதீர்கள்) தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தபோது, இதைப்பற்றிய நினைவு வந்தது. ஊரே தீப்பற்றி எரிகிறது,  நாமும் நம் பங்கிற்கு ஏதாவது கொஞ்சம் செய்ய வேண்டாமா என்று தோன்றியது. அதன் விளைவுதான் இந்தப் பதிவு.

இராமாயணம், மகாபாரதம் இரண்டும் நம் நாட்டில் இந்துக்களால் போற்றிக் கொண்டாடப்படும் மாபெரும் இதிகாசங்கள். அவற்றைப்பற்றி ஏதாவது மோசமாகப் பேசினால் நான் உயிருடன் எரிக்கப்படுவேன் என்பதை நன்கு உணர்ந்திருக்கிறேன். ஆகவே அவற்றைப் பற்றித் தவறாக ஒன்றும் பேசமாட்டேன்.

அதில் வரும் சில நிகழ்வுகளை மட்டும் அப்படியே மேலோட்டமாக சுட்டிக்காட்ட மட்டும் விரும்புகிறேன். இந்த நிகழ்வுகள் ஏற்கெனவே தொலைக் காட்சியில் ஒளி பரப்பப்பட்டவைதான். நான் ஒன்றும் புதிதாக இட்டுக்கட்டவில்லை.

சந்தனு மகாராஜாதான் மகாபாரதத்தில் வரும் முதல் ராஜா. இவருக்கு இரண்டாவது பெண்டாட்டி சத்தியவதி என்ற மீனவ ராஜகுமாரி. சந்தனுவிற்கும் சத்தியவதிக்கும் இரு புதல்வர்கள் பிறந்தார்கள். சித்திராங்கதன், விசித்திரவீரியன் என்பவை அவர்கள் பெயர், இதில் சித்திராங்கதன் கல்யாணம் செய்யாமலேயே ஒரு சண்டையில் இறந்து போகிறான்.அடுத்தவன் விசித்திரவீரியன். இவனுக்கு அம்பிகை, அம்பாலிகை என்று இரண்டு காசி நாட்டின் இளவரசிகளை மணமுடிக்கிறார்கள்.

விசித்திரவீரியன் குழந்தைப்பேறு இல்லாமல் இறந்து போகிறான். சத்தியவதி தர்ம சங்கடத்தில் மூழ்கிறாள். ராஜ்யத்திற்கு வாரிசு இல்லை. வாரிசு இல்லாத ராஜயத்தை எதிரிகள் பிடித்துக்கொள்வார்கள். என்ன செய்வது என்று யோசித்து ஒரு உபாயம் செய்கிறாள். அதன் விளைவாக இரண்டு வாரிசுகள் உண்டாகின்றன. திருதராஷ்டிரன், பாண்டு ஆகிய இருவரும்தான் அந்த வாரிசுகள்.

அந்த உபாயம் என்னவென்பதை  டிவி தொடர் மூலம் வாசகர்கள் நன்கு அறிவார்கள். அதை நான் இங்கு விவரித்து தேசப் பிரஷ்டம் ஆக விரும்பவில்லை. அதனால் அதைத் தவிர்க்கிறேன். அதே மாதிரி பாண்டவர்கள் ஐவரும் பிறந்த வழியும் அனைவரும் அறிந்ததே.

இந்தக் கதை நடந்தது திரேதா யுகத்தில். இப்போது நடக்கும் கலியுகத்திலும் இந்த மாதிரி வம்ச விருத்திக்காக சில உபாயங்களைக் கடைப்பிடித்ததாக பெருமாள் முருகன் என்பவர் மாதொரு பாகன் என்கிற தன் நாவலில் குறிப்பிட்டிருக்கிறாராம். நான் இந்த நாவலைப் படித்ததில்லை. திரேதாயுகத்தில் நடந்ததை கலியுகத்திலும் நடந்ததாகச் சொல்லலாமோ?  வம்பில் சிக்கிக்கொண்டார்.

பெருமாள் முருகனுடைய அப்பா ஒரு தீர்க்கதரிசி. தன் மகன் எதிர் காலத்தில் சைவ-வைஷ்ணவப் போராட்டத்தில் சிக்கிக்கொள்ளக்கூடாது என்பதற்காக இரண்டு கடவுள் பெயர்களையும் சேர்த்து பெருமாள் முருகன் என்று பெயர் வைத்திருக்கிறார். யாரானாலும் தங்கள் பெயருக்கு "ஹானி" வருகிறமாதிரி நடந்து கொள்ளக்கூடாது. இவர் தன் பெயருக் கேட்ப நடந்து கொள்ளவில்லை.

இப்போது மர-இடுக்கில் வாலை விட்டுவிட்டு ஆப்பை பிடுங்கின குரங்கின் நிலையில் இருக்கிறார். இதனால் நான் சொல்லும் நீதி என்னவென்றால் ஒவ்வொருவரும் தங்கள் பெயருக்கேட்ப நடந்து கொள்ளவேண்டும். இல்லாவிட்டில் ஆப்பைப் பிடுங்கின குரங்கின் கதிதான் வாய்க்கும்.

நான் என் பெயருக்கேட்ப நடந்து கொள்கிறேனா இல்லையா என்பதை நீங்கள்தான் சொல்லவேண்டும். இல்லையென்று சொன்னால் வருத்தப்படமாட்டேன்.

பின்குறிப்பு - குரங்கு வாலை விட்டுட்டு ஆப்பைப் பிடுங்கின படம் கிடைக்கவில்லை. அதனால் இந்தப் படத்துடன் திருப்திப் பட்டுக்கொள்ளவும்.

செவ்வாய், 20 ஜனவரி, 2015

பெண்கள் பொட்டு வைத்தல் - ஒரு ஆராய்ச்சி


பெண்கள் பொட்டு வைத்துக் கொள்வது பற்றி கூகுளில் தேடியபோது கிடைத்தவை.

http://senthilvayal.com/2012/04/08/ என்ற தளத்தில் வந்த பதிவு. தளத்தின் உரிமையாளரிடமிருந்து உரிய அனுமதி பெற்று மீள் பதிவாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது.

அழகிற்கு அழகு சேர்க்கும் பொட்டு

பெண்களின் முகத்திற்கு அழகையும் வசீகரத்தையும் தருவதுவது நெற்றி பொட்டுதான். நம் முன்னோர்கள் அனைவரும் நெற்றியில் வைக்கும் குங்குமப்பொட்டின் அழகே தனி என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொருவரும் தங்களின் முகத்திற்கேற்றவாறு பொட்டு வைக்க வேண்டும்.
மருத்துவ ஆராய்ச்சிகளின்படி, நினைவாற்றலும் சிந்தனைத்திறனும் திறனுக்கும் உரிய இடம் நெற்றி. யோகக் கலையில் இதனை ஆக்ஞா சக்கரம் என்கிறது. எலக்ட்ரோ மேக்னடிக் என்ற மின்காந்த அலைகளாக மனித உடல் சக்தியை வெளிப்படுத்தும். அதிலும் முன்நெற்றி மற்றும் நெற்றிப் பொட்டு இரண்டும் மின்காந்த அலைகளை வெளியிடுவதில் முக்கியமானவை. அதனால்தான், நம் மனம் கவலையால் வாடும்போது, தலைவலி அதிகமாவதை நாம் உணர்ந்திருப்போம்.
நாம் வெறும் நெற்றியாக இருக்ககூடாது என்று முன்னோர்கள் அடிக்கடி சொல்வதுண்டு. நெற்றியில் இடும் திலகம், அந்தப் பகுதியைக் குளிர்விக்கிறது. நம் உடலின் சக்தி வெளியேறி விரயமாவதைத் தடுக்கிறது. எனவே வெறும் நெற்றியாக இருக்கக் கூடாது என்கின்றனர் முன்னோர்கள்.
இன்றைக்கு ஸ்டிக்கர் பொட்டுக்களின் வருகைக்குப் பின்னர் மங்கையர்கள் பல வித டிசைன்களில் முகத்தை அழகுபடுத்தி கொள்கின்றனர். நாம் வைக்கும் பொட்டு நம் முகத்திற்கு ஏற்றதாக இருந்தால் அது அழகினை அதிகரித்துக் காட்டும். ஆதலால் முக அமைப்பிற்கு ஏற்ற பொட்டுகளை தேர்வு செய்து முகத்தின் அழகை அதிகரிக்க செய்யுங்கள் என அழகியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

நீல் வடிவ பொட்டு
வட்ட வடிவ முகம் இவர்கள் நீளமான பொட்டுகளை உபயோகிக்கவேண்டும். நீளமான பொட்டு இவர்களது உருண்டை முகத்தை சற்று நீளவாக்காக மாற்றியதுபோல் அழகு தரும். இவர்கள் நெற்றி குறுகலாக இருந்தால், அவர்கள் புருவங்களுக்கு மத்தியில் பொட்டு வைக்கவேண்டும்.

இதய வடிவ முகம்
இதய வடிவ முகம் கொண்டவர்கள் சற்றே வித்தியாசமானவர்கள். இவர்கள் குங்குமத்தினால் பொட்டு இட்டுக்கொள்வது முகத்தை அழகாக்கும். ஸ்டிக்கர் பொட்டுக்களில் சிறிய அளவில் நீளமான பொட்டுகள் முக வசீகரத்தை அதிகரித்துக் காட்டும்.

வட்ட பொட்டு
ஓவல் வடிவ முகம் கொண்டவர்கள் புருவத்திற்கு சற்று மேலே நெற்றியில் வட்டப் பொட்டு வைப்பது அழகை அதிகரிக்கும். நீளமான ஸ்டிக்கர் பொட்டு வைத்தாலும் வசீகரமாக இருக்கும்.
சதுர முகம் உள்ளவர்கள் நீளமாக பொட்டுகளை வைக்கக்கூடாது. அகலம் அதிகமுள்ள பொட்டுகளை வைத்துக்கொள்ளலாம். உருண்டை மற்றும் முட்டை வடிவிலான பொட்டுகள் இவர்களுக்கு பொருத்தமாக இருக்கும். வண்ணத்துப் பூச்சி வடிவ டிசைன் பொட்டுக்கள் எடுப்பாக இருக்கும்.
முக்கோணப் பொட்டுக்கள்
முக்கோண வடிவ முகம் உள்ளவர்களுக்கு அனேகமாக எல்லாவகைப் பொட்டுகளும் பொருந்தும். நெற்றி அகலமாக இருந்தால், நீளமான பொட்டுகளை பயன்படுத்த வேண்டும். முக்கோண வடிவிலான பொட்டுகளும் இவர்களுக்கு நன்றாக இருக்கும். அகலமான நெற்றியாக இருந்தால், புருவத்தில் இருந்து ஒரு சென்டிமீட்டருக்கு மேல் பொட்டுவைக்க வேண்டும்.
முகத்தின் வடிவம் மட்டுமின்றி உடை, சரும நிறம் போன்றவைகளும் பொட்டுடன் சம்பந்தப்பட்டதுதான்.

http://www.valaitamil.com/what-are-benefit-of-applying-kumkum-than-a-bindi_10132.html என்ற தளத்தில் இருந்து எடுத்த ஸ்கிரீன் ஷாட்
இந்த விடியோவையும் பார்க்கவும்



கணவனை இழந்த பெண்கள் பொட்டு வைக்கலாமா கூடாதா என்பதற்கு நல்ல விளக்கம் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பதிவில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

http://jothidanilayam.blogspot.in/2014/02/blog-post_9.html

என் பதிவு ஒன்றில் பெண்கள் கண்டிப்பாக பொட்டு வைத்துக் கொள்ளவேண்டும் என்று எழுதியிருந்தேன். அந்தப் பதிவின் பின்னூட்டத்தில் ஒருவர் விதவைகள் என்ன செய்வது என்று கேட்டிருந்தார். அவருக்கான அறிவியல் பூர்வமான பதில் மேற்குறிப்பிட்ட பதிவில் இருக்கிறது.  

திங்கள், 19 ஜனவரி, 2015

கார் வாங்குகிறீர்களா?

                                        

பொருளாதாரப் பாடத்திலே மனிதனின் தேவைகளை மூன்று வகையாகப் பிரித்திருக்கிறார்கள்.

1. அத்தியாவசியத்தேவைகள். உணவு, உடை, உறைவிடம் இந்த மூன்றும் இதில் அடங்கும்.

2. சௌகரியங்கள். ஒரு இரு சக்கர வாகனம், படுக்க ஒரு கட்டில் மெத்தை, மின் விசிறி இப்படியாக வாழ்வதற்கு ஏற்படுத்திக்கொள்ளும் சில சௌகரியங்கள்.

3. ஆடம்பரப்பொருட்கள். அதிக பொருட் செலவில் ஏற்படுத்திக்கொள்ளும் வசதிகள் இதில் அடங்கும். பெரிய குளிரூட்டப்பெற்ற பங்களா, பெரிய கார், அத்தியாவசிய, தானாகச் செய்யக்கூடிய வேலைகளுக்குக் கூட ஆட்கள், இப்படி பல சமாச்சாரங்கள்.

நடைமுறை வாழ்க்கையில் ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்குப் போவதற்கு அனைவருமே முயற்சி செய்கிறோம். சைக்கிள் வைத்திருப்பவர் ஸ்கூட்டர் வாங்க ஆசைப் படுகிறார். ஸ்கூட்டர் வைத்திருப்பவர் கார் வாங்க ஆசைப் படுகிறார். இவ்வாறு ஆசைப் படுவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் நேர்மையான வழியில் பொருள் ஈட்டி இவ்வகையான ஆசைகளை நிறைவேற்றிக்கொண்டால் அந்தப் பொருட்களினால் சந்தோஷம் வரும்.

அப்படியில்லாமல், நான் முன்பு ஒரு பதிவில் சொன்ன மாதிரி கஞ்சா விற்று சம்பாதித்திருந்தால் அந்த வாழ்க்கையில் இன்பத்தை விட துன்பமே மிகுந்திருக்கும்.

இந்த தேவைகளில் ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால், இவைகளை ஒன்றுக்கொன்று குழப்பிக்கொள்வதுதான். அதாவது எது அத்தியாவசியம், எது ஆடம்பரம், எது சௌகரியம் என்பதில் ஏற்படும் குழப்பங்கள்தான் ஒரு குடும்பத்தில் கருத்து வேறுபாடு வருவதற்குக் காரணமாக அமைகிறது.

கல்லூரியில் படிக்கும் மகன் ஒரு கைத் தொலைபேசி வேண்டும் என்று விரும்புகிறான் என்று வைத்துக்கொள்வோம். அவன் படிப்பிற்கும் கைத்தொலை பேசிக்கும் சம்பந்தம் ஏதுமில்லை.  ஆனாலும் அவன் விரும்புகிறான் என்று தகப்பன் வாங்கிக்கொடுக்கிறான். அவன் ஏதோ ஆயிரம் இரண்டாயிரம் ரூபாயில் வாங்கலாம் என்று நினைத்திருப்பான். ஆனால் மகனோ லேட்டஸ்ட் ஆக வந்திருக்கும் ஐபோன் 50000 ரூபாய் விலையில் வேண்டுமென்று கேட்பான்.

வம்பு வந்து விட்டதல்லவா? இதுதான் இன்றைய தலைமுறையினரின் வியாதி. அந்த தகப்பன் எப்படியோ கஷ்டப்பட்டு அந்தக் கைபேசியை வாங்கிக் கொடுத்து விட்டான் என்று வைத்துக்கொள்ளுங்கள். பின்பு நடப்பவற்றை நாம் வெகு சுலபமாக யூகித்துக்கொள்ளலாம்.

இன்று ஒரு புருஷனுக்கு வேலை உயர்வு வந்து  ஐந்து இலக்க சம்பளம் வாங்க ஆரம்பித்து விட்டான் என்றால் உடனே அவன் மனைவிக்கு ஏற்படும் ஆசை ஒரு கார் வாங்கலாமே என்பதுதான். தன் புருஷனுடன் வேலை பார்க்கும் ஒருவன் கார் வாங்கி விட்டான் என்று அவன் பெண்டாட்டி பீத்திக்கொள்கிறாள். நாம் எப்போது கார் வாங்குவது என்று அவள் தினமும் புருஷனை நச்சரிப்பாள். புருஷனும் இந்த நச்சரிப்புத் தாங்காமல் அங்கே இங்கே கடன் வாங்கி ஒரு காரை வாங்கி விடுகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அவனுக்கு சனி திசை ஆரம்பமாகிவிட்டது என்று பொருள். தன்னுடைய நிலைக்கு மேல் ஆசைப்படும் எந்தப் பொருளும் ஆடம்பரம்தான். தகுதிக்கு மீறிய ஆடம்பரம் துன்பத்தையே கொண்டுவரும்.

கார் வாங்குவதைப் பற்றி எழுதுமாறு ஒருவர் பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார், "வரவு எட்டணா செலவு பத்தணா, மீதி இரண்டணா துந்தனா" என்று ஒரு சினிமாவில் பாடினார்கள். ஆடம்பரச் செலவுகள் சொய்து அந்தக் குடும்பம் எப்படி சிதறுண்டு போனது என்று அந்த சினிமாவில் துல்லியமாகக் காட்டினார்கள்.

இன்றைய காலகட்டத்தில் கார் வாங்குவது யாரால் முடியும் என்றால் மாதம் ஒரு லட்சம் சம்பளம் வாங்குகிறவர்களால் மட்டுமே முடியும். காரின் விலை குறைந்த பட்சம் ஆறு லட்சம் ஆகும். இதில் கடன் வாங்கினால் 2 லட்சம் கைப் பணம் 4 லட்சம் கடன் என்று வைத்துக்கொண்டால் மாதம் ஏறக்குறைய ஏழாயிரம் ரூபாய் அந்தக் கடனுக்காக கட்டவேண்டிவரும்.

குடும்பச் செலவு, வீட்டு வாடகை, குழந்தைகளின் படிப்பு, பொழுதுபோக்கு செலவுகள், உடை, வேலைக்காரர்கள், குழந்தைகளுக்கான எதிர்காலச் சேமிப்பு, தன்னுடைய பென்ஷனுக்கான சேமிப்பு, வருமான வரி இப்படி கணக்குப் பார்த்தால் ஒரு லட்சம் வருமானம் வாங்குகிறவன் கூட செலவுகளைச் சமாளிக்கத் திணறித்தான் போவான்.

கார் வைத்துக்கொள்ள அவன் வேலை பார்க்கும் நிறுவனத்தில் தனியாக அலவன்ஸ் கொடுக்காத பட்சத்தில் கார் பெரிய சுமையாக மாறி விடும்.

ஒரு காரின் நேரடி செலவுகள், மறைமுக செலவுகள் என்னென்ன என்று நான் கணக்குப்போட்டு வைத்துள்ளேன். அதைப் பாருங்கள்.

1. காரின் விலையான 6 லட்சத்திற்கு வட்டி மாதம் ஒன்றுக்கு  ரூ.6000
2. டிப்ரீஷியேஷன்                                                        "              "                ரூ.5000
3. கார் சர்வீஸ், இன்சூரன்ஸ், சில்லறை ரிப்பேர்             "                ரூ.2000
4. பெட்ரோல் 500 கி.மீ. ஓட்டம்                                  "             "                 ரூ.2000
                                                                                                                               --------------
                                                                               மொத்தம்                            ரூ.15000
                                                                                                                               --------------

கார் மாமனார் வீட்டு சீதனமாக இருந்தால் முதல் இரண்டு செலவுகள் இல்லை.

இது தவிர நீங்கள் கார் வைத்துக்கொண்டு இருந்தால் மூன்று மாதத்திற்கு ஒருமுறையாவது எங்காவது சுற்றுலா செல்லவேண்டி வரும். அதற்கான செலவுகளைக் கூட்டிக்கொள்ளவும்.

காரில் நண்பர்களையோ, உறவினர்களையோ பார்க்கப்போனால் வெறும் கையுடனா போகமுடியும். முன்பு பஸ்சில் போகும்போது ஒரு பிஸ்கட் பேக்கட் வாங்கிப்போனால் போதும். ஆனால் காரில் போகும்போது ஆப்பிள், ஆரஞ்சு, ஸ்வீட் இப்படி வாங்கிக்கொண்டு போனால்தான் காரில் செல்வதற்கு அடையாளம்.

இப்படியாக கார் வாங்குவது முற்றிலும் ஆடம்பரச் செலவே. அதற்கான வசதி இருந்தால் செய்யலாம்.

ஞாயிறு, 18 ஜனவரி, 2015

ஒரு வெள்ளரிக்காய் கதை

                                                     

பழைய காலத்தில் கிராமங்களில் காலைக் கடனைக் கழிக்க ஊருக்கு வெளியில் பொட்டல் காட்டுக்கு செல்வார்கள். அப்படி ஒரு ஊரில் பொட்டல் காட்டுக்குப் போகும் வழியில் ஒரு வெள்ளரித்தோட்டம் இருந்தது. அந்த ஊரில் ஒருவன் பொட்டல் காட்டுக்குப் போகும் வழியில் ஒரு வெள்ளரிக்காயைப் பறித்து அதைத் தின்றுகொண்டே காலைக் கடனைக் கழித்துக் கொண்டிருந்தான்.

அந்த வழியில் போன அந்த ஊர்க்காரன் ஒருவன் இவனைப் பார்த்து வெளிக்குப் போகும்போது வெள்ளரிக்கயைத் திங்கலாமா? என்று கேட்டான். அதற்கு அந்த வெள்ளரிக்காயைத் தின்று கொண்டிருந்தவன் சொன்னான்.        "நான் வெள்ளரிக்காயை எப்படிச் சாப்பிட்டால் உனக்கென்ன?  "நான் வெள்ளரிக்காயை சும்மா சாப்பிட்டாலும் சாப்பிடுவேன்,அதில் தொட்டுக்கொண்டு சாப்பிட்டாலும் சாப்பிடுவேன், நீ யார் அதைக்கேட்க" என்றானாம். (இங்கு "அதில்" என்றால் எது என்பது வாசகர்களுக்குப் புரியும் என்று நம்புகிறேன்.

இது ஒரு கதை மட்டுமே. இந்தக் கதையை இங்கு சொல்வதற்கான காரண காரியங்களை யோசித்து உங்கள் மூளையை வீணாகக் கசக்கி வருத்தப்படவேண்டாம்.